
எனக்குள் ஒரு தொடர் அழை இருக்கிறது
மனது அடிக்கடி தேம்பி தேம்பி அழும் அழை அது,
யாருக்கும் தெரியாமல் பெய்யும் மழையையப்போல
உள்ளே உயிர் சொட்டுச்சொட்டாக
கண்ணீர் பெருகி வழிவதை யாருக்கும் காட்டாத அழை,
உண்மையில், இந்த வாழ்க்கை ஒரு வதை
பிரிவு பிரிவென எல்லோரையும்
நேசித்து நேசித்து பிரியும் வதை,
உயிர் போவது கூட விடுதலைதான் போல், ஆனால்
யாரோ இறப்பதை சகிப்பது
இறக்கும்வரை வலிக்கும் வதை,
மனம் சகிப்பதேயில்லை பிரிவை
மனதிற்கு அன்பு காட்ட மட்டுமே தெரிகிறது
அன்பில்லாத இடத்தில் மனம் பாவம்
சிறுபிள்ளையைப்போல அழுது விடுகிறது,
முன்பெல்லாம் இப்படி எதையேனும் கிறுக்கினால் கூட
அதை அம்மா படித்துவிட்டு நல்ல கவிதை என்பாள்
இன்று அவளில்லாத இடத்தில் நிரம்பி நிரம்பி
எனது எழுத்துக்களும் அழுகிறது;
என்ன கிழித்து, எதைச் சம்பாதித்து
எவ்வளவு சாதித்து என்ன பயன் ?
அம்மா இல்லாத வாழ்க்கை அரை வாழ்க்கை
அவளில்லாத பொழுதுகள் என்னை
அனாதையாக்கி விடுகிறது,
எதற்கோ பெற்று எதற்கோ விட்டு
ஏன் போனாளவள்? அவளிடம் நானினி பேசவேமாட்டேன்
ஆனால் பாவம் அம்மா
இந்தக் காற்றிலோ மழையிலோ வெளிச்சத்திலோ
ஏன், இந்த மொழியில் கூட இருப்பாள்
என்னைத் தொட முடியாமல் தவிப்பாள்
பாவம் அம்மா, அவளுக்கு பிள்ளைகளைத் தவிர
ஒன்றுமே தெரியாது;
என் பிள்ளை என் பிள்ளை என்றுச் சொல்லிச் சொல்லி
வெறும் சொற்களை விதைத்துவிட்டு சென்றுவிட்டாள்
இன்று அம்மா இருந்த இடத்திலெல்லாம்
அவளுடைய நினைவுகளும் அவள் காட்டிய அன்பும்
அவளுடைய கம்பீர சிரிப்பும் நிறைந்திருகிறது;
ஆனால், அவள் மட்டும் இல்லை;
இந்த உலகிலேயே ஒரு கொடிய நிலை இது தான்
அம்மா இல்லை யென்று உணர்ந்தும், உயிரோடிருப்பது!!
—————————————————————
அன்பிற்கினிய நண்பருக்கு வணக்கம்,
தாங்கள் நலமா?
சமீபத்தில் எந்தப் பதிவும் இல்லை தங்களுடைய பதிலை எதிர்நோக்கி.
LikeLike
வணக்கம் வாழிய நலம். நிறைய படைப்புகள் இனி தொடர்ந்து வெளிவரும். இடையே அம்மாவின் மரணம் தொடர் இழப்புகள் பெருவருத்தத்தை தருகிறது. மீண்டு வருவோம். படைப்புக்களாய் நிறைவோம். நன்றி. வணக்கம்.
LikeLike
இனிய வித்தியாசாகர் அவர்களுக்கு ,
தங்களுடைய அம்மாவின் மறைவுக்கு ஆழ்ந்த வருத்தங்கள். இந்த இழப்பு ஈடுசெய்ய முடியாதது.
உங்கள் தாயின் ஆசீர்வாதம் எப்போதும் உங்களுடன் இருக்கும், மீண்டு வாருங்கள், எப்பொழுதும்போல் உங்கள் இனிய கவிதைகளை, படைப்புக்களை தாருங்கள்.
LikeLiked by 1 person
தங்களுடைய அன்பு ஊக்கத்தை தருகிறது நன்றி.
LikeLike