பெரியார் நூலகத்தின் இராவண காவியமும், பாராட்டு விழாவும்…

வெறும் சவ்வுகளாலான இதயத்தை
அன்பு நிரப்பி –
மனசாக்கிக் கொள்வோம்!

சில நீலக் கடலின் தூரத்தை
சின்ன இதயமளவில் வென்று
உறவென எழுத்தாலும் முழங்குவோம்;

வாழ்வின் அதிசயத்தை ஆணவமும்
பொறாமையுமின்றி –
உனக்காய் எனக்காய் நமக்காய்
நாளைய தலைமுறைக்குமாய் ஒற்றுமையில் வென்று குவிப்போம்!!

கால சூத்திரத்தின் கட்டப்பட்ட சூட்சுமக் கைகளை
நற்சிந்தனையின் தெளிவின் கண்களோடு கண்டு
இலகுபடுத்தி வான் நோக்கி இரு கை விரித்து –
உலகின் நன்மைக்காய் வேண்டுவோம்!!

என் வீடு என் தெரு என் தேசம் இவ்வுலகம்
இவ்வுலகில் நிறைந்துள்ள மரம் செடி கொடி விலங்குகள்
உயிரினங்கள் அனைத்தின் நன்மைக்கும் –
நாமும் பொறுப்பென்று உணர்ந்து
நம் வாழ்க்கைமுறையை அமைத்துக் கொள்ள –
கூடிபேச –
நிறைவாய் நம் தமிழுக்கு காது கொடுப்போம்!

அனைவருக்குமென் அன்பு வணக்கம்!!” என்று ஏற்புரை ஏற்று பேச ஆரம்பித்த போது, என் கையிலிருந்த காகிதம் என் கண்களை மூடிக்கொள்ள; வாய் – தானாக பேச ஆரம்பித்ததாய் தோன்றியதெனக்கு.

அத்தகைய வண்ணம், கிடைக்கப் பெற்ற விருதுகளின் முகத்தை மீண்டும் ஒருமுறை அன்பினால் பூசி; குவைத் பெரியார் நூலகம், எனக்கேக் காட்டிய நெகிழ்வான தருணமது. சிரித்த முகத்தில்; தாயும் தகப்பனும், உற்ற சகோதர சகோதரியும், நண்பர்களும் மகிழும் உண்மை மகிழ்வினை என் வெற்றி கொண்டவைக்காய் என்று சொல்லி; குதூகலித்தது அந்த தோழமை உறவுகளின் மேடை.

விருதினை மட்டுமே வெற்றி என்று ஏற்காத என் லட்சியத்திற்கு; விருதும் ஒரு வெற்றி, அது நல்ல படைப்பிற்காக கிடைக்கப்பட்ட அங்கிகாரம் என்பதுபோல் கொண்டாடினர் பெரியார் நூலக அமைப்பினரும், கலந்து சிறப்பித்த இதர அமைப்புக்களின் நிர்வாகிகளும். இயல்பாகவே அவர்கள் விருதினை எண்ணி மகிழக் காண்கையில் எனக்கும் மனம் பூரிக்கவே செய்தது.

ஆனாலும், ஒரு படபடப்பு; எதிர்பார்ப்புக்களை நிறைவு செய்யும் அதீத அக்கறை உள்ளே நெருட, எழுதியதை எடுத்துக் கொண்டு மேடை ஏறினாலும்; இயல்பாய் என் உறவுகளிடம் பேசும் மகிழ்வாகவே வியர்வை துளியோடு சேர்ந்து சொட்டியது என் உணர்வுகளின் வெளிப்பாடுகளும்.

உண்மையில், இதலாம் இத்தனை நான் எதிர்பார்க்காதது தான், அதிலும், எனக்கான ஒரு பெருமை நிகழும்போதெல்லாம், எனையே சார்ந்திருக்கும் என் செல்லம்மாவின் உணர்வுகள் பெருமை படுத்தப் படுவதில்லையே என்று ஒரு எண்ணமும் வரும். ஒரு ஆணைச் சார்ந்தே பெண்கள் இருக்குமாறும்; பெண்களின் வெற்றிக் கூட வெறும் ஆணாக மட்டுமே இருக்கத் தக்க அமைந்துவிட்ட இச்சமுதாயக் கட்டமைப்பு ஒரு பக்கத்தில் மிக வருத்தத்தையே தந்தது.

அவர்கள் ஆணுக்கு பெரும் உதவி. பெண்கள் ஆண்களின் மூலசக்தி, இதலாம் நம்மால் ஒப்புக் கொள்ளப் பட்டாலும், அவர்களின் உணர்வினை வெற்றிகளாய் பகிரும் வாய்ப்பினை அவர்களுக்கு அளிக்கவோ, அல்லது அளித்தாலும் அவர்கள் பெறவோ தயாராக இல்லாத நிலை நிறைய குடும்பங்களில் இருக்கிறதே.

அதற்கு நாமும் ஆளானோமோ என்று எண்ணுவேன். ஆனால், அவைகளை போக்கும்வகையில்; செல்லம்மாவையும் மேடைக்கழைத்து அவருக்கும் பொன்னாடை அணிவித்து அவரோடு என்னை பெருமை படுத்திய ‘எழுத்திற்கும், விருதிற்கும், பெரியார் நூலக அமைப்பிற்கும் நன்றிகள் பல கூற மனதார உரித்தானேன்.

சாதாரணமாகவே சமூகப் பார்வைக்கென ‘வித்யாசாகரெனும் ஒரு கம்பீரத்தை உடுத்திக் கொண்டு வெட்டியாய் திரிகிறோமோ? ஒரு பொதுமனிதனுக்கான கடமையே இன்னும் கடல்போல் விரிந்திருக்க மேடைகளும் பாராட்டுக்களும் தேவைதனோ? என்றொரு எண்ணம் மீண்டும் மீண்டுமாய் எனக்குள் கேள்விக் குறியாகவே இருக்கிறது.

வெறும், இருபது புத்தகங்களோ, இருநூறு புத்தகங்களோ எழுதிவிடுவதல்ல என் நோக்கம். ஒரு சாதாரண மனிதனின் வெற்றிக்கு உரிய மாற்றம் என் எழுத்தாலும் நிகழுமெனில்; அதை பல பேரிடத்தில் கொண்டு சேர்க்க வேண்டுமென்பதே என் லட்சியம். அதன்பொருட்டுத் தான் நான் ஒருநாள் எழுதாத என் தினத்தைக் கூட என் வாழாத நாளென்றுக் கருதுவதும்.

ஐயா செல்லபெருமாள் அவர்களும், சகோதரி லதாராணி அவர்களும் அழைத்து இவ்விழா பற்றி தெரிவித்த போதுகூட, ஒரு கணம் இதலாம் தேவைதானா என்று யோசித்து, பிறகு சரி, பெரியவர்கள் ஏதோ செய்கிறார்கள் செய்யட்டும் மதிப்போமே என்னுமளவில் இம்மரியாதையையும் ஒப்புக்கொண்டேன். ஆனால், இதலாம் செய்து எனை மேலும் இச்சமூகத்திற்கான எழுத்துக்களை சுமக்கும் கடமைகளில் மிகையாய் ஆழ்த்தியதிந்த ”குவைத் பெரியார் நூலக அமைப்பு என்பதே உண்மை.

பொதுவாக, விருதுகளும் பாராட்டுக்களும் ஒரு படைப்பாளியின் படைப்பிற்கான எழுத்திற்கான அங்கிகாரம் தானேத் தவிர, நம்மை மாற்றி விடத் துணியும் சாவியல்ல’ என்பதே நான் எங்கும் பகிர்ந்துக் கொள்ளும் கருத்து. எனவே உங்களின் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் எல்லாம் உழைப்பிற்குக் கிடைத்த ஒரு மதிப்பாக மட்டும் கருதி; இன்று உடுத்தக் கிடைத்த இப் புதுச் சட்டையை இன்றிரவு படுக்கும் முன்பே கழற்றி; காலம்வரை தலையில் கனக்காமல் மனதில் சுமப்பேன் என்று சொல்லி,

இப்படியும் ஒருவன் இருக்கிறான் என எனைக் காட்டி, என் படைப்புக்களையும் பலர் வாங்கிப் படிக்க விருதுகளும் படைப்பாளியை அடையாளம் காட்டுகின்ற இவ்வேளையில், அப்படி என்னையும் அடையாளம் காட்டிய இத்தருணத்தை ‘சபை அடக்கம் கொண்டோ அல்லது இதலாம் அவசியமற்றது என்று சாதாரணமாகவோ எண்ணிவிடாமல், இதை என் மகிழ்வான தருணமாகவும், நன்றிக்குரிய தருணமாகவும் அறிவித்து, வாழ்த்திச் சென்ற எல்லோருக்கும் என் மனநிறைவான நன்றியினை உரித்தாக்கி விடை கொண்டேன்.

என்றாலும் இந்த விருது சமாச்சாரங்களை கடந்து, பெரியார் நூலகம் வேறு சில அரிய செயல்களையும் இம்மேடையில் செய்து சிறப்பித்தது.

பெரியாரின் சிந்தனைகளை பகிர்ந்துக் கொள்ளும் நோக்காக சகோதரி பாரதி தமிழ்நாடன் அவர்கள் ஒரு புத்தகத்தின் முக்கிய சாராம்சங்களை எடுத்து வரி விடாமல் இயல்பான நடையில், அவ்வளவு நேரத்திற்கு; அத்தனை பக்கங்களையும், கேட்போரின் மனதில் பதியும் வண்ணம் மிக நேர்த்தியாக படித்து அமர்ந்தார்.

மிழின் ஈர்ப்பு என்பதை கடந்து தன் சொல்வளத்தாலும், மேடையினை தன்வயப் படுத்திக் கொள்ளும் திறத்தாலும் கவிதாயினி சொப்னபாரதி லதாராணி அவர்கள் ராவண காவியத்தின் அத்தனை அழகியலையும் மாதம் தோறும் பகிர்ந்து வருகிறார். அதில் குறிப்பாக இம்முறை மண்ணின் வளங்களைப் பற்றியும், மக்களின் அக்கால வாழ்வியலை பற்றியும் ஆசிரியர் குழந்தை அவர்கள் தனது அழகிய கற்பனை வளத்தால் எழுதியுள்ளதை அவரின் ரசனை சாரம் குறையாவண்ணம் கவிதாயினி சொப்னபாரதி லதாராணி அவர்கள் எடுத்துரைத்து சொற்பொழிவாற்றியது கேட்கையில் மகிழத் தக்கதாயிருந்தது.

தோடு, சென்ற வருட இறுதியில் இயற்கை எய்திய திரு.வை. பாஸ்கர் அவர்கள் குவைத்தில் ஆற்றிய பல நற்செயல்களை எடுத்துரையாற்றி அவரின் திருவுருவப் படமும் திறந்து வைக்கப்பட்டது. அவரின் சிறப்புகள் குறித்தும், அவர் குவைத்தில் ஆற்றிய சேவைகள் குறித்தும் நிறைய பேர் பேசினார்கள்.

அதில் குறிப்பாக அருவிக் கவிஞர் ஆனந்தரவி அவர்கள் ‘அவருக்கும் வை.பாஸ்கர் அவர்களுக்கும் இடையேயுள்ள’ அவரின் தாய்மாமன் உறவு பற்றியும், அவர் குவைத்தில் இதுவரை பலரை வரவழைத்து அவர்களின் வாழ்வில் விளக்கேற்றி வைத்த சிறப்புகள் குறித்தும், இனம் என்பதைக் கூட கடந்து மனிதம் என்பதை மட்டுமே முன்வைத்து அவர் பலருக்கு உதவியாதாகவும் கூறி; அடுத்தடுத்த இடத்தில் அவர் பகிர்ந்துக் கொண்ட செய்திகளால் கேட்போரின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து வர, வார்த்தைகள் உடைந்து, பாசத்தில் ‘கேட்போரை எல்லாம் நெகிழவைத்து கலங்கவும் வைத்தார்.

பெரியார் சிந்தனை குறித்து ஐயா திரு. தமிழ்நாடன் அவர்கள் பேசுகையில், பெரியாரை ஒரு கடவுள் மறுப்பு கொள்கை சார்ந்து மட்டுமே நிறைய பேர் பார்க்கிறோம், அது அவர் ஆற்றிய விழிப்புணர்வு செயல்களில் ஒரு துளி மட்டும் தான். அது கூட அக்கால கட்டத்தில் நிகழ்த்திக் கொண்டிருந்த அதிக மூடத் தனங்களை எதிர்க்க அவர் அவ்வாறே செய்ய வேண்டியிருந்தது. அது ஒன்றை மற்றும் கருதி சிலர் அவரை அவரின் எண்ணங்களை முற்றிலும் ஒதுக்கி விடுகின்றன்னர்.

அவைகளை தாண்டியும் அவர் செய்த நிறைய நற்செயல்களை நாம் கவனத்தில் எடுத்துக்கொண்டு விழிப்போடும் தெளிவோடும் வாழ்க்கையை வாழ வேண்டும். மானமும் அறிவும் மனிதருக்கு அழகு என்பதை புத்தியில் இருத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டு வேறு சில தன் சுய கருத்துக்களையும் அழுத்தமாக பகிர்ந்துக் கொண்டார்.

தாய்மண் கலை இலக்கிய பேரவையின் நிர்வாகி திரு. க.அன்பரசன் அவர்கள் தன் மனம் நிறைந்த அன்பை நம் எழுத்து சார்ந்து பகிர்ந்துக் கொண்டார். மனம் நிறைந்து மேலும் நாம் வளர வாழ்த்திச் சென்றார். பெரியார் நூலக அமைப்பின் துணைத் தலைவர் திரு. லியாகத் அலி அவர்கள் நம் விருதுகளுக்காக வாழ்த்தறிவித்து பொன்னாடைப் போற்றி கௌரவித்தார்.

அது தொடர்ந்து, பெரியார் பன்னாட்டு கழக செயலார் திருமதி. கவிதாயினி சொப்னபாரதி லதாராணி அவர்கள் ‘குடும்பம் எனும் கோப்பில் உள்ள ஒருவரின் வெற்றிக்கு இருவரின் செயல்பாடுகளும் காரணம் என்பதை வலியுறுத்தும் வகையில் செல்லம்மாவிற்கும் பொன்னாடை அணிவித்து மரியாதை செய்து எங்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினார்.

தையடுத்து பெரியார் நூலக அமைப்பின் தலைவர் திரு. செல்லபெருமாள் ஐயா அவர்கள் வந்தமைக்கு நன்றி பகிர்ந்து வாழ்த்தி விழாவினை நிறைவு செய்து, விழா இறுதியாக அறுசுவை உணவும் பரிமாறி வந்தோரை நிறைவாய் விடை பெறச் செய்தார். முடிவில் எல்லோருக்கும் கைகூப்பி –

எலோரிடமிருந்தும் பிரியாவிடை பெற்று; எழுத்தின் சிறப்பினை வெறும் பாராட்டுவிழாவோடு நிறுத்திக் கொள்ளவேண்டாம், அது ஒருவரையாவது நல்ல மனிதராக மாற்றுவதில் செழுமை பெறட்டுமெனும் கட்டளை ஒன்றினை மனதில் தாங்கியவனாய் சமுதாயத்தின் அக்கறையோடும், இவர்களுக்கான நன்றி உணர்வினோடும் வீடு நோக்கி செல்லலானோம்..
—————————————————————————————
வித்யாசாகர்

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in அறிவிப்பு, கவியரங்க தலைமையும் கவிதைகளும் and tagged , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக