திருநெல்வேலி அல்வாவும் பலகோடி பணமும்!!

ள்ளியில் கட்டுரை போட்டியிலோ ஓவியப் போட்டியிலோ கலந்துக் கொள்ளும் ஒரு மாணவனை அழைத்து ‘இந்தா நீ உலகத்தின் முதல் விருதினை பெற்றாய்’ என்று கையில் கொடுத்தால் அந்த மாணவனின் முகத்தில் எத்தனை வெளிச்சங்கள் சிரிப்பாய் பிரகாசிக்குமோ அப்படித் தான் பிரகாசித்தான் இனியன். தமிழினியன் அவன் முழு பெயரென்றாலும் இனியனென்றே நண்பர்கள் அழைத்துக் கொண்டு அவன் பின்னால் ஓடினார்கள்.

இனியனுக்கு வாழ்வின் அத்தனை வெற்றிகளும் உள்ளங் கையில் விழுந்து கிடப்பதாய் ஒரு சந்தோஷம், வானத்தையும் பூமியையும் மாறி மாறி பார்க்கிறான், எதை விலைக்கு வாங்குவது வானத்தையா பூமியையா என்று சிந்தித்திருப்பான் போலும். அப்படி ஒரு துணிவு, துடிப்பு, துள்ளல், அவனுக்குள் இன்று.

“வா.. வா… எல்லோரும் வாங்க.., இன்னைக்கு எல்லாருக்கும் விருந்து இருக்கு.., அதும் எங்க தெரியுமா ஐந்து நட்சத்திர விடுதியில விருந்து” சத்தம் போட்டு கத்தினான் இனியன்.

அப்படி என்ன தான் நிகழ்ந்து விட்டது இவனுக்கென்று திகைத்துபோய் பார்க்கிறார்கள் அவனுடைய நண்பர்களெல்லாம். இனியனொன்றும்  அத்தனை சாதாரணமானவன் அல்ல. வீண் பேச்சி பேசியோ வெட்டியாக அரட்டை அடித்தோ திரிபவனல்ல. இக்கால இளைஞர்களுக்கு முன்மாதிரி இளைஞன். சுருக்கமாக சொன்னால் திரைப்படங்களில் நடித்திடாத ‘வாழும் கதாநாயகன் என்று சொல்லலாம் இனியனை.

“இனியா.. இனியா.. சொல்லுடா.. என்னடா ஆச்சு அப்படி, (இ)தோ பார்.. இனியும் நீ சொல்லலைன்னா நாங்க எல்லாம் திரும்பிப் போய்டுவோம். அப்புறம் நீ தான் எங்களை தேடி தேடி வந்து சொல்லணும்”

“சொல்லக் கூடாதுன்னு இல்லடா, சொன்னா நம்புவீங்களா, நான் ஒரு பெரிய கோடீஸ்வரன் ஆகப்போறேன் ரவி, என்னால இனி எதையும் அப்படி சொடுக்கினா வாங்கிட முடியும்”

நண்பர்கள் திகைத்தார்கள். என்ன ஆச்சு இவனுக்கு. ஏதேனும் கனவு கினவு காண்பதாக நினைத்து பெனாத்துகிறானா அல்லது லாட்டரி கீட்டரி ஏதாவது… “ஹா..ங்………… எனக்கு தெரிஞ்சி போச்சு………..”

“இனியா எனக்கு தெரிஞ்சி போச்சு”

“என்ன தெரிஞ்சி போச்சு மலர்?”

“உனக்கு நம்மூரு பம்பர் லாட்டரி அடிச்சு போச்சி……..”

“அடப்போடா… அதலாம் எப்பவோ நிறுத்தியாச்சி தெரியாதா”

“அப்போ..,  இன்னைக்கு ஏப்ரல் பூல்…..”

“ச்ச ச்ச.. நான் சொல்வது சத்தியம், இன்னும் இரண்டே நாள்ல நான் தான் நம்ம ஊர்லையே ஏன் தமிழகத்துலையே இந்தியாவிலேயே பேசப்பட போற முதல் ஆளாக போறேன்”

“டேய்.. ரவி.. மலர்.. வாசு.. வாங்க போலாம். இவனுக்கு ஏதோ ஆயிடுச்சி..டா”

“நில்லு மணி, இங்க பார்.. ஐம்பது மில்லியன்.., ஐம்பது மில்லியன் டாலர்.., நம்மூரு பணம் எவ்வளவு தெரியுமா ‘இருநூற்றி இருபத்தொன்பது கோடியே, எழுபத்தொன்பது லட்சத்து, தொன்னூற்றியொன்பதாயிரத்து, தொள்ளாயிரத்து ஐம்பத்துநாலு ரூபா இருபத்தியிரண்டு பைசா..”

இனியன் நீட்டி சொல்லி மூச்சு விடுவதற்குள் வாய்பிளந்து ஓடி வந்தார்கள் நண்பர்களெல்லாம். படக்கென அந்த தாளை மடக்கி சட்டை பையில் போட்டுக் கொண்டான் இனியன்.

“நான் சொல்றதை கவனமா கேளுங்க. இது, என்னோட பணம் மட்டுமில்ல, உங்களோட பணமும் கூட”

“என்னடா இனியா, உனக்கு ஒன்னும் ஆயிடலியே என்னென்னவோ சொல்ற, ஏதேதோ காட்டுற எங்களால நம்பவே முடியலேயேடா”

“முதல்ல நானும் நம்பலடா ரவி, பொய்யின்னு தான் விட்டுட்டேன், பிறகு தான்…. ‘இங்க பார் என்னோட பேர்ல செக்கு, வங்கியில போட்டு எடுக்க சிபாரிசு கடிதம்ன்னு எல்லாம் அனுப்பினாங்க, அதனால தாண்டா நானே நம்பினேன்..”

“எங்கருந்து வந்திருக்கு, யார் அனுப்பினா, எதையுமே விவரமா சொல்ல மாட்டேன்றியேடா  இனியா, சரியா சொன்னா நாங்களும் அதை யார்கிட்டையாவது கேட்டு உறுதி படுத்துவோம்ல”

“அதலாம் விடு மணி.. ஒரு கனவு போல இருக்கு தெரியுமா. ஒரு புத்தகம் வாங்க, கல்லூரி கட்டணம் அடைக்கன்னு எவ்வளவு எல்லாம் கஷ்டப்பட்டிருப்போம் அதுக்கெல்லாம் ஒரு விடிவுடா இது. எப்படின்னெல்லாம் கேட்காதிங்க, உடனடியா எனக்கு பணம் வேணும் ‘ஒரு லட்சத்தி முப்பத்தி ஐந்தாயிரம் வேணும்’ யாராவது ஏற்பாடு பண்ணுவீங்களா”

“ஒரு லட்சத்தி முப்பத்தி ஐந்தாயிரமா?????” நண்பர்கள் வாய் பிளந்து நின்றார்கள். மணி, மலர், ரவி, அழகன், இனியன் எல்லோரும் கல்லூரி முடித்து வேலை தேடி அலைந்து ஏதும் சரியாக கிடைக்காததால் பகுதி நேர ஊழியர்களாக கிடைக்கும் இடங்களில் கிடைக்கும் வேலைகளை செய்துவரும் லட்சிய இளைஞர்கள்.

இவர்களில் இனியன் எப்போதுமே சமூகம் பற்றியும் தன் பெற்றோர் பற்றியும் சிந்தித்து எதையேனும் வாழ்வின் கடைசி நாளிற்குள் சாதித்தே ஆகவேண்டுமென லட்சிய கனவுகளோடு வாழ்பவன். அப்படிப்பட்ட இனியனின் சொல்வதை யாராலும் நிராகரிக்க முடியாமல் பணம் திரட்டுவதற்கான வழியை யோசிக்கிறார்கள்.

“இனியா நான் எப்படின்னா அப்பா கிட்ட பேசி தங்கச்சி கல்யாணத்துக்கு வைத்திருக்கிற பணத்துல ஒரு ஐம்பதாயிரத்தை வாங்கி தரேன் “

“நான் கூட எங்க வீட்ல பேசி ஒரு இருபதாயிரம் வாங்கிக் கொடுப்பெண்டா இனியா” மற்றொருவன் பதினைந்தும், மீதம் ஐம்பதாயிரத்தை மட்டும் இனியன் தயார்  படுத்திக் கொள்ளவேண்டுமென்றும் முடிவெடுத்தார்கள்.

“மச்சி இங்க பாருடா..உன் மேல நம்பிக்கை இல்லாமலெல்லாம் இல்லடா, நீ என்ன சொன்னாலும் செய்வோம். ஆனா என்ன பண்ண போற, எப்படி இதலாம் நடக்கும்னு சொல்வியா?” ரவி கேட்டான்.

இனியன் ஒரு நொடியும் தாமதிக்கவில்லை. தன் கைப்பையில் வைத்திருந்த கோப்புகளை எல்லாம் எடுத்துக் காட்டினான். எல்லோரும் கையெழுத்திட்டு அங்கீகரிக்கப் பட்ட காசோலை மற்றும் இதர படிவங்களையும் மின்னஞ்சல் மடல்களையும் எடுத்து அவர்கள் முன் போட்டு, ஏதோ இணைய லாட்டரியில் பணம் அடித்திருப்பதாகவும், அந்த தொகை மிகப் பெரிய தொகை என்பதால் பேங்காக் வங்கியில் வந்து எடுத்துக் கொள்ள சொல்லி பேங்காக் வங்கியிலிருந்து அழைத்து பேசியதாகவும், பேங்காக் போக இனியனுக்கு கடவுச்சீட்டு அதாவது பாஸ்போர்ட் இல்லாததால் அவர்களே ஒரு உலகவர்த்தக மையம் ஒன்றினை தொடர்புகொண்டு பணம் பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்திருப்பதாகவும், தற்போது அந்த உலகவர்த்தக மையத்தின் மூலம் பரிந்துரைக்கப் பட்ட வக்கீல் ஒருவர் இவனை பலமுறை அழைத்து பேசி அநேகம் நாளைக்கே பணம் இவனுடைய இந்திய வங்கிக் கணக்கிற்கு மாறிவிடும் என்று சொன்னதாகவும், அதற்க்கு முன் இவ்வளவு முன்தொகை இடவேண்டுமென்றும் தவிர இதர செலவெல்லாம் சேர்த்து இரண்டு லட்சம் வரை கட்டவேண்டுமென்றும், அவன் முடிந்தவரை தயார் செய்து விட்டதாகவும் மீதம் இவ்வளவு பணம் தேவைபடுகிறதென்றும் சொல்லிமுடிக்க நண்பர்கள் எல்லோரும் அமைதியாக அவனையே பார்த்தார்கள்.

“ஏண்டா… யோசிக்கிறீங்க, எந்த பணமா இருந்தாலும் பரவாயில்லைடா, கொண்டுவாங்க, இன்னும் இரண்டே நாள், இரண்டே நாள்ல திருப்பிடலாம், இந்த பணம் மட்டும் கிடச்சுட்டா நாமேல்லோருமே கோடீஸ்வரன்களாயிடுவோம்..”

“இதப் பாரு மச்சி, உனக்கு உதவி செய்ய எங்களுக்கு ஒரு ஆட்சேபனையும்  கிடையாதுடா, ஆனா இரண்டு லட்சம்!!! யோசி, நன்றாக சிந்தித்து பார், வெறும் இரண்டு லட்சம் வாங்கிக் கொண்டு இவ்வளவு பெரிய தொகை தருவது சாத்தியமா?” ரவி கேட்க

“ஆமாண்டா இனியா, இணையத்துல இப்படி எல்லாம் நிறைய திருட்டுத்தனம் நடக்குதுடா, உண்மையான சான்றிதழ் மாதிரியே கல்லூரி சான்றிதழ் முதற் கொண்டு அச்சடிச்சி தராங்கடா.., எதுக்கும் வேற யாரையாவது நல்லா தெரிந்தவங்களை கேட்டுக்கடா” மலர் கெஞ்சினான்

“நீங்கல்லாம் எதிர்மறையாவே யோசிக்கிறீங்கடா, நான் அதுக்கெல்லாம் தயாரில்லை, எனக்கு நம்பிக்கை இருக்கு, வெள்ளைக்காரன் ஆங்கிலத்தில் பேசினான், ஜெனுன் பிரின்ட் சான்றிதழ் வந்திருக்கு, இன்னும் என்னடா வேணும், நம்பினா தாண்டா வாழ்க்கை.  எனக்கு இதுல நம்பிக்கை இருக்கு ரவி, முழு நம்பிக்கை இருக்கு. இது மட்டும் நடந்துட்டா, இதை வைத்து எத்தனை பேரோட கண்ணீரைத் துடைப்பேன் தெரியுமா? மொத்த ஏழ்மை இளைஞர்களையும் தத்தெடுத்துக்குவேண்டா, பெரிய பெரிய ஆளா ஆக்குவேன். நூறு இளைஞர்களை சுயமா அவுங்க கால்ல நின்னு உழைக்கிற அளவுக்கு உருவாக்கி அவர்கள் மூலமா ஆயிரம் ஆயிரம் பேருக்கு என்னால வேலை கொடுக்க முடியும்டா ரவி. எனக்கு ஒரு பெரிய கனவு இருக்குடா.. யாரும் எழ்மையா இருக்கக் கூடாது. சாப்பாடுக்காக பொய் சொல்லக் கூடாது. துணிக்காக பொருளுக்காக ஆசைப்பட்டு அடுத்தவன் பொருளை திருடக் கூடாது. என்னால அவனை மாதிரி இருக்க முடியலையேன்னு பொறாமை பட்டு வஞ்சம் வளர்த்து கொலைவரை ஒருவனை ஏழ்மை கொண்டுபோயி விட்டுடக் கூடாது. எரியுற ஏழ்மை நெருப்பு தணல் விட்டு வீட்டின் கூரைவரை எரியறதாலதான் ‘இன்னைக்கு யாரை பார்த்தாலும் கிடைக்கிறத சுருட்ட தயாராயிட்டாங்க. அதலாம் ஒழிக்கனும்னா, அவர்களுக்கு உழைப்பை கொடுக்கணும்டா, உழைத்து சுயமா சம்பாரித்துக்கொள்ள வழி ஏற்படுத்திக் கொடுக்கனும். கட்டுக் கட்டா பணத்தை சுயமா சம்பாரித்து பார்த்துட்டா பிறகு பிறர் பொருள் மேல ஆசை வருமா? நம்மால் முடிந்த ஆயிரம்பேரை அப்படி உருவாக்குவோம், அந்த ஆயிரம் பேர் கிட்டயும் அவர்கள் மூலமா அதுபோல யாரேனும் ஒரு ஏழை மாணவனையாவது படிக்க வைக்க, பெரியாளாக்கி விட வாக்குறுதி வாங்கிக்குவோம், அதே கணக்குல ஒரு ஐம்பது; நூறு; வருடம் தாண்டிபாரு, அடுத்த தலைமுறைக்கு பசி இருக்குமா??  பஞ்சம் இருக்குமா?? அதுக்கு இந்த தொகை வேணும்டா.. வேணும் கண்டிப்பா வேணும்”

எல்லோர் வாயையும் தன் கனவுகளால் அடைத்தான் இனியன். நல்ல எண்ணங்கள் மட்டும் போதாது, அதை ஈடு செய்ய தக்க பாதையும் தேவை என்பதை மட்டும் சிந்திக்க அவகாசமின்றி போனது இனியனுக்கு. அவரவர் அவரவரால் இயன்றதை சேகரித்துக் கொடுத்தார்கள். இனியன் கடைசியாக தன் அம்மாவிடம் கெஞ்சி கேட்க, அவள் வார வட்டிவிடும் கந்துவட்டி கடையில் பேசி என் மகன் தொழில் துவங்கப் போகிறானென்று சொல்லி ஐம்பதாயிரம் வாங்கித் தருகிறாள்.

மொத்தப் பணமும் சேர்த்து இரண்டு லட்சத்தையும் அவர்கள் சொன்ன பேங்காக் வங்கிமுகவரிக்கு அனுப்பப் படுகிறது. இனியனுக்கு ஏக சந்தோஷம். எப்படியும் இரண்டு நாளில் பணம் கைக்கு வந்து விடும். எப்படியும் பத்திரிகைகளுக்கெல்லாம் தெரிந்து பேட்டியெல்லாம் எடுப்பார்கள். ஒரு பாதி தொகையை ‘பொதுசேவை மையங்களுக்கு தருவதாகவும் மீதி தொகையை வைத்து முழுக்க முழுக்க படித்து வேலை தேடும் இளைஞர்களை வைத்து தொழில் துவங்கப் போவதாகவும் பேட்டியில் சொல்லலாம்.

“மச்சான் பணம் வந்த உடனே ஒரு பெரிய கார் வாங்கி அதுல ஒரு சீட்டு முழுக்கக் பீரா வாங்கி அடுக்குறோம்டா.. ஒரு ஒரு வாரத்திற்கு சலிக்கிற வரையும் குடிக்கிறோம், ஆட்டம் போடுறோம், குடிக்கிறோம் ஆட்டம் போடுறோம்.. என்ன மச்சி சொல்ற..” அழகன் இனியனிடம் சொல்லி விட்டு திரும்பி ரவியை கேட்க..

“அதுலையே இருக்காதடா அழகா, உன் பணத்துல குடிச்சாலே எனக்கு பிடிக்காது, இதுல நான் வேற வாங்கித் தருவேனா.. ஆசை தான் உனக்கு. இந்த பணத்துல ஒரு காசு கூட நமக்கு சுயதேவைக்காக எடுக்க போறதில்ல”

“நீ எடுக்காத.., எங்களுக்குக் கொடு..அதலாம் நாங்க பார்த்துக்குறோம்”

“நீங்க வேற நான் வேறையா? அதில்லடா அழகா, நான் சொல்வது அப்படியில்லை, இந்த பணம் நாம் சம்பாரித்த பணமில்லைதானே. நமக்குக் கிடைக்கப் போற பணம்தானே, அதுல பிறருக்கு கொடுக்க உரிமை இருக்கே தவிர நமக்கு அனுபவிக்க எந்த உரிமையும் கிடையாது. வேணும்னா இதை வைத்து நாமும் சம்பாதிப்போம், நம்மலால பிறரையும் சம்பாதிக்க வைப்போம், அதுக்கப்புறம் உன் பணத்துல நீ ஆட்டம் போடு நானும் கூட சேர்ந்து போடுவேன்..”

கனவுகள் சுகமாயினும், கனவுகள் நல்லதாயினும், கனவுகள் கனவுகள் தானே. இனியன் மிக நல்ல கனவு கண்டான். பணம் அனுப்பியதிலிருந்து ஒவ்வொரு நொடியும் கனவுகளோடு வாழ்வினை வெல்லும் பொழுதிற்காய் காத்திருந்தான். என்னதான் நாமாக ஆயிரம் கற்பனை லட்சியமென கோட்டைகளை கட்டிக்கொண்டாலும் ‘எது நடக்க இருக்கிறதோ அதுவே நடத்தப் படுகிறது. அந்த நியதியின் படி ஏற்பட்ட தாமதம் இனியனுக்கு மெல்ல மெல்ல பயத்தை தந்தது. தாமதிக்கும் ஒவ்வொரு நொடி காத்திருப்பும் வலித்தது இனியனுக்கு. நடக்கும் என்பதை தவிர வேறொன்றுமே நினைக்க தயாராகயில்லை என்றாலும் ஒரு பயம் மனதை கவ்வியது.

வாழ்வில் பொதுவாக நாம் எல்லோருமே என்னதான் திடமான நம்பிக்கை வைத்திருந்தாலும் அது சரியான நம்பிக்கையாகவும் இருத்தல் வேண்டும். இதை இனியன் சிந்திக்க தவறி விட்டான். நாட்கள் ஒன்றாய் இரண்டாய் நகர ஆரம்பித்தது. பணம் பெற்ற இடத்திலிருந்து ஒரு தகவலும் வரவில்லை. ஒரு நாளைக்கு ஆயிரம் முறை அழைத்தவன் இப்போது ஒருமுறை கூட அழைக்கவில்லை. நண்பர்கள் மெல்ல மெல்ல நம்பிக்கையை இழக்க ஆரம்பித்தார்கள். அலசி ஆராய்ந்து ‘சில இணையதளம் தரும் வசதி மூலம் தமிழகத்திலிருந்து உலகத்திற்கு எங்கு வேண்டுமாயினும் குறைந்த கட்டணத்தில் அழைக்கவும், அங்ஙனம் அழைக்கையில் பக்கத்து வீட்டு நபருக்கு அழைத்தாலும் வெளிநாட்டு அழைப்பு போல தான் அலைபேசியில் காட்டும், அழைப்பவரின் தொடர்பு எண்ணினை காட்டாது என்பதையும் கண்டுகொண்டார்கள். தகவல் அறிந்து அம்மா பதறி போனாள். பயந்தாள். ஒரு லட்சம் தங்கையின் கல்யாண பணத்தை வாங்கித் தந்த நண்பனின் அப்பா வீடுவரை வந்து சத்தம் போட்டுவிட்டுப் போனார். காவலில் தெரியப் படுத்துங்களில்லையேல் நான் தெரிவிப்பேன் என்று எச்சரிக்கை செய்தார்.

இனியனுக்கு என்ன செய்வதென்றே தெரிய வில்லை. எத்தனையோ மின்னஞ்சல்களை அவர்களுக்கு அனுப்பி வைத்தும் பதிலில்லை. அவர்கள் அழைத்த தொடர்பு எண்ணில் அழைக்க முயன்றாலும் அத்தனை எண்களுமே தற்காலிகமாக அனைத்து வைக்கப் பட்டிருப்பதா தகவல் வந்தது.

கனவெல்லாம் கண்முன் வந்து தன்னை சுட்டு எரிந்தாலும் நம்பிக்கை கொண்டான் இனியன். இன்னும் சற்று அவகாசம் கொள்ளவேண்டும்போல் எண்ணினான். எப்படியும் பணம் வந்துவிடுமென்றே நம்பினான். நடக்காது என்பதை மட்டும் அவனால் நினைக்கவே முடியவில்லை. நடந்தேயாகவேண்டுமெனும் ஒரு தீவிர சூழ்நிலைக்கு தள்ளப் பட்டுப் போனான். அவன் நம்பிக்கை ஒருவிதத்தில் மட்டும் வீண்போகவில்லை. மூன்று நாள் நான்காகி, நான்கு ஐந்தாகி, ஐந்து ஒரு வாரமாக கடந்த பின், வாரம் இரண்டு மூன்றாக நகர்ந்த பின் ஒரு மின்னஞ்சல் வந்தது அவர்களிடமிருந்து.

தான் அனுப்பிய பணம் கிடைத்ததாகவும், மிக்க மகிழ்வென்றும், பணத்தை பேங்காக் வங்கியிலிருந்து அந்த உலகவர்த்தக மையம் எடுத்து விட்டதாகவும், இன்னும் ஒரே நாளில் மொத்த தொகையையும் இவன் கணக்கிற்கு மாற்றிவிடுவதாகவும், உடனடியாக அதை செய்வதற்கான சம்பளமாக ரூ பத்து லட்சம் அனுப்பிவைக்க வேண்டுமென்றும் அனுப்பாவிட்டால் அனுப்பிய பணத்திற்கு நாங்கள் பொறுப்பில்லை என்றும் அந்த மின்னசல் கூறிமுடிய, கணினியை எடுத்து உடைத்துப் போடவேண்டும் போல் இருந்தது இனியனுக்கு.

உடனடியாக அந்த மின்னஞ்சலோடு குறிப்பிடப் பட்டிருந்த தொலைபேசி எண்ணினை கையில் குறித்துக் கொண்டு ஓடினான். ஓடி ஒரு தொலைதொடர்பு கடைக்குள்  நுழைந்து, அவசரம் அவசரமாக அழைத்தான். எதிர்முனையில் யாரோ தொலைபேசியை எடுத்து ‘ஹலோ…. திருநெல்வேலி அல்வா கடையிலிருந்து பேசுறோம் யார்வேனும்’ என்றார்கள். பகீரென்றானது இனியனுக்கு.

“என்னங்க இது பேங்காக் இல்லையா?!!!”

“பேங்காக்கா?????? ஏம்ப்பா இது பேக்கரிப்பா, திருநெல்வேலி அல்வா விக்கிற பேக்கரி, தொடர்பு எண்ணை ஒழுங்க பாரு போனை வைய்யீ………”

இனியனின் கையிலிருந்த தொலைபேசி அனிச்சையாக தவறி கீழே விழுந்துவிட்டது!

———————————————————————————————————-
முற்றும்

Posted in சிறுகதை | Tagged , , , , , , , | 12 பின்னூட்டங்கள்

இது காமம் சொன்ன கதை (சிறுகதை)

வானத்தை அந்நாந்துப் பார்த்து-எச்சில் உமிழும் இளமைப் பருவம்,

‘சரியென்று நினைத்துக் கொண்டே சின்னஞ்சிறு தவறுகளோடு வாழ்கையை நகர்த்தும் – சபலமான மனத் தோன்றல்.

‘சிரிப்பின் அடையாளம் இதுவென்று கண்டு கொண்டு- சகதிகளில் கால்பதிக்கும், நம் கதாநாயகன் காளமேகம் நடந்து போகிறான்..

காளமேகத்தை, கண்டவுடன் பிடித்துவிடும் அத்தனை அழகென்று யாரும் மெச்சிடமுடியாது, ஆனால் பழக பழக தன் நடத்தையினால் தன்னை அழகாக வெளிபடுத்திக் கொள்ளக் கூடிய திறமையானவன் காளமேகம்.

வாழ்கையை எப்படியேனும் ஒழுக்கமாகவே வாழ்ந்து விட வேண்டுமென்றுதான் அவனின் வெகுநாளைய லட்சியம். ஆனால் அவனையும் மீறி அவனை சபலபடுத்துவது எது? யார்? என்ன? என்று தன்னைத்தானே சிந்தித்தவாறு கடைத்தெருவிற்குள் நடக்கிறான். கடைத் தெரு முனையில் ஒரு வடஇந்திய உணவகம் இருக்கிறது. அதில் செக்கச் செவேலென்று ஐந்து பெண்கள் பணியாட்களாக பணிபுரிகிறார்கள்.

அவர்களிடம் சென்று ஒரேயொரு தேனிருக்கு ஆர்டர் கொடுத்தாலும் அதை குடித்து முடிப்பதற்குள் பத்து முறையேனும் அருகில் வந்து- பார்த்து-சிரித்து- உரசி- உபசரிப்பதை நம் காளமேகத்தாலும் நிராகரிக்க முடியவில்லை.

ன்னதான் துணிந்து சென்று ஒரு தேனீர் கூறிவிட்டு அமர்ந்துக் கொண்டாலும், மனசு ஏனோ குறுகுறுத்தது. ஏதோ தவறு செய்ய துணிந்துவிட்டோமோ எனும் அச்சம் இருந்ததவனுக்கு. அவைகளை மறக்கடிக்க அந்த பெண்களுக்கு அதிக நேரம் பிடித்திடவில்லை, அருகில் வந்து நின்று கொன்ன்டால் ஒரு பெண், ஒருத்தி தூரநின்று பார்த்து ம்ம் என்னவேண்டும் என்பது போல் புருவம் உயர்த்தினாள். அவர்களின் இருக்காமான உடை, கவர்ச்சியான சிரிப்பு, காமம் நிறைந்த பார்வையை எப்படி கணக்கிடுவதென்று புரிந்து கொள்ள முடியாமல் பரிதவித்தான் காளமேகம்.

எப்படியோ, மனதை முழுதுமாக கட்டுப் படுத்திக் கொள்ள முனையாமல், அடிக்கடி அந்த கடைக்கே வர ஆரம்பித்தான். இப்படி வருவது கூட தவறு தானோ என்றெல்லாம் யோசித்து ஒரு முடிவெடுப்பதற்குள் அந்த ஐந்து பேருமே அவனுக்கு மிக நெருக்காமான நட்பாகிறார்கள். நட்பில் வீசிய காமவாடை மெல்ல அவனின் நெஞ்சைக் கிள்ளுகிறது.

பகலில் அவர்களோடிருந்து பெற்ற நெருக்கத்தை இரவில் படுக்கையில் விரித்துக் கொள்ள ஆசைப்பட்டான். அந்த ஐந்து பேரில் யாராக இருந்தாலும் பரவாயில்லை, ஒருவரையாவது… ஒருநாளாவது… ஒருமுறையாவது… ‘மனசு மேலே பார்த்து, அவன்மீதே எச்சில் உமிழ்ந்துக் கொண்டது. எச்சிலின் ஈரம் கனவுகளாய் விரிந்தன. ஏதோ ஒரு பெண்ணின், ஒரு இரவிற்காக மட்டும் தயாராகி, நெஞ்சு நிமிர்த்தி நின்றுகொண்டான் காளமேகம்.

ஆனால், அவனின் போதாதகாலம், அந்த ஐந்து பேருமே அவனிடம் நீயா நானா என்று பழகுகிறார்கள். அவனிடம் ஒன்றி போய்விட்டார்கள். இவனும் கிடைக்கும் நேரம் பார்த்து அவர்களிடம் எதையோ உள்மறைத்து பொடிவைத்து பொடிவைத்துப் பேசுகிறான். அவர்களும் அதை சிரித்து ரசிக்கிறார்கள். காலநேரம் பார்க்காது அவர்களுடன் தங்க ஆரம்பிக்கிறான், அவர்களும் அனுமதிக்கிறார்கள். மெல்ல தொட்டுப் பேச முயல்கிறான், தாராளமாக இடம் தருகிறார்கள். தோள்மீது கைபோட்டுப் பார்கிறான். தயங்காது அணைத்துக் கொள்கிறார்கள். இதுதான் சமயமென்று தகாத இடத்தில் கை வைக்கிறான்-‘சடாரென விலகிக் கொண்டார்கள்.

‘ஏன்..ஏன்.. ஏனென்று கோபம் வந்தது காளமேகத்திற்கு. கோபத்தில் காமம் தலைக்கேறி பலவந்தமாக பிடித்திழுத்தான் கைக்கெட்டிய ஐந்து பேரில் ஒருவளை. சற்றும் யோசித்திடவில்லை, படாரென தூக்கி வெளியே வீசினார்கள் காளமேகத்தை. அந்த வீசலில்தான் சிந்திக்கத் துவங்கினான் காளமேகம்.

‘ஆம், இது தான் இவர்கள். இவர்கள் வியாபாரிகள். தந்திர வியாபாரிகள். இலவசமாக ஒரு சிரிப்பை கொடுத்து இரண்டு குவளை தேனீரை இலகுவாக விற்கத் தெரிந்தவர்கள். வெறும் தந்திரசாலிகள். தவறானவர்கள் அல்ல. தவறான வீட்டினர் அல்ல. தூர நின்று அவர்களின் வசீகரத்தை பார்க்க மட்டுமே பழகிக் கொண்டோம் நாம். நெருங்கிப் பார்த்து அவர்களின் வயிற்றுப் பசியை உணர முடிவத்ல்லை நம்மால். காளமேகம் அதை உணர்ந்துக் கொண்டான். தொட்டதும் சிரித்தவர்கள்; படுக்க என்றதும் காரி உமிழ்ந்ததில் புரிந்துக்கொண்டான்.

அவுமானம் வலித்தாலும், காமம் அவனை வெட்கப் படவைத்ததை சிந்திக்கும் தருணமாக இதை எடுத்துக் கொண்டான் காளமேகம். எங்கோ உண்டு திரிந்த வீட்டில் ரெண்டகம் செய்வதாய் யாரோ சொன்ன பழமொழி அவனருகே நின்று ‘அவனை பழிகாட்டிவிட்டுப் போனது.

நிதானமாக யோசித்தான் காளமேகம். மனதில், வெளிவரமுடியா ஒரு சஞ்சலம் அவனை குற்றவாளியாகவே நிறுத்திக் கொண்டிருப்பதை அவனால் எதிர்த்துவிட இயலாதவனாய் மெல்ல உறங்கிப் போனான். உறங்கியெழுந்த மறுநாளின் காலை வெளிச்சத்தில் ‘கண்ணாடியை பார்க்காமலே அவன் முகம் கருத்திருப்பதை அவனால் உணரமுடிந்தது.

ச்சே’ இப்படியாகிப் போச்சே!!! எப்படி நினைத்து அவ்வளவு இணக்கமாக பழகினார்களோ, இப்படி தரமின்றி நடந்துக் கொண்டோமே.., என்ன பண்ணலாம்’ மெல்ல நடந்து மீண்டும் அந்த கடைக்கே வந்தான். வெளியில்போடப் பட்டிருந்த மரப் பலகை மேசையிலமர்ந்து அமைதியாய் எதையோ யோசித்துக் கொண்டிருக்க,

“என்னடா காளமேகம்  ரொம்ப ஆழமா சிந்திக்கிறாப்ல இருக்கு”

“ச்ச..ச்ச.. இல்லடா, வா.. உட்காரு, என்ன; தேனீர் சொல்லவா??”

“எனக்கு தேனிரெல்லாம் வேணாம், சும்மா ரெண்டு பஜ்ஜி சொல்லு போதும்”

பஜ்ஜி சொன்னான். அந்த ஐந்து பெண்களில் ஒருத்தி கூட வெளியே வரவில்லை. காளமேகம் சற்று குரலை உயர்த்தி “என்னங்க… நான்-காளமேகம் வந்திருக்கிறேன், ரெண்டு பஜ்ஜி வேணும்” என்றான். அந்த பெண்களின் தகப்பனார் கல்லாவிலுருந்து எழுந்துச் சென்று பஜ்ஜி கொண்டு வந்தார்.

அவனை ஒரு சந்தேகத் தொனியில் பார்த்துவிட்டு அவனுக்கருகிலயே அமர்ந்துக் கொண்டார். ஒருவேளை, எங்கு இந்த நடத்தைகெட்டவன் உள்ளே சென்று நம் பெண்களிடம் தகாதவாறு நடந்துவிடுவானோ என்று பயந்திருக்கலாம் அவர். காலமேகத்திற்கு இந்த செய்கை வருத்தத்தை அளித்தது. அதற்குள் அவனுடைய கைப்பேசி ஒலிக்க, எடுத்து “வணக்கம் காளமேகம் பேசுகிறேன்.. யார் பேசுறீங்க” என்றான்.

“டேய் காளமேகம் நான் சௌந்தர் பேசுறேன்டா. சிங்கபூர்லேர்ந்து”

“சொல்லுடா சௌந்தர் நல்லாருக்கியா?”

“நான் நல்லாருக்கேன் -நீ எப்படியிருக்க?”

“ம்…இருக்கேன், சொல்லுடா..,நீ நல்லாருக்க தானே?”

“ஏதோ இருக்கேண்டா. ஏன்டா இருக்கோம்னு இருக்கு. செத்துடலமன்னு தோணுதுடா காளமேகம்”

“ஏண்டா.., என்னடா பிரச்சனை?”

“ஒரு பொண்ணுடா.”

“பொண்ணா?!”

“ம்.”

“பொண்ணா???!”

“ம்..”

“எந்த பொண்ணு?”

“பிலிப்பைனி”

“பிளிப்பைனின்னு ஒரு பேரா?”

“இல்லடா, பிலிப்பைன் நாட்டைச் சேர்ந்தவள்.

“என்ன காதலா?”

“இல்லை”

“பிரகென்ன பிரச்சனை?”

“உண்டாயிட்டா…”

“உண்டாயாட்டாளா? கர்ப்பமா? எப்படி!!?”

“இல்லைடா, பிரச்சனை ஒண்ணுமில்லை, கலைச்சிட சொல்லிட்டேன். கலைச்சிட்டா(ள்)”

“கலைச்சிட சொன்னியா?”

“ம்…”

“கர்ப்பமாக்கிட்டு கலைச்சிட சொன்னியா?”

“ம்..”

“ச்சே, என்னடா சௌந்தர் இவ்வளவு கீழ்த்தரமா நீ?”

“சிங்கப்பூர்ல (ஒருசிலருக்கு) இதலாம் சகஜம்டா காளமேகம்.”

“அப்ப ஏன் கவலைப் படற?”

“அவ கற்பமாயிட்டா(ள்)ன்றது அவளோட மேடத்துக்கு தெரிஞ்சி போச்சி”

“அப்புறம்”

“அவளை ஊருக்கு அனுபிட்டாங்கடா. பாவம், பிளிபையன்ல இருந்து போன் பண்ணினா. அழறா. என்னால அவளுக்கு வேலையும் போச்சி. பேரும் கேட்டுது, அவுங்க அம்மா அப்பவெல்லாம் என்னிடம் போன்ல அழைத்து பேசினாங்க. ரொம்ப வறுத்தப் பட்டாங்க, எனக்கு என்ன பண்றதுன்னு தெரிலடா. நான் தான் அவளை ஏமாத்திட்டனோன்னு தோணுது. அவ பாவம்டா உலகமே புரியாதவ!”

“அப்போ கல்யாணம் பண்ணிக்கோ”

“ஒத்துக்க மாட்டாளாம். கல்யாணம் வேணாமாம், நம்ம கலாச்சாரம் நம்ம நாடு எல்லாம் அவளுக்கு ஒத்துவராதாம், அவ வீடு அவளுக்கு முக்கியமாம், அதை விட்டு வரமாட்டாளாம். என்னை பிலிப்பையுனுக்கு கூப்பிடறா, அவளால என்னை பிரிஞ்சி வாழ முடியாதாம்”

“நீ என்ன சொன்ன?”

“என்ன சொல்றதுன்னு புரியலடா. இப்பகூட அவுங்கக்கா பேசுச்சி. நான் வேனும்னா வேற விசா எடுத்து அனுப்புறேன். மீண்டும் சிங்கப்பூருக்கே அனுப்பி வைங்கன்னு சொன்னேன்”

“ஏன், விசா அனுப்பி சிங்கப்பூருக்கு வரவெச்சி மீண்டும் கர்ப்பமாக்கி கலைக்கப் போறியா?”

“அப்படி இல்லடா?”

“வேற எப்படி?”

“பாவமில்லையா அவ?”

“அந்த புத்தி அன்னைக்கே இருந்தருக்கணும்”

“இப்போ என்னடா பண்றது?”

“உனக்கு சம்மதமா? அவ இஷ்டப்படி அவளோடு வாழ உன்னால முடியுமா?”

“அதுஎப்படி முடியும்? நம்ம வீட்ல அம்மா,அப்பா, யாருமே இதுக்கு சம்மதிக்க மாட்டாங்களே”

“பிறகு எப்படிடா உன்னால இப்படி ஒரு தவறை செய்ய முடிந்தது? உணர்ச்சியை அடக்க முடியாதவன் ஊருக்கு வந்து கல்யாணத்தை பண்ணி தொலைக்கிறது தானே? வாழ்கையை இவ்வளவு அசிங்கமா வாழ்ந்துட்டோமேன்னு, பின்னாடி உணர்ந்து வருந்துறது எவ்வளவு பெரிய வேதனை தெரியுமா? நீ ஒண்ணு பண்ணு, உடனே ஊருக்குப் புறப்பட்டு வந்துடு. எப்படியும் அந்தப் பொண்ணு உன்னால கஷ்டப்படத்தான் போகுது. எது எல்லையோ அதை மீறிட்ட. இனி மீறுவதற்கு என்ன இருக்கு. சீக்கிரம் அங்கிருந்து புறப்படுற வழியைப் பாரு. வரும்வரை அந்த பெண்ணிடம் எந்த தொடர்பும் வேண்டாம். தொலைபேசி எண்களை மாற்று. கடிதம் போடாதே. கொஞ்ச நாள் அழுதுட்டு; மறந்துடும். பெத்துக்க முடியாதுன்னு தெரிந்தும், கலந்துட்டு, கலைக்கத் துணிஞ்சவ மறக்கத் துணிய அதிக அவகாசம் எடுக்காது”

“ச்ச..ச்ச..நீ நினைக்கற மாதிரி இல்லடா அவ. பாவம். ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவ, இங்க குறைந்த சம்பளத்துக்கு வந்துட்டா, அதான் கொஞ்சம் அப்படி.. இப்படி”

” ச்சீ வாய மூட்றா. அது நல்ல நடத்தையா?”

“நல்ல நடத்தைன்னு நான் சொல்லல மச்சி”

“இதப்பாருடா சௌந்தர். வாழ்க்கை உயர்வானது. தாம்பத்தியம் வெறும் உடல் கூடல் இல்லை. மனதின் சங்கமம், அன்பால் தன்னை அர்ப்பணிக்கிற ஆழமான இன்பம், நமக்குள் இனி எந்த பாகுபாடுமே, எந்த மறைவுமே இல்லை நாம் ஒன்றறக் கலந்தவர்களெனும் இரு மனதின் நெருக்கத்தின் ஒப்பந்தம். அதை வெறும் உணர்ச்சிக்கு மட்டும் விற்று விடக் கூடாது சௌந்தர். நாளைக்கு இன்னொரு பெண்கூட வாழும்போது இந்த குற்ற உணர்வு உனக்கு உருத்தாமையா போய்டும்?

“சரிடா. இப்போ என்ன பண்ணலாம் அதை சொல்லு, நான் ஊருக்கு வரேன், எனக்கு வரதுனால கஷ்டமில்லை, இதுவரையென்ன நடந்ததோ போகட்டும் இனி என்னால எந்த தவறும் நடக்கக் கூடாதுடா”

“ம்! நல்லது, முதல்ல அதை செய். ஊர்வந்து சேரு, பிறகு பேசிக்கலாம் மீதியை”

“அதுவரை இதை யாரிடமும் சொல்லிடாதே மச்சி”

“சொல்லமாட்டேன், சீக்கிரம் புறப்படு” என்று சொல்லிவிட்டு கைபேசியை அனைத்து சட்டைப்பையில் வைத்தான் காளமேகம். எதிரே அமர்ந்திருந்த நண்பன் அதிகபட்சம் புரிந்து கொண்டவனை போல “நம்ம சௌந்தர் தானே மச்சி?” என்றான்.

“ஆமாம்டா, சரி வா.. போலாம்..” இருவரும் எழுந்து பஜ்ஜிக்கு பணம் கொடுத்துவிட்டு வெளியே வர; வாசலில் அந்த ஐந்த பெண்களும் ஒளிந்தவாறு நின்று கொண்டிருந்தார்கள். அதிகபட்சம் காளமேகம் பேசியது அவர்களுக்கும் கேட்டிருக்கக் கூடும்

ஆனால் காளமேகத்திற்கு தான் வெட்கமாக இருந்தது. சற்று முன் சௌந்தரிடம் தான் பேசியதெல்லாம் தனக்காகவே சொல்லிகொண்டது போல அவனுக்கே மீண்டும் மீண்டுமாக நினைவில் வந்தது. அவனை நினைத்து அவனே வருத்தப் பட்டான். வாசலில் நின்று கொண்டிருந்த அந்த ஐந்து பெண்களிடமும் கையெடுத்து வணங்கி மன்னிப்பு கேட்க வேண்டும் போலிருந்தது.

அதற்குள் அவர்களிலுருந்து ஒருத்தி வெளியே வந்து காளமேகத்திற்கு எதிரே நின்றாள். அவன் குற்ற உணர்வோடு அவளைப் பார்க்க, அவளே அவனிடம் ‘மன்னித்து விடுங்கள், நாங்கள் அந்த எண்ணத்தில் பழகவில்லை’ என்றாள்.

“நான் தவறு செய்து விட்டேன், நீங்கள் தான் என்னை மன்னிக்க வேண்டும்”

“இல்லை, நாங்களும் தான் தவறு செய்கிறோம். அளவிற்கு மீறி உங்களிடம் சுதந்திரமாக இருந்ததும், உங்களை இருக்கவிட்டதும் தவறு தானே?”

“பிறகு, எல்லாமே தெரிந்து தான் செய்கிறீர்களா?”

‘தொழில் தர்மமென்று அம்மா சொல்கிறாள்”

அவனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. ”சரி நான் வரேன்…..”

“எங்கப்பா ஏதாவது கேட்டாரா?”

“இல்லை”

“எங்க மேல ஏதேனும் கோபமா?”

“இல்லை”

“இனி இங்கு வரமாடீங்களா?”

“வருவேன்”

“எங்களிடம் பேச மாட்டீங்களா???”

“பேசுவேன்”

“தவறாக நினைத்தெல்லாம் தொட மாட்டீங்களே???”

“!!!!” சடாரென நிமிர்ந்து அவளைப் பார்த்தான். செவிட்டில் அறைந்தது மாதிரி இருந்தது காளமேகத்திற்கு. அவன் ஒன்றுமே பேசவில்லை. ஆயினும், சத்தியமாக மாட்டெனென்று ‘அவன் பார்வை அங்கே சபதம் செய்தது.

——————————————————————————————-

முற்றும்

வித்யாசாகர்

Posted in சிறுகதை | Tagged , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

ஒரு குடைக்குள் வா; உலக தமிழினமே!!

ரு வனத்தில் நான்கைந்து ஆடுகள், உல்லாசமாய் திரிந்து தின்று உறங்கி நிம்மதியாய் வாழ்கிறது. அக்கம்பக்கத்து காடுகளை அடக்கி பிற உயிர்களை கொன்று இன்பமுறும் சிங்கமொன்று அவ்வனத்தின் வழியே வெகு கர்வத்தோடு நான்கு கால் பாய்ச்சலில் பாய்ந்து ஆர்ப்பரித்தவாறு வருகிறது.

அழகான அவ்வனத்தின் மேனி பசுமை கண்டு மெய்மறந்து அங்கேயே தங்கிவிடும் எண்ணம் கொண்டு ஒரு வியத்தகு இருப்பிடம் நிறுவி, காடெங்கும் கர்ஜித்து, நான் தான் ராஜா வந்திருக்கிறேன் நீங்களெல்லாம் எனக்குக் கீழென நாவினால் பறை முழங்கி திரிகிறது.

அந்த நான்கைந்து ஆடுகள் அதன் கர்ஜனையை தங்களின் ஒற்றுமையால் உடைத்தெறிந்து தன் சுதந்திரம் பாதித்திடாத பலத்தில் சுற்றித் திரிகின்றன. அப்படி ஒரு தினத்தில் அந்த ‘தின்று கொழுத்த சிங்கம் காடு வளைக்க துணிந்து, பசிக்கென மேய்ந்த ஆடுகளை கொல்லத் திட்டம்தீட்டி நாலு கால் பாய்ச்சலில் அந்த ஆடுகளை நெருங்க, நெருங்கிய சிங்கத்தை ஆளுக்கொரு காலாக பிடித்து வனத்தின் எட்டாதூரத்தில் எட்டி வீசியது அந்த நான்கைந்து ஆடுகள்.

தோல்வியும், பொறாமையும், கோபமும், மண் ஆளும் வெறியுமாய் ‘நாக்கில் மனித உயிர் குடிக்கும் ரத்தமென சொட்ட, மீண்டும் அந்த ஆடுகளின் பின் அலைந்ததந்த சிங்கம். சிங்கத்திடம் அண்டி ஒதுங்கி அது போட்ட எச்சில்உணவை தின்று வாழவும் சில தந்திர நரிகள் ஆடுகளின் தோட்டத்திலிருந்து பிரிந்து சிங்கத்திடம் செல்லாமலில்லை.

நரிகள் சேனையானதில் சிங்கம் தன்னை ராஜாவானதாய் எண்ணி, நரிகளின் தந்திர யோசனையில் ஒவ்வொரு ஆட்டினையாக வளைத்து சண்டைக்கிழுத்து, ஒரு கட்டத்தில் காடு கணக்க கர்ஜித்து ‘தான் மீண்டும் சண்டைக்குத் தாயாரென அறிவிப்பு விட்டததந்த கோழை சிங்கம்.

மேலும், வீரத்தோடு நெருங்க இயலா ஒற்றுமை மிகுந்த அந்த ஆடுகளின் கண்களில் மண் தூவி தூவி மிக தந்திரமாக ஒவ்வொரு ஆடுகளையும் தனித் தனியாய் பிரித்து, தனித்து நிற்கையில் தடார் தடாரென கொண்று வீழ்த்தியது.

நாளடைவில், ஒற்றுமை குலைந்து திரிந்த ஆடுகளின் மொத்த கூட்டத்தையும் அழித்து அழித்து ஆடுகளின் அடையாளத்தையே அழிக்க அந்த கோழை சிங்கம் தயாரானது. கடைசி ஆடு மிச்சமிருக்கும் தருவாயிலும், வனத்தின் நடுப்பகுதியில் ஏறி நின்று வெற்றி வெற்றி என்று கூச்சலிட்டு தீவிரவாதத்தை ஒழித்து விட்டோமென்றும், நாங்கள் எல்லாம் வீர சூரர்களென்றும், ஆடுகளை கொன்றது அரச தர்மமென்றும் ஊளையிட்டுக் கொண்டது நேரே நின்று நெஞ்சில் அடிக்க துப்பில்லா சிங்கம்.

ங்கு, சிங்கம் யாராக வேண்டுமாயினும் இருந்துவிட்டு போகட்டும்; ஆடுகளை நாமென்று எண்ணிக் கொள்ளுங்கள். புலி விரட்டிய தமிழச்சியின் பால்குடித்த வழி தோன்றல், சென்ற இடமெல்லாம் வென்ற கூட்டம், கையேந்தி வந்தவர்க்கு வாழை விரித்து படையலிட்ட தானப் பரம்பரை. தனக்கு கீழுள்ளோரை வளர்த்தும் மேலுள்ளோரை மதித்தும் ‘பண்பு குளையாமல் வாழ்ந்த ஒரு பெருமை மிக்க இனம், இன்று எங்கு நிற்கிறது கண்டீரா உலகத்தீரே?

மிழனின் புகழை ஒவ்வொன்றாய் சொன்னால் கட்டுரை போதாது, தமிழன் என்பவன் பிறரை வாழவைப்பவன் என்ற ஒற்றை அர்த்தத்திலிருந்து இன்றும் தாழாத ஒருவனாய் கேட்கிறேன்; உலகின் உடம்பெங்கும் பரவிய வேராய் இருந்தும் ஏன் அழிகிறது நம்மினம்? ஏன் ஆங்காங்கே வதை படுகிறது நம்மினம்? ஏன் ஆங்காங்கே கொண்று குவிக்கப் படுகின்றனர் நம் மக்கள்? என்னாயிற்று நம் புகழெல்லாம்? எங்கே போனது நம் வீரம்? என்ன ஆனேன் நான்.. நீ .. மொத்த தமிழரும் என்று யோசித்தீரா உலக தமிழினமே????

ரு தமிழின குழந்தை வளரும் போதே, உடுத்திய கால் சட்டை உருவி பாலினம் பார்த்து ஆணென்றால் குண்டு வைத்தும் பெண்ணென்றால் கைவைத்தும் செல்கிறார்களாம்.

பத்து பேரில் ஒரு பெண் அழகென்றால் பிடித்து, கேட்க யாரேனும் வந்தால் அவர்களையும் பிடித்து, அழகு நுகர்ந்து, பெண்மை குலைத்து, உயிர்கொன்று, உறுப்பறுத்து, பார்; தீவிரவாதிகளை பிடித்துவிட்டோம் என்று செய்தி போடுகிறார்களாம்.

பசுமை குலையாமல் விளைந்த நிலத்திலிருந்து வந்த இனத்தின் பார்த்து பார்த்து கட்டிய வீடுவரை பிடிங்கிக் கொண்டு, காட்டில் இடம் தந்து ‘போ வேண்டுமெனில் வாழ்ந்து கொள்; உயிரையாவது காத்துக்கொள் என்கிறார்களாம். யாருக்கு யார்வந்து உயிர் பிச்சை போடுவது யோசித்தீரா உலகத்தீரே?

ன்று செம்மொழி ஆனது தமிழரை சற்று திரும்பி பார்க்கிறது உலகம். நாளை மறைக்கப் பட்ட நம் அத்தனை புகழும் வெளிவந்து நம்மை போற்றி நிற்கையில் இழந்த உயிர்களுக்கெல்லாம் இழப்பிற்கான ஈடிணை நம்மால் திருப்பித் தந்திட இயலுமா?

த்தி எடுத்து ஒருவன் வெட்டுகையில், துப்பாக்கி கொண்டு சுடுகையில், பீரங்கி கொண்டு அடிக்கையில் குடும்பத்தோடு தன்னை தன் இனத்தின் விடுதலைக்காய் மாய்ந்துக் கொண்ட மக்கள்; நாளை குதூகலிக்கும் பொழுதுகளுக்காய் முழுதுமாக இல்லாமல் போகும் முன்; இருப்பவர்களை காத்துக்கொள்ளவேணும் சிந்திப்பது நம் கடமையில்லையா? மனிதமில்லையா உலகத்தீரே?

த்தனை உயிர், எவ்வளவு ரத்தம் விட்டு காத்த மண்ணில்; குடில் புகும் பாம்பு போல புகுந்து, கொடிநாட்டி செல்கிறானாம் எவனோ ஒரு வந்தேறி குடியானவன். நீதிபதியிலிருந்து நம் கால்சட்டை வரை, கொஞ்சமேனும் ஒட்டியிருக்கும் தமிழரென்னும் வாசனையை கூட அகற்றி விட போகிறானாம் ‘எங்கிருந்தோ வந்து நம்மை இடைசாதி நாமென்றவன்.

இப்படி, தமிழர் வாழ்ந்த அத்தனை அடையாளமும் மறைக்கப் படுகிறது; ஒழிக்கப் படுகிறது; இனி எத்தனை பிரபாகரன்களை வைத்து மீட்டெடுக்கப் போகிறோம் தொலைந்து போகுமந்த ஈழ மண்ணினை, யோசித்தீரா?

றந்த ஒரு வீரனை கூட ‘விடுதலை கனவோடு உறங்கும் வீரமறவர் கூட்டமெங்கள் கூட்டம், எமக்கு மரணமென்பதே இல்லை, எம் வீரர்கள் விடுதலை கனவோடு உறங்குகிறார்கள், சுதந்திர விதைகளை தன் உயிரினால் பயிரிட்டு விட்டு ஓய்வு கொண்டுள்ளார்கள், மீண்டும் சொட்டிய ரத்தமெல்லாம் தமிழராகவே முளைத்து வருவார்கள், அன்று பிறக்கும் ஒரு தனி நாடு. அது கொடுக்கும் ஈழத்தின் முழு விடுதலையையும் என்று சொல்லி, கனவுகளோடு கட்டி வைத்திருந்த துயிலம் கூட (மாவீரர்களின் சமாதிகள் வைத்திருந்த இடம்) இன்று தகர்த்து நொறுக்கி அகற்றப் பட்டிருக்கிறதே ஈழத்தில். ‘நெஞ்சு பதைக்கவில்லையா?

நான்கு குழந்தைகள் இருக்கிறதா இரண்டை பிடி, இரண்டு இருக்கிறதா ஒன்றை பிடி, ஒன்றே இருந்தாலும் அது எம் விடுதலைக்காய் இருக்கட்டும் இந்தா பிடியென பெற்ற குழந்தைகளை எல்லாம் அனுப்பி அனாதையாய் வாழும் ‘அந்த தமிழச்சி வயிற்றிலெல்லாம் நெருப்பெரிகிறதே அதை எது கொண்டு அணைப்பீர் உலக தமிழினமே?

ணவன் இறந்தால் முண்டச்சி, கணவன் வென்றால் மண்ணின் விடுதலை என்று வாழ்ந்த பெண்களுக்கெல்லாம் இனி நம்மால் என்ன நீதி கிடைத்துவிடும் உலக தமிழினமே?

சிரித்து விளையாடிக் கொண்டிருக்கும் வீட்டில் கொத்தாக குண்டு போட்டு கொத்தாக சிதைந்து போன உடலின் தசைகளை கூட்டி எரித்துவிட்டு ஈழத்துத் தெருவிலெல்லாம் பயித்தியமென அலைந்துக் கொண்டிருக்கும் எத்தனையோ வயோதிக தமிழனுக்கு ‘உலக தமிழராய் நாமென்ன பதில் வைத்திருக்கிறோம் உறவுகளே?

டைசியில், அவன் போனானா நீ போ, அவனும் போயிட்டானா நீ போ, அவளும் போயிட்டாளா இதோ நான் வரேனென்று தன் உயிர்களை துச்சமென வைத்து, அறுபது வருடங்களாக, வீட்டுப் பெண்களெல்லாம் போராடிய ஒரு இனத்தின் சுதந்திரம் உலகத்தின் கண்களில் தோல்வியாக மட்டுமே தெரிவிக்கப் பட்டுள்ளதே என்ன செய்து விட்டோம் உறவுகளே?

ழைத்து வாழ்கிறானே அவனை அழித்து விட்டு அவன் நாடுகளை பிடித்து விடுவோம் என்றா போராடத் துணிந்தான் தமிழன், மாறாக அடிமை தனம் ஒழித்து, இரண்டாம் பட்ச பேதம் உடைத்து, தன் சகோதரிகளின் மார்பில் தொட்டவனை கை முறித்து ஒதுங்கி போ; எங்களை தமிழராய் ஒதுக்கியேனும் வாழவிடு என்று கேட்டது தவறா?

தவறில்லை. ஆனால் நம் தோட்டத்திலிருந்து பிரிந்து சென்ற அந்த நரி போல, நம்மில் இருந்து பிரிந்து சென்றதும், பிரிந்தும் அந்த கோழையோடு சென்று வாலாட்டியதும், நம்மை பற்றி நாமே சொல்லிக்கொடுத்து எதிரியை நம் இனத்தின் அழிப்பு மீது கொடி நாட்ட வைத்ததும், பத்து தலை கொண்ட நம் சக்தியை உடைத்து உடைத்து துளி துளியாய் பிரித்துக் கொண்டதும், நம் தவறுகளை நமக்குள்ளேயே நின்று அகற்றிக் கொள்ளாமல் தூர நின்று பரிகசித்துக் கொண்டதும், நிமிர்ந்து பார்த்து யார் மேலோ காரி உமிழ்வதாய் எண்ணி தன் மேலேயே தானே உமிழ்ந்து கொண்டதும் தவறு. தவறு. தவறில்லையா உலகத் தமிழினமே?

அந்த தவறுகளில் தான் சிதைந்து சுக்குநூறாகி பிரிந்து உடைந்து தொலைந்தே போகிறோம். இன்னும் கூட வென்றுவிட வாய்ப்புகள் நிறைய வைத்திருக்கிறோம். எஞ்சிய ஒரு இனத்தின் மிஞ்சிய உயிர்களையாவது காப்பாற்ற ‘வேறொன்றும் வேண்டாம் நம் உலக தமிழர்களின் ஒட்டுமொத்த ‘ஒற்றுமை’ ஒன்று போதும், உலகை ஒரு சுண்டு விரல் சுட்டிக் காட்டும் வேகத்தில் தமிழரென்னும் இனம் தன்னை வெகு சுலபமாக கம்பீரப் படுத்திக் கொள்ளும்.

ன்றென்றில்லை, என்றுமே நாம் வீரத்திற்காக போர் செய்திருக்கிறோம், வென்றோமென நிருபித்துவிட்டு மண்ணாசை கூட இல்லாமல் எத்தனையோ இடங்களை மண்ணினை நாட்டினை ஒரு கொடிநாட்டியதோடு விட்டுவந்திருக்கிறோம். மண்ணிற்கு; மனிதனை தாண்டி ‘ஆசை கொள்ளாதவன் தமிழன், என்பதற்கான வரலாற்றுக் நிகழ்வுகள் நிறையவே உள்ளன.

னியும், நாம் பிறரின் மண்ணோ, பிறரை துன்புறுத்தும் எண்ணமோ கொள்ளப் போவதில்லை. யாரையும் அடிமையாக்கி அவன் தலைமேல் ஏறி நின்று ஆட்சி முழங்கவோ நமக்கு ஆசை இல்லை. ஆனால் தன் அடிப்படை உரிமைக்கு போராடிய தன்னின மக்களுக்காய் ஒரு சின்ன குரல் கொடுப்போமே;

சுற்றி நிற்கும் பத்து நூறு ஆயிரம் கோடான கோடி பேரும் சேர்ந்து ஒரு ஒற்றை குரலை நம் மக்களுக்காய் கொடுப்போமே; தன்னை இணைத்துக் கொண்ட ஒரு குடையின் கீழ் ‘நம்மை அழிக்கத் துணிபவரின் பயத்தை சற்று உலகிற்கு நடுங்க நடுங்க காட்டுவோமே;

காலம் காலமாய் வளர்த்த நம் வீரம் பண்பு பாரம்பரியமென நம் அத்தனை கொடையின் துண்டிப்பும் ஒரு கற்றை நூலிழையில் அறுபடும் இந்நிலையிலாவது, ‘நம் மீதமுள்ள அடையாளங்களையாவது, தன் மொழிக்கென உருவாக்கப் போராடிய மக்களின் மிச்சமுள்ள தேசத்தையாவது, இத்தனை வருடங்களாய் உயிர்விட்டு சிந்திய ரத்தக் கரையினை வரலாற்றிலிருந்து பிறர் அகற்றிவிடும் முன் ‘எட்டிப் அதை பிடித்துக் கொள்வோமே? அந்த நான்கு ஆடுகளின் ஒற்றுமையை மீண்டும் கொண்டு ‘தமிழ் என்னும் ஒரு குடையின் கீழ் தமிழர் என்னும் ஒற்றை பலமாய் மீண்டும் சேர்ந்து நிர்ப்போமே உறவுகளே???

றந்த; இறக்க இருக்கும் அத்தனை லட்ச உயிர்களின் கதறல்களுக்கும் செவி சாய்ப்பீர்களா? என்று கேட்கமட்டும் இதை எழுதவில்லை. செவி சாயுங்கள், சிந்தியுங்கள், எதையேனும் செய்ய துடித்தெழுங்கள் என்று கேட்கிறேன்.

தமிழுலகின் மைந்தர்களாகிய நாம், நம் பிடியில் இருக்கும் ஒரு துளி தயக்கத்தை துச்சமென உடைத்தெரிந்துவிட்டு அடுத்த அடியை எடுத்து வைக்கையில்; நமக்கான நீதியை இவ் உலகம் கொடுக்காமலா போகும்?!!!

ன்னமும் கூட, ஊசலாடும் உயிரை இழுத்துப் பிடித்து, வெறிக்க வெறிக்க தன்னிரு விழிகளை திறந்து, நமக்கென மலரப் போகும் ஒரு தேசத்தின் மலர்ச்சியை, தான் அடைந்து விட்ட சுதந்திரத்தை, இத்தனை வருடம் காத்திருந்த ஓர் விடுதலையை காண ‘விடப் போகும் உயிரை கூட இழுத்துப் பிடித்துக் கொண்டு அடிமைகளுக்கு நிகராய் உயிர்பயம் அறுத்துக்கொண்டு வாழும் சொற்ப மக்களுக்காகவாவது ஒன்று கூடுவோம்; வாருங்கள் உயர் உலக தமிழினமே!!
————————————————————————————————————
வித்யாசாகர்

Posted in வாழ்வியல் கட்டுரைகள்! | Tagged , , , , , , , , , , , , , , | 28 பின்னூட்டங்கள்

பிறப்பின் முதலெழுத்து; அப்பா!!

ன்றெல்லாம் அப்பாவின் கைபிடித்துச் சென்றே
உலகம் பார்த்த வியப்பு..

ப்பா.. நடக்கும் தெருவெல்லாம்
வாழ்வின் பாடங்களை கற்பிப்பார்..

வானத்தின் மேகப் பூக்களை கூட
யானையாகவும் குதிரையாகவும்
பார்க்க சொல்லி வளர்த்த அப்பாக்கள் எப்படியோ
மறந்தே போகிறது – பிள்ளைகளுக்கு(?)!!

மீன் வாங்கினால்
பூ வாங்கினால்
தெருவில் பழம் விற்கும் மூதாட்டியிடம்
பழம் வாங்கினால் கூட
அவர் பாவமென்று கொடுத்த அதிக பணத்திலிருந்து தானே
ஏழைக்கான கரிசனம் எனக்கே பிறந்திருக்கும்(?)!!

வர் மார்பில்படுத்து உறங்கிப் போன நாட்கள்,
அவர் காலழுத்திவிட்டு
கால்மாட்டில் தூங்கிப் போன நாட்கள்,
சிலவேளை –
அப்பா பாவமென்று உறங்காமலே அழுத்திக் கொண்டிருக்க
நடுஜாமத்தில் எழுந்த அப்பா
‘ஐயா…’ என்னய்யா இது படுக்கலையா’ என்று தன்னை
நெஞ்சுறுக அழைத்து அணைத்துக் கொண்ட நாட்களெல்லாம்
கோடான கோடி விருதுகளை
அப்பா யெனும் ஒரு வார்த்தையில்
புதைத்துத் தானே கொள்கிறது(?)!!

ழா‘ எழுது
அரிச்சுவடி படி
ஆத்திச்சூடி தெரிந்து கொள்
வாய்ப்பாடு சொல்
திருக்குறள் ஒப்பி என்றெல்லாம்
அவர் வளர்த்த தமிழில் அவைகளை கடந்து
என்றுமே பெருமைக்குரிய சொல்
அம்மாவோடு சேர்த்து அப்பா.. அப்பா மட்டும்.. தானே(?)!!

ங்கு தன் பிள்ளைகள் எதற்கேனும் ஏங்கி
பிறர் வீட்டில் போய் நிற்குமோ,
ஊரார் பார்த்துவிட்டால் –
தன் பிள்ளைகளுக்கு கண்பட்டுவிடுமோ’ என்றெல்லாம்
தின்பண்டங்களை கூட தன் வேட்டியிலோ
வேறு துணி போட்டு மூடியோ –
மறைத்து மறைத்து வாங்கிவந்த அப்பா எனும் வரம்
எப்படித்தான் ‘கடைசி வரை இல்லாமலே போகிறதோ(?)!!

மிழை திருத்தமாக படி
தமிழை திருத்தமாக பேசு
ஆங்கிலம் அவசியமெனில் கற்றுகொள்
பிறமொழி பேசும் திறனை வளர்த்துக் கொள்
அதற்காக மம்மி டாடி என்றழைக்காதே..
காலையில் எழுந்து விடு
உழைக்க பழகிக் கொள்
பொய் சொல்லாதே
பயம் தோல்வியை தரும்
நியாயத்தை தட்டி கேள்
அவசியத்திற்கு கோபம் கொள்
அசிங்கமாக பேசாதே
பிறர் இகழ நடக்காதே
ஒருபோதும் பிறரை ஏமாற்றாதே
நீ பெரிய ஆளாக வருவாய்……….. ‘என்றெல்லாம்
நம்பிக்கையையும் –
போதனைகளையும் கொடுத்த அப்பா…
வாழ்வெல்லாம் எனை
எனக்காய் தலைமேல் சுமந்த
குருவிற்கு ஒருபடி மேலன்றி வேறென்ன(?)!!

ப்பாவிடம் புத்தகம் கேட்பேன்,
‘என்ன புத்தகம்பா..?’
‘சோசியல் சைன்ஸ்பா’

‘அப்படின்னா என்னப்பா?’
‘சமுக அறிவியல்பா’
‘அப்படியா????!!!!!!!!!!’

ப்பா ஜாமின்ரி பாக்ஸ் வேணும்பா’
“அப்படின்னா என்னப்பா???”
‘பேனா பென்சிலெல்லாம் வைப்போமே அதுப்பா’
‘ஹாங்.. டப்பாவா ???”
‘டப்பா இல்லப்பா அதுல வேற காம்பஸ், ஸ்கேல், எல்லாம் இருக்கும்பா”
‘அதலாம் எனக்கு தெரியாதுப்பா
படிக்க உயிரு வேணுமா எடுத்துக்கோப்பா – ஆனா நல்லா படிப்பா
அது போதுமப்பா’ என்று சொன்ன அப்பாக்கள் –

அந்த ஜாமின்ரி பாக்ஸ் தொலைந்தாலும்
புத்தகம் கிழிந்தாலும்
அதன் நினைவாகவும் படிப்பாகவும்
நம் பெயருக்கு – முன்னும் – பின்னும்
இருந்துக் கொண்டே இருக்கிறார்கள்!!
——————————————————————————-
வித்யாசாகர்

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | Tagged , , , , , , , , | 14 பின்னூட்டங்கள்

அனைத்து; உயிர் சுமந்த நட்புறவிற்கும் – வித்யாசாகர்!

காதலின் காதலை பகிர்ந்தும்
காதலை கலக்காத நட்பில்,
அண்ணன் தங்கை ராக்கி கட்டாத
நட்பில் இறுகிய மனதில்;

சற்று அதிர்ந்து பேசியதற்கு கூட
பிறகுவருந்தி தோளனைத்துக்கொண்ட பண்பில்,
உதவிக்கு முன்னிலாவிட்டாலும்
ஆபத்தில் பின்னிற்க இயலாத நெருக்கத்தில்;

வாழ்வின் சுவரெல்லாம்
இதயத்தின் பலமாக பூசிய உறவில்,
உயிர் பதிக்கும் அன்பின்
நகரும் தெருவெலாம் நட்பு நட்பு நட்பென்றே –

உலகின் வெற்றி கோபுரம் மீதேறி
நமக்கான நம் பெயரெழுதி
நம்மை நண்பர்களாக மட்டுமே
பதிவு செய்வோம்……………….வா!!!!!!!!!

அனைத்து உயிர் சுமந்த நட்புறவிற்கும்
இனிய தோழமை தின வாழ்த்துக்களும் அன்பும்!!

வித்யாசாகர்

Posted in வாழ்த்துக்கள்! | Tagged , , , , , | 2 பின்னூட்டங்கள்