சாதி மறு; சண்டையொழி!!

war-2

 

 

தையறுக்கும் பச்சைவாசம்
ஐயோ சாதிதோறும் வீசவீச,
தெருவெல்லாம் சிவப்புநாற்றம்
முட்டாள்கள் மேல்கீழாய் பேசப்பேச!

மாக்க ளூடே சாதி வேறு
மண்ணறுக்கும் சாதி வேறு
மனிதங்கொல்லும் சாதியெனில் – அதைச்
சாக்கடையில் விட்டெறிடா!

பெற்றவயிற்றில் மூண்ட நெருப்பு
வெற்று சாதிக்காய் மூண்டதுவே,
பத்துமாதம் சுமந்த நெஞ்சில் – தீண்டாமை
தகதிமிதோம் ஆடுதுவே;

ஐயகோ பூமிப் பந்தை
அற்பசாதி அறுத்திடுமோ
ஓட்டைத்தட்டில் வறுமையென்றால்
உயிர்க்கொண்டு அடைத்திடுமோ..?

வீட்டுக்குவீடு சாதிப்பேச்சு
ஊரெல்லாம் ரெண்டாப் போச்சே,
அடேய்; மனிதத்தை விற்காதே, நில்
இனி மிருகங்களே காரி உமிழும்!

மிச்சத்தை மீட்கவேனும்
மனிதர்களாய் ஒன்று கூடு,
அங்கே ஆடையற்று கூட நில்
சாதியோடு நின்று விடாதே;

சாதியை விடு..
சாதி போகட்டும் விடு..
ஓ மனிதர்களே வா’
என் மனிதர்களே வா “நான் சாதியற்றவன்”
சொல் “நான் சாதியற்றவன்”

சாதியற்ற இடத்தில்தான் நாளை
மனிதர்கள் மனிதர்களாகப் பிறக்கக் கூடும்,

மழை நிலா காற்று போல நாமும்
மனிதர்களாக பிறப்போம்; மனிதர்களாக மட்டுமே மடிவோம்!!
—————————————————————-
வித்யாசாகர்

Posted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

சாதியொழி; சண்டை மற; சொந்தம் நாமென்று முழங்கு..

war-1

போதும் நிறுத்துங்கள்!!
போருக்குத் துணிந்தோரே; பதைபதைக்க
பெண்ணென்றும் பாராமல்’ பெற்றப்
பிள்ளையென்றும் காணமல்; கண்டயிடமெல்லாம்
வெட்டியது போதும் நிறுத்துங்கள்;

வீழ்ந்தது யார் ?
வீழ்ந்தது உன் ரத்தம்; அதில்
எங்கே இருக்கிறது நீ சொல்லும் சாதி?

நீ வெட்டினாலும் சரி, நாளை
உன்னை யாரும் வெட்டி –
துண்டுத் துண்டாக்கினாலும் சரி; எல்லாம் ஒரே
ரத்தம், அங்கே எங்கிருக்கிறது நீ கொன்ற சாதி?

நீ கொன்றது உன்னை
நான் கொல்வது என்னை
நாம் தான் நம்மைக் கொன்று குவிக்கிறோம்,
சாதி இன்னும் அப்படியே
பச்சையாக ஒட்டிக் கொண்டிருக்கிறது, மனதிற்குள்;
அதை அறுத்து எறி!!!!!!

சாதி வேண்டாமென்றுச் சொல்லிப்பார்
உனக்கு உன் பிள்ளை
அத்தனை அழகாகத் தெரிவான்,

சாதி வேண்டமேன்றுச் சொல்லிப்பார்’ உன் எதிரி
உன் பக்கத்தில் அமர்ந்து சோறூட்டி மகிழ்வான்,
சாதி வேண்டாமென்றுச் சொல்லிப்பார்’
மிச்சமிருக்கும் நீ நான் இருவருமே மிக
நல்ல மனிதர்களென்று புரியும்..

சாதி ஒரு அடையாளம், அது தானாக
மாறக் கூடியது, அதை நீ மாற்றாமல்
வைத்திருந்ததால்தான் இன்று
நீ மாறிப் போனாய்..

தூக்கி எறி சாதி ஒழியட்டும்..
கையுதறி விட்டு
கட்டியணைத்துப் பார் எல்லோரையும்..
நாம் மகிழ்வோடு வாழவே இவ்வுலகம் – நமக்காகக்
காத்திருக்கிறது..

இந்த வானம் இந்த பூமி மழை காற்று
இரத்தம் சதை எங்குமேயில்லை சாதி; மனதில்
ஒட்டிக் கொண்டிருப்பின் அதை அழித்துவிடு,

நாம் நண்பர்கள்!
நாம் சாதியற்றவர்கள்!! முழங்கு..

முழங்கு..

நம் முழக்கத்தில் புரண்டு எழட்டும் ஒரு
நட்பிற்கினிய சமுதாயம்..
—————————————————–
வித்யாசாகர்

Posted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

ஒரு கோப்பையில் கொஞ்சம் மதுவும், கண்ணீரும்.. (தொடர்கதை-3)

df7061d7d142187

குடிப்பவர்களோடு சேர்ந்திருப்பது சிலநேரம் குழந்தைகளின் கூட இருப்பதற்கு ஒப்பாகும், அத்தனை அவர்கள் உலகம் மறந்திருப்பதைக் காண்கையில் தன்னை மறந்து அன்பில் பேச்சில் குழைகையில் நமக்கே இவனா அவனென்று வியப்பைத் தரும். அதுபோல் வேறுசிலரும் உண்டு. அவர்கள் குடித்துவிட்டால் உடனிருப்பவருக்கு ஒரு அரக்கனோடு சிக்கிக்கொண்ட பயம் எழும். இவனைவிட்டு எவ்வாறு விடுபடுவேனென்றுத் தோன்றும். பயம் உள்ளே திகிலென சூழ்ந்திருக்கும். இந்த கனகனும் அப்படித்தான். குடித்துவிட்டால் பெரும் அரக்கத்தனம் பூண்டுவிடுவான். இந்தியாவில் இது புதிதாக புகுத்தப்பட்டதாலோ என்னவோ அதிகபட்ச இந்திய பிரஜைகள் குடித்துவிட்ட பிறகுதான் தன்னை எஜமானனாகவும் மனைவியை மட்டுமேதோ எடுப்புவேலைக்கு வாங்கிவந்ததாகவோ எண்ணி மிகக் கேவலமாக நடந்துக்கொள்கின்றனர்.

அம்மா மண்டையுடைந்து கீழே விழுந்திருக்க, அப்பா சிரித்துக்கொண்டு அருகில் அமர்ந்திருக்கும் காட்சி நிறைய வீடுகளில் குடித்ததற்குப்பின் சாத்தியப்படுகிறது.

கனகனும் அதைத்தான் செய்தான், சரோஜாவின் முடியை பிடித்துக்கொண்டு தரதரவென தெருவுக்கு இழுத்துவந்தான். ரத்னா ஒரு புறம் காலை கட்டிக்கொண்டு “அப்பா அம்மாவை விடுங்கப்பா” “அப்பா அம்மாவை விடுங்கப்பா”  என்று கத்துகிறாள். கதறுகிறாள். அவன் அதையெல்லாம் பெரிதாக கருதவில்லை. நேரே இழுத்துக்கொண்டுவந்து வெளியே விட்டுவிட்டு ரத்னாவை மட்டும் தூக்கி தோளில் போட்டவனாய் உள்ளே சென்று கதவை மூடிக்கொண்டான்.

சரோஜா கதறிக்கொண்டு ஓடினாள். அக்கம்பக்கத்தினர் கூடிவிட்டனர். அவளுக்கு வலி ஒரு பக்கமென்றாலும் இன்னொரு பக்கம் அவமானமாகவுமிருந்தது. ஏனிந்த வாழ்க்கை, ஓடிச்சென்று அந்த கிணற்றில் விழுந்துவிடலாமா என்றுகூட யோசிக்கிறாள்.

திடீரென வீட்டினுள்ளே எல்லாவற்றையும் போட்டு உடைக்கும் சப்தம் கேட்கிறது. சரோஜா ஓடிச்சென்று கதவைத் தட்டுகிறாள். மன்னிச்சிடுங்க. மன்னிச்சிடுங்க. நான் செய்தது தப்புதான் என்னை மன்னிச்சிடுங்க என்று கதறுகிறாள்.

எல்லோருக்கும் ஆச்சர்யம். இவளென்ன செய்திருப்பாள். அவன் தான் குடிகாரன். நாசமா போறவன். இவள் ராசாத்தியாச்சே..

நீ ஏன் கண்ணு அழுவுற, டேய் போய் உடைங்கடா கதவை. எதிர்வீட்டுக் கிழவி ஆணையிட. விருட்டென ஓடிவந்து இரண்டு பேர் கதவை உடைத்தார்கள். அவ்வளவுதான் தாமதம், உள்ளே கனகன். கத்தியோடு நின்றிருந்தான். பதறி போய்விட்டது எல்லோருக்கும். ஒரு நொடி சரோஜா கதறிவிட்டாள். எட்டி உள்ளே பார்க்க ரத்னா கீழே விழுந்துக் கிடந்தாள்.

ஐயோ என் பிள்ளைன்னு சரோஜா ஓடிச்சென்று ரத்னாவைத் தூக்கி மடியில் கிடத்திக் கத்தினாள். முகத்தில் தண்ணீர் தெளித்தாள். மகள் எழுந்து அப்பா அப்பா என்று கேட்க.. எல்லோரும் சத்தம் போட்டார்கள். “அப்பாவா அவன் அரக்கன். என்னத்த குடியோ இது(?) எவன்தான் இவனுங்களுக்கு குடிகுடின்னு ஊத்திவிடுறானுங்களோ தெரியலை, அவனுங்களை முதல்ல அடிக்கணும். சிட்டாட்டம் குழந்தை, சீரா பொண்டாட்டின்னு வாழறதைவிட்டுவிட்டு வேறென்ன குறை இந்த நாய்க்கு..?”

சரோஜா பக்கத்துவீட்டுக்காரி தன் கணவனை நாய் என்றதும் திரும்பி அவளை முறைத்துப்பார்க்கிறாள்.

“இதுல ஒன்னு குறைச்ச இல்லை போ உனக்கு, நீ தாண்டியம்மா அவனை கெடுத்து இப்படிக் குட்டிச்சுவராக்கி வெச்சிருக்க..”

“அதுக்காக நாய்ன்னு.. ???”

“சரி விடு ரத்தம் ஒழுவுது பார், அதை முதல்ல தொடை.., வேறென்ன மனசு பதைக்கல? எங்க பிள்ளையைத்தான் படுபாவி போதைன்னுச் சொல்லி குத்திகித்தி போட்டுட்டானோன்னு பார்த்தேன்.

“சரி அப்படி என்னதாம்மா ஆச்சு..?”

“சோறு கேட்டார். போட்டேன். காரம் உப்பு போதையில, உரைக்கலைபோல கத்தினார். சரி அதை மறைச்சிகிட்டு ஏன் குடிச்சீங்க.. போன வேலை என்னாச்சுன்னு கேட்டேன் அது தப்புன்னு..” அவள் விசும்பினாள்

“சரி விடு, நாசமா போனவன் இப்படி போட்டு அடிச்சி இருக்கானே; அது சரி அதுக்கா இப்படிப்போட்டு ரகளை பண்றான்..”

“இல்லைக்கா; வாய் சும்மா இல்லாம நாந்தான் ‘உன்னை காதலிச்சு கட்டினதுக்கு வேற யாரைன்னா கட்டி இருக்கலாம்னு’ சொல்லிட்டேன். அதான் கோபம். போ எங்கனா போன்னு சண்டை..

“ஏண்டி நீயும் ஒண்ணு புரியாம ஒண்ணு இப்புடி..?”

“மனசு தாங்காம கத்திட்டேக்கா. வெளியப் போன்னு சொன்னா எங்க போறது? அதான் அப்போ என்னை ஏன் கட்டிக்கின, ஏன் இவளை பெத்துக்குனன்னு நல்லா சத்தமா கேட்டேன். அதான் எதிர்த்துப் பேசுறையான்னு அடிச்சிட்டாரு. நானும் திரும்ப என் கையில இருந்ததை தூக்கி பதிலுக்கு அடிக்க கோபம் பொங்கிப்போச்சு”

அதற்குள் இவர்களின் பேச்சையெல்லாம் கவனியாது அந்த பாப்பா மீண்டும் ‘அப்பா ‘அப்பா என்று தேம்பியழுதது.

“என்னடி ஆச்சு நீ அப்பா அப்பா ன்ற ?”

“அப்போது தான் சுதரித்தார்கள் “ஏம்பா அவன் எங்க.. கனகன் ?”

சுற்றும் முற்றும் பார்க்கிறார்கள். “ஐயோ ஆமா கனகனை காணோமே எங்கே.. ?”

“என்னங்க.. என்னங்க… ஐயோ எங்க போனாரோ தெரியலையே..” சரோஜா கத்திக்கொண்டு எழுந்து வாசலுக்கு ஓடிவருகிறாள். எல்லோரும் ஓடுகிறார்கள். இங்குமங்கும் பாய்ந்தோடிப் பார்க்கிறார்கள். “கையில கத்திவேறு வைத்திருந்தானேயென பதட்டத்தோடு ஆளுக்கொருப் பக்கத்தில் போய் தேடுகிறார்கள்.

கனகனை காணவில்லை.

“அப்பா அறுத்துக்குனாரும்மா…” குழந்தை மெல்ல அவள் முகத்தைப் பார்த்துச் சொன்னது.

“அடக் கடவுளே!!!! என்னடி சொல்ற???!!!”

“ஆமாம்மா.. உள்ள வந்ததும் இங்கும் அங்குமா அளஞ்சாறு. அவருக்கு நீ சொன்ன வார்த்தை பெருசாயிருந்துதுபோல. வலிச்சாமாதிரி கத்தினாரு, என்னவோ ‘இப்படி சொல்லிட்டாளே’ ‘இப்படி சொல்லிட்டாளேன்னு கதறினாரு..

திடீர்னு ஏதோ நினைவு வந்தவராய் ஓடிப்போய் சமையல்அறையிலிருந்து கத்தியை எடுத்துவந்து கையை அறுத்துக்குனார்ம்மா. ஒரே ரத்தமா அடிச்சிது. அதுலதான் எனக்கு மயக்கம் வந்துடுச்சே…”

“கடவுளே கடவுளே தப்பு பண்ணிட்டேனே.. ஐயோ என் கனகு.. என்ன ஆச்சோ.. யார்னா ஒடுங்களேன்.. அண்ணே அண்ணே அங்கப்போய் பாருங்கண்ணே எதனா ஒன்னு கிடக்க ஒன்னு ஆயிட்டா.. ஒடுங்கன்னே பாருங்கண்ணே.. நான் செத்தேப் போய்டுவண்ணே பாருங்கண்ணே..”

அவள் ஒரு புறம் அழுதுக் கொண்டே ஓட, ஆளாளுக்கு வேறு புறமென ஓட. கனகுவை எங்கும். காணவில்லை. ஊரார் ஒரு பக்கம் தவிக்க, ரத்னாவை கூட்டிக்கொண்டு அவள் ஒரு பக்கம் தவிக்க இருட்டுவேளையில் நாலாப்புறமும் தேடியும். எங்குமே கனகனை காணவில்லை.

                                              ———–X—————X————-

healthy green tea cup with tea leaves

வீட்டிற்குள் ஓடிப்போய் ரத்தமிருந்ததை எல்லாம் பார்த்து கதறினாள் சரோஜா. அதற்குள் ஒருவர் ஓடிவந்து அம்மா அம்மா உன் புருஷன் அதோ அந்த ஏரி ஓரத்துல மயங்கி கிடக்குறான்னுச் சொல்ல, எல்லோரும் ஒரே திரளாக’ மொத்த அந்த ஊரே சேர்ந்து பதறிக்கொண்டு ஏரியை நோக்கி ஓடுகிறது. சரோஜாவின் அன்பு, தன் புருஷன் மீதானா அக்கறை, அவள் அவனை காதலிக்கும் காதல், குடிக்காதபோது கனகன் எல்லோரையும் மதிக்கும் விதமென எல்லாம்சேர்ந்து அந்த ஊரையே சற்றுநேரத்தில் ஆட்கொண்டுவிட்டது. அவள் அழுகையில் ஆறுதல் சொல்வதும். பிள்ளையைத் தூக்கிக்கொண்டு ஓடுவதுமாய் எல்லோரும் அந்த ஏரியை நோக்கிப்போக்க, சுடுகாட்டு ஓரமான ஊர் என்பதால், தூரத்தில் ஒரு பிணம் எரிவது தெரிந்தது. பிண வாடை மூக்கையடைக்க’ ஒரு மரண வாசனை எல்லோருக்குள்ளும் பரவியிருந்தது. சரோஜா சற்று மயங்கியே விட்டாள். அவளால் அதற்குமேல் ஓடமுடியவில்லை.

அவள் முகத்தில் தண்ணீர் அடித்து, ஓரிடத்தில் அமர வைத்தார்கள். ஊரார் ஓடிச்சென்றுப் பார்க்கையில் கனகன் குப்புற விழுந்துகிடந்தான். ரத்தம் கையெல்லாம் வழிந்து கீழே ஊறி உறைந்துகிடந்தது. அப்போதே வந்து விழிந்திருப்பான்போல, கொஞ்சம் சுவாசமமும் லேசான முனகலும் மட்டும் மிச்சமிருந்தது. நான்கு பேர் சேர்ந்து அவனை புரட்டிப்போட்டார்கள். உயிரிருப்பது தெரிந்து உடனே மருத்துவமனைக்கு தூக்கிக்கொண்டு ஓடினார்கள்.

வழியெல்லாம் சரோஜா சரோஜா என்று புலம்பினான் கனகன். என்னை மன்னிச்சிடு மன்னிச்சிடு என்று கெஞ்சினான்.. யார் பேசுவதும் அவனுடைய காதுக்கு எட்டவில்லை. அவன் மட்டும் பேசிக்கொண்டிருக்க. நண்பர்களுள் ஒருவர் முன்னரே ஓடி மருத்துவமனையின் வாசலில் மருத்துவரோடு காத்திருக்க நேரடியாக அவசரப் பிரிவுக்குக் கொண்டுப்போனார்கள்.

மருத்துவர் குடிப்பிரச்சனை என்றதும் சற்று தயங்கினார் முதலில். கை வேறு அறுபட்டிருக்கே காவலில் புகார் கொடுக்கவேண்டுமென்றார். அதற்குள் இப்படி விஷயம், இவன்தான் அந்த கனகன். முதலமைச்சரை வரவழைத்து மதுக்கடைகளை மூட வித்திட்டவன், இன்று ஏதோ அவர்ககுள்ளான வீட்டுப்பிரச்னை, கோவத்தில் அவனே இப்படிச் செய்துக்கொண்டான், தயவுசெய்து காப்பாற்றுங்கள் என்று எல்லோரும் கெஞ்ச, தலைமை மருத்துவர் வந்து ஓ அவரா உடனே உள்ளக் கொண்டுப்போங்க, நேரே அவசரபிரிவிற்கு கொண்டுவாங்க என்றுச் சொல்லிவிட்டு, அவரும் விருட்டென பின்னாலேயே தொடர்ந்துபோனார்.

சற்றுநேரத்தில் சரோஜா தெளிந்து மருத்துவமனைக்கு ஓடிவர. உயிருக்கு ஒன்றுமில்லையெனும் செய்தியவளுக்கு முதலாய்ச் சொல்லப்பட்டது. மார்பிலும் தலையிலும் அடித்துக்கொண்டு அழுதாள். சிலநேரம் இப்படித்தான், யாரையும் ஒன்றும் செய்ய இயலாதபோது தன்னைத்தானே அடித்துக்கொள்ள வேண்டியுள்ளது. ஒருவேளை இப்படித்தானோ என் கனகுவும் தன் வலி தாளாது தன்னைத் தானே குத்திக்கொண்டானோ.. கடவுளே என் கனகுவைக் காப்பாற்று. அவனின்றி நானில்லை. அவன் அறிவாளி. அவனுக்கு தெரியும் இது தவறென்று தெரியும். இப்போதைக்கு அவனைக் காப்பாற்று. காப்பாற்று என்று வெளியே வாய்விட்டு சரோஜா அழ, அருகில் இருந்தோர் வந்து அவளை மார்பில் சாய்த்துக்கொண்டு ஆறுதல் சொல்கின்றனர். அதலாம் ஒன்றும் ஆகாது. கனகனுக்கு ஒன்றும் ஆகாது. நீ கவலையை விடு என்கின்றனர்.

                                                 ———–X—————X————-

08-1436354612-4healthyfoodswapsforweightloss

ன்ன வாழ்க்கையிது(?) எப்படிப் பட்ட குடும்பமிது(?) இந்தச் சின்ன வாழ்க்கைக்குள் இத்தனை பெரிய பிரச்சனைகளை புகுத்தும் இந்த குடி எல்லோருக்கும் தேவையா???

கேட்டால் ஒருநாள் என்கிறார்கள். என்றைக்கோ ஒருநாளைக்கு என்கிறார்கள். இப்படி ஒரு நாள் ஒருநாள் என்றுதான் மெல்ல மெல்ல சேரும் மழை பூமிக்கே பாரமாய் வலுப்பதுபோல் மனசும் அந்த போதைக்குள் முழுகி மூடத்துள் வலுத்துப்போய்விடுகிறது. இல்லைன்னா இப்படி ஒருவனை முட்டாளாக்குமா இந்த குடி? ஒருத்தரா இரண்டு பேரா இந்த தமிழகத்தில்? ஆயிர ஆயிரத்திற்கும் மேலான குடும்பங்கள் அழிய, ஏன் இந்தியாவிலேயே இருபது சதவிகிதத்திற்கும் மேல் குடும்பங்கள் பல சீரழிய இந்த குடிப்பழக்கமும் போதையும்தான் காரணமென்றால் அதை நம்மிடத்தில் இனி அண்டவிடலாமா? கூடாது. இனி போதையை நாம் அனுமதிக்கவேகூடாது என்றெல்லாம் அங்கிருந்த இளைஞர்களில் சிலர் பேசிக்கொண்டனர்.

அப்படியே அறையிரவு கழிந்து மறுநாள் விடியயிருந்தது. மருத்துவர்களும் செவிலியர்களும் இங்குமங்குமாய் போவதும் மருந்துகள் ஏற்றுவதும். ஏதோ ரத்தம் சோதனையெல்லாம் செய்வதுமாய் இருந்தார்கள். வெளியிலிருந்த சரோஜாவிடம் கையெழுத்து எல்லாம் வேறு வாங்கிக் கொண்டார்கள். வெறும் கைய்யறுந்தது என்பதுபோக அதற்கும் மேலாக ஏதோச் செய்வதாகப் பட்டது சரோஜாவிற்கு.

மருத்துவர் எல்லோரையும் வீட்டிற்குப் போகச்சொன்னார். சென்று நாளைக்கு வாங்க. வருத்தம் வேண்டாம் ஒன்னும் ஆகாது நாளைக்கு வாங்க பேசிக்கலாமென்றுச் சொல்லி எல்லோரையும் அனுப்பிவைத்தார்.

சரோஜா அங்கேயே ஒரு மூளையில், மருத்துவமனைக்கு எதிரே ஒரு மூன்று நான்கு பேரோடு சேர்ந்தவாறு படுத்துக்கொண்டாள். மறுநாள் விடிந்ததும் எழுந்துப்போய் கனகனைப் பார்க்கக் கேட்டதற்கு பெரியமருத்துவர் வரணும். தனிப்படுத்தப்பட்ட அறையில் ஐசொலேசனில் வைத்திருக்கோம். அவர் வந்தாதான் மீதி விவரமெல்லாம் தெரியவரும் என்றார்கள். சரோஜா அந்த வழியிலேயே ஒரு ஓர சுவற்றில் சாய்ந்து அமர்ந்துக்கொண்டாள். நேரம் நகர்ந்து நகர்ந்து சூரியன் மேலேற உள்ளிருந்து பெரிய மருத்துவர் வந்தார். சரோஜா பதறி ஓடினாள். “பயப்படாதீங்கம்மா, ரத்தம் தான் அதிகமா போயிருக்கு. வேற ரத்தம் கொடுத்திருக்கோம். கைக்கு தையல் போட்டிருக்கோம். ஆனா அவர் மயங்கி விழுந்ததுக்கு காரணம் அது இல்லை..”

“வேற??!!!!” பெரிய ஆச்சர்யத்தோடு விழிகளை உயர்த்தினாள் சரோஜா.

எல்லோரும் திகைப்பில் அதிர்ந்து அவரைப் பார்த்தார்கள்.

அவருக்கு நேற்று மைல்ட் அட்டாக் வந்திருக்கு. அளவுக்குமீறி குடிச்சதுல ஈரல் வெந்துபோய் புண்ணாகி கவனிக்காம விட்டதால மேல மேல மீண்டும் புண் அதிகமாகி அதுக்கு மேலையே குடிச்சி குடிச்சி இப்போ புற்றுநோய் வரைக் கொண்டுபோய் விட்டிருக்கு. அப்சலூட்லி உங்க கணவருக்கு முற்றிய லிவர் கேன்சர். எந்த நேரத்துலயும் அது வெடித்து ரத்தம் வெளியே பரவினா உடனே உயிர் போகும்..

தொடரும்..

Posted in ஒரு கோப்பையில் கொஞ்சம் மது | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

ஒரு கோப்பையில் கொஞ்சம் மதுவும், கண்ணீரும்.. (தொடர்கதை-2)

store_alt8

ம்மா சிகரெட் புடிச்சா தப்பா?”

“உனக்கு ஏன் அதலாம்?”

“இல்ல கேக்குறேன்” கனகனின் ஏழு வயது மகள் கேட்டாள்.

“தப்புதான்..”

“ஏன் தப்பு?”

“புகை உள்ளப் போனா உயிர் கருகும்”

“அப்படின்னா?”

“சீக்கிரமா செத்துப் போவாங்க”

“அப்போ அப்பா ஏன் புடிக்கிறாரு ?”

“அது அவரைத்தான் கேட்கணும், கேட்டா பழக்கம்ன்னுவார், பழகியது தவறுன்னா திருத்திக்கிறதுல என்னச் சிக்கல் இவங்களுக்கு தெரியலை” அவளாகவே புலம்பினாள். குழந்தைக்கு அத்தனை புரியவில்லை..

“சரி அப்போ அப்பாவும் செத்துடுவாரா?”

“ஆ…..மாம்னு சொல்லவந்து நிறுத்தினாள் சரோஜா. சற்று சுதாரித்துக் கொண்டு “அதலாம் அப்பாவுக்கு ஒன்னும் ஆகாது நீ போ போய் விளையாடு” என்றாள்.

“அப்பா நல்லா அப்பால்லமா ?”

“ம்ம்..”

“அப்போ ஏன் அப்பா குடிச்சிட்டுவந்து என்னென்னவோ பேசுறாரு ? குடிக்கிறதும் தப்பு தானே?”

“மகா தப்பு, அவருக்கு அதலாம் புடிக்கவே புடிக்காது, இப்போதான் இப்படி மாறிட்டார். அவர் படிச்ச படிப்புக்கு எப்படியோ இருக்கலாம். நியாயம் நீதி சமூகம்னு பேசி கடையிசில இப்படி நாசமா போறாரு” அவளுக்கு கொஞ்சம் அழையே வந்தது.

“குடிச்சா என்னாகும்மா ?”

“உனக்கு ஏன் அதலாம்? யாருன்னா எதனா சொன்னாங்களா ?”

“இல்ல, குடிச்சா உயிருக்கு ஆபத்துன்னு டிவில போடுறாங்கள்ல அதுல பார்த்தேன்..”

“சரி போ போய் விளையாடு.. எனக்கு வேலை இருக்கு”

“இல்லமா குடிச்சா என்னம்மா ஆகும் ?”

“குடி வேற புகை வேறையா ?? போதை தர எல்லாமே உயிரைக் கொல்லும்”

“போதைன்னா ?”

“மயக்கம்.. தலை சுத்தும் அப்படியே”

“நீ குடிச்சிருக்கியா?”

“ச்ச கண்றாவி.. அடி வாங்க போற பார் நீ..”

“இல்லம்மா.. குடிச்சா மயக்கம் வருமா?”

“வராம…….???”

“உனக்கெப்படி தெரியும்..?”

“அதான் பார்க்கிறேனே தினமும். போதை வரதால தானே இப்படி குடிச்சிட்டு ஆடுறாரு உங்கப்பா. அதனாலதான் தன்னையும் தன் குடும்பத்தையும்கூட மறந்து கிடக்குறாரு”

“சரி.. மயக்கம் வந்தா வரகூடாதுன்னு மருந்து சாப்பிடுறோம்முல்ல மா ?””

“ம்ம்..”

“அப்புறம் நாமலே போய் காசு கொடுத்து வாங்கி குடிச்சு மயக்கம் வந்துதுன்னா அது தப்பு தானே ?” மகளை வாரிக் கட்டிக்கொண்டாள் சரோஜா. “ஆமா ரத்னா, அது ஏன் இந்த மனுசங்களுக்கு தெரியலைன்னு தெரியலை. ஆம்பளைங்கதான் இப்படி குடிச்சிட்டு அழியிறாங்கன்னு பார்த்தா இன்னைக்கு பெண்களும் குடிக்க ஆரம்பிச்சிட்டாங்க”

“பெண்களும் குடிக்க கூடாதா மா? அதனால்தான் நீ குடிக்க மாட்டியா?”

“குடிக்கிறதை யார் குடிச்சாலும் தப்பு தான், எந்த தீய பழக்கமும் இல்லாம ஒழுக்கமா வாழ்ந்தா தான் உடம்பும் மனசும் சுத்தமா இருக்கும். அறிவு நல்லத நோக்கிப் போவும்”

“சரி ஒண்ணே ஒண்ணு.., உங்களுக்கு எப்படி தெரியும் இதலாம் ? ஸ்கூல்ல படிச்சீங்களா?”

“கிழிச்சோம், காலேஜ் போய் கிழிச்சோம், நான் எம் ஏ தமிழ், உங்கப்பா உளவியல், அந்தறிவெல்லாம் எங்க போச்சின்னுதான் தெரியலை..”

சரோஜா சலித்துக் கொண்டாள், மகளிடம் பேசியவாறே கூட்டிக்கொண்டு வாசல் நோக்கி வருகையில் தான் அந்தக் கிழவி அடித் தொண்டையில் கத்தினாள். சரோஜா வாசலை நோக்கி ஓடினாள்.

*****

store_alt6

னகன் விடுவதாயில்லை. மிக அழுத்தமாய் இருந்தான். உண்மையிலேயே இவன் குடிதிருக்கிறானா இல்லை குடித்ததுபோல் நடித்து இப்படியெல்லாம் செய்கிறானா என்றுகூட கூட்டத்தில் பேசிக் கொண்டனர்.

செவ்வந்தி நகர் படு ஜோர் பட்டுப் போனது. எல்லாம் தொலைக்காட்சியும் மாறி மாறி நேரலை செய்துக்கொண்டிருந்தனர். சுடுகாட்டை ஒட்டியது போன்ற சென்னையின் ஒரு ஓரப்பகுதி அது. கேட்பாரில்லாது இன்றும் குடிசையும் உடைந்த தெருவும் தண்ணீரில்லாத காய்ந்தப் பகுதியாகவும் காட்சியளித்தது செவ்வந்தி நகர். ஓட்டுக்கு ஆள் வருவதோடு சரி அதற்குப்பின் அந்த புறம் தலைவைத்து கூட யாரும் படுப்பதில்லை.

இன்று கதையே வேறு, தொகுதி எம்எல்யே கட்சி மந்திரி என ஆளுக்கு ஆள் மாறி மாறி வந்தனர். முதல்வர் வரப்போகிறாரென ஒரு கும்பல் ஊரையே துவைத்து சுத்தமாக்கி சாலையை ஒழுங்குசெய்து பரபரப்பாக்கிக் கொண்டிருந்தது.

“அது ஏன் இதுக்கெல்லாம் முதல்வர் வரணுமா? லைனை மாத்துய்யா, இல்லைனா மொத்த கரண்டை நிறுத்து. அவனைத் தொக்கி உள்ள போடு” என்றார் ஒரு ஆளுங்கட்சி மந்திரி. “ஐயோ கட்சிஊத்திக்கும் தல பரவாயில்லையா? மொத்த ஊடகமும் இங்க தான் இருக்கு, அதலாம் முதல்லையே செய்திருக்கணும், இன்னைக்கு இரவு ஐயா வரலைன்னா நாளைக்குள்ள ஊர் திண்டாடி போவும்.

முதல்வர் இந்தியாவிலேயே கிடையாது வெளிநாட்டில் இருக்கிறார் வர ஒரு வாரம் ஆகும் என்று கூட சொல்லிப் பார்த்தார்கள் கனகனிடம். பத்து நாள் ஆனாலும் நான் இங்கேயே உயிர்விடுவேன். முதல்வர் வந்தேதீரணும் என்றான் கனகன். அதற்குள் தொலைக்காட்சி நிருபர்கள் ஆங்கங்கே அவரவர் பங்கிற்கு அவனைப் பற்றி முழுதுமாக விசாரித்து அலசிக் கொண்டிருந்தனர். மெத்தப் படித்தவன் என்றும், மிக அறிவாளி, குடிக்கவில்லை என்றாலும் குழந்தையை விட மேன்மையானவன் என்றெல்லாம் என்னென்னவோ சொன்னார்கள் ஊர் மக்கள்.

சரோஜாவும் ரத்னாவும் கனகனுக்கு ஏதேனும் நேர்ந்துவிடுமோ என்று பதட்டத்தில் அழுதபடியே இருந்தனர். எதிர்க்கட்சித் தொண்டர்கள் கூடநின்று “நாங்கயிருக்கோம். கனகனுக்கு நாங்க இருக்கோம், அவனுக்கு ஒன்னும் ஆகாது, இதலாம் ஆளுங்கட்சியோட முறையில்லா ஆட்சியால நடக்குது, அரசு குடிக்கவிட்டா மக்கள் குடிக்கத்தான் செய்யும், ஆட்சி மாறினா எல்லாம் சரியாயிடும்” என்றது.

ஊடகங்களும் பொதுமக்களும் எல்லாவற்றையும் கண்கொட்டப் பார்த்துக்கொண்டிருந்தனர். வேறு வழியின்றி இறுதியாக முதல்வர் நாளைக்குக் காலையில் வருவதாக ஒப்புக்கொள்கிறார். இது ஒரு குடிகாரனின் அராஜகத்திற்கு இணங்கி போவதல்ல, படித்த ஒரு மனிதனின் உணர்விற்கு மதிப்பு கொடுக்கிறது இந்த அரசு. இந்நாட்டுப் பிரஜையின் ஒரு உயிருக்குகூட முழ உத்திரவாதம் அளிக்கிறது இந்த அரசு என்று முதல்வர் விளக்கத்தோடு உறுதி கொடுக்க. செவ்வந்தி கிராமம் ஓ..வெனக் மகிழ்ச்சியில் கத்தி துள்ளிகுதித்தது. ஊரெல்லாம் ஆரவாரம் பரவியது.

மறுநாள் முதல்வர் வராரென்று அக்கம் பக்கத்துக்கு ஊரெல்லாம் தன்னை அழகுபடுத்திக்கொள்ள ஆரம்பித்தது. அவர் வரும் வழியையெல்லாம் அழகு செய்தார்கள். இரவோடு இரவாக சாலையையெல்லாம் மாற்றினார்கள். குழாய் போட்டார்கள். கட்டவுட் வைத்தார்கள். கலர் காகிதம் பட்டாசெல்லாம் வைத்து பரமசோதியாக சொலித்தது செவ்வந்தி நகர்.

கனகன்தான் பாவம். அத்தனை முடியவில்லை அவனால். உடல் தளர்ந்திருந்தான். பரவாயில்லை கீழிறங்கு முதல்வர்தான் வருவதாக ஒப்புக்கொண்டாரே’ பிறகென்ன வாவென்று எவ்வளோ எல்லோரும் வேண்டினார்கள். அவன் மறுத்துவிட்டான். கொட்ட கொட்ட விழித்திருந்தான்.

மறுநாள் காலையில் பட்டாசு வெடித்தது, ஊரெல்லாம் சீர்செய்யப்பட்டு, காவலாளிகள் அணிவகுத்து நின்றிருந்தனர். கனகனின் படம் நல்லதும் கெட்டதுமாய் ஆங்கங்கே வரையப்பட்டிருந்தது. இரவெல்லாம் அவன் உறங்கவில்லை என்பது வேறு எல்லோருக்கும் தெரியவர, பெரிய அழ்தக்காரன்பா இவன் என்றார்கள். அவனை ஒரு கதாநாயகனைப்போல் பார்க்கத் துவங்கிவிட்டனர் பொதுமக்கள். “குடிகாரனுக்கும், கூத்தியா வைக்கிறவனுக்கும்தான்யா இது காலம்” என்று ஒருசாரார் புலம்பாமலுமில்லை. அதலாம் தாண்டி அதிகப் பேர் கனகனை ஒரு படித்த பட்டதாரியின் போராட்டமென்றே பார்க்க துவங்கினர்.

*****

store_alt4

ரியாக காலை பத்து மணிக்கு முதலமைச்சர் ஊருக்குள் நுழைகிறார். எல்லோரும் தமிழகம் முழுக்க கனகனை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அப்படி என்னதான் கேட்கப்போறான் இவன் என்று வியப்போடு எதிர்நோக்கி இருக்கிறார்கள். மெல்ல மெல்ல தகவல் ஒருமாதிரி சித்தரிக்கப்பட்டு வேறுபல செய்திகளின் வழிமாறி மாறி பல தென்னிந்தியச் செய்திகளில்கூட கனகனைப் பற்றிச் பேசப்பட்டது. இங்ஙனம் ஒரு போராட்டம் நடப்பதாகவும் அதற்காக முதலமைச்சரே நேரில் வருவதாகவும் சொல்லப்பட்டது.

கடைசியில் கனகன் இறங்கி முதல்வரின் காலில் விழ, முதல்வர் தூக்கி நிறுத்தி இது தவறு என்றும், முறையல்ல என்றும் கண்டிக்க; கனகன் கேட்ட கேள்விதான் எல்லோருக்கும் தூக்கிவாரி போட்டது.

“நான் குடிப்பது தவறு என்றால், எங்களைச் சுற்றி மதுக்கடைகள் எதற்கு” என்றான்? முதலாக. “மது என்றாலே பிடிக்காத குடும்பங்கள் ஏராளமுண்டு, அவர்களுக்கு கூட மெல்ல; மெல்ல ஏன் வேகமாகவே அறிமுகமாகிவிடுமளவிற்கு இத்தனை மதுக்கடைகள் இந்நாட்டில் இருக்கிறதே அது தேவையா?” என்றான். “உளவியல் படித்திருக்கிறேன். மாற்றங்களின் உயிர்நிலை எதுவென்று எனக்கு தெரியும். உண்மையைச் சொன்னால் இன்று நான் குடித்திருக்கவேயில்லை, குடித்ததாக நடித்தேன். காரணம், பொது இடத்தில் புகை பிடிப்பதை குற்றமென்றுச் சொல்லி கட்டுப்படுத்தும் அரசு பொதுயிடங்கள்தோறும் மதுக்கடைகளை மட்டும் வைதிருப்பது எப்படி சரி? என்றான்.

முதவருக்கு பதில் வரவில்லை. என்றாலும் இதலாம் இப்படிக் கேட்பது முறையல்ல, இது சட்டபப்டி நடவடிக்கை எடுக்கவேண்டிய விசயமாகும் என்றுச் சொல்ல தொண்டர்கள் பாதிப் பேர் அவனை வெட்டிவிடுவேன் குத்திவிடுவேன் என்று குதிக்க, முதல்வர் அவர்களை அமைதி படுத்திவிட்டு, கனகனுடைய கேள்விகளை மனிதத்தோடு மட்டுமே அணுகினார். விரைவில் இதற்கொரு முடிவு எடுக்கப்படும் என்றார்.

ஜனநாயக நாட்டில் அத்தனையும் சாத்தியமாக இருந்தது. பிறந்து வளர்ந்ததுமுதல் காணாத வளர்ச்சியை செவ்வந்தி நகர் இந்த ஒரு இரவில் கண்டதை கனகன் மெச்சுதலாகச் சொல்லிக்கொண்டான். தொலைக்காட்சியில் தனைப்பற்றி செய்தி வருவதைக் காட்டி பெருமையோடு தோளுயர்த்திக்கொண்டான். முதல்வர் தான் சொன்னதை சொன்னதுபோல் செய்தார். தமிழகத்திலுள்ள பாதி கடைகளை உடனடியாக அடைக்க ஆணையிட்டார். மீத கடைகளையும் மூடி மது ஒழிப்பிற்கு வேண்டிய தீவிர மாற்றங்களை ஆவணசெய்தார். “மதுக் கடைகளை மூடிய மதியழகன் கனகன்” என கனகனுக்கு தமிழகமெங்கும் பெருமைகள் வந்துச் சேர்ந்தன.

ரத்னா ஓடி வந்துக் கட்டிக் கொண்டால். சரோஜா அருகில் வந்து “எங்கே ஊதுங்கள் பார்ப்போம் என்றால். உண்மையிலேயே கனகன் அன்று குடித்திருக்கவில்லை.

*****

store_alt3

​இப்படி கனகனின் திருவிளையாடல்கள் ஊரெங்கும் மிக பிரிசித்தம். இதலாமென்ன, இதற்கும்முன் நடந்த ஒன்றைக் கேட்டால் ஆடிப்போய் விடுவீர்கள். ஆனால் கனகனுக்கு குடிக்காவிட்டால் ஒரு முகம், குடித்தால் வேறு முகம். குடி அவனை வெறியனாக்கி தெருவில் நிறுத்திய கதைகளும் ஏராளமுண்டு.

குடித்துவிட்டு வந்து மகன் உண்ணும் உணவுத்தட்டில் சிறுநீர் கழித்த அப்பாக்களை உருவாக்கியதும், அப்பா அம்மா என்றுகூடப் பார்க்காமல் போதையில் அசிங்கசிங்கமாக பேசி அவர்களை அடிக்க கைஓங்கச் செய்ததும் இந்த குடிதான். எனக்குத் தெரிந்து; இன்றும் இப்படி வரும்காசில் குடித்து குடித்தே தன்னையும் தனது குடும்பத்தையும் அழிக்கச்செய்வோர் ஏராளமாக இருக்கத்தான் செய்கிறார்கள்.

ஆனால் கனகன் குடிகாரன் என்றாலும் கொஞ்சம் மாறுபட்டவன். இன்று கனகன் குடித்துவிட்டு வந்திருக்கிறான். தெருவையே விளாசிக்கொண்டு வருகிறான். முழுக்கால் சட்டை, காலையில் கொண்டுப்போனச் சாப்பாட்டு பை என எல்லாவற்றையும் யாருக்கு கொடுத்தான் என்ன ஆனது என்பதெல்லாம் தெரியாது, வெறும் உள்கால்சட்டை, பட்டனவிழ்ந்த சிப்பாவோடு தெருவை அளந்துகொண்டு வருகிறான். வாசலில் கனகன் வருவதைக்கண்டு, அதும் இப்படி குடித்துவிட்டு ஆடிக்கொண்டே வருவதைக் கண்டு அந்த கிழவி கத்த, அவளை அதட்டிக்கொண்டே சரோஜா ஓடி தெருவிற்கு வருகிறாள்.. அவளுக்குப்பின்னால் ரத்னாவும் அம்மா என்றுக் கத்திக்கொண்டே ஓடிவருகிறாள்.. கனகனின் தலையெழுத்தையே இனி மாற்றப்போகும் இரவொன்று அவர்களைநோக்கி விரைவாக இருண்டுமூடுகிறது..

_தொடரும்..

Posted in ஒரு கோப்பையில் கொஞ்சம் மது | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஒரு கோப்பையில் கொஞ்சம் மதுவும், கண்ணீரும்.. (தொடர்கதை-1)

store_hero

அத்தியாயம் – 1

“அடியே சரோஜா………… இங்க வாடி உன் புருஷன் வந்துட்டான்”

“பாழாப்போனவன் இன்னைக்கும் குடிச்சிட்டு வந்துட்டானா இவன் ஒழியவேமாட்டான்”

“ஏமா சும்மா போவியா..”

“என்ன போவியா? நாடு குடில நாசமாப்போவுதே உன் கண்ணுல வெக்கலையா?”

“உனக்கு வெச்சா நீ மூடிக்கோ’ உன் கண்ணை, போ போயி வேற வேலையைப்பாரு”

“இவனையெல்லாம் கொள்ளனுண்டி.. கூடவே உன்னையும் சேர்த்து கொளுத்தனும்.. அவன் குடிக்க வக்காலத்து வாங்குற பாரு”

“கொளுத்திட்டா தீர்ந்திடுமா? அவன் போனா என் புள்ளைங்களுக்கு நீ சோறு போடுவியா?

ஏதோ என் தலையெழுத்துன்னு நான் போறேன் அதலாம்விடு என் புருஷன் குடிச்சா உனக்கின்னா?”

“நாறுதுடி ஊரு.. குடிகார கனகன் இருக்கானே அந்தத் தெருவுன்றாங்க என்னையும் சேர்த்து”

“அட போமா, அவனைப்போய் கேளு போ”

“சரோஜா வீட்டுவாசலின் ஓரத்தில் அமர்ந்திருந்த கிழவிக்கு விளக்கம் சொல்லிவிட்டு கனகன் வரும் தெருநோக்கி ஓடினாள்..”

“அந்த தெருமட்டுமல்ல அந்த ஊருக்கே கனகன் இருக்க ஊருன்னா எல்லோருக்கும் நல்லா தெரியவரும் அந்தளவிற்கு கனகனின் குடிகாரசாதனைகள் அங்கே பிரபலமாகயிருந்தது”

ஒருநாள் அப்படித்தான் கனகன் ஒரு மதுபுட்டியை எடுத்துக்கொண்டு ஒரு மின்கம்பத்தில் ஏறிக்கொண்டான். உள்ளே அணிந்திருக்கும் கால்சட்டை வெளியே தெரிவதைப்பற்றியெல்லாம் கனகனுக்கு கவலையில்லை.

அவன்பாட்டிற்கு எதையோ புலம்பத்துவங்கினான். என்னடா ஏதோ வில்லங்கமா இருக்கேன்னு கிட்டப் போய் பார்த்ததும்தான் அவனுடைய புலம்பலைக் கேட்டவர்கள் அதிர்ந்துபோனார்கள்.

“எனக்கு இப்போ இந்த ஊரோட கலெக்டர் இங்க வரணும்..”

“ஏய் என்னப்பா இது, மேலேறி என்ன பண்ற?”

“நீ பேசினியினா கரண்ட தொட்ருவேன், கலெக்டரை வரச்சொல்லு போ”

“கலெக்டரா அவரு எதுக்குய்யா இங்கே நீ கீழ இறங்கு முதல்ல”

“வரணும் இப்போ வரணும்”

“வரலயின்னா..?”

“தோ தோபார் இப்படியே இந்த கரண்டுக்கம்பியைப் புடிச்சி இங்கயே தொங்கிடுவேன். நான் செத்துட்டா சாவுக்கு நீதான் பொறுப்பு”

அவன் மலைத்துப்போய் நிற்க –

“என்ன பார்க்குற? தொடமாட்டன்னு பார்த்தியா’ தோபார்…” ஏகதேசத்தில் கனகன் மின்கம்பியை எட்டி சடாரெனத் தொட்டு இழுக்கமுயற்சிக்க கனகனை தூக்கிவாரி கீழே வீசியது மின்சாரம்.

********
maxresdefault
ல்லோரும் பயந்து ஒதுங்க, சற்றுநேரத்தில் இங்கு அங்கென்று சேதி போக மளமளவென கூட்டம் வந்து தெருவெல்லாம் கூடியது. அடுத்த சில வினாடிக்குள் கனகன் திமுறி எழுந்தான், எல்லோரையும் தள்ளிவிட்டுவிட்டு விருட்டென ஓடி நகர்ந்து இன்னொரு மின்கம்பத்தில் ஏறினான்

“ஏய் புடி புடி புடிங்கப்பா அவனை’ நாசமா போனவன்’ ரெண்டு போடுங்க இல்லைனா”

“இவ(ன்)ல்லாம் இருந்தென்ன தம்பி போய்சாவட்டும் விடு, நாய்வண்டி வந்து அள்ளிட்டுப்போகும்”

சிலர் இவனை முறைக்க, சிலர் திட்ட; எப்போடியோ எல்லோரும் ஒருவிதத்தில் ஓடிவந்து கம்பத்தின் கீழேநின்று கத்தினார்கள். கனகன் இம்முறை கூடுதல் கவனமாகயிருந்தான். அதெப்படியோ போதையில்கூட சிலர் அதும் இதுபோன்ற ‘தனைக் காத்துக்கொள்வதில் மட்டும் தெளிவாகவே இருக்கிறார்கள்…

கனகன் மேலேறி இம்முறை கம்பியை தொடவில்லை ஆனால் தொடுவதுபோல் அருகில் கொண்டுபோய் கையை வைத்துக்கொண்டான்.

எல்லோருக்கும் எங்கு மீண்டும் அவன் மின்கம்பியைத் தொட்டு உயிருக்கு ஏதும் விபரீதம் நேருமோன்னு பதட்டமாகவே இருந்தது. ஒருபக்கம் வாயிலிருந்து எச்சிலோடு ரத்தமொழுக பாதிபோதையில் கனகன் தான் பேசியதையே பேசிக்கொண்டிருந்தான்

தகவல் மெல்லமெல்ல காவல் நிலையம் ஊர் தலைவர்கள் என எல்லோரையும் சென்றடைய கூட்டம் கூடி நேரம் கடக்க ஆரம்பித்தது. கனகன் விடுவதாயில்லை.

“எனக்கு இன்னைக்கு இங்க இப்போ கலெக்டர் வரணும் வரலியினா இந்த முறை புடிச்சி இப்படியே தொங்கிடுவேன்..”

“ஏ ஏய் இருய்யா வாராரு நீ கூப்பீட்டவுடனே வந்துநிற்க அவரென்ன உன்வீட்டு வேலைக்காரனா ?” மாங்கனி லைன கட் பண்ணு ஆள கீழ தூக்கியாந்துடுவோம்”

“இல்லண்ணே ஏரியா ஃபுல்லாப் போய்டும் பெரிய பிரச்னையாகும், மெயின் லைன்ண்ணே இது” மின்சாரவாரியம் பேசிக்கொண்டது.

“ஏன் லைன மாத்தி விட முடியாதா?”

“ம்ஹூம் சிக்கலாயிடும், விடுங்க இங்க பக்கத்துல இருக்க கலெக்டர்தானே வரட்டும் நாமளும் பார்த்தமாதிரி இருக்கும்ல”

“இவனையெல்லாம் கொல்லனும்ய்யா’ நாலு கல்லை பொருக்கி அடிங்க நாய் தன்னால கீழயிறங்கும்..”

“நீ வேறப்பா இப்போதான் அந்தக் கம்பத்துல கரண்டை தொட்டுட்டு கீழவிழுந்தான், திரும்ப இதை புடிச்சி செத்துகித்து போனான்னா ?”

அந்நேரம்பார்த்து சரியாக அங்கே ஊர் தலைவர் வருகிறார். வந்ததும் பொறுமலோடு “சாவட்டும் குடிகாரந்தானே இவன் செத்தா நமக்கென்ன’ இவனுங்கள மொத்தமா வெச்சி கொளுத்தனும், அதுசரி யாருய்யா இவன்” என்கிறார்.

“அந்த மூலச்சந்து கனகன்ண்ணே முன்னகூட வந்து ரேசன்கடையில……….”

“ஓ.. அவனா; ஏய்யா இவனக் கொல்லணும்யா, அதலாம் தெரியுது குடிக்கிறது மட்டும் தப்புன்னு தெரியலையா ?”

அதற்குள் மேலிருந்து கனகன் கத்தினான் அவனுடைய லுங்கி கழன்று கீழே விழுந்தது சட்டை ஒருபக்கம் ஏறி இறங்கி ரத்தம் ஒழுகி கால்சட்டையோடு நின்று கத்தினான்.

“தலைவரே வந்துட்டியா ? ஏன் நீ குடிக்கலை நேத்தந்த பார்ல உட்கார்ந்து? பிரியாணி வாங்கித் தந்து கூட்டத்தைக் கூட்ற இங்க மட்டும் சவுண்டு உட்றியா ?”

“ஏய் அடிங்கையா அவனை..” எச்சில் தின்னும் கூட்டமும் நன்றிக்கு விசுவாசக் கூட்டமுமாக நான்கைந்துப்பேர் இங்குமங்குமாய் நின்று

“இப்போ என்னப்பா வேணும்..?”

“எனக்கு கலெக்டர் வரணும்..”

 ********

hqdefault

ன்….?

“நீ என்ன கலெக்டரா? நீ கலெக்டருன்னாச் சொல்லு சொல்றேன்.. நீயே ஊரு கொல்லையில வீடு கட்டுற”

“கனகா நீ இப்போ கீழ இறங்கலைன்னா நாங்க உன்னை சுட்டுடுவோம்” அதற்குள் காவலாளிகள் ஆவேசமாகி துப்பாக்கியைக் காட்டினார்கள்.

“தோ.. சுடு.. சுடு.. நானே புடிச்சி தொங்குறேன் அப்புறம் சுடு..” மீண்டும் பக்கத்தில் கையைக் கொண்டுப்போயேவிட்டான், ஒரு கால் கீழே தொங்க’ ஏறி எட்டி சற்று அவன் கம்பியைப் பிடிப்பதுபோல் திமிர, ஒருநொடி யாருக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை

தலைவர் கத்தினார். “யோ.. யோவ்…, ஏயா விடுங்கையா அவன்தான் குடிச்சிருக்கான்ல.. தொங்கிட்டானா என்ன பண்ணுவ?”

அதற்குள் மேலதிகாரி ஓடிவந்தார். தகவல் கலெக்டர் காதுக்கு போய்விட்டதாகவும் அவரே வந்துக்கொண்டிருப்பதாகவும் சொன்னார். கனகனுக்கு வாயிலிருந்து ரத்தம் ஒழுகி காற்றில் பறந்து கீழுள்ளோர்மேல் காற்றோடு காற்றாக சாரல்போல் பட்டது.

“யார் ரவி இவன் ?” காவல் அதிகாரி தலைவரின் கூடயிருந்த இன்னொருவரைப் பார்த்துக் கேட்டார்.

“அவன் ஒரு படிச்ச பட்டதாரி சார். செமையா இங்கிலீஷ் பேசுவான். குடிச்சா பெரிய பெரிய தர்ம கதைல்லாம் சொல்லுவான். வேலை கிடைக்கலை கிடைக்கலைன்னு குடிசின்ருப்பான் எப்படித்தான் இதுக்கு மட்டும் பணம் கிடைக்குதுன்னு தெரியலை”

“கல்யாணம் ஆயிடுச்சா ?”

“ம்ம் மூணு புள்ளைங்க. அதுங்களையும் அவன் பொண்டாட்டியையும் பார்த்தா இந்தக் குடும்பமா இவன்னு இருக்கும் பார்க்க. அப்படி அழகான குடும்பம் இவனுக்கு. இந்த குடியாலதான் இப்படி நாசமா போறான்”

“ஆமா சார் நடுவுல கூட சுனாமி வந்துதுள்ள அப்போ இவன்தான் முன்னாடி.. போறது வரதுன்னு எல்லாம் இவன்தான் பார்த்தான் செய்தான். அதாலாம் பார்ப்பான் செய்வான்.. வீடு வீடா போய் எத்தனையோ லட்சம் வசூல் பண்ணா சார் இவன். ஆளு கொஞ்சம் குடிகாரனே ஒழிய கெட்டிக்காரன். இதைக்கூட எதனா காரணமா தான் செய்வானா யிருக்கும்”

“ஆமாண்ணே, சுனாமின்னு இல்ல’ பொது காரியம்னு எல்லாம் இறங்கிட்டா தீயா இருப்பான், குடிச்சிட்டானாதான் போச்சு; அப்போ கூட சுனாமியப்போ குடிகாரன்னு நிறையப்பேர் இவனுக்கு பணம் தரலை ஆனாலும் அங்க இங்கன்னு ஓடி அலைஞ்சி கெஞ்சி பிடுங்கி அவ்வளவையும் அஞ்சுகாசு விடாம அனுப்பிவைச்சான் சார். அதலாம் செய்வான் சார்.. நல்லவன் சார்.. அவன் குடிச்சாதான் போதை தலைக்கு ஏறிடுது”

ஆளாளுக்கு மாறி மாறி பேசிக்கொண்டார்கள். அவரவருக்கு தெரிந்ததை அவரவர் மாறிமாறி தலைவரிடமும் காவலதிகாரிகளிடமும் எடுத்துவைத்தார்கள். நேரம் ஆகா ஆக கூட்டம் வெகுவாய் கூடி இருந்தது. கலெக்டர் ஊருக்குள்ள வரார் அதை செய் இதை செய்னு கட்சி ஆளுங்க வேற ஒரு புறம் அவனை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள். “அவனை ஒன்னும் பண்ணாதீங்க, அவனே போதையில் இருக்கான்.., செத்துட்டா உயிர்பாவம் பொல்லாதது என்றெல்லாம் கலெக்டர் வரும் நேரம்பார்த்து பேசிக்கொண்டார்கள்.

இன்னொரு தரப்பு குடியைப்பற்றி வாதம் செய்துக்கொண்டது. குடிப்பது இப்பல்லாம் சகஜமென்றது. ஆம் சாவதுகூட சகஜம் தான். குடியினால் இறக்கும் ஒருவருக்குப்பின் அழியும் குடும்பத்தையும், முன் அவதியுற்ற மனைவி பிள்ளைகளையும் எல்லோருக்கும் முழுஅளவில் புரியாது. அப்பனுக்கு இன்னொரு பெயர் இருக்கிறது, சமூகம் வைத்த பெயர். குடிகாரன் என்று பெயர். அதைத் தாங்கிப்போகும் பிள்ளைகளுக்கு நேரும் அவமானங்கள் எண்ணற்றவை. வாழ்வின் சறுக்கல்களும்’ சாதனை’ சந்தோஷம்’ முன்னேற்றம் போன்ற எதுவுமே சம்மந்தமற்று குடிகாரனின் மகனாக மட்டுமிருப்பது அனுபவிக்கையில்தான் தெரியும் பெருந்துன்பமென்று.

கனகனின் பிள்ளைகளும் அப்படியொரு அவதியில் ஓடோடி வந்தன. வந்து மின்கம்பத்தின் கீழே நின்று அப்பா அப்பா என்றுக் கத்தின.

********

aca58c40-Drunken_Stick_Dojo_versionனகன் தலை தூக்கிப் பார்த்தான். வாயை துடைத்து விட்டான். ஒரு கையில் கம்பம் பிடித்துக்கொண்டு காலைத் தொட்டு லுங்கி இல்லையே என்றுப் பார்த்துக்கொண்டான். மனைவி சரோஜா தலையிலடித்துக் கொண்டு அழுதாள். கட்சித் தலைவர் வந்து ஆறுதல் சொல்கிறார். கூட்டம் அலைபாய்கிறது, இங்குமங்கும் ஓடுகிறது, காவலாளிகள் ஓடுகிறார்கள், நகரு நகருன்னு ஒரே சத்தம்.. எல்லோரும் கடல் விலகியதுபோல் வழிவிட்டு நீங்கி நிற்கிறார்கள். கூட்டத்தில் ஒருவர் பின்னே ஒருவர் இழுக்கப்பட்டு வேறொருவர் முன்னே வருகிறார். கலெக்டரைப் பார்க்காத நிறையப் பேர் எப்படி இருப்பாரோ அவரென்று தலையை எட்டி எட்டி பார்கிறார்கள்.

நான்கைந்து கார் வேகமாக சீறி வருகிறது. கலெக்டர் வருகிறார். முன்னாள் இரண்டு பேர் இரண்டு காவலாளிகளின் இரண்டுச் சக்கர வாகனத்தில் ஜம்மென்று அமர்ந்து வருகிறார்கள். நமது தேசியக்கொடி அண்ணாந்து பறக்கிறது. கட்சிப் போராளிகள் வேறு ஓடி கூட்டம் விளக்கி கூட்டம் சேர்த்து கோசம்போட்டு சேவகம் செய்துக் கொண்டிருந்தார்கள்..

கலெக்டர் வந்திறங்கி, காவலதிகாரியிடம் பேசி தலைவரிடம் பேசி “நல்லவந்தான் ஆனா இப்படி குடிப்பது மட்டும் தான் பிரச்சனை என்றுத் தெரிந்துக்கொள்கிறார். ரத்தம் ஒழுகுவதைப் பார்த்து கல்லெறிந்தவர்களை காவலாளிகளை நீங்கள் ஏன் தடுக்கவில்லை என்று கடிந்துக் கொள்கிறார் கலெக்டர்.

கனகனின் மனைவி பிள்ளைகளைப் பார்த்து வணக்கம் சொல்லி விசாரிக்கிறார். என் கனவனை ஒன்னும் பண்ணிடாதீங்கன்னு சரோஜாவும், ‘அப்பா பாவம் நல்ல அப்பா பாவமென அவனுடைய சின்னச் சின்னப் பிள்ளைகளும் அழுதன. கலெக்டர் சென்று மின்கம்பத்தின் கீழ் நின்று கனகனைப் பார்க்கிறார். கனகன் கலெக்டருக்கு வணக்கமும் நன்றியும் சொல்கிறான். ஆங்காங்கே காமிராக்கள் கண்ணடிக்கின்றன. எல்லோரும் அவரவர் கைப்பேசி வைத்து காணொளிப் பதிவு செய்கிறார்கள். வாட்சப் பேஸ்புக் என போடுகிறார்கள். ஊடகங்கள் தகவலறிந்து வந்து குவிகிறது.. எல்லோரும் ஒட்டுமொத்தமாய் கனகனைப் பார்த்துக் கொண்டிருக்க கனகனின் முனகல் மாறியது..

“கலெக்டர் சார்.. நீங்க போதாது எனக்கொரு ஏணி போடச் சொல்லுங்க” என்றான்..

“ஏணியா ஏன் ?”

“போதை இறங்க இறங்க கை வலிக்குது கலெக்டர் சார்

“அப்போ கீழிறங்கு கலெக்டர்தான் வந்துட்டாருல்ல”

“இல்லை எனக்கு ஏணி வேணும்”

அதற்குள் தூரயிருந்து ஒரு கல்வந்து கனகனின்மேல் விழுந்தது. கனகன் ஆ..வெனக் கத்திவிட்டான். கூட்டம் ஏய் ஓய் என்று கத்தி அவனை யாரென்று தேட கனகன் கையை மீண்டும் எட்டி கம்பியிடம்கொண்டு போனான். காவலாளி ஒலியெழுப்பி கருவியான பெரிய மைக் வைத்து இம்முறை கத்திப் பேசினார். நீங்கள் யாரும் ஏதும் செய்தால் அது குற்றமாகும் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்றார். ஊடகங்கள் எல்லாம் வேறு கூடி விட்டதால் ஏதும் பேசாதீங்க ஏணி கொடுங்க என்றார்கள். ஒரு ஏணி போடப்பட்டது. அதில் வசதியாக நின்றுக்கொண்டான் கனகன். முகத்தைத் துடைத்துக்கொண்டு சிரித்தான்..

எல்லோரும் ஆச்சர்யமாக அவனையே பார்த்துகொண்டிருந்தார்கள்.. காமிராக்கள் எல்லாம் அவனையே குறி வைத்துக்கொண்டிருந்தது. காவலதிகாரிகள் கலெக்டர் கட்சித் தலைவர்கள் எல்லாம் மக்கள்முன் தன்னை பெரிய இரக்கமுள்ளவன் என்று காட்டிக்கொள்ள அவனை ஏதோ பெரிய ஒரு தியாகிபோல் பார்த்துக்கொண்டிருந்தார்கள்..

கனகன் சிரித்துக்கொண்டே சொன்னான்.. “எனக்கு இங்கே இப்போ முதலமைச்சர் இங்க வரணும்..!!!!!!!!!!!!!!!”

ஒரு நொடி எல்லாம் ஆடிப் போய்விட்டார்கள்.

“என்னய்யா கிண்டல் பண்றியா எங்களுக்கு அத்துமீறினா சுட அதிகாரமிருக்கு”

“சுட்டுடுவியா எங்க சுடு பார்க்கலாம். எங்களை மீறி எங்க மக்கள் ல ஒருத்தனா இருக்கவனை சுட விட்டுடுவோமா?” தன்னை இந்த சாதிக்கட்சியைச் சார்ந்தவன் என்று காட்டிக்கொள்ளும் புதியக் கட்சியொன்று முன்வந்து வக்காலத்து பேசியது அவனுக்கு. உடனே நீ நானென மாறி மாறி குரலெழுப்பி ‘தனி அவனை சுடாதே, காவலாளி அராஜகம்’ என்றெல்லாம்கூட சிலர் கோசமெழுப்பினார்கள். மீடியாக்கள் அவன் முதலமைச்சர் என்றுச் சொன்னதுதான் தாமதம் அலுவலுக்கு அழைத்து அலைவாங்கிக் குடைகளை மேலும் கீழுமாய் இந்தப்புறமும் அந்தப்புறமுமாய் திருப்பி நாலாப்புறமும் செய்தி பரப்ப நேரலையை துவங்கிக்கொண்டிருந்தது..

கனகன் முனகிக் கொண்டேயிருந்தான். எந்த நேரத்திலும் மின்கம்பியை பிடித்துத் தொங்கிவிடுவேன் என்பதுபோல் கையை மேலேயே தூக்கி வைத்துக்கொண்டிருந்தான்.. முதலமிச்சருக்கு செய்தி சென்றுச் சேர்ந்தது

முதலமைச்சர் வர தயாராகிக் கொண்டிருந்தார்..

_தொடரும்..

Posted in ஒரு கோப்பையில் கொஞ்சம் மது | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்