தெருக்களில் –
எத்தனையோ வாகனங்கள்
தரையை கிழிக்கும் விதமாய்
சீறிப் பறக்கிறது,
யாருக்கு என்ன அவசரமோ??
எந்த வண்டி
விமானத்தின் கடைசி நிமிட துளிகளின்
அவசரத்திற்காய் போகிறதோ,
எந்த வண்டியில்
ஒரு சகோதரி
பிரசவ வலியால் துடிக்கிறாரோ??
எந்த வண்டி
இண்டர்வியூ முடியும்
கடைசி தருவாய் நோக்கி விரைகிறதோ,
எந்த வண்டியில் மரணம் நெருங்கும்
யாரோவை –
உயிர் காக்கும் நேரம்
நிமிடங்களாய் கரைய
எப்படியேனும் விரைந்து சென்று காப்பாற்றலாமெனப்
போகிறதோ…
யாரறிவார்..
யாரறிவார்..
எல்லாம் கடந்தும்
எதிரே வேகமாய் வரும் வாகனம்
கண்டால் –
வழிவிடாமல் நின்றும் –
சின்ன சின்ன தவறுகளுக்குக் கூட
பெரிதாய் வருத்தப் பட்டு
கோபப் பட்டு
இரத்தம் சூடாகி –
போறவன் அப்படியே சாவறானாப் பாருன்னு
நிறைய பேர் மனசு
நினைக்காமலில்லையே!
நாலும் வாழும் காட்டின்
எட்டும் திரியும் தெருவில் தானே பயணிக்கிறோம்..,
எவர் இப்படி இருந்தால் என்ன
நம்மை நாம் சமாதனப் படுத்தி
கவனமாக ஓட்டும் நேர்த்தியில்
ஏதேனும் –
ஒரு விபத்தையாவது –
தவிர்க்காமலா போய்விடுவோம்?????
























