26, “விசுவாசம்” எனுமொரு திரைத் தென்றலின் தாலாட்டு (திரை விமர்சனம்)

ரு திரைப்படம் மனதை நேர் அலைவரிசைக்கு மாற்றுமெனில் அது சமூகத்திற்கான கலைச்சேரல் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. ஒரு நடிகரை அப்பாவாகவும், ஒரு நடிகையை அம்மாவாகவும், ஒரு குழந்தையை தனது மகளாகவும், பார்க்க இடம்தருமொரு மூன்று மணிநேரத்தை வெறும் பொழுதுபோக்காக கருத இயலவில்லை.

வாழ்வின் அதிசயங்களை மட்டுமே காட்டும் பல கதாநாயகர்களுக்கு மத்தியில் குடும்பத்தின் உறவுகளை தனது தமிழ்மரபு குறையாது அறிமுகப்படுத்துமொரு கதைச்சித்திரத்தின் தந்தையாக பார்க்க கிடைத்த திரைப்படம் இந்த விசுவாசம். இது வெறும், திரைக்கலையின் மகிழ்ச்சியை மட்டும் தந்து முடியவில்லை, ஒரு சமூக மாற்றத்தின் பொறுப்பையும் எடுத்து தனது தோள்மேல் சுமந்துக்கொண்டு நல்ல குடும்பத்தின் கதையாக நகர்கிறது.

நாம் கண்ணெதிரே காணும் பல அறத்திற்கு முரணான அநீதிகள் நேரும் இடத்திலெல்லாம் ஒரு நாயகனோ நாயகியோ அதைத் தட்டிக் கேட்கையில் உள்ளூர நமக்கென்று ஒரு ஆனந்தம் பொங்குவதைப்போலத்தான் இந்த “விசுவாசம்” திரைப்படத்தைக் காண்கயிலும் நம் குடும்பத்துள் நாம் செய்யும் அறத்திற்கு புறம்பான செயல்களைக் கண்டு நமக்குள் நாமே பல திருத்திற்கான கேள்விகளை கேட்டுக்கொள்வதற்கான அவஸ்தையை நடிகர் திரு. அஜித் அவர்களின் நடிப்பும், அந்த அருமை மகள் சுவேதாவின் நடிப்பும் உணர்த்துகிறது.

ஒரு மகள் தனது அப்பாவையே அங்கிள் என்று அழைக்கும் வலி என்பது தாய் தனது பெற்ற மகன் எட்டி உதைக்கையில் சுமந்த வயிற்றில் வலிக்கும் வலியைப்  போன்றதொரு வலியாகும். அது இன்றும் எண்ணற்ற எனது “வெளிநாடுகளில் பொருள் ஈட்டச் சென்று வருடங்கள் பல கழித்து வரும் சகோதரர்களுக்கு” இருப்பதுண்டு.

இப்படத்தின் கதையோட்டத்தின் படி, மனைவி தனது கணவனிடம் கோபித்துக்கொண்டு மும்பைக்கு சென்று விடுகிறாள். அங்கே அவளும் வளர்ந்து, தனது மகளையும் வளர்த்து பெரியவளாக்கி வைத்திருக்கும் பத்து வருடங்களுக்கும் அவளுடைய ஆசைக் கணவனை கோபத்தினால் விட்டுப் பிரிந்திருக்கிறாள். அந்த பத்து வருடத்திற்கும் தனது மனைவியின் உணர்வை மதிக்கும் நல்லவொரு ஆண்மகனாக நாயகன் “தூக்கு துரையும்”  அவளை நேரடியாக நெருங்காமல் தூரத்திலிருந்தே அவர்களை கண்டு காத்து வாழ்கின்றான்.

இது ஒரு திரைப்படம் தான் என்றாலும், அவ்வாறு ஒரு ஆண்மகன் பெண்மையை மதித்து பண்போடு நடந்துகொள்வதும், ஒரு அப்பாவாக தூரத்திரிலிருந்தே அவர்களைப் பார்த்துக்கொள்வதும் காண்பதற்கு நிறைவாக  அமைந்திருக்கிறது. அப்பா அம்மா மகள் மூவரும் ஒன்றாக ஒரே வீட்டில் தங்கியிருந்தும் ஒருவரை ஒருவர் மனதால் மட்டுமே கண்டுகொண்டு உலகின் பார்வைக்கு விலகியே இருப்பதை காண்கையில் மனது துடிதுடித்துப் போகிறது.

அதற்குப்பின் வரும் காட்சிகளில் தனது மகளைக் காப்பாற்ற வேண்டியதொரு கட்டாயம் வருகையில் அவன் தனது மனைவியின் கோபத்தையும் மதித்துக்கொண்டு, அவளுக்கு மறுப்பேதும் காட்டாமல், கணவன் எனும் திமிரை தொலைத்தவனாய், ஒரு பெருந்தன்மையின் சாட்சியாக அவளுடைய வீட்டிலேயே அவனது மகளுக்கு காவலனாக வேலைக்கு சேர்கிறான்.

பல இடத்தில அவன் சூழ்நிலை கைதியாகிப் போகும் காட்சிகளிலெல்லாம் நமது வாழ்வின் பல படிநிலைகளை நாம் எவ்வாறு கிடக்கிறோம், எவ்வாறு இருத்தல் சிறப்பெனும் ஒரு யோசனையோடு சற்று திரும்பிப் பார்க்கவைக்கிறது இத்திரைப்படம்.

எப்படியோ ஒரு கட்டத்தில் மகள் ஸ்வேதா அவனிடம் நெருங்கிப்பழக, அவளின் விருப்பம் தேடி தேடி அவளோடு அவன் ஊர்சுற்றும் தெருவெல்லாம் தனது மகளே அவளுடைய தந்தையைப் பார்த்து அங்கிள் அங்கிள் என்று அழைப்பதும், அவள் அங்கிள் அங்கிள் என்றழைக்கும் போதெல்லாம் அவன் கலங்குவதும், ஒரு கட்டத்தில் அவனிடமே அந்த மகள் சென்று என்னோட அப்பாவை எனக்கு பிடிக்கவே பிடிக்காது என்று சொல்லுகையில் ஒரு தந்தை அடையும் தாய்மையின் வலியை திரைப்படத்தின் வழியேகூட நம்மால் காண இயலவில்லை.

ஆங்காங்கே மனதின் உணர்வாக எழும் மிக அழகிய உயிர்ப்பூட்டும் இசைப் பின்னணியில் உள்ளூர நிறைந்துநிற்க பல காட்சிகள் இப்படத்தில் உண்டு.  நெடுநாளைய நினைவிற்கு வேண்டி ‘அப்பா மகள் கதையாக’ இப்படம் மனதுள் சிம்மாசனமிட்டுக் கொள்கிறது. மிக முக்கியமாக ஒவ்வொரு உணர்வையும் காட்சிப்படுத்தியது மிக அழகு.  ஒவ்வொரு பிரேமிலும் தெரியும் அழகிய தேனியின் இயற்கை வளங்களெல்லாம் பச்சை பசேலென படத்திற்கு ஒரு கூடுதல் பலத்தை ஏற்படுத்திவிடுகிறது.

உண்மையில், இப்படத்தில் ஒரு மகளாக ஸ்வேதா நடித்தது சிறப்பா, ஒரு அம்மாவாக நயன்தாரா நடித்தது சிறப்பா, ஒரு அப்பாவாக அஜித் நடித்தது சிறப்பா இருக்க கேட்டால் நம்மால் எவரையும் குறைத்துச் சொல்வதற்கு இயலாது. என்றாலும் வெகுநாட்களுக்குப் பிறகு ‘வானத்தைப்போல’ ‘சின்ன கவுண்டர்’ ‘நாட்டாமை’ மாயி’ எனும் பல கிராம திரைப்படங்களின் வரிசையில் ஒரு அருமையான மனிதரை’ சிறந்தவொரு அப்பாவை’ நம்மால் இப்படத்தில் பார்க்கமுடிகிறது எனில் அதற்கு நடிகர் அஜித்தின் நடிப்பும் சிரிப்பின் அழகும் மட்டுமே காரணம் என்பதும் தீராத உண்மை. அந்த மீசையை நிச்சயமாக ஒவ்வொரு மகள்களுக்கும் அப்பாக்களின் மீசையாகப் பிடிக்கும் என்பதும் உண்மை.

நடிப்பென்று மட்டுமில்லை, ஆங்காங்கே வரும் துள்ளலான நடனமாயினும் சரி, சிரிப்பாயினும் சரி, அழுவதாயினும் சரி, சண்டைக்காட்சியிலும் கூட அப்பட்டமாக கதாநாயகனின் அத்தனை நடிப்புத் திறத்தையும் முழுமைபடுத்தி தந்திருக்கிறார் நம் நடிகர் அஜித். கண்டிப்பாக, இப்படத்தின் இயக்குனருக்கு ஒரு பெரிய நன்றி கூறல் உண்டு. இசைக்கு, மிக முக்கியமாக பாடகி சிரேயா கோஷ்வால் உச்சரிக்கும் பாடலின் சொற்களுக்கும் ஒரு ஆகா ஓகோ போடலாம் தான். பாட்டுகள் எல்லாமே கதையின் நரம்பாக சதையாக திரைக்கதையுள் ஒட்டியுள்ளது.

மிக தரம் மிக்க வசனங்கள் இப்படத்தில் பாராட்டத் தக்கவை. “தாயை மதிக்காதவன் முன்னேறியதாக சரித்திரமே இல்லையம்மா” என்று மக்களிடம் அப்பா சொல்லிகொடுத்து தனது மனைவியை மதிக்கச் செய்வதும், இது வரை நீ சாரி சொன்னதே இல்லையேம்மா, இருந்தாலும் என்ன மன்னிச்சிடும்மா என்று மகள் கேட்டு தனது தந்தையின் குணத்தை தாயிற்கு காட்டுவதும், மிக அழுத்தமாக ஒரு இடத்தில் அஜித் வந்து “மனைவியை மதிப்பது இயல்பு, மனைவி திட்டுவதோ  பேசுவதோ முரண் இல்லையே அதுகூட இல்லத்தின் ஒரு அறம் தானே” என்பதெல்லாம் அப்பப்பா மனதுள் நன்னெறியை விதைக்கிறது.

ஒரு காலம் தராத அறிவுகளை; அந்த காலத்தைக் கற்றுக்கொண்டு, பின் அதை கதையாக்கி, கதைகளை காட்சி படுத்தி, உணர்வோடு நாம் திரைவடிவில் செல்லுகையில்; அது கேட்ப்போருக்கு பார்ப்போருக்கு நேராக உணர்வின் வழியில் புரிகிறது. இறுதி காட்ச்சியில் இயக்குனர் மொத்த படத்தின் சாராமே “குழந்திகளை குழந்தைகளாக வளருங்களேன்” அவர்கள் அவர்களாக வளரட்டுமே” என்று தைப்பப்படத்தை முடிக்கையில், பரவாயில்லையே ஒரு நல்ல திரைப்படத்திற்கு குழந்தைகளோடு பார்க்கவந்தோமே என்றும் ஒரு நிறைவு வருகிறது.

மிக குறிப்பிட்டு சொல்ல எண்ணற்ற காட்சிகள் இப்படத்தில் உண்டு என்றாலும், கதைகளை மொத்தமாக இங்கு நான் சொல்லிவிட்டு உங்களை திரையரங்கிற்குள் வெற்று மனநிலையோடு விட்டுவிட மனமின்றி மெல்ல நகர்கிறேன்.

ஒரு திரைப்படத்தைக் கண்டுமுடிகையில்; அப்படத்தின் வில்லனை கூட உங்களுக்கு பிடித்துவிடும் என்றால் அது உண்மையிலேயே இத்திரைப்படமாகத் தான் இருக்கும், எனவே ஆங்காங்கே இருக்கும் சில குறைகளை நான் பெரிதாக பொருட்படுத்திக் கொள்ளவில்லை.

மிக சுருக்கமாகச் சொன்னால், தன் மகளைக் கொஞ்சிக்கொண்டு, அவளை மட்டும் அவளின் கோபத்தோடு’ அடத்தோடு’ திமிரோடு’ விளையாட்டோடு’ சோம்பேறித்தனத்தோடு ஏற்றுக்கொள்ளும் அப்பாக்களுக்கு, அதே அப்பா ஸ்தானத்தில் இருந்து அவர்களின் மாமனாரின் மகள்களையும் அப்படியே ஏற்றுக்கொள்ளச் சொல்லும் மிக சிறப்பான திரைப்படம் இந்த “விசுவாசம்”.

மிக நல்ல சண்டைக்காட்சிகள், இரம்யமான இசை, நேர்த்தியான வடிவமைப்பு, சிறந்த திரைக்கதை, அருமையான வசனங்கள், ஆனந்தம் சூழ்ந்தவொரு குடும்பத்தின் காதல், மிக நெருக்கமான உறவுகளின் ஈர்ப்பென; நல்லதொரு திரைப்படத்தை வழங்கிய இயக்குனர் திரு. சிவா, சகோதரர் இமான், நடிகர் அஜித், நடிகை நயன்தாரா, சிறந்த நடிகை சுவேதா, ஐயா தம்பி ராமையா, சகோதரர் ரோபோ சங்கர் மற்றும் அனைவருக்கும் தைப் பொங்கலின் இனிப்பு வாழ்த்தும் வணக்கங்களும்!!

வித்யாசாகர்

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in திரை மொழி and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s