68) முற்றுப்புள்ளியும் முதற்புள்ளியாக வாழ்க்கை!!

போராட்டத்தின் –
ஒவ்வொரு கிளையாய்
தாவிச் சென்றதில்;
உச்சியிலும் மத்தியிலும் நிற்கிறோமேயன்றி
கிளைகள் தீர்ந்தப் பாடில்லை;

ஒரு நாளைக் கடப்பதே
போரில் வெல்லும் பொழுதுகளாய் இருக்க
வருடங்களை –
சிரிக்க மறுத்து
சகித்துக் கொண்டே – கடக்கிறோம்;

எதிரே வருபவர்களை யெல்லாம்
தனக்கானவர்களாக எண்ணியும்,
கிடைப்பதிலெல்லாம் மனம் லயித்தும் –
நிரந்தர ஆசையில் உயிர்விட்டே
மடிகிறதிந்த மனித இனம்; அதில்
நானும் மாறுபட்டவனாக இல்லை;

அப்பட்டமாய் –
எதுவுமே எனக்கில்லையென்று புரிந்துப் போனாலும்
வாழ்வதற்கான உயிர்காற்று –
தொண்டையை அடைத்துக் கொள்ள,
ஏதோ ஒன்று இருப்பதான தோற்றத்தில்,
ஆசையில் –
நம்பிக்கையில் –
நாளேடுகளின் தாள்களென கிழிபட்டேப் போகிறோம்;

இதில், பெரிதாக சாதித்ததெல்லாம்
எந்த நிலையிலும் –
யார் இறப்பிலும் –
உண்டு.. உறங்கி.. சுயநலம் பூண்டதும்,
எதற்கோ ஏங்கி, பயந்து, அபகரித்துக் கொண்டதும்போல்
சில உண்டு, என்றாலும் –

மனதிற்குள் நான் தோற்றவனாகவேத் தெரிய
மீண்டும் ஒரு புள்ளியாக –
நின்றோ; தொடர்ந்தோக் கொள்கிறது வாழ்க்கை!!!
—————————————————————————–
வித்யாசாகர்

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

குவைத் தமிழோசை கவிஞர் மன்றத்தின் பாராட்டு விழா!!

வாழ்வின் மௌனமான
வாய்பேசா தருணத்திலும்
வார்த்தைகள் உள்ளே குதியாட்டம் ஆடுவதை
உணரும்  தளமாக இருந்தது – தமிழோசையின் அந்த பாராட்டு மேடை..

வரவிருக்கும் காதலர் தினத்தை முன்னிட்டு, தாஜ்மஹாலினை மையமாகக் கொண்டு, நடத்தப்பட்ட கவியரங்கமும், உலக அறிவியல் முன்னேற்றம் குறித்தும், குவைத் பொன்விழா ஆண்டு குறித்து கருத்துப் பரிமாறலும்,  பாட்டு மன்னர்கள் கணேஷ் முருகானந்தத்தின் மெல்லிசை பாடல்களும், விருது பெற்றதற்கான வாழ்த்துப் பாக்களும், பொன்னாடை அணிவித்து மரியாதை செய்தலும் என சுவையான மதிய உணவோடு, காலை மணி பத்தரையிலிருந்து மாலை நான்கு மணி நெருக்கம்வரை விழா மகிழ்வாக நடந்தேறியது.

விருது என்பது நம் எழுத்திற்கு கிடைத்த அங்கிகாரம் தானேத் தவிர; நமை மாற்றிவிடும் சாவியல்ல. எனவே இருப்பது போலவே இயல்பாக இருந்து நாம் நம் கடமையினை தொடர்ந்து செய்வோம், நடப்பதும் நல்லதாகவே நடக்குமென்பதுபோல் தன்னடக்கம் கொண்டு மட்டுமல்ல,  நேரமின்றியும் அதிகம் பேசாமல் விடை கொண்டேன்.

அவைத் தலைமையினை நான் ஏற்றிருந்ததாலும், விழா மரியாதை குறித்து; அவசியம்தானா இதலாம்? எனும் கேள்விக் கணைகளை சுமந்தவனாகவும் பேச எண்ணிய நன்றிகளுக்கான வார்த்தைகளை முழுமையாக சொல்லாமலும்; மென்று விழுங்கி – விடைபெற்றேன். ஐயா சேகர் அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவித்து இந்த வெற்றிகளுக்கு உதவியாக இருக்கும் அவரின் மனைவி செல்லம்மா வித்யாசகருக்கும் இந்த பெருமைகள் சாரும்’ என்று சொல்ல அவருக்கான அன்பினை மதிப்பினை அரங்கம்  கரவொலியில் காண்பித்தது.

உடனும் முன்னிருந்தும், ஐயா விட்டுக் கட்டி மஸ்தான் அவர்களும், அசிஸ் அண்ணன் அவர்களும், கவியரங்க தலைமையில் கவிஞர் சாதிக் பாட்சா அவர்களும், விழா மேடையில் கவிதாயினி தேவிரவி மற்றும் கவிஞர் அபுதாகிரும் உடனிருந்து உதவ, கவிஞர் கார்த்திக் மற்றும் கவிஞர் சேந்தை ரவீந்தர்  அவர்களுமென அவரவர் பங்கிற்கு மிகையாய் உடன் நின்று மேடையை கம்பீரப்படுத்தவும் சிறப்புச் செய்யவும் செய்தார்கள். விழாவின் இறுதியில் நடத்தப் பட்ட தமிழறிவு போட்டியில் கவிஞர் முனு.சிவசங்கரன் பரிசுபெற கைதட்டல்களோடு தமிழ்த்தாய் வாழ்த்து பாடி விழா நிறைவுற்றது.

விழாவிற்கு புறப்பட இருக்கையில் முகில் வேறு கீழே விழுந்து காயமுற; புருவத்தின் மேல் ரத்தம் சொட்ட, கண்களில் சிவந்து காயம் தெரிய,  இதயம் துடித்து ஐயோ எனும் வலியோடு அவசரமாக அவனை தூக்கிக் கொண்டு ஓடினோம்.

போகும்வழியில் தமிழோசை கவிஞர் மன்றத்திற்கு அறிவிப்பு கொடுத்துவிட்டு நெடுந்தூரத்தில் உள்ள சிறப்பு கண் மருத்துவமனைக்குப் புறப்பட்டோம், அங்கு சென்றதும் மருத்துவர் பயம் கொள்ள ஒன்றுமில்லை என்று சொல்லி மருந்திட்டதும், முகில் சிரித்து விளையாட துவங்கியதும், மனம் சற்று அமைதியுற்று, நிம்மதி பெறுமூச்சு விடுகையில் விழா பற்றி நினைவு பீறிட்டது. பாவம் நமக்காகவும் காத்திருப்பார்களே என்று அங்கிருந்து அரங்கம் நோக்கி ஓடினோம்.

ஓட்டம் தான் வாழ்க்கை என்று ஆன பின் சலிக்க ஒன்றுமில்லை என்றாலும், வாழ்வின் நகர்தலில் அடுத்த கட்டமென்பது ஆச்சர்யங்களோடும், அன்பு தாங்கி உழன்ற இதயத்திற்கு அணிசேர்க்கும் தருணமாகவுமே  வந்துகொண்டிருக்க; சற்று எச்சரிக்கை உணர்வையும் பூரிப்பையும் சேர்த்துத் மனதில் தாங்கிக் கொண்டு -அரங்கம் நுழைந்து – நலம் தெரிவித்து –

“எண்ணெய் நாடு
என் உலகத்து மார்புகளில் எனை பச்சை குத்திய மக்கள்
மக்களின் ரசனையில் எனை எழுதிக் கொண்ட என் படைப்புகள்
படைப்புக்களை போற்றும் வகையில் சமூகத்தால் கிடைக்கப் பெறும் விருது
விருதிற்கு விழா எடுக்கும் – தமிழோசை
தமிழோசை மாமன்றத்தின் நிர்வாகிகள் – நிர்வாகத்தின் தலைமை – தவிர – இங்கு வந்து எனை பெருமை படுத்திக் கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் என் முதல் வணக்கம்” என்று துவங்கியபோது –

‘வாழ்க்கை என்பது இது தான், வாழ்ந்து பார்’ என்பது போல் உள்ளிருந்து கேட்ட ஒரு ஒலியை மானசீகமாய் நன்றிகளுடன் உணர்ந்தேன்!
——————————————————————————————
வித்யாசாகர்

Posted in அறிவிப்பு, கவியரங்க தலைமையும் கவிதைகளும் | Tagged , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

39 தமிழால் தானுயர்வோம்..

டதடவென உயிர் துடித்தொரு
வீரதீர உணர்வெழுந்தொரு – மார்புகூடு
பதைபதைத்தொரு – மானம் காக்க
புயல்வரும் செயல் அதுபோல் – தமிழா;

நாடு காக்க முடிவெடு முதல்
மக்கள் காக்க துணிந்தெழு முதல்
மண்ணின் வீரம் நரம்புப் புடைக்க
திண்ணைப் பேச்சும் மண்ணை காக்க – தமிழா;

வீரமறவன் குடித்த பாலின்
வெற்றிக் கொண்ட பண்டைத் தோளின்
மானங் காக்க கிளர்தெழுமொரு புரட்சி
உன் தடை உடைத்தெழு – தமிழா;

நதியின் நீளம் கடலின் ஆழம்
உலகம் போற்றும் வாழ்வின் சாரம்
வாழ்க்கை நியதி பாதைச் சொல்ல
வாழ்ந்தவன் நீ – தமிழா;

நீ வீறு கொள்ளு தமிழா – தரணி
பேரு சொல்லும் தமிழா,
பறைமுழங்க  பூமியதிர – உன் நடையின் வீச்சில்
சிங்கமொழிய, புலிக்கொடி யது வானில் பறக்க; புறப்படு தமிழா!

மண்ணும் பெண்ணும் பெரிது பெரிது
மொழியும் வளமும் பெரிது பெரிது
அடிமை யொழித்து நிமிர்ந்து நடக்க
பேத விலங்கு உடைத்து தகர்த்து ஒன்று ஒன்று ஒன்றுயென்று

ஒன்றுகூடிப் புறப்படு தமிழா; தமிழால்
தானுயர் தமிழா!!

—————————————————————-
வித்யாசாகர்
Posted in அம்மாயெனும் தூரிகையே.., பாடல்கள் | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

67, ஒற்றுமையில்லா வனத்தின் வதை..

ரு கடல் தாண்டிய
வனம்  தான் –
நான்  வசிக்கும் காடு..

ஒற்றுமை எனும்
கடல் தாண்டிய வனம் அது.

சுயநல மரங்களும்
மனிதரை விட அதிகம்
மிருகங்களும் வாழும் காடு அது.

மிருகங்களை தின்று
மனிதர்கள் வாழும்
அந்த வனத்தில் – கடவுளுக்கே
பஞ்சமெனில் பாருங்களேன்!!!!!!!

அங்கே –
மழைக் கூட
லஞ்சமும் ஊழலுமாகத் தான்
பொழிகிறது.

பொறாமையும்
ஒருவரை ஒருவர் அழிக்கும்
வஞ்சமும்,
இடிபோல் இரக்கமற்ற வானில்
தினமும் இடித்துக் கொள்கின்றன – அந்த
வனப்  பகுதியில்.

காவலுக்கு  திருடர்களும்
நிற்கிறார்கள்,
ஆள்வதற்கு அங்கே
மனிதரையும் கொள்கிறார்கள்,
பணம் மட்டுமே காய்த்து
பிணங்களின் மீது புழுத்துக் கிடக்கும்
வனமது. கொடூர வனம்.

செல்வங்கள் தெருவெல்லாம்
கொட்டிக் கிடக்கின்றன அங்கே,
ஆனால் அவைகளை எல்லாம்
மிருகங்கள் எடுத்து
கக்கத்தில் வைத்துக் கொண்டு அலைவதில்
மனிதர்களுக்கங்கே –
தண்ணீர் கூடக் கிடைப்பதில்லை.

இதில் வேறு –
மிருகங்களின் முதுகில்
தழும்புகளும் உண்டு,
ஜாதி மதம் இனம் எனும்
பெரிய பெரிய தழும்புகள் அது.

மனிதனின்  தேவைக்கென்று
எண்ணிச் செய்த கத்தியில் –
மிருகங்களே இங்கு
அறுபடுகின்றன;வேற்றுமையினால்

அறுபட்ட இடமெல்லாம்
இன்று சுயநல ரத்தம் பொங்கி
மனித உயிரை மொத்தமாய் குடிக்குமளவில்
தாகம் கூடிவிட்டதிந்த மிருகங்களுக்கு.

நான் இவைகளை எல்லாம்
பார்த்தவாறு –
உலக புள்ளியின் ஓரத்தில்
வெறித்துப் போய் நிற்கிறேன்,
என்னைப் போல் இன்னும்  சிலர்
ஆங்காங்கே –
எனை கடந்தும் கடக்காமலும்
திரிகின்றனர்.

ஒரு கட்டத்தில்
நானே கூட
மனிதனா ?
மிருகமா?
தெரியவில்லை,
சிலநேரம் மனிதர்கள் என்னிடம்
பகையாடுகின்றனர்,
சிலநேரம் மிருகங்களும்
உறவாடுகின்றன..

மனது; வாழும் இரத்தத்திலிருந்து
வற்றிப் போய் –
வெளிறிய முகத்தின்
கீறல்களாய் வெளிப்படுகின்றன.

என்னசெய்வது?
என்னசெய்வது?
அந்த ஒற்றுமை எனும் கடலை தாண்டி
ஏனிந்த வனத்திற்கு –
வந்தோமோ எனும் கவலையில்
வனம்  ஒரு வதையாகவே நகர்கிறது எனக்கு!!!!!!
————————————————————————
வித்யாசாகர்

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

மலேசியாவின் ஐம்பது நூலகத்திற்கு வித்யாசாகரின் படைப்புகள்!!

ற்காலிகமாக கிடைத்த, பெருமைசெய்த ஐந்து விருதுகள் அதற்கான தன் மதிப்பினை கூடவே கொண்டு வந்ததா? அல்லது, காலம் இப்படி தான் வருத்தத்திற்குப் பின் மகிழ்வினையே தருமா எனும் வியப்பான வாழ்பனுபவத்தோடு இன்னொரு மகிழ்வினையும் உங்களோடு பகிர்வதில் மகிழ்கிறேன் உறவுகளே!!

ன் படைப்புக்களில் எண்ணூற்றி ஐம்பது புத்தகங்களை மலேசியாவில் உள்ள ஐம்பது நூலகங்களுக்கு தருவதற்காக பணம் கொடுத்து வாங்க விருப்பம் தெரிவித்துள்ளது ‘ஸ்ரீ ராமகிருஷ்ணா மடம். இது தொடர்ந்து மலேசியாவின் மொத்த கடைகளிடமும் தமிழரிடமும் நம் படைப்புக்களை கொண்டு செல்ல இருப்பதாகவும் பூரிப்பு செய்தி தெரிவித்துள்ளது.

தற்போதைக்கு, மாணவர்களுக்கு பயன்படுவது போல ஊக்கம் தரும் சிந்தனை தூண்டும் சிறுகதை மற்றும் குறுநாவல்கள் நிறைந்த தொகுப்புகளாகிய திறக்கப் பட்ட கதவு, சாமி வணக்கமுங்க, வாயிருந்தும் ஊமை நான் மற்றும் கவிதை தொகுப்புகளாகிய வீழ்ந்தது போதும் வாழ்ந்து காட்டு, இதோ என் வீரமுழக்கம், எத்தனையோ பொய்கள், வலிக்கும் சொர்கமிந்த வாழ்க்கை மற்றும் பிற நூலகங்களுக்கு என பிரிவுக்குப் பின் கனவு தொட்டில் (நாவல்)  மொத்தம் 850 புத்தகங்களை பெற்று மறைமுகமாக என் படைப்புக்களின் விற்பனைக்கு எனபதை விட என் புதிய புத்தகங்களுக்கான வழியை வகுத்தமைக்கு மலேசியாவின்  “ஸ்ரீ ராமகிருஷ்ணா மடம் சார்ந்த நிர்வாகிகளுக்கு” என் மனம் நிறைந்த நன்றிகள் உரித்தாகட்டும்.

பிரசுரங்களுக்கு அனுப்ப வேண்டிய, செலவிட்ட பணம்தான் இதுவும், என்றாலும் அதை என் கையில் என் படைப்புக்களுக்காக என்று வாங்குகையில் என்னவோ நான் என் இத்தனை வருடம் எழுதி உழைத்த உழைப்பிற்கு முதல்மாத சம்பளம் பெறுவது போல் உணர்ந்தேன்!

பொதுவாக படைப்புக்களுக்கு குறைந்த விலையே வைக்கிறோம். பதிப்பகத்தாரிடம் வைக்கும் வேண்டுதலில் இதுவும் முக்கியமான ஒன்று. என்றாலும், என் படைப்புக்களின் முதலில் குறிப்பிட்டுள்ளவை போல, புத்தக வருமானத்தின் முதல் பாதி என் படைப்புக்களை வாங்கும் சமூகத்தின் ஏழ்மையை என்னளவு அகற்றவும், மறுபாதி புதிய ஆக்கங்களை  கொண்டுவரவுமே இதுவரை பயன் படுத்தப் படுகிறது. உண்மையில்  பார்க்க போனால், வராமலே கொடுத்தவை தான் அதிகம்.

ஐந்தாயிரம் புத்தகமெல்லாம் விற்றதாய் சொல்கிறார்கள். வெறும் சொல்கிறார்கள் அவ்வளவு தான். முதலாய், முதலாய் இப்போது தான் என் படைப்புக்களுக்கென மொத்தமாய் கொடுக்கப் பட்டுள்ளது. எனினும், இதில் பிரசுரங்களுக்கான அச்சு கோர்ப்பு செலவுத்தொகை போக, மீதியுள்ள எனக்கான பணத்தில் பாதி ஈழத்தில் மழைவெள்ளத்தால் துன்புறும்  உறவுகளின் நிவாரண நிதிக்கும், மீதி புதிய புத்தகங்களின் அச்சு செலவிற்கும் கொடுக்கப் படுகிறது. (ஈழத்து உறவுகளுக்கான உதவி வழங்கிய பின் அதை அவர்கள் பெற்றுக் கொண்ட ரசீது இங்கே மறுமொழி இடுமிடத்தில் நகல் செய்து பதியப் படும்)

வாழ்வின்; நல்லவைக்கென சொட்டிய ஒவ்வொரு சொட்டுக் கண்ணீரும்; பிறகு கிடைக்க இருக்கும் இரட்டிப்பு மகிழ்ச்சி, இரட்டிப்பு மதிப்பு, இரட்டிப்பு வெற்றிக்கான மூலதனமின்றி, வேறில்லை; என்பதனை, வாழ்வின் நிறைய நிலைகளில் அனுபவமாய் உணர்ந்து வருகிறேன். அந்த உணர்தலின் விளிம்பில் சில சொட்டுக் கண்ணீர் துளிகள் மீண்டும் நன்றியாய் இறைவனை நோக்கியும் சிந்துகின்றன!!

எப்பொழுதும் என் எழுத்திற்கு பலமாய் இருக்கும் எல்லோருக்குமான நன்றிகளோடு..

வித்யாசாகர்

Posted in அறிவிப்பு | Tagged , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்