காற்றின் ஓசை – 18 – காதல் செய்யலையோ; காதல்!!

இதற்கு முன் நடந்தது..

ஹி சோடேங்கே.. நஹி சோடேங்கே..
மர்னே தக் நஹி சோடேங்கே..”

“நஹி சோடேங்கே.. நஹி சோடேங்கே..
மர்னே தக் நஹி சோடேங்கே..”

“என்னடா சந்திரா இது இப்படி கத்துரானுங்க..”

“தெரிலயே கொஞ்சம் நில்லு..”

“ஸ்ட்ரைக் பன்றானுங்களா..?!!!!”

“இருக்கும்”

“அதுக்கு இப்படி கத்துரானுங்க?!!!!!!!!”

“நீ பேசறது அவுங்களுக்கு புரியலைன்னா ‘உன்னையும் அவன் கத்துறதா தான் நினைப்பான்..” சுந்தர் சொல்ல

“அதொன்றுமில்லை நம்ம ஊர் போராடுவோம் போராடுவோம் சாகும்வர போராடுவோம் இல்ல”

“ஆமா……….ம்”

“அதுமாதிரி தான்” ரபிக் சொன்னான்

“ஓ இவனுங்க ஹிந்தியியா?”

“ஆமா, வடநாட்டு காரங்களும் இங்கு அதிகம், லோகல்னா இந்த பகுதியை பொருத்தவரை இவுங்க தான்..” சந்திரா சொன்னான்.

“ஆமாம்டா சந்திரா ஸ்ட்ரைக் தான் பண்றானுங்க, கொடியெல்லாம் வெச்சிருக்காங்க பாரேன்.., அப்போ அவ்வளவு தானா நம்ம கதி??? திரும்பி ஊருக்கா செல்வா கேட்க

“அதலாமில்ல நீ சும்மா இரு. ஆமாம் மச்சி, அதே ‘போராடுவோம் போல தான் தெரியுது, நீங்க இங்கயே இருங்க நான் போய் பார்த்துட்டு வரேன்..”

“டே டேய்.. நீ எங்க அங்க போற, அவனுங்க காட்டு தனமா கத்துரானுங்க உன்னை வேற அடிச்சி நீட்டிட போறானுங்க”

“என்னடா பேசுற நீ.., அவனுங்க எதிர்க்கிறது நம்ம முதலாளியை, அவர் நம்ம ஊர் தமிழ் காரர். அவருக்கு உதவி செய்ய தான் உங்களை கூட்டியாந்தேன் புரியுதா.. “

“நீ போயிட்டு வா மச்சி வரணும்னா ஒரு கொரலு குடு, வந்து சீவிடுறேன் சீவி”

“சரி.. சரி.. அதிகமா உணர்ச்சி வசப் படாத சுந்தரு.. போலிசு புடிச்சி என்னன்னு கேட்டா அவன் மொரிசியஸ் மன்னனை திட்டினான் அதான் கேக்குறேன்னு ஹிந்தில சொன்னானாகூட உனக்கு திருப்பி அவன் என்ன சொன்னான்னு தெரியாது, சரியா அடக்கி வாசி” ரபிக் சிரித்துக் கொண்டே கேலியாக சொல்ல

“சரி நீ கிளம்பு மச்சி நாங்க இங்கயே இருக்கோம் என்றான் சுந்தர்”

சந்திரா சிரித்துக் கொண்டே சென்றான்.. நாலு பேர் கூட இருந்த போது அவனுக்கு அப்படி யொன்றும் தெரியவில்லை, தனியே நடந்தபோது அவள் நேற்றிரவு தந்த முத்தமும் வந்து அவன்கூட நடந்தது..

இரவெல்லாம் என்னவோ தூங்காதவனை போல உணர்ந்தான் அவனை. மீண்டும் மீண்டும் அவள் ஏதோ கிசு கிசுத்தது.., அருகில் நெருங்கி வந்தது.., வாயை மூடி நின்றது.., முத்தமிட்டது.., என எல்லாம் ஒவ்வொன்றாய் நினைவில் சுற்றி சுற்றி வர ‘அவனால் அதை எல்லாம் ஏற்றுக் கொள்ளவும் முடியாமல் நிராகரிக்கவும் இயலாமல் தவிப்பவனாய் நடந்தான்.

இருந்தாலும் ஏனோ அவளின் நடத்தை மேல் ஒரு கோபம வந்தாலும், யோசித்துப் பார்க்கையில் அந்த கோபம் உடனே விட்டுப் போனது. காமத்தின் வாடையின்றி மனதின் அறிவிப்பாகவே இருந்தது அவளின் முத்தமும் நெருக்கமும்.

ஆசைக்காக வந்தவளாக இருந்திருந்திருந்தால் இன்னும் என்னை தொட்டிருக்கலாம், வேறேதேனும் பேசியிருக்கலாம், என்னென்னவோ செய்திருக்கலாம், அப்படியெல்லாம் இன்றி ஒரு முத்தத்தில் நானவளை கண்டுகொள்ளும் வரை மட்டும் நின்றுவிட்டு ஒரே ஒரு முத்தத்தோடு ஒடுவானேன்..?!!!

ஆனாலும் இதை எப்படி எடுத்துக் கொள்வதேன்பதே அவனுக்குப் புரியவில்லை. இதை தைரியமென்பதா அல்லது என் மீது வைத்திருக்கும் நம்பிக்கை என்பதா.., எப்படி அவளுக்கு என்மேல் இத்தனை நம்பிக்கை வந்தது. உண்மையிலேயே வந்தது பெண் தானா.., இத்தனை பேரை விட்டுவிட்டு என்னை மட்டும் தனியாக எழுப்பி இப்படி நடந்துக் கொள்ளும் அளவிற்கு என்னை நமபினாளா?? எப்படி நம்பினால் என்னை!!!!!!?

இரவாயிற்றே என்று கூட பயமில்லையா, தனியாக வந்தாலே பயமில்லையா, அவர்கள் வீடாயிற்றே இது யாரேனும் பார்த்துவிடுவார்கள் எனும் பயம் கூட இல்லையா???????????

கேள்விகள் இதயத்தின் பல கோடுகளாய் அவனுக்குள் நீண்டன. அதுசரி, அவர்கள் வீடென்று எப்படி எண்ணினேன். யார் அவள் என்று எனக்கேபப்டி தெரியும்?? யார் அவளோ யார் கண்டார்..

ஆனால் கனவில் வந்தாளே, கனவில் பேசினாளே, தொட்டாளே, முத்தமிட்டாளே, நேரிலும் அவளா வந்தாள்????????????

ஆம்; அவளே தான், அதே முகம்.. அதே சிரிப்பு.. அதே நெற்றியில் குவித்து வைத்த அதே முடி.. அதே நெருக்கத்தின் வாசம்……

வாசமா? அதெப்படி எனக்கு வாசம் தெரியும், கனவில் வாசம் உணர்ந்தேனா?

இல்லையே…., ஆனால் நிஜத்தில் மணத்தாளே..?!! அருகில் வந்து விலகி சென்ற வாசம் என்னவோ ‘ஒரு வாசனை திரவியத்தின் குப்பி திறந்து முகர்ந்துவிட்டு உடனே மூடி வைத்துவிட்டது போல் அல்லவா மணத்துவிட்டு உடனே சென்றுவிட்டாள். அவள் வாசம் இன்னும் எனக்குள் இருக்கிறது. அவள் நினைவு போலவே அவளின் வாசமும் எனக்குள்ளே அப்பிக் கொண்டுவிட்டது,

ஆஹங்… கூடாது, கூடாது அவள் வாசத்திற்கு மயங்கக் கூடாது. அவளை யாரென்று பார்க்க வேண்டும்.. அழைத்து பொறுமையாக பேச வேண்டும். ஏன் அப்படி செய்தாயடிப் பெண்ணே என்று கேட்க வேண்டும்..

அதோடு அவள் பேசாமல் போய்விட்டால்?

கோபித்துக் கொண்டால்?

முத்தம் தந்த இடம் வலிக்காது???

வலிக்கும், பெரியோ ரோமியோவின் ஜூலியட் அவ, கிறுக்கு சிறுக்கி, என்ன நினைச்சி அப்படி செய்தா அவ? யாருன்னு நினச்சா என்ன, ஒருவேளை நம்ம பசங்க சொன்னது போல அவதானோ, அச்சச்சோ!!!!!!!! தப்பு தப்பு… அப்படி இருக்கவே இருக்காது, இருக்கக் கூடாது.. பாபாவுக்கு தெரிஞ்சா வெட்டிட மாட்டாரு??????? பாவம் அம்மி. அம்மி முகத்தை நான் எப்படி பார்ப்பேன், முதல்ல அது யாருன்னு பார்க்கணும் அப்படி அது மட்டும் அலியோட அக்காவாயிருந்தா உடனே போய் அம்மி கிட்ட சொல்லி மன்னிப்பு கேட்டுறனும்..

அந்த பொண்ண போட்டு அடிச்சாங்கனா??

அடிக்கட்டும், அடி வாங்கட்டும், தப்பு தானே அது செய்தது. தப்பு செய்தா அடி தான் வாங்கணும்..

டிக்காதே……… அடிக்காதே……..

அவன் அப்படி தான் கத்துவான் நீ அடி, போடு.., மாரோ.., மாரோ உசே.., மாரோ…. , பஹுத் மரோ, நல்லா அடி.. போடு.. உடாத.., சோட்னேகா நஹி.. மாரோ மாரோ..” நாலைந்து பேர் ஒண்ணா சேர்ந்து சந்திராவின் முதலாளியை துரத்தினார்கள்.., ஒருவன் எகுறி தலையிலேயே அடித்தான்.., ஒருவன் முதுகில் குத்தினான், இரண்டு பேர் வந்து அடிக்காதே அடிக்காதே என்று மடக்க, அவர்களை தள்ளிவிட்டு அந்த கும்பல் முதலாளியின் இரண்டு கையையும் பிடித்துக் கொள்ள, இன்னொருவன் ஒரு பெரிய தடி எடுத்து தலையில் ஒரு போடு போட..

அவர் தன்னை விடுவித்துக் கொள்ள போராடி இயலாமல் அடி பட்டதும் கீழே சரிந்தவாறு ஐயோ அம்மா என்று தமிழில் கத்த; சந்திரா ஓடி சென்று அவரை தூக்கிக் கொண்டு தடுத்த ஊர் காரர்களை ஆளுக்கு ஒரு குத்தாக முகத்தில் பார்த்து ஓங்கி குத்தினான்.

யாரடா இவன் எங்க ஆளை அடித்தவன் என, எல்லோரும் முதலாளியை விட்டுவிட்டு அவனை அடிக்க எகிறினார்கள். சந்திரா தூரத்தில் நின்றிருந்த செல்வம் ரபிக் ரமேஷ் சுந்தரை குரல் கொடுத்து முதலாளியை வேறொரு அறையினைக் காட்டி அங்கே கூட்டி போகச் சொல்ல, இவனை அடிக்க வந்த கும்பலில் ஒரு சிலர் அங்கே அவர்களை துரத்திக் கொண்டு ஓட ‘செல்வம் ஒரு இரும்பு குழாய் எடுத்து எல்லோரையும் நாலு வீசு வீசி விட்டு இரண்டு பேரை கைகால் பார்த்து ஓங்கி ஒரு போடு போட; அவர்கள் சுருண்டு அங்கேயே கீழே விழுந்து எழுந்து கத்திக் கொண்டே தூர ஓடினார்கள்.

சந்திரா ஒரு பக்கம் அந்த மீதி கும்பலை மாற்றி மாற்றி அடித்தும் தடுத்தும் இருக்க இன்னொருவன் பின்னால் வந்து மண்டையிலே அடித்தான். மண்டையில் ரத்தம் பொலபொலவென கொட்டியது சந்திராவிற்கு. அவன் அதை தாங்கிக் கொண்டு சற்றும் அசராமல் ஒரு சுழல் சுழன்று சுதாரித்து திரும்புவதற்குள் அந்த கும்பல் ஐயோ ரத்தமென ஓட.. அதற்குள் போலீஸ் வந்து அவர்களையும் எல்லோரையும் சுற்றிவளைத்து பிடித்தது.

சுந்தர் ரமேஷ் எல்லாம் ஓடிபோய் முதலாளியை காப்பாற்றி ஒரு தனியறையில் போட்டுவிட்டு சந்திராவிடம் ஓடிவந்தனர்.. ரத்தம் பார்த்து தவித்தனர், பதறினர், போலிஸோடு ஒரு ஆம்புலன்சும் வர..

சந்திராவை அந்த ஆம்புலன்ஸ் வந்து ஏற்றிக் கொண்டது..

பசங்களும் கலக்கத்தோடு சற்று பயந்த முகத்தோடு வண்டியில் ஏறி அவனோடு போனார்கள். ரமேஷ் சந்திராவிற்கு அடிபட்டுவிட்டதே என்ன ஆகுமோ என்று பதறி வாய்விட்டு அழுதான். ரத்தம் பார்த்ததும் அவனுக்கு தலையே சுற்றுவது போலிருந்தது.

சந்திரா அதை பற்றியெல்லாம் கவலைப் படவில்லை. பொட்டபசங்க பின்னாடி வந்து அடிச்சானுங்க பாரு.. நாதேரிங்கள வகுந்துருக்கனும்டா..” கோபம் அடங்கவே இல்லை அவனுக்கு பொருமிக் கொண்டே இருந்தான், ரத்தம் ஒரு பக்கம் வழிந்துக் கொண்டே இருந்தது.

சுந்தர் அவனை சாந்தப் படுத்த, உடன் வந்த கேரளா மேல்நர்ஸ் பேசாதே அமைதியாய் வா என்று கைகாட்டினான்.

நல்லவேளையாக முதலாளிக்கு கூடுதல் அடி ஒன்றும் பட்டிருக்கவில்லை. சந்திரா வந்து தடுக்கவில்லை எனில் அவர்கள் அடிக்கும் அடியில் செத்திருந்தாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை. ஆனால், ஒன்றும் அப்படி நேரிடாதபட்சத்தில் ‘அடுத்த ஒரு மணிநேரத்தில் அந்த முதலாளி பெரிய ஆட்களை அழைத்து பேசி, வக்கீல் வைத்து நடந்ததை கூறி போலிஸோடு சென்று கொலை முயற்சி செய்ததாக அந்த மொத்த கூட்டத்தையும் பிடித்து உள்ளே போட்டார்.

சந்திராவிற்கு ஊசி போட்டு தலையில் கட்டு ஒன்று போட்டு வீட்டிற்கு அனுப்பினார்கள். வீட்டில் உள்ளே நுழைந்தததுமே அமளி துமளி யானது எல்லாம். அலி பாபாவிற்கு போன் போட்டான், பாபா யாரையோ அழைத்துக் கொண்டு அடுத்த சில வினாடிகளில் வீட்டிற்கு வந்தார். விஷயம் கேள்விபட்டு அந்த முதலாளியை வீட்டிற்கு வரச்சொல்லி அழைத்து தீர விசாரித்தார்.

முதலாளிஅவர் பேரைக் கேட்டதும் ஓடியடித்துக் கொண்டு வீட்டிற்கு வந்து, நடந்ததை சொல்லி, லோக்கலில் ஆள் எடுக்கக் கேட்டார்கள் என்றும், எடுத்தால் வேலைக்கே வருவதில்லை என்றும், வந்தாலும் வேலை செய்வதில்லை, செய்தாலும் செய்யாவிட்டாலும் சம்பளம் குறைய கூடாதாம். உடன் இருப்பவர்களை வேறு வம்பிழுப்பது எல்லோரையும் அடிப்பது கேட்டால் ஆள் கூட்டி வருவது, எல்லாவற்றையும் விட லோக்கல் ஆளு கமிசன் கொடுக்கணும் என்று வெறுக் கேட்டதாகவும், முடியாதென்றதற்கு தவறாக சொல்லி மொத்த வேலையை நிறுத்திவிட்டு இரண்டு நாளாக தவறான அவதூறுகளை பரப்பி ஸ்ட்ரைக் செய்ததாகவும், ஏனென்று கேட்டதற்கு கூட்டமாய் வந்து அடித்ததாகவும் சொல்ல பாபாவிற்கு கடுங்கோபம் வந்தது.

சந்திரா தான் பாவம். இதில் சம்மந்தமே இல்லாதவன். என்னிடம் வேலை பார்த்த நன்றிக்காக வந்து என் உயிரையே காப்பாற்றி இருக்கிறான். சந்திரா மிகப் பெரிய மனசு காரன், குடும்ப பாரம் தெரிந்தவன், நல்லபையன் என்றெல்லாம் புகழ, அந்த வீடே சந்திராவை இன்னும் ஒரு அடி மேலே தூக்கி நிறுத்தியது. இன்னும் அதிக அக்கறையை அவன்மேல் சுமந்துக் கொண்டது.

அவர் நண்பர்கள் சுந்தர் செல்வா ரமேஷ் ரபிக் எல்லோரையுமே பாராட்டியும் நன்றி தெரிவித்தும், வந்த முதல் நாளே இப்படி ஆகிவிட்டதற்கு மன்னிப்பும் கேட்டார் அந்த கண்ணியமான முதலாளி. அவரின் நன்றியுணர்வு நேர்மை தவிர உதவிக்கு ஆளில்லா நிலை கண்டு எல்லோரும் அவருக்கு இனி முழு பலமாக இருப்பதாக உறுதி கொடுத்தார்கள். பாபா நாளையிலிருந்து அலியை அங்கே தினமும் சென்று வர உத்தரவிட்டார்.

யாரையோ ஒரு பெரிய தாதாவை அழைத்து, அவர்மூலம் ‘அந்த தொழிற்சாலை இருக்கும் ஊர்தலைவரிடம் பேசச் சொன்னார். முதலாளிக்கு பெரிய சந்தோஷம். இனி இந்த நிறுவனமே உன்னுடையது தான் சந்திரா என்றார். என் உயிரையே காத்தவன் நீ. உங்களை யாரையுமே எப்பொழுதுமே நான் மறக்க மாட்டேன். நானிருக்கும் வரை இனி நீங்களும் இருப்பீர்கள் என்றார்.

சந்திரா திரும்பி தன்னைச் சுற்றி இருப்பவர்களை நன்றியோடு பார்த்தான். பாபா அம்மி ஹினா அலி சாஸ்மா மட்டும் கீழே நின்றிருந்தார்கள். இன்னும் இரண்டு மூன்றுபெண்கள் மேலே கிரில் கம்பியில் உட்கார்ந்து கீழ்நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். சந்திராவின் கண் ஏனோ அந்த ஒரு பெண்ணை மட்டும் இங்குமங்குமாய்த் தேடியது.

முதலாளி எல்லோருக்கும் வணக்கம் சொல்லிவிட்டு புறப்பட்டார். எல்லோரும் உடன் இருந்து ஒரு வாரத்திற்கு சந்திராவை பார்த்துக் கொள்ளுங்கள். பிறகு வேலைக்கு வந்தால் போதுமென்றார். மேலும், சந்திராவின் அருகில் வந்து அவனுடைய கையைப் பிடித்து மன்னித்துக் கொள்ளப்பா, என்னால் தானே உனக்கிந்த உபாதை, இத்தனை வலியை எப்படி நீ பொறுத்துக் கொள்கிறாயோ என்று வருத்தப்பட “என் அண்ணன் மாதிரிங்க நீங்க, அவன வெட்டியிருப்பேன், பொட்ட பசங்கண்ணே அவனுங்க, பின்னாடி வந்து அடிக்கிறானுங்க”

“அவனை நான் பார்த்துக்குறேன் தம்பி. நீ உடம்பை பார்த்துக்கோ. பொறுமையா ஓய்வெடுத்துட்டு வேலைக்கு வா. வீட்டுக்கு எதனா பணம் அனுப்பனும்னா எனக்கு போன் போடு.. நான் நேரம் கிடைத்தா வந்து பார்த்துட்டுப் போறேன்” என்று சொல்லிவிட்டு விடைபெற்றார்.

அவர் போனதும் செல்வம் வந்து “சந்திரா எவ்வளோ தங்கமானவங்கடா இந்த பாபா மம்மியெல்லாம்” என்று சிலாகித்துக் கொள்ள சந்திரா சிரித்துக் கொண்டான்.

“ஏன்டா சிரிக்கிற.”

ரபிக்குக்கு புரிந்தது போல்.. “அது மம்மி இல்லடா செல்வம் அம்மி. எங்க இதுல அம்மாவ அம்மி னு தான் கூப்பிடுவாங்க.

“ஓ அப்படியா.. அதை விடறா. இந்த பசங்க கூட என்ன தீயா இருக்குதுங்ககடா.. அந்த அலி பையனுக்கு என்ன பாசம் தெரியுமா நம்ம சந்திரா மேல. ஹினா ஒரு பக்கம் அலி ஒரு பக்கம் பறக்குதுங்க இவனுக்கு அடிப் பட்டுடுச்சின்னு.

அதுக்குள்ள இவன் தலைல கட்ட பார்த்தது தான் தாமதம் மேல ஒரு பொண்ணு அழவே ஆரம்பிச்சிடுச்சி, நீ கேட்டா பேசவே இல்லைன்ற பிறகெப்படிடா இதலாம்….?????”

“மேல அழுதுதுன்னியே அது எப்படி இருந்துது மச்சி, முன்னாடி நெற்றியில முடி ஸ்டைலா வெச்சிருப்பாங்களே அப்படி வைத்திருந்தாளா???” சந்திரா கொஞ்சம் ஏக்கமும் வருத்தமும் வியப்புமாக கேட்டான்.

“ஆமாம்டா, அந்த லூசு ஒன்னு உன்னையே பார்க்குதுன்னு சொன்னமே அதுடா சந்திரா” ரமேஷ் சொன்னான்.

“டேய் லூசு நீ போயி அதை லூசுன்றியா?”

“டேய் பொறுமையா பேசுங்கடா மேல கேட்கும்..”

“ஆமா கேட்டா மட்டுமென்ன நம்ம பேசுறது அவுங்களுக்கு புரியவா போகுது?”

“புரியலைன்னாலும் லூசுன்னு சொல்றது தப்பு ரமேசு.., பின்ன என்னடா அதுங்க நம்ம கூட பொறந்தது மாதிரி பார்துக்குதுங்க, நமக்காக எப்படி தவிக்கிதுங்க அதுகளைப் போயி லூசுன்ற..” சுந்தர் கோபமுற்றான்

“சரி சுந்தரு.. பசிக்குதுடா, காலைல இருந்து பச்சைத் தண்ணிக் கூட வாய்ல படலடா”

“ஆமா ல்ல சரி சந்திரா நீ படு.. நாங்க எதனா செய்யுறோம்..” என்று சொல்லிவிட்டு எல்லோரும் எழுந்து துணி மாற்றிக் கொண்டார்கள். பாத்திரம் கழுவி சாதத்திற்கு உலை வைத்தான் ரபிக், செல்வா வீடெல்லாம் சுத்தம் செய்தான், ரமேஷ் காய்கறி நறுக்கினான். சுந்தர் தேநீர் ஆத்தி எல்லோருக்கும் கொடுத்துவிட்டு ஒரு புத்தகம் எடுத்துக் கொண்டு அமர்ந்தான்.

மாலை சூரியன் சற்றிற்கெல்லாம் மறைந்து பகலின் மீது இருட்டை போர்த்தத் துவங்கியது. எங்கோ சற்று தூரத்தில் அல்லா………… என்று பாங் ஓதும் சப்தம் கேட்டது. ஜன்னலருகே மரங்கள் ஆடின. காற்று நன்றாக உள்புகுந்து மின்விசிறியோடு சேர்ந்து சப்தம் எழுப்பியது. ஏதோ மைனா போல் ஒரு பறவை மரத்தில் இருந்துக் கொண்டு கீச் கீச் கீச் என்று கத்தியது. வெளியே கூண்டில் தொங்கவிட்டிருந்த பச்சைக் கிளி ‘மிட்டு’ அதற்கு எதிர்குரல் கொடுக்க, ஆஷா இறங்கி வந்தாள்..

எல்லோரும் சற்று திடுக்கிட்டு அவளைப் பார்க்க அவள் உள்ளே வந்து அவருக்கு இப்போது எப்படி இருக்கிறது? எண்ண செய்கிறார் தூங்குறாரா? என்று கேட்டாள், அவர்களுக்கு அவள் கேட்டது அத்தனை சரியாக புரியவில்லை.

அவளே தயங்கியவாறு உள்ளே அவனுக்கருகில் சென்று ஒரு நிமிடம் அவனையே பார்த்துவிட்டு. பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லியாவாறு சோகம் நிறைந்தவளாக மேலேப் போனாள். படிக்கட்டில் மீதி பெண்கள் நின்றிருந்திருப்பார்கள் போல். அவர்களும் கீழே இறங்கி வந்து சாப்பாடெல்லாம் இருக்கா? என்ன சமையல் செய்தீர்கள்? எப்படி இருக்கிறார் சந்திரா? ரொம்ப அடியா என்றெல்லாம் கேட்டார்கள்.

அம்மி அதற்குள் மேலிருந்து ஒரு தட்டு முழுக்க பலகாரம் எடுத்துக் கொண்டு கீழிறங்கி வந்தாள். சந்திரா உறங்குகிறானா என்று கேட்டுவிட்டு யாரும் கத்தி பேசாதீர்கள் என்று பெண்களை அதட்டினாள்.

பசங்க சற்று கூச்சப் பட, யாரும் கூச்சப் படாதீங்க நான் உங்க அம்மா மாதிரி என்றாள். பசங்களுக்கு அத்தனை புரியவில்லை. யாருக்குமே ஹிந்தி தெரியாதா?

கொஞ்சம் கொஞ்சம் புரியும் ஆனா நீங்க பேசறது அவ்வளவா புரியவில்லையென்று செல்வம் ஆங்கிலத்தில் சொல்ல, ரபிக்கு தெரியும் அவன் குளிக்கிறான் இப்போ வந்துடுவான் இருங்க என்றான் ரமேஷ்.

ரபிக் வந்ததும் அம்மியைப் பார்த்து சலாம் வைத்தான், அவள் அவனை நோக்கி நீ இஸ்லாமியனா? என்றாள், அவன் ஆம்  என்று சொல்ல, என்ன பிரிவு ? பெரியவங்க யார் ? பரம்பரை என்ன? எப்படி பின்புலம் என்றெல்லாம் விசாரித்து விட்டு, எல்லோரும் என்னை உங்க அம்மா மாதிரி நினைத்துக் கொள்ளுங்கள் என்றும், எனக்கு மேல ஏழு பிள்ளைங்க ‘கீழ ஐந்து பிள்ளைங்கன்னு பாபா சொன்னதாகவும் சொல்லிவிட்டு, உங்களைப் போன்ற ‘ஒற்றுமையான நல்ல நண்பர்களை பார்ப்பதில் தமிழர்களை எண்ணி பெருமை அடைகிறேன்’ என்றும் சொல்லிவிட்டு.., எல்லாவற்றிற்கும் காரணம் சந்திரா தான் அவனை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள் என்றும் சொல்லிவிட்டு, மொத்தத்தில் எல்லோரையும் பாராட்டியவாறே, மகள்களை அழைத்துக் கொண்டு மேலே போனார்.

சற்று நேரத்தில் எல்லோரும் சாப்பிட ஆயத்தமாகி சந்திராவிற்காக காத்திருந்தார்கள்., சந்திராவும் கண்களை திறந்தான். சுற்றி எல்லோரையும் பார்த்தான். நல்ல தூங்கியிருந்ததால், எழுந்த கணத்தில் சற்று தலை சுற்றுவது போல் இருந்தது. இருட்டிவிட்டதென்று மட்டும் ஆங்காங்கே பளிச்சென இட்டிருந்த மின்விளக்குகள் சொல்லின. எழுந்து வெளியே எட்டிப் பார்த்தான்.

ரமேஷ் ரபிக் மடியில் வெளியில் கட்டிலில் படுத்துக் கொண்டு பாட்டுப் பாடி கொண்டிருந்தான். சுந்தர் பக்கத்து அறையில் அமர்ந்து ஏதோ படித்துக் கொண்டிருக்க செல்வம் வெளியிலிருந்து சாப்பாட்டினை கொண்டுவந்து உள்ளே வைத்தான்.

வீட்டு வாசலின் ஒரு புறம் அதாவது வராண்டாவின் ஒரு ஓரத்தில் கட்டிலும் எதிர்புறம் சின்னதாக சமைக்க அறையும் மறுபுறம் குளியலறையும் நேரெதிரே வெளியில் போகும் வாசலும் இருந்தது.

சந்திரா லேசாக தலையை சாய்த்து வெளியே வராண்டாவின் மேல் இருக்கும் கம்பிகளை எட்டிப் பார்த்தான். கம்பிகளின் ஓரத்தில் மேலே கட்டிலிட்டு அம்மி உட்கார்ந்திருந்தாள். அருகே வேறு இரண்டு பெண்களும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். ஹினா ஓடி வந்து மேலே எகுறி கட்டிலில் அமர பாபா அவர்களை நோக்கி குரல் கொடுத்துக் கொண்டே அவர்களுக்கருகில் வருவது தெரிந்தது.

சந்திரா பாபாவைப் பார்த்ததும் சடாரென தலையை உள்ளே எடுத்துக் கொண்டான்.

அந்நேரம் பார்த்து சந்திரா பக்கம் திரும்பிய செல்வம் ‘என்னடா மச்சி தேவலையா..? இப்போதான் கொஞ்ச நேரத்திற்கு முன்பு மம்மி பசங்க எல்லாம் வந்து போனாங்க.’ என்று சொல்ல

“மம்மி இல்லடா மச்சி அது அம்மி டா”

“அடப் போடா, எனக்கு அம்மி னா நம்ம அம்மிக் கல்லுதான் ஞாபகம் வருது, நீங்க ஹிந்திலையே பேசிக்குவீங்க அம்மின்னா வித்யாசமா தெரியாது. நாம தமிழ்ல சொல்லும்போது அம்மின்னா எனக்கு எப்படியோ இருக்குடா. நாங்க மம்மி னே கூப்பிடறோம்.

“சரிடா கூப்பிடு, என்ன சொன்னாங்க உங்க மம்மி, நல்ல பேசினாங்களா எல்லோரிடமும்? தங்கமானவங்கடா அவுங்க செல்வம், ஆமா அவுங்க இந்தில தானே பேசி இருப்பாங்க, உங்களுக்கு எப்படி புரிந்தது?”

“அதுக்குதான் நம்ம ரபி இருக்கான்லா”

“ஆமால்ல, சரி நல்லாப் பேசினாங்களா, நீங்க எல்லோரும் கலந்துப் பேசிக்கினீங்களா?”

“ம்ம்.. பேசினாங்கடா. நமம்ளைபத்தி யெல்லாம் ரொம்ப உயர்வா சொன்னாங்க. அவுங்க பிள்ளை மாதிரின்னாங்கடா நம்மையெல்லாம்..”

“என்னைப் பற்றி ஏதேனும் சொன்னாங்களா ?”

“நீ தான் அவுங்களுக்கு முதல் பிள்ளை”

சந்திரா கொஞ்சம் அதிர்ச்சியும் விசனமும் பட்டான். அந்தப் பொண்ணு அவுங்க மகளாயிருந்தா என்னாகுமோ என்று தோன்றியது. அதற்குள் செல்வமே தொடர்ந்தான் –

“ஆமா சந்திரா, அவுங்களுக்கு மேல ஏழு பிள்ளைங்களாம், கீழ ஐந்து பேராம்” என்றான். அவன் அப்படி சொல்லிக் காட்டியதும் சந்திராவிற்கு சுளீர் என யாரோ மேலிருந்து அடித்ததுபோல் இருந்தது.

“அப்படியாடா சொன்னாங்க..?!!”

“ஆமாம்டா சந்திரா, என்னடா அவுங்க இவ்வளோ நல்லவங்களா இருக்காங்க..”

“அதாண்டா அம்மி”

“சரி உனக்கு உடம்பெப்படி இருக்கு?”

“ஹாங்… ஹாங்.. பரவாயில்லைடா. தலை தான் கொஞ்சம் வலிக்குது..” அதற்குள் சந்திரா குரல் கேட்டு தூரமிருந்த ரமேஷ் சுந்தர் ரபிக் எல்லோரும் அருகே வர..

என்னை மன்னிச்சிடுங்கடா..’என்று சந்திரா எல்லோரையும் பார்த்துக் கைகூப்ப

“டேய் அடிச்சன்னா பார்த்துக்கோ..” என்று கோபத்தில் ரபி கை ஓங்கிப் போனான்

“பின்னஎன்ன.. என்னத்துக்குடா இப்போ மன்னிப்பெல்லாம்..” சுந்தர் கேட்க

“இல்லைடா வேலைக்குன்னு கூட்டி வந்தேன், என்னால உங்களுக்கும்…” என்று அவன் இழுக்க

“ஆளப் பாரு எங்கள என்ன வெறும் வாங்கித் தின்ற பசங்கன்னு நினைச்சியா சந்திரா?” நான் பேரிட்டு கூப்பிட்டாலும் உம்மேல ஒரு அண்ணன் மாதிரி மரியாதை வெச்சிருக்கேன் தெரியுமா!!” ரமேஷ் கண் சிவக்கப் பேசினான்..

செல்வம் அருகே வந்து அவன் கையைப் பிடித்துக் கொண்டு “எங்கள உன் மனசார நண்பனா மதிச்சவண்டா மச்சி நீ, தெருவுல சுத்திக் கொண்டிருந்த எங்கள கூட்டி வந்து சீராக்கனும்னு நினைத்த நண்பன்டா, உன்னை சும்மா விட்டுடுவோமா???”

“இல்லடா மச்சி..”

“நீ ஒன்னும் பேசாத இந்தா கை கழுவு” ஒரு தட்டையும் தண்ணியும் எடுத்து நீட்டினான் ரபிக்.

“நான் உங்களாண்ட ஒன்னு சொல்லனும்டா ரபிக்கு..”

“இன்னும் என்ன சொல்ல போற..”

“ஒரு விஷயத்தை உங்களிடம் சொல்லவே இல்லைடா”

“எதைச் சொல்ற..”

“நேற்று இரவு..”

“ஓ அதுவா………” அவர்கள் அவன் முத்தமிட்டதை சொல்லிச் சிரித்தார்கள்

“அதுக்கப்புறமாடா..”

“திருப்பியுமா?????????!!!!!!!!”

“விளையாடாதீங்கடா.. நான் ரொம்ப முக்கியமான விஷயம் ஒன்னு சொல்லப் போறேன்”

“என்னடா சொல்ற??”

“ஆமான்டா, எதிர்பார்க்காத ஒன்னு”

“அப்போ ஷாக் கொடுக்காமப் பட்டுன்னு சொல்லு”

“அந்த கதவைச் சாத்திட்டு வா செல்வம்..”

கதவு சாத்தப் பட்டது. அடுத்த கணம் ஆஷா வாசலில் வந்து நின்றாள். அதை யாரும் கவனித்திருக்க வாய்ப்பில்லை.

கதவு மூடப் பட்டுள்ளதாய் எண்ணி நடந்ததையெல்லாம் சொல்லிமுடித்தான் சந்திரா.

“உண்மையாவாடா சொல்ற?????????”

“ஆமாம்டா.. “

“நம்பவே முடியலையேடா…”

“அம்மா சத்தியமா, செஞ்சாடா…”

“முத்தம் கொடுத்தாளா?????????”

“ம்ம்….”

“அதும் உதட்டுலையா?”

“ஆமாம்டா மச்சி. ச்ச.. மச்சக்காரன்டா நீ”

“போடா.. அதை நெனச்சாலே பயமா இருக்கு”

“யார்றா மச்சி அது??!!”

“தெரியலையேடா..”

“என்னடா முத்தம் கொடுத்துதுன்றான்.. ஆனா யாருன்னு தெரிலன்றான்… எபப்டிடா இது?”

“சத்தியம் செல்வம். எனக்கு அவளை இதுக்கு முன்னாடி தெரியாது. நான் தான் ஏற்கனவே சொல்லி இருக்கேன்ல, எனக்கு மேல யாரையும் அவ்வளவா தெரியாது, எல்லோரையும் அத்தனை நேரா பார்த்ததுமில்ல. ஆனா இந்த பொண்ணு ரொம்ப புதுசா இருந்தாடா. அழகா இருந்தா. பார்க்க நல்லவளா தெரிந்தா”

கதவிற்கு பின்னால் நின்றுக் கேட்டுக் கொண்டிருந்த ஆஷா திடுக்கிட்டாள், கண்கள் கலங்கியது, உதடு கோனி உள்ளம் சிரித்துக் கொண்டது, சந்திரா தொடர்ந்துப் பேசினான்..

“இதுக்கு முன்னாடி அவ இந்தவீட்ல இருந்தமாதிரி தெரியலை. ஆனா..”

அவன் நிறுத்த

“சொல்லு மச்சி.. என்ன ஆனா?”

“சொன்னா நம்பமாட்டீங்கடா.., நேற்று கனவுல ஒரு பொண்ணு வந்ததான்னு சொன்னேனே,

ஆமா அதுக்குதானே முத்தம் கொடுக்குறேன்னு…”

“ம்ம்.. அது கூட இதே பொண்ணு தண்டா.., ஒரே முகம் இரண்டும்”

“போடா…”

“உண்மையாடா மச்சி, சொன்னா நம்புங்கடா..”

சிரித்தார்கள்.. சற்று நம்ப இயலாமல் கோபமுற்றார்கள்..

“இதலாம் ஓவரு மச்சி, கனவுல பார்த்த பொண்ணுதான் நேர்ல வந்ததுன்னு எல்லாம் சொல்லி காம்பிரமைஸ் பண்ணிக்காத, ஏன்னா நீ தப்பு பண்ணக் கூடாது, அவுங்க நம்மல பெத்தப் புள்ள மாதிரி பார்க்கிறாங்கடா”

“எனக்கு தெரியும் சுந்தர், நான் எப்பவும் அவுங்களுக்கு துரோகம் பண்ண நினைக்க மாட்டேண்டா, மனசை இழுத்து புடிச்சாவது என்னை சரி செய்துக்குவேன். எனக்கு அவுங்க தான் முக்கியம்..”

“இல்ல மச்சி, நீ பேசுறதை பார்த்தா கவுந்துடுவ மாதிரி தெரியுதேடா” செல்வம் பதறினான்

“ச்சி போடா.., என்னமோ நான் போய் அவளுக்கு முத்தமிட்டா மதிரி பேசுறீங்க.. ‘அவளே வந்தா ஏதோ சொன்னா எனக்கு என்னன்னுப்  புரிலன்னேன், உதட்டை புடிச்சி முத்தம்கொடுத்துட்டு சிரிச்சிக்குனே ஓடிட்டா”

“தடுத்திருக்கலாம்ல”

“முடிலடா, அந்த கனவால கொஞ்சம் மயங்கிட்டேண்டா…”

“என்ன கனவுடா மச்சி பாபா யாராவது பாத்திருந்தா”

“அதாண்டா நெஞ்சி பதைக்குது”

“எங்களை யாரையாவது எழுப்பி யிருக்கலாமே”

தோனலைடா.., கனவு மாதிரி இருந்துது, திடீர்னு வந்தா, எதிரே நின்னா, ஏதோ பேசினா, உதட்டை எழுத்து ….. கொடுத்தா போய்க்கினேயிருந்தா”

“நிருத்தனும்னா நிறுத்தி இருக்கலாம்டா”

“ஆமாம் ரபி, தப்பு தாண்டா பண்ணேன், நிறுத்தி இருக்கலாம் தான், இப்போ தோணுது; அப்போ தோணலைடா”

“யாரு..? எந்த பொன்னுன்னாவது தெரியுமா?”

“முகம் தெரியும், ஆனா யாருன்னெல்லாம் எப்படிடா!!!!!!!” கவலையுற்றான் சந்திரா

“என்ன பேருன்னு கூட சொல்லலையா அவ”

“இல்லடா..”

“அதெப்படி மச்சி???!!”

“அது தான் எனக்கும் ஒரே ஆச்சர்யம்டா, என்னவோ என்னை பல வருசமா தெரிந்தவ மாதிரி வந்தா, பேசினா, கொடுத்தா, போயிட்டா..”

“எங்க இங்கயா இந்த ரூம்லையா சந்திரா” ரமேஷ் கு ஆச்சர்யம் அடங்க வில்லை இன்னும்

“ம்ம் உன் பக்கத்துல வந்து நின்னு தாண்டா என்னை எழுப்பினா(ள்)”

“எங்களை யாரையாவது எழுப்பி இருக்கலாம் மச்சி, தப்பு பண்ணிட்டடா”

“இல்லடா செல்வா, அப்போதாண்டா கனவு கண்டேன் திடீர்னு அவளும் வந்து எழுப்பினா எனக்கு இப்போ கூட நடந்ததெல்லாம் வெறும் கனவு போலவே இருக்குடா.. ஆனா ஒரே குழப்பமாவும் இருக்கு. அதே நேரம் யாரும் என்ன தொட்டு உதடு வரையும், ச்ச… இதுவரையும் எந்தப் பொண்ணும் என்னை ..”

“யார்னா ஒருத்தர் பார்த்திருந்தா கூட மம்மி முகத்துல கரி பூசினா மாதிரி ஆயிருக்கும்டா, அதும் ஒரு வேளை அவுங்கப் பொண்ணா ஏதேனும் இருந்திருந்தால்?” ரபி சொல்லி நிறுத்த சுந்தர் சொன்னான் –

“அவுங்க உம்மேல நிறைய நம்பிக்கை வைத்திருக்காங்க மச்சி”.

“ஒன்னு பன்லாம்டா சுந்தர், இதுக்கு ஒரே வழி தான் இருக்கு”

“என்ன?” எல்லோரும் ஆச்சர்யமா சந்திராவையே பார்த்தார்கள்

சந்திரா சற்றும் தாமதிக்காமல், “உடனே வீட்டை மாத்துறோம்…………..” என்றான்

“போடா.. “

“என்ன போடா.. அவன் சரியா தான் சொல்றான் ரபி……….”

“இப்படி தாயா புள்ளையா பழகுறவங்கள விட்டுட்டு எங்கடா போவ?”

“எங்கனா போறோம் ரபி.. அவுங்களுக்கு என்னால எந்த ஒரு துரோகமும் நடக்கக் கூடாதுடா”

“சரிடா உன் விருப்பம். நீ என்ன சொல்றயோ அதுக்கு நாங்க கட்டுப் படுவோம். ஏன்னா நீ சுயநலமா நடக்க மாட்டான்னு தெரியும்”

“நாளைக்கு நீங்க புறப்பட்டு எங்கனா வெளியப் போங்க.. நான் தனியா இருக்கும் போது மம்மி வருவாங்க அப்போ பேசிக்கிறேன்”

“சரிடா வாங்க சாப்பிடலாம்..” எல்லோரும் எழுந்தார்கள்.. சந்திராவும் எழுந்தான்.. உள்ளே ஏதோ ஒரு ஏமாற்றம் போல், தன்னை தானே ஏமாற்றிக்கொள்ளப் போவதுபோல் ஒரு உணர்வு பொங்கியது. ஒரு வாலி தண்ணியை எடுத்து கப்புன்னு தலையில ஊத்திக்கணும் போல இருந்துது.

அதேநேரம் மனதிற்குள் ஏதோ ஒரு அலை பரவி, அவள் இங்கே தான் எங்கோ நிற்கிறாள் என்பது போல் ஒரு உள்ளுணர்வு மேலிட, ‘எட்டிப் பார்ப்போமா, வேண்டாம், சும்மா பார்ப்போமே, வேண்டாம் ஒருவேளை அவள் நின்றிருந்தால், நின்றிருந்தால் என்ன, பாவம்ல, மான்சாட்சிப் பேசிக்கொண்டது.., மனசை அடக்கி, அவளை உள்ளே நிரப்பி, எதிரேதான் நிற்பாளோ என்றெண்ணி கதவைத் திறக்கப் போனான்

அதற்குள் ரமேஷ் ‘சந்திராவை அழைத்து அவன் உறங்கும் போது அந்த லூசுப் பொண்ணு, மன்னிச்சிக்கடா அவ பெயர் தெரியாது, அந்த பொண்ணு வந்தது, உன்னை கேட்டது, உன் பக்கத்தில் நின்று உன்னை பார்த்துட்டுப் போச்சி’ ரொம்ப கவலை வேறு பட்டது’ என்று சொல்ல –

சந்திராவிற்கு சடாரென இரவு வந்து முத்தம் கொடுத்துப் போனதும் அதுவாகத் தான் இருக்குமோ என்று எண்ணம் எழ, பாவமென்று எண்ணி அவளுக்கான ஒரு பரிதாபம் உள்ளே மனதெங்குமாய் பரவியது. தனையறியாது ஒரு கலக்கம் உள்ளே கண்ணீராய் கரைந்துக் கொண்டது.

ஏன், எப்படி அவளுக்கு என் மேல இவ்வளவு பாசம் வந்தது? ஒருவேளை நான் வீடு மாற்றிவிட்டுப் போனால் பிறகு என்ன செய்வாள், பாவம், நான் தான் தவறான முடிவை எடுத்தேனா” என்று நினைப்பதற்குள் சுந்தர் தட்டில் உணவு பரிமாறி சாப்பிட அழைத்தான்.

சந்திராவிற்கு மனசே சரியில்லை, அவனுக்கு என்னவோ அவள்மேலே தனக்காக காத்து நிற்பது போன்ற ஒரு உணர்வு மேலிட மேலே எட்டிப்பார்க்க எண்ணி விருட்டெனப் போய் கதவைத் திறந்தான். வாசலில் அவள் கிளிக்கு உணவிட்டுக் கொண்டே கிளியிடம் பேசிக் கொண்டிருப்பது போல் நின்றிருந்தாள்..

அவன் விருட்டெனக் கதவைத் திறந்ததும், அவளைக் கண்டதும் அசந்துபோய் நின்றதும், அவளும் திடுக்கிட்டுத் திரும்பினாள், அவனை ஈரக் கண்களால் ஆழாமாகப் பார்க்கிறாள், கண்ணீர் ஒரு துளி உடனே சொட்டி உலகை நனைத்துவிடும் ஈரமென’ விழிகளில் தேங்கிக் கொண்டது அவளுக்கு. ஈர விழிகளில் காதலால் அவனைத் துளைத்தெடுக்கிறாள்.

அவன் செய்வதறியாது அவள் பார்வையிலிருந்து விலகிட இயலாமல் நிற்க,

ஆயிரம் விளக்குகளும் ஒற்றை கணத்தில் எரிந்தது போல் ஒரு ஆச்சர்யம் பொங்குகிறது அவளுக்கு. சிலை போல் உறைந்தாள் அங்கேயே. சந்திராவிற்கு உடம்பெல்லாம் ஒரு புது மின்சாரம் பாய்ந்தது. எதற்கோ காத்திருந்த ஒரு நிம்மதி வந்து அவனின் மனசெல்லாம் ஒட்டிக்கொண்டுவிட்டது போல் உணர்ந்தான் சந்திரா.

அவள் லேசாகப் புன்னகைத்தாள். இவனும் மறுக்க முடியாதவனாய் உதடு கோனி சிரிக்க எத்தனித்தான். அவனின் உதடு கோனி சிரிக்க எண்ணியதைப் புரிந்துகொண்டவளுக்கு அது ஏனோ அவனுடைய சம்மதம் போல் மனசுக்குத் தோனியதுபோல், ஒரு நிம்மதிப் பெருமூச்சு மனசு விம்மி வெளிப்பட்டது.

சந்திரா சற்று மலைத்ததுபோல் நிற்க; அவள் சிரித்துக் கொண்டே ஓடி குளியலறைப் பின்னிருந்த படிக்கட்டில் ஏறி மேல்தளத்திற்கு ஓடினாள். சந்திரா அவள் போன பாதையையே ஒரு ஏமாற்றமாய் ‘ஐயோ போய்விட்டாளே..’ என்பது போல் தவிப்பாய் பார்த்துக் கொண்டு நின்றான்.

மேலே கிரில் கம்பியில் நின்றுக் கொண்டு மம்மி இவர்கள் இரண்டு பேரையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தாள். மேலே சென்ற ஆஷாவை ஏதோ கோபமாக சொல்லி கத்தினாள். சந்திராவிற்கு உடம்பெல்லாம் ஒரு கணம் ஆடிப் போனது..

மௌனமாக குளியலறை சென்று தண்ணீரை எடுத்து முகத்தில் அடித்தான்… தண்ணீரோடு சிதறிக் கொண்டு தரையெல்லாம் கொட்டியது அவள் நினைவுகள்..

அவனையறியாது மனது பிழியப்பட்டு ஒரு சொட்டுக் கண்ணீர் இறங்கி யாருக்கும் தெரியாமல் வாலி தண்ணீரில் விழுந்து கரைந்தது.. தண்ணீரை வேகமாக எடுத்து முகத்தில் அடித்தான் சந்திரா.

தண்ணீர்.. தண்ணீர்.. தரையெங்கும் தண்ணீர் பரவ; தண்ணீரெங்கும் அவள்; அவள்; ஆஷா!! ஆஷா!! ஆஷா!! என்று யாரோ எழுதியதைக் கலைத்துக் கொண்டுப் போவதுபோல் நீர் விலகி ஓடி வடிகாலிற்குள் விழ; அதிலிருந்து எழுந்த அவளின் நினைவெல்லாம் அவனுக்குள் ரத்தமும் சதையுமாய் கரைந்தது. அதற்குள் –

அவள் மேலே எங்கோ ஒரு மூலையில் மறைமுகமாய்ச் சென்று நின்றுகொண்டு அவனுக்காய் விசும்பும் ஒரு விசும்பளின் சப்தம் அவனுக்குள் விஷமாய் இறங்க; காதல் செய்றியோ காதல்; காதல் செய்றியோ காதல்’ என்றொரு பேரொளி எழும்பி வீடெல்லாம் ஒலித்தது. மரண வலியென மனசு வலித்தது..

—————————————————————————————————————————————–

னி.. காற்றின் ஓசை – தொடரும்..

Posted in காற்றின் ஓசை - நாவல் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

காற்றின் ஓசை – 17 – காதல் செய்யலையோ; காதல்!!

இதற்கு முன் நடந்தது..

ரும்பு கம்பிகளின் மேல் தாமரை பூத்தால்..
படர்ந்த பூக்களின் இதழ்களை பிரித்து ஒரு விளக்கை சுற்றி படர்த்தினால்..
நான்கைந்து பட்டாம்பூச்சிகள் பறந்துவந்து – ஒரு பூ போல வட்டமாய் அமர்ந்துக்கொண்டால்..
நிலவின் ஒளியிலிருந்து பிரியும் வெளிச்சமாக சில தேவதைகள் நிலவை சுற்றி படுத்திருந்தால்…,

இதலாம் நிகழ்ந்தால் எத்தனை அழகாக இருக்குமோ அப்படி தான் இருந்தது சந்திரன் மேலிருந்து விழும் மெழுகு வர்த்திககாக மேலே நிமிர்ந்து பார்க்கையில் கண்ட காட்சி.

மேலே மாலைபொழுதானால் விளக்கணைத்தே இருக்கும் என்பதால், ஒருவேளை கீழே நாம் செய்வதை எல்லாம் மேலிருந்து பார்ப்பார்களோ என்ற ஒரு சந்தேகம் சந்திராவிற்கு வெகு நாளாய் இருந்தது. ஆனால் மேலே ஐந்து பெண்களும் கம்பி சுற்றி படுத்துக்கொண்டு அவனை இப்படி பார்ப்பார்கள் என்பதை இப்போது தான் நேரில் கண்டான். அந்நேரம் பார்த்து மின்சாரம் வேறு வந்து விளக்குகள் எல்லாம் எரிந்து தொலைக்குமா!!!!!!!

வெளிச்சம் பளிச்சென வத்ததுதான் தாமதம், அவனின் அதிர்ச்சியை மிதித்துக் கொண்டு எழுந்து எல்லோரும் ஒரு தேன்கூடு கலைந்தது போல அவரவர் தன் சால்வையை இழுத்து மேலே போட்டுக் கொண்டு இங்குமங்குமென ஓடுகிறார்கள். சந்திரன் சிரித்துக் கொண்டே வீட்டினுள் வந்துசொல்ல ‘எல்லோரும் ஒரே சிரிப்பும் சப்தமும் போட, பாபா மேலிருந்து இறங்கி வீட்டிற்குள் வருகிறார்.

பாபாவிடம் எல்லோரையும் அறிமுகப் படுத்தினான் சந்திரா. பாபா எல்லோரிடமும் மிக அன்பாக பேசி நலம் விசாரித்துவிட்டு எங்கிருந்து வருகிறீர்கள் என்ன வேலை செய்கிறீர்களென்றெல்லாம் கேட்டுவிட்டு சந்திரனை பற்றி அவர்களிடம் மிக பெருமையாக சொல்லிவிட்டுப் போனார். நேரம் சற்று கடந்ததும் எல்லோரும் உறங்கப் போயினர்.

ன்னதான் உலகமே உறங்கிக் கொண்டிருந்தாலும் உறங்கா இதயங்கள் காதல் பச்சை குத்திக் கொண்டு உறக்கம் தொலைத்து அலையத் தானே செய்கிறது.

இங்கும் இரண்டு இதயங்கள் அப்படி உறக்கம் தொலைத்தான. இரவின் நிலா நகர்ந்து மேல் மாடியின் ஓரத்தில் நின்றது தான் தாமதம், மேல்வீட்டிலிருந்து எல்லோரும் மொட்டை மாடிக்கு வந்து படுக்க ஆயாத்தமானார்கள். ஆஷாவும் வந்து படுத்தாள்.

சிரித்து சில கதைகள் பேசி எல்லோரும் உறங்கிப் போக, ஆஷாவின் கண்களுக்குள் காதல் சந்திராவை விழுங்கிவிட்டு தவித்தது. ஆஷா புரண்டு படுத்தாள். சுவற்றிற்கு மேல் நிற்கும் நிலவினையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

முதலில் நிலா ஆஷாவை பார்தத்தா, அல்லது ஆஷா முதலில் நிலவை பார்த்தாளோ, தெரியவில்லை. இரண்டுபேரின் முகமும் வட்டமாய் பளிச்சிட்டது.

இரவின் காற்று வேறு சில்லென்று வீசி அவளின் காதுமடல் வருடி சென்றது. உடம்பெல்லாம் ஆர்மோன் ஊரும் ஒரு உணர்வு. காதல்; நரம்புவழி புகுந்து உடல் வறுக்க ஆஷா நெளிந்து புரண்டு படுத்தாள். தலையணை இழுத்து முகத்தருகே வைத்துக் கொள்ள தலையணை ஏனோ இன்று வாசமாக மனத்தது போல் இருக்க தலையை மேலே தூக்கி தலையணை பார்க்கிறாள்.. தலையணையில் சந்திராவின் சிரித்த முகம் அழகாக தெரிவதுபோல் ஒரு பிரம்மை ஏற்ப்பட்டது.

வகிடெடுத்த தலை குவிந்த உதடு, கவர்ந்திழுக்கும் நிறம். நெற்றி தொடும் முடி. நிதானித்த பேச்சு, அன்பு கூட்டும் பார்வை, எனை தாங்கும் உயரம்….. அஹா.. எத்தனை அழகு சந்திரா!!!!!!! தலையணைக்கு ஒரு முத்தமிட்டாள்.

தலையணையில் பட்ட முத்தத்தின் ஈரம் சந்திரனை தொட்டிருக்க வேண்டும். ஏதோ ஒரு பெண் முத்தம் கொடுத்துவிட்டு ஐயோ ஈரம ஒட்டிக் கொண்டதே வா தொடைத்து விடுகிறேன் என்றழைப்பதாய் அவனுக்கு ஒரு கனவு வேற வர, சிலிர்த்து எழுகிறான்…

“செல்வம்.. “

“…………..”

“என்னடா எல்லாம் தூங்கிட்டீங்களா…?”

“நான் தூங்கள சந்திரா.. என்னாச்சி?”

“ஒரு பொண்ணுடா சுந்தர்..”

“பொண்ணா!!!!!!!!!! எங்க?? எங்க?? “ ரமேஷ் துடித்து எழுந்துக் கொள்ள

அவன் கத்தியெழுந்த சப்தத்தில் ரபிக் மற்றும் செல்வமும் கூட எழுந்துக் கொள்ள..

“பொண்ணுன்னா நிஜமான பொண்ணு இல்லடா, கனவுடா மச்சி, ஒரு பொண்ணு கனவுல வந்தாடா”

“யாரு.. அந்த பொண்ணா?!!”

“எந்த பொண்ணு ?”

“அதான், நாங்க சொன்னோமே.., ஒரு பொண்ணு மேல இருந்து லூசு மாதிரி உன்னையே பார்க்குதுன்னு..”

“ச்சி போடா.., நான் இதுவரையும் எந்த பொண்ணையுமே ஒழுங்கா கூட பார்த்தது இல்ல. ஹினா தெரியும், அலியும் அவன் தம்பி அமீது தெரியும். அப்புறம் மம்மி பாப்பா.. அவ்வளவுதான்..வேற மேல யார் பேறு என்னன்னு எல்லாம் எந்த விவரமும் தெரியாது”

ஏன்.. அவுங்க தாத்தா பாட்டி அந்த பாட்டியோட அம்மாவ எல்லாம் தெரியாதா??????? ஆளப பாரு.. உனக்குன்னு வந்து மாட்டுதுங்க பாருடா..” ரபிக் சற்று குறும்பாய் சலித்துக் கொள்ள

“அப்போ சபினா சாஸ்மா ரேஷ்மானு நிறைய பொண்ணுங்க இருக்குன்னு சொன்னியே அதலாம்?” என்றான் ரமேஷ்.

“அதலாம் மம்மி மேலயிருந்து கத்தி கூப்பிடுவாங்க, அதை வைத்து தெரியும்.. ஆனா எது எது யார் யாருன்னுலாம் தெரியாது”

“எனக்கு ரெண்டு நாள் டைம் கொடு மச்சி நான் பக்கா விவரம சும்மா புட்டு புட்டு வைக்கிறேன் பார்..” ரமேஷ் சொல்ல

“நீ எதனா எக்குதப்பா பண்ணு, மவன உன்னை அடுத்த வண்டியில ஊருக்கு அனுப்பி விட்றேனா இல்லையா பாரு..”

“டேய் விடுங்கடா சும்மா!!!!!!! அவன் தான் சொல்றான்ல, நீ படு மச்சி” செல்வம் எழுந்து சொல்ல

“எல்லோரும் படுத்து சற்று நேரத்திற்கெல்லாம் உறங்குகிறார்கள். சந்திரனுக்கு அந்த கனவு.. முத்தம்.. காதல்.. என எல்லாமே புதிதாக இருந்தாலும், அது ஒவ்வொன்றாக கூரையில் சுற்றும் பேன் காற்றோடு சேர்ந்து தரையில் இறங்கி அவனுக்குள் புகுந்து கொண்டது போல் இருந்தது..

மெஸ்………”

“………………”

“ரமேசு……… தூங்கிட்டியாடா..”

“இல்லடா சந்திரா.. என்னடா திரும்ப கனவுல வந்தாளா அந்த பொண்ணு..”

“ச்ச ச்ச அதலாமில்ல நீ ஒரு பாட்டு பாடேன்..”

“நீ தான் என்ன திட்டுனல்ல!!!!!”

“மன்னிச்சிக்கடா மச்சி, நீ தாண்டா நம்ம செட்டுலையே ரொம்ப நல்ல நண்பன்.. “

“சரி சரி விடு.. அதுக்கேதுக்கு ஒரேடியா இப்புடி…”

“பாடுடா ரமேசு, தூக்கமே வரல, அம்மா பாபாவ எல்லாம் பார்க்கணும் போல இருக்கு, இதுல அந்த கனவு வேற, என்னவோ மனசு ஒரு மாதிரி இருக்குடா”

“என்ன பாட்டு பாடட்டும்”

“எதனா பாடு மச்சி”

“புதுபாட்டா இல்ல பழைய பாட்டு வேணுமா..”

“பழைய பாட்டும் இல்ல, புதுசும் வேணாம், ஒரு நடுத்தரமா பாடுடா “

“காதல் பாட்டா இல்ல குடும்ப பாட்டா?? “

“ஏன் சாமி பாட்டு பாடேன்.. ஏன்டா ரமேசு..” சந்திர செல்லாமாக கோபிக்க ரமேஷ் சிரித்துக் கொண்டே பாடினான்..

டல் காற்று முடிந்தவளே
காட்டு தீயாய் காமம் குடித்தவளே..,
வீட்டு தோட்ட நிலவே நீ
பேசும் போதை குரலே நீ..,
வாழும் சொர்க்க வரமே வா
என் கனவில் புகுந்த கவியே வா..,

ஊரெல்லாம் சுற்றித்திரிந்து முடித்த
ஒற்றை தெருவில் வந்தவளே..,
உலகத்தின் தூரத்தை – உன்
ஒரு பிரிவில் தந்தவளே – வா…
எனக்காய் பூக்கும் வசந்தத்தை
உனக்குள் தேடி தா.. தா.. “

வன் பாட பாட அந்த கனவுப் பெண் நேரில் வந்து நின்று அவனோடு சேர்ந்து கைகோர்த்து ஆடுவது போல் இருந்தது.. சந்திராவிற்கு. கண்களை திறந்து பார்த்து விட்டு இன்னும் இறுக்கமாக மூடிக் கொண்டான்..

கனவு போல் அவள் வந்தாள்.. அவனை தொட்டாள், தோள் மீது சாய்ந்தாள்.. எங்கோ காற்றின் மீது நடந்தார்கள் இருவரும்..

“டேய் ரமேசு…………” செல்வா அழைத்தான்

“என்னடா செல்வா..”

“பாட்ட நிறுத்திட்டு தூங்குறியா?”

“சந்திரா தான்டா பாட சொன்னான்..”

“அவன் எப்பவோ.. தூங்கிட்டாண்டா”

“அடப்பாவி அவன்தான்டா பாட சொல்லி கேட்டான்..”

ந்திராவிற்கு அவர்கள் பேசிக் கொள்வதெல்லாம் எங்கோ யாரோ பேசுவது போல் கேட்டது. ஆனால் கண்களை திறக்க விரும்பவில்லை அவன். அவனின் இறுக்கமான கண்களுக்குள் அவள் தாவணி பறக்க ஆடினாள். அவனின் கைவிரல் பிடித்தவள் சுழன்று கொட்டும் அருவி போல் அவனை சுற்றி சுற்றி வாந்தாள். என் பெயர் ஆஷா என்றாள்..

திடுக்கென்றது சந்திராவிற்கு. கண்களை படக்கென திறக்கவும் பயம். இன்னும் அழுந்த மூடிக் கொண்டான்.. ஆஷா அவனருகே நெருங்கி , அவனின் கன்னம் தடவி காதுகளில் காதலை ஓதினால்.

ராகம் கடந்த பொழுதொன்றின் நுனியில் யாரோ பேசக் கேட்பது போல் அவளின் குரல் ஒரு அசரீரியாக வந்து ‘காதல் செய்யலையோ காதல்’ என்று கேட்டது. தனைமறந்து ரீங்கரித்த ‘பூ சுற்றும் வண்டின் ஓசை போல், அவனை சுற்றி வளைத்து தனக்குள் ஆக்கிக் கொண்ட ஒரு சங்கீதத்தின் சப்தம் ‘உள்ளே காதலாய் காதலாய் இசைக்கத் துவங்கியது.

ந்த இசை மெல்ல பிரவாகமெடுத்து காற்றெல்லாம் கலந்து.. ஆஷாவின் இதயக் கதவினை போய் மோதி இருக்கும் போல். அவளும் தனை மறந்து தன்னுள்ளே விழித்துக் கொண்டு தவித்தாள். மாடியின் சுவரெங்கும் எழுந்து தேவதைபோல் ஆடினாள்.

அவளின் ஆடலும் பாடலும் சந்திரனை மட்டுமென்ன விட்டாவைக்கும், இதோ.. ‘உள்ளே பல சூரியனை புகுத்தி.. காதலின் கடல்பொங்கி நிறைந்தவளாய் அவனோடு கனவில் மீண்டும் மீண்டும் கைகோர்த்தே திரிந்தாள்.

ஏதோ ஒரு புதிய இடம், ஏதோ ஒரு புதிய மொழி, ஏதோ ஒரு புதிய உணர்வு சந்திரனின் உடலெங்கும் தீயாய் பரவியது.

தீ நெருப்பின் மஞ்சள் நிறம் முகத்தில் ஜொலிக்க, இதோ ஆஷாவும் பாடுகிறாள்..

ரமெல்லாம் நீயானாய்
கனவா கனமெல்லாம் என் நினைவானாய்..,
தேன்மலர் பூத்து தூக்கம் துறந்தேனே
உனை தொட்டு – எனை தொடும் காற்றிற்காய் என் உடல் திறந்தேனே..,
வந்து கதை கோடி சொல்வாயா
நம் காதல் ரதம் ஏறி சொர்க்க வாசல் திறப்பாயா..,
சுடும்தேகம் கடல்மூழ்கி முத்தாய் உன்னை எடுக்கிறதே
கடுந் தீ பொங்கி யுனை தின்ன; உடல்
பித்தாய் உனை யெஎண்ணிக் கிடக்கிறதே – கிடக்கிறதே!!”

அவள் பாடிக் கொண்டே வந்து மீண்டும் சந்திராவின் கனவில் முத்தமிட்டாள், முத்தத்தின் ஈரமவன் உடம்பெல்லாம் காதலாய் பரவி, அவளை கட்டிப் பிடித்துக் கொள்ள கட்டளையிட ‘தனைமறந்தவன் அவளை கட்டிப் பிடித்து முத்தமிடுவதாய் எண்ணி; அருகில் படுத்திருந்த செல்வத்தை முத்தமிட, அதுக்கு மேல சொன்னா சிரிப்பீங்க. அதுக்குள்ள

அவன் டேய் டேய்.. நான் செல்வாடா மச்சி, நான் அந்த பொண்ணு இல்லடா சந்திரா நான் செலாடா.. காப்பாத்துங்கடா காப்பாத்துங்கடா என்று கத்த, சுந்தர் எழுந்து சந்திராவை தட்டி விலக்கி விட —

“அச்சச்சோ கனவுடா செல்வா, மன்னிச்சிக்கடா, அதே பொண்ணு வந்து முத்தம் கொடுக்க சொன்னாடா..” என்று சந்திரா வழிய எல்லோரும் கின்டலும் சிரிப்புமாய் சற்று விலகி தூரமாய் படுத்து ஒருவழியாய் உறங்கினார்கள்.

னால் ஆஷாவின் கனவு கலையவேயில்லை, வானத்திற்கும் பூமிக்கும் நடுவே ஒரு பந்தலிட்டு அதன் நடுவே சந்திராவோடு அமர்ந்து காவியம் பாடினாள் ஆஷா.

ஆஷா முதன் முதலில் சந்திராவை பார்த்ததே புகைப்படத்தில் தான். அவள் வேறு ஊரில் படிக்கச் சென்றிருக்க, இப்படி புதியதாய் ஒருவன் வந்திருப்பதாகவும், இப்படி இப்படி எல்லாம் அவன் இருப்பதாகவும், தங்கை என்றால் அவனுக்கு அத்தனை உயிர் என்று சொன்னதாகவும், யாரையும்……… ‘ஒரு பெண்களை கூட திரும்பியும் பார்ப்பதில்லை என்றும் சமைப்பதிலிருந்து வீட்டை அழகு படுத்துவதிலிருந்து, ஓவியம வரைவது பேசுவது பழகுவது அன்புகாட்டுவது பிறரை மதிப்பது பிறருக்கு உதவுவது என பல வகையில் சிறந்தவன் என்றும், மிக்க மிக்க உன்னை போலவே
இயற்கை ரசனை உள்ளவன் என்றும், பார்க்க மிக அழகானவன் என்றும், பார்த்தால் சொக்கிப் போவாய் அத்தனை அழகு அவன் என்றும், இங்கிருந்து பேசிய ரேஷ்மா சபினா எல்லாம் ஆளுக்கொரு பங்காக என்னென்னவோ சந்திராவை பற்றி தொலைபேசியில் புகழ்ந்து வைக்க, அங்கிருந்தே அரும்பியது அவனை பார்ப்பதற்கான ஆஷாவின் ஆர்வம்..

அதோடு நின்றாளா யென்றால் அதுவும் இல்லை, அவள் வரும் முன் அவன்வேறு ஊருக்கு சென்றுவிட, படிப்பு முடிந்து வீட்டிற்கு வந்ததும் முதல்வேலையாக அவன் தங்கியிருந்த அறைக்குள் ஓடி அவனுடைய புகைப்படம் பார்த்த போதே நிம்மதியானாள். நேரம் கிடைக்கும் போதெல்லாம் வீடு சுத்தம் செய்வதாக சொல்லி அவன் அறைக்கு சென்று அவன் புகைப்படத்தையே அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவன் பயன் படுத்தும் சோப்பு, பல்துலக்கும் பசை, என்ன பிரென்ட் பிரஸ்ஸு, என்னென்ன துணி வெச்சிருக்கான், பாத்திரங்களை எப்படி கவுத்திருக்கான், என்னென்ன புத்தகம் வைத்திருக்கிறான், என்ன சாமி கும்பிடுறான் என எல்லாவற்றையும் பார்த்து வைத்துக் கொண்டாள். அவன் விட்டு சென்ற ஒரு பழைய டைரி வேறு கிடைத்து விட, அவனின் அப்பா அம்மா தங்கைகள் மீது அவன் வைத்திருக்கும் அக்கறை முதல்கொண்டு ‘வேலைக்கு வர பட்ட துயரம் வரை , தன் தேசம் விட்டுவந்து தமிழரிங்கே படும் பாடு வரை என அவனை பற்றிய எல்லாவற்றையும் தெரிந்துக் கொண்டாள்.

ப்போது அவனை முதன் முதலாய் நேரில் கண்டதும், அவளுக்கு ஓடி சென்று அவன் மார்மீது சாய்ந்து நீயே நீயே எனக்கெல்லாம் என்று சொல்லவேண்டும் போல் இருந்தது.

மறைந்து மறைந்து நின்று அவனை மீண்டும் மீண்டும் பார்த்ததில், அவன் வருவானா வருவானா என்று எதிர்பார்த்திருந்ததில், நேரில் எப்படி இருப்பானோ என்று அவன் முகம் காண காத்திருந்து தவித்ததில், அவன் வந்தும் கூட யாரையுமே நிமிர்ந்தும் பார்க்காததில், இப்படியும் ஒருவன் இருக்கானே என்று இமை விரிந்த ஆச்சர்யத்தில் ‘ஆர்வமாய் மட்டுமிருந்த அவனின் மீதான ஆசை காதலாய் அவளுக்குள் கரைந்துபோனது..

தோ அந்த காதல் துளிர்த்து, நிரம்பி, இதயத்தில் ஒரு மோக நெருப்பை கிளறி விட, அது மெல்ல எரிந்து எரிந்து ‘அவள் தூக்கத்தையும் தின்று தொலைக்க, திரும்பிப் பார்க்கிறாள்.. எல்லோரும் அருகருகே நன்றாக உறங்கிக் கொண்டிருக்கிருக்கிறார்கள்.

பக்கத்தில் படுத்திருந்த சபினாவை லேசாக தட்டிப்பார்த்தாள், அவள் அசரவில்லை. அடுத்துப் படுத்திருந்த ரேஷ்மாவை எட்டி தட்டிப்பார்த்தாள், ம்ஹூஹூம் அவளும் அசைய கூட இல்லை. ஹினாவை மெல்லிய குரலில் அழைத்தாள், அம்மா என்றாள்.. யாரும் அப்படி இப்படி கூட திரும்பவில்லை. பாபா தூரத்தில் குறட்டை விட்டு தூங்குவது தெரிந்தது, அலி அமீது எல்லாம் தூரமாக படுத்திருக்க மெல்ல ஒரு மலர் விரிவது போல் எழுந்து நின்றாள்.

தன் ஆடைகளை சரி செய்துக் கொண்டாள், முடியினை இழுத்து காதுகளில் சுற்றிக் கொண்டாள்.. உடம்பெல்லாம் தொட்டுப் பார்த்தாள். காதல் ஆளை கொன்றுதின்னும் மோகத் தீயாகப் பரவி, உடலெல்லாம் வெப்பம் எழுப்பி ஒரு முறுக்களை ஏற்றிவிட்டிருந்தது.அந்த முருக்களில் தனை மீறிய தைரியம் விஞ்சி நிற்க,

எழுந்து நடந்து படிக் கட்டில் இறங்கினாள். ஒரு சின்ன தயக்கம் எழுந்தது உள்ளே. இது சரியா என்று கேள்வி கேட்டது உள்ளே. சரி தான், மனதால் எனக்குள் நிறைந்து போனவனுக்கு என்னை அடையாள படுத்துவது சரி தான். இதை விட்டாள் இன்னொரு சந்தர்ப்பத்தில் எனக்கு இப்படி ஒரு தைரியம் வராது. போ.. இப்பவே போ.. மனதில் நினைத்துக் கொண்டு நடந்தாள்.

நாளை ஒருவேளை சமுகம் இக் காதலை ஏற்காது போனால் என்ன செய்வாய்? உள்ளே கேள்வி எழுந்தது, சமுகத்தை தூக்கி எறிவேன், எனக்கு அவன் தான் முக்கியம் என்றது மனசாட்சி.

ஒருவேளை அவன் உன்னை பிடிக்கவில்லை என்று மறுத்து விட்டால்???? மீண்டும் கேள்வி கேட்டது மனசாட்சி. அக்கணமே உயிர் துறப்பேன். ஆனால் அவன் என்னை நேசிப்பான். நிச்சயம் நேசிப்பான். இது ஒரு பழைய பந்தம். அவன் என்னை ஒருக்காலும் மறுக்கமாட்டான். புத்தியை தாண்டி மனது அவளின் உணர்வுகளை நம்பியது.

சரி சீக்கிரம் போ.. யாரேனும் பார்க்கும் முன் போ.. மனசாட்சி.. துரிதப் படுத்த சற்று வேகமாய் இறங்கி படிக் கட்டிலிருந்து இறங்கும் முன் நின்று..

சரி.., அவன் தமிழாச்சே!!!!! எனக்கு தமிழ் தெரியாதே.., ஹிந்தியில் சொன்னால் புரிவானா..? ஹினா அவனுக்கு ஹிந்தியும் தெரியாதென்றாளே!!! அதனாலென்ன காதலுக்கென்ன மொழியா முக்கியம்? அவனுக்கு என்னை புரியும். ‘ம்.. நட.. இனி எதற்கும் யோசிக்காதே..’ மீண்டும் உறுதி பூண்டுக் கொண்டாள்..

இரண்டாம் மாடி இறங்கினாள்..

முதல் தளம் வந்தாள்..

கீழ்த்தளம் வந்து நின்று ஒருமுறை மேலே பார்த்துக் கொண்டாள்..

சந்திராவின் அறையை நெருங்கினாள்..

திறந்திருந்த கதவை தள்ளி உள்ளே சென்று ரபிக் தாண்டி.. செல்வம் தாண்டி.. ரமேஷ் தாண்டி…அவனருகே போய் நின்றாள்..

சந்திராவிற்கு மீண்டும் ஒரு கனவு.. அவள் வானத்திலிருந்து குதிக்கிறாள் அவனை காதலிக்கிறேன் என்கிறாள், காதல்செய் என்று சொல்லி கட்டிப் பிடிக்கிறாள்….

‘விடு விடு என்று அவன் துடிக்கும் தருணத்தை’ அந்த நெருக்கத்தில் வந்து நின்ற – அவளால் எழுந்த அவளின் பென்வாசம் கொஞ்சம் கொஞ்சமாய் தின்கிறது..

விடு விடு என்று சொன்ன வார்த்தை அடங்கி அவள் நெருக்கத்திற்கு மயங்கினான்.. அவள் காதலிக்கிறாயா என்று கேட்க ஆம் என்றான்..

அவனருகில் நின்றிருந்த ஆஷா அவன் தோளில் தட்டி எழுப்பினாள்..

ந்திரா தன் கனவின் தவிப்பிலிருந்து மீளமுடியாமல் துடித்து யெழ, எதிரே அந்த தேவதை நின்றிருந்தாள்..

இருட்டை உடைக்கும் தங்கமாய் மின்னியது அவள் முகம். காற்றின் அழகாக, காற்றே அசைந்து நெளிந்து பறப்பதாக ‘அவள் கூந்தல் களைந்து பறந்து நெற்றியில் நிறைய, முத்து சிரிக்கும் கண்களால் அவனை உயிர் கூசச் செய்தாள் அவள்.

இது கூட கனவு தானா????!!! சுற்றி முற்றி பார்த்தான்.. செல்வா ரமேஷ் சுந்தர் ரபி எல்லோரும் படுத்திருந்தார்கள்

ஐயோ கனவில்லையே.. எல்லாம் நிஜமா!!!!!!!!!!??? பிறகு அவளெப்படி இங்கே?? கனவில் வந்தவள் நேரில் வருவாளா??!!!! இது சாத்தியமா??? புரியவில்லையே..

அவள் ஏதோ கிசுகிசுத்தாள். அவன் மீது கைவைத்து அவள் மீதும் கைவைத்து என்னவோ சொன்னாள்.. மூச்சு வாங்க முனுமுனுத்து ஏதோ பேசினாள்..

அவனுக்கு கனவை மீறிய ஒரு ‘உண்மையின் பதட்டம் மேவியது.. “நீங்க யாரு…??? ஏன் இந்த நேரத்துல இங்க..”

அவள் அவனிடம் சொன்னது மட்டுமல்ல, அவன் தமிழில் கேட்டது கூட அவளுக்கும் புரியவில்லை.. என்னசெய்வதென்றறியாது அவளையே ஆச்சர்யம் பொங்கப் பார்த்தான் சந்திரன்.

அவள் அவனின் ஆச்சர்யத்தை தன் அருகாமையின் நெருக்கத்தால் தகர்த்தாள். அவள் மேலும் நெருங்கியதும் அவன் திடுக்கிட்டு ஏதோ சொல்லவர அவன் வாயை தன் கை வைத்து பொத்தினாள்.

இருட்டை தன் கூரிய விழிகளால் தோற்கடித்து அவனையே ஆழமாக பார்த்தாள். அவனின் உதட்டின் மீது வைத்திருந்த அவள் கைவிரல்கள் அவனின் திகைப்பில் சுட்டிருக்கவேண்டும், உதட்டிலிருந்து வெடுக்கென கையெடுத்து ‘நீ ‘நான் என்று மீண்டும் ஏதோ சொன்னாள்..

அவன் என்னசெய்வதென்றறியாது அதிர்ச்சியுற்று என்னவோ சத்தமாய் சொல்ல, அவள் அவசரம் கூடி –

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்!!!!!!!!!! என்று கைகாட்டி பேசாதே என்றாள்..

அவனின் மிக அருகில் சென்று ஒட்டியவாறு நின்றாள். அவளின் பெண் வாசம் சந்திராவின் உயிர்வரை பரவியிருக்க வேண்டும்.. அவனை ஆழமாக தொட்டிருக்கவேண்டும். உதட்டின் மேல் வைத்திருக்கும் அவளின் கைவிரல்களின் சூடு உள்ளே இருக்கும் கனவின் காதலை தட்டி எழுப்பி இருக்க வேண்டும்.., ஏதோ ஒரு ஜென்மத்தில் விட்ட ஒரு சொந்தத்தின் மீதியை இனி தொடர்வோம் என்று அவனுக்குள் மானசீகமாய் சொல்லியிருக்க வேண்டும்போல். சந்திரா முழு மௌனமானான்.

முடிவை எதையுமே எடுக்க முடியாத ஒரு தருணத்தில், மெல்லிய இருட்டில், இரண்டு இதயங்களும் காதலால் பளிச்சிட்டன..

அவள் மீண்டும் ஹிந்தி மொழியில் அவனை காதலிப்பதாய் கிசிகிசுத்தாள்..

அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை என்றாலும் அவளின் தவிப்பு, அவளின் காதல், அவளின் ஏதோ ஒரு சொல்லத் தவிக்கும் தவிப்பு புரிந்தது..

உனக்கு புரியவே இல்லையா என்னை என்கிறாள்.. சந்திரா அதற்கும் அமைதியாகவே பார்க்க அவளுக்கு பதட்டம் மேலிட்டது, எங்கு இந்த சந்தர்ப்பம் விட்டால் இனி நம் காதலை நாம் இவனிடத்தில் சொல்லவே முடியாதோ என்றொரு பயம் வர, இது தான் தன் காதலை வெளிப் படுத்துவதற்கான சரியான சந்தர்ப்பம், இதை விட்டால் இப்படி ஒரு வாய்ப்போ தருனமோ மீண்டும் அமையவே அமையாதென்று எண்ணினாள்.

காதல் ஒருமுறை தான் பூக்கிறது. அது பூக்கும் முன்னரே உயிரில் வேர் விட்டுதான் துளிர்க்கிறது. எப்பொழுது இவனை காதலிக்க தயாரானேனோ அப்பொழுதே அவனுக்காய் என்னை முழுதுமாய் தந்தேன். இனி வாழ்வும் சாவும் இவனோடு மட்டுமே அன்றி வேறில்லை உறுதியாக தீர்மானித்துக் கொண்டாள். சந்திராவின் எந்த ஒரு விருப்பு வெறுப்பையும் அவள் நாடவில்லை, அவனின் சம்மதத்திற்கு கூட துளியும் காத்திருக்கவில்லை. அவள் காதலிக்கும் அவன் தன் காதலன் என்பதில் மட்டும் கொண்ட உறுதியோடு, தன் காதலை அவனுக்கு அப்பட்டமாய் தெரிவிக்கும் ஒரு எண்ணத்தோடு இன்னும் சற்று அவனை நெருங்கி “என்னை மன்னித்துவிடு என்று கேட்டுக் கொண்டு அவன் உதட்டோரம் நெருங்க..

அவனுக்கு சட்டென ஒன்றும் புரியாத நிலையில், ஒரு இனம் புரியாத உணர்வில் ஒரு வித பயத்தில் – அவளருகில் சென்று என்ன சொன்னாய் என்று ஏதோ பெயருக்கு கேட்க –

அவள் இங்குமங்கும் திரும்பி எல்லோரும் தூங்குகிறார்களா என்பதை உறுதி செய்துக் கொண்டு அவன் உதட்டோரம் நெருங்கி கீழுதடு பிடித்திழுத்து ஈரமாய் ஒரு முத்தத்தில் அவனை நனைத்தாள்.

முத்தத்தின் மீதியை சிரிப்பினால் சொல்லிவிட்டு ஒரு மலர் நடந்தது போல.. அருவி ஒன்று பாய்ந்து படிக் கட்டுகளில் ஏறி ஓடியது போல.. வான் நிலவு வாசலிலிறங்கி வந்து தன் உதட்டில் ஆயிரம் முத்தமிட்டதை போல ஒரே ஒரு முத்தத்தில் தன் காதலின் அழுத்தத்தை உயிர்வரை பதித்துவிட்டு அதோ மெல்ல நடந்துப் போகிறாள்… அவள்

அவளின் காலில் கட்டாத சலங்கை சந்திராவின் இதயமெல்லாம் ஜல் ஜல்லென்று குல்லுங்கியது. நாடி நரம்பெல்லாம் விர்ரென்று அந்த உதட்டில் பட்ட மின்சாரம் பாய்ந்து ஏற, உலகை மறக்கச் செய்தது அவளின் ஒற்றை முத்தம். எல்லாம் கடந்து ஒரு மோகினி வந்து அடித்துவிட்ட உணர்வில் செய்வதறியாது தவிக்கிறான் சந்திரா..

இரவு அவர்களின் காதலை சுமந்துக் கொண்டு காலத்தின் மீதேழுதப் போகும் ஒரு சோகக் கதைக்காய் தன் கண்களை மூடிக் கொண்டது…
—————————————————————————————————————-
விடியும் பொழுதில் காற்றின் ஓசை – தொடரும்..

Posted in காற்றின் ஓசை - நாவல் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

காற்றின் ஓசை – 16 – காதல் செய்யலையோ; காதல்!!

இதற்கு முன் நடந்தது..

டேய்.. டேய்.. இங்க வா..”

“மேல பொண்ணுங்க நிக்குதுடா.”

“அதுக்காக லொடுக்குனு போய்டுவியா,..”

“பிகருங்க அழகா இருக்குடா..”

“கீழ இறங்கு,

“ஏன்டா?”

“இறங்குடா கீழ..”

“என்னடா செல்வம் இவன் இதுக்கெல்லாம் டென்சன் ஆவுறான்

“இங்க பார் ரமேசு நான் முன்னாடியே சொல்லியிருக்கேன், இந்த வீட்டுக்கு வெளியே யாரை வேண்டுமானாலும் பாரு, இங்க இருக்கவங்க எல்லாம் நம்ம அக்கா தங்கச்சிங்க மாதிரி. அதுக்கு சம்மதம்னா உள்ள வா இல்லைனா வெளியே போ……”

“மன்னிச்சிக்கடா மச்சி, பார்க்க நல்லாருந்துச்சிடா அதான்……….”

நாங்க நான்கைந்து பேர் மொரிசியசின் தமிழர் வாழும் பகுதியிலிருந்து வந்திருக்கோம். நான் இவர்களுக்கு முன்பே இவ்வீட்டிற்கு வந்தவன். இது தமிழின் வாசனை கூட தெரியாத மௌரிசியசின் ஒரு பகுதி. திவ்யாப்பூர் என்னுமிடம். இங்கு வட இந்தியர்கள் மிக அதிகம். அவர்களில் ஒரு குடும்பத்தில் பிறந்தவள் தான் ஆஷா.

பார்க்கும் அழகில் இதயம் சுண்டி
பேசும் அழகில் கிறுக்கு புகுத்தி
பக்கம் வரும் நெருக்கத்தில் – கண்மூடி நம்மை
காதலிக்கவைப்பவள்,

அவளை பார்க்கும் யாருக்கும்
காதல் செய்யலையா காதல் என்று
இதயம் துடிக்கும்..

துடிக்காவிடில், அல்லது அவளை ரசிக்கவாவது தோன்றாவிடில் அவன் ஒரு சராசரி இளைஞனாக இருக்க முடியாது. வேண்டுமெனில், கொட்டிக் கிடக்கும் அழகு அவளென்று மனசு ஒருமுறை துள்ளி, பிறகு ஐயோ தப்பு தப்பென்று எண்ணிக் கொள்ளலாம். அத்தனை அழகு ஆஷா.

உண்மையில் அவள் பெயர் ஆஷா இல்லை. ஒரு இஸ்லாமிய பெண்ணின் பெயர் எனக்காக ஆஷா என்று மாற்றப் பட்டது ‘சோகத்திலும் ஒரு மகிழ்ச்சி பூத்த கதை.

ஆஷாவிற்கு ஒரு அக்கா, மூன்று தங்கைகள், மற்றும் இரண்டு தம்பிகள் இருந்தார்கள். அந்த ஏழு பேரின் அட்டகாசத்தில் அந்த வீடே அதம் பறக்கும். ஆஷாவின் அப்பா ஊரின் சொல்லத் தக்க செல்வந்தர். அக்காலத்திலிருந்தே பேர்பெற்ற மொரிசியஸ் ஜமின்தார்களில் ஒருவர். தெரியாமல் வாசலில் நின்று பார்த்தால் கூட ‘கண்ணை பிடுங்காவிட்டாலும், ஏன் என்ன பார்க்கிறாய் கான்னை தொண்டிடுவேன் படவா போ’ என்று மிரட்டவாவது செய்யக் கூடியவர். ஆனால் அன்பின் ஆலமரம் அவரும் அவரின் மனைவி, நம் ஆஷாவின் தாயுமான சகீரா பானுவும்.

நான் எல்லாவற்றிலுமே அவளுக்கு கீழானவன். ஊரில், அப்பாவின் ஏழ்மை நிலை கண்டு பொறுக்கமுடியாமல், பெட்டி தூக்கி இத்தனை தூரம் அதாவது மொரிசியசின் அடுத்த கோடிக்கு வந்த எனக்கு பிரிவின் துயரை துடைத்து அன்பு காட்டியது இந்த அம்மா அப்பா அக்கா தங்கை தம்பிகள் என எல்லாமுமாய் இருக்கும் இந்த வீடு தான்.

இங்கு இந்த ஊருக்கு வந்து ஒரு வருடமாகி விட்டது. தமிழன் என்றாலே ஒரு எரிச்சலும் எதிர்ப்பும் கொண்ட மக்கள் இம்மக்கள். விட்டால் எங்கு நாம் வளர்ந்து போவோமோ என்று தட்டியே வைக்க முயலும் இவர்களுக்கு மத்தியிலும் நம் தமிழர் ஓடுவர் வேலைஎடுத்து செய்து வருகிறார்.

அவர் கேட்டதற்கிணங்க தான் ஊர் சென்று இந்த நாலு ரோடு ரோமியோக்களை பிடித்து வந்தேன். ஊரின் தெருக்களெல்லாம் வாலிபத்தை தொலைத்து திரிந்த இவர்களை இனியாவது கரைசேர்த்து விடமாட்டோமா எனும் நம்பிக்கை. நிறைய பேர் அங்கிருந்து வர தயார் என்றாலும் இந்த ரமேஷ் செல்வம் ரபிக் சுந்தர் என நால்வர் தான் சரியென்று பட்டது எனக்கு.

இவர்களுக்கு வரும்போதே சொல்லியிருந்தேன் இந்த வீடு என் தாய்வீடு மாதிரி என்று, ஆனால் வந்ததும் ரமேஷ் தான் வாலை அவிழ்த்துவிடப் பார்க்கிறான்.

ன்னொரு முக்கிய விஷயம் சொல்ல மறந்தேனே, ஆஷா என் நண்பர்களுக்கு மட்டுமல்ல, ‘அப்போது எனக்கும் புதியவள். நான் சென்ற மாதம் என் ஊர் செல்ல இருக்கையில் அவள் தம்பி அலி ஓடிவந்து என் கைபிடித்து நிறுத்தினான். ‘இன்று ஒரு நாள் தள்ளிப் போ, என் அக்கா வேறொரு ஊருக்கு படிப்பதற்காக சென்றிருந்தாள், உன்னை பற்றி சொன்னதும், உன்னைப் பார்க்க மிக ஆவலாகி விட்டாள், உன்னை பார்த்தே தீரவேண்டுமென்று ஓடி வந்து கொண்டிருக்கிறாள், அவளை பார்த்துவிட்டு தான் போக வேண்டும்’ என்றான். அதும் அவள் நான் ஊருக்குப் போகிறேனென்று தெரிந்துக்கொண்டு என்னை காண்பதற்காக ஒரு நாள் முன்பாக வருகிறாளாம்.

அங்கு ஊரில் எனக்காக காத்திருக்கும் அம்மா தங்கையை விட ‘இவள் ஒன்றும் அத்தனை பெரிதாக தெரியவில்லை. பயண சீட்டு மாற்ற முடியாதென சொல்லிவிட்டு எப்படியோ புறப்பட்டுவிட்டேன்.

ன்; அவள் ஏன் எனக்காக முன்கூட்டி வரணும்’ என்று தோணும், அதற்கும் காரணம் உண்டு. என் தங்கைகள் என்றால் எனக்கு கொள்ளை பாசம், உயிர்னு கூட சொல்லலாம். அதிலும் சின்னவள் என்னால் வளர்க்கப் பட்டவள். அவளை விட்டு ஒரு வருடம் பிரிந்திருந்தது இது தான் முதல் முறை. அவளை நினைத்து நான் அழுததிலிருந்து, பிறகு ஊர் போகிறேனேன துள்ளிகுதித்து மகிழ்ந்தது வரை, அவளுக்காக பார்த்து பார்த்து நானெடுத்த ஆடைகள், வளையல், கம்மல் என ஆபரணங்கள் வரை ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து வாங்கியதை’ இவ்வளவு பாசம் தங்கையின் மேலென்று ஆஷாவிடம் சொல்ல, அவள் பிரம்மித்து போனதல்லாமல், மேலே விளக்கனைத்து விட்டு கீழ்வீட்டில் நான் என்னென்ன செய்கிறேன் என பார்ப்பதும் பார்த்ததை எல்லாம் ஆஷாவிற்கு போன் செய்யும் போது சொல்வதுமென எனக்கான ஒரு கோட்டையை அவள் மனதிற்குள் கட்டிவிட்டவர்கள் இந்த அலியும் ஹினாவும் தான். அதன் விளைவு தான் இன்று நான் ஊருக்குப் போகிறேனெனத் தெரிந்ததும் அவள் ஓடி வருவதற்கான காரணமும்.

எப்படியோ ஊருக்கு சென்று ஒரு மாதம் தங்கிவிட்டு இன்று மீண்டும் இதோ வாசலில் முதல் அடி வைக்கிறேன். அந்த ஆஷாவை இன்று தான் நானும் முதன் முதலாய் பார்க்கப் போகிறேன் என்றாலும் அதை பற்றிய எந்த கூடுதல் உணர்வும் இன்றி நண்பர்களோடு நுழைகையில்தான் ரமேஷ் மேல்வீட்டின் தாழ்வாரத்தில் இருந்த பெண்களை பார்த்து அப்படி சொன்னான்.

முக்கியமான இன்னொன்றினை சொல்லவேண்டும், இந்த வீட்டை பற்றி. எங்கள் காதலின் பெயர்வைக்காத தாஜ்மகால் இது. மூன்றடுக்கு மாடி. மாடி என்றால் நம்மூர் மாதிரி இல்லை. வரவேற்பறை, பின் உள்ளே சென்றால் வராண்டா, வராண்டாவில் குழாய் கிளி கூண்டு எல்லாம் இருக்கும், வராண்டாவை தாண்டி போனால் வீடு என உள்ளே அறைகள் பிரியும். இதில் விசேசம் என்னவென்றால், கீழ் தளம் எப்படியோ அதே போல் கடைசி மேல் அடுக்கின் மூன்றாவது தளம் வரை ஒரேபோல பெட்டி அடுக்கினார் போல இருக்கும் வீடு.

இதில் வேற நடுவில் வராண்டாவில் ஒவ்வொரு தளத்திலும் கிரில் கம்பி இடப் பட்டு கீழிருந்து கடைசி மேல் தளம் பார்ப்பதற்கு ஏதுவாக திறந்தவெளியாக அமைக்கப் பட்டிருக்கும். கீழிருந்து நான் ஆஷாவை பார்க்கவும், மேலிருந்து அவள் என்னை பார்க்கவும் எங்கள் காதலுக்காக முன்னமே கட்டப் பட்ட வீடு இது. வெளியே வந்தால் நம் வீடு போல் வாசலில் திண்ணை இருக்கும். திண்ணையில் இருந்து நான் பார்த்தால் அவள் நடு மாடியின் போர்டிகோவிலிருந்து என்னை பார்ப்பாள்.

இதில்வேறு கட்டிடங்களுக்கு இடையே போகும் சிறிய குறுக்கு சந்தும் இருப்பதால் நான் தெருமுனை சென்று கடைசியில் திரும்பிப் பார்க்கும் வரை அவள் மேலிருந்து கைகாட்டி அனுப்ப வசதியாக இருந்தது வீடு.

ன்றும் அப்படித்தான், நாங்கள் தெருமுனை திரும்பி வீட்டின் அருகே வருவதற்குள் ஹினா எங்களை மாடியிலிருந்து பார்த்துவிட்டு ஓடிப் போய் உள்ளே வீட்டினுள் சொல்ல, எல்லாம் ஓடிவந்து இரண்டாவது மாடியின் தாழ்வாரத்தில் நின்று பார்த்துவிட்டு சரசரவென்று ஓடி வந்து வராண்டாவின் கிரில் கம்பிகளின் மீது நின்று கொள்ள, நாங்கள் உள்ளே வர, ஹினா எங்கள் அறையின் சாவி எடுக்க உள்ளே ஓடுகிறாள்.

ரமேஷ் ஒரு குழந்தை தனமானவன், ஆனால் அப்படி ஒரு குரல் அவனுக்கு. திரையின் எல்லாம் பாடல்களும் அவனுக்கு அத்துபடி, நான் திட்டவே அமைதியாக நின்றுகொண்டான் பாவம். ஹினா வீட்டிற்குள்ளேயே இருக்கும் படிக்கட்டுகளில் இறங்கி எங்களை வரவேற்றாள். இந்த வீட்டில் என்னை முதன் முதலாக கவர்ந்த பெண் ஹினா தான். என் தங்கையை பிரிந்து நானழுத கண்ணீரை துடித்த முதலாமவள். அப்போது எட்டாவதோ என்னவோ படித்துக் கொண்டிருந்தாள்.

ஹினாவிடமிருந்து எங்கள் அறை சாவியினை வாங்கிக் கொண்டு எல்லோரும் உள்ளே வந்தோம். வராண்டாவில் இருந்த கிளிகூண்டிளிருந்து மிட்டு கீச் கீச்சென்று கத்தி அதன் பங்கிற்கும் எங்களை வரவேற்றது. வராண்டா கடந்து எங்கள் அறை இருந்ததால், அறைவாசலில் எங்கள் துணிமணிகளை வைத்துவிட்டு அங்கிருந்த கட்டிலில் அமர்ந்தோம்.

நடந்து வந்த அசதி ‘அப்பாடா’ என்றிருந்தது. நொடிப்பொழுதிற்கெல்லாம் அலி மேலிருந்து இறங்கி ஓடி வந்தான். கையில் பழச்சாறு மேலிருந்து கொடுத்தனுப்பி விட்டு மேலே பெண்களெல்லாம் கூடி நின்றிருப்பது தெரிந்தது.

சும்மா பேச்சிக்கு நான் வேண்டாம் என்று சொல்வதற்குள் ரபிக் வாங்கி பாதியை குடித்தேவிட்டான். அதற்குள் மேலிருந்து ஹினா ஓடிவந்தாள் அவளொரு ஜாடியில் பழச்சாறு கொண்டு வந்தாள்.. ஏன் உங்களுக்கு கஷ்டம போதுமே என்பதற்குள், மேலிருந்து ‘பரவாயில்லை பழச்சாறு நிறைய இருக்கிறதென்று சொல் ஹினா’ என்றொரு குரல் வந்தது. யாரென்று சரியாக தெரியவில்லை, அநேகம் சபினாவோ அல்லது ரேஷ்மாவோ இருக்குமென்று நினைத்துக் கொண்டேன்.

“டேய்.. சந்திரா நீ ஒன்னு பண்ணுவியா..?”

“என்னடா..”

“கோபப் பட மாட்டியே”

“மாட்டேன் சொல்லு”

“மேல நிறைய பொண்ணுங்க நிக்குதுடா, எது இந்த வீட்டு பொண்ணு எது வேற வீட்டு பொண்ணுன்னு பார்த்து சொன்னியினா நாங்க மீதி பொண்ணுங்களை பர்த்துக்குவோம்ல”

“ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்….. மெதுவா பேசு, மேல பாபாவுக்கு கேட்டா அவ்வளவு தான். அவுங்க முஸ்லிம், கான்பூர் காரங்க. இங்கயும் இந்திய பாரம்பரியம் மாறாம இருக்காங்க. பொண்ணு கிண்ணுன்னியினா வெட்டிடுவாங்க. வா உள்ள போலாம்

“டேய் மச்சி எங்கள தான் பார்க்கவேணாம்ற, நீயாவது மேல பாரேன்.., ஒரு பொண்ணு வந்ததுல இருந்து உன்னையே பாக்குதுடா”

“நீங்க நின்னு பாருங்க நான் போறேன்..” சந்திரா உள்ளே போக, அந்தப் பெண் ஆஷா தலையை உள்ளே இழுத்துக் கொண்டாள். எல்லோறும் சென்று துணிமாற்றி குளித்து சமையல் செய்து இரவு சாப்பிட அமர்கையில் மின்சாரம் துண்டிக்கப் பட்டுப்போனது. மெழுகுவத்தி கேட்டு மேலே குரல் கொடுக்கிறான் சந்திரா.

ஹினா மேலிருந்து கம்பிகளின் வழியாக ஒரு மெழுகு வத்தியினை போட எதேச்சையாய் அவன் நிமிர்ந்து மேலே பார்க்கையில் அதிர்ந்து போனான் சந்திரா..

——————————————————————————————–

வன் அதிர்ந்து போனதற்கான காரணம்.. நாளை – காதலாய் – காற்றின் ஓசை’ யாய் – தொடரும்..

Posted in காற்றின் ஓசை - நாவல் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

காற்றின் ஓசை (15) சாமியும் ஜாதியும்; தியானமும் மதமும்!

வாசல்ல சாணி தெளிச்சா கிருமி நாசினி, மாவுல கோலமிட்டால் சிற்றுயிர்களுக்கு உணவு கிடைக்கும், உணர்வு கூடுமிடங்களில் தங்கம் அணிந்தால் அழகோடு உஷ்ணமும் இறங்கும், நல்ல விழா நாட்கள் வைத்தால் வாழ்வு குதூகலப்படும், தெய்வ நம்பிக்கை கூட்டினால் கர்வமும் பேராசையும் அற்று போகும், தானம் செய்யும் பழக்கம் ஏற்படுத்திக் கொண்டால் எளியோரின் வாழ்வும் சிறக்கும், மனதை ஒருமுகப் படுத்திக் கொண்டால் மனித பலம் ஆத்மபலமாக உடலெங்கும் பரவும், வாய் வார்த்தைக்கு அதிர்வேற்படுத்தும் சக்தி உண்டு, பார்வைக்கு சக்தி உண்டு, வானில் பறக்கும் பறவைமுதல் நகரும் சூரியனின் மாற்றம்வரை கூட ஒரு மாறுபட்ட சூழ்நிலையை ஏற்படுத்தலாம் எனும் அனுமானம், இது இப்படி நடந்தால் இது இப்படி நடக்கும் எனும் சாத்தியக்கூறுகளின் கணிப்பு என நம் முன்னோர் சொல்லிச் சென்ற நல்லவைகள் பல இல்லாமலில்லை.

அவர்கள் சொன்ன ஒவ்வொன்றிற்கும் அன்று ஒரு அர்த்தம் இருந்தது, அன்றைய பொழுதில் இடம் பொருள் ஏவல் கருதி சிலது தேவையாகவும் இருந்தது. எனவே அதை அவர்கள் சரிசமமாக எல்லோருக்கும் சொல்ல வெகுபாமரத் தனமாகவே சிந்தித்து படிக்காதவரும் ஏற்றுக் கொள்ளும் விதத்தில் சொன்னதில் தவறில்லை.

அதையே நாமும்; எதற்கு செய்தார்கள், அது இப்பொழுது தேவையா, இந்த சூழலில் அது சாத்தியப் படுமா, இதையே நானும் செய்வதால் என் தலைமுறையும் இத்தவறை செய்யாதா என்று யோசிக்காமல் கண்மூடித் தனமாக செய்ததில், அதீத நம்பிக்கையும் பயவுணர்வும் மேம்பட்டதில், தான் செய்பவை எவ்விதத்தில் சரி எவ்விதத்தில் தவறு என்று கூட சிந்திக்காமல் தான்தான் சரியாக செய்கிறோமென்று கர்வம் கொண்டு விட்டதில், மாற்றுக் கருத்துக் கொண்டவர்களை அலட்சியம் செய்ததில் அல்லது அவர்களுக்கு செவியுறாமலே நிராகரித்ததில், மாறுபட்டு சிந்தித்ததன் பேரில் ஏற்பட்ட பொறாமையில் நிகழ்ந்துபோனது நமக்கான ஒட்டுமொத்த தவறுகளும்.

நிறைய விசயங்களை அவர்கள் அக்காலத்திற்கேற்றார்போல் எப்படி சொன்னார்கள், அதை நாம் இப்போது எப்படி எடுத்துக் கொள்கிறோம் என்பதற்கிடையில் தான் துளிர்க்கிறது நமக்கான தவறுகள் மூடப்பழக்கங்களாகவும் அர்த்தமற்றதாகவும் இன்றைய பொழுதின் அவசியமற்றதாகவும் கூட’ என்று சொல்லலாம்.

உதாரணத்திற்கு, இருப்பவர் அடித்துக் கொள்ளும் வீண் டம்பத்தினாலும் ‘நான் தான் பெரியவனெனக் காட்டிக்கொள்ள பணம்படைத்தோர் புரியும் ஆடம்பர செயலாலும் இயலாதவரின் இல்லாதவரின் மனசு வெகுண்டு காழ்ப்புணர்ச்சி ஏற்பட்டு பொறாமை கொண்ட மனோபாவத்தில் ஏற்பட்ட எண்ணத் தாக்கம் பிறரையும் துன்புறுத்தும் என்பதை, கண்ணார் படுமென்று சொல்லி, அது போவதான நம்பிக்கையை ஏற்படுத்த சுத்திப் போட்டால் சரியாகும் என்று சொன்னனர். அதையே ஏன் இக்கலாத்திலும் அப்படியே எடுத்துக் கொண்டு, அதை வளர்த்தும்கொண்டதில் பூசணிக்காய் தெருவில் உடைந்து வாகன விபத்துக்களை ஏற்படுத்தியதும் பண விரயம் ஏற்பட்டதும் அதை கண்டு ஏளனமாய் பலர் சிரிக்க ஆளானதும் தான் மிச்சம்.

இக்காலம் அது அல்ல, நாலு பேருக்கு சொல்லி நாலு பேர் வாழ்த்த அந்த அதிர்வினால் ஒரு குழந்தையின் வாழ்வு வளமாகும் சாத்தியமும் உண்டு. ஆனால், நம் சந்தோஷம் பிறர் கண்ணை உறுத்தாமல் இருக்கவேண்டும். நம் மகிழ்வினை பகிர்வது கூட பிறரையும் மகிழ்விக்குமாறும் பிறரையும் நல்லவை சார்ந்து சிந்திக்குமாறும் அமைத்துக்கொள்ள வேண்டும். அங்ஙனம் இயலுமெனில் ‘பூசணிக்காய் உடைக்கும் பணம் பட்டினியில் வாடுவோருக்கு பசியாற்றவாவது மிஞ்சும்.

அக்காலத்தில், இதுபோன்ற நிறைய விசயங்களை நல்லவை நோக்கி அவர்களின் புத்திக்கு ஏற்றவாறு சொன்ன ‘நம்ம பெரியவங்க ‘முழுக்க’ எல்லோருமே முட்டாளுமில்லை. அன்றைக்கு புரியிற மாதிரி அவ்வளோ சொன்னாங்க, நாம் இன்றைக்கும் அதையே பிடித்துத் தொங்காம சரியாக சிந்தித்து அவசியம் சார்ந்து எது தேவையோ, எது எது சரியோ அதை எடுத்துகிட்டு தவறோ அல்லது அவசியமற்றதோ இருந்தா அதை அறவே ஒழித்து, கால மாற்றங்களுக்கு ஏற்ப எதையும் யதார்த்தமாக எடுத்துக் கொள்ளும் மாற்றிக் கொள்ளும் சிந்திக்கும் மனப்பான்மையை குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுத்து, இதை இதற்காக செய்கிறோம் என்ற புரிதலோடு பிள்ளைகளை வளர்த்து வருவோமானால்; எதிர்காலத்திலாவது பெரியோர்கள் சொன்ன நல்லவைகளை எடுத்துக் கொண்டு ‘நடுவே கலந்த தீயவைகளையும் அறியாமையில் தொடரும் மூடப்பழக்கவழக்கங்களையும் கைவிட ஏதுவானதாக இருக்கும்.

அதேநேரம், எதையோ சொன்னார்களென்று நினைத்து எதைபற்றியும் சிந்திக்காமலேயே பெரியவர்களை இகழ்வதும் தவறு தான். மொத்த கடவுள் நம்பிக்கையே பொய் என்று சொல்லி அறியாமையில் இருப்போரை தெளிவுபடுத்தாமல் மொத்தமாக துண்டித்து எறிவதும் அல்லது அவர்களை அங்கிருந்து நகற்றி இன்னொரு பிரிவுணர்விற்கு உட்படுத்துவதும் வேறொரு புதிய கலாச்சாரத்திற்கு ஆட்படுத்துவதும் தவறுதான்.

நாமெல்லாம் இத்தனை சிந்திக்கும் மனப்பான்மையோடு இவ்வளவு தூரம் இங்கு வர, இங்கு வந்து நிற்க, அதற்கு மேல என்னன்னு யோசிக்க, இத்தனை வரை சரி தவறை அலசி சிந்திக்க, இவையெல்லாம் யார் மனசும் புண்படாம புரிய ‘இந்த கடவுள் உண்டுன்ற உணர்வு தேவை. ஆனால் சண்டையில்லாம தேவை. போட்டி.. பொறாமை.. தனது தான் ஒசத்தின்ற ஆணவம் இல்லாம தேவை. அதுக்கு மேலயும் என்ன இருக்குன்னு பார்க்க வேணாமா.., அதுக்கு தான் தியானம்”

“அப்படி போடு, எங்க சுத்தி எங்க வந்து எங்க போனாலும் கடைசியா தியானத்தை விடமாட்ட போலிருக்கே சாமி”

“விட முடியாதுப்பா. தியானம் பெரிது. பெரிய சக்தி மிக்க ஆயுதம் தியானம். எனக்கு தியானத்தால தான் இத்தனை விளங்குச்சின்னு அடிக்கடி நினைத்துக் கொள்வேன். தியானத்தின் பலன் உள்ளே ஊறி என்னை வலிமை படுத்தும்போதும் ஆனந்தப் படுத்தும் போதும், கடவுளின் மீதான வெறி விலகி தனை மறந்த அன்பும் நன்றியும் தானே உள்ளே மிகுந்துவிடும், கடவுள்; பெரிய புனிதம் திருமேனியா..”

“வேற, அவுர்தான் சாமி எல்லாம், கடவுள் இல்லாம ஒரு அணு அசையுமா???”

“அசையாது தான் அப்பா. எனக்கு எல்லாமே கடவுள் தான், எனக்கு நடக்கும் நன்மைகளுக்கான காரணத்தை கடவுளின் செயலென்று எண்ணிக் கொள்வேன். தவறிற்கு காரணம் நானாகவே இருப்பேனென்று என்னையே ஆராய்ந்து திருத்தமுயல்வேன். கடவுள் தான் என்னை மறைமுகமாக வளர்த்த அம்மையப்பன் மாதிரி.

அழுவதென்றால் கூட தனியே அமர்ந்து இறைவான்னு அவரிடம் சொல்லி அழுதா தான் மனசு இலகுவாகும். ஆனாலும், நாம இங்க பேசறது வேற. கடவுள் இல்லைன்னு நாம பேசல. இதலாம் மட்டுமே கடவுள் இல்லைன்னு தான் பேசுறோம்”

“புரியுது சாமி.., அதான் இவ்ளோ………….. நீட்டா………. சொன்னியே” திருமேனியனை தாண்டி அமர்ந்திருந்தவர் தலையை எட்டிப் பார்த்து சொன்னார்.

“சரி, அப்போ எது கடவுள்?” மாலன் அவர்களை பார்த்து கேட்டார்.

“அதையும் நீ தான் சொல்லணும். அதான் எதுமே இல்லன்னியே!!!!?”

“இல்ல இல்ல.., எதுவுமே இல்லைன்னு சொல்லல. இதலாம் ‘மட்டும்’ இல்லைன்னு சொன்னேன். முழுக்க இல்லைன்னு சொல்ற அளவுக்கு நான் பக்குவம் அடையல. கடவுள் வேணும். நம்ம போல உணருகிற அளவுக்காவது வேணும். சண்டையில்லாம, மதமென்னும் வெறி இல்லாம, பல சச்சரவு வளர்க்கும் பிறரை வருத்தும் காரண காரணிகள் இல்லாம, ஒருவரை ஒருவர் வெட்டி மாளும் போர் இல்லாம ‘கடவுளை புகட்டும் பாடம்’ கண்டிப்பா வேணும்”

“புதுசா கண்டுபுடிக்கனும்ன்றியா சாமி?”

“இருப்பதே நம்மை அழிக்கிற அளவுக்கு அதிகமா தான் இருக்கு. முடிந்தால் எல்லாத்தையும் எடுத்துடலாம். குறைத்திடலாம். அது உடனே முடியாது. அதனால புதுசா எதுவும் வேணாம், வேணும்னா இருக்கறதுல எதை வேணுமோ எடுத்து, எது சரியோ அதை எடுத்து, எந்த வழி பிறந்தோமோ அதன் படி நடந்து அவற்றுள்ளும் எதெல்லாம் தவறோ.. சரியில்லையோ.. அதையெல்லாம் விட்டுவிடலாம். அப்படி விட விட மெல்ல மதவேறியோ, தேவையெனில் மதமோ கூட தன்னால அற்று போகும்”

“அது என்ன தவறுன்னு ஒன்னு சொல்றீங்க பிறகு சரியில்லைன்னு ஒன்னு சொல்றீங்க? ரெண்டும் ஒன்னு தானே..?”

“இல்லை, எனக்கு இந்த சட்டை போதவில்லை எனில், அதை சரியான அளவில் இல்லை என்று பொருள் வை. இன்னொரு சட்டை என் உடம்பிற்கு போதும், அளவெல்லாம் சரி என்றாலும் என் உடம்பை கொச்சை படுத்திக் காண்பிக்கும் என்று வை, அது பார்ப்பவரின் கண்களை உறுத்துவது போல் உள்ளது என்று வை, அப்போ அது தவறு இல்லையா?

அப்படி நம் மதம் வழிபாடு பண்பாடு எல்லாவற்றிலுமே, சிலது சரியாக சொல்லப் படாமலும், சொல்லிய சிலது காலப் போக்கில் தவறாக திரிந்துப்போயும் விட்டது, அல்லது இக்காலத்திற்கு அது தகாததாக உள்ளது என்று வை, அவைகளை சரி செய்வதும் மாற்றி ஒழுங்கு படுத்திக் கொள்வதும், அவசியமற்றதை, தவறினை நீக்குவதும் நம் கடமை இல்லையா?”

“அப்போ மதம் ஜாதி எல்லாம் வேனும்ற?”

“ஜாதி பக்கம் போகாதே, அது வேறு. மதமே தவறுன்னா ஜாதி எப்படி தவறில்லாம இருக்கும். அன்னைக்கு செருப்பு தைக்கிறவன் மகன் செருப்பு தான் தச்சான் அவனை அடையாளப் படுத்தி படுத்தி அழித்தது நம் கொடுங்கோல் சமூகம்.

இன்னைக்கு செருப்பு தைப்பவரின் மகன் அமெரிக்காவுல பெரிய தொழிலதிபராவும், ஒரு ஊருக்கே அதிபதியாவும் வரான், மருத்துவரா இருக்கான், வழிபாட்டுல பெரிய ஆளா இருக்கான் அவனை செருப்பு தச்சவன் மகன்னு சொல்லுவியா? முடியாதுல்ல, பிறகெதுக்கு ஜாதி?”

“…………..”

“இவர்கள் இந்த தொழிலை செய்தவர்கள், இந்த தொழில் சார்ந்திருப்பதால் இவர்களின் குணநலம் சற்று இதன் அடிப்படையில் இருக்கும்னு தெரிந்து, தன் நடவடிக்கைகள் அவர்களை துன்புறுத்திவிடாமல் நடந்துக் கொள்ள, அன்னைக்கு யார் யார் என்னென்ன ஜாதின்னு தெரிந்துக் கொள்ள ஒரு தேவை இருந்தது. அல்லது அப்படி அதை வளர்த்து வைத்திருந்தார்கள் என்று சொல்லலாம்.

அதுபோல், இவன் இந்த மதத்தை சார்ந்தவன் இவனுடைய பழக்கவழக்கங்கள் இப்படி இருக்கும், இவன் அணுகுமுறை, நம்பிக்கை, வாழ்க்கை முறை, உணவு சார்பு எல்லாம் இப்படியானது என்றொரு உணர்தலை ஏற்ப்படுத்தி அவனை அதற்கேற்றார் போல் அணுக, அவருக்கு ஏற்றாற்போல் ஒத்து வாழ அன்று அவர் என்ன மதம் என்று அறிந்துக் கொள்ள தேவை இருந்தது.

ஆனால் இன்று வேண்டாம். வெல்டிங் அடிக்கிற வரையும் நான் வெல்டர், அனுபவம் கூடிட்டா போர்மேன், இன்னும் மேல படிச்சா சூப்பர்வைசர், இன்னும் ரெண்டு படி மேல போனா மேனேஜர் இல்லையா இன்றைக்கு? அப்புறமெதுக்கு ஜாதி?”

“ஆமா.. ஆமா.. “

“செருப்பு தைக்கிறவன் சக்கிலின்னா, அவன் புள்ள படிச்சி கலெக்டர் ஆயிட்டா அவனும் சக்கிளியாவானா? இன்றைக்கு இருக்கும் பல ஜாதிகள் ‘அதிகபட்சம்’ அன்றைய தொழில் ரீதியாகத் அவர்களின் வாழ்தல் சார்ந்துதான் ஆரம்பகாலத்தில் அடையாளம் காட்டப் பட்டது, பிரிக்கப் பட்டதெனில், தொழில் மாறும் போது அதுவும் மாறனும்ல? ஏன் மாறலை?

அன்றைக்கு பரம்பரை வழி தொழில்முறை இருந்தது. அப்பா செய்த தொழிலை பிள்ளை வளப் படுத்துவதும் அதன் படியே நடப்பதும் சாத்தியப் பட்டிருந்தது. எனவே இவன் இதை தான் செய்வான் என்ற ஒரு கருத்தை அழுத்தமாக எடுத்துக் கொண்டார்கள். அது மேல்மக்களை மேல்மக்களாகவும், ஏழ்மைக்குடிகளை தாழ்த்தப் பட்டவர்கலாகவும் ஆக்கிவிட ஏதுவாகி போனது. அது இன்று சாத்தியமா? இன்று ஜாதி என்பதே, இவன் அன்று அப்படி வாழ்ந்தவன் என்பதன் குறியாகி மட்டுமே போனதொழிய, அதை சார்ந்து வாழவேண்டிய அவசியம் அறுத் தானே போனது?

இன்றும் ஒரு சிக்கல் உண்டு, ஜாதி என்ற ஒரு வகைப்படுத்தப் பட்ட முறையினால் வாழ்வுமுறை அவரவர்க்கு ஏற்றார் போல் மாறிப் போனது. ஒரு சாதியினரின் வீட்டு முறைகள், ஏன் உணவு முறைகள் கூட இன்னொருவருக்கு முழுமையாக பொருந்துவதில்லை. அதையும் சரி செய்ய காதல் திருமணங்கள் அப்படிப் பட்ட ஒரு தாராளமான மனநிலையை ஏற்படுத்தும்.

இருப்பினும் காதலும் முழுமையாய் எல்லோருக்குமே செயற்கை தனமாக சாத்தியமும் இல்லை. அப்போ என்ன பண்ணலாம் எனில், ஜாதியை மெல்ல ஒழிக்கணும். ஒழியனும் என்ற எண்ணத்தை மனதில் கொண்டு காதல் திருமணங்களை அவர்களின் பொறுப்புணர்வு புரிதல் பார்த்து ஏற்றுக் கொள்ளனும்.

அல்லது பெரியோர்களால் செய்யப் படும் திருமணங்களிலும் கூட நல்ல பிள்ளைகள் பொருத்தமான குணம் நிறைந்த குடும்பங்கள் எனில் மாற்று ஜாதியில் திருமணம் செய்து சிலதை அவசியம் பொருத்து விட்டுக் கொடுத்து மாற்றிக் கொள்ளவும் செய்யலாம். அங்ஙனம் செய்கையில் பழக்கத்திற்கு ஏற்ப மனிதர்கள் அமையும் நிலை உள்ளது.

இல்லை அப்படி எப்படி உடனே மாற்றிக் கொள்ள முடியும் என்பவர்கள் வெறும் உலக போக்கிற்கு மாறுவதாக எண்ணியோ, அல்லது சந்தர்ப்பத்தால் பிற ஜாதியில் மனம் புரிந்தோ கொள்வதால், தன் பழக்கவழக்கங்களை உடனே மாற்றிக் கொள்ள இயலாமல் நிறைய மனங்கள் முறிந்துபோவதுமுண்டு. அதன் காரணம் தான், வெறி, அன்றிலிருந்து மனதில் எதற்கு ஜாதியென்றே புரிபடாமல், இது என் மக்கள்,அதெல்லாம் பிறர், பிற குலத்தை சார்ந்தவர், உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்றே கணக்குப் போட்டு வாழ்ந்து விட்டதன் வெறி. பிரித்து பிரித்து பார்த்து, மட்டம் தட்டி மட்டம் தட்டி வைத்துவிட்ட ஜாதி வெறி. தன்னை ஒசத்தியாவே வைத்துக் கொள்ளனும்னு மற்றவனை அடிமை படுத்திய வெறி.

அப்படி பார்த்தா இன்றைய நிலைமைக்கு கம்ப்யூட்டர்ல இருந்து ராக்கெட் வரையும் ஆயிரம் தொழிலுக்கு ஆயிரம் ஜாதி வந்துடுமில்லையா? அப்போ எதுக்கு ஜாதி? ஜாதியே வேணாம், அதை விடு. இப்போ ஜாதியை விட்டாதான் ‘இன்னும் கொஞ்ச நாள்ல ஜாதியை கொட்டை எழுத்துல போட்டுக்குற வெறியும் விட்டுப் போகும். அப்புறம் மதத்தையும் மத வெறியையும் எப்படி விடுறதுன்னு யோசிப்போம். இப்போ ஏன் அதுக்குள்ள ஜாதியையும் போட்டு மனுசன கொல்லனும்?

ஒருவேளை, அப்படியும், சரி ஜாதி வேணும், என் குளம் இப்படி பட்டது, நாங்கள் இப்படி எல்லாம் ஆச்சாரமானவங்க, எங்கள நாங்க பெருசா……………….. அடையாளப் படுத்திக்க வேண்டுமென்றெல்லாம் சொன்னா, அவசியப் படுறவங்க படுத்திக்கட்டும். பெருமை கொண்டாடட்டும். முடிந்தால் பிறரை சுடாமல் பாரம்பரியம் காத்துக் கொள்ளட்டும், தவறில்லை. ஆனா, வேனான்றவங்க விட்டுடலாம்ல?

அதையும் தாண்டி நீ இந்த ஜாதி, நீ இப்படி, நீ இப்படி தான் இருக்கணும், நாங்கலாம் மேல்சாதி, நாங்கள்லாம் கொட்டைபோட்டு முளைத்தோம், நாங்கள்லாம்கடவுளால ஆசிர்வதிக்கப் பட்டவங்க என்றால், அது மனிதத்தை நசுக்காதா? நசுக்கும்ல………………., அது தான் மதத்திற்கும்.

“……………….” யாரும் பேசவில்லை மாலன் சொல்வதை மட்டுமே கேட்டுத் தலையாட்டினர். தலையாட்டலில் சில நியாயங்கள் அல்லது உண்மைகள் கொள்ளப் பட்டுவிடுகிறது என்றாலும் குறுக்கே பேசி மறுப்பதிலும் வாதம் தலைதூக்கி சில உண்மைகள் நசுக்கப்படவே செய்கிறது என்று எண்ணி அவர்கள் அமைதியாக மாலனையே பார்த்து அவர் சொலவதற்கு தலையசைத்து கேட்டுக் கொண்டார்கள் அவர்கள்.

“ஆனா, இப்படி நீ தேவைன்னா வெச்சிக்கோ வேணாம்னா விட்டுடுன்னு நான் மதத்தை சொல்ல வரலை. மதம் கடவுள் பற்றி பேசுகிறது. மதம் கடவுளின் சிந்தனையை தக்க வைக்கிறது. மதம் கடவுளை நோக்கிய பயணத்திற்கு வழி கோனுகிறது. கடவுளில் முடிச்சி போடப் பட்டு வாழ்வோடு சிக்கிக் கொண்டுள்ளது மதம். எனவே, மதத்தை உடனே கைதட்டி விட்டுட முடியாது. ஆனா, மெல்ல அவிழ்த்துவிட்டுடு, அந்த அவிழ்த்தலில் எவரின் இதயங்களும் உடைந்து விட வேண்டாம் என்பதை உறுதியாக மனதில் கொள்.

அதை அவிழ்க்க முடியும் வரை மதம் சார்ந்த செயல் பாடுகள், அதாவது, எது சரி எது தவறென்று சிந்தித்து, அலசிப் பார்க்க இயலும் வரைக்கான செயல் பாடுகள் மதம் சார்ந்த நலல் சிந்தனைக்குட்பட்ட செயல்பாடுகள் இருந்துக்கட்டும். அதில் யாரும் உடைந்து போகாமல் சற்று பொருத்து, திருத்தி, திருந்தவும் வேண்டுமெனில் தியானம் வேண்டும். தியானத்திற்கு யாரையும் நிந்திக்காமல் அவரவர் வழியில் காட்டியுள்ள வழிபாடு படி அவரவர் முறைகளும் அவரவருக்கு வேண்டும்”

“திரும்ப எண்ண சாமி நீ, தியானத்திற்கு வழி பாடெல்லாம் வேண்டுமா? அப்போ சுத்தி சுத்தி மதத்திற்குள்ள தானே சாமி வருது நீ சொல்றதெல்லாம்?”

“மேலே ஏறவேண்டுமென்றால் ஏனியோ படிக்கட்டோ தேவை இல்லையா? ஏனிக்கும் படிக்கட்டிற்கும் கல் மண் இரும்பு என இன்ன பிற பொருள்களும் உழைப்பும் முயற்சியும் தேவை இல்லையா? தியானமும் ஒரு மேலேறும் வழி தான். அதையடைய வேறு சில பண்புகளும் வேண்டும் அப்பா. அந்த பண்பினை மதங்கள் மிக நன்றாக சொல்லித் தருகிறது.

நாம் தான் அவைகளை கூட விட்டுவிட்டு அவைகளுக்கு மத்தியில் இருக்கும் சில ஓட்டைகளில் மட்டுமே வீழ்ந்து போகிறோம். மதத்தை மாற்றி அமைக்கும் தவறுகளை களைந்து திருத்தியமைக்கும் பணி யாரேனும் ஒருவரால் இயலுமெனில் அவர் அதை உடனே செய்யலாம், ஆனால் ஒருவரால் நேர்ந்து விடாது மத சீர்திருத்தம். நம் மாற்றத்தில் நாளை அதுவும் மாறும்”

“அப்போ தொட்டுக்காம தொட்டுக்கனும்ற”

“ஹாங்……….. இப்போ சொன்ன பாரு, இதான் விஷயம். பெரிய ஞானமுள்ளவனப்பா நீ.., நான் இவ்வளோ தூரம் பேசுன அர்த்தத்தை இப்படி சொடீர்னு சொன்ன பாரு, நீ தான் ஞானவான். ஏன்னா எதையும் விவரமா உணராம, ஆராயாம, இப்படி தான் இது தான்னு பட்டுனு உதறிட கூடாது.

அதேநேரம் என்னன்னு தெரியாமையே அதை பெருசா கட்டிக்குனும் அழக் கூடாது. அதுலவேற அதுக்கு அவன் வாங்குற வக்காலத்துல, வேற யாரோ ரெண்டு பேரு தலையையும் சேர்த்து போட்டு உருட்டுவான்’ அதை செய்யாதே என்பது தான் என் வேண்டுகோள் அப்பா”

“சரி சாமி… ஏதோ எதேச்சையா பார்த்தோம், சரி பெரிய மனுசனாச்சே இந்தியாவுல இருந்து இவ்வளோ தூரம் வந்திருக்கியே, நாலு வார்த்தை பேசி நாலு விஷயம் தெரிந்துக் கொள்ளலாமென்று வந்தோம். அதில்லாம அன்னைக்கு நீங்க அந்த நிகழவுல பேசியதை ரொம்ப பெருசா பேசினாங்க எல்லோரும். அதான் ‘அப்படி என்னதான் பேசி இருப்பீங்களோ என்று கேட்டு தெரிந்துக் கொள்வோம்.., என்று எண்ணி தான் வந்தோம். கடைசில இப்படி ஒரு பெரிய நட்பு இவ்வளோ பெரிய மனிதரோட அன்பு, இவ்வளோ பொதுப்படையான நீதி கிடைக்கும்னு நினைக்கல சாமி”

“ஆமாங்கய்யா நாங்க கேட்க கேட்க சலிச்சிக்காம இவ்வளோ சொன்னிங்களே பெரிய உதவி தான். அது சரி, உங்களுக்கு இதான் வேலையேவா…?”

“எனக்கு என் வீட்டை சுத்தி நிறைய வேலை இருக்கு”

“இத்தனூண்டு வீட்லையா?” அவன் வீட்டை சுற்றி பார்த்தான். சிரித்துக் கொண்டே கேட்டான் திருமேனியன். அமர்ந்திருந்த நாற்காலியிலிருந்து எழுந்து நெட்டை முறித்து தன் தலைகளையும் துணிகளையும் சரி செய்தனர் எல்லோரும். மாலன் திருமேநியனின் கேள்விக்கு லேசாக புன்னகைத்துவிட்டு

“என் வீடு என்றதன் அர்த்தம் எனை சார்ந்த சமூகம் என்று பொருள். எனவே, என் வீட்டிலிருந்து சமூகம் வரை எனக்கு நிறைய வேலைகள் இருக்கிறது. அதில் யாரெல்லாம் கேட்கிறார்களோ அவர்களுக்கெல்லாம் முடிந்ததை சொல்ல முயல்கிறேன், சொல்கிறேன்.

இன்னும் சுருக்கமா சொன்னா என்னிடம் இருப்பதை கொடுக்கிறேன். யாரெல்லாம் கொடுக்கிறார்களோ அதிலிருந்து தேவையெனில், பெறத்தக்கதை மட்டும் பெற்றும்கொள்கிறேன்”

“எல்லாத்துக்கும் மலை மாதிரி விளக்கம் வைத்திருக்கிற சாமி..”

“சிந்தனைன்றது கோவில் சாப்பாடு மாதிரி, ஒருத்தர் போட்டா எல்லோரும் சாப்பிடலாம்.. இதுல என்ன போடறோம்றது தான் விசேசம்”

“சரி சாமி, நீ இவ்வளோ சொல்ற, நான் ஒன்னு கேட்டா தவற எடுத்துக்க மாட்டியே”

“நிறையதான் கேட்டியே நான் அப்படி எடுக்கவே இல்லையே”

“இல்ல நீ எல்லாமே ஒன்னு தான்ற, பிறகு எல்லாமே சாமிதான்ற, ஏற்றத் தாழ்வு எல்லாம் நலல்தில்லைன்னு எவ்ளோ சொன்னல்ல, அப்போ நான் மட்டும் உன்னை சாமி சாமின்னு கூப்பிடறேன், ஆனா நீ என்னை அப்பா அப்பான்றியே.. நீயும் என்னை சாமின்னு சொல்லலாமில்ல? அல்லது சாமின்னாவது கூப்பிடாதீங்கப்பான்னு சொல்லியிருக்கலாம்ல”

“நான் இங்க வந்திறங்கிய முதல் நாள்தொட்டு அதை தான் சொல்றேன். இங்க நாம பேசிக்கொண்டது ஒரு யதார்த்தம் சார்ந்தது. இப்போ கூட நீ கேட்காம இருந்திருந்தா கடைசியா நீங்க போகும் போது நான் சாமியெல்லாம் இல்லை, சாதாரண மனிதனாக வாழ முயற்சித்துக் கொண்டிருக்கும் ஒரு பிறவி அவ்வளவு தானென சொல்லியும் இருப்பேன். நீங்க முந்திக் கொண்டீர்கள்.

இன்னொரு வேடிக்கையற்ற உண்மையை சொல்லட்டுமா.., நீங்க என்னை சாமின்னு தானே கூப்பிட்டீங்க, நான் அதை விட பெருசா உங்களை கூப்பிடுவோமேன்னு தான் அப்பா அப்பா என்றழைத்தேன். அம்மா அப்பா ஆசானுக்கு அப்புறம் தானே அப்பா சாமியெல்லாம்.

என்னைக்கேட்டால் முதல்ல மனுஷன். மனுஷன் தான், உயிர்கள் தான் பெருசு. ஒரு சின்ன எறும்பா கூட இருக்கட்டும், அதற்கும் ஒரு உயிருக்குரிய மதிப்பிருக்கு. அசையும் மரம் செடி கொடிகளுக்கு கூட உயிரிருக்கு. அளவில் வாழ்வு முறையில் தான் வித்தியாசமே தவிர, உயிர் பொது தான். உயிருக்கப்புறம், மனுஷனுக்கப்புறம் தான் சாமியெல்லாம். நீங்கள் சாமியை விட பெரியவர்களப்பா.. அதான் அப்பா என்று அழைத்தேன்”

“நல்ல பேசுற சாமி நீ. நீ பெரிய டெக்னிக்கலான ஆளு. சரி, கடைசியா சொல்லு, சாமி கும்பிடனும், ஆனா சாமிக்காக மனுசன பிற உயிர்களை கொள்ளக் கூடாது அதானே சொல்ற”

“அப்படின்னு வெச்சிக்கலாம்”

“அதென்ன வெச்சிக்கலாம், அப்போ சுருக்கமா தெளிவா வேறெதனா சொல்லுவியா?”

“நிறைய சொல்லலாம்.. இதை பற்றியெல்லாம் பேச நிறைய இருக்கு. ஒரு நாளில் அதும் நானே தீர்வு கண்டு கூறிவிடும் விஷயங்கள் அல்ல இது. என்னால் உங்களுக்குள் ஒரு சிந்தணியை ஏற்படுத்திவிட முடியும். தீர்வு சொல்வது தவறு. ஒரு வேலை என் புரிதலில் என் அனுமானத்தில் நாளைய மாற்றம் படி தவறு இருக்கலாம். இன்றே கூட பிறருக்கு இது போதாதென்று தோன்றலாம், முழுதையும் சொல்லும் ஞானியல்ல நான், உங்களை போன்றோர் விரும்பினால் அவர்களுக்கு என் சிந்தனையை பகிர்ந்துக் கொள்ளும் ஒரு தோழமை நிறைந்தவன், வெகு சாதாரணமானவன். தெருவில் போகும் யாரோ வந்து சிரித்துவிட்டு நலமா என்றால் கூட, வணக்கம் கூறி அன்பு காட்டும் பண்பினை மட்டும் வளர்த்துக் கொள்ள விரும்புபவன். என் தொழில் என் கடமை ‘இயன்றளவு எனக்கு கீழுள்ளோரை என்னளவிற்காவது கொண்டுவருவது, அவ்வளவு தான்”

“நல்லது சாமி, மனிதர்களை மனிதர்களாக வாழவைக்க முயலும் உங்களின் இந்த ஆக்கப்பூர்வமான பணி சிறக்கட்டும். நாங்கள் விடை கொள்ளும் நேரமானது. அம்மா வேறு உங்களுக்காக காத்துள்ளார்கள். இன்னொரு தினம் சந்திக்கையில் இன்னும் பேசுமளவு சிந்தித்துக் கொண்டு வருகிறோம். இப்போதைக்கு நன்றியோடு விடை பெறுகிறோம் சாமி..”

“நல்லது சகோதரர்களே, நன்றி சொல்வதெனில், திருமேனியனுக்கே சொல்லுங்கள், அலல்து இது போன்ற பிறர் நோகாத சிந்தனைகள் சரியெனில் பிறருக்கும் சொல்லிக் கொடுப்பதைவிட பிறர் உணறுமாறு வாழ்ந்துக் காட்டுங்கள். கடைசியாக நாம் பேச வந்த தலைப்பின் சாரம் முடியும் வகையில் ஒன்றை மட்டும் சொல்லிமுடிக்கட்டுமா…?”

கேட்டுவிட்டு மாலன் அவர்களின் ஆர்வத்தை பார்த்தார்.

“……….” சொல்லென்பது போல் இருந்தது அவர்களின் பார்வையும் ஆர்வமும்.

“சாமி கும்பிடுங்க, வழிபாடு செய்யுங்க, விழா எடுங்க, எல்லாம் நடக்கலாம் தவறில்லை. அதே நேரம் நீங்க கும்பிடுவது தான் சாமியான்னு அறிவு பூர்வமா பார்த்து சிந்தித்து தெரிந்து கொள்ளனும். எதை செய்தாலும் சிந்திக்கணும். சரியா தேவையா கடைபிடிக்கலாமா, அல்லது இதோடு விட்டுவிடுவோமான்னு யோசிக்கணும். என்னதான் யோசித்தாலும் புரிந்துக் கொண்டாலும், அதை தெரியாதவர்களை இகழ்வது போலவோ, பிறருக்கு வலிப்பது போலவோ சொல்லக் கூடாது .

தன் புத்திக்கு தெரியும் வரை, முன் தெரியாத ஒன்றிற்காக குருட்டு தனமா சரி தவறு என்ற முடிவிற்கும் வரக் கூடாது. இது தான் சரி என்று தீர்மானம் கொண்டு அதற்கு யாரையும் எவரின் உணர்வுகளையும் பலியாக்கலாகாது. உயிர்களை காக்கின்ற, மனிதரை மதிக்கின்ற, யாரையும் நோகடிக்காத பண்பினை கற்றுக் கொள்ளவும், வளர்த்துக் கொள்ளவும் வேண்டும். அன்பினை மனிதர்களிடத்தில் பிற உயிர்களிடத்தில் பெருக்கிக் கொள்ளல் வேண்டும். அங்ஙனம் இருப்பதன் மூலம். சாமி காலத்துக்கு தகுந்தா மாதிரி மெல்ல புரியும். எல்லாம் மெல்ல மாறும்.. சரியா?”

“சரிதாங்க சாமி, ரொம்ப நன்றி சாமி, மனித உணர்வுகளை மீறி வேறொன்றும் பெரிதில்லை என்பதை புரிந்தோம், அதேநேரம் மனித உயிர்களை போற்றும் மனதினை, அன்பு சுரக்கும் ஆனவமற்ற குணத்தினை, நல்ல பழக்கவழக்கங்களை கடவுள் நம்பிக்கையும், பாகுபாடு பார்க்காமல் படித்தறிந்துக் கொள்ளும், அரவணைத்துக் கொள்ளும் போது ஆன்மிகமும் தருமென்று புரிந்தோம்”

“ஆம், அது போதுமப்பா.., மிக சரியாக புரிந்துக் கொண்டீர்கள்..”

“ரொம்ப ரொம்ப நன்றிங்க சாமி…” எல்லோருமே கைகூப்பி விடைபெற ஆயத்தமானார்கள்

“எனக்கு எதற்கு நன்றி, நன்றிகளை கடவுளுக்கு தெரிவியுங்கள். யார் யாருக்கு என்னென்ன எப்பொழுது தரப்பட வேண்டுமோ அப்பொழுது அவனால் அது தரப் படுகிறது. அல்லது அவரவர் தேவை படி எண்ணத்தின் படி அவரவரால் அது பெறப்படுகிறது. என்னை பொருத்தவரை, தரப் படுகிறதென்பது எனது நம்பிக்கை. அவ்வளவு தான். அந்த நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள தியானம் ஒரு மனிதனின் அளப்பறியா சக்தி”

“சரி தியானத்தை பத்தி சுருக்கமா ஒன்னு சொல்லுங்களேன் சாமி” ஒருவர் மட்டும் கேட்க இன்னொருவர் உடன் சேர்ந்து “தியானம் பண்ணா சக்தி வருமா சாமி? யாருக்குன்னா அப்படி வந்திருக்கா?” என்றார்.

“அதை பற்றி பேச ஏராளம் இருக்கிறது. நேரம் போதாது. எங்களுக்கும் ஊருக்குப் போக ஆயத்தமாகும் பணிகள் உண்டு, மன்னியுங்கள், இத தேசம் எனக்கான ஒரு நெருக்கத்தை எனக்குள் உணர்த்துகிறது. நாம் மீண்டும் சந்திப்போம். அப்போது பேசுவோம். சுருக்கமா தியானம்னா, ஒரு மனித சக்தி கூட்டும் பயிற்சி. நம்பிக்கையோடு செய்வதன் மூலம் கடவுளை உணர்த்தும் ஒரு நிலை, தியான நிலை. தியானத்தை ஒழுங்குற தொடர்ந்து செய்வதன் மூலம், நேரம் அதிகப் படுத்திக் கொள்வதன் மூலம், ஆழ்நிலை கைகூடுவதன் மூலம், மனசு ஒருமுகப் பட்டு மான அமைதி கொள்வதன் மூலம் உலகின் அத்தனை சூழ்சுமமும் புரியலாம். தியானத்தினால் எத்தகைய சக்திகளையும் அடையலாம், அத்தகு கட்டுப் பாடும், புத்திக் குவியலும், மன ஒருநிலை பாடும் தான் அவசியம்”

“அப்படியா…….”

“ஆனால், நாமெல்லாம் ஆரம்பத்தில் அத்தனை கடுமையாக செய்யவேண்டியது ஒன்றுமில்லை. சற்று கூடுதல் முறை ஆரம்பத்தில் அவசியமில்லை. என்றாலும், வாழ்கைக்கெனவும் தியானம் கை கொடுக்கிறது. சுருங்க சொல்வதென்றால் ‘எண்ணியதை எண்ணிய படி அடையும் தன்மையை அல்லது உங்கள் மனதின் உடலின் தேவைக்கான வேதியல் மாற்றத்தினை தியானம் ஏற்படுத்துகிறது, அதற்கான உறுதியை தியானம் தருகிறது. அதற்கான சூழ்நிலையையும் தியானம் ஏற்படுத்துகிறது’ என்று சொல்லி பெரியவர் முடிக்க, வெளியிருந்து விடுதியை சார்ந்த ஒருவர் வந்து அவரை வேறு யாரோ ஒருவர் சந்திக்க வந்துள்ளதாக அழைக்க, திருமேனியன் மற்றும் உடன் வந்தவர்களும் வணக்கம் கூறி, நன்றியறிவித்து விடை பெற்றார்கள்.

அவர்களிடம் பேச இருந்த மீதமான எண்ணக் குவியல்கள் மாலனுக்குள் மீண்டும் சிறகு விரிக்க அவைகளை அசைபோட்டவாறு எழுந்து வெளியே போனார்.. மாலன்.

அவரை நோக்கி அவர் எதிர்பாராத ஒரு சம்பவம் வந்து அவரை மொரிசியசிலேயே நிறுத்திவைக்க இருப்பதை அவர் உணர்ந்திட வில்லை. அது என்ன ஆபத்து அந்த ஆபத்து யார் உயிரை எடுத்துக் கொள்ள வருகிறது என்பதை பார்ப்போம்..

————————————————————————————————

னி கடவுள் மதம் தியானம் ஜாதி என்பதையெல்லாம் கடந்து, இனம் காதல் காமம் வாழ்க்கை குணம் மனிதர்கள் என – காற்றின் ஓசை – தொடரும்..

Posted in காற்றின் ஓசை - நாவல் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

காற்றின் ஓசை (14) சாமியும் ஜாதியும்; தியானமும் மதமும்!!

இதற்கு முன் நடந்தது..

வாழ்வின் அனுபவங்களின் முக்கிய கூறுகளை, ஆரோக்கியமான சிந்தனைகளை பிறரிடம் பகிர்ந்துகொள்ளும் அக்கரையில் நீள்கிறது எனக்கான பயணம் திருமேனியா.

சுவற்றில் அடிக்கும் ஆணி போல் என் எண்ணங்களை உங்களுக்குள் குத்தி ஆழப் பதியவைக்க எண்ணவில்லை. அதே சுவற்றில் பூசும் ஒரு புதிய வண்ணத்தினை போல் ஒரு ஒத்திகைக்கு என் எழுத்தினை காட்டுகிறேன். இல்லை இல்லை இது சரியில்லை இது வேண்டாம் இது அத்தனை நல்லதில்லை யென்று நினைத்தால்; அதை அகற்றிக் கொள்வதும், அதைவிட நல்ல வண்ணங்களை பூசி உங்களை மிளிரச் செய்துக் கொள்வதும் உங்கள் திறன் மட்டுமே.

காரணம், யார் ஒருவர் சொன்னதையும் முழு பாடமாக எடுக்காமல், எனது சிந்தனைக்குட்பட்டதையே என் படைப்பாக பகிர்ந்து கொள்கிறேன். அது எத்தனை சரி என்பதற்கு என் வாழ்வின் வெற்றிகள் சாட்சியாயினும், அதை எடுத்துக் கொள்ளும் நிராகரிக்கும் பொருப்பு உங்களை சார்ந்ததே.

இங்கு இன்று தியானத்தை பற்றி சொல்லும் முன், ஒரு முக்கிய விடயத்தை சொல்லிவிடுகிறேன். கடவுளை பக்தியோடு வணங்கும் பலரில் சிலர் ஏனோ பெரியார் என்றாலே கைசுட்டுவிட்டது போல் பார்க்கிறார்கள், கண்டிருப்பீர்கள் நீங்களும்..” மாலன் அவர்களை பார்த்து கேட்கிறார்.

அவர்கள் “ஆம், அவர் தான் கடவுளையே கும்பிடாதே என்றாராமே..?!!”

“சொன்னாராம்.., எனை கேட்டால், முற்றிலும் மனிதத்தை முன்னிறுத்தவே எண்ணினார் பெரியார் என்பேன். அதற்கு கடவுள் மறுப்பினை அந்நாளிற்கான அல்லது அவருக்கு உகந்தது போல் ஒரு ஆயுதமாக பயன்படுத்திக் கொண்டார். ஆனால் அவரின் நோக்கம் கடவுளை இல்லை என்று முற்றிலும் மறுப்பதற்கானது மட்டுமல்ல, அதை வைத்து இம்மூடப் பழவழக்கத்தை ஒழித்து அழிந்து வரும் மனிதத்தை எப்படியேனும் நிலைநிறுத்திட வேண்டும் என்பது தான்’ என்று நான் எண்ணுகிறேன்.

இன்றைய நிலைக்கு நமக்கே நாம் காணும் விஷயங்களில் பல நம் அறிவை உறுத்துகையில் ஐம்பது வருடம் முன் இருந்த நிலை என்னவாக இருந்திருக்கும்? அதிகம் வேண்டாம், இப்போது கணிசமாக குறைந்துள்ள உயிர்பலியிடல் முறையை பாருங்கள், தன் வேண்டுதலை நிறைவேற்ற ‘பிற உயிரை கொல்லும் அச்செயல் எவ்விதத்தில் நியாயமானது?

மனிதற்குள் தாழ்ந்தவன் உயர்ந்தவன் என ஒதுக்கி ஒரு மனித குலத்தையே பல ஆண்டுக்கு பின்தள்ளி வைத்துவிட்டது தவறில்லையா..? கூனி குறுகி இன்னொரு மனிதன் எனக்கு கைகட்டி நிற்க வேண்டும் என்று எண்ணுவது எவ்விதத்தில் சரியாகும்? அவரவர் தாய்தந்தையை தொழாத கரங்கள் என் காலில் விழுந்து வணங்குவது எப்படி சரியாகும்?

ஊரெல்லாம் சுத்தம் செய்யும் வேலையில் உள்ளவர் சற்று அழுக்கடைந்திருக்கலாம், அதற்காக அவருக்கு பின் வரும் அவர் தலைமுறையும் நாற்றமுடையவர்கள் தான் அல்லது அதை செய்யத் தான் அவர்கள் தகுதியுடையவர்கள் என்று ஒரு குலத்தையே ‘ஒரு பிரிவினராக ஒதுக்கி தாழ்த்தி வைப்பது எந்த விதத்தில் நியாயமாகும்?

இன்றைய இந்த குறுகியகால அசூர வளர்ச்சியில் பெண்களின் பங்கு அதிகம் இருப்பது நமக்கு எத்தனை பலம்? அதை அன்றெல்லாம் இந்தளவிற்கு இல்லாமல் இழந்துதான் இருந்தோம். ஆண்பெண் உடலால் பிறப்பால் மாறுபட்ட இரு இனமாக இருக்கலாம் அதற்காக அவர்களை ஒன்றன்கீழ் ஒன்றாக வைத்து ஒருசாராரை தன் காலுக்கடியில் அமரவைப்பது இயற்கைக்கே மறுப்பானதில்லையா?

அதேநேரம் பெண் விடுதலை எனும் போக்கில் முற்றிலும் பண்பிழந்த நிலையினை பெண்கள் சிலர் அடைவதும், அதை சரியா தவறா என்று யோசிக்காமலே பொழுதுபோக்க நினைத்து செய்யும் வாதமும், இவ்வாதத்தை வைத்து பிழைப்பு நடத்தும் ஒருசிலரின் வக்கிரசெயலும் வாழ்வின் நல்ல நிலைக்கு பொருந்துமா எனில், இல்லை என்பதை நிறைய பேர் ஏற்ப்படுமில்லை..,

என்றாலும்,

மனைவி இறந்த மறுநாளே திருமணம் செய்துக் கொள்ளும் ஆணின் உணர்வுகள்; அதே இன்னொரு பெண்ணின் கணவன் இறந்துவிட்டால் மட்டுமென்ன கழற்றி எறியவா பட்டுவிடும்? பிறகு அவளை விதவை என்று சொல்லி வாழ்க்கையை பிடுங்கிக் கொண்டதல்லாமல், நாமே அவளை பார்த்து ‘நீ எதிரே வந்தால் அமங்கலம்’ பாவம் செய்தவள்’ முண்டச்சி என்றெல்லாம் பழித்தால், ‘அது எந்த தர்மத்தில் சேரும்?

என் மதம் பெரிது என் ஜாதி பெரிதென்று இன்னும் எத்தனை மனிதரை தன் சுயநல கர்வத்திற்கும் கௌரவத்திற்கும் நாம் கொல்லப் போகிறோமோ? வாழ்வின் திசை தெரியாப் பறைவகளாக பறக்கும் நமக்கு உண்மை எதென்று தெரியும் முன்னே இத்தனை பாகுபாடும் மனிதகுல ஒழிப்பு செயலும் ஏனோ???!!

வாஸ்து, செவ்வாய் தோஷம், திருமண ராசி இல்லை, நேரம் சரியில்லை, ராகு பிடிக்கும், சனியன் பிடிக்கும், சாமி கண்ணை குத்தும், தீட்டு படும், கண்பட்டு போகும்…. வலதுகால் எடுத்து வை, இடது கை இழுக்கு இப்படி இன்னும் எத்தனை எத்தனையை சொல்லி நம்மை நாம் பின்னுக்கு தள்ளிக் கொள்ளப் போகிறோமோ???

சாமியார் வேஷம், கடவுள் பெயரில் சூழ்ச்சி, மதவெறி, ஜாதிவெறி, மூடப் பழக்கம், பெண்ணடிமை, தீண்டாமை இதலாம் இன்னமும் தவறேயில்லையா? தவறெனில் அதை திருத்திக்கொள்ளும் பொறுப்பும் நமக்குரியதே இல்லையா???

ஆம் எனில் அதைத்தானே பெரியார் நமக்கும் உணர்த்த முயன்றார்?

என்னடா இவன், தியானம் பற்றி சொல்றேன்னு சொல்லிட்டு திடீர்னு பெரியார் பற்றி கேட்கிறானே என்று பார்க்கிறீர்களா திருமேனியா..?”

“எதனா காரணத்தோட தான் சொல்லுவீங்கன்னு தெரியுமே, சொல்லுங்க சாமி”

“காரணமுண்டு, நாம் தியானம் சாமி கடவுள்னு எல்லாம் பேசறதால திரும்ப நம்பிக்கையெனும் பெயர்ல வேறேதேனும் பல மூட தனத்தில் சிக்கிவிடக் கூடாதில்லையா.., அதனாலதான் இதையும் சேர்த்து சொல்றது. ஒரு ஆண்டிபயோடிக் மாதிரி”

“ஆண்டி!!!!!!!!!!!!!!!!????????????”

“ஏண்டிபயோடிக். நோய் தடுப்பு மருந்து மாதிரி, வரும் முன் காப்போம்னுவோமே அது. ஏன்னா, பக்தின்றது தன்னை மேன்மைபடுத்திக்க தானே யொழிய, பிறரை வருத்தவோ துன்புறுத்தவோ பிறருக்கு நம்மால் தொந்தரவினை ஏற்படுத்துவதற்காகவோ இல்லை, இல்லையா?”

“சரிங்க சாமி..”

“மேல பேசுன்றியா??”

“இல்ல புறப்படும் நேரமாச்சி சாமி”

“சரி தியனாம் பத்தி சொல்லிடறேன், தியானம் பற்றி பேசணும்னா, பெருசா ஒண்ணுமில்ல, உன் விருப்ப தெய்வத்தை மனதில் நினைத்து, அந்த கடவுள் எனும் சக்திக்கு தான் முழுவதும் சரணடைவதாக ஏற்று, அந்த சக்தியை மையப் படுத்திய சிந்தனையோடு, வேறு குழப்பங்களோ அல்லது வேறு எதை பற்றியான சிந்தனையோ இன்றி, அமைதியாய் அமர்ந்து ‘நெற்றியின் நடுமத்திக்கு பார்வையை செலுத்தி, ஆழ அதையே உற்றுநோக்கி, சுவாசத்தை சீராக்கி, சீரான சுவாசத்தை கவனித்து, நேராக பத்மாசனத்தில் அல்லது ஏதேனும் ஒரு நேராக இருக்கத் தக்க நிலையில் இருந்து, ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு வேறெந்த எண்ணம் பற்றியும் சிந்திக்காமல், முழு இறைபக்தியோடு அமர்வது தான், மீண்டும் மீண்டும் கடவுளின் நாமம் சொல்லி தன்னை மறப்பது தான் தியானம்.

அதாவது, கண்களை நேராக பார்த்தவாறு மூடி, கடவுளின் நாமத்தை மனதிற்குள்ளேயே உச்சரித்தாலும் உதடு அசைய அசைய அதை காதால் கேட்பது போல் உச்சரிகையில் மனது சற்று எளிதாக குவிவதை காணலாம். உதாரனத்திக்று ‘ஓம் நாம சிவாய’ என மனதிற்குள் அழைப்பதை, உதடுகள் அசைய உச்சரித்து  அதை காதால்  கேட்பது போல், புத்தியில் அந்த சப்தத்தை மட்டும் கவனிப்பது போல் தொடர்ந்து உச்சாடனம் செய்ய, மற்றவை, விரைவில் விலகி, மனது தானே  தியானத்தில் குவியும்.

இதை, ஒரு நாளைக்கு இரண்டு வேலையும் செய்வது நல்லது, அதிலும் குறைந்தது இருபது நிமிடமாவது செய்யலாம். நான் காலையும் மாலையும் அரை மணி நேரம் செய்வேன்.

“இவ்வளோ தானா தியானம்????”

“இல்லை அப்பா, இது செய்ய செய்ய பிறகு நீயே புரிந்துக் கொள்வாய் தியானம் என்றால் என்னவென்று. அது நீ செய்ய செய்ய தானே உன்னை உள்ளிழுத்துக் கொள்ளும். இதில் இன்னும் நிறைய இருக்கு, ஆனாலும் ஆரம்பத்திற்கு இது போதும்.

பொதுவாக தியானம் பழகும் போது, ஒரு குருவை வைத்து பழகுவது தான் சிறந்த முறை என்பார்கள். ஆனால், எல்லோருமே குருவை எதிர்பார்த்திருந்தால் பிறகு எல்லோருக்கும் அல்லது எல்லா இடத்திலும் தியானம் சாத்தியமாகாது இல்லையா? அதனால ஒரு ஆரம்ப பயிற்சி மாதிரி இம்முறைய செய்யலாம். தியானத்தில் பல சிறப்பு இருக்கு அதுல ஒன்னு என்னன்னா ‘நீங்க முதல்ல தியானம் செய்ய ஆரம்பித்தாலே போதும், மீதியை அது எவ்விதம் சரி என்று தானே உங்களுக்குப் புரியவைக்குமாறு தான் அடுத்த எல்லாம் நிகழ்வுகளுமே அமையும்”

அதிலும் இன்றைய நிலையில் பார்த்தால் தியானம் பற்றி பலவாறு பல பேச்சு உள்ளது. தியானத்தை குருமார்களே கூட பல வகையில் அவரவருக்கு ஏற்றது போல அவரவர் முறையில் கூறியுள்ளனர். எது எப்படியாயினும், இதை ஒரு பக்தி சார்ந்த பயிற்சி போல எண்ணி ஒரு நாலு நாள் தொடர்ந்து தியானம் பண்ண அமர்ந்துட்டா போதும், மீதி நாள் தானாக கைகூடும்.

என்னஒன்னு, அடுத்தநாள் தியானம் செய்துவிட்டு எழுந்திருக்கும் போது தன்னை ஒரு பெரிய சாமியார் போல நீனைத்துக் கொண்டு, வாயிலிருந்து லிங்கம் கக்கலாமா, பொண்ணுங்க மத்தியில் சூ மந்திரக் காலின்னு சொல்லி பூ எடுத்து தரலாமான்னு எல்லாம் எண்ணம் வந்துடக் கூடாது.

தியானம் மனிதன் தன்னை நேர்த்திப் படுத்திக் கொள்ள விழையும்போது, அது மேலும் மனிதனுக்கு அதற்கான கூடுதல் சக்தியை தருகிறது’ என்பது என் நம்பிக்கை. அதை நம் முன்னோரும் பலர் பலவாறு வலியுறுத்தியும் உள்ளார்கள்.

என்னை பொருத்தவரை, தியானத்தை விளக்கேத்தி வைத்து அதன் சுவாலை பார்த்து, பார்த்தவாறே கண்மூடி, ஓம் நம சிவாய  என்று சொல்லியோ, அல்லது தேவாலயத்துக்கு போயி முட்டிப் போட்டு கர்த்தாவே கர்த்தாவே என்று தியாநித்தோ, மசூதியில் அமர்ந்து சுபான் அல்லா  சொல்லியோ  எப்படி வேணும்னாலும் சொல்லிக்கலாம், சொல்லிக்கோ; அது தப்பில்ல. ஆனால், எழுந்து வரும் போது எல்லாம் மீறிய சக்தியை உணர்ந்த திருப்தியோட மட்டும் எழுந்திரு. இதெல்லாம் தாண்டி மனிதன் பெரிதென்ற உணர்வோட எழுந்திரு. பிற மதத்தினரை பாக்கும்போது ‘அவனும் பாவம் நம்மலை மாதிரி தானே கடவுளை தேடி அலையறான்ற’ பொது மதநல்லிணக்க சிந்தனையோட எழுந்திரு. எல்லாம் மதமும் கடவுளை காட்டும் வழி மட்டுமென்ற புரிதலோட மட்டும் எழுந்திரு ‘அது தான் முக்கியம். இதலாம் மதவெறியை அறுக்க நமக்கு நாமே ஏற்படுத்திக்கொள்ளும் ஒரு புரிந்துணர்வு. பக்தி கூடவே இதையும் வளர்துக்கணும், அப்பதான் மனிதனை மதமின்றி மனிதனா பார்க்கமுடியும். சாமி இல்லைன்னு நான் சொல்லும் நோக்கம் கூட இவைகளை முன்வைத்துத் தான்.

“நீ சொல்றது சரி தான் சாமி.. எல்லோரும் இப்படி யோசித்தா கடவுளுக்குன்னு மனிதனும் சாவ மாட்டான், மனுசனுக்கும் கடவுள் வெறுக்காது”

“அதுதான். மனிதன் தான்.. உயிர்கள் தான் முக்கியம். அதோட, மொத்த உயிர்களோட நன்மை வேண்டி தான், மேன்மைக்கு உறுதுணையாகத் தான் இத்தனை உருவாக்கப் பட்டது. இதை மட்டும் உணர்ந்துட்டா பிறகு இதற்காக என் மதம் பெருசு, என் சாமி பெருசுன்னு சண்டை போட மாட்டல்ல? அதுக்காக யாரையும் வெட்ட மாட்டல்ல? அதுக்காக மனிதம் கொன்று திரிய மாட்டல்ல? ஆனால் நான் சொல்றதெல்லாம் பாதி கிணறு போன உத்தி தான்..
———————————————————————————————–

மீதியை பிறகு கேட்போம் – அதுவரை – காற்றின் ஓசை – தொடரும்…

Posted in காற்றின் ஓசை - நாவல் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக