கொஞ்சம் உயிர்; கொஞ்சம் இளைஞர்கள்; கொஞ்சம் விடுதலை.. (கவியரங்கக் கவிதை)

சாவி திறக்கும் சிறுதுவாரத்தின் வழியே
தெரிகிறதந்த உலகம்;

உலகை ஒரு கண்மூடிக்கொண்டுப் பார்க்கிறேன்
அங்கே தமிழை
ஆங்கிலம் கலந்துப் பேசுவோரையெல்லாம்
முதலாய்ச் சபிக்கிறேன்,

சபித்த மனம் சற்று நடுநடுங்க –
உணர்வூசி வைத்து
இதையமெங்கும் குத்துகிறேன்,
உலகநடப்புகள் சதை அற சதை அற எனைக் கிழித்து
என் முகத்தில் காரி உமிழ்கிறது’
மானங்கெட்ட மனிதனே என்கிறது’
சுயநலவாதி சாவேன்’ வாழ்ந்தென்ன சாதித்தாய் என்கிறது;

ரத்தம் சொறியச் சொறிய –
நெடிகூடிய வார்த்தைகளைப் பொறுக்கிக் கொண்டு
எனக்குள்ளிருக்கும்
கொஞ்சமனிதத்தின் மெச்சுதலில்
மார்பு புடைக்கிறேன்;

“த்தூ,, அடிமை நாயே” என்றொரு குரல்
யாரது என்று கேட்பதற்குள் –
தண்ணீர் மறுப்பவனைத் தட்டிக்கேட்கமுடியாத
அசுரக் கைகள்
அரசின் சாய்ந்தத் தராசுக் கொண்டு
தலையில் அடிக்கிறது

அடியைத் தாளாது விளக்கம் கேட்டால்
தீவிரவாதி என்கிறது சுற்றம்,

யார் நானா ?
தமிழரா தீவிரவாதி என்பதற்குள்
“புறத்துப் போய்க்கோ” என்று நெட்டித்
தள்ளியதின்னொரு கை,

சமாளித்து எழுவதற்குள்
ஜாதியை ஒரு புறமும்
மதத்தையொரு புறமும் கொண்டுவந்து –
எனது முதுகைப் பார்த்துக் குத்தியது என்னினம்,

உரக்க’ அப்போதும் கத்துகிறேன் –
“நான் யார் தெரியுமா(?)” என்கிறேன்
ஹ.. ஹ என்று.. எல்லோரும் எனைச் சுற்றி நின்று
கத்தியவாறே சிரிக்கிறார்கள்,

அவர்களின் வாயையடைக்க
எனக்கு இன்னொரு விதை தேவைப்பட்டது
விதைத் தேடி அலைகிறேன்,
நான் இதோ.. நான் இதோ.. என்கிறார்கள் யார் யாரோ..

யாரைக் கேட்டாலும் மந்திரி
யார் வேண்டுமானாலும் ராஜா
நினைத்தவனெல்லாம் தலைவன்
எது வேண்டுமோ கிடைக்கும் லஞ்சமிருக்கா (?)
என்கிறார்கள்;

லஞ்சமா (?)!!
லஞ்சம் தீதென்கிறேன்
நியாயம் பேசினால் ராஜா மந்திரியெல்லாம்
எப்படி வரும் ?
அரசியலில் எப்படி நிலைப்பது ?
போ’ களவு, பொய், பொறாமையெல்லாம்
கற்று வா என்கிறார்கள்;

இல்லையில்லை நீ
தவறாகப் பேசுகிறாய்
பொய் தீது; பொறாமை விஷம்
களவு செய்பவன் தலைவனானால்
தேசம் மதிப்பாரற்றுப் போகும்’ எனக்கு அதலாம்
வேண்டாம்
ஒழுக்கம் போதும்
உயர்ந்த தேசதிற்கு வழி சமைக்கும்
ஒரு மனிதர் போதுமென்கிறேன்,

அந்தச் சாவிதிறக்கும்
சிறுதுவாரத்தின் வழியேயொரு
மோதிரக் கைவந்து
என் முகத்தில் ஓங்கிக் குத்துகிறது,

உனக்கு ராஜா இல்லை
மந்திரியுமில்லை
நாசமாகப் போ’ என்கிறது அந்தக் கை;

எனக்கு ராஜாக்கள் வேண்டாம்
திருத்தம் போதாத மந்திரிகள் வேண்டாம்
இனி – விதைகளே தேவையென்றேன்..,

விதைகளிட்டால் விளைவதுபோல் பெருகும்
என் இளைஞர்கள் வேண்டுமென்றேன்,

அவர்களுக்கு அதலாம் கேட்டிருக்காது
நானும் கேட்பதை நிறுத்துவதாயில்லை
எனக்கு விதைகளே வேண்டும்;

இன்னுமொரு விதை
இன்னுமொரு விதையென
எனக்கு எனை –
நானாக அறிவிக்கும் அந்தவொரு விதை வேண்டும்
எனது இனத்தை யாரென்று உணர்துமந்த
விதை வேண்டும்;

அந்த விதை ‘புரட்சியோ
‘மாற்றமோ
‘புதுமையோ
எதனால் வேண்டுமோ கிடைக்கட்டும்,
அது கிடைத்தப் பின்’ எனை யாரும்
அடிமையென்று சொல்லாதிருந்தால் அதுப் போதும்..
—————————————————–
வித்யாசாகர்

Posted in கவியரங்க தலைமையும் கவிதைகளும், காற்றாடி விட்ட காலம்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சிரிக்கிறாள்.. பார்க்கிறாள்.. மறுக்கிறாள்.. (குறுங்கவிதை)

1
கணினி வாசத்தில்
காய்கறி விற்றாள்
கைகளில் ஒரு ஊசி
கூடுதலாய் போடப்பட்டது..

2
சில்லறை கொடுத்தேன்
கைதொட்டு வாங்கினாள்
காதல் மின்சாரம் தாக்கியதில்
கண்கள் வெளிச்சமானது..

3
நாங்கள்
நடந்துவரும் தெரு அதில்
காதலைச் சொன்னது; சுவரொட்டி..

4
ஜல் ஜல் ஜல்..
ஜல் ஜல் ஜல்..
என் உறக்கத்தை
மிதித்துக்கொண்டே நடந்தாள்; கனவில்..

5
மாதத்தில்
ஐந்தாறு நாட்கள்
அருகே செல்லவில்லை அவள்
வருத்தப்பட்டது சாமி;
மடியவேயில்லை மூடதனம்!

6
சேரியில் சிறுநீர் கழிக்கும்
சிறுவனுக்குத் தெரியும்
தன்மேல் திணிக்கப்பட்டும்
அடிமைத்தனத்தையும்
ஜாதியின் கொடூர முகத்தையும்..

7
மாத்திரைகள்
கொட்டிவைக்கப்படும்
டப்பாக்களில்
எண்ணிவைக்கப் பட்டுள்ளது
மனிதரின் வாழ்வும்..

8
அதென்ன
அத்தனைக் கோபம்
காதலின்மேல்;
சோற்றில் விசமிட்டாலாம் தாய்..

9
நிர்வாணத்தைக் கண்டால்
அப்படியொரு நடுக்கம்
காமம் படிக்காத மேதைகளுக்கு!!

10
சோறு போட மனசுண்டு
உண்ண வயிறுண்டு
கொடுப்பதையும் பெறுவதையும்
இன்னும் படிக்காதவர்கள் நாம்!

11
சிட்டெறும்புகள்
மிதிபடும் பாதங்களில்
மண் ஒட்டியது;
ஒட்டவேயில்லை அதன் உயிரின் ஈரம்..

12
இலைகள் உதிர்ந்தது
கூட்டுகிறாள்
அவளின் வியர்வையையும்..

13
பூங்காவினுள்
யாரார் பிள்ளைகளோ விளையாடினர்
அவள் வயிற்றில் பாவம்
பசி மட்டுமேயிருந்தது..

14
தெருவோரம்
தண்ணீர் தீர்ந்த புட்டிகள்
எட்டி எட்டி உதைத்தன
தாகமெடுத்தப் பிள்ளைகள்..

15
வீசும் காற்றோடுப் பறந்தன
சில சிட்டுக்குருவிகளும்
சில கவிதைத் தாள்களும்..

16
தபால்பெட்டிக்குள்
கைவிட்டு விட்டுப் பார்க்கிறான் சிறுவன்
அம்மாயில்லை அவனுக்குக் கடிதமெழுத..

17
செருப்புக் கடையோரம்
நடந்தன கால்கள்
புண்பட்டு புண்பட்டு..

18
ஐஸ்க்ரீம் பார்
குச்சிகளை மட்டுமே சேகரித்தன
சில குழந்தைகள்..

19
துளிர் இலை ஆடியது..
சருகு ஆடியது..
காற்றிடம் பாகுபாடில்லை..

20
கொசுவினை
தட்டிடத் தெரியவில்லை குழந்தைக்கு
கொசுவிற்கும் தெரியவில்லை அது
குழந்தையென்று!

21
விளையாடும் பிள்ளைகள்
சேர்ந்து எட்டி எட்டி உதைத்தன
பந்தையும்
மதத்தையும்..

22
சிரிக்கிறாள்
பார்க்கிறாள்
மறுக்கிறாள்
மறுக்கமுடியவில்லை இறக்கிறேன்..
———————————————
வித்யாசாகர்

Posted in சொற்களின் போர் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

முதிர் கன்னர்கள்..

வர்கள் முப்பதைக் கடந்தவர்கள்
நாற்பதைத் தொட்டவர்கள்
சாபமின்றி வாழ்க்கையை
நாளும் தொலைத்தவர்கள்..

மணக்கும் மல்லிகையின்
வாசம் ரசிப்பவர்கள்,
மணக்கா பெண்ணெண்ணி கனவினுள்
வீழ்ந்தவர்கள்,

கடவுளை கைதொழா
காதலின் பக்தர்கள்
காலில் உதைத்து கடவுளையும்
சலிப்பவர்கள்;

கோவிலே கதியென்று
நாளும் திரிபவர்கள்
காட்சிகளின் மாட்சியில்
குடும்பத்தைப் பார்ப்பவர்கள்;

வாழ வரும் பெண்ணுக்குக்கூட
வரையறை வைத்திருப்பவர்கள்
வாழும் வாழ்க்கையை
விரையமாக்கி வாழும்போதே நொந்தவர்கள்;

காலநேரம் ராசி பார்த்து
சோடைபோன சங்குமலர்கள்
அழகாய்ப்பூத்தும் கசங்கிப்போன
தெருஓர பிஞ்சுமலர்கள்;

தங்கைக்கும் தமக்கைக்கும்
வாழ வழிவிட்டவர்கள்
பின் அவள்பெற்றப் பிள்ளைக்கும்
காவலிருந்தவர்கள்;

வீட்டைக் காப்பதையே
நாட்டிற்கு ஈடாக எண்ணிப் பயந்தவர்கள்
படு தீவிரமாகக் கணக்குபோட்டு
வாழ்க்கையின் பாதியைக் கடந்தவர்கள்;

பாவம் ஆண்களிலும் உண்டிப்படி
முப்பது நாற்பதிலும் முதிர்கன்னர்கள்’
முயன்று கட்டும் தாலியில் உலகத்தீரே
கொஞ்சம் ஆண்களையும் பாருங்கள்; நம்
அண்ணன்தம்பிகளும் வாழட்டும்!!
——————————————–
வித்யாசாகர்

Posted in காற்றாடி விட்ட காலம்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

வாழ்க தமிழ் பேசுவோர்..

வாட்ச் பக்கெட் தேங்க்ஸ் சாரியிலிருந்துத்
துவங்குகிறது தமிழிற்கான தினக்கொலை..

அம்மா அப்பா மாறி
மம்மி டாடியானது மட்டுமல்ல
டிவி ரேடியோ கூட வெகுவாய்
தமிழை தின்றுதான் பசியாறிக்கொண்டுள்ளது;

சுடுகாட்டுப் பிணத்தைக் கூட
டெட்பாடி ஆக்கும் ஆசையை
எந்தக் கொள்ளியிளிட்டுக் கொளுத்தினால்
என் தமிழனுக்கு தனது தாய்மொழி முழுக்க
தமிழாகித் தொலையுமோ… (?)

எவனோ எடுத்தெமைப்
புதைக்கும் குழிக்குள்
தமிழ்தொலைத்து தொலைத்து
விழும் மாந்தரை
எந்த மொழி மனிதரெனயெண்ணி
மீண்டும் மீண்டும் மன்னிக்குமோ?

பேன்ட் சூட்டும் ஃபாரின் காரும்
பேஸ்புக் பிசாவும் கூட
மாற்றத்தின் புள்ளிகளுக்குள் அடங்கிய
காலமாற்றத்தின் காட்சிகளாகிப் போகட்டும்
பெயர்ச்சொல்லாய் வாழட்டும்
மீறி மொழியைத் தொலைப்பதையோ – பாதி குறைத்து
தங்க்லிஷ் எழுதுவதையோ
நியாயமென்றுரைப்போர் நஞ்சினை –
எந்த வாளிட்டு அறுப்பது?

ஆங்கிலம் முக்கியம்
அரபுமொழி முக்கியம்
அந்நிய மொழிகள் முக்கியம்
அதையெலாம் அதுவாகப் பேசுவதுபோல்
தாய்மொழியும்
தமிழர்க்கு அழகில்லையா ?

மானம் போயின் தெருவில் பிணமான
இனத்திற்கு
தனதானமொழி தமிழது முகம் தொலைக்குமெனில்
சினமின்றி எழுதும் கவிதையும் தீதன்றோ ?

எனவே –
எனவே உறவுகளே..

அங்கமங்கமாக பிறமொழி கலந்து குழந்தைக்கு
மில்கோடு ஹாட்கப்பில் தருவோரே,
தமிழை தினம் தினம் பிளேட்டில்
ரைசோடு போட்டுக் கொல்வோரே..

இனி –
கொஞ்சம் கொஞ்சமாக தனை மாற்றுங்கள்
தமிழையினி யேனும்
அழகு கொஞ்சப் பேசுங்கள்;

மொழி நமக்கு உயிராக வேண்டாம்
மொழியாகவே இருக்கட்டும்
முழுதாகப் பேசமட்டும் முப்பொழுதும் கிடைக்கட்டும்
வாழ்க தமிழ் பேசுவோர்!!
———————————————————————————————–
வித்யாசாகர்

Posted in காற்றாடி விட்ட காலம்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

மூடியக் கழிவறையும்; திறந்திருக்கும் நோயின் கதவுகளும்..

ந்தம்மா பாவம்
உணவுண்ணும் முன்கூட
அலசி கழுவிவிட்டாள் அந்தக் கழிவறையை;
அடுத்தடுத்து அதை மிதித்து
நோயுக்கு வழிவிட்டோர் நீயும் நானுமில்லையா?

அவருக்கும் நமக்குமிருக்கும்
அதே கைகள்தானே
உனக்கும் எனக்குமாய் தினமும்
கழிவறை துடைக்கிறது?

அவரவர் வேலையை
அவரவர் செய்யின்
எவருக்கு வேலை வரும் எவனெவன்
காலடியோ கழுவ?

நாற்றம் என்று நாம் மூக்கடைக்கும் முன்பே
மூனு குவளை நீரள்ளி விட்டால்
நாற்றத்தை
நோயோடு கொல்லலாமே..(?)

ஒவ்வொரு கழிப்பறையும்
ஒரு தாயின் பட்டினியை
ஒரு பிள்ளையின் பள்ளிப்படிப்பை
ஒரு ஆணின் முன்னேற்றத்தை விழுங்கிக்கொண்டுதான்
நாற்றத்தில் கிடக்கிறதென்பதை –
ஏன் எல்லோருமறிவதில்லை ?

கிழிந்தக் கால்சட்டையை இழுத்து
முடிபோட்டுக்கொண்டும்,
நைந்தப் புடவை ரவிக்கையை
நாலுபேர் பார்க்கக் கட்டிவந்தும்,
மூக்குமுட்டக் குடித்து போதையில் பாதைதொலைத்தும்
இன்னும் எத்தனை தலைமுறையிப்படி
ஒருபக்கம் சாய்ந்தே கிடப்பது?

துடைப்பவனே துடைத்துக்கொள்ள
யாரால் தனிரத்தம் பாய்ச்சி
புதியதோர் மனிதனைச் செய்ய யியன்றது?

முடியாதோர்
முட்டி முட்டியொரு தலைமுறையை
கழிவறைக்குள் அடைத்தலும் தீதென்றுப் புரிகையில்
கழிவறைகள் அன்று
அவ்வப்போதே சுத்தமாகிக் கொள்ளும்..

அதனால் இதொன்றும் ஏதோப் பெரிய மகான்களின்
செயலொன்றுமில்லை
அவரவரது நாற்றத்தை அவரவர் சுத்தம் செய்யுங்கள்,
அதன்பின் திறக்கும் வீடென்ன
நாடுகூட நன்மையில் மணக்கும்!!
——————————————————————————————————-
வித்யாசாகர்

Posted in காற்றாடி விட்ட காலம்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்