காற்றின் ஓசை (11) சாமியும் ஜாதியும்; தியானமும் மதமும்!

இதற்கு முன் நடந்தது..

டவுளும் மதமும் எவ்விதம் சரியோ; மனிதனும் அவன் மனமும் எவ்விதம் சரியோ; வளர்ச்சியும் மாற்றமும் எவ்விதம் சரியோ; வாழ்தலும் வரலாறும் எவ்விதம் சரியோ; எது சரி எது தவறாயினும் எனக்கு என் சோறும் என் தூக்கமும் என் வேலையும் என் வெற்றிகளுமே பெரிதாக தெரிகையில் என் பிறந்ததின் நோக்கம் வெறும் இறப்பை அடைவது மட்டுமேவா???

எதை பற்றியுமே விடைகாணாத வாழ்க்கையை வாழும் சம மனிதர்களை செதுக்க எடுத்த உளியில் என்னை நான் செதுக்கியுள்ள தூரத்தை எத்தனை பேருக்கு காட்டவோ? எல்லோருக்கும் எனை காட்டுவதன் மூலம் என் கீழுள்ள ஒருவரையேனும் ‘எனைவிட சிறப்பாக சிந்திக்கவும் வாழ்விக்கவும் மாட்டேனா??? அப்படி ஒருவரை என்னால் செய்யமுடியுமெனில் அது என் மகன் மகளாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை; யாரேனும் ஒரு வாழ்வினாதாரம் புரியாத ஒரு சாமானியராக இருக்கட்டும். அந்த சாமானியருக்கான பயணமாக ‘என் உயிர்ப்பு’ என் எழுதுகோலிலும் என் பேச்சிலும் என் வாழ்வின் ஒவ்வொரு நகர்தலிலும் வலித்தேனும் சொட்டட்டும்…” என்றெல்லாம் படுத்துக் கொண்டு மேல்கூரை பார்த்து யோசித்துக் கொண்டிருந்த மாலன் கடிகாரத்தின் க்ளிங் க்ளிங் சப்தம் கேட்டு நிமிர்ந்து பார்க்கிறார்.. ஜன்னலில் மூடிய கண்ணாடி கதவை துளைத்து பீரிட்ட சூரிய வெளிச்சம் அவர் கண்களை கூச செய்தது. எழுந்து முகம் துடைத்துக் கொண்டு மாலினியிடம் கூறிவிட்டு தலையை ஒதுக்கிக் கொண்டு சட்டை உடுத்தி வெளியே செல்கிறார்.

மாலினி அவரை பார்த்து ‘இப்பொழுது தானே படுத்தீர்கள் சற்று ஓய்வு கொள்வது தானே’ என்று கேட்க நேற்று அவர்களிடம் இந்நேரம் வெளியே காத்திருப்பதாக சொன்னேனே என்று நினைவு கூர்ந்து விட்டு, அவ்விடுதியின் வாசலில் வந்து அமர்ந்துக் கொண்டார்.

ஏதேனும் எழுதலாமென்று எண்ணி சட்டை பையில் கைவைத்து காகிதம் எடுக்கையில், அதில் நேற்றெழுதிய ‘சாமியும் சாதியும்; தியானமும் மதமும்’ என்ற தலைப்பு கண்ணில் பட, அதன் கீழே என்னவோ எழுதுகிறார்.

எழுதிக் கொண்டிருக்கையில் என்ன நினைத்தாரோ சட்டென நிமிர்ந்து தெருவை பார்க்கையில் அவர்கள் நான்கைந்து பேராக மாலனை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள்.

மாலன் அவர்களை அன்போடு வரவேற்று, வீட்டிற்குள்ளழைத்து பலகாரம் பரிமாறி சிரித்து கதைகள் பேசி அன்புக் கடலில் மூழ்கடிக்கிறார். வந்தவர்கள் நால்வரும் மிக எளிமையாகவும் ஏழ்மை தொற்றத்தையுமே கொண்டிருந்தனர்.

அவர்கள் பேசுகையில், ஏதோ ஒரு ஜமீன் வீட்டில் தோட்டவேலை செய்வதாகவும், நேற்று பேசியவரை கைகாட்டி இவர் தான் எங்களுக்கு சூப்பர்வைசர் என்றும் அவ்வப்பொழுது இவர் தான் அவர்களை ஆங்காங்கு நடக்கும் வீட்டு பூஜைகளுக்கும் கோவில்களுக்கும் கொண்டு செல்வாரென்றும், கடவுள் மேல் ஏதோ ஒரு பக்தி மிகையாக எழுந்திருப்பதாகவும் சொல்கிறார்கள்.

அதற்கிடையில் அந்த சூப்பர்வைசர் தன் பெயரை ‘திருமேனியன்’ என்று அறிமுகப் படுத்திக் கொண்டு மாலனின் இந்திய தொடர்பு விலாசத்தை கேட்டு ஒரு காகிதத்தில் எழுதித் தரச்சொல்லி கேட்கிறார். மாலன் அந்த தலைப்பெழுதிய காகிதம் எடுத்து அதன் மறுபக்கத்தில் எழுதி தர, திருமேனியன் அந்த காகிதத்தை திருப்பி அதன் மறுபக்கம் பார்த்து இதென்ன சாமி “சாமியும் ஜாதியும்; தியானமும் மதமும்” என்கிறார்.

“சாமியார்ங்க இப்படி தான் எதனா எழதி வைத்திருப்பாங்கப்பா.. போவியா” இன்னொருவர் சொல்லி என்ன ஐயா சரி தானே என்கிறார்.

அப்படியெல்லாம் நீங்களே ஏன் கற்பனை செய்துக் கொள்கிறீர்கள், ஏதேனும் காரணம் இருக்கும் “என்ன சாமி அப்படி தானே என்கிறார் திருமேனியன்.மாலனை பார்த்து.

“அதொன்னுமில்லீங்க, முன்னிரண்டு கண்டிப்பா வேணும் பின்னிரண்டு அத்தனை ஒன்றும் வேணாம், மனுசனை நோவாதளவு இருந்தா போதும் அவ்வளவு தான்” என்கிறார்.

“முன்னிரண்டுன்னா சாமியும் ஜாதியுமா?”

“சாமியும் தியானமும்”

“தியானமா!!!!!!! மூக்கப் புடிச்சிக்குனு உக்காருவாங்களே அதா?”

“அதுமாதிரி ஆனா இது வேற, இது மனசை அமைதி படுத்தறது, அறிவை ஒரே செயல் நோக்கி சிந்திக்க வைக்கிறது, எதை செய்ய எண்ணுகிறோமோ அதை நோக்கியே உறுதிகொள்ள வைக்கும் ஒரு பயிற்சி. விசேசம் என்னன்னா ‘இது செய்தா உனக்கு என்ன சக்தி வேணுமோ அந்த சக்தி கிடைக்கும்”

“அப்படியாஆஆஆ!!!!!!!! எனக்கு தியானம் பற்றி விளக்குவீங்களா?”

“தியானம் பற்றித் தானே, அதோ இருக்குல்ல “காற்றின் ஓசையி”ன்னு ஒரு புத்தகத்தகம், அது நான் எழுதியது தான் அதை எடுத்து அதோட முதல் அத்யாயம் படித்துப் பாருங்க, தியானம்னா என்னன்னு விளங்கும்”

அவர் ஓடிப போய் அந்த புத்தகம் எடுத்துப் புரட்டினார். சில பக்கங்களை நிதானமாய் படித்தார். படித்த உடனே அந்த பெரியவரிடம் வந்து

“ஏன் சாமி, அதை படித்தேனே.., அதிலொன்னும் அவ்வளவு விளக்கமாக இல்லையே”

“ஆம்; சரிதான், அதில் தியானமெனில் இதென்று சற்று அடையாளம் காட்டப் பட்டிருக்கும், மற்றபடி இன்னும் விளக்கமாக வேண்டுமெனில் நிறைய படிக்க வேண்டும்., உணர்தல் வேண்டும்., நகரும் பொழுதுகளை அசையும் பொருள்களை எல்லாம் உற்று நோக்க வேண்டும்..”

“இருங்க இருங்க இதலாம் தியானத்திற்கு தேவையா?”

“வேறு? தியானம் என்பதென்ன; அமைதியில் பலம் கொள்ள செய்வது, இருட்டிற்குள்ளிருக்கும் வெளிச்சத்தை காண வைப்பது. தியானம் என்பது எதற்கு; எத்தருணத்திலும் மாறா நடு நிலையினை ஆடைவதற்கு, யாரையும் பிற எந்த உயிரையும் நிந்திக்க செயாத எல்லாமுமாய் கலந்து போனதன் புரிதலை ஏற்படுத்திக் கொள்வதற்கு. “

“நீங்கள் சொல்றது கண்ண மூடி உட்கார்ந்து ஓம் ஓம்னு கத்துவாங்களே அது போல தவமா???”

“இல்லை ஐயா, இது ஒரு அமைதியின் ரகசியம் உணரும் கலை. கண்மூடி உலகம் பார்க்கும் விந்தை. கடவுளின் உயிர்ப்பை உணர்ந்து வெறிகளை வேரறுக்கும் உண்மை நிலை. அண்ட சராச்சரத்தின் அசைவுகளுக்கான உண்மை நிலையை அறியத் தரும் பாதை, கடவுள் யாதுமானவன் அல்லது ஏதுமற்றவன் என்ற உண்மையினை உணரும் வழி, ஜாதி மதமெல்லாம் கடந்து மனுசனை வாசனையா பார்க்கவைக்குற வித்தை “

“கடவுள் ஏதுமற்றவன்னு தெரியறதுக்கா கடவுள் பேர்சொல்லி உட்கார சொல்ற?”

“ஆம்; முள்ளை முள்ளால் எடுப்பதாக சொல்வார்களில்லையா? அப்படி”

“அதுசரி……..”

“கண்ணாடியை கண்ணாடியால் அறுப்பதில்லையா? அப்படி”

“அது சரி.. அது சரி..”

“இதை கூட நானாக சொல்லவில்லை, நமக்கு கடவுள் பற்றி அப்படி தான் சொல்லித் தரப் பட்டிருக்கு. நாம் வணங்கும் முறைகளின் எல்லை இதுவென்று தெளிந்த அறிவோடு சிந்திக்க சிந்திக்க அல்லது மீண்டும் மீண்டும் வணங்குகையில் வணங்குதலுக்கான சாரம் என்னவென்று தானே புரிந்து விடும்”

“ஓஹோ”

“புரிந்துக் கொண்டவர் ஏனோ அதிகம் வெளியில் சொல்வதில்லை, சொன்னவர் புரியும் படி சொல்லவில்லை, ஏதோ பயம் ஏதோ ஒரு சுயநலம் பல மகான்களையே ஆண்டு விட்டது. ஆனால், இப்போது தெளிவாக புரிந்துக் கொள்ளும், சிந்திக்கும் அறிவை மனிதர் பெற்றுவிட்டனர். எல்லாவற்றையும் தீர ஆலோசித்து தீர்வினை ஏற்கும் மனநிலைக்கு வந்து விட்டனர், எனவே இப்போது உணர்ந்ததை உண்மையை நேரிடையாக சொல்லலாம்”

“இரு.. இரு சாமி.., கொழப்பாத. ஒழுங்கா சொல்லு சாமி இருக்கா? இல்லையா?”

“…………….”

“இப்படி மூச்சை இழுத்து விட்டியினா???”

“ரொம்ப………… பெரிய கேள்வி. சட்டுன்னு சொல்ல முடியல. சொல்லாததுக்கு அர்த்தம் வேறெதுவுமில்ல, சொன்னா என்னை திட்டுவ, சொன்னா சிக்கல் இருக்கு, ஏன்னா சிக்கல் இல்லாம புரிந்துக் கொள்கிற பக்குவம் நிறைய பேருக்கு வந்திருக்கே தவிர, இன்னும் எல்லோருக்கும் வரல”

“எல்லோரையும் விடுங்க நீங்க என்ன சொல்ல வரீங்க அதை எங்களுக்கு சொல்லுங்க..”

“என்னை கேட்டால், இருக்குன்னு தான் சொல்வேன். நீயும் இருக்குன்னே நினைத்துக் கொள்; உனக்கும் இருக்கும்”

“அப்போ நீங்க தியானம்லாம் பன்லையா? தியானம் பண்னிணா கடவுள் இல்லைன்னு புரியும்னு சொன்னீங்களே..?”

“விளையாட்டா கேட்குறீயா திருமேனியா…?”

“இல்ல இல்ல சாமி.. உங்களிடம் போய் விளயாடுவனா.., நீங்க தானே முதல்ல சொல்லும் போது தியானம் பண்னிணா கடவுள் இல்லைன்னு புரியும்னு சொன்னீங்க….?

“பெரிய கேள்வி காரனய்யா நீ(யி). ஆனா சரியாகத் தான் கேட்குற. நான் சொல்றது எப்படின்னா நம்பிக்கை ஏற்படணும், ஓரிடத்தில் நிக்கணும், ஆனா கடவுள் பெயர் சொல்லி மனிதனை வேறுபடுத்தி பார்க்கவோ கடவுளுக்கென மனிதனை கொல்லவோ கூடாது”

“ஆமாமாம்..”

“கடவுளை தேடணும்னு சில வழிபாடு முறைகளும் புராண கதைகளும் சாமி படங்களும் பல உருவமும் என ஆயிரமாயிரம் வேறுபட்ட சாமிகள் உலகம் முழுக்க வணங்கப்படுதே.. அப்படி அது மாதிரியெல்லாம் ‘சாமி ஆயிரம் மொழி பேசி திரிய இதென்ன அத்தனை சாதாரண செயலா அப்பா? கடவுள்!!!”

“இல்ல தான், அதனால தான் அங்கங்க அடிச்சி மாள்றானுங்களே”

“இது புரிவததொன்றும் அத்தனை பெரிய விசயமில்லை, கொஞ்சம் உலகம் சுத்தி பல மக்களையும் வழிபாடுகளையும் பார்த்தோம்னா சட்டுன்னு புரிந்து போயிடும். ‘ஓஹோ இது ஒரு வழிமுறை அவ்வளவு தான்னு.அந்த வழிமுறைப்படி வரையில தெரியவரும் “ஓ இது சாமியில்லை, அதாவது இதுமட்டும் சாம்யில்லைன்னு புரியவரும். எல்லாம் அண்டசராச்சரமும் நிறைந்தவன் அவனென்று புரியவரும். பிறகு எங்கும் நிறைந்த இறைசக்தியை எதுவாக வணங்கினாலென்ன ? எதுவாக வணங்கினாலும் அந்த வணக்கத்தின் அகப்பொருளாய் அந்த இறைச் சக்தி இருப்பதை அரிய நம்மைநாம் பக்குவப்படுத்திக் கொள்ளவே தியானம் செய் என்றேன். தியானம் மட்டுமே இல்லாத கடவுளின் மீதிருக்கும் வெறியை அறுக்கவும் இருக்கும் இறைசக்தியின் மீது நம்பிக்கையை வலுக்கவும் வைக்கும்.

சைனாவுல, ஜப்பான்ல, இந்தோனோசியாவுல, தாய்லாந்துல, ஐரோப்பாவுல, ஆப்ரிக்காவுல, எகிப்துல, இந்தியாவுல, அரபு தேசங்களிலென்று உலகத்துல மொத்தம் எத்தனை எத்தனை கடவுள் மற்றும் கடவுளின் வழிபாடுகளிருக்கு தெரியுமா? எல்லோருமே தன் வழிபாடுகளை, தன் மதங்களை, தான் வணங்கும் கடவுளையே சரியென்று எண்ணுகிறார்கள். வாதாடுகிறார்கள். இதில் ஆச்சர்யம் என்னவெனில், அவரவர் தெய்வம் அவரவர்கான அருளையும் தருகிறது பார்; அது தான் நம்பிக்கியின் வெற்றி”

“அப்போ எல்லாம் சாமியும் இருக்குன்னு தானே அர்த்தம் சாமி?”

“அத்தனை சாமியும் இருந்தா சண்டை நமக்குள் அல்ல இந்நேரம் சாமிகளுக்குள் வந்திருக்கும். அது அப்படியல்ல அப்பா ‘உனக்குள்ள இருக்க கண்ணியம், ஒழுக்கம், நேர்மை, உண்மை, மனதின் அடி ஆழ அன்புதனில் எதை கண்மூடிக் கேட்டாலும், ‘அதை கொடுக்கும் திறன்’ நம் இயற்கைக்கு; இயற்கை சக்திக்கு உண்டு”

“ஓ அதுக்காகத்தான் நாம இயற்கையை வணங்குறோமா? சூரியனுக்கு சாமி கும்பிட்ற சமாச்சாரம் இது தானா?”

“ஆம்; இயற்கை தான் மாபெரும் சக்தி. அந்த இயற்கையின் சக்தி தான் நம்மையெல்லாம் ஆளும் சக்தி, அந்த இயற்கையின் சக்தி தான் நம் எல்லோருக்கும் மேலான சக்தி, அந்த இயற்கையின் சக்திக்கு பூ வைத்து, பொட்டு வைத்து, மாலை போட்டு கூட வாளும் வேலும் கையில் கொடுத்து ஆத்தான்னு கூப்பிட்டாலும் வரும் ஐயான்னு கேட்டாலும் தரும்.

நீ ஒரு மண்ணை புடிச்சு வெச்சு கும்பிட்டு பாரு, அது கூட பலன் தரும். நான் கும்பிட்டு பார்த்திருக்கேன். நம்ப பெரியவங்க முதலில் அப்படி கும்பிட்டு பார்த்தவங்க தான். அப்படி கும்பிட்டவங்க தான் நாகரீகம் வளர்ந்ததும் வண்ணப்பூச்சு தடவி, சிலை செய்து, கோவில் கட்டி, காவியம் புனைந்து, பக்தி வழியாகவும் யோகா நிலையிலும் கடவுளை வணங்கி, அதோடு நிற்காமல் மிலிட்டரி பிள்ளையார்ல இருந்து கிரிக்கெட் பிள்ளையார் வரையும் உருவாக்கிட்டாங்க”

“அப்போ அதலாம் பொய்யா?”

“பொய்யீன்னு இல்ல. உணர்தந்ததை உணர்ந்த மாதிரி சொல்லி இருக்கலாம். தன் சுய தினிப்புகளால் சொல்லவந்தவை சற்று மாறிதான் விட்டது. ஆயினும், அவர்கள் எது செய்கிறார்களோ செய்தார்களோ ‘அது அவர்களின் எண்ணத்திற்கு அறிவிற்கு எட்டிய உண்மையான நம்பிக்கை. அது ஒரு உருவேற்று முறை, அது வேறு”

“அப்போ அதுவும் சரின்ற இதுவும் சரின்றியா சாமி?”

“ஆமா, ஒரு கோணத்துல, அவுங்க பக்கமும் சரி”

“அதெப்படி நியாயம் ஒண்ணுதானே?”

“உன்னால ஒரு ஆறடி தாண்ட முடியுமா?”

“ஏன் முடியாது”

“முடியுமா????”

“முடியும்”

“எட்டடி?”

“கொஞ்சம் சிரமப் பட்டா தாண்டலாம்”

“சரி, பத்தடி?”

“சிரமம் தான்…”

“அப்போ இருபதடி?”

“அட போ சாமி நடக்கறதை பேசுவியா, பத்தடி இருபதடின்றியே, அதுக்கும் சாமிக்கும் என்ன சம்மந்தம்?”

“சொல்றேன். பத்தடி நமக்கெல்லாம் கொஞ்சம் சிரமம்னா, தூரம் தாண்டும் போட்டியில ஒரு பெண்ணால இருபத்தியிரண்டு அடிக்கு மேல தாண்டி சாதிக்க முடியுதே எப்படி?”

“அப்படி போடு சக்கைன்னானாம், விஷயம் இல்லாம கேட்க மாட்டியே!!!?”

“காரியமின்றி எதுவுமே நடப்பதில்லை அப்பா. சரி அது போகட்டும், அப்படி ஒரு பெண்ணால் மட்டும் சாதிக்க முடிவதன் காரணம் என்ன? திறமைன்னு வைத்துக் கொள்வோம், ஆனால் திறமை மட்டுமே போதாதில்லையா……? “

“வேறென்ன வேணும்?”

“எனக்கு திறமை இருக்கு, எல்லாம் வரட்டும்னு இருந்தா வருமா?”

“வராதுதான்..”

“முயற்சி வேணும். வென்று காட்ட எண்ணம் வேண்டும். அந்த எண்ணம் மனதெல்லாம் ஊற சங்கல்பம் வேண்டும். தான்டனும், வெல்லனும், சாதிக்கனும்னு இரவும் பகலும் செய்த சங்கல்பம் அந்த பெண்ணிற்கு நம்மை மீறிய ஒரு சக்தியை கொடுத்துள்ளது.

“என்ன சங்கல்பம்னு கேட்பியா…ஒரு “

“ஆமா சாமி அதென்ன சங்கல்பம்…?”

“ஒருமுகப் படுத்தும் பயிற்சி. ஒன்றையே நினைத்து, ஒன்றிலேயே சிந்தித்து, ஒன்றினை பற்றியே எண்ணம் வைத்து, தொடர்ந்து அதையே எண்ணி எண்ணி போராடி, வெற்றியை பெறுவதற்கான எண்ணத்தை தனக்குள்ளேயே துழாவி துழாவி உறுதியாக பிடித்துக் கொள்ளும் ஒரு பயிற்சி. உருவேத்தி வலுவேத்தி தனையே தன் மூலம் மாற்றிக் கொள்ளும் திறனை பெரும் வித்தை”

“அவ்வளோ முழுசா புரியலையே சாமி”

“அதாவது உடல் கூறு படி, ஆழ்மனசு மேல்மனசுன்னு புத்தியில இரண்டிருக்கு. அதுல மேல் மனசுல நினைத்து நினைத்து, பேசி பேசி, பதிய பதிய அது ஆழ்மனசுல பதியும். ஆழ்மனசுல பதிந்ததையெல்லாம் வேதியியல் மாற்றங்களால் நிறைவேற்றிக் கொள்ளும் திறத்தை, பலத்தை, தேவையை ‘உடல்’ தன்னியல்பாகவே நாளடைவில் ஏற்படுத்திக் கொள்ளும்”

“…………….”

“அதன் வெற்றியினை கண்டு கொண்டதன் பின், அது போன்ற சங்கல்ப முறைகளை மையப் படுத்தி தான் தவமும், ஜபமும், வழிபாடுகளும் நிறுவப் பட்டிருக்கலாம் என்பது ஆய்வு. அதாவது சங்கல்பம் செய்து செய்து உரு ஏற்றும் முறை என்று வைத்துக் கொள். மெல்ல மெல்ல எண்ண அலைகளால் சக்தி கூட்டிக் கொள்ளும் ஒரு முறை. இப்போ புரியுதா?”

“அட போ சாமி, அது எப்படி சங்கல்பம் பண்ணினா உடல்ல தானே வேதியியல் மாற்றத்தால பலம் வரும், உடலுக்கு தானே திறன் கிடைக்கும், உடல் தானே தேவைக்கு தகுந்தாப்புல மாறும்னீங்க, அப்புறம் தனியா நட்டு வைத்த கல்லுல எப்படி சக்தி வரும்? சிலைல.. சுவத்துல எப்படி சாமி, சாமி வரும்???”

“அங்க தான் தெளிவு வேணும் அப்பா. நிறைய தெளிவு அங்கு தான் வேணும். நமக்கும் அண்ட பெருவெளிக்கும், அந்த கடவுள்ன்ற எல்லாம் மீறிய சக்திக்கும் உள்ள நெருக்கம் அது தான். உரு ஏத்தினா சங்கல்பம் செய்தா ஒரு சக்தி வருதே எங்கிருந்து வருது? இயற்கை என்கிறோமே, இயற்கையின் காரணமென்ன? அது பிறந்த இடம், மொத்தமும் உருவான சூழ்ச்சுமம் யாது? அது தான் நம்மை நம் சக்திகளை தாண்டிய சக்தி, அதைத் தான் கடவுள் என்றிருக்கலாம் இல்லையா?”

“ஆமாவா இல்லையா நீங்க தான் சொல்லணும், நீங்க தானே ஆழ்மனசு மேல்மனசுன்னெல்லாம் சொன்னீங்க”

“ஆம்.. இல்லை.. புரிய தான் மிக்க நாளாகும் போல் அப்பா. ஆனா மற்றொரு காரணம் ரொம்ப எளிதா புரியும் என்னன்னா ‘நமக்குள்ளிருந்து வர சக்தியை தான் நாம் கல்லிலிருந்தும் அதாவது சிலையிலிருந்தும் கடவுளிருந்தும் கிடைப்பதாக எண்ணிக் கொள்கிறோம்.

“அதானே பார்த்தேன், எங்க ஆழ்மனசால கல்லுக்கும் சக்தி போச்சின்னு சொல்லப் போறீங்களோன்னு நினச்சேன்”

“நம் என்ன ஓட்டத்தால் நம் பலத்தை நம்மால் பிறர் மேல் பாய்ச்சவும் முடியும். கண் மூடி அமர்ந்து உன்னை உன் வருகையை அறிந்துக் கொள்ள முடியும். உலகின் எங்கோ ஒரு மூலையிலிருந்து தொலைபேசியில் பேசி வேறு எங்கோ ஒரு மூலைக்கு கேட்பது போல் ஒரு அலையின் வேகத்தை நமக்குள்ளும் நம்மால் ஏற்படுத்திக் கொள்ள முடியும்.

அதன் அடிப்படை சார்ந்தது தான் தவம், தியானம், சக்தி எல்லாம். ஆனால் அது உயிர்களுக்குள் மட்டுமே நிகழும் ஜடப் பொருள்களுக்குள் அல்ல. ஜடப்பொருள்களால் சக்தி எழுகிறதென்பது ஒரு நம்பிக்கைக்கான மூலம், அவ்வளவு தான். இங்கே போனால் கடவுளை வழிபடலாம் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தற கோவில் மாதிரி.

இதை கண் மூடி மனதிற்குள் வணங்கினால் கேட்டதை கேட்டவாறே கொடுத்துவிடும் என்ற நம்பிக்கையை ஏற்ப்படுத்தி, உனக்குள்ளேயே நீ பேசி, உன் பேசுதலை நீயே கேட்டு, நீ கேட்டதை உனக்குள்ளேயே பதிந்து, பதிந்தவை உன்னையே மாற்றி, உன் மாறுதல்களின் மூலம் நீ கேட்டதை உனக்குள்ளிருந்தே உன்னாலேயே நீ பெற்றுக் கொள்ளத் தான் சிலைகள் நம்பிக்கையின் ‘மூலமாக’ நிறுவப் பட்டன.

“அதாவது தன்னம்பிக்கையை நமக்குள்ளே ஏற்படுத்த தான் இந்த சிலைகள்? அந்த சிலைகளுக்கு பினாளிருக்கும் கதைகளெல்லாம் நம் புனைவு தான்றீங்க”

“ஆம்; அதிகபட்சம் அதுபோல தான். முன்பு மரத்தை வணங்கினோம், பின் வெறும் குழைத்துப் பிடித்த கல்லினை வணங்கினோம், அறிவு வளர்ந்ததும் ‘சக்தியும் புரிந்து விட்டதும் ‘அதையே சிலையாக்கினோம். இன்னும் விரிவு அடைந்ததும் வளர்ச்சிப் பெற்றதும் அதற்கு கதை வடித்து, உருவங்கள் தந்து, நம்பிக்கையை மேன்மை படுத்தி, அதை சீர் செய்ய வழிபாடுகள் அமைத்து, அதை சிலர் ஆமென்று வணங்கி, சிலர் அப்படி இல்லை இப்படி என்று மாற்றி, சிலர் இரண்டும் இல்லை எல்லாம்பொய்யென ஒதுங்கி, உண்டென்றும் இல்லையென்றும், நான் என்றும் நீ என்றும், நம்மை நாமே கொன்று கொள்கிறோம். சாமி சாமியாய்; நாம் உண்டாக்கியவாறே நின்று நம் கொலைகளை பாவமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறது. அதை தான் சூசகமா நம்ம பெரியவங்க அப்பவே இப்படியும் சொல்லுவாங்க, ‘சாமி நேரா வந்து எதையும் செய்யாது யார் மூலமாகத் தான் வரும்னுவாங்க”

“அப்போ முடிவா என்ன தான் சொல்ல வர சாமி, நெஜமா சாமியெல்லாம் இல்லைன்றியா?”

“அவசரப்படாதே. இருக்கு. இல்லாம எப்படி, உலகம் முழுக்க தானே ‘வெடிச்சோ ‘சிதறியோ ‘எப்படியோ என்றாலும், தன்னால எந்த சக்தியுமே இல்லாம உருவாகுமா? உலகின் கோடான கோடி உயிர்கள் ‘ஏதுமே இல்லாததை’ கண்ணுக்கு தெரியலைனாலும் நீ தான் கடவுள்னு எதையோ வடித்து வைத்து கும்பிடுமா அல்லது பலனில்லாம இத்தனை காலம் நம்பத் தான் செய்யுமா?”

“நீ தான் சாமி சொன்ன, கோவில்லையும் இல்ல, வழிப்பாட்லையும் இல்ல, தியானம் பண்ணாலும் இல்ல, அப்போ எங்க தான் சாமி ‘கடவுள் இருக்கு?”

“நான் சொல்வதெல்லாம் வேதமோ இறுதி முடிவோ இல்லை அப்பா. இது என் எண்ணம். என் சிந்தனை. என் அறிவிற்கு உட்பட்டது. நீ கேட்பதால் சொல்கிறேன். நீயும் சிந்தித்து பார். எது சரியோ அதை எடுத்துக் கொள்”

“அப்போ கடவுள் பத்தி..????????????”

“முதல்ல வந்து எல்லோரும்.. பசியாறுங்க.., பிறகு கடவுள் பத்தியெல்லாம் பேசலாம்..” மாலினி அப்படி சொல்லி எல்லோரையும் சாப்பிட அழைக்க, அவர்கள் மாலனை திரும்பி பார்க்கிறார்கள்

“நான் சொல்லலை சாமி தான் சொல்றாரு, முதல் நம்ம வயிறு நிரம்பி ஒரு மனிதனுக்கு வேண்டியதெல்லாம் கிடைத்து விட்டால், நீ பிறருக்கு செய்யவேண்டியதை செய்துவிட்டால், பிறகு தாராளமா சாமியை பற்றி சிந்திக்கலாமாம்.. ” மாலினி சொல்லிவிட்டு சிரித்தார், மாலனும் ஆம் என்கிறார், எல்லோரும் அமர்ந்து பசியாறுகிறார்கள்..

தமிழரின் அன்பு அங்கே பண்பாக சுவையாக உணவில் விரிகிறது.. நாமும் காற்றின் ஓசைக்குள் கடவுளின் சப்தம் கேட்க நாளை வரை காத்திருப்போம்…
————————————————————————————————————
காற்றின் ஓசை– தொடரும்..

Posted in காற்றின் ஓசை - நாவல் | Tagged , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

காற்றின் ஓசை (10) தோல்வியில் வெற்றியென்றொரு அனுபவ பாடம்..

இதற்கு முன் நடந்தது..

வாழ்வின் சவால்கள் திறமைசாலிகளால் எதிர்கொள்ளப் படுகின்றன, எல்லாம் வென்று தான் விடுவதில்லை. வெல்லாத இடத்திலிருந்து வெற்றியை நோக்கும் மனிதனுக்கு புரிகிறது ‘தான் வீழ்ந்த இடங்களும் தோற்றதற்கான காரணங்களும். தோல்வியை புறந்தள்ளி வெற்றிக் குதிரையேறி உலகம் முழுக்க சவாரி பிடிக்க அந்த தோல்வியின் அனுபவம் பின் பாடமாகிறது.

பாடங்கள் என்னவோ, ‘மாலனுக்கு எதிரே நின்று கள்ளம்கபடமற்று சிரிக்கும் ஒரு குழந்தையின் முகத்திலிருந்து கூட கிடைத்தாலும், ஒரு பெரிய வெற்றிக்கான சில தோல்விகளில் ஒன்றாகவே இச்சூழலும் அமைந்துப் போனது.

மாலன் எத்தனையோ போராடியும் மாலினியை காக்க முடிந்ததே தவிர தன்னை அத்தனை காத்துக்கொள்ள இயலவில்லை. அவர்கள் சரமாரியாக மாலனை தாக்கினார்கள். மாலனும் சற்றும் அசராமல்  போராடி அவர்களை எதிர்கொள்ளும்  தருவாயில் ஒருவன் கத்தியால் மாலனின் முதுகில் குத்தவர, அந்த ஓட்டுனர் இடையே புகுந்து ஒவ்வொருவரையாய் எவ்வளவோ தடுக்க முயல்கிறான், முடியாதபட்சத்தில்  யாரையேனும் உதவிக்கழைக்க எண்ணி தெருவின் வேறுமுனை நோக்கி  ஓடுகையில் , தெய்வாதீனமாக அந்த கூலிப் படையின் தலைவன் அந்நேரம் பார்த்து அங்கே வர, அந்த ஓட்டுனர் ஓடிச் சென்று அவனிடம்  நடந்த விசயத்தை சொல்லி, எப்படியோ சண்டை நிறுத்தப் படுகிறது. அவன் குரல் கேட்டதும் கத்தியை மடக்கி இடுப்பில் சொருகிக் கொண்டு, கூட்டம் கிளிப் பிள்ளை கூண்டிற்குள் அடைவதை போல, வண்டியிலேறி அடைந்தது.

மாலன் பெருத்த கோபம் கொண்டு ஓடி அவர்களை போகவிடாமல் மடக்கி எதிரே நின்றுக் கொண்டார். எதற்காக என்னை கொள்ள வந்தீர்கள், உங்கள் மதம் உங்களின் தலைக்கேறி விட்ட மதம், எத்தனையோ உயிர்களை குடிக்கும் ஒரு மதத்தின் வெறி ‘ஒரு மனிதனை விட பெரிதில்லையா? ம்ம்…. வாருங்கள் அடித்துக் கொன்று விடுங்கள் என்னை, என் ரத்தத்திலிருந்து இன்னும் ஆயிரம் பேர் பிறப்பார்.. ‘அவர்கள் சொல்லித் தருவார்கள் மதமென்றாலென்ன, மதம் என்பததெதற்கு, கடவுள் என்பது எதுவென்று’

மனிதம் அறுக்கத் துணியும் கூலிகளே ம்ம்… வாருங்கள் கொன்று விட்டு செல்லுங்கள் என்னை” மாலினி சென்று அவர் கைகளை பிடித்து கெஞ்சுகிறாள், போகட்டுமென்றில்லை, நீங்கள் மட்டும் கட்டளை இட்டிருப்பின், நானே அவர்களை வெட்டியிருப்பேன் ‘உங்கள் மேல் கைவைத்தபோது. நீங்களிருக்க நான் ஆடுவானேன் என்றிருந்தேன்.  ஆனால் இப்போது தான் உங்களை கண்டு கொண்டார்களே.. இனி எல்லாம் புரியும் விட்டுவிடுங்கள் என்கிறாள்.

மாலனுக்கு ஆறவில்லை, என்ன அப்படி நான் தவறு செய்துவிட்டேன் மாலினி, நல்லது தான் சொல்கிறேனென ஏன் இவர்களுக்கு புரியவில்லை. நான் இவர்கள் கடவுளை இல்லை என்று சொல்லவேயில்லையே, அதை கூட ஏன் அவரவர் விருப்பத்திற்கு ஒரு பட்சமாக எதிர்கொள்கிறீர்கள் என்று தானே கேட்கிறேன்” கத்தி பேசுகிறார் மாலன், அவர்கள் அவரை அடித்து விட்டதல்ல, அடித்ததன் ‘காரணம் வலிக்கிறது. அடிபட்டதல்ல, அடிபடவேண்டிய சூழலுக்கு ஆட்பட்ட நோக்கம் வெட்கிப் போக வைக்கிறது. அவர்களை நோக்கி மீண்டும்..

“உண்மையை தான் சொல்கிறேன், வாழ்வு எனக்கு துச்சமென்பதற்காக இல்லை, மரணம் எனக்கு பெரிதுமில்லை என்பதால் சொல்கிறேன், என் மரணம் இன்னொருவருக்கு இன்னொரு போதனையை தருமெனில் நான் இந்த நொடியில் கூட இறக்கத் தயார்.., காரணம், ஒரு ஊரை ஒரு தேசத்தினை கொல்லும், நாளைய மனிதர்களை ‘மெல்ல கடவுளில் நஞ்சு பூட்டி கொல்லப் போகும், உங்களின் மதவெறி என்னோடு போகுமெனில்; போகட்டும் எனை கொல்லுங்கள்” என்கிறார்.

இப்படி, நமக்குள்ளேயே நாம், பல காரணம் கொண்டு நம்மை பிரித்து; ஆண்டாண்டு காலமாக தன் குடும்பத்தை அவனும் அவன் குடும்பத்தை நாமும் கொன்று எரியும் வெறி என்னோடு முடியுமெனில், முடியட்டுயம் கொல்லுங்கள் என்கிறார்.

“ச்ச.., கடவுள் இப்படி இருப்பார், இவ்வழியில் போனால் கடவுளை அடையலாம், கடவுள் இவ்வாறானவராக இருக்கலாம் என்று ஞானத்தில் யூகித்து மனிதன் தன்னை சீர்படுத்தி இறையினுள் கலக்க தானே மதம் பக்தி வழிபாடென்றெல்லாம் படைத்தோம். மனிதனை மனிதன் இப்படி அறுத்துக் கொள்ளவா? மனிதனை மனிதனே வெட்டியும் குண்டிட்டும் சவங்களை குவிக்கவா? இல்லையே!!!!!!!!! பிறகெப்படி வந்ததிந்த வெறி???

சுயநலம்!!!!!!!!!!!!! சுயநலமே மனிதனுக்கு தன் மதத்தையும் தன் பிரிவையும் பெரிதாக்கி; மாற்றானை சிறிதாக்கி விட்டது.

மனிதம் மறந்து மனிதம் துறந்து ஜாதியும் மதமும் தலைவிரித்தாடும் இம்மண்ணில், மனிதனின் சுயநலத்திற்கென மனிதன் பிறரை அழிக்கும் கருவியாக மதத்தை பிரயோகிக்கும் இம்மண்ணில், நானும் மனிதனாகிப் போனது பெருங்குற்றம். ஆம் மிகப் பெரிய குற்றம், வாருங்கள், கொல்லுங்கள் எனை, தாமதமேன், எனை ஒருவனை கொன்று விட்டால் உங்களின் மூடத்தின் கண் மூடியே கிடக்கும் என்றால் கொள்ளுங்கள். ஆனால்,

ஒருகாலும் அது நடக்காது, மனிதன் சிந்திக்க துவங்கிவிட்டான், அதிலும் தமிழர் நிறையவே சிந்திக்கத் துவங்கி விட்டார்.. வா.., விட்டுசென்று எனக்கு உயிர்பிச்சையா இடுகிறாய்..? இனி நானென் தமிழருக்கு அத்தனை ஒன்றும் அவசியமில்லை கூலிகளே.. வாருங்கள்.. கொல்லுங்கள் எனை;

மக்கள் திருந்தாத இவ்உலகில் இறந்தான் மாலன் என்று போகட்டும்.. ம்ம்..” என்றவர் கத்தியடங்க, அவரின் ஆக்ரோசம் அவர் பக்கமிருக்கும் நியாயத்தையும், அவருடைய கோபத்தின் உள்நோக்கத்தையும், அவரை அடித்துவிட்டு வண்டியிலேரிய கூலியாட்களுக்கு புரியவைத்தது. அந்த கூளியாட்களின் தலைவன் அவரை பார்த்து –

“மன்னியுங்கள், எங்களிடம் இப்படி செய் என்று அனுப்பினார்கள் செய்தோம்; உங்களின் ஓட்டுனர் மிருத்யா சொல்லாது இருந்திருப்பனாயின் கொன்றும் கூட இருப்போம், அது தவறு தான் என்றாலும், உங்களின் கோபத்தை எய்தவர் மீது காட்டுங்கள். நீங்கள் சொல்லுமளவு யோசிக்காமைக்கு நாங்கள் வருந்தசெய்வதோடு மன்னிக்கவும் கோருகிறோம்” என்று பணிவு கொண்டான்.

மாலன் அவர்களிடம் நெருங்க பேசுகிறார். நிறைய பேசி நிறைய வலியுறுத்தி, அவர்களை சாட்சியாக வைத்தே நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்ய போவதாக அந்த அமைப்பிற்கு கடிதமும் அனுப்புகிறார். “மனிதமும் மென்மையும்” அமைப்பு இப்பிரச்னையை பெரிய அளவில் கொண்டுபோய், இவ்வாறு செய்ய கட்டளை இட்டவரை சாட்சிகள் வைத்து கைதுசெய்கிறது. வேறு ஒரு தேச விருந்தினரை அதும் வாழ்வியல் பேச வந்த சிறப்பு விருந்தினரை தாக்கியது குற்றம் என்று அந்த நபர் சார்ந்த அமைப்புகள் மன்னிப்பு கேட்கின்றன.

மாலனின் எண்ணங்கள் முழுதும் இக்கால சூழலில் கணிக்க தகாதவை, அவரின் நோக்கம் அவர்களை அசிங்கப் படுத்துவதோ தண்டிப்பதோ அல்ல. அதை அவரே வெளிக்காட்டும் வண்ணம்;  அவரே  சென்று தன் புகாரினை திரும்பப் பெற்று அவரை மன்னித்து விடுமாறும், மன்னிப்பதே மானுட தர்மமென்றும் வலியுறுத்த. அவர்கள் விடுவிக்கப் படுகின்றனர்.

மாலன் முழு நிறைவு கொள்கிறார். அவரின், உண்மையான சமுக அக்கறை, சுயநலமில்லா ‘மனிதர் மீதான பற்று அம்மனிதர்களை வியக்கவும் மரியாதை செய்யவும் வைக்கிறது. அவரின் எந்த செயலும், ஒரு மனித ரீதியான ஆய்வு முறைக்கானது மட்டுமே அன்றி யாரையும் துன்புறுத்த இல்லையென்று புரியவர அந்த அமைப்பினர் தன்மெச்சுதலையும் மன்னிப்பினையும் மாலனை நோக்கி முன்வைக்க அங்கே ஒரு சமரசம் முழு புரிதலோடு நிலவுகிறது.

“அப்படி என்ன தான் சாமி பேசிட்ட அந்த மேடையில?” யாரோ வேறொருவர் கேட்கிறார் மாலனை.

“சிலது பேசப் பட்டது; அது பேச்சு வாக்கில் முரணனானது. நான் சொன்ன கருத்தெல்லாம் கடவுள் பற்றிய மனிதர் பற்றிய ஒரு சமமான புரிதலை ஏற்படுத்தும் கருத்தன்றி வேறில்லையப்பா..”

“அப்படியா கடவுள் பத்தி என்ன பேசுனீங்க..”

“நாளைக்கு வா சொல்றேன்..” சிரித்துக் கொண்டார் மாலன்

“என்ன சாமி..?” இதுக்கு போயி.. அவரும் சிரித்துக் கொண்டே இழுத்தார்..

“மன்னிச்சுக்கோப்பா.. இன்று எனக்கு நிறைய செய்ய வேண்டிய வேலைகள் இருக்கிறது. என் மனைவியோடு வெளியில் வர சம்மதித்துள்ளேன். எனவே, நாளை உனக்காக நான்,  நான் தங்கியிருக்கும் விடுதியின் வாசலிலேயே காத்திருக்கிறேன், வருகிறாயா…?”

அவர் வருகிறேன் என்கிறார். மாலனும் மாலினியும் அவருக்கும் அங்கிருந்த அனைவருக்கும் கைகூப்பி வணக்கம் சொல்லி விட்டு விடை கொள்கிறார்கள்.

“ஒரு வழியா சமரசம் செய்துட்டீங்க..?” மாலினி கேட்டாள்..

“ஆம்; சமரசம்!!!!!!!!! .. வாழ்வின் ஒவ்வொரு நகர்விலும் செய்துக் கொள்ள வேண்டியதான ஒரு செயலாகித் தான் போனது  மாலினி..”

“சரி சரி.. வீட்டுக்கு கொஞ்சம் அழைத்து பாருங்களேன்.. பிளளைகளிடம் சற்று பேசுவோம்..”

“அவர்களிடம் இதலாம் சொல்லாதே..”

“என்னால் பொய் சொல்ல முடியாது.. என்னை எப்பொழுதோ கேட்டார்கள் நானும் முன்னமே எல்லாம் இப்படி யிப்படி.. ஆயி இப்படி யிப்படி.. இருக்கிறதென சொல்லி விட்டேன்..”

“வருத்தப் படப போகிறாங்க..மா..”

“படாமல்????????? மாரி அப்படி துடித்தான்.. பிறைசுடர்  அழுதேவிட்டாள் எப்படியோ சொல்லி சமாதானம் செய்தேன்.  சரி, ஆதலாம் போகட்டும் நம் பிள்ளைகள் பாவமில்லையா  மாலன்?”

“ஆம் இரண்டு பேரையுமே பிரிந்துள்ளதால் அவதி படுவார்கள்..”

“அப்போ ஒன்னு செய்வோம், நீங்களும் என்னோடு வந்து விடுங்களேன்.. இரண்டு பேருமா சேர்ந்து ஊருக்கு போவோம்..”

“அதுசரி..,  என்ன ஒரு திடீர் ஆசை..!!!!! ஒன்றுசெய் நீயும் இன்னும் ஒரு மூன்று நாளிரு, நாளைய பயணத்தை ரத்துசெய்துவிட்டு  உன் விருப்பப் படி ஒன்றாகவே  தாயகம் போவோம்,  பிறகு அங்கிருந்து நான் வேறு தேசம் போயிக் கொள்கிறேன்”

“அடுத்து எங்க போறீங்க..முடிவு செய்தாகிவிட்டதா ?”

“ஓ.., சிங்கை.. சிங்கப்பூர்..,  என் தமிழர்.. ஓரளவு நிம்மதியாய் வாழுமிடம்”

“அப்படியா..?!!!”

“அப்படி தான் கேள்வியுற்றேன்.. சென்று பார்த்தால் தானே தெரியும்.. அங்கென்ன நடக்கிறதோ..”

அவர்கள் பேசிக் கொண்டே நடக்கிறார்கள். வாகனமும் வேண்டாமென்று மறுத்துவிட்டார் மாலன். அவர்கள் அருகிலிருக்கும் கடைத்தெரு செல்வதாக சொல்லிவிட்டு காலாற நடக்கிறார்கள்.. கைகோர்த்து சிரித்து பேசுகிறார்கள். மாலன் தன் அலைபேசியில் ஊருக்கு அழைப்பு போட்டு மாலினியிடம் தருகிறார்.. பிள்ளைகளின் பாசத்தில் தாய் தந்தையின் பாசத்தில்.. கனவன் மனிவியின் அன்பில் அந்த தெருவெல்லாம் மனிதப் பூக்களாய் பூத்து, அதன் வாசம் வீசும் நிமித்தமாய், தென்றலின் சில்லென்ற காற்றெழுந்து’ மனிதனுக்கான ஒரு மெல்லிய ஓசையை உலகின் காதுகளில் ஓதத் துவங்குகிறது…

————————————————————————————————

மாலன் முழுப் பொழுதையும் மாலினியோடு கழித்துவிட்டு மறுநாள் காலை அந்த கடவுள் பற்றி கேட்ட நபருக்காய் காத்திருக்கிறார்.

சாமியும் ஜாதியும்; தியானமும் மதமுமென்ற” அன்று பேசிய அதே  தலைப்பினை தன் கையிலிருந்த காகிதத்தில் குறித்துக் கொண்டார்.

சற்று தூரத்தில் அந்த நபர் ஒரு நான்கைந்து பேரோடு வந்து கொண்டிருப்பதை அவர் அத்தனை கவனித்திடவில்லை..

————————————————————————————————

காற்றின் ஓசை – இன்னுமொரு பதிவிற்கு மட்டும் – கடவுளின் ஓசையாக – தொடரும்..

Posted in காற்றின் ஓசை - நாவல் | Tagged , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

காற்றின் ஓசை (9) குடும்பத்தின் வாச மலர்கள்..

இதற்கு முன் நடந்தது..

காக்கை குருவிகளின் எச்சத்தில் வீழ்ந்து யார் கண்ணிலும் படாமல் வளரும் மரம் போல, தானே மலரும் வாழ்வுமுண்டு. இன்னொரு புறம், வாங்கும் முன்னூறு ரூபாய்க்கு ஆறுநூறு கணக்கு போட்டும் ஆழக் கடலில் மூழ்கிய; கப்பலாய் கவிழ்ந்த குடும்பமும் உண்டு. அப்படி வாழ்க்கை; நாமொன்றாக நினைத்தாலும் அதொன்றாகவே வாழ்விக்கிறது நம்மை. மாலனின் கணக்குகளும் அதிலிருந்து மாறுபடவில்லை.

எல்லாம் அவர் எண்ணியதற்கு மாறாகவும் அதேவேளை நல்லதாகவுமே நடந்தது, அதில் ஒன்று மறுநாள் வருவதாக இருந்த அவருடைய மனைவி, ஏதோ விசா எடுப்பதில் கோளாறுகளாகி, ஒரு வாரம் கழித்தே வந்தது. பத்து நாட்களுக்கு தள்ளி வைத்த வேறு நாட்டு விழாக்களில் ஒன்று தள்ளிவைக்க இயலாமல் சொன்னது போல் இரண்டே நாட்களில் நடந்தேயாக வேண்டும் என்ற கட்டாயத்திற்குள்ளானது. அதற்கும் சம்மதம் கொடுத்து புறப்பட இருக்கையில் அவர் செல்லப் போகும் விமானம் வெடிக்கப் போவதாக அவர் மனைவி கனவு கண்டு ஓவென்று கத்தியழ, கனவின் மேல் நம்பிக்கை இல்லை அது நியுரான்களின் வேலை என்றாலும், மனைவியின் வார்த்தைக்கு கட்டுப் பட்டு போகாதிருந்ததில் அந்த விமானம் ஹைஜாக் செய்யப் பட்டு அடுத்தநாள் வேறு விமானத்தில் அவசர அவசரமாக ஐரோப்பிய நாடொன்றில் நடந்த அந் நிகழ்வில் கலந்துக் கொண்டுவிட்டு, மீண்டும் மறுநாளே மொரிசியஸில் ஒப்புக் கொண்ட கலை நிகழ்ச்சியின் காரணமாக மொரிசியஸ் வந்து ‘அங்கே பேசுகையில் கடவுள் பற்றி கேட்டு ‘கடவுள் பற்றி பேசி ‘கடவுள் பற்றி விவாதித்து ‘கடவுள் பற்றிய ‘மதம் பற்றிய முரணான கருத்துக்களை எழுப்பி, கடைசியில் மதம் பற்றிய தவறான சர்ச்சை எழ மாலன் காரணமானதாக எதிர்ப்பு கிளம்பி, அங்கிருந்த சில மதப் பேரினவாதிகளால் கலவரம் ஏற்பட்டு, எப்படியோ ஒருவழியாக சமாதானம் அடைந்தது எதிர்பார்க்காத ஒன்று தான்.

இதற்கிடையில், மதலைமுத்து சூரி தம்பதியினர் வீட்டிற்கு போக முடியாமலே போனது, இன்னும் இன்னபிற நிகழ்வுகளென்று எல்லாம் எண்ணியதற்கு எதிர்மறையாகவே நிகழ, அவைகளை எல்லாம் அசைபோட்டவாறே ‘இதோ அவரும் அவருடைய மனைவியும் அவர்கள் தங்கியுள்ள விடுதியிலிருந்து மதலைமுத்து வீடு நோக்கி சென்று கொண்டுள்ளார்கள்.

மாலனின் மனைவி மொரிசியசில் நடந்த எல்லாவற்றையும் ஓரளவாக அறிந்தவராக இருந்தாலும், இப்போது மாலனின் அருகில் அமர்ந்திருக்கையில் மாலன் மௌனமாக வருவது சற்று வேதனையை அளித்தது. மாலனின் மேல் கொண்ட அன்பின் மிகுதியில் அவரின் கைவிரல்களை கெட்டியாக பிடித்துக்கொண்டு, அவர் தோள் மீது சாய்ந்து படுத்துக்கொள்கிறார்.

“என் மேல ஏதாவது வருத்தமா?” அவருடைய மனைவி மாலினி கேட்க மௌனம் கலைகிறது..

“ச்ச..ச்ச.. அதெப்படி.. அதலாமில்லை மாலினி”

“அமைதியா வறீங்களே??!!”

“நாமொன்று நினைத்தால் அதொன்று நடக்கிறது பார்த்தாயா?”

“அது தான் வாழ்வென்று நீங்கள் தானே அடிக்கடி சொல்வீர்கள்!!”

“சொல்வேன் தான்; சொல்வதற்கும் வலிப்பதற்கும் வித்தியாசம் இருக்கில்லையா?”

“வலிக்குதா.. ? வருத்தப் படுறீங்களா?”

“நீ பாவம்ல.. அவ்வளவு தூரம் எனக்காக எப்படி தவித்து வந்திருக்கியே; பெண்கள் நம் தேசங்களில் நம் வாழ்வுகளில் தான் இவ்வளவு உயர்வாக வாழப் பழகி; தன்னையும் அர்ப்பணிக்கத் துணிகிறார்கள்”

“மரபில் ஆச்சர்யமென்ன இருக்கு மாலன்.. !!!” தனை மறந்த நாட்களில் அவரை மீறி ‘மாலன்’ என்று பெயர் சொல்லி அழைப்பது மாலினியின் ரகசிய வழக்கமாக இருந்தது.

“மரபு தான் என்றாலும்; ஏன் அப்படி ஒரு மரபு? நான் கடமை என்று வருகிறேன், நீ எனக்கென்று வந்து விடுகிறாய். நாளை மாலனின் பெயரை உலகம் சொல்லும். உன் பெயரையும் சொல்லுமா?”

“பொல்லாத உலகம்; பெயர் என்ன சொல்ல வேண்டி இருக்கு.. ஏன் இப்படி பேசுறீங்க. உங்களை சார்ந்து வாழ்வது தானே என் வாழ்க்கை.. அதை தானே நான் வாழ்கிறேன்?!!”

“யார் சொன்னது மாலினி? என்னை சார்ந்து வாழ்வதென்பது வேறு, அதேநேரம் உனக்கான அடையாளங்கள் வேண்டாமா? எனக்காக வந்து விட்டாய் சரி.. உனக்கென்றும் உள்ளே ஆசைகளும், அவைகளை தாண்டி உறவுகளும், அப்பா அம்மா குழந்தை சுற்றம் என உன்னை சார்ந்த வாழ்க்கையின் ஏக்கம் எல்லாம் உனக்குள் வலிக்காதா? அத்தனையும் போட்டுவிட்டு வருமளவிற்கு நான் மட்டும் எப்படி உனக்கு அவ்வளவு முக்கியமானேன் மாலினி?”

“சிறுபிள்ளை தனமாக இருக்கிறது மாலன் உங்கள் வினவுகள். எனக்கொன்றென்றால் நீங்கள் தவிக்க மாட்டீர்களா? ஓடி வர மாட்டீர்களா ? நமக்குள் பிரிவுபேதமென்ன?? நானென் பிள்ளைகளுக்கும்; அப்பா அம்மாவிலிருந்து எல்லாம் உறவுகளுக்கும் முக்கியம் தான்; ஆனால் உங்கள் ஒருவருக்கே நான் மட்டும் முக்கியமானேன் மாலன். அவர்களெல்லாம் நானில்லையெனில் துன்புறுவார்கள் ஆனால் வாழ்ந்துவிட இயலும். நீங்கள் வாழ்வீர்களா? எனை விட்டு இருப்பீர்களா? அப்படித் தானே நானும்..”

“மாலன் உணர்ச்சிவசப் பட்டிருக்கவேண்டும், ஆனால் இல்லை, அவருக்கு மாலினியை பற்றித் தெரியும், அவள் மனசு குணம் எண்ணம் எல்லாம் தெரியும். அவர் கவலை வேறு.. ஒரு ஆண் உலகளவில் பேசப் படுவதற்கு அவளுக்கு துணையாக இருக்கும், அன்பாக வாழ்க்கை நடத்தும், அவனை அனுசரித்துக் கொள்ளும் நிறைய பங்கு பெண்ணிற்காகவும் இருக்கிறது. ஆனால் உலகம் தன் காலக் கணக்கில் ஆணின் அல்லது அந்த ஒரு நபரின் பெயரை மட்டும் பதிந்து வைத்துக் கொள்கிறதே.

அவருக்குப் பின்னால் இருக்கும் அந்த பெண்ணிற்கான ஒரு அடையாளத்தை பெண்கள் தனக்கென ஏற்படுத்திக் கொள்ள இந்த சமுதாயம் வழி விடுவதொ அல்லது அந்த பெண்ணினை பற்றி சிந்திப்பதோ இல்லையே. எங்கோ விதி விளக்காய் சிலர் இருக்கலாம். பெரும்பாலும் வெற்றி பெற்ற ஆண்களின் துணைவியான ‘பெண்கள்; வீட்டுக் காரியாக மட்டுமே நிறைவுற்று போகிறார்களே. அவர்களை இச்சமுதாயம் எந்த கல்வெட்டில் பதிந்துக் கொள்ளுமோ’ எனும் கவலை.

மாலினி திறமை சாலி. இருவரும் ஒன்றாக சிறுவயதிலிருந்து வளர்ந்து, ஒன்றாக படித்து, கல்லூரி வரை சென்று பின் திருமணம் செய்துக் கொண்டவர்கள், என்றாலும் மாலினி மிக நல்ல படிப்பாளியும் கூட. மேலே படிப்பதை கூட மாலனை திருமணம் செய்துக் கொண்டதும் நிறுத்திக் கொண்டாள். மாலனை பற்றிய சிந்தனையும் குடும்பமுமே அவளுக்கு பெரிதாக இருந்ததை மாலனால் உணர முடிந்தது. அவள் கைகளை மீண்டும் இறுக பற்றி அவளை தன் தோள்மீது சாய்த்து அனைத்துக் கொண்டார் மாலன்.

“ஏன் அமைதியாக வருகிறீர்கள் மாலன் ஏதேதோ சிந்தனையா??? அப்படி என்னாயிற்று இந்த மக்களுக்கு, ஏன் அந்த கலைநிகழ்வில் அவ்வளவு வருத்தமா? ஏதேதோ பிரச்சனை என்று அன்று சொன்னீர்களே?”

“அது ஒன்றுமில்லை மாலினி, சிறு புரிதல் கோளாறு அல்லது சுயநலம், அவ்வளவுதான்”

“ஏன் என்னவாம் அவர்களுக்கு அவர்கள் மதம் மாதிரியே பேசனுமாமா? மாற்றமே வேண்டாமாமா? யாரும் சிந்தித்து தெளிவு பெறவே கூடாதாமா? அப்போ அவுங்க மடத்துல யாரையாவது பேச அழைத்து வந்திருக்கலாமே? உங்களை ஏன் அழைத்தார்களாம். நீங்கள் எதற்கும் அசராதீர்கள் மாலன், உங்கள் கருத்து எப்பொழுதும் சிந்தித்துணர்ந்த போது கருத்தாகவே இருக்கட்டும்.. ”

“ஆம்; யாருக்காகவும் நான் மாறப் போவதில்லை மாலினி, நான் வந்த பாதை பிறருக்கு நல் வழியாக அமையும், என் தவறுகள் பிறருக்கு பாடமாக இருக்கும். இருந்தாலும், அன்று நடந்ததை முழுதும் தவறென்றும் சொல்லிட முடியாது. நாம் சொல்வதை எல்லாம் கேட்பவர் முழுமையாக எடுத்தே ஆகவேண்டுமென்றும் இல்லை தானே?

கருத்து சுதந்திரம் என்ற இலக்கை விட்டு விலகி நாம் நம் எதிர்ப்பினை தெரிவிப்பது அநாகரீகம் இல்லையா? அவர்கள் ஒரு வட்டத்தில் இருக்கிறார்கள். அதை பாதுகாத்து வருகிறார்கள். அவர்களுக்கு அவர்களை பற்றிய கவலை..”

“அப்போ நீங்க தவறா பேசிட்டீங்களா?”

“சரி தவறு இதில் இல்லை, தேவையும் இல்லை மாலினி. அவர்களுக்கு அவர்களை பற்றிய கவலை; எனக்கு என் வருங்கால இளைஞர்களை பற்றிய கவலை. அவர்கள் ஒரு வட்டத்தில் நின்று பேசு என்கிறார்கள். நான்; உன்னை கூட வெளியே நின்று பார் என்கிறேன். இந்த முரண் தான் அங்கே நிலவிய எதிர்ப்பிற்கான காரணமானது.

கடவுள் என்ற ஒன்று புரிய இது தான் வழி என்பது அவர்களின் நோக்கம். எனக்கும் அந்த நோக்கத்தில் மறுப்பில்லை. அதனால் எதை ஒன்றையும் வலுக்கட்டாயமாக திணித்து ஒரு வெறியை உண்டாக்கி மனிதனை அறுத்துக் கொள்வதில் எனக்கு நாட்டமில்லை. அல்லது இது மட்டுமே சரி என்று சொல்லி, வேறும் சரி என்று மற்றொருவர் போராடி, ஆளாளுக்கு ‘தான் தான் சரி’ என்று தன்னை தானே மாய்த்துக் கொள்ள மதத்தை ஆயுதமாக பயன் படுத்துவார்களெனில்; அதையே நானும் எப்படி ஒப்புக் கொள்வது?

பக்தி, கடவுளை மனதில் தக்கவைத்து, மனிதரை மதிக்க, வாழ்விக்க, சொல்லித் தரவேண்டும். அதை விடுத்து, ‘இது தான், இப்படி தானென்று நின்றுவிடுவதால், இது தான் போல்; இப்படி தான் போளென்று எண்ணி அதற்காக வெட்டி மாளும் கோடான கோடி மனிதர்களை பற்றி; மாளும் உயிர்களை பற்றியிருக்கிறது எனதான கவலை, என்பதை, அவர்களுக்கு புரியவைக்க அன்றெனக்கு திராணியோ; அவர்களுக்கு அவகாசமோ இல்லாமல் போனதே பிரச்சனையின் காரணம்”

“பிறகு எடுத்து சொன்னீர்களா?”

மாலன் ஏதோ பேச வருவதற்குள்; அவர் வாயடைத்து மாலினி ஓட்டுனரை காட்டுகிறாள். அவன் இந்த ஊர்காரன் தானே ஏதும் பிரச்சனை இல்லையே என்கிறாள். இல்லை அவனை எனக்குத் தெரியும், அவன் இந்த ஊரை சேர்ந்தவன், ஆனால் தமிழ் தெரியாது, இரண்டு நாளாக என்னோடு தான் இருக்கிறான் விடு என்கிறார். அவன் ஒரு குரூர சிரிப்பை சிரித்துக் கொண்டதை அவர்கள் இருவருமே கவனிக்கவில்லை. சரி சொல்லுங்கள் என்கிறாள் மாலினி.

“அதான். சொன்னேனே; அவர்கள் கேட்டவரை சொன்னேன், முழுதாக் கேட்க அவர்களுக்கு பொறுமை இல்லை. நிகழ்ச்சியினை நிறுத்திக் கொண்டோம். இன்றைய இளைஞர்களின் போக்கில் பெரிய மாற்றமில்லாமையின் காரணம்; கடவுளில் குழப்பமும், போதிய சிந்திப்பும், சிந்திக்க வழியும் இல்லாததே என்பது என் வருத்தம் மாலினி. பசங்களை பார்க்கும் போது அவர்களின் சில மூட நம்பிக்கைகளை பார்க்கும்போது மனதில் மிகுந்த வருத்தம் எழுகிறது மாலினி.

அன்றைக்கொரு நாள் நாம் கண்டோமே ஒரு பள்ளியில் படிக்கும் மாணவனை, நினைவிருக்கா, நாள் நல்லாயில்ல, அதுல போய் பரிட்சை வந்திருக்கே, நான் எப்படியும் தோத்துப் போயிடுவேன், என்று அழுதான் ஞயாபகமிருக்கா? எத்தனை நாள் வெளியே புறப்பட்டு ராகுகாலம் எமகண்டமென்றெல்லாம் நம் மக்கள் நேரங்களை வீணடித்துக் கொண்டிருக்கிறதே; அதிலெல்லாம் மாற்றம் வேண்டாமா?

வாஸ்த்து சரியில்லை, கண் பட்டது கால் பட்டதென; மனிதர்கள் இன்னும் மூடத்தில் மூழ்கியே போகிறார்களே அது நல்லதா? நாம் நம் மூன்று பிள்ளைகளை பெற்று வளர்க்கிறோமே எப்படி வளர்க்கிறோம், நாமென்ன இப்படி பூசணிக்கா உப்பு சுத்திப் போட்டா வளர்த்தோம்; எந்த ‘திஷ்டி’ வந்து நம் பிள்ளைகளின் வளர்ச்சியை நிறுத்திவிட்டது? எந்த வாஸ்த்து நம் வீட்டின் நிம்மதியை குலைத்தது? நாம் நல்ல மகிழ்வோடு நிறைவாக தானே வாழ்கிறோம்; அந்த நிறைவினை, நம்மை நம்பி வருபவர்களுக்கு தர வேண்டாமா?

கருப்பு குற்றம், இடது கை பீடை, விதவை ராசியற்றவள் இப்படி இந்த சமுகம் இத்தனை உலக மாற்றத்திற்கு பிறகும் மூடத்தில் மூழ்கி கிடக்கும் சிக்கல்களின் மூலாதாரமாக; கடவுள், ஆச்சாரம், மதமென எதையோ ஒன்றினை சொல்லி ஏமாறுகிறதே இந்த சமூகம்; இவர்களுக்கு இன்னும் எத்தனை பெரியாரை பிறப்பித்து மாற்றத்தை உண்டாக்குவது மாலினி??? கடவுள் பக்தி வேறு, நம்பிக்கை வேறு, வெறி வேறு, மூட பழக்கவழக்கங்கள் வேறென எப்படி புரிய வைப்பது. மாற்றங்களில், மனிதன் தன் நம்பிக்கையை வளர்த்து தவறினை சரி செய்து மாறுவதே, நாகரிகத்தின், முன்னேற்றத்தின் சிறப்பில்லையா? கடவுள் கூட என்ன மனிதனை மூடமாக்கவா விரும்புவார்? உண்மையில் கடவுளே வந்து இதலாம் தவறென்று சொன்னாலும், உனக்கதலாம் புரியாதென்பார்கள் இம்மக்கள்.

உலகத்தை ஒரு சுற்று சுற்றி வந்தால், உலக வாழ்கையினை படித்து கேட்டு தெரிந்துக் கொண்டால் கடவுள் எது, மதம் எதற்கு, எல்லாம் எதுவரை தேவை என்று புரிந்துக் கொள்ள மாட்டார்களா.. ? அதன்பின் தன் சுயபுத்திக் கொண்டு சமுதாயத்திற்காகவும் தனக்காகவும் சிந்திக்க மாட்டார்களா இந்த இளைஞர்கள் என்று ஒரு கெஞ்சலான வருத்தம் எழுகிறது உள்ளே மாலினி”

“போட்டம் விடுங்கப்பா; ஓர்நாள் புரிந்துக் கொள்வார்கள். நாங்கள் புரிந்துக் கொள்ளவில்லையா, அப்படி மெல்ல புரிந்து கொள்ளுமிந்த சமுதயாமும்..”

“எனக்கு அவர்கள் என்னை புரிந்துக் கொள்ளாதது வருத்தமில்லை. இவர்களுக்குப் புரியவைபப்து போல் நான் சொல்ல இன்னும் எத்தனை காலம் பிடிக்குமோ.., இன்னும் என்னை எப்படி பக்குவப் படுத்த வேண்டுமோ, அதற்குள் நான் நானற்று போனால், என் மரணம் என் நியாயத்தை தின்று விடாதா?”

“விடுவீங்களா, நீங்கள் ஏன் இப்படி மரணமென்றெல்லாம்!!!!!!!? அதற்காக நாமென்ன காத்திருக்கவா முடியும்??? நீங்கள் சொல்ல வேண்டுவதை சொல்லுங்கள், சரியோ தவறோ அவர்கள் சிந்தித்துக் கொள்வார்கள்..”

“ம்ம்ம்.. சரியாக சொன்னாய் மாலினி. நான் உணர்ந்த வழி, நான் வந்த பாதை, என் உணர்வுகளை என் கீழுள்ளோருக்கு தரவேண்டும் என்பதே என் பொறுப்பு. சரி தான். என் கீழே உள்ளவர்களை சற்று மேலே, என்னளவிற்கு கொண்டு வந்து விட்டால் போதும். அதன்பின், என்னளவிற்கு வந்த பின்; மேலே வேறெங்கு போகவேண்டும், எது உயர்வென்று ‘அதை அவர்களே சிந்தித்தடைவார்கள்”

“அதுசரி… நீங்க விதவைன்ன உடனே தான் நினைவு வருது, அந்த ஓட்டுனர் ஒருவர் இறந்தார் இல்லையா, அவர் இந்த ஊர் காரரா அல்லது நம்ம தமிழா?”

“இந்த நாட்டுக் காரர் தான்.. பாவம் மாலினி, நல்ல மனிதர்.., ஒருவரின் வாழ்வு எப்படி விளக்கினை ப்பூ..வென்று ஊதியதாய் அணைந்துப் போகிறது பார்த்தாயா??”

“ஆமாம் மாலன் மரணம் மிகக் கொடிது.. சரி அவருக்கு ஏதாவது செய்தீர்களா..?”

“ஆம்; செய்தோம். பெரிதாக செய்தோம்; அதில் நம் பங்கும் இருப்பது மகிச்சி தான் மாலினி…. “

“அப்படியா, என்ன செய்தீர்கள், எனக்கு சொல்லவேயில்லையே..”

“வாய்ப்பில்லாமல் போனது, வந்ததும் சொல்வோமென்று இருந்தேன். நம்ம மாரியின் பெயரில் ஐ.சி.ஐ.சி ல ஒரு டெபாசிட் இருந்துதுல்ல..”

“ஆமாம், மூன்று லட்சம்..”

“அதை மாற்றி; நடந்த அதே விழாவுல அவர் மனைவியை அழைத்து எல்லோரின் முன்னும் கொடுத்து நீங்களும் இவருக்கு வேறேதேனும் செய்யலாம் என்று சொல்ல.. அவ்விழாவில் இருந்த நிறைய பேர் உதவ முன் வந்தார்கள்”

“குழந்தைகள் இருக்கா அவுங்களுக்கு??”

“ஆம், ஒரு பெண்குழந்தை. படிக்கிற வயசு தான். ஒரு ஆச்சர்யம் என்னன்னா உதவ எல்லோருக்குமே எண்ணம் உண்டு; அந்த உதவி சரியாக அவரை சென்று அடைவதில் தான் பிறரும் உதவிக் கரம் நீட்டுகிறார்கள் என்பதை அன்றும் அறிந்தேன்..”

“அது தெரிந்தது தானே.. ஒருத்தர் கொடுத்தா தான் நாலு பேருக்கு கொடுக்கவே தோணும்..”

“அப்படின்னு இல்லை, கேட்பவர் பொருத்தும், கொடுப்பவரின் நம்பிக்கை பொருத்தும், யாருக்கு, என்ன செய்கிறோம் என்பதை பொறுத்தது எல்லாம். அன்று பாரேன், நான் இப்படி சொன்னதும், இரண்டு பேர் உடனே எழுந்து அக்குழந்தை பெயரில் டெபாசிட் பண்ண காசோலை கொடுத்து, ஒருவர் முழு படிப்பு செலவினையும், ஒருவர் அந்த பெண்ணின் திருமண செலவினையும் ஏற்றது பெரிய செயல், இல்லையா”

“ஆனா என்ன தான் சொல்லுங்க அந்த மனைவி பாவம் இல்லையா? என்ன பாடு பட்டிருப்பார் அந்த பெண்? நானா இருந்தா செத்துற்றுப்பேன்..”

“நீ அசடு..”

“என்ன அசடு.. ???!!”

”நீங்களே இல்லாத உலகில் எனக்கென்ன வேலை மாலன்?”

“இந்த சிந்தனை தான் மெல்ல பலப்பட்டு ஒரு ஆண் இல்லாத உலகில் ஒரு பெண்ணுக்கு வேலையே இல்லை’ என்று ஆக்கி விட்டது மாலினி. நம்மை விடு, நம் இந்திய தேசத்தில் எத்தனை இளம்பெண்கள் கணவனை இழந்து விதவை என்ற பெயரில் சித்ரவதை அனுபவித்து வருகிறார்களே.. அதற்கெல்லாம் மூலக் காரணம், ஆண் இறந்துவிட்டால் தானும் இறந்து போகணும் அல்லது கடைசி வரை அவனையே நினைத்து வாழனும் என்று சொல்லாமல் சொல்லி வைத்த சட்டம் தானே மாலினி”

“அதுக்காக எபப்டிப்பா வாழ்ந்த வாழ்க்கையை மறந்துவிட முடியுமா?”

“ஆண்கள் எப்படி மறக்கிறார்கள்? எல்லோரும் இல்லையென்றாலும் அதிக பட்ச ஆண்கள் மறுமணம் செய்து கொள்கிறார்களே எப்படி நிகழ்கிறது? உடனே வேண்டாம் கொஞ்ச நாளில் ஏற்றுக் கொள்ளலாமில்லையா? தனித்த ஆதரவற்ற வாழ்க்கை கொடுமை மாலினி, கணவன் மனைவியை தவிர மற்றவர்கள் நாளடைவில் அவர்களின் சுய தேவையின் காரணமாக குடும்ப முடிச்சுகளின் அற்றுப் போகலாம் மாலினி. ஒரு சில குடும்பங்கள் விதிவிலக்காக இருக்கலாம், மற்றவர்களின் கதி?

முற்றிலும் வேண்டாம் என்பது வேறு, என்னால் அவளை மறக்க இயலாது என்பது வேறு. எத்தனை பேர் வாழ்வில் எதிர்பாராமல் நடக்கும் மரணம் எத்தனை பெண்களை விதவையாக்கி விடுகிறதே.. பிறகும்; இப்படி தான் வாழ்ந்தாக வேண்டுமென்ற ஒரு திணிப்பு இந்த சமூகத்தால் இன்றும் பெருமளவு நிகழ்த்தப் படுகிறதே அது தவறு தானே..?

நான் அடிக்கடி விதவை பெண்களை பற்றி நினைப்பேன் மாலினி. என்ன தான் வியாக்யானம் பேசினாலும் வயிற்றின் பசி போல் உடம்பின் பசிக்கும் நம்மில் நாம் கலக்காமல் இல்லையே, அதே அந்த பெண்களின் உடல் பசிக்கு மட்டும் ‘வெப்பத்தால் எரியும் ‘உடம்பின் ஏக்க நெருப்பு தான் மீதம் இல்லையா?”

“அந்தளவு முன்பு போல் இப்பொழுதில்லை மாலன், இருந்தாலும் இன்னும் சிலரிப்படி இருக்காங்க தான்”

“நிறைய இருக்காங்க மாலனி, நான் நிறைய பேரை பார்க்கிறேன். அவர்களின் தவிப்பை பார்க்கிறேன். அவர்களின் கண்களில் மிச்சம் வைத்துள்ள வாழ்வின் தேடுதல் அப்பட்டமாய் தெரிவதை பார்க்கிறேன்.. அவர்களுக்கெல்லாம் இந்த உலகம் என்ன நீதி வைத்திருக்கிறது? வாழும் கடைசி நாளில் தனக்கென்று ஓர் துணை இல்லாத பயம், பிறரை அன்டி வாழும் வேதனை, யார் யாருக்கோ எவஎவனுக்கோ அடங்கி வாழ்வது பாவமில்லையா? சமுதாயத்தின் அத்தனை கேளிக்கைகளுக்குள்ளும் ஒளிந்து ஒளிந்து வாழ்வது கொடுமை தானே? அதிலிருந்தெல்லாம் பெண்கள் வெளிய வரணும்னா வீட்டின் பெரியவர்கள் அவர்களுக்காக சிந்திக்கணும் மாலினி. அந்த பிஞ்சுகளின் வாழ்விற்கு பெரியவர்களின் ஒரு தெளிவான சிந்தனை தேவைப் படுகிறது மாலினி.

கணவனிடம் அன்புற்று நெருங்கி முழுதுமாக அர்ப்பணித்து வாழ்வது வேறு, இது போன்ற இடங்களில் மரணம் தான் முடிவென்று நில்லாமல் வாழ்க்கையை வாழ்வின் யாதார்த்தத்தோடு வைத்து சிந்திப்பது வேறு மாலினி..’’

“உணர்ச்சிவசப் படுறீங்களே, எனக்கு புரியுதுப்பா…, என் கதை அப்படியா? நான் அவர்கள் போலவா? நீங்கள் எப்படியோ சொல்லுங்க, உலகத்துக்கு நீங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள் மாலன், நான் ஒரு நிறைவான வாழ்க்கையை வாழ்ந்தவள், எனக்கென்று எந்த ஏக்கமோ ஆசையோ வருத்தமோ மிச்சமில்லை, வாழும் கடைசி பொழுது வரை உங்களின் நிழலில் வாழ்ந்து உங்களின் உயிராகவே போய் விட வேண்டுமென்று சொல்லி மாலினி மாலனின் தோல் பற்றி.. சாய்ந்து கண்ணீர் துளிர்த்து அவரை பார்க்க; அவர் அவளின் முழு மனஉணர்வையும் புரிந்துக் கொண்டவராக அவளையணைத்து  அவள் தலைமேல் தலைவைத்து சாய்த்துக் கொண்டார்..” அதையெல்லாம் கேட்டுக் கொண்டுவந்த ஓட்டுனர், சரர்ர்ரென வேகம் உடைத்து வண்டியை தடாரென நிறுத்தினார்.

மாலனும் மாலினியும் திடுக்கிட்டு; ஓட்டுனரை பார்க்கிறார்கள்.

மாலன் அந்த ஓட்டுனரை பார்த்து “இன்னும்போகனும் போப்பா என்கிறார் ஆங்கிலத்தில், அவன் கண்களில் கண்ணீர் பூத்து வண்டியை அனைத்து கீழிறங்கி அவர்களை நோக்கி ஓடி வருகிறான்.

ஏன்.. என்னாயிற்று என்கிறார் மாலன்..

“என்னை மன்னிக்கணும் ஐயா??”

“உனக்கு தமிழ் பேச வருமா?”

“ஆம்; மிக நன்றாக பேச வரும், நான் ஆரம்ப காலத்திலிருந்தே தமிழர் ஒருவர் வீட்டில் தான் வாகன ஓட்டியாக பணி செய்துவந்தேன். அதனால் தான் என்னை உங்களோடு அனுப்பி இருந்தார்கள், அவர்கள்.”

“எவர்கள்??!!”

மாலன் திடுக்கிட்டு கேட்க, இப்படி, இப்படிப் பட்ட ஒரு அமைப்பின் தலைவர் இவனை தமிழ் தெரியாதென்று சொல்ல சொன்னதாகவும், உங்களை தொடர்ந்து நடப்பதை தகவல் தர கட்டளை இட்டுள்ளதாகவும், இப்போது கூட போகுமிடத்தை சொல்லி விட்டு தான் வந்தேன் என்றும், இன்னும் ஒரு குறிப்பிட்ட தூரத்தில் உங்களை தாக்குவதற்கு திட்டம் தீட்டப் பட்டுள்ளது என்றும்…, இப்படி ஒரு மனிதரை தவறாக எண்ணியுள்ள தன்சார்ந்தவர்கள் குறித்து வருத்தம் கொள்வதாகவும் சொல்லி வருந்துகிறார் அந்த ஓட்டுனர்.

இனி முன்னே போகவேண்டாம் இப்படியே திரும்பி விடுவோமேன்று கேட்கிறார் அந்த ஓட்டுனர். மாலன் ஒரு நமுட்டு சிரிப்பை சிரித்துவிட்டு, இல்லை நாம் அப்படி திரும்பி போனால் அவர்களின் கோபம் அடங்கி விடாது. மீண்டும் அதிக ஆக்ரோசத்தோடு தாக்க தேடி வருவார்கள், போவோம் வா… நான் பார்த்துக் கொள்கிறேன்.. என்கிறார்..”

அவன் வேண்டாம் என்று மறுக்க என் மீது நம்பிக்கை உண்டு வா’ என்று மாலன் கட்டளையிட வண்டி புறப்பட்டு முன்னே செல்கிறது. முன்னே ஒரு கூட்டம்; மாலனை ‘உயிர் மட்டும் விட்டுவிட்டு ‘உடலெல்லாம் காயப் படுத்தும் நோக்கில், எதிர் நோக்கி வந்து கொண்டுள்ளது…

உயிர்போனால் கூட பரவாயில்லை அவனுக்கு சரியான பாடம் புகட்டி வா’யென கட்டளை பிறப்பிக்கிறார் அந்த அமைப்பின் தலைவர். மாலன் ‘வாழ்தல் மட்டுமே என் கடன்; வாழ்விப்பது அவன் கடன்’ அவன் தீர்ப்பே என் தீர்ப்பும் என்று எண்ணிக் கொண்டு புன்னகை பூக்கிறார் மாலினியை நோக்கி. மாலனின் வாழ்வும் சாவுமே எனக்கான தீர்ப்பும் என்பதை போல் எண்ணி மாலினியும் புன்னகைக்கிறாள்.

அதற்குள் அந்த கூட்டத்தினர் சீறிக் கொண்டு, அவர்களுக்கெதிரே வண்டியை நிறுத்திவிட்டு.. வேகமாக கீழிறங்கி வந்து மாலனின் வாகனத்தை தாக்குகிறார்கள்..

—————————————————————————————————

தாக்க எண்ணுபவர்களின் பலத்தில்; தாக்கப் பட்டதெல்லாம் மரணிப்பதில்லை’ என்பதை காலம் மெல்ல உணர்த்தும்..., காற்றின் ஓசை – தொடரும்..

Posted in காற்றின் ஓசை - நாவல் | Tagged , , , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

மீனகத்தின்; முதலாமாண்டு விழாவிற்கான வாழ்த்துப் பா!!

வரம் நீயானாய்; மீனகமே!!

ழத்து சுவடுகளை முகத்திலெழுதி
உண்மை நிகழ்வுகளை செய்தியாக்கி
உணர்வு பிழம்புகளுக்கு உயிர் தந்து
எளியோரையும் கவர்ந்தாய்; இமயம் தொட்டாய்!

தமிழர் நிலையை காட்சியாக்கி
தமிழின் வளமையை உலகின் விழிகளிலெழுதி
உனை படிப்பதை எங்களுக்கு – தலையெழுத்தாக்கினாய்
உலகின் தெருவெல்லாம் மீனக பெயரெழுதினாய்!

ரகசியம் உடைத்தும் – சமரசம் செய்தாய்
அரசர் ஆண்டியாயினும் நீதியுரைத்தாய்
தவறென்று வந்தாலோ முகம் பாராமல்
மன்னிக்கவும் சொன்னாய், பண்பில்; மாண்பு பெற்றாய்!

வரலாற்றினை பதிவுகளாக்கி –
அரசியலுக்கு அடிபணிய மறுத்து –
தரத்தில் குன்றிடாத உழைப்பினால், தரணி முழுக்க
வளம் வந்தாய்; வரம் நீயானாய்!

செய்ய இரண்டென்றும், பேச ஒன்றென்றும் – குவித்த உன் வெற்றியில்
படைப்பவர் உன் கைக்குள் அடங்கிப் போனார்; நீ
படைப்பாளிகளுக்குள் அடங்கி போனாய்; உலகம்
கொட்டக் கண் திறந்து உன்னை தனக்குள் அடக்கிக் கொண்டது!

நன்றி பூப்பதில் நலிவின்றி வள்ளலானாய்
இன்றியமையாத செய்திக்கு நீயே முதன்மையானாய்
காலம் தவறாத பணியால் –
ஞாலம் புகழட்டும்; தமிழர் வாழ்வும் மலரட்டும்;
வாழிய வாழிய மீனகமே!!!
—————————————————————————
வித்யாசாகர்

Posted in வாழ்த்துக்கள்! | Tagged , , , , , | 4 பின்னூட்டங்கள்

காற்றின் ஓசை (8) மொரிசியஸில் இன்னும் பத்து நாள்..

இதற்கு முன் நடந்தது..

ங்கெல்லாம் தமிழனின் தலை கனகம்பீரமாக நிமிர்ந்து நிற்பதாக நிறைவு கொள்கிறோமோ; அங்கெல்லாம் இன்னொரு தமிழனின் தலையாவது அந்நியனால் நசுக்கப் படவே செய்கிறது. புடைசூழ்ந்து படை வென்ற தமிழர் இனம் தட்டிக் கேட்க ஆளின்றி சுட்டுப்பொசுக்கும் நிலைக்கானதே. முகம் பார்த்து பேச தகுதியற்றோர் கூட; பல ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் வாழும் ஒரு இனத்தை செல்லரிப்பது போல் அரிக்கின்றனரே. மாற்றான் தேசத்தில் என் கொடி முதல் கொடியாகப் பறக்கவா கனவு காண்கிறோம்; தமிழன் கர்ப்பம் தரித்து கர்ப்பம் கிழிந்து கால் வைக்கும் முன் பூத்தமண் எம் தமிழ் மண், அதை மட்டும் தா என்றதில் எப்படி என் மக்கள் தீவிரவாதியாயினரோ!!!!!!!!!? என் சங்கருத்து வீசியிருப்பின் கூட வீசட்டுமென விட்டிருப்பேன்; என் தமிழச்சி கொங்கையை யறுத்து சொட்டிய ரத்தத்தில் எம் வீரக் கொடி நனைக்கிறான் எதிரியெயெனில்; என் மார்புடைத்து என் மூதாதையரின் வீர ரத்தம் பொங்கியெழுந்து யென் ஒரு தமிழச்சியையாவது மீட்டிருக்க வேண்டாமா????

முடியவில்லையே…!!! எங்கெல்லாம் என் இனம் என் மக்கள் இப்படி கேட்க நாதியற்று வாழ்கின்றனரோ; எங்கெல்லாம் எனை உறவென்று சொன்ன கூட்டம், எனை கடவுளென்று நம்பும் கூட்டம் என்னால் காக்க இயலாமலே போகிறதோ; எவரெல்லாம் இனியும் எனை நம்பி வீழ்வரோ… வீழ்வரோ… என கத்தி கதறி இருக்கும் போல் மாலனின் மனசு. அத்தனை சிவந்து போயிருந்தது அவரின் கண்களிரண்டும்.

சில்வண்டுகளின் சப்தத்தில் தொலைத்த அழுகையின் ஓலத்தை ‘சிவந்து கர்ஜிக்கும் அவரது விழிதனில் அவரால் மறைக்க இயலவில்லைதான். தனக்கான கொஞ்ச தூரத்தில் அவர்களெல்லாம் நின்றிருப்பதை உணர்ந்திருந்த மாலன் முகத்தை துடைத்து சரி செய்துக் கொண்டு சிரித்துக் கொண்டே செல்பவர் போல வீடு நோக்கி வருகிறார்.. எல்லோரும் அவரையே எதிர்நோக்கி இருந்தது போல் வந்தவரை சூழ்ந்துக் கொள்கின்றனர். அவர்களால் அவருக்கு பெருத்த சிரமம் என்று வருத்தம் கொள்கிறார்கள். அவர் அவர்களை திசை திருப்பி அவர்களின் மன உளைச்சலை போக்க எண்ணி, தண்ணீர் அல்லது தேநீர் ஏதேனும் குடிக்க கேட்கிறார். அவர்கள் அவருக்கு வீட்டில் இருந்து கொடுப்பதை தரக் குறைவாக நினைத்து கடைக்கு ஆள் விட்டு அனுப்புகிறார்கள். தேனிர் பலகாரமெல்லாம் வாங்கிவர சொல்கிறார்கள்.

மாலன், அவர்களின் இந்த எண்ணத்தை போக்கும் விதமாக ‘எனக்கு மிகவும் பசிக்கிறதே சாப்பிட வீட்டில் ஏதாவது இருக்கிறதா’ என்று கேட்க, எல்லோரும் மாறி ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். எங்கள் வீட்டிலெல்லாம் நீங்கள் தின்னத் தாகாதென்கிறார்கள். மாலன் அவர்களுக்கு ‘உணவு சுத்தமாக செய்தலும், சுவையாக இருத்தலும், சுகாதாரம் பயக்க பரிமாறுதலும் தவிர வேறெந்த ஏற்றத் தாழ்வுகளும் மனிதருக்குள் வேண்டாம் என்று சொல்லி, அவர்களை வலுக்கட்டாயமாக வீட்டிற்குள் அழைத்து எல்லோரையும் அமர சொல்லி எல்லோருக்கும் பரிமாற சொல்லி வேறு கதைகள் எல்லாம் பேசி சிரித்து பசியாறி முடித்து யெழ இவ்விவரம் அறிந்த “மனிதமும் மேன்மையும்” அமைப்பினர் விடுதியிலிருந்து வேறொரு வண்டியை மாலனுக்காக அனுப்பிவைத்துள்ளனர்.

மாலன் எல்லோருக்கும் கைகூப்பி விடைபெருவதாக சொல்லிக் கொண்டார். அதற்குள் அந்த அடிப்பட்ட இளைஞனின் மூத்த சகோதரி போல்; அவள் ஓடி வந்து நீங்கள் தெய்வமையா…. எங்களை காப்பாத்த வந்த தெய்வம்’ என்று சொல்லி காலில் வீழ்கிறார். மாலன் விரைந்து அவரை தூக்கி விட்டுவிட்டு கண்கள் சிவக்க கடுங் கோபம் கொள்கிறார் அந்தப் பெண்ணிடம்.

“என்று இந்த மனிதனை மனிதனென்று பார்க்கிறதோ இந்த சமுதாயம் அன்று தான் நம் விலங்குகள் உடைத்தெறியப் படும் தங்கையே. யார் சொன்னது நீங்களோ நானோ தெய்வமென்று…?”

“நீங்கள் தான் பேசும்போதெல்லாம் சொல்வீர்களாமே!!!?” இன்னொருத்தி சொன்னாள்

“அது வேறு கதை. அதற்கு வேறு காரணம் உண்டு. அதற்கர்த்தம் நான் கடவுளென்றல்ல; ஒரு நல்ல மனிதன் ‘கடவுளென்று நாம் நம்பும் சக்திக்கு சமமென்று அர்த்தம். மனிதன் அவ்வளவு சக்தி வாய்ந்தவன் என்றர்த்தம். அத்தகு சக்தி எல்லோரின் உடம்பிற்குள்ளும் உண்டு. அதை கடந்தெல்லாம் எந்த மனிதனும் எக்காலத்திலும் கடவுளாக முடியாது. கடவுளை ஒரு பொருளற்றவர் என்று கொள்ளுங்கள்; கடவுள் ஒரு செயலற்றவர் என்றுணருங்கள்; கடவுளை ஒரு சக்தியற்றவர் என்று கூட சொல்லி விட்டு செல்லுங்கள்; ஆனால் மூட நம்பிக்கைகளை வளர்த்து நல்ல நம்பிக்கையின் பேரில் முடமாகிப் போகாதீர்கள் உறவுகளே..” சற்று மௌனம் காக்கிறார் மாலன், அவள் சரியண்ணா என்பது போல் தலை ஆட்டுகிறாள்

அவர் மீண்டும் சுற்றியுள்ளவர்களை பார்த்து “கடவுள் என்பது யாதெனில், நீயும் நானும் பிறக்கவும் இறக்கவும் நம்மை மீறிய ஒரு சக்தி காரணமாக இருக்குமெனில் அது இறை சக்தி என்று நம்புமொரு நம்பிக்கை மட்டுமே கடவுள்; என்றால் நம்புவீர்களா????!!

“நான் சொன்னால் கேள்வி கேட்பீர்கள், கோபம் வரும், மறுக்கத் துணிவீர்கள்; காரணம் கடவுளை சொல்கிறேனே!!!? ஆனால் கடவுள் எங்கே? சுட்டும் விரல் இடுக்கில் கொண்டு நிறுத்தி இது தான் கடவுளென காட்டி விடலாமா….? அழைத்தால்; நானுன் கழுத்தை கத்த கத்த அறுத்தால் கடவுள் வந்து அறுக்காதே என்று என் கையை பிடித்துக் கொள்வாரா? அப்போ என் இனம் வஞ்சகத் தீயில் கருகிப் போனதே தட்டிக் கேட்காததேன் கடவுள்??? உலகெங்கிலும் தனி மனித சுதந்திரம் தேடியும், தேசமென்றும் பாதுகாப்பென்றும் மடிந்துக் கொண்டுள்ளதே எண்ணற்ற உயிர்கள்; வந்து கையை பிடித்து நிறுத்தி விட்டதா கடவுள்????

இல்லையே!!!! நிலநடுக்கம் கடல்கோள் மழை வெள்ளம் புயல் எரிமலையென வெடிக்கிறதே உலகின் உயிர்கள்; கடவுள் வந்து நிறுத்தி விட்டாரா????

இல்லையே!!!!!!!! காரணம் அது வேறு.. இதலாம் வேறு. அபப்டி உங்களுக்கு சந்தேகம்னா எங்கே என்னை வெட்டிப் போடுங்கள், கடவுள் வந்து காக்கிறாரா பார்ப்போம்!!!!!!!!

மாலனின் கண்களில் தீப்பொறி பறக்குமொரு கோபம். எல்லோரும் செய்வதறியாது அசந்து நின்றார்கள். இப்படி ஒரு கோபத்தை இந்த சாந்த முகத்திலிருந்து யாரும் எதிர்பார்த்திர வில்லை.

“ஆனால் வெட்டிப் பாருங்கள்; கடவுள் வந்து நிற்பார்’ என்று கொள்ளும் ஒரு திடம் நம்பிக்கை நம்மிடம் இருக்கிறதே; அந்த உறுதி இருக்கிறதே; அதை மனிதனுக்குள் ஆழ்த்தி, மனிதனை கடந்த ஒரு நிலையை; எல்லாம் உணர்ந்ததுமான ஒரு நிலையை; யாதுமற்ற ஒரு நிலையை யடையும் அந்த சக்திக்கும் ஒரு சாதாரண சக மனிதனுக்கும் இடைப்பட்ட எங்கோ கடவுள் இருந்து போகட்டும். ஆனால் தயவு செய்து மனிதனை கடவுள் ஆக்காதீர்கள். மனிதன் இங்கே கடவுளை விட பெரியவன். அவன் தோளில் கையிட்டு கட்டிக் கொள்ள உரியவன் காலில் விழ தகுந்தவன் அல்ல..”

“அப்போ காலம் தொட்டு நாம் செய்தது? என்று கேள்வி எழலாம். அது ஒரு மரியாதை நிமித்தம் என்று எண்ணி செய்தோம். மனிதனுக்குள் இருக்கும் எல்லையிலா சக்தியை எப்படி எல்லாம் எடுத்துக் கொள்ள முடியுமோ அப்படியெல்லாம் எடுத்துக் கொள்ள முயற்சித்தோம். ஆனால் உண்மையில் எந்த மனிதனும் கடவுளில்லை. கடவுள் என்ற ஒன்று இருக்கலாம், என்னை பொறுத்த வரை உங்களை பொறுத்த வரை இருக்கலாம். அதை பிற மனிதருக்குள் இருப்பதாய் மட்டுமே எண்ணித் தேடாதீர்கள். தனக்குள் கண்டுபிடிக்க முயலுங்கள்.

காலில் விழவைத்து விழவைத்து நாம் கொன்ற சாமிகளும் மனிதர்களும் ஏராளம், இனியும் அதற்கு வழி கொடுக்காதீர்கள். வெள்ளை புடவை உடுத்தினால் தேவதை என்றும், காவி உடுத்தினால் கடவுள் என்றும் சொல்பவர் ஒரு காலும் மனிதராக கூட இருக்கமாட்டார். தெய்வீகம் உள்ளே பூக்க பூக்க மனிதன் தன்னையும் மறைத்துக் கொள்ள துணிவான் அன்றி தன்னை கடவுளென்று சொல்லி கிரீடம் மாட்டி திரிய மாட்டான்.

சிறு பெண்களை கற்பழித்த பாதிரியார், பேய் பிடித்து விரட்டுவதாகவும் சாமி வந்து ஓதுவதாகவும் பில்லி சூனியம் எடுப்பதாகவும் வீடு வந்தும், கொடிமரம் நட்டும் அப்பாவி மக்களை ஏமாற்றிப் பிழைத்தும் திரியும் மோசக் காரர்கள், பீடி சாமியார், பிராந்தி சாமியார், பான்பராக் சாமியார், சுருட்டு சாமியார், சாக்கடை சாமியார், ச்ச…நினைக்கவே கேவலமா இல்லை???? யார் காரணம் இதற்கெல்லாம்??? என்னை நான் தொடப்பகட்டை சாமியார்னு சொன்னா கூட என் கிட்ட வந்து அடி வாங்கிட்டு அருள் கிடைத்ததா ஏத்துக்க நீங்க தயாரா இருப்பது தானே???”

“அப்போ கடவுள்னு நாம வணங்குவதும் அதன் காலில் வீழ்வதும் கூட தவறா?”

“அது வேறு. அது கடவுளை நம்புபவர் கடவுளிற்குள் ஆட்படுத்துதல் அது. அந்த நம்பிக்கைக்குள் தன்னை ஆட்படுத்தி; அந்த நம்பிக்கைக்கு சரணடைந்து; இப்படி தான் இருக்கிறது கடவுள் சக்தி என்றொரு பாவித்தலை ஏற்படுத்தி; அதற்குள் லயித்து லயித்து நம்பிக்கையின் உச்சியில் சென்று நின்று தன்னை பலப் படுத்திக் கொள்வதற்கும், தன்னை முறை படுத்திக் கொள்வதற்கும், மனிதனின் உச்ச சக்தியை அடைவதற்கும் அந்த எல்லாம் மீறிய ஒரு சக்தியற்ற பொருளற்ற செயலற்ற நம்பிகையெனும் கடவுளின் தன்மையை யடைய சில வழிபாட்டு முறைகள் ‘மனிதனை மேம்படுத்தும் அளவிற்கு ‘மனிதனை மூடனாக்காத அளவிற்கு தேவை படுகிறது; அது வேறு…”

ஒரு பெற்றோர் காலில் விழுந்து என் கடவுள் நீ என போற்றுகையில் அந்த பெற்ற மணம் பொங்கி நிறைந்து நம்மை அனைத்துக் கொள்வது வேறு, இப்படி கண்டவன் காலில் விழுந்து போலி மனிதர்களை கடவுளாக்கியதால் தான் நாம் முட்டாள்களாக மதிக்கப் படுகிறோம், அதை மாற்றிக் கொள்ள வேண்டாமா?

மரியாதைக்கும் பக்திக்கும் வெகு நீள இடைவெளி உண்டு, மனிதனின் மேல் பக்தி வேண்டாம் மரியாதை போதும்”

மாலன் மிக ஆக்ரோசமாக இடைவிடாமல் பேசி நிறுத்த அவர்கள் அவரிடம் கேள்வி கேட்கும் எண்ணமின்றி மௌனித்து நின்றிருக்க, தான் தான் ஏதோ நல்லதை சொல்லும் நோக்கில் கேள்வியில்லாத இடத்தில் பேசக் கிடைத்ததை போல் பேசி நீள்கிறோமோ என்று நினைத்து, அவர்களிடம் அதற்கும் மன்னிப்பு கேட்டுக் கொண்டு அங்கிருந்த ஒரு இருக்கையை வெளியே தள்ளிப் பொட்டு அமர்ந்துக் கொண்டார்.

குடிக்க தண்ணீர் கேட்டு குடித்துக் கொண்டார்.. அதற்குள்.. மதலை முத்துவும், அவர் மனைவி சூரிக் கண்ணுவும் வந்து விடுகிறார்கள். வண்டி விட்டு இறங்கியதும் கதறிக் கொண்டே ஓடி வருகிறார்கள். எல்லோரும் பதற்றமுற்று எழுந்து அவர்களை நோக்கி ஓட, மாலனும் அவர்களை பின் தொடர்ந்து எழுந்து போகிறார்.

அந்த பெண்மணியும் மதலை முத்துவும் ஓடிவந்து இவர் காலை கட்டிக் கொள்கிறார்கள்; இன்னும் நூறு இருநூறு வருடங்களாவது கடந்த ஒரு காலமே இம்மனிதர்களை புரட்டிப் போடுமோ என்று வருத்தம் கொள்கிறார் மாலன்.

அவர்கள், மகன் விழித்துக் கொண்டதாகவும் பெரிய மருத்துவமனை, நல்ல மருத்துவம் பார்த்தார்கள் என்றும் சொல்லி உவகை கொள்கிறார்கள். இன்னும் இரண்டு மூன்று நாட்களுக்கு அங்கேயே தங்க வேண்டுமாம், உங்களுக்கு வெறும் வார்த்தையினால் நன்றியை சொன்னால் போதாதென்று பாதம் தொட்டு வணங்கி செல்லவே வந்தோம் என்கின்றனர் மதலைமுத்துவும் சூரிக் கண்ணும்.

“இப்போதும் உங்களுக்கு புரியவில்லையே, நான் கடவுளாக இருந்தால் இங்கேயே காப்பாற்றி இருக்க மாட்டேனா உங்கள் மகனை, நான் உங்களை போல சாதாரண மனிதன், ஒரு பேச்சாலனுக்கான மரியாதை எனக்கு போதுமானது”

“அட போங்க சாமி, இத்தனை காலத்திற்கு எங்களை எந்த சாமி வந்து காத்துது? எங்களை அடிச்சி போட்டா இங்க கேட்க நாதியில்ல, ஆபத்துல உதவுற உங்களை போன்ற மனிதருங்க தான் சாமி தெய்வம்” சூரி சொல்லி நிறுத்த

“ஆமாங்க சாமி இத்தனை ராத்திரில எங்களுக்காக நின்னு எங்க உணர்வுகளை எல்லாம் மதித்தீர்களே இது பெருசில்லையா” என்று மதலை ஆரம்பிக்க, வீட்டிலிருந்த மகள்களும் மற்றையோரும் அவர் உணவருந்தியது.., காலில் விழ கத்திப் பேசியது.., என  எல்லாம் சொல்கிறார்கள். மிக பெரும் அன்பு மழை அங்கே பொழிந்து எல்லோரும் மனிதத்தினால் நனைய மாலன் மீண்டும் நாளை மருத்துவ மனையில் வந்து பார்ப்பதாக சொல்லிவிட்டு கைகூப்பி வணக்கம் தெரிவித்து ,விட்டு  இரவு தூக்கத்தை தொலைத்த வருத்தமின்றி அதிகாலை பொழுதினில் விடுதி நோக்கி புறப்படுகிறார்.

வாகனத்தின் ஜன்னல்களை திறந்து விட்டுக் கொண்டார், எல்லாம் அவன் செயலென ஓர் எண்ணம் உள்ளே உதிக்கிறது அவருக்குள். இடையே, கடவுளை பற்றி இப்படி எல்லாம் சொல்கிறோமே, இல்லை என்று கூட சொன்னோமே, நன்றியற்ற உணரவில்லையா அது’ என்றொரு வருத்தம் வருகிறது. ஆனால் இப்படிப் பட்ட மனிதர்களிடம் வேறென்ன சொல்லி ரத்தத்தில் ஊறிய மடமையை போக்குவது!!!!!!!!?

‘இல்லை வெறும் நம்பிக்கை தான், இருப்பதான சரணடைதலின் பாவனை தான்; எனும் போதே இம்மனிதர்கள் தன்னை இத்தனை தொலைத்து விடுகிறார்களே, இன்னும் கடவுள் இவர்கள் சொல்லும் வழியிலெல்லாம் இருக்கிராறென்று சொன்னால் ‘இந்த அப்பாவி மக்களை இன்னும் மூடக் கிணற்றிலே தள்ளிவிட்டது போலாகாதா?

எது செய்தோமோ அதை சரியாக தான் செய்தோம், யோசிக்க வைத்து விட்டால் போதும் ‘கடவுள் இருப்பதும் தெரிந்துவிடும், எது வரை அல்லது எங்கிருந்து, எப்படி, எதற்கு இருக்கிறதென்றும் தெரிந்துவிடும்.

சொல்வதை செய், சொல்வதை கேளென்று அதட்டி அடக்கி கட்டாயப் படுத்தித் தானே இத்தனை நூற்றாண்டுகளை தட்டிவைத்துவிட்டோம், அது போதாதா…?” என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருக்கையில் சடாரென வந்து மோதுகிறது ஒரு பெரிய டேங்கர் லாரி மாலனின் மகிழ்வூந்தின் மீது!!!!!!

எதிர்பார்க்காத நேரத்தில் தான் மரணம் நேரும் என்பார்கள், மாலனும் எதிர்பார்க்கவில்லை. இப்படி நேரும் என்று எண்ணிக் கூட இருக்கமாட்டார்.

சற்றே சுதாரிப்பதற்குள் சுழன்று சுழன்று எங்கோ தூக்கி வீசப் பட்டு தூரம் சென்று வீழ்கிறது அவர் வந்த வாகனம்..

முன்னே இடித்ததில் சல்லடையாக உடைந்து வாகனம் ஓட்டியவர் ஐயோ என்ற ஒரு குரலோடு நொறுங்கிய உடைசல்களில் நசுங்கி போனார்.

மாலன் என்ன ஆயிருப்பார்? அடுத்த தொடரில் பார்ப்போம் என்றெல்லாம் போட மாட்டேன். அதற்காக கதாநாயகர்களுக்குத் தான் கதை முடியும் வரை ஒன்றுமே ஆகாதே என்று சொல்லவும்  வரவில்லை. அவருக்கான கண்டத்தில் இதுவும் ஒன்று அவ்வளவு தான்.

அவர் வந்தது பதினான்கு பேர் அமரும் ஊர்தி. முன்னே இடித்ததில் முன்னே நசுங்கி தூர விழுந்தாலும், மாலன் தான் சற்று விவரமானவராயிற்றே; பின்னே அமர்ந்திருந்தாலும் ‘சேப்டி பெல்ட்’ இட்டிருந்ததால் எத்தனை கரணம் அடித்தும் அவருக்கு அதிர்ச்சி தவிர பெரிதாக வேறெந்த சேதமும் நேரவில்லை என்று சொல்லி மனதை தேற்றிக் கொள்வோம்.

ஆனாலும், தான் இறந்திருந்தாலும் இத்தனை வருந்தியிருக்க மாட்டார், அத்தனை வருத்தத்தை தந்தது அந்த ஓட்டுனரின் மரணம். நாமும் இத்தருணத்தில் இதுபோன்ற அகால மரணம் எய்திய உயிர்களின் ஆத்மா சாந்திக்கென வேண்டிக் கொள்வோம்.

எப்படியும் நாளை மாலனால் மொரிசியஸிலிருந்து  போக இயலாது. மருத்துவரின் ஆலோசனை படி ஒரு வாரம் தங்கி ஓய்வெடுத்துவிட்டு , அங்கு நடக்கவிருக்கும் இன்னுமொரு கலைநிகழ்விலும் கலந்து சொற்பொழிவாற்றவும், இன்னுமொரு பத்து நாள் இங்கேயே தங்கிவிடவும் சம்மதிக்கிறார்.

மறுநாள் வேறுநாட்டில் நடக்கவிருந்த கூட்டமெல்லாம் பத்து நாட்களுக்கு ரத்து செய்யப் படுகிறது. வீட்டிற்கும் விபத்து செய்தி தெரிவிக்கிறார்கள். ஊரில் அவர் மனைவி  விவரமறிந்து மயங்கி விட்டதாகவும், பிறகு தெளிந்ததும் உடனே அவரை பார்க்க வேண்டுமென  கேட்டு தொல்லை செய்ததாகவும், அவரின் கெஞ்சுதலின் பேரில் நாளைக்கே அவருக்கு விசா அனுப்பப்  பட்டு  மொரிசியஸ் வருவதாகவும் முடிவு செய்யப் படுகிறது.

ஆக, நாளைக்கு  மருத்துவமனைக்கு சென்று மதலைமுத்து சூரியின் மகனை பார்க்க இயலாது. தவிர மருத்துவர்கள் வேறு அவரை இரண்டு மூன்று நாட்களுக்காவது ஓய்வுவெடுக்க வேண்டுமென்று  கூறியிருப்பதால்  மூன்றாம் நான்காம் நாளில் புறப்படும் முன் வந்து போவதாக அவர்களுக்கு தகவல் தெரிவிக்கிறார்.

நாமும் இரண்டு மூன்று தினங்களுக்குப் பின் மதலைமுத்து சூரி தம்பதியர் வீட்டில் மாலனை சந்திப்போம்…

————————————————————————————————-

காற்றின் ஓசை – தொடரும்.. ‘அதில் காதலும் காமமும் கடவுளும் வாழ்கையும் மனிதமும் ஓசையாய் எழுத்தாய் இன்னும் நீளும்….

Posted in காற்றின் ஓசை - நாவல் | Tagged , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்