அம்மாப் பேச்சு…

சொல்லிலடங்கா சுகமெனக்கு

எப்போதுமே அவள்தான்,
அவளுக்கு மட்டும் தான்
அது நானாக மட்டுமே இருக்கிறேன், அவளுக்கு
எப்போதுமே நான் அதீதம் தான்;
சொல்லைக்கடந்த சுகம் எனக்கு
அவளைவிட வேறென்ன? அவளுக்கான
சொற்கள் மட்டுந் தான் என் மூச்சு
அவளுடைய ஒற்றைப் பெயரை யாசித்து தான்
எனக்கான மீதநாட்களே நீள்கின்றன
அவள் சொல்லிலும் இனிய சொல்லாள்
இதயத்திலும் ஆழம் உள்ளாள்;
அவளைப்போல்
எவர்க்கும் வேறு தெய்வம் பெரிதில்லை
அவளின் சிரிப்பிற்கு ஈடாக
எங்களுக்கு ஒரு மருந்தேயில்லை

ஆயிரம் சொர்கத்தின்

ஒற்றைக் கூடாரம் அவள்;
அவளைத் தாண்டி என்னிடம்
பேச மொழியில்லை
பாட தமிழில்லை
எனக்கு உயிருள் நிறைந்த ஒற்றை உயர்ச்சொல்
அவள் தான்; அது அம்மா,

அம்மாவின் நாட்கள்
அவள் கட்டும் புடவையைப் போன்றே
அழகானவை;
அவளுக்கென்ன அத்தனை அழகு

கம்பீரம்
நடமாடும் நதி போலவள்;
அன்றைய நாட்கள் நினைவிலுண்டு
அவள் பட்டுப்புடவை கட்டி நடந்துவந்தால்
அங்கே நீண்ட தெரு கூட
எழுந்துநின்று எங்கம்மாவின் அழகை எட்டிப்பார்க்கும்,

கடைத்தெரு போய்வந்தால்

கூடையைக் காட்டிலும் ஆடையில்
அத்தனைக் கண்கள் ஒட்டியிருக்கும்
பாவமவள்; மேய்ந்தக் கண்களை அழுக்கெனத் துடைத்திடுவாள்

ஒன்றிரண்டை அன்பினுள் அடைத்திடுவாள்
அவளின் பெரு மந்திரமே

அந்த அன்பு தான்; தாயன்பு;

நாங்கள் ஐந்து பேர்
ஆளுக்கொரு கண்ணில் அமர்வோம்
அவரவர் ஆட்டத்திற்கு
அவள் தலையை உருட்டுவோம்
ஆடினால் பேயாட்டம் ஆடுவாள் அம்மா
கேட்டால் நான் பத்திரகாளி தெரியுமில்ல என்பாள்
ஆம்; அவள் காளிதான்
இல்லையேல் அம்மியில் அரைத்து
உரலில் மாவாட்டி
மிச்சத்தில் துணி துவைத்து
மாங்காய் தொக்கு வைத்து
வடவம் உண்டை உருட்டி
வத்தல் பொரித்து
இன்று நாம் தொலைத்ததையெல்லாம்
அன்று மறக்காமல்
எங்களுக்கு கொடுத்தவள் காளிதானே?
அவள் காளி மட்டுமில்லை சாமியும்
அழகில் ஆற்றலில் வாணியும் தான்
நான்குகால் பாய்ச்சலில்
இடுப்பில் புடவை முடிந்து ஆடுவாள்
அடுப்பில் சோறும் குழம்பும் என்றால்
ஊரு மணக்கப் போடுவாள்
அவள் வைக்கும் ரசமென்றால் தெருவெல்லாம்
வாசம் வரும்
அவள் கூட்டும் குழம்பிற்கு ஊரெல்லாம்
வீடு வரும்,
அன்றெல்லாம் நாங்கள் உணவுண்டுவிட்டு
படிக்கச் சென்றால் இடையிடையே
கையை முகர்ந்துப் பார்ப்பதுண்டு
அதன் காரத்திலும்
அம்மா முகம் இனிப்பதுண்டு;
அதென்ன
சமையலென்ன சமையல், அவள் மென்றுதரும்
எச்சில் சோற்றிற்கு நீயா நானா
என்று சண்டை வரும்,

அவள் பிட்டுத்தரும் வெற்றிலைக் காம்பிற்கு

அவனா இவனா என
போட்டி நடக்கும்,
அவள் நாக்கு சிவந்தாள்
எங்கள் நாக்கு சிவக்கும்
அவள் உள்ளம் சிரித்தாள்
எங்கள் வாய் சிரிக்கும்,
குடும்பத்தின் மகிழ்ச்சிகளை அப்படி
சிவக்க சிவக்க எங்களின் மனதுள்
அன்றே பூசியவள்
அவள் தான், அம்மா!
இரவில்
அவள் காலடியில் படுத்துக்கொள்ள
காலமெல்லாம் தவமிருப்போம்
ஒண்ணுக்கு போயி நனைத்தாள்
மார்பிலேறி கிடப்போம்
அப்பா ஒரு புறம்
அம்மா ஒருபுறம்
அன்பின் ஆனந்தத்தில் திளைப்போம்
அப்பாவை விரும்பும் அம்மாபோல்
பாக்கியம் வேறென்ன இருக்கும்
மகன்களுக்கும் மகள்களுக்கும்..?

பூவரசம் மரமேறி குதிப்போம்
கூரை மீதேறி கோழி விரட்டுவோம்
கிணற்றில் இறங்கி

ஏதோ விழுந்ததாகச் சொல்லி
நாளெல்லாம் தண்ணீரில் மிதப்போம்
எல்லாம் அவளுக்குத் தெரியும்,
தெரியாதது போலவே
எங்களை விரட்டுவாள்
நான் யாரு தெரியுமா ‘காளி’ என்பாள்
கோபம் வந்தால்
பத்திரகாளி தெரியுமா என்பாள்
மீண்டும்
கொஞ்சம் அழுதாள் வாரியணைப்பால்
உள்ளே எங்களுக்கு அவளே அவளே
எப்போதும் சாமியாவாள்;

அதிரசம் சுடும் நாட்கள் எங்களுக்கு

புத்தகமெல்லாம் எண்ணெயூரும்
எழுதியதெல்லாம் இரண்டாகிப்போகும்,
முறுக்கு சுடும் நாட்களில்
எதிரிகூட நண்பனாவான்
வகுப்பே எங்களோடு பாசமாகும்,
அப்போவெல்லாம் தண்ணீர் கொடுத்து
வெள்ளைத் தாள் பெறுவது வழக்கம்
வெள்ளைத்தாள் சேர்ப்பது ஒரு ரசம்
பொதுவாக எல்லோரும் வெள்ளைத்தாள் கொடுத்து
தண்ணீர் வாங்கி குடிப்பார்கள்,
நாங்கள் தான்
பலகாரங்களைக் கொடுத்து
தண்ணியும் வாங்குவோம் காகிதமும் வேண்டுவோம்
அன்பைக் கப்பலாய் கப்பலாய் விடுவோம்
கப்பலுக்குள் எண்ணெயும்
எண்ணெய்க்குள் அம்மாவின் அன்பும்
நனைந்திருந்த நாட்களவை;
அம்மாவிற்கு நாங்கள்
எப்போதுமே சண்டியர்கள் தான்,
சர்க்கரைக் கொட்டிவைப்பாள்
தின்று தீர்த்துவிடுவோம்,
வத்தல் போட்டுவைப்பாள்
தின்று தீர்த்துவிடுவோம்,
அப்பா கம்பனியில் ஆர்லிக்ஸ் தருவார்கள்
அன்றே அது தீர்ந்து போகும்,
பெட்டி பெட்டியாய்த் தீர்வதால்
கத்தி கத்தி பேசுவாள்,
பின்னால் சென்று –
பிள்ளைகள் தானே போகட்டுமென்பாள்
அப்போதெல்லாம் அவள் சுட்ட
பலகாரங்களை விட எங்களுக்கு

அவள் காட்டும் பாசம் தான் அப்படி இனிக்கும்;

அவள் தெருவில் நடந்து வருவதைப்

பார்த்து ரசிப்போம்,
யாரோடும் பேசி நின்றாள்

அவள் சிரிக்க காத்திருப்போம்,

அப்பா போலவே நாங்களும் அம்மாவிற்கு
பரம ரசிகர்கள் தான்,
அம்மா தீபாவளியா பொங்கலோ வந்தால்
துணியெடுக்க நகரம் போவாள்
சிலசமயம் திரும்பிவர தாமதமாகும்
மாலைவரைப் பார்ப்போம், அதற்குமேல்
பொறுக்கமுடியாமல்
இருண்டவீட்டைவிட்டு அப்பா வெளியே போவார்

வாசலில் வந்தமர்ந்துகொள்வார்
நாங்களும் வாசலில் அமர்ந்துவிடுவோம்
சிலவேளை உறங்கிகூட இருப்போம்

சுவாசம் மட்டும் அம்மா அம்மா என்றே
சுவாசித்திருக்கும்;

இப்போதுதான் வளர்ந்துவிட்டோம்
அம்மா முகம் சுருங்கி

உடல் மாறி வயதானவளாகத் தெரிகிறாள்
கிழவியைப்போல பேசுகிறாள்
நாங்கள் வளர்ந்துவிட்டோமாம்
எங்களுக்கு வயதாக வயதாக
அவளுக்கு வளர்கிறோம் என்பதில் அப்படியொரு சந்தோசம்
ஆனால் அவளுக்கு வயதாக ஆக
முதிர்கிறாளே என்று எங்களுக்கு பயம்;
சொல்லப்போனால்
உண்மையில் எங்களுக்கு வாழ்நாள் சாதனை
என்ன என்றெல்லாம் தெரியாது,
அம்மா இருக்கும்வரை
இருப்பது தான் எங்களுக்குச் சாதனை!

அம்மா; சொல்லினும் இனியவள்
அன்பினும் தூயவள்
அவள் வாழினும் பெரிதொன்றை மனது
கேட்டதேயில்லை இதுவரை;

நன்றாக சிந்தித்தாலும்
எப்படி யோசித்தாலும்
அவள் அடங்கும் சொல் என் தமிழில் இல்லை
அவள் தான் எங்களுக்கு
பரம எல்லையும்
இப் பிறப்பைத் தந்த சாமியும்!!

சாமியானால் என்ன
சாதல் என்று ஒன்று

எல்லோருக்கும் உண்டு தானே ?
அது எங்களுக்கும் இருக்கும்,
ஆனால் அது
அவளிருக்கும் வரையாக இருத்தல் வேண்டும்!!
———————————————————————————–
வித்யாசாகர்
Posted in அம்மாயெனும் தூரிகையே.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

நாங்கள், மீண்டும் மனிதர்களாகிவிட்டோம்…

தோ
மீண்டும் அத்தை மாமா பேசுகிறார்கள்
தொலைபேசியில் யார் யாரோ அழைத்து
நலம் விசாரிக்கிறார்கள்,

மீண்டும் குருவிகள் கீச்சிடுகின்றன
மீண்டும் மழை பெய்கிறது
மீண்டும் ஏசியை அணைத்துவிட்டு
சன்னலைத் திறந்து உலகத்தை
கம்பிகளின் வழியே பார்த்து அமர்ந்திருக்கிறோம்,

ஊர்குருவிகள் கத்துவதும்
குயில் விடிகாலையில் கூவுவதும்
இப்போதெல்லாம்
காற்றின் அசையும் சத்தத்தோடு
காதினிக்கக் கேட்கிறது,
மரக் கிளைகளின்
இலைகளில்
உறங்கும் பனிநீரை
மீண்டும் உலுத்துக் கொட்ட
உள்ளூர ஆசை வருகிறது,

ஓட்டு வீடுகளைத் தான்
விட்டுவிட்டோம்,
ஒன்றோ இரண்டோ ஆங்காங்கே இருந்திருந்தால்
எட்டிப் பாருங்களேன்,
ஓட்டின் மேலே ஒரு சின்ன செடியேனும்
அதிசயமாய் துளிர்த்திருக்கும்,

லைஃபாய் சோப்பும்
பல்லாங்குழியும் இல்லை,
தெருவிலிறங்கி கூட்டாக
கபடி விளையாட முடியவில்லை,
மற்றபடி நினைவெல்லாம்
பழைய நாட்களே நிறைந்து கிடக்கிறது,

மீண்டும் அதே மண் மணம்
மழை நனைத்த நீல வானம்
இரவில் மின்னும் மின்மினி
காலையில் முகம் சுடும் மஞ்சள் வெயில்
அத்தனையும் புதியதாகவும்
பழையதெல்லாம் மீண்டதாகவும் இருக்கிறது; வாழ்க்கை
ஒரு பக்கத்தில் பயமாக இருந்தாலும் இன்னொரு பக்கத்தில்இனிக்கிறது,

பிள்ளைகள்
மீண்டும் நொண்டி விளையாடுகிறார்கள்
அண்ணன் அக்காவெல்லாம் வீட்டிற்குள்
ஓடி ஒளிந்து விளையாடுகிறார்கள்
கண்ணாமூச்சு ரேரே காட்டுப்பூச்சு ரேரே
என்றெங்கோ தூரத்தில்
குழந்தைகள் விளையாடும் சத்தம்
சன்னமாக கேட்கிறது,

நிறைய புத்தகங்கள் படிக்க
இதோ, மீண்டும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது
பழைய புத்தகங்கள்
படித்த கதைகளைக் கூட படித்துக்கொண்டே
இருக்கலாம் போலிருக்கிறது,
அம்மா அப்பாவிற்கு இனி
பொழுது மிக நன்றாகப் போகும்,

எல்லோரும் சொல்கிறார்கள்
ஏதோ கரோனாவாம்,
கரோனா வந்தால் கொல்லுமாம்
எங்களுக்கு
அதைப் பற்றியெல்லாம் கவலையில்லை,
நாங்கள்
இதோ மீண்டும் மனிதர்களாகி விட்டோம்
நாங்களிதோ
மீண்டும் வாழத் துவங்கிவிட்டோம்!

எங்கள் வாழ்க்கையில் இனி
மழை வரும்
விவசாயம் மருந்தின்றி நடக்கும்
விவசாயிகள் தலைநிமிர்வார்கள்
மரங்கள் வெட்டப்படாது
நதிகள் கடலெல்லாம் மாசுபடாது
மனத்திற்குள் மதமிருக்காது சாதிப்
பிளவிருக்காது; மாறாக எங்கும் அன்பிருக்கும்
ஆறு ஏறி குளங்களெல்லாம்
வணங்கத் தக்கதாகும்
ஆம்; நாங்கள் தான் மனிதர்களாகி விட்டோமே!!!
——————————————————
வித்யாசாகர்

Posted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வா உலகே வந்தென்னை வாரியணை (கரோனா கட்டுரை)

உலகத்தீரே கொஞ்சம் கேளுங்கள்…

அன்பால், நம்பிக்கையால், நமது அறத்தின் வலிமையால், பண்பின் உயர்வு கருதி நாம் இயற்கையால் மீண்டும் நிச்சயமாக மண்ணிக்கப் படுவோம். மீண்டும் அனைவருமாய் வென்றெழுந்து வருவோம்.

மீண்டெழுவோ மெனும் சமத்துவச் சிந்தனைகளோடு மேலும் ஆழ்மனத்திலிருந்து தூய தாயன்பு பெருக்கி, கருணையைக் கூட்டி, நட்பு வலுத்து, நானிலம் சிறக்க நாடெங்கும் நம்பிக்கையை பரப்புவோம், வாருங்கள்…

இப்போதைக்கு நம்மிடமிருக்கும் பெரும்பலத்தின் மூலமே இந்த நம்பிக்கை தான். நற்சிந்தனைகள் தான். நன்னடத்தையும் நல்ல ஆரோக்கியத்திற்கான புரிதலையும், மண்ணின் மரபூரிய மருத்துவமென அனைத்தோடும் சேர்ந்து நாம் விரைவில் மீண்டெழ மிக அரியதொரு நல்ல வாழ்க்கையை நாமெல்லோரும் வாழ்வோமெனும் நம்பிக்கை தான் இப்போதைக்கு நம்மோடு பிறந்த சொத்து.

மகிழ்ச்சி என்பது இம்மண்ணின் உயிர்க்கெல்லாம் பொது என்பதை மறந்ததொன்றே மனிதர் நாம் செய்த மாபெருங் குற்றம். அதைப் புரியும் தருணமிது. தெளியும் அறிவு பெரின்;அது நமக்கு காலம் தரும் கொடை. இன்னொரு வாய்ப்பு என்பதை மகிழ்வோடு ஏற்போம்.

அதை ஏற்கும் அறிவு நமக்குண்டு. நமக்கு எல்லாம் புரிகிறது. எல்லாவற்றையும் எல்லோரும் உணர்கிறோம். எல்லாம் தெரிகிறது ஆனாலும் எதையும் எதற்கோ இன்னும் மறுக்கிறோம்.

மனதை உடைத்துக்கொண்டு வந்து விழிகளில் நிறையும் அழையைப்போல, நம் மனச்செருக்கு குபீரென பீறிட்டு வெளியே வந்து விழுந்து விடுமானால் பிறகு பாருங்கள் நமக்கு மரணம் பற்றிய பயம் உடனே போய்விடும். வாழ்வதற்கு தன்னைத்தானே நாம் வீரியத்தோடு தயாராகி விடுவோம்.

காரணம் நம்மில் பிரிவு எங்கே? நம்மில் உயர்ந்தோர் யார் தாழ்ந்தோர் யார்? பணமொன்றைத் தூக்கி ச்சீயென வெளியே வீசிவிட்டு பகட்டுதனமும் புகழின்றி மனதின் நிர்வாணத்தோடு காண், கண்டு பாருங்கள் யாதுமற்று நம்மை; நாம் அத்தனைப் பேரும் ஒன்றே. ஒன்றேயெனப் புரியும்.

பிறகு இதில் யார் இறக்க? யார் பிழைக்க? பிழைத்தால் அத்தனைப் பேரும் பிழைப்போம். இறந்தால் அத்தனைப் பேரும் இறப்போம். நம்மில் பேதமில்லையென்று ஒன்றி எல்லோரும் நாதத்துள் நிறைக்க ஏற்போம்.

அப்போது அந்த தானெனும் சுடுமண் வந்து வெளியே கொட்டிவிடும். உள்ளே அழகாக தெய்வீகம் மலர்ந்துகொள்ளும். எல்லோர்மீதும் இன்னும் அன்பு சுரக்கும். பிற உயிர்கள் தான் மொத்தத்தில் பெரிதாகத் தெரியும்.

அப்படியொரு மனம் மலர்ந்த தெய்வீகத்தோடு தாய்மையோடு இவ்வுலகை நாம் காணவேண்டும். பேருவகையோடு மனதால் கட்டியணைத்து இந்த இயற்கை அன்னையை நாமெல்லோரும் கூட்டாகச் சேர்ந்து காக்கவேண்டும்.

ஒரு இலை பறிக்க மனசு அஞ்ச வேண்டும். ஒரு பூ பறிக்ககூட உயிர் வலிக்க வேண்டும். உயிர்கள் எனில் வெட்டுவாயா? பெண்கள் எனில் கழுத்தை அறுப்பாயா? எண்ணவே மனது பதைபதைக்க வேண்டும். பதைக்கும் உயிர்களின் வலியது புரிந்தால் யாரை அடித்தாலும் நமக்கும் வலிக்கும். யாரை நொந்தாலும் நமக்கும் நோகும்.

நோக வேண்டும். பிறருக்கு வலித்தால் நமக்கும் வலிக்குமே எனும்போலெண்ணி நாம் வாழவேண்டும். நாமும் மிருகம் தானே? ஆனால் அனைத்தையும் பகுத்தாராயக் கூடிய உயிரின் பச்சை வாசம் என்னவென்று புரிந்த மிருகமில்லையா? அது ஒவ்வொரு மனிதர்க்கும் பொருந்தவேண்டும்.

பசித்தால் வேறென்ன செய்ய? காய் காய்த்தால் பறிப்போம், கனி கனிந்தால் பறிப்போம், வேர் இலை விதை உயிர் கிளை மரம் குருவி பறவை உயிர்கள் அனைத்தையும் பசித்தால் பறிப்போம், பறிப்போம், தின்போம். பசி யாரை விட்டது? பசித்தால் புசிப்போம் தான்; ஆனால் கூடவே அவைகளைக் காப்பொம் என்பதே கவனத்தில் வலுக்கவேண்டும்.

மரம் வளர்த்து உயிர் பெருக்கி காற்று மணக்க மணக்க இந்த மண்ணை பெரு வாஞ்சையோடு காப்போம். எல்லோரையும் எப்போதும் நாம் வாழ்விப்பவர்களாகவே பிறக்கிறோம். அதற்கே போராடிக் கொள்ளும் மகோன்னத தருணமிது.

எனவே, போராட்டத்தை ஆயுதங்களால் அல்ல மனதால் கைகொண்டு எண்ணங்களால் வலிமைப் பூண்டு அன்பினால் ஒன்றிணைந்து உடலாக தனித்தும் உயிராகச் சேர்ந்தும் இப்பிரபஞ்சமென அறிவால் கனத்திருப்போம் உலகத்தீரே.

நம்பிக்கையொன்றே வாழ்க்கை. நம்பிக்கை கொண்டே உயிர்ப்பு. நம்பிக்கையொன்றே நம்மிடம் முழுதாய் இருக்கும் எல்லாம். அத்தகைய ஆழமான நம்பிக்கை நிச்சயமாக நமைக் காக்கும். நாமிந்த பிரபஞ்சத்தை காக்க மட்டும் மனதளவில் தயாராவோம்.

ஆயிரம் கரோனாவின் பிரச்ச்னை என்றாலும் பயமென்றாலும், அதற்கெல்லாம் அப்பாலோரு இயற்கையின் பெருஞ்சிரிப்பை நாம் இரு கண்கொண்டு காணாமல் இல்லை. இன்று இயற்கை நம் கண்ணிற்கு காட்டும் பேரெழில் பல மனித இறப்புகளுக்கு நடுவேயும் தனித்து நின்றுகொண்டு தனக்கானதொரு நியாயத்தை பேசி பேசி கத்தி கதறி வெளுரிய முகத்தோடு தான் அப்பாவி மனிதர்களையும் சேர்த்தே கொன்றுகொண்டுள்ளது.

அதன் வலியைப் புரிவோம். இயற்கை நம்மை எக்கணத்திலும் முழுதாய் கொல்லாது. புரிய வாய்ப்பு தந்து தந்தே தனை கோடான கோடி வருடங்களுக்கும் மேலாக நம்மோடு உயிராகவும் உடலாகவும் மரமாகவும் செடியாகவும் பூவாகவும் பறவையாகவும் கடலாகவும் மலையாகவும் வியாபித்து வைத்து நதியின் எழிலென எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது.

அதன் நியாயத்தை, இயற்கையை காக்க வேண்டிய அவசரத்தை, அதற்கான அக்கறையை, மிகப் பெரியதாகப் புரிந்து நம் அறிவிற்குள் ஏற்றிக்கொள்ள வேண்டும். என்னை கேட்டால் இது ஒரு சபதத்திற்கான தருணம் என்றெண்ணுகிறேன். காரணம், உடல்நலமின்றி நான் மருத்துவரிடம் செல்லும் காலத்தில் ‘எனக்கு ஓய்வில்லை, அதனால் உடலில் கவனம் செலுத்தவில்லை, பல வேலைகளில் இருக்கிறேன்’ என்பேன், அதற்கு, மருத்துவர் கேட்பார்; உங்களைத் தூக்கி நாளை ஐ.சி.யூ.வில் வைத்துவிட்டால் என்ன செய்வீர்கள்? என்பார்.

அப்படித்தான் இந்த இயற்கை நமைத் தூக்கி இன்று ஐ.சி.யூ.வில் வைத்துவிட்டு இன்னபிற அனைத்தையும் உடனே மற, உன்னை நினை, உனது மண்ணை நினை, உனைச் சூழ்ந்த இந்த உலகை உனதென நினை, உனக்காக மட்டும் இந்த நானிலத்தை மாசுபடுத்தி ஒழித்து வெப்பத்தால் அலைக் கற்றைகளால் மின்னெந்திரங்களைக் கொண்டு எமை மாய்ப்பதை நிறுத்து என்று உயிர்க்கொன்று உயிர்க்கொன்று கத்தி கத்தி சொல்கிறது. இனியும் நாம் மாறாது போனால் இன்னும் எத்தனை கரோனா வருமோ என்று தெரியாதென கொஞ்சம் மிரட்ட மட்டுமே செய்கிறது, அந்த நம் மருத்துவரைப் போல.

அல்லாது இயற்கை நமை என்றும் காக்குமேயொழிய கொல்வதில்லை. எனவே அது புரிந்து ஒரு நல்ல சபதமெடுப்போம் “எப்போதுமே இனி மாறமாட்டேன் இயற்கையே, உனை நெஞ்சாரக் காப்பேன், எதன் பொருட்டும் உன்னை விட்டுத் தருகிலேனென” நாம் தனித்தனியே ஒவ்வருவராய் சத்தியம் செய்து, நம் எதிர்கால பயணத்திற்காக உயர் பக்குவமடைய வேண்டிய வேளை இதுவென்று எண்ணி யொரு இயற்கைக்கான தாய்மைப்பூண்ட சாத்தியத்தை ஒன்றாய் கூடி எடுப்போம்.

இந்த உயிர்களின் மகிழ்ச்சி, பச்சை மரங்களின் ஆடல் பாடல், குருவி காக்கைகளின் கும்மாளம், வானத்தில் மிக ஒய்யாரமாகக் கேட்கும் காற்றின் ஒலி, கடலின் இசை, மழையின் ஆட்டமென இதனைத்தையும் நாம் மீண்டும் மீண்டுமாய் இனி நமது தேவைக்காகவேனும் பாதுகாக்கத் துவங்குவோம். நல்லதே எண்ணுவொம். எல்லாம் மாறும். எல்லாம் நன்றே மாறுமென்று நம்புவோம். நம்பிக்கையொன்றே வாழ்க்கை. நம்பிகையொன்றே எல்லாம்.

வாழ்க மக்கள். வாழ்க உயிர்கள். ஓங்கி யெழுக எனது இயற்கையின் நேசம். உள்ளார்ந்து அமர்க யெம் பிற உயிர்களின் பற்று. உலகெங்கும் அமைக அமைதி நன்றே. நலமே யெங்கும் விழைக நன்றே🌿

வித்யாசாகர்

Posted in வாழ்வியல் கட்டுரைகள்! | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கரோனா வைரசும் கவனமும்…

ன்பு வணக்கம் உறவுகளே,

நலமாக உள்ளீர்களா? நாங்களிங்கு நலம். நீங்களும் மகிழ்ந்து தனிமை ருசித்து குடும்பத்தோடு மகிழ்ந்திருக்க ஒரு நல்ல தருணமென இத் தருணத்தைக் கருதி, வீட்டின் சின்ன சின்ன வேலைகளை செய்தவாறு, நல்ல புத்தகங்களை வாசித்தவாறு, நல்ல திரைப்படங்களைக் கண்டு மகிழ்ந்தவாறு நிறைவோடு உடலாரோக்கியத்தோடு இருங்கள்.

இடையிடையே இப்படி ஐயா மருத்துவர் கீழுள்ள காணொளியில் சொல்வதைப்போல கேட்டு நல் பயிற்சி சிந்தனை ஆழ்மன தியானமென வாழ்க்கையை சீரமைப்போடு அமைத்துக்கொண்டு சுகமாக வாழுங்கள்.

ஆங்காங்கே தொண்டு செய்யும் அமைப்புகளில் பலர், நல்ல குடும்பங்கள் சார்ந்து பலர் தினக்கூலி வாங்கிவந்த குடும்பங்களை அடையாளங் கண்டு இந்நேரத்தில் தெய்வங்களைப் போல நின்று உதவுகின்றனர். அவற்றை அவ்வாறே இயன்றளவு எல்லோரும் செய்வோம். செய்வோர்க்கு உதவுவோம்.

எல்லாம் நன்றே. அனைத்தும் நன்மைக்கே. உயிர் போதலொன்றே கொடுமை அன்றி கரோனா மனிதர்க்கு உலவளவில் நல்ல பாடத்தைத் தந்துள்ளது. உயிரின் அருமையை உணர்ந்துகொள்ள வாய்ப்பளித்திருக்கிறது. நாம் தான் பயத்தில் அரண்டிருக்கிறோம், இன்ன பிற உயிர்கள் இந்த ஓரிரு வார காலமாக உள்ளாசத்தோடு திரிகிறது. பறவைகட்கெல்லாம் வசந்தம் வந்ததாய் எண்ணி கூடிப் பேசி மகிழ்கிறது.

இங்கு தான் நாம் சிந்திக்கவேண்டும். வாழ்க்கையை உற்றுப் பார்த்து சரிசெய்ய சந்தர்ப்பம் அமைகையில் நாம்தான் விட்ட குறைகளை தொட்ட குறைகளை முயன்று சரிசெய்து கொள்ளவேண்டும்.

ஆயிரம் வேலை ஆயிரம் பிசி ஆயிரம் விழாக்களென ஆயிரங்களோடு ஓடிக்கொண்டிருந்த கோடிகளையும் களவில்லாது ஓடிக்கொண்டிருந்த ஏழைகளையும் உட்காருடா கீழேவென இயற்கையின் ஒரு சின்ன கிருமி நம்மை அதட்டி உட்காரவைத்து விட்டது.

அதே டெக்னாலஜி, அதே வாகனங்கள் அதே பிசியான மனிதர்கள் அனைத்தையும் காலுயாக்கிப் போடலடுவிட்டது கரோனா வைரஸ். இந்த வாழ்க்கையை இந்த வழிமுறைகளை இந்த பிற உயிர்களுக்கு உகன்ற பொழுதை அமைத்துக்கொள்ள நாம் ஏன் கொஞ்சம் காலத்திற்குமாய் சிந்திக்க கூடாது?

சிந்தியுங்கள். எல்லாம் நன்மைக்கே. என்றாலும் இன்னல் வரும்போதே நாம் இன்னும் கொஞ்சம் தெளிவோடும், மேலான முயற்சிகள், நம்பிக்கைகள், வரும் முன் காக்கும் திட்டங்களோடும் மிக கவனமாக இருத்தல் வேண்டும்.

அரசும் மக்களும் உடனிருப்போரும் அவரவரால் இயன்றதை அவரவர் செய்வார்கள்; ஆனால் அவர்களால் உயிர் தர இயலாது. உயிர் நம்மிடம் தான் இருக்கிறது. நம்முயிரை நாம் தான் நன்றே சுவாசித்து சுகாதாரம் காத்து நலமுடன் காலத்திற்குமாய் பேணவேண்டும்.

எனவே தெளிந்து நிறைந்து சிந்தித்து நற்செயலாற்றி மகிழ்வோடிருங்கள். அனைவருக்கும் என் வாழ்த்து. அனைவருக்கும் எனதன்பு வணக்கம்🌿

 

வித்யாசாகர்

Posted in அறிவிப்பு | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

தென்னிந்தியக் கவிஞர் எழுத்தாளர் திரு. வித்யாசாகர் அவர்களுக்கு கலைமாமணி விருது…

தமிழா ஊடக வலையமைப்பின் ஏற்பாட்டில் சம்மாந்துறை மண்ணில் களைகட்டிய மாபெரும் மாணவக் கவியரங்கம்.

சென்ற 24.02.2020 மாலை 3.00 மணிக்கு சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் பாவலர் பசீல் காரியப்பர் நினைவரங்கில் வரலாற்றின் பெருந்தடமாக மாணவர் கவியரங்கம் நடைபெற்றது. இக்கவியரங்கத்திற்கு தென்னிந்தியக் கவிஞர் எழுதாளர் பன்முக ஆளுமை உயர் திரு வித்யாசாகர் ஐயா அவர்கள் தலைமை தாங்கி இருந்தமை சிறப்பம்சமாகும். சம்மாந்துறை வலயக்கல்விப் பிரிவுக்குட்பட்ட அனைத்து இடைநிலை, உயர்தரப் பாடசாலைகளையும் உள்வாங்கி கவியரங்கில் மாணவரைப் பங்கேற்கும் வகையில் அழைப்பு விடுக்கப்பட்டது. மொத்தமாக ஐம்பது மாணவர்கள் கலந்து கொண்டனர். வித்யாசாகர் ஐயாவின் நெறிப்படுத்தலில் 13 கவிஞர்கள் தெரிவு செய்யப்பட்டு அதில் 8 பேர் தொனிப் பொருளுக்குத் தக்கவாறு எழுதிய மாணவர்களின் கருத்தாழம், மொழியாட்சி, சமத்துவச் சிந்தனை, சமூகத்தின்பால் அக்கறை போன்றவை கவனத்திற் கொள்ளப்பட்டு அரங்கத்தில் கவிதை வாசிக்கும் தகுதியைப் பெற்று பட்டை தீட்டப்பட்டனர். ஏனைய ஐந்து கவிஞர்களும் சிறப்புக் கவிதைபாடும் தகுதிக்கு தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இக்கவியரங்க நிகழ்வுகள் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் தேசிய கீதத்துடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பின் சர்வமத ஆராதனையுடன் தமிழ்த்தாய் வாழ்த்து, செம்மொழி வாழ்த்து என்பவை பாடசாலை மாணவர்களால் இசைக்கப்பட்டது. தொடக்க உரையை தமிழா ஊடகப் பணிப்பாளர் எஸ். முகம்மது ஜெலீஸ் நிகழ்த்தினார். இந்நிகழ்வின் முன்னிலை வகிபாவத்தை சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனீபா ஆரம்பித்து வைத்தார். வரவேற்புரையை தமிழா ஊடக வலையமைப்பின் ஆலோசகர் மு.இ. அச்சிமுகம்மட் நிகழ்த்தினார். பாவலர் பசீல் காரியப்பர் நினைவுரை கவிஞர் மன்சூர் ஏ காதிர் அவர்களால் உரை நிகழ்த்தப்பட்டது. பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் சம்மாந்துறை மண் களைகட்டியது. இதன் பின் சரியாக 5.00 மணிக்கு மாணவர் கவியரங்கம் இடம்பெற்றது. தலைமைக் கவிஞர் பன்முக ஆளுமை உயர் திரு வித்யாசாகர் ஐயா அவர்கள் மாணவர்கள் புடைசூழ அழைத்துவரப்பட்டமை காண்போர் மனதை நெகிழச் செய்தது. 

பல்வேறு போட்டிகளிலும் பங்கு பற்றி வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. மூத்த கவிஞர் பாவேந்தல் பாலமுனை பாறூக் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார். பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹுதுல் நஜீம் சேர் அவர்கள் நிகழ்வுகள் குறித்து உரை நிகழ்த்தினார். மூன்று கவிதை நூல்கள் அரங்கில் வெளியிட்டு வைக்கப்பட்டமை இந்நிகழ்வின் சிறப்பம்சமாகும். குறிப்பாக 50 மாணவச் செல்வங்களின் கவிதைகள் அடங்கிய ‘துளிர்களின் பெருநிலம்’ என்ற பெயரில் பணிப்பாளர் எஸ்.எம். ஜெலீஸ் அவர்களால் தொகுக்கப்பட்டு வெளியிட்டமை அனைவரதும் பாராட்டைப் பெற்றது. பன்முக ஆளுமை உயர் திரு வித்யாசாகர் ஐயா அவர்களால் எழுதப்பட்ட ‘ஞானமடா நீ எனக்கு’ எனும் கவிதை நூல் மாணவர்களுக்கும் அதிதிகளுக்கும் வழங்கப்பட்டமை அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. மு.இ.அச்சிமுகம்மட் அவர்களால் ‘எனது நிலமும் நிலவும்’ எனும் கவிதை நூலின் முதல் பிரதி பன்முக ஆளுமை உயர் திரு வித்யாசாகர் ஐயா அவர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது. 

தமிழா ஊடக வலையமைப்பின் பணிப்பாளர் திரு.செ.மு.ஜெலீஸ் அவர்கள் தனது அமைப்பின் சார்பாக ஏறக்குறைய இருபது வருடங்களுக்கும் மேலாக கலைத்துறைக்கு ஆற்றிய பங்களிப்பின் பன்முகத்தன்மையைப் பாராட்டி கலைமாமணி எனும் அதிஉன்னத விருதை பன்முக ஆளுமை உயர் திரு வித்யாசாகர் ஐயா அவர்களுக்கு சபையோர் முன்னிலையில் இலங்கை தேசத்தின் சார்பாக வழங்கி கௌரவித்தமை எல்லோருக்கும் பெருமிதத்தைத் தந்தது.

தமிழா ஊடகப் பணிப்பாளர் எஸ்.எம்.ஜெலீஸ் அவர்களின் மகத்தான பல வெற்றிப் பணிகளைப் பாராட்டி முகில் பதிப்பகத்தின் சார்பில் அதன் நிறுவனர் ‘வெற்றி வேந்தன்’ எனும் அதி உன்னத கெரவத்தை சபையோர் முன்னிலையில் வழங்கி கௌரவம் செய்தார். அத்துடன் தமிழின் தொன்மையை வெளிக் கொணரும் வகையில் கவிதைப் படைப்பிலக்கியத்தில் பங்காற்றியமைக்காகவும் பல படைப்புகளின் தமிழாழ தகுதி அறிந்தும் சபையோர் முன்னிலையில் கவிஞர் திரு. மு.இ. அச்சிமுகம்மட் அவர்களுக்கு ‘சந்தக்கவி’ எனும் நாமத்தைச் சூட்டி சபையோர் முன்னிலையில் கௌரவம் அளிக்கப்பட்டது.

செய்தி – தமிழா ஊடக வலையமைப்பு, இலங்கை

Posted in அறிவிப்பு | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக