நீ –
என் செல்லமா
அப்பா செல்லமா
எல்லோரும் கேட்கிறார்கள்;
நாங்கள் தான்
உன் செல்லமென
அவர்களுக்கெப்படித்
தெரியும்!
நீ –
என் செல்லமா
அப்பா செல்லமா
எல்லோரும் கேட்கிறார்கள்;
நாங்கள் தான்
உன் செல்லமென
அவர்களுக்கெப்படித்
தெரியும்!
நீ என்
மடி மீது படுத்து
பால் குடித்துக்
கொண்டிருக்கிறாய்;
நானுன் –
மடியில் பிறக்கும்
வரம் கேட்டு மீள்கிறேன்!
நீ சிரிக்கிறாயென
நான் செய்ததையெல்லாம்
வேறெந்த –
பைத்தியக் காரனும்
செய்திருக்கமாட்டான்;
நிறைய –
அப்பாக்கள் செய்திருக்கலாம்!
கூறு கெட்ட மனுஷன் மேல;
கூவம் நாத்தம் தாங்கல;
மானங்கெட்ட மனுஷன் மேல
கோபம் மட்டும் தீரல!
மானம் ரோசம் கோபம் போச்சி
சண்டை மட்டும் மிச்சமாச்சி..
சண்டை சண்டை சண்டை
எங்கப் பார்த்தாலும் சண்டை…
சோறு தின்ன சண்டை
துணி எடுக்க சண்டை
மாடு வாங்கி மேய்க்க சொன்னா
அதிலும் –
உன் மாடு சரியில்ல – என் மாடு
சரியில்லைன்னு சண்டை;
வீட்டுக்குள்ள சண்டை
தெருவுலயும் சண்டை
ஊறு விட்டு ஊறு வந்தா
உன் ஊரா – என் ஊரான்னு சண்டை
ஊர் விட்டு வெளிய வந்தா
சென்னையா மதுரையான்னு சண்டை
டெல்லிவரை பெட்டி தூக்கிட்டா
தமிழா இந்தியான்னு சண்டை;
வந்த நாய பார்த்தா இருக்கும் நாய்க்கு
சண்டை
இருக்குற நாய பார்த்தா
பெரிய நாய்க்கு சண்டை,
பெரிய நாயப் பார்த்தா – என் வீட்டு
நாய் சின்னதா இருக்கேன்னு
இவனுக்கும் அவனுக்கும் சண்டை;
புகுந்த வீட்டுக்கும்
பிறந்த வீட்டுக்கும் சண்டை,
பிறந்த வீட்டுக்கும் மருமகளுக்கும் சண்டை
மருமகளுக்கும் மகளுக்கும் சண்டை
மகளுக்கும் மகனுக்கும் சண்டை
மகனுக்கும் அப்பாவுக்கும் சண்டை
அப்பாவுக்கும் அம்மாவுக்கும் சண்டை
அம்மாவுக்கும் அடுத்தவீட்டு அக்காவுக்கும் சண்டைன்னா சண்டை –
அப்படி ஒரு சண்டை;
நாடும் நாடு(ம்)னு வந்தா
என் நாடுன்னு சண்டை,
மாநிலம் மாநிலமென்றால்
எம் மாநிலமென்று சண்டை,
ஊரும் ஊரு(ம்)னு வந்தா
என் ஊருன்னு சண்டை,
தெருவுக்கு தெருவுன்னா
என் தெருவுன்னு சண்டை,
வீட்டுக்கு வீடுன்னா
என் வீடுன்னு சண்டை,
நீயா நானா என்று வந்தால் –
‘நான்‘ என்பதற்கே இத்தனை சண்டையும்; எனில்,
ஒருதுளியேனும் வெட்கப் படுவோம்.
சுயநலத்தை விட்டொழிப்போம்!!
————————————————————————–
வித்யாசாகர்
மனம் போல்
அழகான –
நீளமான கடல்.
கரை ஒதுங்கும்
அலையின் சில்லென்ற ஈரத்தில்
கால்வைத்து –
இதயம் நனைத்துப் பூக்கும்
நீலப் பூக்களுக்கிடையே..
கிரீச்
கிரீர்ச்சென்று கத்தாத,
பட்டாம்பூச்சிகளாய்
இறக்கை அடித்துப் பறந்திடாத,
மாறிமாறி வரும் அலைகளை
விண்ணைத் தொடும் சந்தோசத்தில்
தொட்டு தொட்டு – பூரித்த
கைகால் முளைத்த தாமரைகளுக்கிடையே..
ஒரு கவிதை வேண்டி
கரை தாண்டி
மணல்மேட்டில் பதிந்த
கால்தடங்களை மணல்களில் களைந்துவிட்டு
அங்குமிங்குமாய் பார்க்கிறேன்
எனைவிடுத்து அத்தனையும்
கவிதைகளாய் பூத்துக் கிடந்தன.
பின் –
கண்முன் நடமாடும் மனசும்
அலைகளோடு துள்ளிக்குதிக்கும் கடலும்
விரிந்திருக்க –
எதை எழுதிக் கவிதையென்பேன்???
எத்தனையோ பேரின் வீட்டில்
அழுதிடாத அழையும்,
மனம்விட்டு வெளிவராத சிரிப்பும்,
பொங்கியெழுந்திடாத –
கோபத்தையும் சுமந்து தான்
கடல் –
இப்படிக் கொந்தளிக்கிறதோ..
மணலில் புகுந்து மிஞ்சிய
சிகரெட் துண்டுகளுக்குள்
மறைந்துள்ள எத்தனையோ பேரின் கதைகளை
கடல் – தன் அலையும் தண்ணீரில்
எழுதி எழுதி கரைந்து போனதால் தான்
நீல நிறம் கொண்டு விட்டதோ..
காதலின் –
வெற்றியில் ஒதுங்கிக் கொண்டாலும்
தோல்வியில் பரிசளித்து
மரணத்தில் முடைந்துக் கொண்ட
எத்தனை காதலர்களின் பெருமூச்சோ
இந்த அலைகள்..
கடலை விற்பவனிலிருந்து
காதலர்களிடம் குறி சொல்பவளிலிருந்து
பூ விற்பவள் வரை – தன்
இல்லாத நாட்குறிப்பில் இருக்கும் விலாசம்
இந்த கடல்தானே..
கரைதொட்டு கடல்புகும்
அலைபோலவே
ஏதோ ஒன்றை தின்று உறங்கி எழுந்ததில்
எதையோ தொட்டுவிட்டதாகவே
ஆசையென்னும் ஆழத்தில் மூழ்கி மூழ்கி
கூரைவீட்டை தாண்டாத மீனவர்களுக்கு
எமனும் சிவனும்
இந்த ஒற்றை கடல் தானோ..
கடல் தாண்டி
விண்வரை பறக்கும் விமானத்திற்கும்
கரைதாண்டி கடல் புகும்
கிழிந்தசட்டை பழைய குழம்பிற்குமான
தீர்ப்பையும் –
இந்த ஆழக் கடல் –
என்று வெளியிடக் காத்திருக்கிறதோ..
எல்லாம் தாண்டி
தனியே அமர்ந்து –
கடலையே வெறிக்கும்
எத்தனையோ பேருக்கு
இந்த கடலும் காலமும்
என்ன பதில் வைத்திருக்கிறதோ, தெரியவில்லை.
சற்று நேர அமைதியில்
சூரியன் சற்று சாய்ந்து
இருட்டிக் கொள்கையில் –
இவை எவையையுமே பதிவு செய்யாது
காகிதத்தை கசக்கி கடலில் வீசிவிட்டு
கேள்விகளையும் –
ஏதோ ஒரு கனத்தையும் மனதில் சுமந்தவனாய்
கரையையும் கடலையும் தாண்டி
நகர விளக்கின் வெளிச்சத்திற்குள்
புகுந்துக் கொள்கிறேன்.
கடல் –
என்னையும்
தன் அலைகளிடம் யாரேன்றுக் கேட்டு
தண்ணீரில் எழுதிக் கொள்ளும் போல்!
————————————————————————–
வித்யாசாகர்