80 ஞானமடா நீயெனக்கு..

1
ன் வாசனையில்
உயிர் சுரக்கும் இன்பம் எனக்கு,

எல்லாம் கடந்து விடுகிறாய் நீ

உனை விட எந்த வெற்றியோ
ஆசையோ –
பெரிதாகப் படவேயில்லை எனக்கு,

உன் சிரித்த முகம் பார்த்து பார்த்து
பூமியெல்லாம் மழை பெய்வதுபோல் ஒரு
துள்ளலில் மிதக்கிறேன் நானும்,

வாழ்வின் – கொடுமைகள்
ஆயிரம் இருக்கலாம்
வருத்தங்கள் ஆயிரம் இருக்கலாம்
இருந்து போகட்டுமே;

அவைகளை சமன் செய்ய
நீயொருத்தி –
மகளாக பிறந்தது போதும்!!
——————————————————————————-

2
“வித்யா..
…………”
நான் ஒருநேரத்தில்
அழைத்து அழைத்தும்
சலித்திடாதப் பெயர்,

பின், அழைத்து அழைத்து
அழுத பெயர்,

உயிர்ப்பின் பாதி தூரத்திலேயே
நான் அழைக்க கிடைக்காது
எனைவிட்டுப் போன பெயர்,

எப்படியோ மீண்டும்
அன்று – இயற்கையினை
சபித்துவிடாதப் புரிதலில்
அதேபெயரோடு நீ இன்று – எதிரே நிற்கிறாய்,

வித்யா வித்யா என்று வாய்குளிர
அழைக்கிறேன் இன்று,

வானமும் பூமியும்
வாழ்க்கையும் வசந்தமும்
அந்த மூன்று எழுத்துகளுக்குள்ளேயே
‘வித்யா’ என்ற பெயருக்குள்ளேயே
அடங்கிப்  போகிறதெனக்கு!!
——————————————————————————-

3
வீ
ட்டில்
உன்னோடிருக்கும் சமயமெல்லாம்
உன்னைத் தான் நினைத்துக்
கொண்டுள்ளேனாத் தெரியவில்லை;

ஆயினும் உனை விட்டு
வெளியே வந்து விட்டால்
உன்னை மட்டுமே அதிகம் நினைக்கிறேன்.

அழுதாயோ
என்னைத் தேடுவாயோ
அண்ணன் தெரியாமல் அடித்திருப்பானோ
காதுகளில் ஏதேனும் எறும்பு புகுமோ
எதையேனும் தின்பண்டமென யெடுத்து –
வாயில் வைத்துக் கொள்வாயோ
உருண்டு புரண்டு வருகையில்
தொட்டிலிலிருந்து –
கீழே வீழ்ந்துப் போவாயோ என்றல்லாம்
ஒரு அச்சம் இருந்துக் கொண்டே
இருக்கும்,

நினைவு வந்தாற்போல்
அம்மாவை தொலைபேசியில் அழைத்து
சாப்பிட்டாயா என்ன செய்கிறாய் என்று
குசலம் விசாரிப்பதுபோல் விசாரித்துவிட்டு
வைத்துவிடுவேன்;

வைக்கும் முன்
உன்னைப் பற்றிக் கேட்டிருக்காவிட்டாலும்
அவளோடு பேசி முடித்து
வைத்ததற் கிடையே
ஒருமுறையேனும் –
உன் சப்தமும் எனக்குக் கேட்டிருக்கும்!!
——————————————————————————-

4
மு
ன்பெல்லாம்
உனக்கு ஆராரோ பாடினால்
என்னை மதிக்க கூட
மாட்டாய் நீ;

அண்ணன் –
கொஞ்சம் அவனை தூக்கி தாலாட்டினாலே
தூங்கிப் போவான்,
எனவே, உன்னை நினைத்து – நீ ஏன்
இப்படியோ என்று வருத்தம் எழும்.

மாதம் ஒன்றிரண்டு கடந்தப் பின்
நீயும் – இப்போது
அப்படித் தான் ஆனாய்,

தூக்கி –
இரண்டு கைகளில் வைத்துத் தாலாட்டி
லேசாக –
ஆரி ராரி ராரி ராரோ……. என்பேன்

உடன் லேசாக
உச் உச்சென்று வாயில் சப்தங்களை
கூட்டுவேன்..

இரண்டொரு சப்தத்தில்
உடனிரண்டு ஆரிராரோவில் –
ஒரு மலர்போல் என் கைகளில்
உறங்கிப் போவாய்..

முத்தமிடக் கூட மனமின்றி
உனையே பார்த்து அமர்ந்திருப்பேன்;

காலம் இனிமையாய் கழியும்!!!
——————————————————————————-

5
ம்மா சொல்வாள்
பெண் குழந்தை இல்லையா
அப்பாவிடம் தான் ஒட்டுமென்று;

நான் சொல்வேன்,
இவள் நம் குழந்தை’
இரண்டுபேரிடமும் ஓட்டுவாளென்று.

யாரோ சொன்னார்கள்
பெண் குழந்தை தானே
பால் கொடு போதும்’ ஆண் குழந்தையெனில்
பூஸ்ட்டும் போன்விட்டாவும் கொடுக்கலாமென்று.

நாங்கள் முகிலுக்கு என்ன
கொடுத்தோமோ –
அதையே உனக்கும் கொடுத்தோம்,

இருவருக்கும் துளிகூட மானுட
பேதமையை காட்டவில்லை,
பலத்தை மாற்றி ஊட்டவில்லை,
பண்பை குறைக்கவோ கூட்டவோ
எதிலும்  எவரையும் வேறுபடுத்திப்
பார்க்கவோ இல்லை;

பெண் என்ற ஒற்றை வார்த்தையின்
மதிப்பை மட்டும் –
இருவருக்கும் சொல்லித் தந்தோம்
அந்த அடையாளத்தை போற்ற மட்டுமே
இருவருக்கும் போதித்தோம்;

அதனால் ஓர்தினம்
நீயும் – போற்றப் படுவாய்,
அதற்கு அண்ணனும் காரணமாவான்,
அண்ணனுக்குள் அம்மாவும் நானும்
அவனாகவும் இருப்போம்!!
——————————————————————————-
வித்யாசாகர்

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

கண்டிப்பா படிங்க – திருக்குறளில் வாழ்வியல்!!

பிறக்கும் ஒவ்வொரு உயிரும் தன் வாழ்தலுக்கிடையே உண்டாகும் இடர்பாடுகளின் விளிம்பில் நின்று, ‘கடைசியாய் காலத்தையே சபித்து நிற்கிறது, என்றாலும், காலம் தன் வாழ்தலின் கொடூரத்திலும், உண்ணதத்திலும், நன்மையிலும், தீமையிலும், சரி என்பதிலும், தவறு என்பதிலும், உண்மையிலும், பொய்யிலும்; தன்னைத் தானே புடம் போட்டு தனக்கான வேள்வியில் தானே தன்னை சுட்டு மிளிரும் தங்கமென பூத்து, நாளைய கேள்விக்கான பதில்களையெல்லாம் இன்றே நமக்காய் சேகரித்து யாரோ ஒருவரின் கைகளில் கொடுத்துவைக்காமல்; காலம் நகர்வதேயில்லை.

அப்படி – நமது இன்றைய தேவைகள் அத்தனையையும், ‘அன்றே ‘இரண்டாயிரமாண்டு முன்னரே திருவள்ளுவர் எனும் ஒரு காலத் தச்சனின் கையில் காலத்தால் நமக்கென கொடுத்து வைக்கப் பட்ட பொக்கிஷம் தான் திருக்குறள்.

// இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல் // என்று மனப்பாடம் செய்து அன்று தேர்வில் எழுதியது தவிர, எத்தனை பேர் நம்மில் ஒரே ஒரு குறலை வாழ்வியலோடு ஒப்பிட்டுப் பார்த்து வாழப் பழகியிருப்போம்???!!!

என்னை கேட்டால்; நான் சொல்வதெல்லாம் உண்மை, உண்மையை தவிர வேறில்லை என்று மனசாட்சியை ஒரு புனித புத்தகத்தின் மீது கை வைத்து சத்தியப் பிரமாணம் எடுப்பவர்கள்; திருக்குறளை முழுமையாய் உணர்ந்து படித்திருப்பார்களெனில் ‘படித்து வாழ்ந்திருப்பார்களெனில் அவர்களுக்கு அங்ஙனம் ஒரு நிலைக்குச் செல்ல வாய்ப்பே அமைந்திருக்காது. அதோடு மட்டுமல்லாமல் அங்ஙனம் சத்தியப்பிரமாணம் எடுக்கக் ‘தமிழருக்கென்று புனித நூலாய் ‘திருக்குறள்’ எனும் மாபெரும் படைப்பு ஒன்றே போதுமானதாகவும் இருந்திருக்கும். காரணம் –

வாழ்வியலின், உலக மனிதர்களுடைய நடத்தையின், ஒவ்வொரு அசைவையும் தமிழன் எனும் பதத்தில், தமிழனின் வாழ்வு முறையின் உத்தியில்; வாழும் ஒவ்வொரு உயிர்க்கும், ‘வாழ்தலை சொல்லித் தரும் உலகப் பொதுமறை, நமக்குக் கிடைத்த பொக்கிஷம் திருக்குறள்.

ஒரு மனிதன் பிறக்கும்போதே அவன் பிறகு எப்படி வளர்க்கப் படவேண்டும், எப்படி இவ்வுலகில் வாழவேண்டும், எந்த கண்கொண்டு இவ்வுலகை காணவேண்டும், எந்த தருணத்தில் தன்னை எப்படி வைத்துக் கொள்ளவேண்டும் என்பதுமுதல், வாழ்வின் கடைசித் தருணத்தில் நாம் கரைந்துப் போவது வரை திருக்குறளின் மூலம் திருவள்ளுவரேச் சொல்கிறார்.

// நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு // இப்படி ஒரு குரல் முடிகிறது. இக்குறளில் –

இயற்கை என்பது இப்படித் தான்; நீ நல்லது செய்தாலும் அது தீமையாகலாம், நீ செய்யும் தீயதும் சிலவேளை நன்மையாக முடியலாம், எனவே காலத்தின் எந்த ஒரு கடவிற்கும் நீ மட்டுமே காரணமென்றெண்ணி  நீ உடைந்து விடாதே என்கிறார். மேலும், இந்த இயற்கையின் படைப்பே இப்படித் தான் இருக்கிறதென்று நமக்கு ஆறுதல் வார்த்தையை தருவதோடு நில்லாமல், இன்று நீ செய்யும் நன்மை தீயவை ஆவதும், தீயவை நன்மையாவதும் கூட என்றோ நீ செய்த உன்  ஊழ்வினையால் தான். எனவே, நாளைய வாழ்விற்கு இன்றே உன்னைச் சரிபடுத்தி வைத்திரு’ எனும் ஞானப் பாடத்தையும் இந்த இரண்டு வரிகளில் தருகிறார் திருவள்ளுவர்.

ன்று நாம் வெளி உலகில் நிறைய பேரை பார்க்கிறோம், உண்பதற்கு உணவிருக்காது ஆனால்; உணவு மேல் ஆசை பொங்கும், சிலருக்கு உணவு கொட்டிக் கிடக்கும் ஆனால் உண்பதற்கு காலமோ சூழலோ உடல்நிலையோ இடம் தருவதில்லை, காரணம் அதை கூட நாம் வாழும் நெறியே தீர்மானிக்கிறது என்கிறார். நாம் வாழும் பக்குவம் மட்டுமே நமக்கு எதையுமே ஈட்டுத் தருகிறது அன்றி வேறில்லை என்கிறார் திருவள்ளுவர்.

// வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது // எனும் குறளில் என்னதான் கோடி பொருள் சேர்த்திருந்தாலும் அதிலும் நமக்கென இத்தனைத்தான் விதிக்கப் பட்டுள்ளது. அந்த எத்தனை விதிக்கப் பட்டுள்ளதோ அத்தனையை -மட்டுமே நம்மால் அனுபவிக்க இயலும் அல்லாது எது நமக்கு இருந்தும் அவைகள் இல்லாத பொருளுக்கே சமம் என்கிறார்.

ஆனால், அந்த விதிக்கப் பட்டது என்பது யாரோ வந்து நம் தலையில் எழுதி விட்டு சென்றது என்று அர்த்தம் கொள்வதைக் காட்டிலும், நாம் நேற்று வாழ்ந்த வாழ்க்கை எப்படி இன்றினை முடிவு செய்கிறதோ; அப்படி நாளைக்கான நம் நன்மை தீமைகளையும் நாமே இன்று நம் ஒவ்வொரு அசைவுகளினால் வாழ்தலினால் தீர்மானிக்கிறோம், எனவே என்னதான் கோடி கோடியை பணமாகவோ சொத்தாகவோ சேர்த்தாலும், சேர்ப்பது மட்டுமாகி விடாது வாழ்க்கை. அதை எப்படி நெறி படி சேர்த்தோம் என்பதும் வாழ்வியலில் முக்கியமான ஒன்றாகிறது என்கிறார்.

அப்படி நெறி படி வாழ்தலில், அந்த வாழ்தலின்படி நமக்கான நன்மைகளும் தீமைகளும் வந்தடைகின்றன. எனவே சம்பாதிப்பது மட்டும் நம் கடமையில்லை, வாழ்தலை கண்ணியப் படுத்திக் கொள்ளலும் நம் பொருப்பாகிறது என்கிறது இக்குறள்.

ல்லோருக்குமே பெரிய ஆளாக வேண்டும், நான்கு பேர் மதிக்க கண்ணியமாக வாழ வேண்டும், தன்னை  சரியாக வைத்திருக்க வேண்டும், தான் சார்ந்த உலகம் தன்னை மெச்சிடும் வகையில் தன் வாழ்க்கை அமையவேண்டும் என்று ஓர் ஆசை இருக்கிறது. அந்த ஆசையை அடைவது எப்படி, அங்ஙனம் சரியானவராக ஒருவர் புகழ் நிலைத்து வாழ அந்த வாழ்தல் எப்படி இருந்திடல் வேண்டும் என்றும் திருக்குறள் சொல்கிறது.

அந்த ஆசையினை போல் அப்படி உயர்ந்துவிட்ட மனிதன், தான் உயர்ந்த இடத்தை அடைந்த பிறகு அவன் கடந்து வந்த பாதையை மறக்காத பட்சத்தில் மட்டுமே தனக்கு கீழுள்ளோரை மதிக்கவும் பண்பு கொள்கிறான் என்றெண்ணி; இரண்டாயிரம் ஆண்டிற்கு முன்னரே, செய்தது சிறிதாயினும், அந்த சிறு நன்றி யுணர்தல்  குறித்து திருவள்ளுவர் எத்தனை அழகாக சொல்கிறார் பாருங்கள் –

// தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார் // எனில் – ஒருவர் மிக சிறு உதவியே செய்திருப்பினும் கூட, அந்த உதவியின் பயனை அறிந்தவருக்கு; அது மாபெரும் செயலாக கருதப் படுகிறதென்கிறார்.

ஒரு பேருந்தில் பயணம் செய்கிறீர்கள். ஒருரூபாய்க்கு  பயண சீட்டு வாங்க வேண்டும். கையில் ஏகப்பட்ட வங்கிகள் வழங்கிய பணம் எடுக்கப் பயன்படும் அட்டைகள் இருக்கின்றது. அந்த அட்டையை எந்திரத்தில் தட்டினால் கோடி கோடியாய் பணம் கொட்டும். எல்லாம் சரி தான், ஆனால், அத்தனை வைத்திருந்தாலும் சில்லறை பணம் எடுக்க மறந்தீர்கள் என்று வையுங்கள், நம் பாடு திண்டாட்டம் தான். உதாரணத்திற்கு –

இன்று இத்தனை மணிக்கு சென்று ஒரு பெரிய வேலைக்கு ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்று வைத்துக் கொள்ளுங்கள். இன்று பார்த்து ஓட்டுனர் வராமலோ அல்லது மகிழுந்து பழுதுபட்டோ வேறு வழியின்றி அவசர அவசரமாக ஒரு அரசு பேருந்து பிடித்து செல்லக் கூடிய நிர்பந்தம் ஏற்படுகிறது.

அவசரத்தில், பணப்பை எடுக்க மறந்து பேருந்தில் ஏறிவிடுகிறீர்கள். பேருந்து கூட்டத்தில் அலைமோதும் நிறைய பேரை ஏற்றிக் கொண்டு பாதி தூரம் வந்து விடுகிறது.   நடத்துனர் கூட்டத்தை விலக்கி விட்டுக் கொண்டு உங்களை நோக்கி வருகிறார். இப்போது, பயணச் சீட்டு வாங்க, ஒரு ரூபாய் நாணயம் வேண்டும்.

நடத்துனர் சீட்டு வாங்கச் சொல்லி கைநீட்டி உங்கள் எதிரே வந்து நிற்கிறார். சட்டை பையில் கைவிட்டு துழாவி பார்த்ததில் வங்கியின் பணம் எடுக்க உதவும் அட்டைகளே கையில் தட்டுப் படுகின்றன. துழாவி தேடி எடுத்ததில் அந்த வங்கி அட்டைகள் போக தொன்னூற்றி ஐந்து பைசா மட்டும் கிடைத்து விடுகிறது. மீதம் ஐந்து பைசா இல்லவே இல்லை. நடத்துனர் முகம் பார்த்தால் மென்று தின்று விடுவார்போல் அப்படி உர்ரென்று இருந்தார்.

‘நாங்க மட்டும் ஐந்து காசு குறைவா கொடுத்தா எவ்வளவு அழுத்தமா சத்தமா சட்டம் பேசி கேட்கிறீங்க அதுபோல நீங்களும் தர வேண்டாமா’ என்று யாரையோ கடிந்துப் பேசிக் கொண்டே வருகிறார். உங்கள் அருகில் இப்போது வந்து விட்டார். நீங்கள் மீண்டும் சட்டை பைகளில் மாறி மாறி துழாவிப் பார்த்து வேறு பணம் இல்லாமையால் பதற்றம் கொள்கிறீர்கள்.

உங்களையே பார்க்கிறார் நடத்துனர். சுற்றி இருக்கும் மக்கள் எல்லாம் உங்களையே பார்க்கிறார்கள். அவசரத்தில் துரிதப் பட்டு தேடியதில் நெற்றி, உடம்பெல்லாம் உங்களுக்கு வியர்த்து விடுகிறது. நடத்துனர் என்னாச்சு எவ்வளோ இருக்கோ கொடுங்க என்கிறார், அவுமானமாக இருக்கிறது உங்களுக்கு.

இல்லை சில்லறை போதவில்லை இறங்கி விடுகிறேன் வண்டியை நிறுத்துங்கள் என்று சொல்ல வருகிறீர்கள். அந்நேரம் பார்த்து, நடத்துனர் உங்கள் அருகில் நெருங்கி உங்களின் கையிலிருந்த சில்லறைகளை வாங்கிக் கொண்டு, சிரித்தவாறே “என்ன சார் சரியாதான் சில்லறை வைத்திருக்கீங்களே, ஒரு ரூபாய் நீங்க கொடுக்காமல் போனால் என்ன ஓடும் பேருந்து சற்று நிற்காது என்றாலும், இப்படித் தேடி தேடி சரியா சிலல்றையை தர உங்களை மாதிரி வாலிபர்கள் இருந்தால் போதும்; நாடு செழிக்கும் சார்” என்று சொல்லிவிட்டு லேசாக உங்களைப் பார்த்து ஒரு கண்ணடித்துவிட்டுப் போகிறார்.

அடுத்த ஓரிரு வினாடிகளில் மக்கள் தங்களை அத்தனை நாணயத்தோடும் மதிப்போடும் பார்க்கிறார்கள். உள்ளே ஒரு பெருமூச்சு எழுகிறது உங்களுக்கு. நடத்துனரின் நன்னடத்தை எண்ணி மகிழ்கிறது உங்கள் மனசு.

யோசித்துப் பாருங்கள், அவர் உங்களுக்கென கொடுத்தது வெறும் ஐந்து காசு  மட்டும் தான். ஆனால், அந்த ஐந்து காசு இல்லாத காரணம் காட்டி இன்று எல்லோருக்கு மத்தியில் உங்களை பேருந்தில்  இருந்து இறக்கிவிட்டுக் கூட உங்களை அவுமாணப் படுத்தி இருக்கலாம். நீங்கள் சரியான நேரத்திற்கு போக முடியாமல் அந்த ஒப்பந்தமே உங்கள் கைவிட்டுப் போயிருக்கலாம். ஆனால் அங்கனம் செய்யாது அவர் செய்த இந்த சிறு உதவி எத்தனை பெரிதென்று அதன் பயன் அறிந்தவரே அறிவரென்கிறார் திருவள்ளுவர்.

ரு சின்ன உதவி தான் நம்மை பேராபத்திலிருந்து காக்கிறது. என்றாலும், அதை உதாசீனப் படுத்தாது அதையும் பெரிதாக எண்ணி நன்றியுணர்வு கொள்ளும் பக்குவம் வேண்டும் என்கிறார் திருவள்ளுவர்.

இதுபோன்று ஆயிரத்து முன்னூற்றி முப்பது திருக்குறளை எழுதி, நாம் நகரும் இடமெல்லாம் நம்மோடு வந்து நமக்கு வாழ்வியலை சொல்லித் தரும் பெரும் பயனுள்ள ஒரு நூலாக திருக்குறள் அமைகிறது. அதை வெறும் நூல் என்று சொல்வது கூட அத்தனை மிகையில்லை, அது ஒரு நன்னடத்தையின் ஞானப் பலன். தமிழராகப் பிறந்ததன் பிறவிப் பயன். இன்றைய நம் வாழ்வியலை என்றோ சொல்லிச் சென்ற ஒரு மகானின் மாமனிதரின் வாழ்வியல் சொல்லும் மாமறை.

அது வெறுமனே காக்கப் பட மட்டுலமல்ல ஒவ்வொரு மனிதனும் படித்து தன் வாழ்க்கையினை சீர்செய்துக் கொள்ளவும், நம்மை நடுநிலை படுத்திக் கொள்ளவும், பிற்காலத்தின் மாற்றங்களை இப்பொழுதிலிருந்தே நிகழ்த்திக் கொள்ளவும், நாளைக்கு வேண்டியதை இன்றே ஏற்படுத்திக் கொள்ளவும், உலகச் சமன்பாடுகளில் எல்லாம் உயிர்க்கும் எல்லாம் கிடைக்கும் வண்ணம் நாம்  வாழத் தக்க  நம்மை நெறி படுத்தும் நூலாகவும்  திருக்குறள் அமைகிறது.

எனவே, திருக்குறளில் இருக்கும் தமிழர் பண்பினை, நம் வாழ்வியலை ஒவ்வொருவரும் படித்து, தமிழரின் பண்பு மாறாது வாழ்ந்து, நாளைய நல்லதொரு சமுதாயத்தை இன்றிலிருந்தே உருவாக்குவோம். ஒவ்வொரு தமிழனும் மற்றொரு மனிதருக்கேனும் நல்ல பாடமாய் வாழ்வோம். அதற்கு துணை நிற்கும் திருக்குறளை தினம் ஒரு குறள் வாசிக்கும் முறையிலேனும் வாழ்நாள் முழுதும் மீண்டும் மீண்டும் வாசித்து மனனம் செய்து  அர்த்தம் அறிவோம். அறிந்ததை பிறருக்கும் படிக்கத் தருவோம். இயன்றவரை விழா நடத்தும் இடங்களில், நல்ல நிகழ்ச்சிகள் நடைபெறும் நாளில் பரிசு கொடுக்கும் பட்சத்தில்; திருக்குறளையே நல் பரிசாகத் தருவோம். திருக்குறளை மொத்த தமிழரும் படிக்க வழிவகை செய்வோம்.

தமிழர் பண்பினை முழுமையாக திருக்குறள் மூலமும் கற்று அதன்படி மேன்மையாக வாழ்ந்து; தமிழரை மீண்டும் உலக அரங்கில் முன்னிலை படுத்துவோம். ஆங்காங்கே அடிமைப் பட்டுக் கிடக்கும் நம் இனத்து மக்கள் அப்படி யொன்றும் சோடைப் போனவர்கள் அல்ல; அவர்கள் இவ்வுலக வாழ்வு முறைகளின், பண்பின், நாகரிகத்தின் முன்னோடிகள் என்று திருக்குறளின் வழி நின்று; வாழ்ந்து; வென்று; முழங்குவோம். தெளிவும், பண்பும், உண்மையோடு வாழ்தலும், பிறருக்கு உதவும் மனமும், எல்லோரையும் மதித்துப் போற்றும் குணமும் எல்லோருக்கும் இயல்பாக வரப் பெறட்டும். அனைத்துயிரும் நலம் பெற்று ஓங்கட்டும். எல்லோருக்கும் நன்றியும் வணக்கமும்!!

வித்யாசாகர்



Posted in வாழ்வியல் கட்டுரைகள்! | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

வளைகுடாவிலிருந்து; அன்புள்ள அம்மாவிற்கு மகனெழுதும் கடிதம்!!

அன்புள்ள அம்மாவிற்கு,

வீடும் நீயும் உறவுகளும் நலமா அம்மா?

அப்பாவிற்கு என் வணக்கத்தையும் அன்பையும் சொல்லுங்கள் அம்மா.

நானும் நண்பர்களும் உங்களின் நினைவுகளை தாங்கியவண்ணம் இங்கு நலமாக உள்ளோம்.

நலமெனில், உணவிற்கு பஞ்சமின்றி உடுத்தும் ஆடைக்கு பஞ்சமின்றி உடனிருக்கும் தோழமைக்கு பஞ்சமின்றி நலம்.

இது ஒரு வேளைதவராமல் மருந்துண்ணும் கட்டாய வாழ்க்கை அம்மா. ஏழுமணிக்கு வரிசையில் நின்று எட்டு மணிக்குள் சாப்பிட்டால்தானே இங்கே சாப்பாடு கிடைக்கும்.  நீ காத்திருந்து என் சுவைப் பார்த்து பரிமாறி அன்பினால் இட்ட உணவு கிடைக்கும் நம் தாயகம் இல்லையே இது. உணவு உண்ணுப்போதெல்லாம் உன்னை நினைத்துக் கொள்வேன் அம்மா. கண்ணீர் உணவோடு தட்டில் கலந்துக் கொள்ளும், அதற்குள் அருகில் நிற்பவன் நேரமாச்சி சீக்கிரம் சாப்பிடு என்பான். என்னடா உணவு என்று எழுந்து வரவும் முடியாதே. பாதியேனும் தின்று விட்டு மீதியை உன் நினைவால் நிறைத்துக் கொள்வேன் அம்மா.

மனது கஷ்டமாகத் தான் இருக்கிறது அம்மா, பிடிக்கவேயில்லை நீயில்லா இந்த தேசம். அப்பா தங்கை அண்ணா நினைவுகள் தினம் தினம் என்னை கொல்கிறது. படித்த பின் அழுவாயோ என்று பயம் இருந்தாலும் மனது கணக்கிறதம்மா. உன்னிடம் சொல்வதன்றி வேறு உலகம் இல்லை எனக்கு. இருந்தாலும் தாங்கிக் கொள்வேன் அம்மா. நீ கொடுத்த தைரியம் எனக்குள் நிறைய வைத்திருக்கிறேன். அது என்னை பலப் படுத்தும் அம்மா. நீ கற்றுத் தந்த ஒழுக்கம் எனை  நல்லவனாய் அடையாளம் காட்டுகிறது இங்கே. வேலையில் கூட என்னைத் தான் எல்லோரும் பாராட்டுகிறார்கள். விரைவில் எனக்கு சம்பள உயர்வு செய்வார்களாம். இங்கே முன்னேற்றம் என்பது மாடிப்படியில் ஏறுவது போல் சுலபமாக இருக்கிறதம்மா.

சொன்னால் ஆச்சர்யப் படுவாய், வேலைவிட்டு வந்ததும் உன் நினைவென்னை கொள்கிறதே என்ன செய்வதென்று மாலை நேரத்துக் கல்லூரி யொன்றில் சேர்ந்து நானிங்கே பட்டயம் படிக்கிறேன் அம்மா. சேரும் முன்னே உன்னிடம் கேட்கவேண்டும் என்று எண்ணினேன். போனமாதக் கடிதத்திலேயே குறிப்பிடலாம் என்று பார்த்தேன். பிறகு ரகசியமாய் முடித்துவிட்டு சொல்வோமே என்றுத் தோன்றியது. ஆனால் முடியவில்லை அம்மா, என் கண்ணீரும் சிரிப்பும் முதன்முதலாய் உனக்காகவே சேகரிக்கப் படுகிறது.

நீ வருந்தக் கூடாது, என்னை எண்ணி மகிழவேண்டும் என்று தான் சொல்கிறேன். வேலை படிப்பு சார்ந்தெல்லாம் இங்கு கவலை படுவதற்கில்லை. அண்டை மாநிலப் பிரபுக்கள் இங்கும் ஆட்சியை கைபடுத்தும் சுயநலவாதிகளாகவே இருப்பதால் அவ்வப்பொழுது தமிழ் குறித்தும் தமிழர் குறித்தும் நக்கல் செய்கையில் கோபம் வரும், சண்டை கூட போடுவேன், என் மண்ணைப் பற்றி யார் என்ன சொன்னாலும் தட்டிக் கேட்பேன் அம்மா, நீ ஊட்டி வளர்த்த வீரம் உள்ளே என்னை சரியானவனாக வைத்திருக்கிறது அம்மா.

அப்பா அடிக்கடி சொல்வாரே, நம்மூரில் வாழ்ந்து உயர்ந்தவன் தான் அசலூரில் நம்மை மட்டம் தட்டுவானென்று, அப்படித் தான் நடக்கிறது. உடன் இருந்துக் கொண்டே என் வேலைகளில் கூட எனக்கு எதிராக சூழ்ச்சிகளை செய்கிறார்கள். அவர்களின் உறவுகளை முன்கொண்டு செல்வதில் தான் அவர்களுக்கு கவனம் அதிகம் இருக்கிறது. நம் தமிழர்கள் அப்படி இல்லையே அம்மா. உணர்ச்சிவசப் பட்டு விடுகிறார்கள். கோபம் வந்தால் அடித்துவிடுகிறார்கள், உடனே ஊருக்கனுப்பிவிடப் படுகிறார்கள். இல்லையெனில் நம்பி விடுகிறார்கள் ஏமாந்துப் போகிறார்கள்.

ஆனால், அவர்கள் சாதுர்யமாக சில இடத்தில் பணிந்தும் ஆமாம் போட்டும் வெற்றியே பிரதானமாக கொண்டு முன்னேறிச் செல்கிறார்கள் சில அண்டை மாநிலத்து சுயநலமிகள். போகட்டும் அந்த வேடதாரி வாழ்க்கை நமக்கு வேண்டாம். தமிழர்கள் மனசு போல் வாழும் சுத்தம் உள்ளவர்கள். உணர்ச்சிப் போல முகத்தை காட்டும் உண்மை மாந்தர்கள். நானும் அப்படியே இருப்பேனம்மா என் திறமைகள் இவர்களை வென்றுவிடும். என்ன தான் சூழ்ச்சி செய்தாலும் நாம் செய்யும் நல்லவைகள் அதை காத்துக் கொள்ளும் அம்மா.

இங்கு நாங்கள் நண்பர்களெல்லாம் கூடி மாதமாதம் ஏதேனும் செய்கிறோம். மாதம் வரும் இருபதாயிரம் சம்பளத்தில் ஆளுக்கு இருநூறு பணம் போட்டு, மொத்தமாய் நூறு பேர் என்று சேர்க்கையில் இருபதாயிரம் தாண்டி கிடைக்கிறது. அதை உதவிகள் கிடைக்காத ஆதரவற்றோரின் இல்லங்களுக்கு அனுப்பி உதவுகிறோம் அம்மா. அதை அனுப்பிவைக்கும் ஒவ்வொரு மாதமும் எனக்கு இன்னொரு நல்லதும் நடக்கிறது. எதையும் எதிர்பார்த்து நாம் இதை எல்லாம் செய்யவில்லை என்றாலும், நாம் செய்யும் நற்பணிகள் நம்மையும் காக்கிறது அம்மா.

இங்கு நம் தாயகத்திற்கு என உதவுவோர் நிறையப் பேர் உள்ளார்கள் அம்மா. வீட்டை விட்டு வந்ததும் வீட்டின் அருமை தெரிவது போல்; நம் தாயகம் விட்டு வந்தவுடன் தான் நம் தாயகத்தின் அருமையும் பெரிதாகப் படுகிறது. இன்னொன்றினை சொல்ல மறந்தேன், இப்போதெல்லாம் மொழியுணர்வு மிகுந்து விட்டது நம் தமிழர்களுக்கு. பெரும்பாலும் இங்குள்ளவர்கள் அழகாக தமிழ் பேசுகிறார்கள். பண்பாகவும் நடந்துக் கொள்கிறார்கள். பொதுவாக எல்லோருமே நல்லது செய்யவும், நல்லவர்களாக வாழவுமே விரும்புகிறார்கள். அவர்களுக்கு முன்னின்று நல்லவைகளை எடுத்துச் செய்யவும் கூறவும் தான் நம்பிக்கையானவர்கள் தேவை படுகிறார்கள் அம்மா.

அங்ஙனம் இங்கு நிறைய தமிழ் நற்பணி அமைப்புக்களும், கவிஞர்கள் சங்கமும் நன்றாக செயல்பட்டு வருகிறது. நானும் என்னால் இயன்றவரை அவர்களோடு சேர்ந்து நம் மக்களுக்கு தொண்டாற்றி தமிழ் நிலைக்க பாடுபட்டும் வருகிறேன் அம்மா.

நம் தாயகம் எப்படி உள்ளதம்மா?

அரசியல் நிலைபாடுகளை செய்தியில் காண்கையில் வேதனையாக இருக்கிறது. இன்னும்சுயநல அரசியல் வாதிகளே நம் மண்ணில் இருக்கின்றனர். அவர்களை ஒழிக்க என் தலைமுறை நல்ல சிந்தனையோடு புறப்பட வேண்டுமம்மா. நம் தம்பியை தங்கையை அப்படி வளர்க்க வேண்டும் அம்மா. அவர்களை அரசியளுக்கென்றே சொல்லி படிக்க வைக்கவேண்டும். நல்ல பண்புகளோடு சமுதாய அக்கறையோடு, பொதுநோக்கோடு செயல்படுமாறு வளர்க்க வேண்டுமம்மா. தம்பியிடம் தங்கையிடம் இதை நான் கூறியதாக சொல்லுங்கள். கடிதம் காட்டி நம் சமுதாயம் குறித்த என் வேதனையை பகிர்ந்துக் கொள்ளுங்கள். அப்பாவிடமும் அண்ணாவிடமும் சொல்லி அதற்குத் தகுந்தாற்போல் வழிநடத்த சொல்லுங்கள் அம்மா. அண்ணாவிற்கும் அப்பாவிற்கும் தம்பி தங்கைகளுக்கும் நேரம் அமைகையில் தனியாக கடிதம் வரைகிறேன் என்று சொல்லுங்கள்.

அருகாமை வீட்டு உறவுகளுக்கும், என் நண்பர்கள் வீட்டிற்கு வந்தால் அவர்களுக்கும் என் வணக்கத்தை சொல்லுங்கள். இன்னொன்றினை மறந்து விட்டேன் அம்மா, அப்பாவிடம் சொல்லி தோட்டத்தில் உள்ள செடிகளுக்கு இம்மாதம் தவறாமல் மருந்திட சொல்லுங்கள். பிறகு மறக்காமல் எனக்கு பதில் எழுதும் போது கறுப்பி எத்தனை முட்டை இட்டாள், ஜெகன் குட்டி எப்படி இருக்கான், வீட்டை நன்றாக பார்த்துக் கொள்கிறானா? யாரையும் கடித்து எல்லாம் வைக்கவில்லையே என்பதை பற்றியும் எழுதுங்கள்.

தம்பி தங்கை நினைவு போலவே, எனக்கு நம்ம கறுப்பி(கோழி), ஜெகன்(நாய்குட்டி) நினைவுகளும் நிறைய இருக்கும் அம்மா. அவைகளின் பராமரிப்பும், தோட்டத்து வாசமும், அங்கே அமரும் தருணமும், சில்லென்ற காற்றும், நீ அருகில் அமர்ந்து பேசும் வாய்ப்பும்,  அப்பா திட்டாமல் கொஞ்சும் பொழுதுகளும், போர்வைக்குள் ஒளிந்துக் கொண்டு நானும் அண்ணாவும் தம்பி தங்கைகளும் விளையாடிய உறக்கத்திற்கு முன்னரான இரவும் வாழ்க்கையம்மா.

இனி கிடைக்குமா அதலாம்? கிடைக்கும் என்று நம்பிக்கை இருந்தாலும் தங்கை தம்பி படிப்பு, அண்ணனின் எதிர்காலம், அப்பாவுக்கு உதவி, என் சமுகத்திற்கு நான் செய்ய வேண்டிய கடமைகள், உன்னையும் அப்பாவையும் கடைசி வரை என்னுடன் வைத்து நலமாகப் பார்த்துக் கொள்வதற்கான ஆடம்பரமற்ற செல்வம்’ என எல்லாம் பற்றி யோசிக்கையில்; இதத்தனையையும் என் போதாத படிப்பு என் தேசத்தில் எனக்குத் தருமா?

எனும் பயம் வருகிறது அம்மா. எனவே கொஞ்சம் காலத்திற்கு மனதை இறுக்கிப் பிடித்துக் கொள்ளுங்கள். எப்படியாவது இங்கிருந்தே படித்து ஓரளவேணும் என் வேலையினை உயர்த்திக் கொண்டு பின் தாயகத்திலேயே வந்து இருந்து விடுகிறேன் அம்மா.

நீங்கள் எல்லாம் இல்லாத இங்கு எந்திரமாய் சம்பாரித்து எந்திரமாய் வாழ்வதை விட, அங்கே நீயிருக்கும் மண்ணில் உழைத்து, வேண்டியதை சம்பாதித்துக் கொள்ள இங்கிருந்தே என்னை பக்குவப் படுத்திக் கொண்டு, அதற்கு தக்க என் நிலையை சமன் செய்துக் கொண்டு அங்கேய வந்துவிடுகிறேன் அம்மா.

அங்கே உன்னருகில், என் உறவுகளின் சிரிப்பில். என் மரம் செடி கொடிகளின் அசைவிற்கு மத்தியில், காகம் கத்தும் குயில் கூவும் சப்தங்களுக்கு இடையில், பெய்யும் மழையோடும் வீசும் காற்றோடும் அன்பினை அக்கறையை சமுதாய முன்னேற்றத்தை; சமுகம் மாறுவதற்கான பண்பினை பகிர்ந்து நிம்மதியாய் வாழ்வோமம்மா. அதுவரை உங்கள் எல்லோரின் நினைவுகளை சுமந்தவனாய். ஏக்கங்களையும் அன்பையும் கண்ணீரில் நிறைத்துக் கொண்டிருப்பவனாய், கடிதம் நோக்கி காத்திருக்கும் கண்களோடு உன் அன்பிற்காக காத்திருக்கிறேன் அம்மா.

நலம் பார்த்துக் கொள். உடல்நலம் தக்க மருந்தெடுத்துக் கொள். மனதை பலமாய் வைத்துக் கொண்டிரு அம்மா. விடைகொள்கிறேன். அடுத்த மாதக் கடிதத்தில் தொடர்கிறேன். வணக்கம்.

——————————————————————————————————-
வித்யாசாகர்

Posted in வாழ்வியல் கட்டுரைகள்! | Tagged , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

செல்லம்மா வித்யாசாகரின் சிறுகதைகள்..

“தலைப்பு : பயணம்..”

ல்யாணியும் சாந்தியும் நல்ல தோழிகள். அவர்கள் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் நடுத்தரக் குடும்பத்தை சார்ந்தவர்கள். அலுவல் முடிந்து, எப்பொழுதும் அவர்கள் பேருந்தில் பயணம் செய்துதான் வீட்டுற்கு போவார்கள். அப்படி ஒரு நாள் பயணத்தின் போது –

“கல்யாணி சாந்தியிடம் கேட்கிறாள் நேற்று செய்தி பார்தியாடி, தேர்தல் நெருங்குகிறது ஆகவே சாலை சீரமைப்பு மற்ற எல்லாம் பணிகளும் நம் நாட்டில் விரைவாக செய்து கொண்டு வருகிறார்கள் தெரியுமா”

“அப்படியா” என்றால் சாந்தி.

“ஆம் நம் நாடு மிகவும் முன்னேறி கொண்டுதான் வருகிறது. ஆனால் அதை தடுக்க நம்மூரிலயே ஆட்கள் இருக்கிறார்களே அதை நினைக்கும் போதுதான் வேதனையாக உள்ளது”

“ஆம் நாலுபேர் நல்லவர்கள் இருந்தால், நாலு பேர் கெட்டவர்களும் இருக்கத் தானே செய்கிறார்கள்”

“நாடு முன்னேறுது முன்னேறுதுன்றோம், நாட்ல விலைவாசி பார்த்தியா?!!!!!”

“ஆமாண்டி கல்யாணி இப்பொழுது காய்கறி விலை கூட ரொம்ப அதிகமா இருக்கிறது” என்று பேசி கொண்டே இருந்த போது அங்கே கண்டக்டர் டிக்கெட் டிக்கெட் என்று சொல்லிக்கொண்டு வந்தார், உடனே கல்யாணி தன்னிடம் இருந்த ஐந்த ரூபாயை கொடுத்து இரண்டு ருபாய் டிக்கெட் இரண்டு கொடுங்கள் என்றாள். உடனே அவர் சில்லறை இல்லை என்னிடம் என்றார். இறங்கும் போது வாங்கி கொள் என்றார் . பின் கல்யாணி தன் தோழியிடம் சொல்கிறாள் இந்த கண்டக்டர்களே இப்படித்தான் எப்போ பார்த்தாலும் சில்லறை இல்லை என்று சொல்வதே இவர்களுக்கு வழக்கமாக போய் விட்டது. இதெல்லாம் கேட்க யார் இருக்கிறார்கள்.

“ஆமாம் கல்யாணி நீ சொல்வது உண்மைதான் இப்படி பேருந்தில் பயணிக்கும் பயணிகளிடம் எவ்வளோ ரூபா ஏமாற்றி இருப்பார்கள் இவர்கள்’ என்றாள் சாந்தி. ‘பார்க்கலாம் இவர் போகும்போது தருகிறாரா’ என்று.

“இதலாம் விட கொடுமை, நம் நாட்டில் மழை வேறு வந்து என்ன பாடு படுத்தியது மக்களை, பாவம் மக்கள் அடிமட்டத்தில் இருப்பவர்கள் தான் மிகவும் சிரமபட்டுக் கொண்டு இருகிறார்கள்” என்றாள் கல்யாணி.

‘’ஆம் இப்பொழுது வானம் கூட மக்களை பழி வாங்குகிறது”

“வானமா?”

“ம்ம.., இயற்கை கூட மனிதர்களை, ஏழைகளை தான் பழி வாங்குகிறது. இதனால் விவசாயம் எவ்வளோ பாதிப்பு அடைதுள்ளது தெரியுமா? நேற்று செய்தியில் இது பற்றித்தான் காட்டி கொண்டு இருந்தனர். நாம் சென்னையில் நகரப்பாங்கில் வசிப்பதால் நமக்கு கிராமமத்து வாழ்க்கை தெரிவதில்லை. அங்குள்ள மக்காளின் உழைப்பால் தான் நமக்கு உண்ண அரிசியும் காய்கறிகளும் கிடைக்கிறது. இந்த மழையால் இப்போது காய் கறிகள் எல்லாம் விலை ஏறி கிடக்கிறது” என்றாள் ஷாந்தி.

உடனே கல்யாணி “ஆம் ஷாந்தி ஒரு பக்கம் இப்படி இருந்தாலும், மறுபக்கம், சாப்ட்வேர் மற்றும் இதர தொழில்களில், விஞ்ஞானத்தில் கூட மிகவும் முன்னேறி வருகிறோம். அது அப்படி இருக்க, பாகிஸ்தானில் தாலிபான்கள் மூலம், பெண்கள் பள்ளிகளை தொடர்து எரித்து கொண்டு வருகிறார்கள். இது ரொம்ப கஷ்டமாக இருந்தது. ஏன் இப்படி இருக்காங்கன்னு தெரியல. ஏன் இவர்களுக்கு இப்படி ஒரு மனசு இருக்கிறதோ தெரியவில்லை. இதலாம் கடந்தும் இக் காலத்தில் பெண்கள் கல்வி கற்று கொள்வது என்பது மிகவும் அவசியமான ஒன்றுடி”

“ஆமாண்டி இப்போது, விண்வெளி போன ‘கல்பனா சாவ்லா எல்லாம் நமக்கு ஓர் முன்னோடி தானே, அந்த தாலிபான் போல நம் கல்வியை நமக்கு தடுக்க இங்கே அத்தனை கொடூரமானவர்கள் இல்லாதது பெரிய விசயம்டி. நம்மூரில் நம்மை முன்னேற்ற நம் சமுகம் உடன் நிற்கிறது.

“எல்லா இடத்திலும்னு சொல்ல முடியாது. ஒரு சில கிராமங்களில் பெண்கள் பள்ளிக்கு செல்வதில்லை, ஆனால் இது போன்று பள்ளிக்கு தீவைப்பது, பெண்கள் வன்முறையை திணிப்பது என்பது நம் தமிழ் நாட்டில் இல்லை”

பின் அவர்கள் இருக்கும் இடம் வர இருக்க, போய் கண்டக்டரிடம் மீதப் பணத்தை கேட்கப் போனார்கள். உடன் அவரும் கொடுத்துவிட்டார்.

“பரவாயில்லைடி. இவர் நல்லவர் போல, அதுதான் கேட்ட உடனே கொடுத்து விட்டர். இல்லையா கல்யாணி”

சாந்தியும் ஆம் ஆம் அவர் காதில் கேட்டு விடப் போகுது வா இறங்க தாயார் ஆகலாம் என்றாள். அதற்குள், அலைபேசி அழைக்கும் சப்தம் சாந்தியிடம் இருந்து வர, எடுத்து பேசுகையில், அவளுடைய அம்மா வரும்போது நம் தெரு முனையில் இருக்கும் கடையில் பால் வங்கி வா பணம் பிறகு கொடுத்துக்கலாம் என்று சொல்லிவிட்டு தொலைபேசியினை வைத்தாள்.

கல்யாணி என்ன என்றாள். அம்மா அழைத்தாள்’டி, பால் வேணுமாம். போன வாரமெல்லாம் பால் கிடைப்பதே அரிதாய் இருந்தது. பால் வியாபாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக. எல்லாம் இந்த அரசியல் காரணம் தான்.

“ஆம், ஏன் நம் நாட்டில் அரசியில்வாதிகள் இப்படி இருகிறார்கள் என்று தெரியவில்லை. பாவம்டி, அவர்களே கூலிக்கு உழைப்பவர்கள், அவர்ளுக்கு ஒரு ருபாய் ஏற்றி கொடுத்தால் தான் என்ன என்று தெரியவில்லை” அதற்குள், பேருந்து நின்றது. அவர்கள் இறங்கும் இடம் வந்துது இருவரும் இறங்கி அவரவர் வீட்டிற்குச் சென்றார்கள்.

எபப்டியோ, சமூகம் சார்ந்த சிந்தனைகளால், இவர்களின் இன்றைய பயணம் மிகவும் நல்ல பயணமாக அமைந்தது.
————————————————————————————————
செல்லம்மா வித்யாசாகர்

Posted in நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் | Tagged , , , , , , , , , , , | 10 பின்னூட்டங்கள்

பெரியார் நூலகத்தின் இராவண காவியமும், பாராட்டு விழாவும்…

வெறும் சவ்வுகளாலான இதயத்தை
அன்பு நிரப்பி –
மனசாக்கிக் கொள்வோம்!

சில நீலக் கடலின் தூரத்தை
சின்ன இதயமளவில் வென்று
உறவென எழுத்தாலும் முழங்குவோம்;

வாழ்வின் அதிசயத்தை ஆணவமும்
பொறாமையுமின்றி –
உனக்காய் எனக்காய் நமக்காய்
நாளைய தலைமுறைக்குமாய் ஒற்றுமையில் வென்று குவிப்போம்!!

கால சூத்திரத்தின் கட்டப்பட்ட சூட்சுமக் கைகளை
நற்சிந்தனையின் தெளிவின் கண்களோடு கண்டு
இலகுபடுத்தி வான் நோக்கி இரு கை விரித்து –
உலகின் நன்மைக்காய் வேண்டுவோம்!!

என் வீடு என் தெரு என் தேசம் இவ்வுலகம்
இவ்வுலகில் நிறைந்துள்ள மரம் செடி கொடி விலங்குகள்
உயிரினங்கள் அனைத்தின் நன்மைக்கும் –
நாமும் பொறுப்பென்று உணர்ந்து
நம் வாழ்க்கைமுறையை அமைத்துக் கொள்ள –
கூடிபேச –
நிறைவாய் நம் தமிழுக்கு காது கொடுப்போம்!

அனைவருக்குமென் அன்பு வணக்கம்!!” என்று ஏற்புரை ஏற்று பேச ஆரம்பித்த போது, என் கையிலிருந்த காகிதம் என் கண்களை மூடிக்கொள்ள; வாய் – தானாக பேச ஆரம்பித்ததாய் தோன்றியதெனக்கு.

அத்தகைய வண்ணம், கிடைக்கப் பெற்ற விருதுகளின் முகத்தை மீண்டும் ஒருமுறை அன்பினால் பூசி; குவைத் பெரியார் நூலகம், எனக்கேக் காட்டிய நெகிழ்வான தருணமது. சிரித்த முகத்தில்; தாயும் தகப்பனும், உற்ற சகோதர சகோதரியும், நண்பர்களும் மகிழும் உண்மை மகிழ்வினை என் வெற்றி கொண்டவைக்காய் என்று சொல்லி; குதூகலித்தது அந்த தோழமை உறவுகளின் மேடை.

விருதினை மட்டுமே வெற்றி என்று ஏற்காத என் லட்சியத்திற்கு; விருதும் ஒரு வெற்றி, அது நல்ல படைப்பிற்காக கிடைக்கப்பட்ட அங்கிகாரம் என்பதுபோல் கொண்டாடினர் பெரியார் நூலக அமைப்பினரும், கலந்து சிறப்பித்த இதர அமைப்புக்களின் நிர்வாகிகளும். இயல்பாகவே அவர்கள் விருதினை எண்ணி மகிழக் காண்கையில் எனக்கும் மனம் பூரிக்கவே செய்தது.

ஆனாலும், ஒரு படபடப்பு; எதிர்பார்ப்புக்களை நிறைவு செய்யும் அதீத அக்கறை உள்ளே நெருட, எழுதியதை எடுத்துக் கொண்டு மேடை ஏறினாலும்; இயல்பாய் என் உறவுகளிடம் பேசும் மகிழ்வாகவே வியர்வை துளியோடு சேர்ந்து சொட்டியது என் உணர்வுகளின் வெளிப்பாடுகளும்.

உண்மையில், இதலாம் இத்தனை நான் எதிர்பார்க்காதது தான், அதிலும், எனக்கான ஒரு பெருமை நிகழும்போதெல்லாம், எனையே சார்ந்திருக்கும் என் செல்லம்மாவின் உணர்வுகள் பெருமை படுத்தப் படுவதில்லையே என்று ஒரு எண்ணமும் வரும். ஒரு ஆணைச் சார்ந்தே பெண்கள் இருக்குமாறும்; பெண்களின் வெற்றிக் கூட வெறும் ஆணாக மட்டுமே இருக்கத் தக்க அமைந்துவிட்ட இச்சமுதாயக் கட்டமைப்பு ஒரு பக்கத்தில் மிக வருத்தத்தையே தந்தது.

அவர்கள் ஆணுக்கு பெரும் உதவி. பெண்கள் ஆண்களின் மூலசக்தி, இதலாம் நம்மால் ஒப்புக் கொள்ளப் பட்டாலும், அவர்களின் உணர்வினை வெற்றிகளாய் பகிரும் வாய்ப்பினை அவர்களுக்கு அளிக்கவோ, அல்லது அளித்தாலும் அவர்கள் பெறவோ தயாராக இல்லாத நிலை நிறைய குடும்பங்களில் இருக்கிறதே.

அதற்கு நாமும் ஆளானோமோ என்று எண்ணுவேன். ஆனால், அவைகளை போக்கும்வகையில்; செல்லம்மாவையும் மேடைக்கழைத்து அவருக்கும் பொன்னாடை அணிவித்து அவரோடு என்னை பெருமை படுத்திய ‘எழுத்திற்கும், விருதிற்கும், பெரியார் நூலக அமைப்பிற்கும் நன்றிகள் பல கூற மனதார உரித்தானேன்.

சாதாரணமாகவே சமூகப் பார்வைக்கென ‘வித்யாசாகரெனும் ஒரு கம்பீரத்தை உடுத்திக் கொண்டு வெட்டியாய் திரிகிறோமோ? ஒரு பொதுமனிதனுக்கான கடமையே இன்னும் கடல்போல் விரிந்திருக்க மேடைகளும் பாராட்டுக்களும் தேவைதனோ? என்றொரு எண்ணம் மீண்டும் மீண்டுமாய் எனக்குள் கேள்விக் குறியாகவே இருக்கிறது.

வெறும், இருபது புத்தகங்களோ, இருநூறு புத்தகங்களோ எழுதிவிடுவதல்ல என் நோக்கம். ஒரு சாதாரண மனிதனின் வெற்றிக்கு உரிய மாற்றம் என் எழுத்தாலும் நிகழுமெனில்; அதை பல பேரிடத்தில் கொண்டு சேர்க்க வேண்டுமென்பதே என் லட்சியம். அதன்பொருட்டுத் தான் நான் ஒருநாள் எழுதாத என் தினத்தைக் கூட என் வாழாத நாளென்றுக் கருதுவதும்.

ஐயா செல்லபெருமாள் அவர்களும், சகோதரி லதாராணி அவர்களும் அழைத்து இவ்விழா பற்றி தெரிவித்த போதுகூட, ஒரு கணம் இதலாம் தேவைதானா என்று யோசித்து, பிறகு சரி, பெரியவர்கள் ஏதோ செய்கிறார்கள் செய்யட்டும் மதிப்போமே என்னுமளவில் இம்மரியாதையையும் ஒப்புக்கொண்டேன். ஆனால், இதலாம் செய்து எனை மேலும் இச்சமூகத்திற்கான எழுத்துக்களை சுமக்கும் கடமைகளில் மிகையாய் ஆழ்த்தியதிந்த ”குவைத் பெரியார் நூலக அமைப்பு என்பதே உண்மை.

பொதுவாக, விருதுகளும் பாராட்டுக்களும் ஒரு படைப்பாளியின் படைப்பிற்கான எழுத்திற்கான அங்கிகாரம் தானேத் தவிர, நம்மை மாற்றி விடத் துணியும் சாவியல்ல’ என்பதே நான் எங்கும் பகிர்ந்துக் கொள்ளும் கருத்து. எனவே உங்களின் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் எல்லாம் உழைப்பிற்குக் கிடைத்த ஒரு மதிப்பாக மட்டும் கருதி; இன்று உடுத்தக் கிடைத்த இப் புதுச் சட்டையை இன்றிரவு படுக்கும் முன்பே கழற்றி; காலம்வரை தலையில் கனக்காமல் மனதில் சுமப்பேன் என்று சொல்லி,

இப்படியும் ஒருவன் இருக்கிறான் என எனைக் காட்டி, என் படைப்புக்களையும் பலர் வாங்கிப் படிக்க விருதுகளும் படைப்பாளியை அடையாளம் காட்டுகின்ற இவ்வேளையில், அப்படி என்னையும் அடையாளம் காட்டிய இத்தருணத்தை ‘சபை அடக்கம் கொண்டோ அல்லது இதலாம் அவசியமற்றது என்று சாதாரணமாகவோ எண்ணிவிடாமல், இதை என் மகிழ்வான தருணமாகவும், நன்றிக்குரிய தருணமாகவும் அறிவித்து, வாழ்த்திச் சென்ற எல்லோருக்கும் என் மனநிறைவான நன்றியினை உரித்தாக்கி விடை கொண்டேன்.

என்றாலும் இந்த விருது சமாச்சாரங்களை கடந்து, பெரியார் நூலகம் வேறு சில அரிய செயல்களையும் இம்மேடையில் செய்து சிறப்பித்தது.

பெரியாரின் சிந்தனைகளை பகிர்ந்துக் கொள்ளும் நோக்காக சகோதரி பாரதி தமிழ்நாடன் அவர்கள் ஒரு புத்தகத்தின் முக்கிய சாராம்சங்களை எடுத்து வரி விடாமல் இயல்பான நடையில், அவ்வளவு நேரத்திற்கு; அத்தனை பக்கங்களையும், கேட்போரின் மனதில் பதியும் வண்ணம் மிக நேர்த்தியாக படித்து அமர்ந்தார்.

மிழின் ஈர்ப்பு என்பதை கடந்து தன் சொல்வளத்தாலும், மேடையினை தன்வயப் படுத்திக் கொள்ளும் திறத்தாலும் கவிதாயினி சொப்னபாரதி லதாராணி அவர்கள் ராவண காவியத்தின் அத்தனை அழகியலையும் மாதம் தோறும் பகிர்ந்து வருகிறார். அதில் குறிப்பாக இம்முறை மண்ணின் வளங்களைப் பற்றியும், மக்களின் அக்கால வாழ்வியலை பற்றியும் ஆசிரியர் குழந்தை அவர்கள் தனது அழகிய கற்பனை வளத்தால் எழுதியுள்ளதை அவரின் ரசனை சாரம் குறையாவண்ணம் கவிதாயினி சொப்னபாரதி லதாராணி அவர்கள் எடுத்துரைத்து சொற்பொழிவாற்றியது கேட்கையில் மகிழத் தக்கதாயிருந்தது.

தோடு, சென்ற வருட இறுதியில் இயற்கை எய்திய திரு.வை. பாஸ்கர் அவர்கள் குவைத்தில் ஆற்றிய பல நற்செயல்களை எடுத்துரையாற்றி அவரின் திருவுருவப் படமும் திறந்து வைக்கப்பட்டது. அவரின் சிறப்புகள் குறித்தும், அவர் குவைத்தில் ஆற்றிய சேவைகள் குறித்தும் நிறைய பேர் பேசினார்கள்.

அதில் குறிப்பாக அருவிக் கவிஞர் ஆனந்தரவி அவர்கள் ‘அவருக்கும் வை.பாஸ்கர் அவர்களுக்கும் இடையேயுள்ள’ அவரின் தாய்மாமன் உறவு பற்றியும், அவர் குவைத்தில் இதுவரை பலரை வரவழைத்து அவர்களின் வாழ்வில் விளக்கேற்றி வைத்த சிறப்புகள் குறித்தும், இனம் என்பதைக் கூட கடந்து மனிதம் என்பதை மட்டுமே முன்வைத்து அவர் பலருக்கு உதவியாதாகவும் கூறி; அடுத்தடுத்த இடத்தில் அவர் பகிர்ந்துக் கொண்ட செய்திகளால் கேட்போரின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து வர, வார்த்தைகள் உடைந்து, பாசத்தில் ‘கேட்போரை எல்லாம் நெகிழவைத்து கலங்கவும் வைத்தார்.

பெரியார் சிந்தனை குறித்து ஐயா திரு. தமிழ்நாடன் அவர்கள் பேசுகையில், பெரியாரை ஒரு கடவுள் மறுப்பு கொள்கை சார்ந்து மட்டுமே நிறைய பேர் பார்க்கிறோம், அது அவர் ஆற்றிய விழிப்புணர்வு செயல்களில் ஒரு துளி மட்டும் தான். அது கூட அக்கால கட்டத்தில் நிகழ்த்திக் கொண்டிருந்த அதிக மூடத் தனங்களை எதிர்க்க அவர் அவ்வாறே செய்ய வேண்டியிருந்தது. அது ஒன்றை மற்றும் கருதி சிலர் அவரை அவரின் எண்ணங்களை முற்றிலும் ஒதுக்கி விடுகின்றன்னர்.

அவைகளை தாண்டியும் அவர் செய்த நிறைய நற்செயல்களை நாம் கவனத்தில் எடுத்துக்கொண்டு விழிப்போடும் தெளிவோடும் வாழ்க்கையை வாழ வேண்டும். மானமும் அறிவும் மனிதருக்கு அழகு என்பதை புத்தியில் இருத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டு வேறு சில தன் சுய கருத்துக்களையும் அழுத்தமாக பகிர்ந்துக் கொண்டார்.

தாய்மண் கலை இலக்கிய பேரவையின் நிர்வாகி திரு. க.அன்பரசன் அவர்கள் தன் மனம் நிறைந்த அன்பை நம் எழுத்து சார்ந்து பகிர்ந்துக் கொண்டார். மனம் நிறைந்து மேலும் நாம் வளர வாழ்த்திச் சென்றார். பெரியார் நூலக அமைப்பின் துணைத் தலைவர் திரு. லியாகத் அலி அவர்கள் நம் விருதுகளுக்காக வாழ்த்தறிவித்து பொன்னாடைப் போற்றி கௌரவித்தார்.

அது தொடர்ந்து, பெரியார் பன்னாட்டு கழக செயலார் திருமதி. கவிதாயினி சொப்னபாரதி லதாராணி அவர்கள் ‘குடும்பம் எனும் கோப்பில் உள்ள ஒருவரின் வெற்றிக்கு இருவரின் செயல்பாடுகளும் காரணம் என்பதை வலியுறுத்தும் வகையில் செல்லம்மாவிற்கும் பொன்னாடை அணிவித்து மரியாதை செய்து எங்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினார்.

தையடுத்து பெரியார் நூலக அமைப்பின் தலைவர் திரு. செல்லபெருமாள் ஐயா அவர்கள் வந்தமைக்கு நன்றி பகிர்ந்து வாழ்த்தி விழாவினை நிறைவு செய்து, விழா இறுதியாக அறுசுவை உணவும் பரிமாறி வந்தோரை நிறைவாய் விடை பெறச் செய்தார். முடிவில் எல்லோருக்கும் கைகூப்பி –

எலோரிடமிருந்தும் பிரியாவிடை பெற்று; எழுத்தின் சிறப்பினை வெறும் பாராட்டுவிழாவோடு நிறுத்திக் கொள்ளவேண்டாம், அது ஒருவரையாவது நல்ல மனிதராக மாற்றுவதில் செழுமை பெறட்டுமெனும் கட்டளை ஒன்றினை மனதில் தாங்கியவனாய் சமுதாயத்தின் அக்கறையோடும், இவர்களுக்கான நன்றி உணர்வினோடும் வீடு நோக்கி செல்லலானோம்..
—————————————————————————————
வித்யாசாகர்

Posted in அறிவிப்பு, கவியரங்க தலைமையும் கவிதைகளும் | Tagged , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக