ஒரு தலைகீழ் நடனம் போலத்
தான் வாழ்க்கை,
எங்கோ எதையோ சுற்றித்
எல்லாம் தெரிந்து கொள்வதற்குள்
வீடெல்லாம் மரண வாடை!
மரணம் விட்டொழியா
வாழ்வென்றில்லை –
மீண்டும் பிறக்கும் பிறப்போ
உறுதியென்றில்லை –
எவர் வந்து சொல்லியோ, கேட்டோ
ஜாதி கற்று; மதம் கற்று;
இனம் பெற்று – மனிதன்
மனிதனாக மட்டுமில்லை!
அடுத்தவனை அடித்தால்
அவன் வீழ்ந்தால்
அவனிடமிருப்பதை பெற்றால்
அது வெற்றியென்ற கோட்பாட்டிற்கு
யார் காரணமோ???
தன் நிறைவுகளில்
நிறைந்து போகும் அவலம் தாண்டி
பிறர் நிம்மதி கெடுக்கத் துணியும்
காலம் மாற –
இன்னும் எத்தனை ஜென்மம்
பிடிக்குமோ???
அடிமனதின் சுயநலம்
அறுக்கவும்,
பிறர் நலம் கருதி
எல்லோரும் வாழவும்
மனிதனை – யார் வந்து
மாற்றுவரோ???
பொய்யின்றி மனதில் தூய
எண்ணம் கொள்ளவும்,
மன அமைதியின்றி திரியும்
இவ்வாழ்க்கைக்கு – ஒரு
தீர்வான நிம்மதியை தரவும்
மரணம் தவிர்த்து –
வேறென்ன விடை கிடைத்துவிடுமோ???
வந்தவர் போனவர்
விட்டுச் சென்ற அடையாளத்தில் –
வாழ்பவர்
சரிசமமாக வாழும்
பாடமில்லாது போனது
எவர் குற்றமோ???
மனிதனுக்கான அதிக கூறுகள்
மனிதனை –
மனிதனாகவே வாழ்விக்கவில்லையே????????
என்ற மவுனத்தின் கேள்வியில்
எங்கிருந்தோ கேட்கிறது
காலத்தின் மிக வேகமான
பதிலொன்று –
‘வாழ்ந்தென்ன ஆகும் – நீ
வீழ்ந்த செய்தியே மிச்சமாகும்!
———————————————————-
வித்யாசாகர்
























