அன்பு வணக்கம் உறவுகளே,
நலமாக உள்ளீர்களா? நாங்களிங்கு நலம். நீங்களும் மகிழ்ந்து தனிமை ருசித்து குடும்பத்தோடு மகிழ்ந்திருக்க ஒரு நல்ல தருணமென இத் தருணத்தைக் கருதி, வீட்டின் சின்ன சின்ன வேலைகளை செய்தவாறு, நல்ல புத்தகங்களை வாசித்தவாறு, நல்ல திரைப்படங்களைக் கண்டு மகிழ்ந்தவாறு நிறைவோடு உடலாரோக்கியத்தோடு இருங்கள்.
இடையிடையே இப்படி ஐயா மருத்துவர் கீழுள்ள காணொளியில் சொல்வதைப்போல கேட்டு நல் பயிற்சி சிந்தனை ஆழ்மன தியானமென வாழ்க்கையை சீரமைப்போடு அமைத்துக்கொண்டு சுகமாக வாழுங்கள்.
ஆங்காங்கே தொண்டு செய்யும் அமைப்புகளில் பலர், நல்ல குடும்பங்கள் சார்ந்து பலர் தினக்கூலி வாங்கிவந்த குடும்பங்களை அடையாளங் கண்டு இந்நேரத்தில் தெய்வங்களைப் போல நின்று உதவுகின்றனர். அவற்றை அவ்வாறே இயன்றளவு எல்லோரும் செய்வோம். செய்வோர்க்கு உதவுவோம்.
எல்லாம் நன்றே. அனைத்தும் நன்மைக்கே. உயிர் போதலொன்றே கொடுமை அன்றி கரோனா மனிதர்க்கு உலவளவில் நல்ல பாடத்தைத் தந்துள்ளது. உயிரின் அருமையை உணர்ந்துகொள்ள வாய்ப்பளித்திருக்கிறது. நாம் தான் பயத்தில் அரண்டிருக்கிறோம், இன்ன பிற உயிர்கள் இந்த ஓரிரு வார காலமாக உள்ளாசத்தோடு திரிகிறது. பறவைகட்கெல்லாம் வசந்தம் வந்ததாய் எண்ணி கூடிப் பேசி மகிழ்கிறது.
இங்கு தான் நாம் சிந்திக்கவேண்டும். வாழ்க்கையை உற்றுப் பார்த்து சரிசெய்ய சந்தர்ப்பம் அமைகையில் நாம்தான் விட்ட குறைகளை தொட்ட குறைகளை முயன்று சரிசெய்து கொள்ளவேண்டும்.
ஆயிரம் வேலை ஆயிரம் பிசி ஆயிரம் விழாக்களென ஆயிரங்களோடு ஓடிக்கொண்டிருந்த கோடிகளையும் களவில்லாது ஓடிக்கொண்டிருந்த ஏழைகளையும் உட்காருடா கீழேவென இயற்கையின் ஒரு சின்ன கிருமி நம்மை அதட்டி உட்காரவைத்து விட்டது.
அதே டெக்னாலஜி, அதே வாகனங்கள் அதே பிசியான மனிதர்கள் அனைத்தையும் காலுயாக்கிப் போடலடுவிட்டது கரோனா வைரஸ். இந்த வாழ்க்கையை இந்த வழிமுறைகளை இந்த பிற உயிர்களுக்கு உகன்ற பொழுதை அமைத்துக்கொள்ள நாம் ஏன் கொஞ்சம் காலத்திற்குமாய் சிந்திக்க கூடாது?
சிந்தியுங்கள். எல்லாம் நன்மைக்கே. என்றாலும் இன்னல் வரும்போதே நாம் இன்னும் கொஞ்சம் தெளிவோடும், மேலான முயற்சிகள், நம்பிக்கைகள், வரும் முன் காக்கும் திட்டங்களோடும் மிக கவனமாக இருத்தல் வேண்டும்.
அரசும் மக்களும் உடனிருப்போரும் அவரவரால் இயன்றதை அவரவர் செய்வார்கள்; ஆனால் அவர்களால் உயிர் தர இயலாது. உயிர் நம்மிடம் தான் இருக்கிறது. நம்முயிரை நாம் தான் நன்றே சுவாசித்து சுகாதாரம் காத்து நலமுடன் காலத்திற்குமாய் பேணவேண்டும்.
எனவே தெளிந்து நிறைந்து சிந்தித்து நற்செயலாற்றி மகிழ்வோடிருங்கள். அனைவருக்கும் என் வாழ்த்து. அனைவருக்கும் எனதன்பு வணக்கம்🌿
வித்யாசாகர்