வித்யாசாகர் தலைமையில் கவியரங்கம் நிறைவுறுகிறது!!

ந்த கந்தக காற்றில் பிறந்த
என் சந்தன காற்று என்றும்,

சாதத்தோடு
சந்தோசத்தையும் பிசைந்துக் கொள்பவள் என்றும்,

பிறப்பு என்பதே ஒரு சுதந்திரம் என்றும்
இவ்விடம் சுட்டிக் காட்டிச் சென்ற கவிஞர் அபுதாகிர் அவர்களுக்கு நன்றி பாராட்டி அம்மகளுக்கு நம் வாழ்த்தினையும் தெரிவித்து, என் தலைமை உரைக்கு வருகிறேன்.

————————————————————————————————

ரு குடும்பத்தின் உறவுகள்ன்னு பார்த்தோம் என்றால் அவரவர் இடத்துல அவரவர் முக்கியம் தான், அதுபோல் இங்கும் ஒரு குடும்பமாய் வந்து அவரவர்களின் பங்கிற்கு உறவுகளின் சிறப்புகளை; உணர்வுகளை; மிக யதார்த்தமாகவும் கவிநயம் குறையாமலும் பகிர்ந்துச் சென்ற என் நட்புறவுகளுக்கு நன்றியும் மிக்க வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.

அதுபோல் இவ்விழாவினை இத்தனை சிறப்பாக தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கும் கவிதைகளாலேயே எல்லோரையும் அர்ச்சித்துக் கொண்டிருக்கும் ‘அருவிக் கவிஞர் திரு. ஆனாந்த ரவி அவர்களையும் மிகையாய் பாராட்டி அன்பினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

————————————————————————————————

ரு குடும்பத்தின் உறவுகளென்று எடுத்துக் கொண்டாலே அவர்களை அக்குடும்பத்தின் வாழ்தளுக்கான பாடுபொருளென்று சொல்லலாம்.  ஏன்னா, கடவுள் வந்து ஒரு கிண்ணம் நிறைய அமிர்தம் தந்து ‘இதை யாராவது உன் வீட்டில் ஒருவருக்குமட்டும் கொடுத்து வா’யென்றால் யாருக்குத் தருவோம்?

ஒருத்தர் தாயிற்கு தரலாம், ஒருத்தர் தந்தைக்கு தரலாம், அல்லது மனைவிக்கு தருவோம்,  குழந்தை அண்ணன் தம்பி தங்கை யாருக்காவது ஒருவருக்கு தருவோம். (இல்ல; இவனா சந்துல கொண்டு போயி மறைந்து நின்னு குடித்துவிட்டாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை, அதுவேறு).

அதே, ஒரு கிண்ணம் நிறைய விஷம் கொடுத்து  ‘இதை கொண்டுபோய் யாரேனும்’ உன் வீட்டில் ஒரு உறவிற்கு கொடு என்றால், யாருக்கேனும் கொடுப்போமா???

நாம் குடித்துக் கொள்வோமே தவிர நம் கையால் பிறருக்கு தந்து நம் ஒரு உறவையும் இழக்க துணிய மாட்டோம் இல்லையா, ஏன்னா, உறவுகள் அந்தளவு நமக்குள் நெருக்கமானவர்கள், நம்மை விட நமக்கு முக்கியமானவர்கள் நம் குடும்பத்து உறவுகள்.

அப்படியிருக்க, அந்த உறவுகளை தக்கவைத்து அன்பு செலுத்தி வாழ்க்கையை வாழ்வதில் தான் ஒரு மனிதனின் சந்தோசமும் வெற்றியின் அர்த்தமும் இருப்பதை இங்கே பதிவு செய்கிறேன்.

இயன்றவரை உறவுகளிடத்தில் அன்பு காட்டுங்கள், அன்பினை வளர்த்துக் கொண்டாலே தேவையற்றவை தானே விலகி போகும், என்று சொல்லி..

ஒரு சின்ன உதாரணத்தோடு முடித்துக் கொள்கிறேன்,

————————————————————————————————

வேறு யாரோட ஒரு  குழந்தையோ இன்னொருவரின் வீட்டில் வந்து எல்லாவற்றையும் கீழே தள்ளி உடைத்துப்போட்டு, பொருள்களை  இடம்விட்டு இடம்  மாற்றி வைத்து அடக்கமுடியாத அட்டகாசம் செய்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள், அதைகண்டு அந்த வீட்டின் நபர என்ன சொல்வார்?

அப்பா!!!!!!!! புள்ளையா அது எமன், அறுந்தவாலு…. ன்னுவான்..,

அதே அவன் குழந்தை செய்யட்டும்; என் குழந்தை ‘சும்மாஆக்டிவா இருக்குன்னுவான்!!!!!!!  காரணம், அன்பு தவறுகளை மறக்க செய்யும், மறைத்து கொள்வோம்; மனிதனை ஒரு சிறு ஒற்றை இதயத்திற்குள் வைத்து பூட்டிவிடும், கட்டுப் படுத்தி வைத்துக் கொள்ளும்.

எனவே உறவுகளிடத்தில் மிக்க அன்பிணை வளர்த்துக் கொள்வோம், அதே நேரத்தில் தவறுகளை மறைக்காது மறக்காது எடுத்துசொல்வோம்,  தன் நேர்மையான கருத்துக்களை மனதோடியாமல் பகிர்ந்துக் கொள்வோம். குறைகளை அன்றன்று மறந்து; உறவுகளுக்குள்  விழிக்கும் அன்றன்றைய பொழுதுகளில் தன்னை புதியதாய் பிறந்ததாய் எண்ணி புத்துணர்வோடு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வோம்.

குடும்ப உறவுகள் நம் வெற்றிகளை தன் வெற்றிகளாய் கொண்டாட ‘ஒரு தெருவின், ஊரின், ஒரு தேசத்தின் வெற்றி; மனிதத்தின் வெற்றி; நம் குடும்பத்திலிருந்து பிறக்கட்டும். எனக்கூறி, இத்தகு சிறப்புக் கவியரங்கத்தை அமைத்துத் தந்த ‘குவைத் தமிழோசை கவிஞர் குழாமிற்கு நன்றி பாராட்டி, அமைதி காத்து எனை ஏற்றுக் கொண்ட உங்களுக்கும் நன்றியறிவித்து விடைகொள்கிறேன். வணக்கம்!

————————————————————————————————–

வித்யாசாகர்

Posted in கவியரங்க தலைமையும் கவிதைகளும் | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

காற்றின் ஓசை (13) சாமியும் ஜாதியும்; தியானமும் மதமும்!

இதற்கு முன் நடந்தது

சொல்வதில் மட்டுமல்ல, கேட்பதிலும் ஒரு சக்தி கிடைக்கிறது. சொல்பவர் யார், அவர் சொல்லும் தகவல்கள் என்ன, அதை நாம் எவ்வாறு உள்வாங்குகிறோம், அதன் பாதிப்பு நமக்குள் ஏற்படுத்தும் அதிர்வுகள் சரியானதா, இத்தருணத்தில் நமக்கு தேவையா என்றதொரு எடைபோடல் கேட்போருக்கு வேண்டும்.

எதையோ எடுத்து படித்தோம் என்றல்ல, எதை படிக்கிறோம் என்பதில் யோசிப்பு வேண்டும். ஒவ்வொரு வாசிப்பிற்கும் நம் உணர்வலைகளின் பங்கு கொண்டு நம்மில் மாற்றம் ஏற்படுகிறது. எனவே என் உணர்வலைகள் எதை நோக்கி அதிர்வுற்றால் என் அடுத்த கட்ட வாழ்க்கை சிறக்கும் எனும் ஒரு நேர்த்தியான சுயபரிசோதனை உள்ளுக்குள் எச்சரிக்கை உணர்வினை போல, ‘படிக்கும் ‘பிறர் கருத்திற்கு காது கொடுக்கும்’ நமக்கு தேவை.

அதற்காக இது என் கொள்கைக்கு மாறுபட்டது இதை நான் படிக்கவே வேண்டாம் போல் என்றெல்லாம் இல்லை. வாழ்வின் புரிதலுக்கு தக்க கொள்கை மாறலாம். இன்று சரி என்றுணர்வது நாளை தவறென்று புரிபடுகையில் நேற்றைய கொள்கை முற்றிலும் சரியானது தானா என்பதை சீர்தூக்கிப் பார்க்கும் நிலையில் தான் மனிதப் போக்கு உள்ளது. இது ‘நான்’ என்று ஒரு வட்டத்தை பொட்டு உள்ளே அமர்ந்துக் கொள்வதை விட சுதந்திரமாய் காது கொடுத்து அனைத்தையும் உள்வாங்கி எடைபோட்டு நல்லதை எடுத்துக் கொண்டு கெட்டதை விட்டுவிடும் ஒரு திறன் வேண்டும்.

இதையும் நல்லது கெட்டது என்பதை விட, சரியெனப் படுவதை எடுத்துக் கொண்டு தவறெனப் படுவதை விட்டுவிடுவோம். எது தவறென்று மீண்டும் கேள்வி கேட்டு விடாதீர்கள். எது பிற உயிரை துன்புறுத்துமோ அதெல்லாம் திருத்திக் கொள்ள வேண்டியவை தான். திருத்திக் கொள்ளவேண்டியவையே தவறாக செய்யப் பட்டுள்ளதாய் கணக்கிடப் படுகிறது.

புரியுதா ஐயா…? புரியுதா திருமேனியா???” மாலன் சற்று நீட்டி முழக்கி நிறுத்தினார்.

“புரியுதையா இல்ல புரியுது சாமி.., ஆனா முன்ன தேவையானதை தான் படிக்கனும் கேட்கனும்னு சொன்ன மாதிரி இருக்குல்ல..”

“இப்படித் தான்னு இல்ல திருமேனியா, அந்த ஒரு எச்சரிக்கை உணர்வு, ஒரு கணக்கு போட்டு நகரும் பக்குவம், ஒரு கணிப்பு கணித்து வாழும் பேசும் யோசிக்கும் தன்மை உள்ளே பதிவிடப் படனும்.., புரியுதா?”

“அதாவது எவன் என்ன எழுதினாலும் படிக்கலாம், தெளிவு வேனும்றீங்க..”

“ஆங், அது மாதிரி தான்.., ஆனாலும், கையில பத்து புத்தகம் தராங்க, அதுல ஒரு புத்தகத்தை எடுத்துக்கோன்னு சொல்றாங்கன்னு வையி, அதுல எதை எடுத்தா அது நம்மை மேலும் கொஞ்சம் வளப்படுத்தும், எது இன்னும் கொஞ்சம் என்னை நேர்த்தியாக்கும், எது எனக்கு வாழ்வின் யதார்த்தத்தை பாகுபாடின்றி எடுத்து என்னை பிறர் நோகாது வாழும் கலையை கற்று தரும்னு பார்க்கும் மனோபாவம் வேணும். அது இருக்கணும். அது இருந்துட்டா; உனக்கு தேவையானது உன்னை வந்து சேரும்..”

“ஓ… சரி சாமி, ஒன்னு சொன்னா தவறா எடுத்துக்க மாட்டீங்களே..”

“நிச்சயமாக இல்லை.. கேளுங்க ஐயா..”

“அந்த சாமி பத்தி சொல்றன்னுன்னிங்க..???????!!!!!!! தவறா நினைத்துக் கொள்ளாதீங்க சாமி, அப்புறம் அவரு என்னவோ நான் அப்படி சொன்னதால தான் நீங்க அதை பத்தி பேசலன்னு என்னை திட்டுவாரு..”

“அப்படியா திருமேனியா..??? ரொம்ப கடிந்துக் கொள்வீங்களா? நம்ம கிட்ட வேலை செய்றவங்க நமக்கு பயந்து செய்தா அது பாவம். இது அவர்கள் வேலைன்னு அவர்களையே உணர்ந்து அதை செய்ய வைக்கணும், அது தான் சாமர்த்தியம்.. சரி விடு அதை பற்றி பிறகு பேசுவோம்..”

திருமேனியன் அவரை கூர்ந்து கவனித்துக் கொண்டார். சரி என்று தலையாட்டிக் கொண்டார்.

“நான் சொல்ல வருவதை முழுதுமா கேட்டுக்கோ திருமேனியா, பிறகு உன் விருப்பம். பொதுவா.., என்ன தான் கடவுள் பற்றி இருக்கு இல்லை என எத்தனை வாதங்கள் இருந்தாலும், யார் யார் என்னென்னவெல்லாம் சொன்னாலும், எல்லாத்துக்கான காரணமா ஒரு மூலசக்தி எங்கோ எதுவாவோ ஒன்றாக நிச்சயம் இருக்கு. அது நான் உணர்ந்த உணரும் என் உணர்வு.

நானுன்னு இல்ல நன்றியுணர்வும் தெளிவும் மிக்க எல்லோருக்குள்ளும் ‘ஒவ்வொரு அசைவிற்கும் ‘எல்லாவற்றிற்கும் மேலான ஏதோ உயர்ந்த ஒரு சக்தி இருக்கும்ற சிந்தனை, நம்பிக்கை, மானசீகமாக இல்லாமல் இல்லை”

“அப்போ உன்னை பொருத்தவரை சாமி இருக்குன்ற, அதானே சாமி?”

“ஏன் உன்னை பொருத்தவரை இல்லையா பின்ன? வெறும் கேள்வி கேட்க தான் விருப்பம்னா அதை பத்தி பேசி பயனில்லை, விட்டுடு. இதை பத்தி பேசாத. இல்ல, இதை ஆராய்ந்து தெரிந்துக்கொள்ள விருப்பமெனில் காத்திரு. இந்த கணம் என்றில்லை இன்னும் எல்லையின்றி காத்திருத்தலில் மட்டுமே புரியக் கூடும் அது.

அதுவரை, எல்லாவற்றையும் உற்று கவனி. எது சரி எது தவறென்று எடை போடு. யாரையும் நோகாமல் உண்மையை அலசு. புரிந்தவரை நண்பர்களிடம் பேசி அனுபவம் பகிர்ந்துக் கொள். எதுவாயினும் உன் புத்திக்கு தெரிந்தளவு மட்டுமே பேசு. பேசுமளவு மட்டுமே நம்பு.

ஒரு தேடலை உனக்குள் ஏற்படுத்தி கடவுள், இறை சக்தி, என எல்லாம் கடந்த நிலை தன்மைகளை ஆராய்ந்து வா. இப்படி மேலும் மேலும் ஆராயமுயல்கையில் மேலும் மேலும் எல்லாமே புரியக் கூடும். மேலும் பல சூழ்சுமம் புரிய தியானம் அவசியப் படும்.

தியானம்னா, அதான் அமைதியான உற்று நோக்கல், தவம் புரிதல், ஜபம் பண்ணுதல் எதுவாக வேண்டுமோ இருந்துபோகட்டும், ஆனால் ஒருமுகப்படுத்துதல் மட்டுமே தியானம் என்று கொள். தியானம் செய். தியானத்தினால் நம்முன் இருப்பது அத்தனையும் கடவுளில்லை கடவுளை தேட நம்முன்னோர் காட்டி வைத்துள்ள பாதை தான் இதெல்லாம் என்று மிகத் தெளிவாக புரியும்”

“ஓஹோ..”

“சட்டென்று இல்லை என்பதற்கும், ஆராய்ந்து பார்த்து வேறேதுவாகவோ இருக்கிறது என்பதற்கும், வித்தியாசம் உண்டு. ஆனால், எதற்காக எல்லாம் அடித்துக் கொள்கிறோமோ, பிறரை வஞ்சிக்கிறோமோ நிந்திக்கிறோமோ அதற்கெல்லாம் இனி அவசியம் இல்லை என்பதை தியானம் விரைவாக உனக்கு காட்டும்.

தியானம் செய்யசெய்ய எதை நோக்கி செய்தோமோ அதெல்லாம் கடவுளே இல்லை என புரியவைக்கும். கடவுளை எதுவென்று புரிந்துக் கொள்ள மாற்றுப் பாதையை ஏற்ப்படுத்தி தரும். இன்னும் ஆழமாக உணர்தலை உனக்குள் உருவாக்கும். இதலாம் தாண்டியும், அல்லது இதோடு நாமும் எல்லாமுமாக சேர்ந்து தான் கடவுளோ என்ற ஓர் பிணைப்பின், ஈர்ப்பின் நெருக்கத்தை புரியவைக்கும்.

எனக்கும் ஆரம்பமே புரிந்துள்ளது, ஆனால் மீதியும் புரிந்துவிடும் எனும் நம்பிக்கையை எனக்கு தந்தது தியானம். என்னை ஆழமாக சிந்திக்க வைத்தது தியானம். என் வாழ்வின் பாதைகளை திருத்தி என்னை நேர்வழி படுத்தி எனக்குள் நேர்த்தியான எண்ணங்களை உருவாக்கியது தியானம். தியானம் செய்யும் தினம் எனக்கு தோல்விகளில்லை அல்லது தோல்வியை சமாளிக்கவோ எதிர்த்து போராடவோ பக்குவப் பட்டேனும் விடுகிறேன்.

தியானம் தான் என் இத்தனை தூரத்து மையக் காரணம் என்பேன் திருமேனியா. தியானத்திற்கு; தியானத்தில் ஒருமுகப்படுத்தும் அந்த மனதிற்கு; அந்த அமைதியான அமர்தலுக்கு; அந்த சக்தி எங்கிருந்தோ வருகிறதெனில், அதை தரும் சக்தி எங்கோ ஒன்று இருக்கத் தானே வேண்டும்? சரியாக சொல்வதெனில்; ‘இல்லை என்று மறுக்க முடியாத அல்லது ‘ஏதோ ஒன்று உண்டு என்று முழுதாய் உணர்ந்து விட்டதாய் சட்டென சொல்ல இயலாத’ இடத்தில் தான் நானும் இருக்கிறேன் அப்பா.

ஆனால் இந்த வணங்கல்; என்னை நேற்படுத்தியதை மட்டுமே பிறருக்கும் தர எண்ணுகிறேன். அதை சார்ந்து மக்கள் தலையில் தூக்கித் திரியும் கடவுள் பேரில் நடக்கும் வெறியினையோ மூட பழக்க வழக்கத்தையோ அல்ல.

உங்களுக்கொன்று தெரியுமா, நான் கடவுளிடம் எத்தனை நம்பிக்கையோடிருக்கிறேன் என்பதை நீங்களும் உணர்வீர்கள் தானே, ஆனால் எனக்கு இந்த நாள் கிழமை சாஸ்திரம் சம்பிரதாயம் அதலாம் ஒன்னும் கிடையாது. குடும்பம் சார்ந்தோருக்காக அவர்கள் மனசு நோவாம ஊறுகா மாதிரி கொஞ்சம் தொட்டுக்குறதுண்டு. அதையும் நாங்க தனியா வந்த பிறகு அதலாம் நிறுத்திட்டோம்.

சொல்லப் போனா எனக்கு தடுக்கி விழுந்தா கடவுளேன்னு தான் தோணும், அசையும் பொருளின் ஒவ்வொரு நகர்தலிலும் அவனின்றி அசையாது அணுவும என்று நம்புறேன்..”

“இப்படியும் சொல்றீங்க அப்படியும் சொல்றீங்களே சாமி..?”

“நீங்க இதை அப்படி எடுத்துக்க கூடாது, எனக்கு அந்தளவு கடவுள் மீது நம்பிக்கை இருப்பதால, இதுபோன்ற மனிதர்களை வேறுபட்டு நிக்கவைக்கிற, மனிதர்களை நிந்திக்கிற, தன்னைத் தானே பொய்யாக்கிக் கொண்டு சிந்திக்கும் மனோபாவத்தயொயே ஒழித்து விடுகிற சில காரியங்கள்ல நம்பிக்கை இல்லை, அவ்வளவு தான். நம்பிக்கை இல்லைன்றதை விட, வைக்க வேண்டாம் என்றெண்ணுகிறேன். காரணம், என் மனிதர்களை நான் காத்துக் கொண்டால், என் மனிதத்தை மீதப் படுத்திக் கொண்டால் போதும்; எனை அவன் காக்கிறான் என்பதை உணர்ந்திருக்கிறேன் அப்பா.

ஆயினும், என்ன தான் நாம ஆத்மார்த்தமா மனதில் பக்தி கொண்டிருந்தாலும் ஆழ்நிலை தியானத்திற்கு சென்றாலும் ‘இப்போது நாம் வணங்குவதெல்லாம் வெறும் கடவுளை அடையும் வழி தான்; வழி மட்டும் தான்; இது மட்டுமே கடவுள் இல்லை’ என்பதனை தெளிவாக புரிய வைக்கிறதே தவிர, நாம் பார்க்கும் படங்கள் கேட்கும் கதைகள் நம்பும் கோவிலை கூட மறுக்கவே செய்கிறது ஆழ்மனசு. அதலாம் ஒரு நம்பிக்கைக்கான ஏற்பாடு அவ்வளவு தான். இதை பற்றி விவரமா வேணும்னா நம்ம “சாமி வணக்கமுங்க”ன்னு ஒரு ஆன்மிக குறுநாவல் தொகுப்பு இருக்கு அதை முழுக்க படித்துப் பாரு புரியும்”

“அப்போ கடவுளே இல்லைன்னு தெரிந்துக் கொள்ளவா தியானம் பண்ண? அதுக்கா எங்களையும் பண்ண சொல்ரீங்க சாமி?”

“நான் அப்படி மட்டும் சொல்ல வில்லை. இருந்தாலும், இதலாம் கடவுள் இல்லை என்று புரிவதே, ஏற்பதே பெரிய ஞானம் தான் அப்பா. அத்தனை வரை சிந்திப்பதே எல்லோராலும் எளிதில் இயலாத காரியம் தான். நாமெல்லாம் எங்கு தவறு செய்கிறோம் யோசித்தாயா?”

“……………..” அவர் பதில் பேசவில்லை, ஆனால், இதற்கு தான் உன்னை உதைக்க வந்தார்கள் போல் அன்று என்பதை மட்டும் மனதில் நினைத்துக் கொண்டார்.

“என்னங்கையா ‘என்னடா இவன் எசக்குபிசகா ஏதோ சொல்றானேன்னு பார்க்குறீங்களா?”

“இல்லைங்க சாமி, அன்னைக்கு நிகழ்ச்சில பிரச்சனையை வந்ததில்லையா, அது இதனால் தான் வந்ததோ என்று நினைத்துக் கொண்டேன்”

“சரியா தான் நினைத்திருக்கீங்க. ஆனா, நான் சொல்றதை நடுநிலை தனமா நிதானமா யோசித்து புரிந்துக் கொண்டீங்கனா, மனிதனுக்கு மத்தியில் மனிதன் மேல மதத்துக்காகவும் கடவுளுக்காகவும் கோபமோ வருத்தமோ வரவே வராது அப்பா; அது தான் என் எண்ணம்”

“எல்லார் கூடையும் இருந்து எல்லாம் செய்யி.,அதேநேரம், யாராலையும் வருத்தப் படாத, யாரையும் வருத்தமும் படுத்தாதன்றீங்க.. இல்லயா.. புரியுது.. சாமி”

“ம்ம்.. அதுமாதிரி தான்.., நாம எல்லாம் என்ன பண்றோம், கடவுள் இருக்குன்னு சொல்லிட்டு இல்லை என்பவனை திட்டுறோம், இல்லைனா, இல்லைன்னு சொல்லிட்டு இருக்கென்பவர்களை குறைகூறி கேலி பேசி ஏதேனும் ஒருவர் மனதை ஒருவர் புண்படுத்தும் நிலையில்தான் வாழ்கிறோம் இல்லையாயா”

“ஆமா.. ஆமா சாமி..”

“அந்த நிலையை இன்னும் கொஞ்சம் நடுத்தரமா சிந்தித்து மாற்றிக் கொண்டாலென்ன? மூடப் பழக்கம் உள்ளவனுக்கு சொல்லி புரிய வை, சும்மா இருக்கிறவனை ஏன் சீண்டுவான? அதேமாதிரி உனக்கு இருக்குன்னா நீ கும்பிட்டுட்டு போ, உன் நல்லதுக்குன்னு எதையோ சொல்ல நினைக்குற மத்தவனை ஏன் விரோதியா பார்க்குற?

இது தான் கடவுள் என்று உறுதியா ஓரிடத்தில் நின்று விடுவதால்,  நின்று பிற இல்லை என்போரை ‘கொன்று வருவதால், அந்த கடவுளின் பெயர் சொல்லி இதுவரை இறந்தவர்கள் எத்தனை பேர் யோசித்தாயா?

உண்மையில் இது தான் கடவுளெனில் இத்தனை பேரை அந்த கடவுள் சும்மா விட்டிருக்குமா? ஒரு உயிரை துடிக்க துடிக்க அறுத்துத் தர எந்த கடவுளேனும் கேட்குமா?

இன்று இந்த ‘தன் கடவுள் பெரிதென்று எண்ணும் புத்தியால் ஒற்றை மதமென்னும் போர்வை உடுத்தி, அதை கொச்சையாக்கி, குளிர்காயும் சண்டாளர்கள் எத்தனை பேர் பெருகி விட்டார்களே தவறில்லையா?

புனிதத்தை போர்வை எனப் போர்த்தி, காமப் பார்வை வீசி, தனை ஞானி என்று சொல்லிக் கொள்வதை காட்டிலும், இதற்கெல்லாம் காரணமான மதம் என்ற ஒரு வழி; வழி மட்டுமே, அதில் பொதிந்துள்ள அத்தனையும் நமக்கு எதையோ காட்ட முனையும் சில சிந்தனைக்குரிய நிலைகள் மட்டுமே வெறும் பாதை மட்டுமே என்றெண்ணி தூக்கியெறி மதமென்னும் சுயநலத்தை.

இயலுமெனில், எம்மதமும் சம்மதமென ஏற்று நில். இது மட்டுமே கடவுள், தான் வணங்குவது மட்டுமே தெய்வம் வேறெல்லாம் கல்லென்று புரிந்துக் கொண்டால், அதுவும் பிறரை நிந்திக்கும் செயலன்றி வேறென்ன? எனவே இதலாம் தவிர, இவைகளெல்லாம் இல்லாத வேறேதோ நம்மை கடந்த சக்தி ஒன்றே கடவுள் என்று புரி.

இது கடவுளிற்கான, கடவுளை அடைவதற்கான பாதை மட்டுமே என்று புரி. பிறகு நீ ஏன் இதற்காக என் மதம் என் கடவுளென ‘மனிதனையோ பிற உயிர்களையோ கொள்ள போகிறாய்? யாரையும் கொள்ளாது மனிதம் காக்க துணிவது தானே ஞானம். அது இதில் இருக்கு என்பதை விட இதில் இல்லை என்பதில் கிடைக்கிறதெனில் மறைப்பானேன்?”

“அப்போ நம்ம பண்றது எல்லாமே அவசியமற்றது தானா வழிபாடே வேண்டாம் றீங்களா?”

“இல்லை இல்லை, அதை சொல்ல நான் யார்? இங்கு ஒன்றை கவனிப்போம். பட்டம் முடிப்பது நம் லட்சியம். பட்டப் படிப்பிற்கு முதலாம் வகுப்பு பாடங்களும் வேண்டாம் என்று சொல்லத் தகுமா?”

“அதெப்படி.. முடியாதே..சாமி”

“அப்படி தான், இதுவும். சற்று தேவையாக உள்ளது. நம் பின் வருவோருக்கு, குழந்தைகளுக்கு இதுபோன்ற நம்பிக்கயை ஏற்படுத்தும் அளவிற்கு மட்டும் அவசியமாக உள்ளது. ஆனா குழந்தை வளர வளர நாம தான் எதை எதற்கு செய்தோமென்றும் சொல்லித் தந்து, அதன் மூலம் அவர்களை தெளிவா சிந்திக்கவும், தேவையற்றவைகளை களைந்து விடவும், இது நம் வீடு இதை நாம் தான் மெல்ல மெல்லவேனும் சரி செய்துக் கொள்ளவும்வேண்டுமென்று முற்படுத்தனும்.

அதுபோல எடுத்த உடனே மதத்தையோ சாதியையோ சட்டுன்னு உதறி தூக்கி வீசிடவும் உன்னாலோ அல்லது என்னாலோ எல்லோராலும் உடனே ஆகாத காரியம். உலகம் முழுக்க இது தான் சரி, இது தான் கடவுள்னு ஊறி போச்சி. ரத்தத்தோட ரத்தமா அணுவோட..அணுவா நமக்குள்ள சிற்றணுவாகூட பரவி போச்சி. என்ன ஒரு அறை அறைஞ்சி பார்.. ‘ஐயோ ஈஸ்வரான்னு தான் கத்துவேன். “

“அதெப்படி சாமி நீ சரியான ஆளு போ..”

“இரு இரு அவசரப் படாத. வேறென்ன செய்ய.., நான் அப்படி கத்துற மாதிரி தானே வளர்ந்திருக்கேன். நாம எல்லோரும் அப்படி தான் வளர்ந்திருக்கோம். வளர்க்கப் பட்டிருக்கோம். இடையில பட்டுன்னு எதையும் நம்பாதே, எல்லாத்தையுமே யோசி, நான் திடீர்னு வந்து எல்லாம் பொய்யின்னா ஏத்துக்குவியா? முடியுமா? முடியாதில்லையா??”

” அப்போ ஆகமொத்தம் நாம செய்யறதெல்லாமே தப்பூன்ரீங்களா சாமி?”

“கண்டிப்பா இல்ல திருமேனியா. நான் சொல்ல வரதையே நீ புரிந்துக் கொள்ள மாட்டேன்றியே. நான் சொல்ல வரது கடவுளை மொத்தமா இல்லைன்னு அல்ல, அதை என்னாலும் கூட ஏற்க முடியாது ஆனா எதற்காக அடித்துக் கொள்கிறோமோ எதற்காக வெட்டி மாண்டுக் கொள்கிறோமோ எதற்காக நான் நீயென மனிதரை மனிதரே கொள்கிறோமோ அதலாம் பொய்யி…., விட்டுடுங்கோன்றேன்.

அதுக்காக ஒண்ணுமே இல்ல, எல்லாத்தையும் விட்டுடனும்னு நான் சொல்ல வரல. ஆனா யோசி, நடுத்தரமா யோசி, எதை எதற்காக செய்கிறோம்றதை மட்டும் சிந்தித்துக் கொள். மனிதன் முக்கியம், மனித உணர்வுகள் முக்கியம்றதை மட்டும் லட்சியமா வைத்து சிந்தித்து வா. உன்னை யோசிக்க வைப்பது தான் என் வேலை, அதுக்கு தான் தியானம் செய்யுன்னேன்.

—————————————————————————————

மாலன் சொல்லிவிட்டு அவர்களை பார்க்கிறார். அவர்கள் தியானத்தை பற்றி கேள்வியெழுப்புவதற்குள் அவரேசொல்கிறார்.. ஆனால் அதை அடுத்த பதிவில் பார்ப்போம் – காற்றின் ஓசை – தொடரும்..

Posted in காற்றின் ஓசை - நாவல் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

முகில் பதிப்பகத்தின் புதிய வெளியீடு……..

அன்பு வணக்கம் நட்புறவுகளே..,

அவளின்றி நான்; இறந்தேனென்று அர்த்தம் கொள்!!

நம் எழுத்துப் பயணத்திற்கு தொடர்ந்து ஆதரவு தரும் நட்புள்ளங்களுக்கு என் மணம் நிறைந்த நன்றிகள் நிறையட்டும்!!

பேரன்புடன்..

வித்யாசாகர்

Posted in அறிவிப்பு | Tagged , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

காற்றின் ஓசை (12) சாமியும் ஜாதியும்; தியானமும் மதமும்!

இதற்கு முன் நடந்தது..

வாழ்வின் தடங்கள் புரிவதேயில்லை சிலநேரம். நாமொன்று நினைத்து அதுவொன்றாகி நினைவுகளாக மட்டுமே மீதமுறும் பல தருணங்கள் நம்மை அவ்வப்பொழுது நினைத்து அசைபோட வைத்து, ஒரு கட்டத்தில் எல்லாம் வெறும் மாயை போலென்று எண்ணி ஞானம் முத்தியதாய்; ஓர் அலுத்த கட்டத்தை அனுபவ பாடஉணர்தலை எல்லோருக்குள்ளுமே ஏற்படுத்துவதாக தான் நம் வாழும்நிலை நமக்கமைகிறது.

வெகு ஒருசிலரே அந்நிலையிலிருந்து மாறி நகரும் நிகழ்வுகளை அலுக்காமல் அவைகளை தனக்கான ஓர் பாடமாக்க எடுத்துக்கொண்டு தன் வாழ்க்கையின் மூலம் வாழ்தலை பிறருக்கு உணர்த்தி; ஓர் நல்ல வழிகாட்டியாகவும் நாளைய வரலாற்றிற்குரிய இன்றைய சிறப்பாகவும் வாழ்ந்து முடிக்கிறார்கள். மாலனும் அப்படி ஒரு வாழ்க்கையை வாழவே எண்ணினார்.

தான் விரும்பும் பொருள்களை எப்படி தனதாக்கிக் கொள்கிறோமோ அதுபோல் பிறர் உணர்வுகளையும் மதிக்க தவறக் கூடாதென்பதில் உறுதியாக இருந்தார். தன் ஒவ்வொரு செயலிலும் பிறருக்கான பாதிப்பினை பிறரின் மனவருத்தத்தினையும் எண்ணி எவரும் தன்னால் வருத்தத்திற்கு ஆளாகவேண்டாமென்பதில் அவர் கொண்ட சிரத்தை அவரின் செயல்களில் மிகையாய் தெரிந்தது.

தன்னை பிறர் நோவாதளவிற்கு எத்தனை பக்குவப்படுத்த வேண்டுமோ அல்லது குறுக்கிக் கொள்ளவேண்டுமோ அத்தனை அடுத்தவர் நலன் கருதி தன்னை விஸ்தாரித்தும் கொள்ளவேண்டுமென்று அடிக்கடி சொல்வதோடு நில்லாமல் அப்படி வாழவும் முயற்சித்துக் கொள்கிறார்.

தன் வருமானத்தை விரிவுபடுத்திக் கொண்டால் மட்டுமே பிறருக்கு உதவமுடியுமென்று தன் கடின உழைப்பினால் பல சுயவருமானங்களை ஏற்படுத்தி அதன் மூலம் வரும் வருமானத்தில் கூட நான்கில் ஒரு பாகம் தன் தாய்தந்தை மற்றும் மனைவியின் பெற்றோர் நலனுக்காவும், ஒரு பாகத்தை தன் குடும்பநல முன்னேற்றத்திற்காகவும், இன்னொரு பாகத்தை பிள்ளைகளளின் எதிர்கால சேமிப்பிற்காகவும், மீதமொரு பாகம் சமுகத்தின் ஏழ்மை நிலையகற்றும் முயற்சிக்ககென்றும் தன் வாழ்தலை சமூகத்தோடு இனைத்தே வருகிறார் மாலன்.

கடவுளென்னும் ஒரு சக்தியின் மீது கொண்ட நம்பிக்கையினால் தான் அடைந்த நலன்களையும், கடவுள் மேல் தான் கொண்டுள்ள பக்தியின் ஆழம் ‘தனக்கு போதித்த போதனைகளையும், தனக்கு அருளிய செல்வாக்கினையும் பிறருக்கும் கிடைக்கப்பெற அதிகபட்ச அக்கறை கொண்டார். கடவுள் நம்பிக்கையினை வெறியின்றி ஏற்படுத்திக் கொள்ள, மனிதனின் பண்பு குளையாது பிற உயிர்கள் வருந்தாமல் வளர்த்துக் கொள்ளப் பரிந்துரைத்தார்.

அவரை பொருத்தவரை, ‘பிறரை நோவாத பக்தியே ஞானம் என்பது அவர் கணிப்பு. கடவுள் என்றொரு சக்தி இருப்பதாக நம்புவதில் ஒரு ஆன்ம திருப்தியையும் பிற பலனையும் உணர்ந்தாலும், நகரும் பொழுதெல்லாம் அவன் செயலென நகர்ந்து அக்கடவுளின் அதிர்வுகளை ஆத்மார்த்தமாக உள்வாங்கினாலும் ‘யாரிடத்தும் கடவுள் பற்றிய வாதம் செய்வதில் பயனில்லை என்பதனை முடிவாக கொண்டிருந்தார். அது ஒரு நம்பிக்கை மட்டுமே. நம்பிக்கையை நம்புவோரிடத்தில் ஏற்படுத்தலாம், எவரிடத்தும் கட்டாயப் படுத்துதல் முறையில்லையென்பது அவரின் இன்னொரு குறிக்கோளாக இருந்தது.

அதேநேரம், வெறுமனே வெடுக்கென பிடிங்கிய உயிர்போல கடவுளில்லை என்று சொல்லுமொரு நன்றியற்ற செயலை தான் செய்து விடவேண்டாமே என்பதில் கவனாமாகவும் இருந்தார். ஆயினும், இன்று கடவுள் உண்டென்பதை மீறி, தான் எண்ணிய வண்ணமெலாம் வணங்குதல் கடந்து, அதற்காக போட்டியுமிட்டு பிறரை நிந்திக்கவும் செய்யும் மனிதரின் மனவோட்டத்தை மாற்றும் வண்ணம், தான் வணங்கும் கடவுளிற்குரிய பக்தி நெறியின், வழிமுறைகளின், காரணகாரணி என்ன என்றெல்லாம் சிந்தித்து, அதை பிறருடன் பகிர்ந்தும் கொண்டால், அந்த கடவுளின் மீதான ஒரு வெறி அகன்று பக்தி மட்டுமே மிச்சமாகுமோ என்றொரு ஏக்க எதிர்ப்பார்ப்பும் அவருக்கிருந்தது.

அங்ஙனம் தன் சிந்தனைகளை தன் கடவுள் சார்ந்த அனுபவங்களை தான் அறிந்த உணர்ந்த ரீதியில் மட்டுமே திருமேனியன் மற்றும் அவரோடு வந்த பிற தோழமைகளிடத்தும் பகிர்ந்து கொள்கிறார்.

திருமேனியனும் அவரோடு வந்தவர்களும் அவரோடு பேசி பேசி ஒன்றி நட்புற்று முழுதும் தன்னை அவரின் மனநிலைக்கே ஆட்படுத்திக் கொண்டவர்களாக ஆக்கிக் கொண்டனர். அந்நிலையில் மதிய உணவையும்முடித்து காற்றாட அமர்ந்து கடவுள் பற்றியும் வாழ்க்கை பற்றியும் நிறைய பேசுகிறார்கள் அவர்கள்.

“எங்க எங்கயோ பேசி எங்க எங்கயோ வந்துட்டோம் பாருங்க சாமி..”

“ஆமா.. பேச ஆயிரம் விஷயம் இருக்கு.. இப்படி வாக்குவாதம் இல்லாம பேசி புரிந்து கொண்டால் நிறைய பேசலாம் நிறைய புரிந்து கொள்ளலாம், நான் ஊரில் கூட என் தோழர்களோடு பேச அமர்ந்தால் இரவெல்லாம் பேசுவோம். யாரும் யாரையும் வக்கிரமாக எதிர்கமாட்டோம், ஒருவரின் தகவல்களை ஒருவரோடு பகிர்ந்துக் கொள்வதே எங்களின் நோக்கமாக இருக்கும். தவறென்றால் கூட அப்படியல்ல அது இங்ஙனம் தவறு அலல்து இவ்வாறு சரியென்று தன் மாற்றுக் கருத்தை மணம் வலிக்காமல் சொல்வோம். நான் தான் சரியோ தவறோ பேசிக் கொண்டேயிருப்பேன்”

“அதலாம் சரியா தான் சாமி பேசுறீங்க..”

“இல்லல்ல, அது உங்க நம்பிக்கை. நம்பினோரோடு பேசுவது அலாதி. அதுக்காக நான் சொல்றதுக்கெல்லாம் நீங்க ஆமாம் போடனும்னு அவசியமில்ல, என் சிந்தனையை சொல்லசொல்லி கேட்குறீங்களே, அதுக்கே நான் நன்றி சொல்லணும்..”

“என்னங்கையா நன்றின்னெல்லாம் சொல்லி பிரிக்கிறீங்களே.., இவ்வளோ தூரம் நம்ம சமூகம் வாழனும் நம்ம தமிழ் ஜாதி நல்ல கருத்துக்களை வளர்த்துக்கணும்னு இவ்ளோ செயரீங்களே பெருசில்லையா?”

ஒருவர் சொல்லி நிறுத்த இன்னொருத்தர்.. “ஆமாமா எத்தனை நாடு எவ்வளவு மக்கள்னு பார்க்குரீங்களே உங்களுக்கு தெரியாததா…, நீங்க பேசுங்கையா”

“மாலன் சிரித்துக் கொண்டார், அப்படியல்ல இது, நான் சொல்வது எதுவுமே ஒரு முடிவான தகவலில்லை, தீர்ப்பு ஒன்றுமில்லை என்பதை கண்டிப்பா நீங்க புரிந்துக் கொள்ளனும். இது போல நீங்க சிந்தித்து அனுபவித்து ஆழமா அர்த்தமா உணர்ந்தீங்கனா; பிறகு எது உண்மையோ எது சரியோ அதை எடுத்துக்கலாம். அதுவரையும் கேட்டுக்கோங்க தப்பில்ல, அதுக்காக முழுசா இதுதான் வேதம்னு நம்பிடாதீங்க”

“உங்க மேல நம்பிக்கை இல்லாமையா சாமி இவ்வளோ தூரம் வந்து உட்கார்ந்து கேட்டுன்ருக்கோம்” திருமேனியன் குறுக்கிட்டார்

“அது வேற திருமேனியா, நம்பிக்கைன்றது வேற, இதுல நான் யாரயும் நம்பாதேன்றேன். யார் சொல்றதையும் ஏற்று நம்மை செயல்படுத்த வேண்டாம்றேன். எல்லாத்தையும் கேட்டு நாம ஒவ்வொருத்தரும் சிந்திக்க துவங்கனும்றது தான் என் வேண்டுகோள். இது என் அனுபவம், இதை வைத்து உன் அனுபவத்தை எடுத்துக்கோ..” அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே மாலினி வந்து எல்லோருக்கும் தேனிர் கொடுத்துவிட்டு குடிக்கும் வரை நின்று தேனிர் குவளையை வாங்கிக் கொள்ள மாலன் அவருடையதை மட்டும் திருப்பிக் கொடு என்று வாங்கிக் கொண்டார்.

“பரவாயில்லை நீங்க பேசிக் கொண்டிருங்க நான் கழுவிக்கிறேன்..”

“பரவாயில்லை மாலினி நானே கழுவிக்கிறேன், தேனிர் பிரமாதம், மதிய சாப்பாடு கூட குழம்பு கூட்டு பலகாரமெல்லாம் அற்புதமா இருந்தது சொள்ளமரந்துட்டேன்…”

மனைவியிடம் என்னவோ புதிதாக பேசுவது போல பேசுறாரேன்னு பார்த்திருப்பார்கள் போல் அவர்கள், என்னாச்சு, என்னடா பொண்டாட்டிய புகழறுனேன்னு பார்க்குறீங்களா..? சமையல் ஒரு கலை. அது யார் செய்து நல்லா இருந்தாலும் நல்லா இருக்குன்னு சொல்லிடனும். உழைப்புக்கு எப்பவும் அங்கிகாரம் தரனும். உழைப்பவர்களை பாராட்டனும்..”

“நான் நல்ல இல்லைனா பெருசா கண்டுக்கிறதில்ல சாமி, நல்லாருந்தா நல்லாருக்குன்னு சொல்லிடுவேன்..”

“அப்போ என் மனைவி சமைத்தது நல்லால்லன்றீயா……….?”

“அச்சச்சோ பிரமாதம், அருமையா செய்தாங்க அன்பா பரிமாறுனாங்க. நீங்களும் எங்க கூடவே சாப்பிட்டிருக்கலாமே ம்மா”

“அது முறையில்லை சகோதரா. வீட்டுக்கு வந்த விருந்தாளிகளை நல்லா உபசரிப்பது நம் முக்கிய பண்பு. நான் என் வயிற பார்துன்ருப்பேன், நீங்க உங்களுக்கு என்ன தேவைன்னு சொல்லாம போதும்னு எழுத்ந்துட்டா நான் சமைத்ததுல உணவு பரிமாறினதுல ஒரு அர்த்தமே இல்லாம போயிடும்..”

“இதலாம் தான் நம் பெண்மணிகளின் சிறப்பு ஐயா, சற்று இருங்க வருகிறேனென்று கேட்டுக் கொண்டு அவர் குடித்த தேனிர் குவளையை அவரே சென்று கழுவி மாளினியிடம் கொடுத்து விட்டு மீண்டும் அவர்களோடு வந்து அமர்ந்துக் கொள்கிறார்.

“ம்ம்… சரி சொல்லுங்க.., என்ன பேசினோம்..? ஆங்.. .. கடவுள் பற்றி பெசினோமில்லையா.. சாமி இருக்கான்னு தானே கேட்டீங்க..”

“சாமிய விட மாட்டீங்க போலிருக்கே..”

“வேணாம்னா விட்டுடுவோம்.. வேற பேசுங்க..”

“இல்ல சாமி அவன் கிடக்கான் நீங்க சொல்லுங்க”

“வேண்டாம் திருமேனியா விருப்பமில்லாததை ஏன் வீணா பேசுவானேன்..”

“அப்படியெல்லாம் இல்ல சாமி நான் சும்மா அப்படி வாய்ல வந்ததை சொல்லிட்டேன் கொபிச்சிக்காதீங்க..நாங்க வந்ததே அதை பற்றி கேட்க தானே வந்தோம்..”

“மிக நல்லது ஐயா, உங்களிடம் கொபமென்ன சொல்றேன் கேளுங்க.. ”
திருமேனியன் அவர் பக்கம் திரும்பி உட்கார்ந்துக் கொண்டான், அவர் வாயசைவையே, முகபாவத்தையே என்ன சொல்ல வராரோ என்பதுபோல் பார்த்தார்..
————————————————————————————————————
மாலன் நிறைய பேசியிருக்கிறார் என்பதால் அதை இன்னொரு பதிவில் தனியாக பார்ப்போமே!!! அதுவரை ‘காற்றின் ஓசை’ – தொடரும்..

Posted in காற்றின் ஓசை - நாவல் | Tagged , , , , , , , , , , , , | 9 பின்னூட்டங்கள்

சும்மா; அதிரவைக்கும் எந்திரன், சங்கரின் ரோபோ(ட்)!!

லகத்தின் வாசலை
எனக்காய் திறந்து விட்டுக் கொண்ட ஒரு சந்தோஷம்..

ஒரு தமிழனின் வெற்றியை
உலகின் நெற்றியிலெல்லாம் திறமையால் ஒட்டிவிட்ட ஒய்யாரம்..

ஒரு சாமானியனின் முயற்சிக்கு
ஒரு படைப்பாளியின் கனவுக்கு கிடைத்த கம்பீர பரிசு..

ஒரு வண்ணக் கனவிற்கு வாய் முளைத்து கைமுளைத்து
தன்னை கணினியில் புகுத்தி –
மீண்டும் கணினியிலிருந்து புதியதாய் பிறந்து
மொழி கடந்து இனம் கடந்து உலக உருண்டையை வலம்வர செய்த
ஒரு கணினி திரை காவியம்..எந்திரன்!

ஜினி என்ற மந்திரத்தின் சக்தியை மறக்கடித்த
சங்கர் எனும் திறமைசாலியின் –
ஒரு நல்ல பிரம்மிக்கத் தக்க படைப்பாளியின்;
மோதிரப் படைப்பு..எந்திரன்!

எதையேனும் செய்வேன்.. செய்வேனென்று தேடி
தடுக்கி விழுந்த இடமெல்லாம் தெரியும் குற்றங்களை
தன் திரை சித்திரமாய் தீட்டியவர் – சற்று குற்றங்களை மறந்து
நம் வல்லமையை உலகிற்கு காட்ட இரவுபகல் பாராது
ரசனை; சொட்ட சொட்ட உழைத்த உழைப்பு..எந்திரன்!

கொடுத்ததை கொடுக்கும் கணினியின் சிந்தனையில்
கொடுக்காததை எல்லாம் நினைக்கும் ‘மனதின் உணர்ச்சி புகுத்திய
ஒரு ஒற்றை மனிதனின் ரசனை ஜாலம்;
அந்த ஒற்றை மனிதனின் ரசனை ஜாலத்திற்கு – மொத்த
குழுவும் ஒத்துழைத்த உழைப்புப் பொக்கிஷம்..எந்திரன்!

ரு பெண்ணின் அழகை –
மனசு கொச்சையுறாமல் ரசிக்க வைத்த வித்தை;
அசைந்து அசைந்து அவள் நகரும் ஒவ்வொரு துளியிலும்
ஆண்களின் இதயத்தை ஸ்ட்ரா போடாமலே உறிஞ்சி குடிக்கும்
ஆட்டம் பாட்டு அட்டகாசம்.. எந்திரன்!

ஒரு அடடா… எனும் அலுப்பினை கூட
தமிழச்சி அச்சு மாறாமல் காண்பித்த நடிப்பின் அபாரம்,
காமத்தை உடலெல்லாம் புதைத்துக் கொண்டு –
கண்களில்; கோபத்தையும் காதலையும் புன்னகையாய் பூக்கும் ஒரு
இந்திரஜால திகைப்பு, எந்திரன் கதாநாயகி…யின் உழைப்பு!

ரு சாதனை நாயகனின் வெற்றி ஏக்கத்தை
தோல்வியின் வலியை, கோபத்தை, கருணையை, பயத்தை,
பொறாமையை, காதலை, ஸ்டெயிலை………
இத்தனை வயதிலும் காட்டும் வசீகரனின்
ரஜினி என்னும் – நல்மனதின்; நம்பிக்கையின், பலன்..எந்திரன்!

நடனத்திலிருந்து சண்டை காட்சியிலிருந்து
கைசுழற்றி பேசிடாத வசனம் வரை –
இயக்குனர் சொன்ன பக்கமெலாம் திரும்பி நின்ற ரஜினியின்
உழைப்பும் நம்பிக்கையும் ஒரு கண்ணிய படைப்பாளிக்கு அவர் தந்த
மதிப்பும் தொழில்பற்றும் ரஜினியை ரஜினி என்று ஒப்புக் கொள்ளவைக்கிறது
இந்திரனின் இரண்டாம் பாகத்திற்கு அச்சாரம் போடச் சொல்கிறது!

படம் முடிந்து வெளியே வருகையில்;

ரோபோடா.. ரோபோடா… இது ரோபாடா…
தமிழன் ஜெயிச்சாண்டா.. ஜெயிச்சாண்டா…
தமிழன் தமிழன் ஜெயிச்சாண்டா… என்று மார்தட்ட வைக்கிறது –
இசை புயலின் வேகமும் ‘அழகில் மொத்தமும் நீயா..எனும் ரம்யபாடலும்..
இன்னும் நிறைய இடங்களுமென நிறைகிறான்.. எந்திரன் மனதிற்குள்!

கிளிமாஞ்சாரோ பாட்டின்; அரிமா அரிமா.. பாட்டின்
ஒவ்வொரு காட்சியிலும் தயாரிப்பாளர் இயக்குனருக்கு தந்த சுதந்திரமே
இப்படத்தின்; ஒரு உண்ணத கலைஞனின் ‘திறமையின் சவாலுக்கான
வெற்றியின் திறவுகோல் என்பதை –
மறைக்காமல் ஒப்புக்கொள்ள வைக்கிறது..

உலகத் தரத்திற்கு பிரம்மாண்டத்தை மட்டுமே எடுத்து
அதற்கு பல ஆஸ்கார் விருதுகளை கொடுத்துக் கொண்ட அந்நிய தேசத்திற்கு
‘உன் பிரம்மாண்டத்திற்கு சற்று என் உணர்வுகளை தருகிறேன்,
எங்களின் மண்ணின் உணர்ச்சியை தருகிறேன் பார் என்று
ஒரு தமிழன் அடித்த உணர்வு பறை; பறைசாற்றிய வெற்றி;
என்னாலும் எங்களாலும் உன்னலவிற்கு உழைக்க முடியும்,
உன்னை மிஞ்சி நிற்க முடியும் என்று –
இந்திய வாசலில் நின்று ஒரு தமிழனும் தமிழர் கூட்டமும் காட்டிய
வீரிய வீராப்பு – ஒரு பிரம்மிக்க தக்க படம்.. எந்திரன்!

தமிழகம் தாண்டி –
இந்திய திரையுலகை சற்று அதிர்ச்சியோடு பார்க்கவைத்து
ஒரு பிடி அதன் தரத்தை வெற்றிகளின் போராட்டத்தை –
தொழில்நுட்ப நூதனங்களை அறிவியல் ஆதாரபூர்வத்தோடு
அறிவின் மேன்மையோடு சற்று மேலேற்றி விட்டுவிட்ட சாதனை..எந்திரன்!

ஆங்கிலம் புரியாத அந்நிய மொழிப்படங்களை
என் கிராமத்து கொட்டகையில் அமர்ந்து வாய்பிளந்து பார்த்த
எனை போன்றோருக்கு –
அதே என் கிராமத்து கொட்டகையில் அமர்ந்து
புரியும்; இனிக்கும்; என் அழகு தமிழில் பார்த்து ரசிக்கக் கிடைத்த
அதே; அனகோன்டா வரிசைகளை உடைத்துப் போட்ட –
முதல் தமிழ் படம்.. எந்திரன்!

பார்ப்பவர் ஆயிரம் பேசலாம்
தன் எண்ணத்தில் வந்தவாறு என்ன வேண்டுமானாலும் சொல்லலாம்,
இதிலாவது என் தமிழன் வென்றான் என்று நான்
மனதார ஒரு நிம்மதி மூச்சுவிட்டு – மூன்று மணிநேரத்தை
என் வரவுக் கணக்கில் எழுதிக் கொண்டேன்..,

ஒரு ‘இந்தியன்’ படமெடுத்தார் – சங்கர்
லஞ்சத்தின் புரட்சி இந்திய எல்லை வரை தொட்டது,
அந்நியன் படமெடுத்தார் –
அங்குலம் அங்குலமாக எம் தவறுகளின் அவலம் காட்சியாகி
உலகின் கடைகோடி தமிழனையும் இந்தியனையும்
இதலாம் தவறு தானே என்று சிந்திக்க வைத்தது,
இப்பொழுது எந்திரனை இயக்கி –
உலகின் கண்களில் என் தமிழன் கலைதிறனை காட்டி
ஊசிவைத்து குத்தாமல் உச்சுகொட்டவைத்து –
என் மண்ணில் விதைக்க கணினியை விதையாக்கி
பல கனவுகளை நடுவாக நட்டு – நாளைய பல பிரம்மாண்டத்தின்
இன்றைய முதல் புள்ளிகளாகிவிட்டனர் சங்கரும்.. அவர் குழுவினரும்..

பாடல் வரிகளில் நியூட்டனை அழைத்து
வசனத்திற்கு வசனம் சிந்திக்கவும் சிரிக்கவும் வைத்து
நம் பொன்னான நேரங்களை எழுத்தாக கரைத்துக் கொண்ட
கவிப்பேரரசு, ஐயா சுஜாதா, பா.விஜய், கார்க்கி மற்றும்
ஏனைய எழுத்தாளர்களுக்கும்,
நம் அன்பிற்குரிய ரஜினிக்கும்,
உலகின் அழகுகளின் அழகுதேவதை ஐஸ்வர்யா ராய் அவர்களுக்கும்,
வெள்ளித்திரையில் மட்டுமே சென்று பார்க்க தன் இசைதிறனால்
கட்டாயப் படுத்தாது கட்டாயப் படுத்திய ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களுக்கும்,
மற்றும் இணை இயக்குனர்கள்,
சில காட்சிகளில் வந்தாலும் சிரிக்க வைத்த கருணாஸ்,
சந்தானம் மற்றும் சண்டை காட்சி, ஒளிப்பதிவு, காட்சிசீரமைப்பு,
நடன இயக்கம், கட்டிடக் கலை, ஒப்பனை, இடம் தேர்வு செய்த குழு,
இன்ன பிற உதவியாளர்கள்,
கைகாட்டிய இடத்திற்கெல்லாம் கொண்டு சேர்த்த வாகன ஏற்பாடு போன்ற திரையின் பின்னால் உழைத்த அத்தனை பேருக்கும்,
இவர்களை வழி நடத்திய சரித்திர நாயகன் சங்கருக்கும்,
இந்த மொத்த பேருக்குமே ஒரு உயர்ந்த வாய்ப்பினையளித்த
சன் பிக்சர்ஸின் உரிமையாளர் கலாநிதி மாறன் அவர்களுக்கும் நம் மனமார்ந்த பாராட்டினை –
எந்திரன் – பாகம் இரண்டு’ எடுக்குமளவு வெள்ளித் திரையிலேயே காட்டுவோம்!

மிழ் திரையின் ஒரு உச்சபட்ச கதவினை தன்
வியாபார அறிவினால் திறந்து நம்பி –
என் தமிழரின் திறமையை ஒரு திரைபடத்தின் வாயிலாக
உலகரங்கம் வரை கொண்டு சென்ற கலாநிதிமாறனுக்கு என்
மனம் நிறைந்த நன்றியை சமர்பித்து –
இப்படத்திற்கென உழைத்த அத்தனை பேருக்குமே –
அத்தனை ஆஸ்கார் கிடைத்த மகிழ்வினை பரிசாக்கி
ஒருவேளை, இப்படத்திற்கு அவ்விருது கிடைக்காவிடில் ‘இனி
அதை விருதென்றே எண்ண மறப்போம்; முடிந்தால் மறுப்போம்!

இதுபோன்ற உழைப்பின் திரைசித்திரங்களுக்கு மீண்டும் நம் கனவினையே விருதென எண்ணி உலகின் மொத்தபரப்பிலும் விரிப்போம்!

தமிழிலேயே பார்க்க தகுந்த ஒரு உலகத் தர திரைப்படத்தை கைதட்டி வரவேற்போம்!!

வித்யாசாகர்

Posted in திரை மொழி | Tagged , , , , , , , , , , , , , , , | 14 பின்னூட்டங்கள்