என்னன்பு உறவுகளே….

என் நினைவுகளில் வந்து
எனக்காய் –
என்னை தொந்தரவு செய்யென
என்னிடம் கேட்கும்
கவிதைகளில் அன்பும் நட்புமாய்
வீற்றிருக்கும் –
என்னன்பு உறவுகளே….

இனிய வணக்கம்!

Posted in என் இனிய உறவுகளுக்கு வணக்கம் | பின்னூட்டமொன்றை இடுக

வணக்கத்தின் விரல் நுனியிலிருந்து

வணக்கத்தின் விரல்
நுனியிலிருந்து –
உனக்காய் எட்டிப் பார்கிறதென்
இதயம்!

உன் காத்திருப்பின்
தவிப்புகளில் –
முழுதையும் எனக்காய் பெற்றுக் கொண்டு
ஓடோடி வந்தேன் உனக்காய்;

உனக்காய் எனில் –
யாரந்த உன்? யாரந்த நீ?
நீயெனில் –
நீங்களின்றி வேறு யார் தோழர்களே..

நாட்கள் சில நகர்ந்து
வருடங்கள் கடந்ததாய் எழும் ஒரு
குறுகுறுப்பினை தாண்டி –

அனைவருக்கும் என் அன்பு வணக்கம்!

சற்று விட்டு வர இயலாத வேலை.. தோழர்களே மன்னிக்கவும்!!

Posted in என் இனிய உறவுகளுக்கு வணக்கம் | பின்னூட்டமொன்றை இடுக

என் இனிய உறவுகளுக்கு வணக்கம்

உள்ளமெலாம் கோவில் கோவில்
உற்ற எண்ணங்களே ஆலைய சுவர்கள்
நம்பிக்கையே விழாதென நம்பும் கோபுரம்
நல் முயற்சியே மீண்டும் மீண்டுமாய் நம்மை
தூக்கி நிறுத்தியிருக்கும் தூண்கள் –
அன்பு ஒன்றே இதயத்தில் வீற்றிருக்கும்
இதயங்களுக்கு ஆராதனை செய்யும்

தீப ஒளி தோழர்களே..

அந்த அன்பு தீபத்தின் ஒளி பொங்க
அன்புள்ளங்களுக்கென் வணக்கம்!

Posted in என் இனிய உறவுகளுக்கு வணக்கம் | பின்னூட்டமொன்றை இடுக

மீனும் மீனும் பேசிக் கொண்டன (மூன்றாம் பதிவு)

கடல் கரை ஓரம் சென்றால் துடிக்க துடிக்க மீன் வாங்கி வரலாமேயென கடலோரம் சென்று மீன் வாங்கி வந்து சட்டியிலிட்டேன், துடித்த மீன்களில் சங்கரா மீனொன்று ஏதோ முனங்கிக் கொண்டிருக்க கிளிச்சை மீன் துள்ளிக் குதித்து அருகில் சென்று
 
“என்ன முனகல்? அதான் சட்டியில் விழுந்துவிட்டோமே; சும்மா சாவு. இன்னும் சற்று நேரத்தில் நம் செவிள்கள்  வெட்டி செதில் பிய்த்து கழுத்தருப்பதற்குள் உலகை கடைசியாய் ஒரு முறை நன்றாக பார்த்துக் கொள்;
 
“சுயநல உலகமிது பார்த்து என்ன செய்ய சீக்கிரம் அறுக்க சொல்” சங்கரா சொன்னது
 
 “ஆஹா.. பிறகேன் புலம்பினாய்?” கிளிச்சை கேட்டது
 
 “என் புலம்பல் எனக்கானதல்ல” சங்கரா சொன்னது
 
“வேறு ?” கிளிச்சை கேட்டது
 
“அதொரு கவிதையின் காதில் கேளாத சப்தம்” சங்கரா சொன்னது
 
“கவிதையை பற்றியெல்லாம் உன்னால் பேச முடிகிறதா?” கிளிச்சை கேட்டது
 
“முடியுமா முடியாதா என்று எவர் அறிய முயற்சித்தார்?”
 
“ஆமாம் ஆமாம் நான் சுவையா நீ சுவையா என்பதே மனிதனின் கேள்வி? போகட்டும்
கவிதை சொல்..” கிளிச்சை கேட்டது
 
கவிதை: தொட்டில் மீன்கள்
 
எட்டி –
நான்கு கதம் வைத்தால்
இடிக்கும் தொட்டி;
 
எத்தனை முறை பார்த்துக் கொண்டாலும்
மூன்றோ நான்கோ பேர் மட்டுமே 
உறவும் நட்புமென்றானது 
தொட்டியின் தலையெழுத்து;
 
பசித்தாலும்
பசிக்காவிட்டாலும்
போடுவதை போடும் நேரத்தில்
உண்ணுமளவு மட்டுமே உணவின் சுதந்திரம்;
 
மனிதன் சுத்தம் செய்ய மறந்தாலும்
நினைத்தாலும் அவனுக்கு போக எஞ்சிய
ஏதோ ஒரு தண்ணீரில் தான்
வாழ்வின் பயணம்;
 
உண்பதும் உறங்குவதும்
தொட்டியில் முட்டி முட்டி
உழன்றுக்  கிடப்பதுமெனவே வளர்கிறது
என் காட்சி பொருளான உடல்;
 
பிள்ளைகளோ பூனையோ
விளையாட்டாய் கொன்றாலோ தின்றாலோ;
பெட்டி இடறி விழுந்தாலோ –
துடித்து துடித்தே இறப்போமோ எனும்
பயம் வேறு அவ்வப்போது;
 
இதில் வேறு –
வீட்டில் மனிதன் செய்யும்
அத்தனை அட்டகாசங்களையும்
சகித்துக் கொள்ளவெண்டுமென்பது விதி;
 
பிறகும் –
தொட்டியில் அடைத்தவன் சொன்னான்
வளர்க்கிறானாம்!!”
——————————————————————–
கவிதையை முடித்துக் கொண்டு சங்கரா கிளிச்சையை பார்க்க,
 
ஆஹா.. இப்படி உனக்கு கவிதை கூட சொல்லத் தோன்றுமா என ஆராய கிளிச்சை மீனென்ன எனக்கே கூட இயல வில்லை தானே?????
 
எப்படியோ கவிதை முடியும் தருவாயில்..
 
நானென்ன அறிந்தேன் மீன்களை பற்றி; எடுத்து அறுத்து கண்டம் துண்டமாக்கி குழம்பில் கொதிக்க ஆஹா வாசனை எத்தனை சுகமாக மூக்கை துளைத்ததென்றேன்; எத்தனை உயிர் தொலைத்ததை நினைக்க முடியாமல்!
 
அந்த சங்கராவின் உயிர் போன கடைசியில் ஏதோ கிசுகிசுப்பது
கிளிச்சையின் காதுகளில் விழாமலில்லை..
 
கிளிச்சை அடுத்ததாக வெட்டு பட இருக்கையில் சங்கராவை பார்த்து
“சாகக் கிடக்கிறாய் வலிக்க வில்லையா அங்கென்ன அப்படி பார்க்கிறாய் முனுமுனுக்கிறாய் என்றது”
 
“நாமாவது இன்னும் சில நொடிப் பொழுதுகளில் இறந்து விடுவோம்; 
சாகவும் முடியாமல் சுதந்திரமாக வாழவும் முடியாமல்; வாழ்வை ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொண்ட அந்த மீன் தொட்டியின் மீன்களை பாரென்றது”
 
—————————*——————————–*——————————–
 
(பார்த்தென்ன செய்ய, சங்கராவும் கிளிச்சையும் சில மணிப் பொழுதிற்குள்  மீன் சட்டியில் கொதித்து வயிற்றில் செரித்து விட, தொட்டியிலிருந்த மீன்கள் தினம் அழுத சப்தமோ; வாணலியில் வரு பட்ட மீன்களின் வலியோ நமக்குப் புரியாமலே காலம் நகர்கின்றன தான், மீன்கள் கொள்ளப் படுகின்றன தான்)
 
வித்யாசாகர்

Posted in மீனும் மீனும் பேசிக்கொண்டன.. | பின்னூட்டமொன்றை இடுக

மீனும் மீனும் பேசிக் கொண்டன.. (2 ஆம் பதிவு)

இரண்டு மீன்கள் ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டே ஆழ்கடல் நோக்கி சென்றது.

அந்த இரண்டு மீன்களில் பெரிய மீன் சொன்னது…

“ஏய் அங்க நிறைய பூச்சிங்க எல்லாம் தின்ன கிடைக்கும் வா அங்கே போகலாம்”

“ஐய.. நீ பூச்சிங்கள்லாம் தின்னுவியா??” சின்ன மீன் கேட்டது.

“ஏன் உனக்கு இறைச்சி பிடிக்காதா ” பெரிய மீன் கேட்டது

“பிடிச்சா எல்லாத்தையும் தின்னுட்றதா.. ” சின்ன மீன் சலித்துக்
 கொண்டது.
 
“கொன்றால் பாவம் தின்றால் போகும்” பெரிய மீன் சொன்னது.

“யார் மனுஷன் சொன்னானா..? சின்ன மீன் கேட்டது.
 
“எப்படிகண்டு பிடிச்ச…” பெரிய மீன் ஆச்சர்யப் பட்டது
 
“இப்படியெல்லாம் அசிங்கமா மனுஷன் தான் சிந்திப்பான்” சின்ன மீன் சிரித்தது.

“இவரு பெரிய ராஜா மீனு; இவருக்கு மட்டும் எல்லாம் தெரியும்னு நினைப்போ” பெரிய மீன் கோபமுற்றது.

“எனக்கு ஒன்னும் தெரியாது, ஆனா பிற உயிர்களை கொண்ணா துடிக்கிதுல்ல; அது தெரியும்” சின்ன மீன் வருத்தப் பட்டது.

“தின்னா துடிக்கும் தான், தாவரம்  தின்னா அதுக்கு மட்டும் துடிக்காதா, அதுவும் உயிரு தானே” பெரிய மீன் தன் தவறை கேள்விக்குள் மறைக்கப் பார்த்தது.

“அதுவும் உயிரு தான், ஆனா ஒரு மரத்தை வெட்டினா இன்னொரு மரம் துடிக்குமா? ஒரு காயை பறித்து இரண்டா வெட்டினா; பக்கத்துல இருக்க இன்னொரு காய் வந்து ஐயோ வெட்டாத அது பாவம்னு சொல்லுமா? வெட்டாதேன்னு அழுவுமா?” சின்ன மீன் கேள்வியில் ஜாலம் செய்தது.

“அதலாம் சொல்லும். நமக்குத் தான் அதலாம் புரியறதில்ல, தப்புன்னா எல்லாம் தப்பு தான்” பெரிய மீன் உண்மையும் வீம்புமாய் விளம்பியது.

” அப்போ சரின்னா எல்லாம் சரியா???” சின்ன மீன் விகல்பமாய் கேட்டது.

“வேற என்னவாம்..??” பெரிய மீன் கர்வத்தை கேள்வியில் எழுப்பியது.

“சொல்றேன் கேளு, இயற்கையா எதலாம் இயங்குதோ, ‘அதுக்கெல்லாம் உயிரிருக்கு; எதுக்கெல்லாம் உயிருருக்கோ, ‘அதெல்லாமே நம்மிடம் பேசவும்; நாம் பேசுவதை கேட்கவும் சக்தி கொண்டுதானிருக்கு.  ஆனாலும், நாம வாழும் வாழ்க்கை ஒரு சார்பு வாழ்க்கை. தவளை பூச்சியை தின்னும், பாம்பு தவளையை தின்னும், கீறி பாம்பை தின்னும், கீறிய வேற எதனா தின்னும் இப்படி ஒன்ன சார்ந்து ஒன்னு இருக்கு” சின்ன மீன் சமதர்மம் போதிக்க முயற்சித்தது.

“அடி சக்கைனானாம், அப்படி வா வழிக்கு. நானும் அதை தானே சொன்னேன் ‘ஒரு உயிரை தின்னு தான் இன்னொரு உயிர் வாழுது” பெரிய மீன் தன் கேள்விக்கான வட்டத்திலிருந்து வெளி வரவேயில்லை.
 
“அசடு.. அசடு.. அது மிருக வாழ்க்கை. மிருகங்களுக்கு பாம்புக்கும் பல்லிக்கும் பகுத்தாராய முடியாது, கிடைக்கறத தின்னும். நீ என்ன மிருகமா..? மனுஷன் தானே? உனக்கு ஒரு வரைமுறை வேணாமா..? இருக்கறதெல்லாம் அடிச்சி தின்னா ‘நாளைக்கு மனுஷன் தான் மிஞ்சுவான்;தின்னுவியா???” சின்ன மீன் கேட்டு நிறுத்தியது.

“ஆமா.. ஆளப் பாரேன்.. உனக்கென்னா பெரிய்ய்ய்ய…. மனுசன்னு நினைப்போ…?” பெரிய மீன் கேலிக் கூத்தடிக்க

“சூ..   சூ..   சத்தம் போடாத.., மனுசங்க நாம் பேசுறத கேட்டுன்ருக்காங்க; அதான் கொஞ்சம் கூட்டி சொன்னேன், அங்கே பாரு ஒரு ஆளு வலையை எடுத்து வரான்..” சின்ன மீன் கை காட்ட

“ஐயோ.. அந்த ஆளு வலைய வீசுறான்.. வா ஓடி போலாம்” பெரிய மீன் கூறி வீட்டு சின்ன மீனின் வாள் கடித்து இழுக்க 

“ஓடு ஓடு.. சீக்கிரம் ஓடு..” இரண்டு மீன்களும் துள்ளிக் குதித்து ஓடியது. ஒரு மீனவன் நீண்டு விரிந்த வலையை எட்டி வீசினான். வீசிய வலையில் அந்த இரண்டு மீன்களை பார்த்து அங்கே வந்து குவிந்த  ‘மீதி அத்தனை மீன்களும் சிக்கிக் கொள்ளுமென யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டோம் தான், ஆனால் சிக்கிக் கொண்டதென்பதே வருத்தமான முடிவு. 

(சிக்கிய மீன்களையெல்லாம் கூடை பத்து ரூபாயென விற்று விட்டு, கிடைத்த பணத்தில் அரிசியும் மிளகாயும் புலியும் பருப்பும் வாங்கி மணக்க மணக்க உணவு சமைத்து, சாப்பிட ஒரு வாயெடுத்து வைக்கையில் ‘இந்த ஒரு பிடி சோற்றிற்கு எத்தனை உயிர் பலியானதோ’ என யோசிக்க மனிதனுக்கு தோன்றவில்லையென்றாலும்…… ‘அந்த இரண்டு மீன்களும் பேசிக் கொண்டது கூட கேட்காமல் போனதே நம் சாபம்)
———————————————————————————————————————————————
வித்யாசாகர்

Posted in மீனும் மீனும் பேசிக்கொண்டன.. | பின்னூட்டமொன்றை இடுக