அரபுலகில் ஐம்பெரும் விழா.. (குவைத் தமிழோசை )

உறவுகளுக்கு வணக்கம், தமிழர் காதுகளில் அன்று தூர்தசன் தொலைக்காட்சியின் செய்திவாசிப்பின் வழியாக ஒலித்துக்கொண்டிருந்த அந்தக் குரல், திரு. செந்தமிழரசு ஐயா எனும் குவைத் தமிழரிடையே பெருத்த மதிப்பினைக் கொண்ட அந்தக் குரல், காதினிக்கப் பாடி அறிவு செறிவுபெற பேசுமந்தக் குரல் குவைத்தைவிட்டு மீண்டும்  தமிழகத்தை நோக்கிச் செல்ல இருக்கையில் அதற்கு பிரிவுபச்சார விழா எடுத்து, வாலியின் பிரிவின் ரணமாற்றி பெருமைப் பல பேசி, தமிழ்ச் சான்றோர்களான தமிழ்த்திரு. சேவியர் தனிநாயகம் அடிகளார், தமிழ்த்திரு. திரு.வி.காலியாண சுந்தரனார், தமிழ்த்திரு. நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளை என மூவரையும் நினைவுக்கூர்ந்து அவர்களின் தமிழ்ச்சேவைப் பற்றி பேசி, விடுதலை நாளிற்கான கவிதைப் படித்து கருத்தரங்கம் நடத்தி இந்தியாவின் வளர்ச்சியையும் தளர்ச்சியையும் ஆராய்ந்து இனி நாம் ஆற்றவேண்டிய கடமைகள் என்னென உண்டென்பதைப் பற்றியெல்லாம் எதிரும் புதிருமாய்ப் பேசி ஒரு சிறப்பான ஐம்பெரும் விழாவினை எடுத்துநடத்தி ஐயா வாலியின் நினைவரங்கத்தில் வைத்து மிகச்சிறப்பாகக் கொண்டாடியது குவைத் தமிழோசை கவிஞர் மன்றம்.

அதோடு முதல் அமர்வாக நடந்த இப்தார் விருந்து உபசரிப்பில் இறையருளைக் கூட எல்லோருக்கும் பகிர்ந்தே அனைவருக்கும் அளிக்கும் பெருந்தன்மையும் பூரிப்பு நிறைந்ததாகவே இருந்ததென்பதையும் நன்றிகளோடு இங்கே நினைவுக்கூர்ந்து, அத்தகைய மாபெரும் நன்றியுணர்வு விழாவிற்கு நான் முழு நிகழ்வையும் தொகுத்து வழங்கியதைப் பெருமையாக கருதிக்கொண்டு, இத்தனைப் பேர் இவ்வளவு திறனாக அர்ப்பணிப்பாக இங்கே கவிதைக்கும் தமிழுக்குமென உழைப்பதோடு இனப்பற்றுக்கொண்டே வாழ்ந்துவருகிறார்கள் என்பதை பதிவுசெய்யும்பொருட்டாக மொத்த குவைத்வாழ் தமிழர்வாழ்வின் ஒரு துளி உதாரணமாக, அங்கே பேசியதை மற்றும் பேச தயார்செய்து வைத்திருந்த எனது தொகுப்புரைப் பதிவுகளில் சிலதையிங்கே உங்களோடும் பகிர்ந்துகொள்கிறேன்..

தொடர்ந்து எனது எழுத்தோடு பயணிக்கும் நட்புறவுகளுக்கு மிக்க நன்றியும் பெருமதிப்பும்..

——————————————————

ந்தம் பல கொண்டு உனை
சந்த தமிழ் உண்டு உனை
சந்த கவி தந்து உனை
உயிரற்று போகும் வரை பாட;

சங்கம் பல வெல்லுமுனை
சொந்தம் பல கொண்ட உனை
சங்கின் நிறம் கொண்ட உளம்
நின் புகழுக்கு நிகரென்று பாட;

பிஞ்சு மனம் பொங்கு தமிழ்
வெள்ளை மனம் ஓங்கு தமிழ்
கள்ளமது அற்ற தமிழ்
உயிர் தமிழென்று தமிழென்று பாட;

இப்படி பாட பாட இனிக்கும் தமிழுக்கும்,
சகோதர சகோதரிகளுக்கும், வந்தமர்ந்திருக்கும்
என் உறவுகள் கூடிய இந்த அவைக்குமென் முதல் வணக்கம்!
——————————————————

லைநிமிர்ந்த தமிழர்களும்
உலக நிலம் செழிக்க உழைத்த மனிதர்களும்
மனித வளம் நிலைக்க பாடுபட்டோரும் பிறந்த
நமது மண்ணின்பெருமையைப் போற்றுமிந்த மாமன்றம் என்மதிப்பில் என்றும் உயர்ந்தே நிற்கிறதென்பதை நன்றியோடு இங்கே பதிவுசெய்துகொண்டு இந்த அரபுமண்ணின் ஐம்பெரும் விழாவின் இரண்டாவது அமர்வினைத் துவங்குகிறேன்..

மின்சாரத்திற்கு ப்ளூம்பாக்ஸ் கண்டுபிடித்து அமெரிக்கரை தன்பின்னே சுற்றவைத்த திரு. ஸ்ரீதர் ஐயா, மற்றும் மின்னஞ்சலின் இன்றையக் கட்டமைப்பினை கண்டுபிடித்து உருவாக்கிய திரு சிவா ஐயா மற்றும் நம் இந்தியதேசத்திலேயே சாட்டட் அக்கவுண்டில் முதல் மதிப்பெண் எடுத்த பிரேமா போல ஒரு பக்கம் நாம் எங்கோ வீழினும் மறுபக்கம் உலத்தின் பார்வையில் எப்போதுமே ஏதோ ஒன்றில் ஒய்யாரமாய் எழுந்து உயர்ந்தே நின்றுக்கொண்டிருக்கும் தமிழரை பெருமைசெய்வதன் பொருட்டாக இன்று நாம் நினைவில் வைத்திராத உயர்ந்தோரையெல்லாம் தேடி தேடி நினைவுகூறும் இந்த நம் தமிழோசையின் புதிய நிர்வாகிகளுக்கும் வளமைதாங்கும் தலைமைக்கும் எனது நன்றிகளை உரித்தாக்கி.. நிகழ்ச்சியினைத் துவங்குகிறேன்..

முதல் நிகழ்வாக ..
——————————————————

திரு. கலிபுல்லா

ஐயா என்று
இவரைக் கண்டாலே மதிக்கலாம்
கைகுலுக்கும் நட்பில் இதயத்தைப் புதைக்கலாம்
இவர் கால்பட்ட இடத்தில்கூட ஒரு புன்னைகை பூத்துக்கொள்ளும்
இவர் பாட வந்ததுமே நாகூர் ஹனிப்பாவை இவர் குரல் நினைவு கூறும்..
ஐயா கலிபுல்லா அவர்களை ஈகைப் பெருநாளின் பாடலொன்றைப் பாட மேடைக்கழைக்கிறேன்..
——————————————————

திரு.கூனிமேடு முபாரக்

கவிதையின் பித்தன்
கல்லூரியைக்கூட கவிதையில் காணும் பாவண்ணன்
கடக்கும் நாட்களைப் போல
கவிக் கூடுகளின் சுமையறியாது மொழிக்குள் சுமக்கும் படைப்பாளி
நாவலாசிரியர் திரு. முபாரக் அவர்களை முதல் கவிதைப் படிக்க மேடைக்கழைக்கிறேன்..
——————————————————

திரு.குமார்

கொட்டும் மழையில் நனைவது போல் இவர் பாடினால் நனையலாம்..
கெட்டிக்காரப் பேச்சென்று இவர் பேசினால் நன்றி கூறலாம்..
பட்டிமன்றம் பேச்சரங்கம் எதுவாயினும் இவர் மேடையேறினால் சிரிக்கலாம்..
இவர் நிர்வகிக்கும் தலைமைக்கு
நாம் எந்தச் சங்கமாயினும் – இங்கே கூடிநின்று கைதட்டலாம்.. அத்தகைய நம் பெருமைக்குரிய தலைவரான முனைவர் ஐயா குமார் அவர்களை தமிழ்ச் சான்றோர் பற்றிய சிறப்புரையாற்ற மேடைக்கழைக்கிறேன்..
——————————————————

அடுத்து வாலியின் நினைவாஞ்சலி இனி கவியாஞ்சலியாகவும் இசையாஞ்சலியாகவும் ஒலிக்கவுள்ளது..

காற்றில் ஒலிப்பாய் வாலி..

வாலி என்றதுமே வயோதிகம் மறக்கும்
வாலி என்றாலே வாலிபம் வரும்
வாலி என்பதை வரலாறு நினைக்கும்
வாலிக்கு அஞ்சலி என்றதுதான் இன்றைக்கு வலிக்கும் துக்கம்!

ஒடியும் சிறகுகளைப் பாட்டினால் கட்டியவர்
பாட்டோடு மட்டுமே மூச்சையும் விட்டவர்
காற்றின் அசைவிலும் காதினிக்கும் பாடல்களைத் தந்தவர்
பதினைந்தாயிரம் பாடல்களுக்குப் பின்னே’ கண்களை மூடியவர்;

பாடியத் தெருவெங்கும் பிறர் பெயரை ஏற்றவர்
நாட்டு எல்லையைவிட்டு பாட்டாலே போனவர்
நாட்டாமை செய்யாது பாட்டால் ஆண்டவர்
ஏட்டிலும் எழுத்திலும் இசையாய் கலந்தவர்;

கட்டுமரக் கடலென்றாலும் சரி
கட்டழகு பெண் அசைவென்றாலும் சரி
கற்பத்தில் சுமந்த அன்னைப் பாட்டென்றாலும் சரி
மூன்றுத் தலைமுறைக்குப்பின்னும் மூப்பின்றி எழுதியவர்;

இவருக்கு நரை கூடியப் பின்னும் வரிகள் கூடின
பல் கொட்டியப் பின்னரும் சொல் கொட்டின
கால் தடுமாறினாலும் கவியரங்கம் தாங்கின; பாண்டவர்பூமியும்
கிருஷ்ணவிஜயமும் இவரால் கவிதையில் ஆயின;

கேள்வி கேட்க பாட்டில் சொன்னவர்
எதிர்நீச்சலைப் போட என்றோ எழுதியவர்
காற்று வாங்கப் போய் கவிதை வாங்கிவந்தவர்
கல்லைமட்டும் கண்டார் கடவுளைக் காணவில்லை யென்றுப்

பாட்டால் அழுதவர்;
இனி கேட்டாலும் கிடைக்கார்
புதுப் பாட்டிற்கு ஏற்கார்
எமன் வீட்டிற்கே இனி விழிப்பார்..
என்றாலும் –

மரணமவரின் உயிரையே யெடுக்கும்
மண் அவரின் உடம்பையே யரிக்கும்
மக்களவர் பெயரை மறப்பினும்
காலம் அவரை பாட்டாக முனுமுனுக்கும்..
——————————————————

திரு.கங்கேஷ்

கட்டுகளை பாட்டுகளால் உடைப்பார்
பாட்டின் வழி இதயக்கதவு திறப்பார்
கூட்டமது கூடும் இடத்தில்
முழு நட்சத்திரமாய் மினுப்பார் திரு கங்கேஷ்.. அவர்களை இசையாஞ்சலி கொடுக்க மேடைக்கழைக்கிறேன்..
——————————————————

திரு.ஆனந்தரவி

இருட்டின் வெண்ணிலவு
மனதின் கதகதப்பு
நட்பின் பெருவெளி
கவிதையின் பேரருவி அன்புக்கவி ஆனந்தரவி அவர்களை மேடைக்கழைக்கிறேன்..
——————————————————

வாழ்த்துரை திரு. முத்துராமன்

தமிழகத்தின் தேடல்
வீரமறவரின் வாசம்
ஆண்டத் தமிழரின் கம்பீரம்கொண்ட ஐயா திரு. வைகோ அவர்களின் புகழ்மணக்கும் “குவைத், தமிழர் மறுமலர்ச்சிப் பேரவையின் ஆலோசகர் திரு. முத்துராமன் அவர்களை வாழ்த்துரை வழங்க மேடைக்கழைக்கிறேன்..
——————————————————

திரு.யாகூப் அலி

ஒரு சொல்போரிது
ஒரு பொதுக்கூட்டத்தின் பண்பாடிது
ஒரு கவிதையின் அழகிய வரியின் உச்சம்
நாட்டியமாடும் குழந்தையின் பூஞ்சிரிப்பு திரு. கவிஞர் யாகூப் அலி அவர்களை ரமலான் சிறப்புக்கவிதை மேடைக்கழைக்கிறேன்..
——————————————————

திரு.கணேஷ்

இவனும் பாட்டுக்கு முதலானவன்
எவர்பாட்டுக்கும் எழிலானவன்
பல விருதுக்கேச் சேரும் புகழானவன்
என்றுமே நான் அவனின் ரசிகனென்று எனைச் சொல்லவைத்தவன்
பண்பின் உடைவாள் பெரிய நட்சத்திரம் திரு. கணேஷ் அவர்களை மேடைக்கழைக்கிறேன்..
——————————————————

திரு.பட்டுக்கோட்டை சத்யா (இலக்கியம்)

மனிதத் தீஞ்சுவை
மலரின் போர்க்குணம்
மழலை மனவளம்
மரபுப் பெருஞ்சுடர் தோழமை திரு. பட்டுக்கோட்டை சத்யா அவர்களை “சர்க்கரைச் சாறே சங்க இலக்கியம்” எனும் தலைப்பில் சிறு சொற்பொழிவாற்ற மேடைக்கழைக்கிறேன்..
——————————————————

திரு.நாகப்பூசனம்

கொடுத்தும் சிவக்காதிருக்கவே குடுத்துவைத்த
அன்னார், கலக்கும் மேடைப் பலதின் வள்ளல்களுள் முன்னேர்
சிலிர்க்கும் சிரிப்பு உதறி
செயலால் சிறக்கும்
இவ்விழாவின் முன்னிலைச் சான்றோர் ஐயா திரு. நாகப்பூசனம் அவர்களை வாழ்த்துரை வழங்க மேடைக்கழைக்கிறேன்..
——————————————————

திரு.உ.கு.சி.

நட்பின் நறுமணம்
பண்பின் ஆழக்கடல்
பாவகையில் புதுக்கவிதை
பழகப் பழக இனிக்கும் பெருநட்சத்திரம் ஐயா உ.கு.சி எனும் கவிஞர் உ.கு.சிவகுமார் அவர்களை வாலியாஞ்சலி பாட மேடைக்கழைக்கிறேன்..
——————————————————

திருமதி. செல்லம்மா வித்யாசாகர்

எனக்குச் சோறுபோடும் தாய்
கவிதைக்குத் தீணிபோடும் தோழி
என் வீட்டிலேயே படைப்பாளிகளை வளர்க்கும் அம்மா
வீட்டின் தென்றலாக வீசியவளை பாட்டின்
மென்மையாக இங்கேக் கரைய திருமதி. செல்லம்மா வித்யாசாகர் அவர்களை மேடைக்கழைக்கிறேன்..
——————————————————

திரு.சம்சுதீன்

பூக்கள் நெய்த வீடென்று சொல்லி மனதை நெய்தவர்
கனவுகளின் ஊர்வலத்தால் காலத்துள் நிலைப்பவர்
படைப்புக்களின் வழியே பாடம் சொல்ல முனைபவர்
பாமாலையை நனைய கண்ணீரில்தோய்த்து ஐயா வாலிக்கு அஞ்சலி செய்ய கவிஞர் திரு சம்சுதீன் அவர்களை மேடைக்கழைக்கிறேன்..
——————————————————

திருமதி.பாரதி கண்ணம்மா

பாட்டுக்கொரு பாரதி
நம் குவைத்திற்கொரு கண்ணம்மா
அன்பில் தோழி
பண்பின் தேவதை
சொல்லின் வன்மையில் செந்தூரம் ஏந்தியச் சோதரி
கவிதாயினி திருமதி பாரதிக் கண்ணம்மா அவர்களை கவிதைப்பாட
——————————————————

திரு.சிவசங்கரன்

உணர்ச்சிகளின் பெருந்தீ
உவமைக்கு அணையா கவித் தீபம்
உலகின் பாட்டுக்கு எதிர்பாட்டு
எமக்கென்று இறைவன் தந்தப் பூங்கொத்து ஐயா முனு சிவசங்கரன் அவர்களை மேடைக்கழைக்கிறேன்..
கணேஷ்
மீண்டும் ஒரு கவிஞர் வாலியின் பாடலைப் பாட கணேஷ்..
——————————————————

திரு.விருதை பாரி

நான் பெயர் வைத்தக் குழந்தை
எனக்குப் பெயர் தந்த குழந்தை
மேடையில் வீடுகட்டும் பேச்சாளன்
இனி எல்லோரும் போற்றப்போகும் பாட்டாளன்

வெண்ணிலாவின் தந்தை திரு. கவிஞர் விருதைப் பாரி அவர்களை மேடைக்கழைக்கிறேன்..
——————————————————

திரு.கவிசேய்..

சாமிக்கும் மனிதக் காதலுக்கும்
பாத்தொடுக்கத் தெரியும்
இவரின் நாவன்மை கூட
திருநீரு வாசம் வீசும்
அறமது உய்ய தமிழை நாலடியின் வழியே காப்பார்
ஐயா கவிசேய்.. அவர்களை தமிழ்காணல் நடத்த மேடைக்கழைக்கிறேன்..
——————————————————

திரு.விட்டுக்கட்டி

சொட்டுசொட்டாய் சேரும் உள்ளங் கடலு
அன்பின் எல்லையில்லா நெஞ்சக்கூடு
பிள்ளைகளின் ஆட்டம்போடும் ஆயி பாரு
பாட்டுக்கட்டி பண்பைக் கூட்டும் ஐயாவிற்கு விட்டுக்கட்டின்னும் பேரு;
வாருங்கள் ஐயா..
——————————————————

திரு.கிருஷ்ணமூர்த்தி

இலக்கியம் என்பது இவரின் பேச்சுக்குத் தான் அழகு
சங்க இலக்கியம் என்பது இவருக்குத் தான் சொற்கிரீடம்
சொல்லும் பொருளும் இவர் பேசத் தான் எல்லோருக்கும் புரியும்..
தேனும் தமிழும் ஒன்றென்றால் நம்ப
இவரைத் தான் பேச மேடைக்கழைக்கவேண்டும்; வாருங்கள் ஐயா திரு. பழமலை கிருஷ்ணமூர்த்தி அவர்களை மேடைக்கழைக்கிறேன்..
——————————————————

திரு.அன்பரசு

உண்மைத் தலைவர் இவர்
புரட்சியின் உன்னதப் பேரொலி
சுயநல நீட்சியில்லாத தொண்டன்
இனத்திற்கும் மொழிக்கும் முதல்கொடி ஏந்தும் போராளி திரு. அன்பரசு..அவர்களை மேடைக்கழைக்கிறேன்..
——————————————————

திரு.அறிவழகன்

அறிவும் அழகு அவரும் அழகு
பொதுவாக பேசப் பேச முத்து கொட்டும்போல பேசுவார் என்பார்கள்
அனால் இவர் பேச பேச கேட்போருக்கு பற்று வளரும்
நரம்பு கொஞ்சம் புடைத்துக் கொள்ள
தமிழர்மேல் பற்று பெருகும்
நெஞ்சம் நிமிர்த்தி அஞ்சாதிருக்க அறிவு புகட்டும் திரு. அறிவழகன் அவர்களை மேடைக்கழைக்கிறேன்..
——————————————————

திரு.அன்வர் பாட்சா

கவிஞர்களை நெஞ்சில் சுமப்பார்
கவிதைகளை பேச்சுள் நுழைப்பார்
கவிதையொரு ஆயுதமென்பார்
கவிஞர்களே காதுகொடுங்கள் கவிஞர் அல்லாதோரும் சேர்ந்து இருங்கள்..
ஐயா அன்வர் பாஷா பேசட்டும் ஒருசில மணித்துளிக்குள் முடிக்கட்டும்..
——————————————————

திரு.பட்டுக்கோட்டை சத்யா (தளர்ச்சியே – கருத்தரங்கம்)

இரண்டாவதாக வந்தாலும் எழுச்சியோடு வருவார்
இந்தியா செல்லும் பாதை தளர்ச்சி என்று மொழிவார்..
நாம் காத்திருக்கும் விடுதலை நாள் சிறப்பின் கருத்தரங்கை ஆரம்பிக்க
மரபுப் பெருஞ்சுடர் கவிஞர் திரு. பட்டுக்கோட்டை சத்யா அவர்களை மீண்டும் மேடைக்கழைக்கிறேன்..
——————————————————

திரு.சாதிக் பாட்சா (வளர்ச்சியே – கருத்தரங்கம்)

கவிதையை மடையுடையப் பொழிவார்
களங்கமற தேனுரையாற்றுவார்
அரங்கம் பல அறியுமிவரை
அன்னைத் தமிழ் மன்றங்கள் போற்றுமிவரை,

நெஞ்சில்கவி தீபமேற்றும் ஆச்சாரி
நம் நாட்டு வளர்ச்சியைப் பற்றிப் பேசஅழைக்கிறேன் தமிழ்ப் பூச்சூடி
வாருங்கள் ஐயா திரு. சாதிக்பாட்சா அவர்களே..
——————————————————

திரு.செந்தமிழ் அரசு

நான் பார்த்தே வளர்ந்தத் தமிழ்
நான் வளர்ந்தபோது மகிழ்வோடு பார்த்த தமிழ்
காதில் தேனென ஊறும் தமிழ்
காலம் மறக்காத செந்தமிழ்;

சென்னைத் தமிழ்
சென்னைக்கு வண்ணம் சேர்க்கும் தமிழ்
சிம்மாசனமின்றி மனதுள் நின்றத் தமிழ்
சொல்லாசான் என நெஞ்சு ஏற்ற தமிழ்

காற்று வீச வீச விழிகள் சில்லிடுவதைப் போல
இவர் பேசப் பேச, பாடப் பாட மனது ஜதியிடும்
மௌனம் உடைபடும்
மலைபோல் அவரை அன்போடு
மதிப்போடு ஐயாவென அண்ணாந்துப் பார்க்கிறேன்,

எங்கிருப்பினும் நம்புவதற்கு
எங்களின் நினைவுகளைச் சேர்க்கிறேன்
நாலு வரி தமிழ்க் கொத்தேந்தி நம் கருத்தரங்கு மேடைக்கு அழைக்கிறேன்..

வாருங்கள் ஐயா, தமிழைத் தாருங்கள் ஐயா, எங்கிருப்பினும் தமிழாகவே வாழுங்கள் ஐயா.. எங்களின் வாழ்த்துக்களும் அன்பும் உங்களை தாங்கியே நிற்கும் ஐயா..
————————————————-

நிகழ்ச்சியை நிறைவு செய்ய உள்ளோம்.. இதுவரை அமைதிகாத்து ரசனைக் கூட்டி அமர்ந்திருந்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியைப் பாராட்டி ஒரு விடுதலை நாளின் கவிதையைப் பகிர்ந்து விடைகொள்கிறேன்.. ..

தலைப்பு: இரத்தம் சொட்டச் சொட்ட நனைந்த மண்..

ன்னித்துக்கொள்ளுங்களேன், விடுதளைநாளின் கவிதையை இன்றே ஏன் இடுவானேன்? அதை ஆகஸ்ட் பதினைந்தன்று நன்றியோடு பதிகிறேன். அதுவரை அன்போடு விடைபெற்றுக் கொள்ளும் முன் ஒரு சின்ன செய்தி, இதில் வரவேற்றுள்ள படைப்பாளிகளில் ஒருசிலர் நிகழ்ச்சிக்கு வரவில்லை, அழைப்புக் கொடுத்து இருந்தமையால் எழுதியதை எழுதியப் படி பதிந்துக் கொண்டேன். காரணம் அவர்களின் சிறப்பை சொல்லும் நோக்கு மட்டுமல்ல எப்போதும், உடன் பயனிப்போரைப் பற்றிப் பெருமையாகப் பேச’ அன்பை’ மதிப்பினை வெளிக்காட்ட’ இப்படி ஏதோ ஒருசில இடத்தின் வாய்ப்புக்களே அமைகின்றன. அதற்கான நன்றியும் வணக்கமும் உறவுகளே..

பேரன்புடன்..

வித்யாசாகர்

Posted in கவியரங்க தலைமையும் கவிதைகளும் | Tagged , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

உடம்பொரு ஆயுதம்; ஆயுதமேந்துங்கள் வாழ்க்கைப்போர் புரிவோம்.. (நிமிடக் கட்டுரைகள்)

டம்பு ஒரு ஆயுதம். உலகத்தின் அத்தனை அற்புதங்களையும் அடைவதற்கான பலத்தைப் பெற்ற மனிதனுக்கு உடம்பொரு கோவில். உள்ளிருக்கும் ஆன்மச் சக்தியை கடைந்துப் பார்க்கக் கைவரப்பெற்ற கலன் உடம்பு. நினைத்ததை நடத்தவும், கிடைத்ததை பத்திரப்படுத்தவும் உடம்பால் மட்டுமே முடிகிறது. நிலைப்புத் தன்மையில் தோற்றாலும் காலத்திற்கும் வாழ்ந்ததன் சுவடுகளை விட்டுச் செல்ல உடம்பொன்றே சாகும்வரை உதவுகிறது. இயற்கையின் ரகசியங்களை ஆய்ந்துப் பார்க்கவும் புதிய கண்டுபிடிப்புக்களுக்கான வழியை தேடவும் தேவையான பாடம் உடம்பிற்குள் உண்டு. நீர் நிலம் காற்று வானம் பூமியின் தத்துவத்தை உடம்பிற்குள் தேடினால் பெற்றுக் கொள்ள முடியும்!
————————————————

2
டல் சுடும் நெருப்பு உணவைச் செரிக்கவும், உடம்பெங்கும் பாயும் நீர் உயிரை நிலைப்பிக்கவும், சுவாசமாகச் சுழலும் காற்று உடம்பிற்குத் தேவையானவரை வாழ்வதற்கு மரணத்தை தடுத்துவைத்திருக்கவும், பூமி உடலாக உயிரைத் தாங்கியும், பரந்தவெளி வானம் இவைகள் அனைத்தையும் ஆளும் சூழ்சுமத்தைப் போதித்தும் நமக்குள் ஒன்றியே கிடக்கிறது இயற்கை. இயற்கையோடு ஒன்றி இருக்கவே ஏங்கி ஏங்கிக் கிடக்கிறது உடலும்..
————————————————

3
டம்பு இல்லையேல் பிறப்பின் ஞானமில்லை. உடம்பு புரியவில்லை எனில் பிறப்பும் புரிவதில்லை இறப்பும் எப்படி வந்ததென்றுத் தெரிவதில்லை. எப்போது சாவோமோ என்று பயந்து பயந்து திடீரென தனக்கேத் தெரியாமல் ஒருநாள் செத்துப் போகும் உடலை நாம் தான் அத்தகைய ஆபத்தை நோக்கி வளர்கிறோம். உடலை வளர்ப்பது கலைகளில் ஒன்று. உடலைப் பேணுவது கடமையில் ஒன்று. உடலை நேசிப்பது ஒரு சுகம். உடலைக் காதலுடன் காத்துக்கொள்வதென்பது ஞானத்தின் முக்தியை அடையும் வழிக்கு நம்மை இலகுவாகக் கொண்டுசெல்லும். உடல் தான் அறிவை தோண்டத் தோண்டத் தரும் சுரங்கம். உடலுக்கான அறிவு மகத்தானது. உடம்பின் அருமையை உணர்ந்தவராலேயே உயிரின் சிறப்பையும் அறியமுடியும்..
————————————————

4
யிர் ஒரு வரம். மனிதப் பிறப்பு பாக்கியம். அந்த பாக்யத்தைப் புரிவதற்கும் உயிரை வரமாக்கிக் கொள்ளவும் உடம்பை பாதுகாத்தல் வேண்டும். ஒரு மனிதனால் பறப்பதற்கான ஆய்வைப் பற்றிச் சிந்திக்கவைக்க அறிவினால் முடியுமெனில் பறக்கவைக்க உடலால் மட்டுமே முடிகிறது. அதுபோல் தான் வாழ்வின் சூழ்ச்சும முடிச்சிகளை அவிழ்த்து பிறப்பை வென்றுகொள்ள ஆன்மா அறிந்திருப்பினும் அதை நிகழ்த்திக் கொள்வதற்கு உடலொன்றே ஆயுதமாகிறது..
————————————————

5
ரு ஆன்ம பலம் நிறைந்த யோகாசன ஆசிரியரைச் சந்தித்தேன். அவர் பெயர் ஜினன். அவரும் அவர் மனைவி ஸ்ரீதேவியும் வாழும் கலையை தியானம் வழியும் வெவ்வேறு பல உடற்பயிற்சிகளின் வழியும் தெரிந்தோருக்கெல்லாம் போதித்து இயன்றவரை எல்லோரையும் நல்வழிபடுத்தி வருகின்றனர்.

உடல் தீங்கை ஏற்படுத்தும் உயிர்க்கொல்லி நோய்களை மருந்தின்றி உடல்கொண்டே சரியாக்கும் யோகாசனங்களை அனைவருக்கும் பயிற்சிப்பதை அவர்கள் தனது சேவையாக செய்துவருகின்றனர். அவ்வாறு அவர்கள் நடத்தும் ஒரு கூட்டத்தில் கலந்துக்கொள்ளும் வாய்ப்பெனக்குக் கிடைக்கையில் அவர் மிக நாசுக்காகப் புரியத்தக்க வகையில் பல நல்ல விசயங்களை எல்லோருக்கும் போதிப்பதை அறிந்தேன். அங்ஙனம் பேசுகையில் அவர் சொல்கிறார், பிறக்கும் போதே ஒரு செல்வழியே உலகிற்குவரும் ஆன்மாவானது அந்த ஒரு செல்லின் வழியே தனக்குத் தேவையான அத்தனையையும் கொண்டுவருவதாகவேச் சொல்கிறார்.

ஒரு செல் வழியே பிறக்கும் ஒரு உயிர்க்கு நீடித்து உயிரோடு இருக்க காற்றும் நீரும் போதுமானது என்கிறார். அதற்குப் பின் நாம் மாற்றிக்கொண்ட நமது வாழ்க்கை முறைக்கிணங்க கூடுதல் பலமும் உடல்கட்டும் அவசியப் பட்டதற்கிணங்க நாம் உண்ணும் முறையும்’ பின் சுவைக்கேற்ப உணவு வகைகளும் மாறி மாறி இன்று ஆடு மாடு கடந்து மனிதனையே மனிதன் கொன்றுத் தின்னும் அளவிற்குக் கேவலமாக வந்துவிட்டோம் என்பதே சோகம்..
————————————————

6
வா
ழ்வதற்கு நீரைவிட சிறந்த உணவு வேறில்லை என்கிறார் திரு. ஜினன். இன்னும் வேண்டுமெனில் மண்ணில் விளைந்த மரக்கறியும் பழங்களும் காய்களும் விதைகளையும்விட உடலை சரியாக வைத்துக்கொள்ளும் உணவு வேறில்லை என்கிறார். அங்ஙனம் உடம்பை காப்பது பழவகை மற்றும் காய்கனி வகைகளெனில், கொல்வது ‘நாம் துடிக்கத் துடிக்க அடித்து தின்னும் பிற உயிர்களின் மாமிசங்கள் தானென்கிறார். கைவிரல்கள் ஐந்தும் ஐம்பெரும் பூதங்களை உள்ளடக்கிக் கொண்டிருக்கும் மனிதனுக்கும்’ பரவெளியாக அகன்றிருக்கும் இயற்கைக்குமான இணைப்பினை மிகத் துல்லியமாய் அறியத்தரக் கூடிய அறிவினைக் கொண்டுள்ளது என்று உறுதியாகக் கூறினார்..
————————————————

7
லகையே நான் நினைத்தால் என்னிரண்டு கைகளுக்குள் அடக்கிவிடுவேன் என்பதெல்லாம் வெறும் வாய்வார்த்தையின் கர்ஜனை மட்டுமல்ல, ஒரு மனிதன் நினைத்தால் எதையும் தான் நினைத்ததை நினைத்தவாறு செய்ய முடியுமென்பதைத் தான் ஆன்மிக பலமானது பல உதாரணக் கதைகளுடன் கடவுள் வழிபாட்டு சம்பிரதாயங்களுடன் பின்னிப் பிணையப்பட்டு பல கோணங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. அதை அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றி திரித்து வேறு பல பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடிய ஜாதிக்குள்ளும் மதங்களுக்குள்ளும் திணித்து நம்மையே இன்று கொண்டு குவித்துக் கொண்டிருப்பது தான் கூடுதல் வேதனை.. .
————————————————

8
தையும் நாம் நினைத்தவாறு அடைந்துக் கொள்ளத் தான் இயற்கை நமக்கு அறிவாகவும் உடலாகவும் இங்ஙனம் கிடைக்கப் பட்டுள்ளது. நாம் தான் அதை வெறும் வாய்க்குள் விழுங்கி வயிற்றிற்குள் அடைக்கக் கிடைத்த உணவாக மட்டுமே எண்ணி உண்டு உடலையும் அறிவையும் இப்பிறப்பையும் வெறும் சுயநலத்திற்காக மட்டுமே செறித்துவிடுகிறோம்..

அதன்றி நாம் மனிதராக வாழ்ந்து அன்பையும் பண்பையும் உடனிருப்போருக்கும் போதித்து உதவி செய்து உடலின் வாசனையை அறிவினால் பெருக்கி உயர்வாக வாழவேண்டும், அங்ஙனம் வாழவேண்டும் எனில் உடலை இயற்கையின் அரவணைப்பிற்கு ஏற்றாற்போல் இணங்கி வளர்த்தல் வேண்டும், அதற்கு யோகாசனம் வழிவகுக்கும் என்றார் திரு.ஜினன். அவரின் வாய்ப்பாடத்தை விட அவரின் முகவொளி வாழ்வின் கற்பிதத்தை புன்னகை மாறாது போதித்தது..
————————————————

9
னக்குத் தெரிந்து, உடம்பைப் பேணுதல் என்பது வாயை மூடுதலில் ஆரம்பிப்பதாகவே எண்ணுகிறேன். தேவையற்றதைப் பேசாமை எனும் பக்குவமும், தேவையுள்ளதை தக்க இடத்தில் பேசும் அறிவுக் கூர்மையும், உடலுக்கு ஏற்றதைமட்டும் உண்பதிலும், ஏற்காததை தவிர்த்தலிலுமே உடம்பைப் பேணுதலுக்கான நன்மை வாயினால் ஏற்படுகிறது.

ஒரு மாட்டுப் பாலினை முழுமையாகச் செரிக்கும் சக்தி கூட மனிதனுக்கு இல்லையாம். இரண்டு மணிநேரம் கடந்துபோனாலே சமைத்த உணவு கூட பாக்டீரியா பிடித்துப் போகிறதாம், பின் அவைகளைச் செரிக்கும் சக்தி சூரிய ஒளி நிறைந்துள்ள பகல்பொழுதில் மட்டுமே இருக்குமாம். மண்ணில் விளையும் பழங்களையும் காய்களையும் உண்பதற்கு உரிய நேரமென்று வேண்டாமாம். எப்பொழுதும் பாதி தின்று, கால்பாகம் காற்று நிறைத்து, கால்பாகம் நீர்மம் அடக்கி நெடுங்காலம் வாழமுடியுமென்கிறார்கள் நெடுங்காலம் வாழ்ந்தோர்..
————————————————

10
திகம் உண்பவர் உறங்கிப் போகிறார் சரியாக உண்ணத் தெரிந்தவர்தான் மேலும் திடமாக நடக்கும் சக்தியை அடைகிறார். ஒரு மனிதருக்கு போதுமான தூக்கமும் அரை வயிற்று உணவும் இயன்றவரை நீரும் எப்படியேனும் நேரம் ஒதுக்கிச் செய்யும் உடற்பயிற்சியும் உடலைக் காத்து உயிரை நெடுங்காலத்திற்கு நிலைக்கச் செய்வதோடு அறிவைப் பெருக்கி எதையும் ஆளும் பலத்தையும் தொடர்ந்து தருகிறது.

அதுபோல்’ உடம்பை சீர் செய்யும் அறிவு உணவுவழி கிடைப்பது போல, வாழ்வை நேராக்கும் அறிவு நேர்த்தியான சுவாசத்தால் அமைகிறது. சுவாசத்தை உடற்புயிற்சி சீர் செய்கிறது எனில், உடற்பயிற்சிக்கு உடல் பயன்படும் வித்தையை யோகாசனங்களால் புரியவைக்கமுடிகிறது. யோகாசனம் சரிவரக் கைவரப்பட மீண்டும்; உணவு, தூக்கம், வாழ்வுக் கலை பற்றிய சரியானப் பயிற்சி போன்றவை தேவைப்படுகிறது..
————————————————

11
பொ
துவாகப் பார்த்தால் தொப்பைக் குறைத்தலும், நோய்களை அகற்றலும், வாழ்தலை முறைசெய்தலும் தானே இன்றைய நம் தேவையாக உள்ளது? அங்ஙனம் நமது தேவையை பூர்த்தி செய்ய; மனதை அமைதிபடுத்தும் தியானமும், தியானத்திற்கு மனதை ஆட்படுத்தும் ஆசனங்களுமென வாழ்வுக் கலையை நம் முன்னோர் முறையாக வகுத்து வைத்துள்ளனர். உழைப்பில்லாதோருக்குத் தான் உடற்பயிற்சி உழைப்பவருக்கு எதற்கு என்கின்றனர் நிறைய பேர். இருந்தும் கேள்விகளுக்குப் பின்னும் முன்னும் தொப்பை சாய்த்து நடப்பவரும் சோர்ந்து கிடப்பவருமே ஏராளமாக உள்ளோம் என்பது நாணக்கேடு.

நடப்பது உழைப்பது எல்லாம் உயிர் பிழைக்கும் வழி. காட்டில் விளையும் பொருட்களை நாடெனும் கோடு கிழித்து காசுக்கு ஆக்கியதால் படும் நமது வெற்று வயிற்றின் துன்பமது. அதைக் கடந்தும் உடம்பிற்கான ஒரு அறிவியல் உண்டு. அந்த அறிவியலின் ஆழத்தை வாழும் கலையெனும் யோகாசனங்களும் தியானமும் கற்றுத் தருவது மனதுள் நெல்லெண்ணங்களின் சாரத்தை ஏற்படுத்தி மனதை நேர்வழியில் செலுத்த மிகையாய் உதவுவதை கடந்த பதினைந்து வருடங்களாகச் செய்யும் தியானத்தின் வழியே அறிந்து வருகிறேன்..

இருந்தும் உடம்பைக் கோவிலென்று அறிந்திருந்தும் உடம்புப் பற்றிய கவனத்தை விட்டொழித்துவிட்டு, மேலாக என் உடம்பையே திரியாக்கி வரும் தலைமுறைக்கு வெளிச்சம் தரவே எழுத்தின்வழியே எரிந்துக் கொண்டிருக்கிறேன்.

எனினும் தூக்கம் பற்றியோ உணவு பற்றியோயான கவலையை எழுத்தின் அளவிற்கு படவில்லை என்பதால் ஏற்பட்ட நோய்கள்தான் இனி வாழும் காலங்களையும் தீர்மாணிக்கவுள்ளதென்பது வேறு. ஆயினும், வாழும் காலம் குறைந்துப் போனாலும் எழுத்தால் பேசும் காலமும் குறைந்துவிடுமே எனும் கவலையில் தற்போது வாழுங் கலையில் ஈடுபடப் பட யோகாசனங்களின் முழு அருமையையும் உணர்வின் வழியே அறியமுடிந்தது. அதோடு, மாத்திரைகளால் விழிங்கப்பட்ட உடம்பு இப்போது ஆசனங்களால் மீள்பதிவு ஆகிறதென்பதும் உண்மை..
————————————————

12
ரும் சாவை எட்டியுதைக்க எல்லோருக்கும் ஆசை இருக்கலாம். இருக்குமெனில் அதை சாதாரண உடற்பயிற்சியின் மூலம் எட்டி உதைக்கலாம் வாருங்கள்; அதற்கு முதலில் அவரவர் உடலை அவரவர் தனது தாயைப் போல பாதுகாத்துக்கொள்ளுங்கள். பத்து மாதம் வயிற்றிலும் நெஞ்சிலும் தாங்கிய தாயும் நெஞ்சில் சுமந்த தந்தையும் உயர்வு எனில் காலத்திற்கும் நமைத் தாங்கிப் பிடித்திருக்கும் இவ்வுடம்பும் உயர்வு தான்.

உடம்பு மெலிந்து முகம் பொலிவோடு இருப்பது மட்டுமல்ல வாழ்வதன் தேவை. மனது எண்ணியதை உடம்பு பெறவேண்டும். உடம்பு செய்யவந்ததை மனதிற்குச் சொல்லவேண்டும். உடம்பும் மனதும் சேர்ந்து உயிர்களை ஜனிப்பது போல் உலகின் அசைவுகளை ஒன்றி அறிவதற்கு மனபலத்தைத் தரும் உடலும் உடம்பைக் கட்டுப்பாடோடு வைத்துக் கொள்ளும் எண்ண உறுதியும் இன்றியமையாதவை..
————————————————

13
தோ நான் வாழ்ந்தேன் என்று வாழ்ந்து பின் கிடைத்ததை தின்று, முடிகையில் தூங்கி, சோர்ந்ததும் மறித்துப் புழுத்துப் போவதல்ல நம் பிறப்பு.

மனிதப் பிறப்பு அழகு நிறைந்தது. அறிவுப் பூர்வமானது. ஆளுமையைக் கொண்டது. அதை நாம் எங்கே வைத்திருக்கிறோம்? எண்ணியவுடன் அதைத் தேடிப்பிடித்து விட இயலுமா நாம் நம் முறையற்ற வாழ்வில் புதைத்த நமது நோயற்ற உடம்பை? முடியுமெனில் தேடுங்கள். தேடிப் பிடியுங்கள். எப்படி தேடுவது என்பதை நான் சொல்லவா? தேடிப் பிடிக்க முதலில் அமைதியில் ஆழ்ந்திருங்கள். விடும் மூச்சைக் கூட சீராக விடப் பழகுங்கள். சீரான சுவாசத்தை ஏற்படுத்தித் தரும் உடற்பயிற்சியினாலும் உண்ணும் முறையான உணவாலும் அத்தகைய நோயற்ற உடல்வாகினை அமைத்துக் கொள்ளுங்கள்.

யாரோ வந்தார் யாரோ சொன்னார் எப்படியோ வாழ்கிறோம் என்பது போதாது. எல்லைமீறிப் போய்க் கொண்டுள்ளோம். நாம் செய்யும் தவறுகளின் வழியே எட்டி எட்டி மரணத்தை நாம் தான் ஒவ்வொருவராய் பறித்துக் கொண்டுள்ளோம். வெறும் மரணம் தேடும் கூடுகளை, அதற்கென வாழும் வாழ்க்கையை கைவிட்டு மனிதம் பூத்த பிறப்புகளாக இம்மண்ணில் நமது கடைசி மூச்சை நிறுத்துவோம்..
————————————————

14
பி
றப்பை கேட்டுப் பெறவில்லை. அதுபோல் இறப்பையும் கேட்காமலே நடப்போம். வாழ்க்கை என்பது என்ன? சிரிப்பது, ரசிப்பது, ருசிப்பது, களைப்பது, கவலையை அறுப்பது, கண்மூடுவது; அவ்வளவுதான். ஆனால் அதற்கு அத்தனையையும் ஏற்கும் புரியும் அனுசரிக்கும் அடங்கிப் போகும் மனசு வேண்டும். அந்த மனசெங்கும் அன்பு நிறைய எவ்ண்டும். அன்பை பண்போடு வெளிப்படுத்த வேண்டும். ஆசையை தேவையை பார்வையைக் கூட பிறருக்கு வலிக்காமல் பார்க்க மனதையும் வாழ்தலையும் தெளிவாக அமைத்துக்கொள்ளல் வேண்டும்.

என் நண்பன் சொல்வான் எல்லாம் கடந்துப் போகும் என்பான். வாழ்வில் எல்லாம் கடந்துப் போனாலும் நாம் கடந்த பாதை காலத்திற்கும் நிலைப்பதும், நம்மோடு அது புதைந்துப் போவதும் நம் வாழ்தலில் தானே இருக்கிறது?

அந்த வாழ்க்கையை எப்படி நாம் அமைத்துக் கொள்ளவேண்டும் என்று எண்ணுகிறோமோ அப்படி அமைத்துக்கொண்டு வாழ நல்ல உடம்பும், குன்றா அறிவும், அதை வெளிப்படுத்தும் முகப்பொலிவும், தான் வந்த பாதையை தன்பின்னே வருவோருக்குக் காட்டும் மனதும், அசையும் ஒரு மரத்தின் இலையைக்கூட அது நமக்குத் தேவையில்லாதபட்சத்தில் பறித்திடாத மனிதமும் எல்லோருக்குள்ளும் இருப்பது தேவையாகவுள்ளது..

அது எல்லோருக்கும் வாய்க்க; வாழும் உயிர்கள் தேவையை உணர, அடைய, பூக்கும் மலர்களும், புலரும் காலையும், கொட்டும் மழையும், வீசும் காற்றும், ஒளிரும் கதிரும், குளிரும் நிலவும், குழந்தையின் சிரிப்பும் அண்டப் பெருவெளியெங்கும் அதுவாக நிறைய நாமெல்லோரும் நல்ல மனிதர்களாய் வாழ முற்படுவோம். இயற்கையை அழிக்காத வாழ்வே வாழ்வென்று அறிவோம். மனிதர் மட்டுமல்ல மனிதன் போகும் நடைப் பாதையில் மலர்ந்திருக்கும் ஒரு மலரைக் கூட பறிக்க அஞ்சுவோம்..

கண்ணில் விழும் தூசியும், நாசியில் நுழையும் அடுப்புப் புகையும், வேறு வழியின்றி தின்னக் கிடைக்கும் பாழுஞ்சோறும் உடம்பிற்கு பகையென்று எண்ணும் அதே மனங்கொண்டு புகையிலையையும் வெண்சுருட்டையும் போதைப் பொருட்களையும் குடிகெடுக்கும் குடியையும்கூட கேடென்று எண்ணி கைவிடுவோம். நஞ்சென்று அறிந்து காரி உமிழ்வோம்..

விடும் மூச்சு இசைபோலப் பரவி மனிதச் சுகந்தம் நிரம்பிவழிய பரந்தவெளியெங்கும் நன்மையைப் பரப்பி நன்னிலத்தை மீண்டும் வரும் தலைமுறைக்காய் மீட்டெடுக்கட்டும்..

இயற்கையை அதன் எழில் மாறாது நாம் காக்க, இயற்கையும் நம்மை நலம் குன்றாது காத்துக் கொள்ளுமென்று நம்புவோம்..

நம்பிக்கைதானே வாழ்க்கை வேறென்ன’ உடம்புமொரு ஆயுதமென்று நம்பி ஏந்துங்கள், உலக சமரசத்தை எதிர்பார்ப்பின்றி பெய்யும் மழைபோல எந்தப் பிரதிபலனும் பாராது வாழும் நன்னடத்தைமிக்க வாழ்வினால் ஏற்படுத்துவோம்..

எங்கும் நோயற்ற வாழ்வு நிலைக்கட்டும்; உயிர்கள் அனைத்தும் அதுவாக அதன் மகிழ்வோடு வாழட்டும்.. இயற்கையன்னை எல்லோரையும் காப்பாளாக..
————————————————
வித்யாசாகர்

Posted in வாழ்வியல் கட்டுரைகள்! | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பிரிந்தவர்ப் பற்றி, பிரியாதிருக்க..(நிமிடக் கட்டுரைகள் 13)

1

பிரிவு வலிக்கும்நெஞ்சை இரண்டாய்ப் பிளக்கும். பிரிந்த மனதுள் துயரம் புகுத்தி உயிரோடு எரிக்கும். உடல் பொருள் ஆவி அத்தனையையும் அறிந்தே வெறுக்கவைக்கும். கல்நெஞ்சைக் கூட கண்ணீரால் உடைக்கும். கால இடைவெளிக்குள் புகுந்து அன்பைப் பெருக்கவும், அத்தனை துரோகத்தையும் மறக்கச்செய்யவும், மனிதரை ஒழிக்கச் செய்யவும், மனிதரின் முகத்தை மனிதர்க்கு மனிதராகவே காட்டவும்கூடச் செய்யும். ஏன், நம் நிலையாமையை நமக்கு உணர்த்தவும் பிரிவால் மட்டுமே முடிகிறது!

2)

யிர் முடுச்சிகள் அவிழும் வலி தெரியுமா? தெரியவேண்டுமெனில் பிரிந்துப்பாருங்கள். வாழ்தலின் அவஸ்தையை உணரவேண்டுமா? உணரவேண்டுமெனில் பிரிந்துப்பாருங்கள். விழியில் நீர்தேக்கி உடலை சுமக்கும் உயிர்ச்சுமையை எத்தனைக் கொடிதென்று அறியவேண்டுமா பிரிந்துப்பாருங்கள். பேசக் கசப்பதும் சிரிக்க வெறுப்பதும் எளிதாய் நடக்கும்,  உண்ண மறுப்பதும் வெய்யில் சுடாததும் சாசுவதம் ஆகும், பிரிந்துப்பாருங்கள்!

3)

ரு தாயைப் பிரிவது பெருவலி என்று எண்ணும் அதே மனது பிள்ளையையும் மனைவியையும் கணவனைப் பிரிகையிலும் கூட பெரிதாய் கனக்கும். பிரிவின் ரணம் அத்தனைக் கொடிது. வயிறு வலிக்கையில் வயிற்று வலி பெரிதாய் தெரிவதைப் போல, பல் வலிக்கையில் பல் வலி பெரிதாய் தெரிவதைப் போல, தலை வலிக்கையில் தலைவலி பெரிதாய் தெரிவதைப் போல; பிரிவும் யார் பிரிகையிலும் அவரையே பெரிதாய்க் காட்டுகிறது. வாழ்வின் அர்த்தத்தை வெறுமைக்குள் திணிப்பதென்பது பிரிவாலேயே அதிகம் நிகழ்கிறது.

அதிலும் பொதுவில் எல்லோருக்குமே அடிக்கடி வலிக்கும் தாளா ரணமெனில் அது நட்புறவுகளைப் பிரிகையில் நோகும் ரணமொன்றே. பழகும் நண்பன் விட்டுச் செல்கையில் வலிப்பதைக் காட்டிலும் வேறு விரிச்சோடி நிலை உறவில் இல்லை எனலாம். எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து உயிர்விடும் கடைசி மூச்சு வரை நமை இதயத்தில் சுமக்கும் காதலியைப் போல மனைவியைப் போல வாழ்வின் பயணமெங்கும் நமைச் சுமந்தே வருவது நட்புறவு!

4)

ன்றாலும், விழுந்தால் அழுது, நடந்தால் சிரித்து, உண்டால் மகிழ்ந்து, பார்த்து பார்த்து, பயந்து பயந்து, ஒவ்வொரு கனத்தையும் நம்மைச் சுமந்தே கடக்கும் தாய் தந்தைக்கு ஈடு வேறெந்த சாமி சேரும்?

அண்ணன் என்பது ஒரு சுகம், தம்பி என்பது ஒரு பலம், அக்கா என்பதொரு புனிதம், தங்கை என்றொரு இதம்; பிள்ளைகள் என்று பல அர்த்தமாய் நீண்டு வாழ்வை இனிப்பாக்கும் அம்சங்கள் உறவுகள் மட்டுமே எனில் மறுப்பதற்கில்லை. அத்தகைய உறவுகளைப் பிரிவது உயிரோடு இறப்பதற்குச் சமம்..

5)

னக்கு எப்பொழுதுமே பிரிவு பெரிதாய் வலிக்கும். யாருடனும் பழக நான் அஞ்சுவதே பிரிவை தாங்க இயலாது என்பதன் பொருட்டுதான். எனது சிறு வயதில் என்னோடு சுற்றித் திரிந்த செல்லப்பிராணி ஜூலியை இதுவரை மறக்க முடிந்ததில்லை. அது நக்கி தொட்டு எகுறி தாவி மடியில் குதித்த தருணங்கள் ஏக்கங்களாய் உள்ளே அடைப்பட்டுக் கிடக்கிறது.

நாயென்றாலும், நானும் ஜூலியும் மனதால் மிக நெருக்கமாக இருந்தோம். நான் வீட்டிற்குள் இருந்தால் அது வீட்டு வாசளுள் படுத்துக்கிடக்கும். வெளியே எங்கிருப்பினும் எனைவிட்டு ஒரு பத்தடி தூரத்திற்குள் எனைப் பார்த்துக் கொண்டே படுத்திருக்கும். வீட்டைவிட்டு தூரம் செல்கையில் ஏன் பின்னாலேயே அந்த நீளத் தெருவின் கடைமுனைவரை மூச்சிரைக்க இரைக்க ஓடிவந்து பின் திரும்பியோடும்.

எத்தனையோ நாட்கள் ஜூலி எங்களூர் பேருந்து நிலையத்தின் பாதி தூரம்வரை வந்து அங்கிருக்கும் வழிப்பறி நாய்களோடு சிக்கிக்கொண்டு அவதியுற்று சண்டைபோட்டு பின் பறிதாமபமாய் திரும்பியோடி இருக்கிறது. அத்தனை ஒரு இணைப் பிரியா அன்பு அதற்கு எங்கள் மேல்!

6)

ஜூலி என்றில்லை, ஜூலியோடு நாங்கள் இருந்த அந்த வீடே பிரிவின் நினைவினுள் கனக்கும் பெருங்கனம் தான். அந்த வீட்டில் தான் எனது பால்யகாலம் கொட்டிக் கிடக்கிறது. எனது இறந்துவிட்ட தங்கை எழுந்தோடி விளையாடியதும் எனது அப்பா எனை மார்பில் போட்டுக் கொஞ்சியதும் அம்மாவின் மடியில் படுத்து காதலிக்காய் அழுததும் அந்த வீட்டில்தான். எங்களின் மொத்தப் பெருந்துயரத்தின் நினைவுக் கூடுகளெல்லாம் சிரிப்புசப்தங்களோடு பிண்ணிப் பிணைந்து அந்தப் பழைய வீட்டில் தான் நிறைந்துக் கிடக்கிறது..

7)

றேழு வயதோ என்னவோ எனக்கு. அப்போது அந்தப் பழைய வீட்டை அங்கே கட்டிக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் ஒரு நூறு வீடு தள்ளி வேறு தெருவில் அப்போது வசித்துவந்தோம், அம்மாவும் அப்பாவும் தங்கை வித்யாவை தூளியில் போட்டுவிட்டு அங்கே வீட்டுப்பணி நடக்கும் இடத்திற்கு அவசர வேலையென்று சென்றிருந்தார்கள்.

நான் வெளியே வந்து தனியே யாரிடமும் பேசாமல் மௌனமாக அமர்ந்திருந்த லல்லி அக்காவைக் கண்டதும் அன்போடு ஓடி கட்டிக் கொண்டேன். அவ்வளவு தான் உடனே அவள் திருடனைக் கண்ட காவலாளியைப் போல விருட்டென எழுந்து எனை கூண்டாகப் பிடித்து எனது மேல்சட்டை கால்சட்டையை எல்லாம் கழற்றிக்கொண்டு நிர்வாணமாகப் போவென்று சொல்லி விட்டுவிட்டாள்.

நான் என்னக்கா என்று அழுததற்கு, லல்லி அக்காவின் அம்மா கற்பக அத்தை இடையேப் புகுந்து “நீ ஏன்டா அவளைத் தொட்டே? அவ வீட்டுக்கு தூரமா இருக்கா அவளை தொடக்கூடாதில்ல?” என்றாள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. அவளே மீண்டும் போ.. போய் குளிச்சிட்டு பிறகு வேற துணி போட்டுக்கோ, இனி இப்படி இருக்கையில தொடாத போ..’ என்றாள்.

நான் அழுதுகொண்டே வீட்டிற்கு வந்தேன். வந்தால் வீட்டில் அம்மாவும் இல்லை அப்பாவும் இல்லை, அப்படியே முடங்கி ஒரு ஓரம் அமர்ந்துக்கொண்டேன். சற்று நேரத்தில் தூளியிலிருந்த தங்கை வித்யா ஒரு வயதுக் குழந்தை. ஒரே கத்தல், வீல் என்று அலறினாள். நான் தூக்கி சமாதானம் செய்துப் பார்த்தேன் அழையையவள் நிறுத்தவேயில்லை. அவளின் அழையை மேலும் தாங்கிக்கொள்ள முடியாமல் உடம்பில் பொட்டுத் துணி இல்லாமல் அப்படியே அவளைத் தூக்கிக்கொண்டு அம்மா இருக்கும் அடுத்த தெருவிற்கு அப்படியே நிர்வாணமாகவே நடந்துவந்தேன்.

நானிப்படி வருவதைப் பார்த்து அம்மாவும் அப்பாவும் பதட்டமாக ஓடிவந்து விசாரிக்க, ‘வித்யா அழுதது அதான் தூக்கிக்கொண்டு வந்தேன்’ என்றுச் சொல்லிக் கொடுத்துவிட்டு லல்லி அக்கா இங்ஙனம் செய்துவிட்டது என்றேன். அதற்கு அம்மாவும் எல்லாவற்றையும்  கேட்டுவிட்டு, அது அப்படித்தான், நீ ஏன் அவளைத் தொட்டே என்றாள். எனக்கு ஒன்றுமேப் புரியவில்லை, என் தங்கை மட்டும் புரிந்திருந்தாள். தங்கை என்றாள் எனக்கு உயிர். அவளின்றி இந்த வாழ்வை நான் கடப்பேன் என்று அன்றெல்லாம் நம்பவேயில்லை.

8)

ப்பொழுதெல்லாம் என் தங்கைக்காக மட்டுமே வாழ்ந்த ஒரு ஜீவன் நான். எங்கு நாளை அவளுக்குத் திருமணம் நடந்து கனவன் தவறாக வந்துவிடுவானோ என்று பயந்து அவளுக்கு நல்ல வாழ்க்கை அமைவதற்காக கடவுளிடம் வேண்டிக்கொண்டு அவள் வயதுக்குவந்த நாளிலிருந்து இறந்துப்போன நாள்வரை எல்லா வெள்ளிக்கிழமையிலும் காலையிலிருந்து மாலைவரை உணவு உண்டதில்லை, வேறொன்றும் கூட அருந்தியதில்லை. வயிறு பசிக்க பசிக்க, பசி வலிக்க வலிக்க அப்படியே வேலையும் செய்வேன். அதெல்லாம் வெல்டிங் அடித்த காலம். இரும்பு உருக்க உருக்க வயிறு பசியில் பிசையும். உடம்பு அசதியில் சுருங்கும். இருந்தும் என் தங்கையின் வாழ்க்கையை எண்ணி அந்தப் பசிநெருப்பையும் மிதித்துக் கடந்தேன்..

9)

ன்றும் மாதத்தில் இரு முழுதினங்களும் எனது தங்கையின் ஆத்மாவிற்கு அமைதி கிடைக்க விரதமாக மட்டுமே அவளின் நினைவை சுவாசித்து வாழ்கையைக் கடக்கிறேன். நான் என்றில்லை எனது தம்பிகள் அண்ணன் அம்மா அண்ணிகள் தங்கைகள் நாங்கள் எல்லோருமே இந்த ஒரு இழப்பினால் சாபத்துள் தள்ளப் பட்டவர்களாக ஆகிப்போனோம்.

காரணம், எங்கள் வீட்டின் வெளிச்சம் எங்கள் வித்யாவாக மட்டுமே இருந்தாள். இன்றும் அவள் அழைக்கும் அண்ணா அண்ணா சப்தம் தான் எங்களுக்கான உயிர்ப்பை பிடித்துநிறுத்தி வைத்துள்ளது. ஒரு நாள் ஒரு கனவு கண்டேன்.

அதி பயங்கரமான கனவு அது. வேறொன்றுமில்லை, எங்கள் தங்கைக்கு திருமணம் நடந்து அவள் எங்களை விட்டு கனவன் வீட்டிற்குச் செல்லப் போகிறாள். முன் நாள் ‘ஐயோ நாளைக்கு திருமணம் முடிந்துவிட்டால் வித்யா போய்விடுவாளே போய்விடுவாளே என்று வீடெல்லாம் தொட்டுத் தொட்டுப் பார்த்து நான் அழுவது போன்ற கனவு அது.

கனவுதான் என்றாலும், மனதின் அழுத்தத்தைக் கூட்டுவதாக இருந்ததால் அழுது அழுது தாங்க முடியாமல் தேம்பியவாறே கண்விழித்துப் பார்த்ததும் தான் உண்மைப் புரிந்தது. தங்கை என்னருகில் எனது கைமேல் தலைவைத்துப் படுத்திருந்தாள். எப்போதும் என் தங்கை தலையணையில் படுத்ததில்லை, அவளுக்கென்றே உடற்பயிற்சி செய்து புஜங்களைப் பெரிதாக ஏற்றி வைத்திருத்தேன். அத்தகைய தங்கை பிரிவதென்பது இதயத்தில் ரத்தம் வடியும் வலியில்லையா?

10)

ன் தங்கை வீட்டை விட்டு திருமணமாகிச் செல்லப்போகிறாள் என்பதையே தாங்காத மனசு இது. இன்றும் எப்படியோ அவளைப் பிரிந்தும், அவள் இவ்வுலகைவிட்டே போனபிறகும் சாகாமல் கிடக்கிறது.

வாழ்க்கையென்றால் இப்படித் தான் புதிய புதிய கற்பிதங்களை வலிக்கும் நிகழ்வுகளினூடே வைத்துக் கற்பிக்கிறது. வலிப்பதும் கசப்பதும் மரணத்தை வெல்ல கடக்கும்வழியே வரும் சோதனைகள்தான் என்றாலும் அங்குதான் வீழ்வதோடு இல்லாமல் மீண்டெழுவதற்கான பாடமும் நிறைத்துவைக்கப் பட்டிருக்கிறது.

பாழும் தெய்வங்கள் கண்மூடிக் கொள்ளும் தடங்கள் இப்படி வாழ்வெங்கும் நெடிந்துக் கிடக்கையில் முட்களை மிதித்துக்கொண்டுதான் சாகும்வரை நடக்கவேண்டியுள்ளது என்பதை பிரிவு உணர்த்தும் வலி மிகக் கொடிது!

11)

ப்படி பிரிவைப் பற்றி எழுதினால் கண்ணீர் சிந்தியே இந்தக் காலம் கடப்பதுபோல் ஈரப்பட்டே ஏடுகள் பல கடந்துப் போகும் என்பதையறிவேன்.

நோய்ப் பட்டு இறப்பதைக் காட்டிலும் பிரிவுபட்டு வலிப்பது நெடிய மரணம் என்பதை பிரிவை உணர்ந்தோர் நன்கறிவர். எனவே பிரிவு யாருக்கும் நேராதிருக்கட்டும். பிரிவு எல்லோருக்கும் உரியதாய் பாடமாய் போதுமனவரை மட்டுமே நிகழட்டும்.

பிரிவை உணருங்கள். பிரிவை ஏற்று அதன் அடுத்த அடியை பலமாக வைக்க கற்றுக்கொள்ளுங்கள். பிரிவில் நெஞ்சம் நிமிர்த்தி சுவாசியுங்கள். பிரிவில் மீண்டும் தெளிந்து எழுவதற்கான பக்குவத்தோடு எழுந்துநில்லுங்கள். பிரிவில்லா வாழ்க்கையில்லை. பிரியமட்டுமே பிறந்த பிறப்பிது; எனவே பிரிவை சுமக்கப் பழகுவோம். பிரிவை வேறு வழியின்றி ஏற்போம். ஆயினும் சாத்தியக் கூறுகளின் வழியே தற்காலிகப் பிரிவை தவிர்க்கவும் முயல்வோம்!

12)

பிரிந்திருப்போரே உணருங்கள், சேர்ந்த கைகள் தட்டும் சப்தத்தைப் போல சேர்ந்திருப்போரின் வாழ்க்கையே பார்ப்போருக்கும் உயர்வாகத் தெரிகிறது. நன்கு கூட்டாக வாழ்ந்தோரின் கதையே பிறருக்கும் பாடமாகிறது. பிரிவின் தனிமை கொடுமை என்பதைக் காட்டிலும் அதை தாங்கியிருக்கும் சொற்கள் கனமானவை. அவைகளை விட்டு விலகி மகிழ்வோடு வாழ பிரிவை விட்டு விலகியிருங்கள்.

சொந்தங்கள் சேர்ந்திருக்கையில் மட்டுமே குடும்பம் மதிக்கப்படுகிறது. மதிப்பாகப் பேசப்படுகிறது. எனவே பிரிவை ஏற்கும் பக்குவத்தோடு சேரும் பலத்தையும் அறிந்திருங்கள். பிரிவில்லா வாழ்வின் அன்பே நம் எல்லோரின் வாழ்க்கையிலும் அதிகம் இனிக்கட்டும்..

13)

வாழ்வின் பல சூழல்களில் பிரிவு சூடுபட்டே பாதி இறந்துப் போனவன் நான். பிரிவால் தவித்து ஏங்கி கவலையுற்று எனைப் பெற்றோருக்கும் உடன் பிறந்தோருக்குமென கண்ணீராய் மட்டுமே கடக்கும் வாழ்க்கை எங்களது வாழ்க்கை. அது எங்களின் சாபமோ அல்லது நாங்கள் இடறிப் போன வழித் தடம் அப்படியா தெரியவில்லை.

எதுவாயினும் அது பிறருக்கு வாய்க்காதிருக்கவே இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. சேர்ந்திருக்கும் மனதுள் சர்க்கரையாய் இனிக்கும் வாழ்வே எல்லோருக்கும் அமையட்டும்..

பிரிந்தோருக்கான வருத்தம் மிக்கதொரு வெற்றிடத்தை இங்கே வீட்டுச் செல்பவனாய், அதை நிரப்பும் நல்லிதயங்களே நமக்கான தேவை என்பதை அழுந்தச் சொல்பவனாய் இந்த ஈரமான பக்கத்திலிருந்து விடைகொள்கிறேன்..

வித்யாசாகர்

Posted in கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

நீ சிரிக்கையில் சிரிக்கிறதென் உலகம்…

1
நீ
எனைப் பெயரிட்டு
வெங்கட்டப்பா என்று அழைப்பாய்
நானுன்னை –
எனைப் பெற்றவளைப் போல
வாழ்வின் –
கேள்விகளையெல்லாம் மறந்துபோய் பார்ப்பேன்!!
———————————————–

2
நீ
போ நா க்கா..
பேச்சாட்டன்” என்பாய்
நான் சிரிப்பேன்
நீ மீண்டும் மீண்டும் நா(ன்) க்கா க்கா என்று
சொல்லிக்கொண்டே ஏதேதோ பேசுவாய்’
நீ பேசப் பேச நான்
வாழ்வைப் பெரிதாகயெண்ணி
வாழ்ந்துகொண்டிருப்பேன்!!
———————————————–

3
நீ
அப்பா அப்பா என்று
வாஞ்சையோடு காட்டி எனது
புகைப்படத்திற்கு முத்தமிடுவாய்
அப்பா அப்பா என்றுப் பூரிப்போடு அதைத்
தொட்டு தொட்டுப் பார்ப்பாய்
கொஞ்சுவாய்
நான் பிறந்ததன் பயனை
உன் கையிலிருக்குமந்த –
புகைப்படத்தின் வழியே அடைந்துவிடுவேன்!!
———————————————–

4
நீ
உனக்கு ஊட்டியச் சோற்றை
கையில் திரும்ப துப்பி
ஹே..காரமென்றுச் சொல்லி
எனது தட்டில் போட்டுவிடுவாய்
எனக்குக் காராதந்த ஒரு பிடிச் சோற்றில்
இனி வாழவேண்டிய
நாட்களையெல்லாம்
உனக்காய்ச் சேமித்துக்கொள்வேன்!!
———————————————–

5
கை
யில் படுத்துக் கொள்வாய்
கட்டிப் பிடித்துக் கொண்டு தூங்குவாய்
தூங்கும் முன் நிறைய முத்தமிடுவாய்
அப்பா புயிக்கும் ஹொம்பப் புயிக்குமென்பாய்
நான் பூரிப்பில் பூத்துப் போவேன்,
நீ மீண்டும்
அப்பா அப்பா என்று எனைக் கொஞ்சுவாய்
நான் படுத்துக் கொண்டிருக்கும் கட்டிலை
என் தாய்மடியாக எண்ணிப் படுத்துகொண்டிருப்பேன்!!
———————————————–

6
நீ
தூங்கிக் கொண்டிருக்கையில்
திடீரென எழுந்து
அப்பா அப்பாயென்று அழுவாய்
நான்.. இதோ அப்பா’ இதோ அப்பா’ என்று உனது
கையை எடுத்து என்னைத் தொட்டுக்காட்டுவேன்
நீ எனது முகத்தை கண்மூடிக்கொண்டே தடவி
பின் மீசையைத் தொட்டுப்பார்தவுடன்
ஆம் அப்பாதான் என்றெண்ணிக்கொண்டு
உறங்கிப்போவாய்’
நான் அதுபோன்ற நாட்களிலிருந்துதான்
எனது உறங்காத விழிகளுள் கூட
உனையே வைத்து பார்த்துக்கொள்ளத் துவங்கினேன்!!
———————————————–

7
டந்து எங்கேனும் செல்கையில் நீ
அப்பா ஹூக்கு ஹூக்கு என்பாய்
நான்கூட கால்வலிக்குமோ என்று எண்ணி
குழந்தை பாவமாயிற்றே என்றுத்
தூக்கி உனை தோள்மீதுப் போட்டுக்கொள்வேன்
நீ தோளுக்கு வந்ததும்
சந்தோசத்தில் குதிப்பாய்,
தோளை அழுந்தப் பிடித்துக் கொள்வாய்
திடீரென கன்னத்தில் முத்தமிடுவாய்..

நீ இப்படி நினைத்து நினைத்து எனை
அன்பில் நனைப்பாய்; நான்
நனைந்து நனைந்து உன்னுள்
கரைந்துக் கொண்டேயிருப்பேன்..

ஒருவேளை
பின் –
காலத்தில் ஒரு புள்ளியாகவேனும்
நான் மிச்சப்படுவேன் எனில்
அது உனது நினைவாக மட்டுமே மிச்சப்பட்டிருப்பேன்!!
———————————————–

8
ட்டினியில் இருப்பவனுக்குக் கிடைத்த
பலகாரத்தைப் போல
நீ எனைப் பார்க்கும் போதெல்லாம்
பரவசமாவாய்,

நானும்
சுவாசிப்பதைக் காட்டிலும் உனது
சிரித்த முகம் பார்ப்பதையே
முக்கியமென நினைத்திருப்பேன்,

ஆயினும்
ஒருநாள்
நீயும் பெரியவள் ஆவாய்
உனக்கும் திருமணம் நடக்கும்
நானும் சற்று –
தூரமாக்கப் படுவேன்
நம் தூரத்துள் அடைபடும் நாட்கள்
எனது வாழ்நாளிலிருந்து வெகுவாய்
குறைந்தும் போய்விடும்..
———————————————–
வித்யாசாகர்

Posted in காற்றாடி விட்ட காலம்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

எல்லோரும் தற்கொலை செய்துகொள்ளுங்கள்..

வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம்.. (நிமிடக் கட்டுரைகள்)
—————————————————————————————

(1)
தற்கொலை செய்துகொள்ளுங்கள். கொலை என்பது கொல்வது எனில், சாக நினைக்கும் அத்தனைப் பேரும் முதலில் தன்னைத் தானே கொன்றுகொள்ளுங்கள். தானெனும் செருக்கு, தனது எனும் ஆசை, தன்னாலெனும் வருத்தம், தனக்கென்னும் சுயநலம், தனக்கான ஏக்கம் தனக்கான வலி, தன்னாலான தோல்வியெ என்று நினைப்பதன் பாரம் என அந்த தனது எனும் இடத்திலுள்ள அத்தனையயும் கொன்றுவிடுங்கள்; எஞ்சிய உடல்கட்டை மிஞ்சட்டும், அதுபோன்ற உடல் கட்டை நாளை பிறருக்கென வாழ்ந்த தெரசாவாகவோ, அல்லது விபச்சாரத்தில் ஈடுபட்டுள்ளோரை மீட்டு நல்வாழ்வு அளிக்கும் அனுராதா கொய்ராலா அம்மையாராகவோ, அல்லது எல்லாவற்றையும் வெறுத்துவிட்டு பிறர் நோய்கண்டு ஒதுங்கி ஞானத்தை அடைந்த புத்தராகவோ உங்களை மாற்ற வாய்ப்பிருக்கிறது.
—————————————————————————————

(2)
பயம் உள்ளவரால் சாகமுடிவதில்லை, சாகுமளவு தைரியம் கொண்டோர் நாளைய எதையும் சாதிக்கத்தக்க தீரத்தையும் கொண்டவர் என்பதைப் புரிந்துக்கொள்ளுங்கள். புரிதல் என்னிலையையும் மாற்றிவிடும், புரிய அவகாசம் கொடுக்காத இடத்தில் தான் விரக்தி ஏற்படுகிறது. விரக்தி தான் மேலும் சிந்திக்க விடாது மரணப் பள்ளத்துள் நமை தள்ளுகிறது.

சாவதெனில் என்ன அதனால் உடனே அந்தப் பிரச்சனையிலிருந்து அகன்று விடுகிறோமா? இல்லையே, அதனால் மேலும் பலப் பிரச்சனைக்குக் காரணமாகத் தானே ஆகிறோம். பிணம்வீழ்ந்த வீடு நினைவிலிருக்கா? ஒரு மரணம் எத்தனைக் கொடிது தெரியுமா? ஒரு கொலை ஒரு வீட்டை அழிக்கிறது. பத்து கொலை ஒரு ஊரையே அழிக்கும். நூறு கொலை விழும் நாட்டின் நிலையென்ன யோசித்துப் பாருங்கள் தோழர்களே.
—————————————————————————————

(3)
தற்காலிக தகவல் ஒன்றைப் படித்தேன். சென்ற ஆண்டின் புள்ளிவிவரக் கணக்குப்படி இந்தியாவிலேயே அதிக தற்கொலை நடந்த இடம் தமிழகமாம். பதினாறாயிரம் பேர் ஒரு வருடத்திற்கு தற்கொலை செய்துகொள்கிறார்களாம். கேட்க கேட்க வலிக்கிறது. யார் மாள்வது, உலகத்திற்கு வாழப் போதித்த ஆதி இனம் தன்னைத் தானே மாய்த்துக் கொள்வது என்பது எப்பேற்பட்ட அவலம்?

அது போகட்டும், பொது கணக்கு வேண்டாம், ஒரு சுய கணக்கில் பேசுவோம், அம்மாவைப் பிரிவது எத்தனைப் பெரிய கனம் ? அப்பா இல்லாதிருப்பது எப்படிப் பட்ட வலி? அண்ணனோ தம்பியோ இறப்பது எப்பேற்பட்ட துயரம்? அக்காளோ தங்கையோ இறப்பது எதற்கீடான சுமை? அன்பு மனைவியோ’ கணவனோ’ குழந்தையோ’ காதலியோ’ நண்பனோ’ பகைவனோ யாராயினும் இருக்கட்டும், யாரை இழந்தாலும் இழப்பு இழப்பு தானே? வலி வலிதானே? மரணமென்பது மீண்டும் மாற்ற இயலா தண்டனை தானே என்பதைப் பற்றி யோசியுங்கள். மரணம் என்பது சாவது மட்டுமல்ல; பிறரைச் சாகடிப்பதும் என்று புரியுங்கள்.
—————————————————————————————

(4)
ஒரு மகள் தற்கொலை செய்துகொண்ட வீட்டின் இருண்ட நிலை என்பது ‘பிறக்கும் முன் சுமந்த கருவறை பிரிவுத் தீயில் கருகுவதற்குச் சமமில்லையா? கொலை ஒரு மூர்க்கத்தனம் எனில், தற்கொலை அதனிலும் மூர்க்கம். சுயநலத்தின் உச்சம். அப்படி தன்னை மட்டும் ஒருவர் வாழ்விலிருந்து விடுவித்துக்கொள்வதற்கா பத்து மாதம் வயிற்றில் கிடந்தோம்? யாரோ பார்த்து பிணம் என்று சொல்வதற்கா பெற்றோர் அத்தனைச் சிரமம் தாங்கி வளர்த்தார் நம்மை?

ஒரு குழந்தையை வயிற்றில் சுமந்து, பெற்றெடுத்து, வாயடக்கி வயிறு பொத்தி, ரத்தம் வார்த்து, சோர்வு தாங்கி, உறக்கமில்லா கண்களில் வைத்துக் காத்து, நெஞ்சிலும் நினைவிலும் எதிர்காலம் வரைக்குமான கனவுகளைச் சுமந்து வளர்த்து ஒரு ஆளாக ஆக்குவது எத்தனைப் பெரிய தவம்?
—————————————————————————————

(5)
ஒரு பிள்ளையை வளர்ப்பது என்பது தனது வாழ்வைத் தொலைப்பதற்கும் சமமென்று எண்ணிக் கொள்ளுங்கள். ஒவ்வொரு பெற்றோரும் தனது ஆசைகளை கனவுகளை வெற்றிகளை இழந்துதான் தனதுப் பிள்ளைகளின் ஆசைகளைச் சுமக்கின்றனர். ஒரு காதலி காதலனைப் பிரியும் வலி, ஒரு அண்ணன் தம்பி அக்காத் தங்கை நண்பனைப் பிரியும் வலி, ஏன் அம்மா அப்பாவை விட ஒரு குழந்தயைப் பிரியும் வலியெனில் என்னவென்று தன் பிள்ளைகளைப் பறிகொடுக்கும் ஒவ்வொரு தாயையும் தகப்பனையும் கேட்டால் அது எத்தகையதென்றுச் சொல்வர்.

ஒரு கூலிக்குப் போகும் ஏழையிடம் கேளுங்கள், அல்லது காடுகளை விற்கும் நிலாந்தாரைக் கேளுங்கள்; உங்களுக்கு பணம் பெருசா நிலம் பெருசா பெற்ற குழந்தைப் பெருசா என்று ? நிலத்தையும் உயிரையும் அப்படியே விடுவர்; குழந்தையே உள்ளத்தில் சுமப்பர் பெற்றோர். அப்படிப்பட்ட ஒரு குழந்தையை சாகவிடுவதென்பது எத்தனைக் கொடிது? அதைத் தானாகவே தேடிக்கொள்ளும் தற்கொலை எத்தகையக் குற்றம்(?)!!
—————————————————————————————

(6)
உண்மையைச் சொன்னால் தன்னைத் தானே ஈன்றுக்கொள்ள முடியாத நாம் நம்மை சாகடித்துக்கொள்ளவும் உரிமையற்றவர்கள்தான். உயிர்போகும் கடைசி நொடிவரை வாழ்வதற்கான தகுதி எப்பேற்பட்டோருக்கும் உண்டு. காதலைப் பிரிவதும் காதலைப் பிரிவதும் மட்டுமே வாழ்வின் பெரிய சோகமெனில் நம்மை முதன் முதலில் பெற்ற ஒரு தாயோ தந்தையோ அன்றே தன்னை மாய்த்துக் கொண்டுவிட்டிருக்கலாம்.

ஆனால் வாழ்க்கை வெறும் காதலோடு முடிவதில்லை, பிறப்பென்பது பல புனிதங்களைக் கொண்டது. பிறருக்காக வாழ்வது ஒரு சுகம், தன்னலம் விடுவதே உலகில் இலகுவாகக் கிடைக்கும் பெரிய நிம்மதி. பெற்று அனுபவிக்கத் தான் மனம் வேண்டும், அப்படி விட்டுக்கொடுட்டு ஒதுங்குவதில் இன்பமடையக் கிடைத்த இந்த ஒரு பிறப்பே நமக்கான பெருந்தவமாகும்.

உண்ணும் உணவிலிருந்து கொடுக்கும் பொருள்வரை எல்லாமே கேட்டதும் கொடுக்க வல்லது, நினைத்ததும் பெற முடிந்தது. ஆனால் உயிர் மட்டுமே கொடுக்கவோ பெறவோ இயலாதது உறவுகளே.. உயிர் ஒரு பிச்சை. வாழக் கிடைத்தது ஒரு வாய்ப்பு!
—————————————————————————————

(7)
ஒரு குழந்தைக்கு பிறந்ததும் இதயத்தில் ஓட்டை இருப்பது தெரியவந்து மருத்துவம் பார்ப்பதற்கிடையில் மேலும் பல கோளாறுகள் ஏற்பட்டு குழந்தை நோய்வாய்க்குள்ளாகி சாகக் கிடக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறது. பிறகெப்படியோ படாதப் பாடுபட்டு அந்தக் குழந்தையின் பெற்றோர் அதை காப்பாற்றி விடுகின்றனர். பின்னொரு கட்டத்தில் விளையாடிக் கொண்டே ஓடி ஒரு கிணற்றுக்குள் விழுகிறது அந்தக் குழந்தை. அப்போதும் அதைப் போராடி காத்துவிடுகின்றனர். பின்னொரு நாள் இரண்டுச்சக்கர வாகனம் மோதி தலையில் அடிபட்டுவிடுகிறது. அந்தக் குழந்தை தனது சுயநினைவை இழக்கிறான்.
அப்போதும் போராடி தனது சொத்தையெல்லாம் விற்று அந்தக் குழந்தையைக் காப்பாற்றுகின்றனர் பெற்றோர். பின் வளர்ந்து வருகையில் அம்மா நோய்வாய்ப் பட்டு இறந்துப்போகிறார். பின் அதே கவலையில் அப்பாவும் கொஞ்ச நாளில் இறக்கிறார். அநாதையான அந்தப் பிள்ளைக்கு ஒரு காதலி வருகிறாள், இருவருக்கும் திருமணம் ஆகிறது. பின் அவர்களுக்கு ஒரு குழந்தைப் பிறக்கிறது. குழந்தை இரத்த வாந்தி எடுக்கிறது, மருத்துவமனை தூக்கிக்கொண்டு ஓடுகிறார்கள். அங்கு தான் தெரியவருகிறது; முன்பே தனது மனைவிக்கும் கேன்சர் இருந்திருக்கிறது என்று. ஆறாத வலியில் வீடெல்லாம் ரத்த வாந்தி நிறைய நிறைய இருவரும் இரும்பி இரும்பி சாகிறார்கள். மீண்டும் தனிமரமாய் நிற்கிறான் அந்த இளைஞன்.

வாழ்க்கை வெகுண்டுப் போன ஒரு பிறவி, யாரை நினைத்தழுவான் அவன்? எங்கு திரும்பினாலும் மரணவாசனை, யாரை நேசித்தாலும் பிரிவின் அச்சம். பிறந்ததிலிருந்தே சாகக் கிடந்தவன் இப்போது வாழமுடியாமல் தவிக்கிறான்.
தனிமை கொல்லும் வதையில் சிக்கித் தவிப்பவனுக்கு ஒரேயொரு தெளிவிருந்தது. அதுதான் தான் எப்பொருட்டும் வாழவேண்டுமென்பது. இதலாம்தான் வாழ்க்கை, இதையெல்லாம் நாம் அனுபவித்தே தீரவேண்டும் எனில் தாங்கியும் ஆகவேண்டும், வாழ்வெனில் எல்லாம் நேரும், எல்லாம் கடக்கும், எதுவாயினும் அனுபவம் கொள்ளவேண்டுமென்பதை அவன் அறிந்திருந்தான்.

என் அம்மா சுமந்தாள், என் அப்பா வளர்த்தார், இந்த உயிர் அவர்கள் தந்த பிச்சை. இந்த உயிர் நான் நம்பும் தெய்வங்கள் தந்த வரம். அந்த வரத்தை பிறருக்கும் நான் வரமாகவே தரவேண்டும் என்றுப் போராடினான். உழைத்தான். எல்லோருக்கும் உதவினான். ஒரு சின்ன கடை வைத்தான், கடை பெரிய கடை ஆனது. பெரியக்கடை இரண்டாக மூன்றாகப் பெருகியது. மூன்று முப்பதாக மாறி எங்கும் அவன் பெயர் எல்லாம் அவனது ஆட்சி, யாதும் அவனுக்குச் சொந்தம் என்று ஊரெல்லாம் அவனுடையப் பெயர் பரவிவந்தது.

பின்பொரு மருத்துவமனையைக் கட்டினான். நோய்வாய்ப் பட்டோரையெல்லாம் காப்பாற்றினான். கேன்சர் வந்தால் காப்பற்ற ஆய்வு மையம் அமைத்தான். அவனுடைய அம்மாப்பா இறந்த இடத்தில் நூறு அம்மா அப்பா பிழைத்தார்கள். அவனுடைய மனைவி குழந்தை இறந்த இடத்திலிருந்து ஆயிரம் குழந்தையும் பெண்களும் காப்பாற்றப் பட்டனர். அவனின் ஒரு உயிர் பல உயிரைக் காப்பாற்றியது. அவன் இறக்கையில் எத்தனையோப் பேரை வாழவைத்துச் சென்றான். அவனின் கல்லறையில் தற்கொலை செய்துக் கொள்ளுங்கள் என்று எழுதிவைக்கப்பட்டது!
—————————————————————————————

(8)
ஆம்; தற்கொலை செய்துக் கொள்ளுங்கள். தன்னை தனது ஆசையை, தனது வலியை, தனது கோபத்தை, தனது சுயனலத்தைக் கொன்றுவிடுங்கள். பிறகு மட்டுமே உங்களால் பிறரைப் பற்றி யோசிக்க முடியும். பிறர்நலம் பற்றி சிந்திக்க இயலும். ஒரு தெரசா, ஒரு காந்தி, ஒரு கலாம், ஒரு காமராஜர் இன்னும் ஒரு ஒரு என்று எத்தனை நாளைக்கு அவர்களையே உதாரணமாய் காட்டப் போகிறோம்? நம்மையங்கே உதரணமாக ஆக்குங்கள். ஒரு வைரமுத்து போதாது, ஒரு பாலகுமாரன் சுஜாதா போதாது எல்லோரும் எழுதுங்கள். ஒலிவியாக்கள், கல்பனாசாவ்லாக்கள், பிரேமாக்கள், கிரண்பேடிகள் இன்னும் நிறைய தேவை நமக்கு. அவர்களை எல்லாம் எங்கிருந்து எடுக்கப் போகிறோம்? தனக்குள் தேடுங்கள். ஒரு சூப்பர்ஸ்டார் போனால் அடுத்த சூப்பர்ஸ்டாரை உருவாக்கிக் கொள்கிறோம், ஒரு காமராஜர் போனார் அடுத்த காமராஜர் ஏன் வரவில்லை ?
—————————————————————————————

(9)
அசிங்கமில்லை, சினிமா அசிங்கமில்லை, சினிமா நல்லதையும் சொல்லித் தருகிறது, கதைகள் நமக்குள் உதாரணப் புருஷர்களை வளர்கிறது. வரலாறு ஒரு கதையாகையில் முன்னோடிகள் நமக்கு மறைமுகமாய் வாழக் கற்றுத் தருகிறார்கள். ஆனால் எங்கே வாழ்கிறோம் நாம்? எங்கே முன்னேற்றம் கண்டோம் நாம்? அரசியல் மாறவேண்டும், இலக்கியம் மீள வேண்டும், சமுதாயம் திருந்தவேண்டும், சங்கெங்கும் முழங்க ஒவ்வொரு இளைஞனும் சாதிக்கவேண்டும்? சாதித்தோமா ???
ஒரு சூர்யாவால் முடிகிறது, அறுநூறு ஏழை மாணவர்களை தேடி எடுத்து அற்புத சாதனையாளர்களாக்க முடிகிறது. ஒரு நாளேடு விற்ற மாணவனால் தன்னை ஒரு நாட்டிற்கே விஞ்ஞானியாக ஆக்கிக்கொள்ள முடிகிறது. ஏன் ஒரு தேசத்திற்கே தன்னை ஜனதிபதியாக்கிக் கொள்ளமுடிகிறது. தன்னை கதற கதற கற்பழித்த அதே மண்ணில் தன்னை அந்த மண்ணிற்கே முதல்வராக ஆக்கிக் கொண்டாரே மாயாவதி, அவர்களை எல்லாம் நாம் ஏன் உற்றுப் பார்ப்பதில்லை?
—————————————————————————————

(10)
ஒரு மரணம் தன்னை கொல்லும்; தன்னோடுள்ளவரை நினைவிலேயே கொல்லும். ஆனால் ஒரு உயிர் நினைத்தால் கோடி பேரை வாழவைக்கும். செருப்பு தைத்த ஆபிரகாம் லிங்கன் அமெரிக்க ஜனாதிபதியாகும் போது, இந்தியாவில் பிறந்த ரத்தன் டாட்டா ரேஞ் ரோவர் கம்பெனியை இங்கிலாந்து சென்று வாங்க இயலும்போது, ஒரு பில்கேட்சால் உலக பணக்கார வரிசையில் முதலிடத்தைப் பிடிக்க இயலும்போது, நம்மூர் ஸ்ரீதர் சென்று அமெரிக்காவில் ப்ளூம்பாக்ஸ் காட்டி எல்லோரையும் தனக்குப் பின்னால் வரவைக்கும் போது; நம்மையெல்லாம் படிக்கவைத்து பட்டதாரியாக்கி நல்ல பேரெடுத்து பெரிய ஆளாகப் பார்க்க வளர்த்த நம் தாய் தந்தைக்கு நாமொரு தற்கொலையை ஏற்றிடாத வீரனாகவேனும் வாழ்ந்துக் காட்டவேண்டாமா?
வாழும் காலந்தோறும் மனதைக் கோவிலாக்கி அதில் அவர்களை தெய்வமாக வைத்து பூஜித்திடல் வேண்டாமா?
—————————————————————————————

(11)
உண்மையில் பெற்றோரைக் காட்டிலும் பெரிய தெய்வமில்லை. அவர்களுக்கான கோவிலையுள்ளே கட்டவேனும் தற்கொலையை நிராகரிப்போம். அங்ஙனம் பெற்றோரை மதிக்கும் ஒவ்வொருவரும் மனதுள் அவர்கள் ஈன்று கொடுத்த தன்னையும் மதித்தல் வேண்டும். காரணம், உயிர் பெரிது. வாழ்வது சுகம். வளர்ந்து வாழ்ந்துகாட்டுவது பெருமை. பெருமையோடு வாழ்வது என்பது பிறப்பை வெல்வதற்குச் சமம். வெல்வது என்பது நிலைப்பதும் ஆகும். நிலைப்பதென்பது மனிதற்கே வாய்க்கத் தக்கது. எனவே மனிதராய்ப் பிறந்த ஒவ்வொரும் நிலைக்க முயற்சி செய்யுங்கள். நிலைத்துக் காட்டுங்கள்.
—————————————————————————————

(12)
நம் கண்ணெதிரே அமிலம் ஊற்றப்பட்டு, மாதக் கணக்கில் சிதைந்த உடலாக வலியெல்லாம் தாங்கி, முகம் போனால் பரவாயில்லை, தான் அழகில்லை என்றாலும் பரவாயில்லை, நடக்கவோ பார்க்கவோ இயலாவிட்டாலும் கூடப் பரவாயில்லை, என்னை ஒரு பிண்டமாக வைத்திருந்தாலும் சரி’ உயிரோடு மட்டும் வைத்திருங்கள் போதும் என்று கேட்டாளே வினோதினி நினைவிலிருக்கா?

எப்படியேனும் என்னைக் காப்பாற்றி விடுங்கள், நான் எனது அப்பாவைக் காப்பற்றவேண்டும் என்று வலிக்க வலிக்க கெஞ்சினாளே அந்த அப்பாவிப் பெண் வினோதினி, ஆனால் கிடைக்கவில்லையே அவள், விட்டுவிட்டோமே நாம் துடிக்கத் துடிக்க அவளை.
அந்த ஒரு உயிரை நம்மால் நிறுத்த முடியவில்லையே. ஆனால் அதுபோல், விலைமதிக்க முடியாததொரு உயிரைத் தானே நாமெல்லோரும் நமக்குள் வைத்திருக்கிறோம்? அவளுக்கு கிடைத்திடாதந்த உயிர்தானே நம்மிடம் இருக்கிறது. அப்படிப்பட்ட உயிரை ஒரு நொடியில் விடுவதைக் காட்டிலும் ஒருத்தருக்காகவாவது வாழ்வது உத்தமம் இல்லையா?
—————————————————————————————

(13)
சாவென்பது பெரிய வேலையில்லை, சற்று மூச்சு பிடித்தால் ஜீவன் போகும். அதே மூச்சை உள்ளே பிடித்துக்கொள்ளுங்கள். வலியை பொறுத்துகொள்ளுங்கள். சாக நினைக்கும் கனத்தை விட்டொதுக்குங்கள். சாக மாட்டேன், சாக மாட்டேன், சாக மட்டும் கூடாது, வாழனும், வாழனும், வாழ்வதற்கென்ன வழி என்று யோசியுங்கள்.

அப்படி வாழவே முடியாத நிலை ஒன்று வருமெனில்; சாகவே துணிந்தப் பிறகு, வாழ்க்கையை வெல்வதற்கு ஏன் துணியக்கூடாது?

மனசு ஒரு கழுதை மாதிரி. பசியெடுத்தால் கத்துவதைப் போல் வலியெடுத்தால் அழும் அவ்வளவுதான். அதற்குக் கொஞ்சம் தீனி போட்டு சுமக்கச் சொல்லுங்கள்; இந்த உலகத்திற்கான அத்தனைச் சுமையையும் ஒருங்கே மனசு சுமக்கும். எனவே மனதை எதிலும் விட்டுவிடாதீர்கள். மனம் சொல்வதைக் கேட்க நேர்கையில் கொஞ்சம் அறிவு சொல்வதையும் கேளுங்கள். சாவது என்பதைத் தவிர மீதியைச் சிந்தியுங்கள்.
—————————————————————————————

(14)
அப்படியொரு வேளை, சாகத்தான்வேண்டும் வாழ்வதற்கென்று இனி ஒன்றுமேயில்லை யென்று தோன்றிவிட்டால், அந்த மனநிலையை ஒரு ஒரு நாளைக்கு மட்டுமேனும் மாற்றி வைத்துவிட்டு, சரி நாளைக்குப் போய் இறந்துவிடுவோம் என்று எண்ணிக்கொண்டு, அந்த முன்னொரு நாளில் எங்கேனும் தெருவில் உதவிக்காக அலையும் ஒரு பத்துபேருக்கு உதவி செய்ய முயற்சித்துப் பாருங்களேன்?

மறுநாள் சாவது எத்தனைப் பெரிய முட்டாள்தனமென்று புரிந்துக் கொள்வீர்கள். அப்படி பல உயிர்கள் பிறரின் உதவிகளை எதிர்நோக்கித் தான் இம்மண்ணில் ஒவ்வொரு ஜீவனும் திரிகிறது.

ஒருவருக்கு ஒருவர், உனக்கு நான் எனக்கு நீ என்று அணைத்துக்கொண்டு வாழும் வாழ்க்கையிது. அருகருகில் நின்று தோளுக்குத் தோள் தந்து நானிருக்கேன் என்று சொல்லும் வார்த்தை யானைபலத்தைத் தரக்கூடியது. அதை ஒருவருக்கு நீங்கள் கொடுக்க முடியுமெனில் நீங்களும் நிச்சயம் வாழவேண்டியவர்!
—————————————————————————————

(15)
அப்படியும் இல்லை, என்னால் யாருக்கும் உதவியில்லை என்று எண்ணினால், அசையும் மரம் யாருக்கென்று அசைகிறது, காய்க்கும் கனி யாருக்கென்று பழுக்கிறது, மலரும் பூக்கள் யாருக்கென்று பூத்து தளர்ந்து வாடி உதிர்கிறது?
மலர்வதும் உதிர்வதும் அதற்கு யதார்த்தமெனில் பிறகு பிறப்பதும் இறப்பதும் கூட நமக்கும் யதார்த்தமாக நிகழவேண்டுமில்லையா? மரங்கள் நிற்கும்’ காய்க்கும்’ காய்ந்துபோகும்; எனக்கு வாழ பொருட்கள் தேவை, வாழ்வதற்கு வழிகள் தேவை என்று எண்ணுவீர்களேயானால், இன்னுமொரு நாள் ஒரு ஊரைச் சுற்றி வாருங்கள்; தெருத் தெருவாய் காய்கறி விற்கும்’ தயிர் மோர் விற்கும்’ மீன் கருவாடு விற்கும்’ மாம்பழம் கீரை விற்கும் வயதானப் பாட்டிகளை தாத்தாக்களைப் பாருங்கள், ஆதரவற்றோரைப் பாருங்கள். ஏழெட்டு வயதில் கிளாஸ் கழுவி இலையெடுத்துப் போட்டு மேஜை துடைத்து தன்னைப் பெற்றவளுக்கு ஒரு நூறு ரூபாயையவது கொண்டுபோய் தரும் சிறுபிள்ளையைப் பாருங்கள். கல்லுடைத்து, கார் தொடைத்து, வீட்டு வேலை செய்து, தெருவில் பொருட்கள் விற்று கிடைக்கும் பணத்தில் தனது வயிற்றையும் கழுவி பெற்றெடுத்த குழந்தைகளையும் காப்பாற்றும் கைம்பெண்களைப் பாருங்கள்; அவர்களுக்கெல்லாம் வாழ வழி கொடுத்த பூமி உங்களுக்குக் கொடுக்காதா?
—————————————————————————————

(16)
வெறும் தோல்வியோ விரக்தியோ கோழைத்தனமோ கொண்டுசென்று விடுவதல்ல நம் உயிர். நம்மால் எல்லாம் முடியும். மனிதனால் மட்டும் எல்லாம் முடிகிறது. எதுவாக ஆகவேண்டுமோ அதுவாக ஆகமுடிந்த பிறப்பு மனிதப் பிறப்பு. தெருவில் தாகத்தோடு அலையும் நோய்வாய்ப்பட்ட நாயிற்கு ஒரு குவளையில் தண்ணீர் ஊற்றிப் பார்த்தால் தெரியும் அது வாஞ்சையாக குடிக்கும் தாகத்தில் வாழ்க்கை எத்தனை ருசியாக உள்ளது என்று.

வாழனுங்க, ஒவ்வொருத்தரும் வாழனும். போட்டியில் பிறரும் வெல்ல மனதையும் திறமையையும் பெருந்தன்மையையும் பெற்று, பொறாமையின்றி விட்டுக் கொடுத்து, அன்பு செய்து, தானம் தந்து, பிறருக்கு உதவி, நன்மையை போதித்து, அனுபவத்தைப் பகிர்ந்து, ஆற்றலை வளர்த்து, மூடத்தை ஒழித்து, தெளிவைப் பெருக்கி; வாழ்தலை ஒரு வரமாக எண்ணி வாழனும்.

இறக்க இருப்பதை யாராலும் தடுத்துவிட முடிவதில்லை, இறப்பு அது வரும்போது வரட்டும். அதுவரை வாழ்ந்துக்கொண்டிருப்போம். வாழும் வரை சாதிக்க முயல்வோம். சாதிப்பதை பிறருக்கும் கொடுப்போம். பிறர் வாழ நாமும் வாழ்வோம்!
—————————————————————————————

(17)
நில் என்றால் நிற்கவும் செல் என்றால் செல்லவும் இயற்கை நமக்கென காத்துக் கிடக்கிறது. அதை புயலாகவும், வெள்ளமாகவும், வெடிக்கும் எரிமலையாகவும், பிளக்கும் பூகம்பமாகவும் மாற்றுவது நாம் தான். நமது ஒழுங்கீனம் தான்.
அதையெல்லாம் முதலில் சரிசெய்துவிட்டு பிறகு சாவதைப் பற்றி யோசியுங்கள். மரணம் நமை கொல்லும்வரை நாம் தற்கொலையையாவது கொன்றுகொண்டிருப்போம். நம் வாழ்தலில் பசுமையாய் பூத்து குலுங்கட்டும் நம் பூமி. பட்டினியின்றி வாழட்டும் நம் பிள்ளைகள், படிப்பறிவோடு வளரட்டும் இச்சமுதாயம், பேராற்றலை நிறைத்துக்கொண்டுள்ள மனிதர்கள் முழுமையாய் தம்மையுணர வாழ்தல் வேண்டும்.
—————————————————————————————

(18)
கடவுள் என்பது யாது, கடவுள் எனில் என்ன, கடவுள் என்றால் அது யார், கடவுளுக்கும் நமக்குமுள்ள இடைவெளி எத்தகையது, கடவுள் வழிபாட்டின் காரணமென்ன, அது எந்தளவில் அவசியம், எவ்வழியில் சாத்தியம், எதற்கது வேண்டும், எதையது சாதிக்கும், எப்படி மனிதருக்கு வலிக்காமல் பிற உயிரை வருத்தாமல் அதை அணுக இயலுமென கண்கள் விரிய விரியக் கிடைக்கும் பெரு அதிசயங்களை காணக் கிடைத்த உடம்பிது. அப்பேற்பட்ட உடம்பை மண்ணில் புதைக்கும் முன் நம் உயிர் ஒரு தெளிவைப் பெற்ற நல்லதொரு உயிரின் உடம்பாக அதைப் புதைப்போம்.

நம்மொரு உடலை பல விதைகளுக்கான உரமாகப் புதைப்போம். கண்பார்வையில்லா நிலை, காது கேட்காத கொடுமை, காலூன்றி நிற்காத முடம் என எதையும் திருப்பிப் போட்டுப் பார்ப்போம், அங்கே அதற்கு மாறான ஒரு பெரிய வெற்றியை இயற்கை நமக்காக வைத்து காத்துக் கொண்டிருக்குமென்று நம்புவோம். பிறத்தல் அரிது எனில் இறத்தலும் அரிது தான் அது பிறப்பு வாய்த்ததைப் போலவே வாய்க்கையில் சிரித்துக் கொண்டே கண்மூடுவோம். இருக்கும் வரை இனிப்பும் கசப்புமான வாழ்வை ருசித்து வாழ்வோம்..

வாழ்க்கை நமக்கு இன்னும் நிறையப் பாடங்களைக் கொடுக்கும். நாம் கற்ற பாடம் நம் தலைமுறைக்கு வெளிச்சத்தை ஏற்படுத்தும். வெளிச்சத்தில் எல்லோரின் வாழ்வும் பிரகாசிக்கும். நன்மையின் பிரகாசத்தில் வீசும் காற்று மனிதரைக் கொல்லாது. மனிதன் நீடு வாழ்வான். உயிர்கள் நீடு வாழும். வாழவேண்டும்..

வாழ்வை அறுத்துக் கொள்ளும் மரணம் தீது. தற்கொலை கொடிது. தற்கொலை யாரையும் தனியே கொல்வதில்லை; நம்புங்கள்… வாழ்வதற்கான வழிகள் ஆயிரம் உண்டு. அதில் ஒன்றையேனும் தேட மனது வேண்டும். மனதில் உறுதி வேண்டும். உறுதி நம்பினால் தான் வரும். நம்புங்கள், உங்களையும் உங்களை நம்பி உங்களுக்காய் இருப்போரையும் இந்த உலகையும் இயற்கையையும் நம்புங்கள். நம்பினோருக்கு நான்கு திசையும் அவரவரின் இரு கைகளுள் அடங்கிப்போகும். அடங்கிப்போக வாழ்த்துக்களும்.. வணக்கமும்..
—————————————————————————————
வித்யாசாகர்

Posted in வாழ்வியல் கட்டுரைகள்! | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்