ஒரு பறவையும் புத்தனும்…

அந்த வனத்துப் பறவை ஒருநாள்
வானத்தை நோக்கிப் பறக்கத்தொடங்கியது
எதிரே உடைந்த மேகங்கள் மின்னலாய் வெட்டியபோதும்
இடியெனச் சத்தமாய் மிரட்டியபோதும்
அந்த வனத்துப் பறவைக்கு பயமேயில்லை;
உயிர்போகட்டும்
ஆனால் வானத்தை அதற்குமுன் தொட்டுவிடுவேன் என்பதில்
உறுதியாக இருந்தது,
அந்த வனத்துப் பறவைக்கு
வாழ்வெல்லாம் அத்தனை அவமானங்கள்
வலிகள் தோல்விகளுமென
ஒவ்வொரு நாளுமொரு தடைக் கற்கள்
சுமைநெருப்பாக சுட்டுக் கொண்டிருந்தபோது தான்
விருட்டென உள்ளே வெளிச்சம் தட்டியது; பற.. போ..
வனம் விடு, வானம் தொடு போவென்று உள்ளே
அப்படியொரு வெளிச்சம் தோன்றி சத்தமிட்டது
அந்த வனப்பறவைக்கு பயம்,
தன்னை நினைத்து பயம்
உலகை நினைத்து பயம்
பாடத் துவங்கினால் எங்கு அவன்
ஓகோவென்று பாடிவிடுவானோ என்று எல்லோருக்கும் பயம்
ஆடத் துவங்கினால்
ஆட்டக்காரனாகி விட்டாலென்று எல்லோருக்கும் பயம்
பறக்கும் சிறகுகளையும்
நடக்கும் கால்களையும் அந்த வனத்துப் பறவைக்கு
இந்த உலகம் உடைத்துக்கொண்டேயிருந்தது;
இன்று தான் அந்த வனப்பறவை
ஊனத்தை உடைத்தெறிந்துவிட்டு, ‘நான் காலற்றவன்’
‘சிறகுகள் உடைந்தவன்’ ஆனால்
வானத்தை தொடுவதற்கு உயிரொன்று போதுமெனக் காட்டி
வானத்தையொரு கீற்றாக கிழித்துப் பறந்து கொண்டிருந்தது;
புத்தனொருவன் அவ்வழியே செல்கிறான்
வனப்பறவைக்கு குறுக்கே புகுந்து
ஓய் பறவையே அங்கே கீழே பார்
உலகெல்லாம் உன் பேச்சு தான், பார்
தெருக்களெல்லாம் உன் பாட்டு தான், பார்
இனி வெற்றிக்கு சாட்சி நீதான் என்றது!!
முயற்சிக்கு முன்னுதாரணம் நீதானென்றது!!
அந்த வனப்பறவைக்கு இரத்தம் உடம்பெல்லாம் வழிந்தது
வெற்றியின் சிரிப்பு வானெல்லாம் நட்சத்திரங்களாக மின்னின
கடல் ஒரு பெண்ணாக மாறி வந்து அந்தப்
பறவையின் கன்னத்தில் முத்தமிட்டது!!
அந்த புத்தன் மீண்டும் சொன்னான்
ஓய் வனப்பறவையே…, இப்போது புரிகிறதா
தோல்வி என்று ஒன்றில்லை
வெற்றியொன்றும் பெரிதில்லை
எல்லோரும் எங்கோ
ஏதோ ஒன்றில் எதையோ ஒன்றை
வென்றுகொண்டு தான் இருக்கிறார்கள், சிறகுகள் உடைந்தும் நீ
பறந்து வானத்தைத் தொட்டதைப்போல;
எதையோ சொல்லி புத்தன் சட்டென மறைந்தான்
அந்த வனப்பறவைக்கு அப்போது தான் புரிந்தது
உயர உயர பறப்பேன் என்றேனே
ஒருநாளேனும் நான் பறந்துப் பார்த்திருக்கலாம்..
பாடுவேன் ஆடுவேன் என்றேனே, ஒருநாளேனும்
பாடியோ ஆடியோ பார்த்திருக்கலாம்…,
உண்மை தான்
உண்மை தான்
சொல் என்பது உலகெல்லாம் விதைக்கப்பட்டிருக்கிறது
செயல் தான் ஏதோ ஒன்றை வென்றுவிடுகிறது
செயல் தான் வெல்லத் தகுந்தது
செயலால் தான் உலகம் இயங்குகிறது
செயலால் தான் வானம் தொடமுடிகிறது…
செயலால் தான் உயரப் பறக்கமுடிகிறது… என்னைப்போல!!
அந்த வனப்பறவை எதையோ எண்ணிக்கொண்டே
பாடிக்கொண்டே
ஆடிக்கொண்டே
உயர உயர பறந்துகொண்டிருந்தது..
அதன் பின்னே ஆயிரமாயிரம் பறவைகள்
பறக்கத் தொடங்கியிருந்தன
வெற்றி தோல்வியின் நிறங்களை
வெகுவேகமாக அலைத்துக்கொண்டிருந்தது!!
– வித்யாசாகர்
Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்