கவிதாயினி திருமதி ராணிமோகனின் கவிதைகள்..

ஈழத்தை அவள் பார்ப்பாள்; மோனா லிசா!!

பெண்களில் பேறு பெற்றவளே
பேசாமல் பேசும் ஓவியமே
சித்திரதிற்குள் சிதைந்திடாத, பேரழகே
நீ கற்பனையில் விளைந்தவள் அல்ல;

லியானர்டோ டாவின்சின் கண்களில்
பதிந்து, இதயத்திற்குள் பிம்பமாகி பிறந்தவள்.

பாரிஸ் நகரில் –
உன்னை ஒளிந்திருந்து பார்க்க நினைப்பவர்களையும்
நீ ஓர கண்களால் பார்த்து விடுகிறாயமே..,

அப்படி என்ன உன்னிடம் …சிறப்பு?
ஓ…..அது தானோ ….உன் புன்னகையால்
நாங்கள் கொண்ட வியப்பு…?

நீ புன்னகைக்கிறாயா…?
அல்லது காண்பவர்களுக்கு
புது மொழியை தருகிறாயா…?

ஒவியமதில் ஒளிவீசும் ஒப்பற்ற தாரகையே….
ஒப்பு கொள்கிறோம் –
உன்னை வரைந்தவர் ஓர் மாமேதையே..

நான் உன்னை வைத்து கவிதை சொல்லவா?
நீ டாவின்சியின் மூன்று வருட காதலி அல்லவா?
வரலாற்று ஜன்னல் வழி உலகமே உனை பார்குதடி
யாரைத்தான் தேடுகிறாய் இனியேனும் சொல்வாயா..?

தலைகுனிந்த தூரிகையில் –
தலை நிமிர்ந்த உன் தைரியம் கண்டேன்;

அதை உனக்கு பெரியோர்கள் ஊட்டி இருப்பார்கள்
எங்களுக்கோ பெரியார் …வந்த பின்புதான்….. அது
போதிக்கவேப் பட்டது;

நீ புத்திரசோகத்தில் இருந்த போதும்
உனை மோனா லிசா என்கிறார்கள்
எங்களையோ ! நீ மலடி சா… என்கிறார்களே;

உன் சின்ன சிரிப்பிற்காய் –
நூற்றாண்டுகளை கடந்தவள் நீ,
நாங்கள் சிரித்துக் கொண்டே –
வீதி கூட தாண்ட முடிவதில்லை..

உனை அழகாக்க –
நாற்பது அடுக்கு வண்ணங்கள் பூசினார்களாம் ..
எங்கள் மீதோ ..
வர்ணங்களை அல்லவா பூசி இருக்கிறார்கள்;

நீ காதலியா, கள்ளக்காதலியா,
கண்ணியா, கழிந்தவளா
இப்படி ஆயிரம் பட்டம் உனக்கு – ஆனால்
டாவின்சிக்கு ஓரே ஒரு பட்டம் மட்டும் தான்
சிறந்த ஓவியன் என்று, உன்னால்;

இன்னும் நீ மௌனமாக இருந்தால்
நம் மீது மேலும் மேலும் சாயம் பூசி
பண்பாடு என்று சொல்லி பயன்படுத்துவார்கள்
எழுந்து நில்; எழுச்சி கொள்; இனியேனும்
தமிழச்சி சொல் கேள்!

உன் மீது காதலை விட
எனக்கு கோபம்தான் அதிகம்
காரணம் தெரியுமா ……

இத்தாலி இளவரசியே மோனா லிசா..
உன் தேசத்துக்காரி தான்
என் சொந்தங்களை முள்வேலிக்குள் முடக்கியவள்.,

புலிக்கொடி மீது
பழிக்கொடி ஏற்றிவிட்டவள்..,

எங்கள் குலக்கொடி செங்கொடியும்
கம்பிக்குள் வாடும் என் தம்பிகளும்…
ஆயிரம் ஆயிரம் தமிழச்சிகளும் இதோ புறப்பட்டுவிட்டோம்….

இமைக்காமல் பார்த்து கொண்டிருப்பவளே’ மோனா லிசா………….
நாங்கள் இல்லாமல் போனாலும் – விரைவில் எங்கள்
தனி ஈழத்தைப் பார்க்கும் –
புண்ணியம் உனக்கு வாய்க்குமடி!!

கவிதாயினி ராணிமோகன்

Posted in நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் | Tagged , , , , , , , , , , , , , , , , , , | 13 பின்னூட்டங்கள்

குவைத்தின் ஈரக் காற்றில் எழுப்பப்பட்டன, மாவீரர்களுக்கான மீண்டுமந்தக் குரல்..

யிரம் கைகளை விரித்துப் பறந்துக் கொண்டிருந்த பாலைவனக் காற்றின் குளிரின் நடுக்கத்திற்கிடையே அந்த இதயங்கள் விடுதலையின் வெப்பத்தையே முழுக்கச் சுமந்துக்கொண்டு மாவீரர்களைப் பற்றிய நினைவுகளையெல்லாம் அலசி’ மீண்டும் கேட்போர் மனங்களில் விதைத்துக் கொண்டிருக்க, உணர்வுகளில் தகித்துத் தகித்து ஈழக் கனவினை எல்லோர் எண்ணத்திலும் சமைத்துக் கொண்டிருந்தது அந்த நிகழ்வு.., அந்த அரங்கம்.

குவைத் தமிழர் கூட்டமைப்பின் சார்பில், நேற்று மாலை ஐந்து மணியளவில் துவங்கப்பட்டு இரவு ஒன்பதரை மணிவரை சகோதரி செங்கொடி நினைவரங்கத்தில், மாவீரர்களின் நினைவெழுச்சி நாள் நிகழ்த்தப்பட்டது. நிகழ்ச்சியின் முதலாக கவிஞர் திரு.விருதைப் பாரி அவர்கள் வரவேற்புரையாற்றித் துவங்கிவைக்க, அய்யா திரு. தமிழ்நாடன் அவர்கள் ஈகைச்சுடர் ஏற்றி மாவீரர்களை நினைவுக் கூற, கவிஞர் திரு. முனு சிவசங்கரன் அவர்கள் மாவீரர் உரையாற்றி அமர நேரம் மெல்ல மெல்லக் கடந்து மனதில் விடுதலைத் தீபமென ஒளி வீசிக் கரைந்தது. இறுதியில் பேச எண்ணியவருக்கெல்லாம் உணர்வு பகிரும், கருத்துப் பகிரும் வாய்ப்பினை அளித்த ஒரு மேடையாக நிறைவுற்றது அந் நிகழ்வு.

அரசியல் போக்கு குறித்தும், ஈழ விடுதலைப் போரில் நிகழ்ந்த போர்க்குற்றம் பற்றியும், இழப்புப் பற்றியும், எழுச்சிக் குறித்தும், இனி செய்யவேண்டியது குறித்தும் பேசப் பேச சுடர்விட்டெரிந்த எண்ண அலைகளில் கைக்கோர்த்துக் கொண்டது அந்த ஒற்றுமையென்னும் மீப்பேறு ஆயுதம்.

இடையே, தமிழர் ஆங்காங்கே சீர்குலைந்துக் கிடப்பதற்கான காரணங்களை ஒற்றுமையின்மையின் ஒற்றைப் பொருட்டெனப் பேசி எடுத்துரைத்தார் ஐயா திரு. தியாகு அவர்கள். இனம் குறித்த அக்கறையும், தமிழர் விடுதலைக் குறித்த உணர்வுப் பெருக்கும், ஈழமக்களின் வலியும் வலிக்கான காரணமுமென்ன என்பதை தொலைதூரத்திலிருந்து இணையம் வழி வந்து சிந்திக்கச் சொல்லி மாவீரர்கள் தின சிறப்புரையாற்றி விடைப் பெற்றார். அவரின் ஒவ்வொரு எண்ணமும் வார்த்தைகளாய் சிதறி எல்லோரின் மனதிலும் பதிந்துக் கொண்டதை’ வரிக்கு வரி எழுந்த கரவொலி சப்தம் சாட்சிசொல்லிப் போனது.

அடுத்து இணையம் ஊடாகப் பேசிய சர்வதேச தமிழீழ அரசின் துணைப் பிரதமர், ஐயா திரு. உருத்திரபதி சேகர் அவர்கள் ஈழத்தில் நிகழ்ந்த பேரிழப்பு குறித்தும், ஒரேயொரு நம் வீரர்கள் கூட நம்மிடமிருந்து பிரிந்துச் சென்றிடவில்லை, மாறாக நமக்குள்ளேயே உணர்வுகளாய் உறைந்துக் கிடக்கின்றனர், அவ்வுணர்வினை மீட்டு அடுத்தப் பயணத்தை நம் விடுதலை நோக்கி நடைப்போடுவோம்’ காற்று உடன் வருவதுபோல் அவர்களும் நம்மோடு நெருங்கியே இருப்பார்கள் என்று குரல் நெருடிச் சொல்லி விடைக் கொண்டார். வந்த உறவுகள் அவரின் வார்த்தையின் ஈரத்தில் சற்று மனம் நெகிழ்ந்துப் போயினர்.

அடுத்தடுத்து.., தோழர்கள் திரு. ராமன், திரு. மணிகண்டன், திரு. முத்து, திரு. ரகுநாதன், திரு.செந்தில்குமார், திரு. மாதவன், திரு. சேகர், திரு. வின்சென்ட், கவிஞர் திரு. சிவமணி, கவிஞர் திரு. முனு.சிவசங்கரன், கவிஞர் திரு. சத்யா, கவிஞர் திரு. வித்யாசாகர், கவிஞர் திரு. பகலவன் என அவரவர் சார்ந்த இன உணர்வினை, கோபத்தை, உள்ளே அழுதுக் கொண்டிருக்கும் தன் இனத்தின் மீதான பற்று கொண்ட அக்கறையினை உரையாகவும் கவிதையாகவும் பகிர்ந்து, வந்தோர் போய் ஒரு நூறு பேரிடமேனும் சொல்லி அவரவர்க்கான உணர்வை அவரவருக்குத் தரத்தக்க சிறப்பாக பேசி மாவீரர்களை நினைவுக் கூர்ந்தனர். விடுதலை உணர்வை உதிர ஆழம்வரைப் பதித்தனர்.

இறுதியில், எந்த ஒரு அரசியல் கட்சிசார் வாசனையோ, எவரின் சுயநலப் பொருட்டோ இன்றி ஒற்றை மனிதரின் மொத்த முயற்சியில் சேர்ந்த ஒரு இனத்தின் ஒற்றுமைக்கான கூட்டம் நாங்களென தங்களைப் பற்றிப் பேசிக் கொள்ளாமல்’ பதிவுசெய்தவிதமாய் நிறைவுற்றது இம் மாவீரர்களின் நினைவெழுச்சி நாள் கூட்டம்.

இதற்கிடையே தினமலர் நாளிதழைப் புறக்கணிப்போம் என்று உறுதியேற்று கவிஞர் விருதைப் பாரி முழங்க’ அதை ஏற்றுக் கொள்ளும் விதமாக தமிழச்சி செல்லம்மா வித்யாசாகர் தன் முதல் கையெழுத்தினையிட’ அரங்கம் அதையும் பின்தொடர்ந்து, மீண்டும் நாளை விடியப் போகும் சூரியன்’ மறையும்விதமாகக் கூட்டம் கலைந்து, அங்கே வெற்றிடத்தையும், அந்த வெற்றிடத்தில் கறைபடியா எம் உறவுகளின் என்றோ வடிந்த ரத்தங்களின் ஈரத்தையும் பூசிப் பூசி, விடுதலையின் உயிர்ப்பை அங்கே மிச்சம் வைத்துக்கொள்ள’ எல்லோரும் அங்கிருந்து தமிழரென்னும் இனமான உணர்வோடு விடைக் கொண்டோம்!

வித்யாசாகர்
(26.11.2011)

Posted in அறிவிப்பு | Tagged , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

காற்றுவீசும் திசையெல்லாம் நின்று நீயும் வாழ்வாய் தமிழினமே..

மிழினமே..
தமிழினமே..
என் தமிழினமே..
விண்ணை விரல்நுனியில் சுமக்கவும்
உயரே பறந்து வான்முட்டி நிற்கவும்
என்றோக் கற்ற தமிழினமே…

காலத்தை காற்றுப் போல
கடந்துவந்துள்ளாய், உலகின் நாகரிகத்தில்
உயிரெனக் கலந்துள்ளாய், ஊரின் பேரின்
வாழ்தலின் இடுக்களில் மொழியாய் நிறைந்திருக்கிறாய் தமிழினமே…

தமிழினமே…
தமிழினமே…
என் தமிழினமே…
எங்கிருக்கிறாய் இன்று தமிழினமே..
யாருக்கு கீழ்நின்று உன் மூச்சை விடுகிறாய்
யாரை நம்பிக் கொண்டு இன்னும் உனை யிழக்கிறாய்..
கடல் தின்றதில் கலங்காத நீ
காற்றுப் புயலென வீசியதில் கலையாத நீ
பூமி இரண்டெனப் பிளந்தபோதும் உள்ளடங்கிவிடாத நீ
இப்போது எங்கிருக்கிறாய்..
எங்கிருக்கிறாய் என் தமிழினமே..

உன் பாட்டன் முப்பாட்டன் ஆண்ட மண் இன்று
உனதில்லை
உன் தாய் உன் தந்தை கொண்டிருந்த மாண்பு
இன்று உனதில்லை
நீ கொண்டாடிய கலை வீரம் விளையாட்டு
வாழ்க்கைக்கான கல்வி
இன்று உனதில்லை
உன் மொழி உன் இனம் பற்றிய சிந்தை
நீ வாழ்ந்த வரலாறு
நீ படைத்த சாதனைக் குறித்த அக்கறை
ஒன்றுமே யின்று உன்னிடமில்லையே என் தமிழினமே..

எவனோ அடிக்கிறான்
எவனோ கொல்கிறான்
எவனெவனோ உன்னையழிக்க
உலகக் கைபிடித்துத் திரிகிறானே ஏனென்றுக் கேட்டாயா
எதற்கென்று யோசிக்கவேனும் செய்தாயா?

நீ யார் ?
உன் வீரமென்ன?
உன் தீரமென்ன ?
நீ கொண்ட திறனென்ன ?
நீ அசைந்தால் இந்த உலகம் சற்று அசைந்துக்கொடுக்க வேண்டாமா?
நீ நில்லென்றால் நிற்கவும்;
போவென்றுச் சொன்னால் போயிருக்கவும்வேன்டாமா?
அதற்கு மாறாக இருக்கிறாயே என் தமிழினமே
எல்லாம் இழந்து நிற்கிறாயே தமிழினமே..

வெறுமனே நாலுபேர் போகும் தெருவில்
நடக்கும் நீயும் ஒன்றாய் ஆனாயே..
யாரோ சிரிக்கும் சிரிப்பிற்குப் பொருளும்
எவனோ முறைக்கும் முறைப்பிற்கும் பயமும் நீயாய் ஆவதா?

நான்குபேர் செத்தாலும்
ஐந்தாவதாய் முலைத்தவரில்லையா நாம்?
நம்மையழிக்க எந்த கொம்பனுண்டு?
எவனுக்கும் திராணி போதாது தமிழினமே நீ
கூடி நின்றால் அழிக்க;

எப்படி அடிப்பது
எதை தடுப்பது
யாருக்கு அஞ்சுவது
யார்யாரை மதிப்பது
எப்படி வாழ்வதென்று என்றோ எழுதி இலக்கியமும் செய்தாயே
இன்றேன் உனக்கு உலகம்
விரோதமாய் ஆனது தமிழினமே..

கிழக்குப் போனால் இருக்கிறாய்
வடக்குத் தெற்கிலிருக்கிறாய்
மேற்குமெட்டு திசையிலும் நீயிருக்கிறாய் தமிழினமே
இருந்தும் ஒரேயொரு சட்டை யின்றி
பார்ப்போருக்கு நிர்வானமாய் தெரிகிறாய்;

வா.. இதோ பறந்துக் கிடக்கும் நம் தமிழரின்
ஒற்றுமை என்னும் ஒன்றை எடு
அதை துணிவென்னும் நூலால் தை
நம்பிக்கையின் நிறம் மட்டும் தோய்த்து
காலத்திற்கும் அவிழாத சட்டையென உடுத்து;

பார்ப்போர் கண்ணை உறுத்தாத உன் வளர்ச்சியில்
உலகம் மீண்டும்புது நாகரிகத்தை
உன்னிடமிருந்து கற்கட்டும்;

எமை இத்தனைக் காலம்
மண்ணில் புதைத்துவைத்திருந்த தேசங்கள்
எம் வாழ்தல் கண்டு தன் தவறுக்கு வருந்தட்டும்;

காற்றுவீசும் திசையெல்லாமென் தமிழர்
அடிமைத் தனமின்றி வாழட்டும்;

கத்தி கதறி அழத தெருக்களெல்லாம்
எம் சுதந்திர கீதம் ஒலிக்கட்டும்;

எமைக் கொன்று கொன்று புதைத்த
மண்ணில் காலத்திற்கும் அது
நிகழாத வரம் வாய்க்கட்டும்;

பசுமை பொங்குமொரு வாழ்வை
உலகம் கண்டு மெச்சட்டும்..

சின்னக் குழந்தைக்குக் கூட
நாம் தமிழரென்னும் பெருமிதம்
ரத்தத்தில் கலந்திருக்கட்டும்;

அந்த பெருமிதத்தின் நிமித்தம்
உயிர்விட்ட நம் மாவீரர்களின் மனசு
நாம் சுவாசிக்கும் சுதந்திரக் காற்றால்
என்றென்றும் நிறையட்டும்!!

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.. | Tagged , , , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

மூன்றாம் உலகப் போரைத் தடு; அணு உலைகளை மூடு (சிறுகதை)

முக்கியச் செய்திகள் வாசிப்பது நளாயினி சுப்ரமணியம். கடந்த மூன்று தினங்களாக காஸ்மீர் தலைநகரின் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தனது படைகளை நிறுத்திக் கொண்டு போருக்குத் தான் தயாராக இருப்பதாக மார்தட்டி வருகிறது. அதைப் பற்றி வருத்தமடைந்த அரசுதரப்பு போர் குறித்து ஆலோசித்து வருவதாகவும், போர் இரண்டு நாடுகளிடையே பெரும் சேதத்தை விளைவிக்கும் என்பதைக் கருத்தில்கொண்டும் மறுப்புத் தெரிவித்துள்ளது

கிரிக்கெட் இடையே வந்த செய்தியைக் கேட்டுவிட்டு சற்றுக் கொதிப்போடு சத்யா அங்கிருந்து எழுந்து வீடுநோக்கிப் புறப்பட்டான்.

பாகிஸ்தான் தில்லு தில்லு தாண்டா”

“பத்தியா, வீட்டுக்குள் வரும்போதே இவன் இப்படி எதனா ஒரு கதையோடு தான் தம்பி வருவான்”

“ஹேய்… சத்யா.., வா வா உனக்காகத் தான் காத்திருக்கிறேன்”

“நீ எப்போ மச்சி வந்த?”

“அம்மாக் கூட பேசினதுல நேரம் போனதே தெரியலை சத்யா, நான் வந்து ஒருமணிநேரம் ஆகப் போகுது”

“அப்படியா அதை விடு, விஷயம் தெரியுமா?” சற்று ஆச்சர்யம் கலந்து அதிர்சியடைவதுபோல் கேட்டான் சத்யா

“என்ன, என்ன விஷயம்? ”

“வெச்சான்டா பாகிஸ்தான் காரன், இந்தியாவிற்கு ஆப்பு” வெளியிருந்து வந்த சத்யா ஏதோ ஒரு இன்றைய வாதத்தோடு ஆசாத்தின்முன் வந்து நிற்க அதுவரை ஆசாத்திடம் பேசிக் கொண்டிருந்த சத்யாவின் தாய் எழுந்து சமையலறைக்குள் போனாள். சத்யா அவளுக்குப் பின்னாலேயேச் சென்று தட்டில் கொஞ்சம் சிற்றுண்டி வைத்துச் சாப்பிட்டுக் கொண்டே வந்து ஆசாத்தின் பக்கத்தில் அமர்ந்தான்.

“ஆசாத் தம்பி நீயும் எதனா சாப்பிடேம்பா..???!”

“இல்லமா, நீங்க கேட்டதே மகிழ்ச்சி, வேண்டாம்”

“என்னப்பா நீ, நான் தான் இவ்வளவு நேரமா குடிக்க தண்ணிக் கூட கொடுக்காம பேசியிருந்திருக்கேன் நீயாவது சொல்லக் கூடாதா, சரி கொஞ்சம் தேனிர் மட்டுமாவது குடியேன்..”

“பால் சேர்க்காம கருந்தேநீர் வேணும்னா கொஞ்சம் கொடுங்க.. சர்க்கரைக் கூடுதல் வேண்டாம்..”

“சத்யா உனக்குடா?”

“குடுமா……… சர்க்கரை நிறையப் போடு, பால் திக்கா ஊத்து..”

“என்ன வேணும் காப்பியா டீயா?

“எதனாஒன்னு, நோ.. நோ.. பெட்டர் வித் காஃபி”

சத்யா சொல்லி நிறுத்துவதற்குள் ஆசாத் சத்யாவினுடைய அம்மாவை நோக்கி “என்னம்மா என்கிட்ட மட்டும் சுத்த தமிழ்ல, தேநீர் வேணுமான்னு கேட்டீங்க, அவன் கிட்ட டீயா காப்பியான்னு…. கேட்குறீங்களே ???”

“உன்னை பார்த்தாதாம்பா தமிழ் தன்னால வருது, இவன் மூச்சுக்கு முன்னூறுதடவை ஆங்கிலம் கலந்து தான் பேசுவான், அவுங்கப்பாவுக்கு பெருசா மகன் ஆங்கிலத்துல பீத்தனும்னு ஆசை,  எப்படியோப் போகட்டும் கழுதை, தமிழ் இனிதுன்னு பேசினா தானே தெரியும்,  பேசாத ஜடங்களுக்கு எப்படிப் புரியும்”

“ம்மா… போதும் விடும்மா…’ போ.. போயி டீ போடு.., நீ சொல்லுடா மச்சி”

“செய்தி பார்த்தியா சத்யா”

“நானா, நான் நியூஸ் பாக்குறதா???!! நெவர்.. அந்தப் பழக்கமேக் கிடையாது, ஒரே அரசியல் கிருமீஸ்”

“ஏன் ஆசாத் தம்பி அவனைப் போய் செய்தி பத்தியெல்லாம் கேக்குறியே’ உனக்குத் தெரியாதா அவனைப்பத்தி..”

“ஆமா, இந்தம்மாவுக்கு உலக செய்தி என்னன்னு ஒத்த விரலு விடமாத் தெரியும்னு நினைப்போ, பேசாம டீ’யப் போட்டுக் கொண்டு வா’ இல்லைனா அப்பாவுக்குப் போன் பொட்டு வரச் சொல்வேன்..”

“டேய் சத்யா என்னடா இது அம்மாகிட்டப் போய் இப்படி?”

“நீ சொல்லுடா மச்சி பாகிஸ்தான் பத்தித் தானேக் கேட்ட”

“ஆமா(ம்)….”

“அவன்தாண்டா கொம்பன். நம்மாளுங்க சுத்த வேஷ்ட மச்சி, காரித் துப்புறானுங்க வெளிய, எல்லாம் செல்ஃபீஸ் கம்முனாட்டிங்க”

“ஏன்டா எல்லாரையும் இப்படி மொத்தமா சேர்த்துப் பேசுற?”

“பேசாம, அவன் எப்படி அடிச்சான் பத்தியா, என்ன துணிச்சலா நம்ம பார்டர்ல வந்து நிக்கிறான் பார்த்தியா?”

“நின்னா, அவன் பெரிய ஆளா? மன்னிக்கிற நாம தான் பெரியாலு சத்யா”

“கிழுச்சீங்க. பார்டர் ல நின்னு உபதேசம் செய்யவாடாப் போனீங்க? அவனை ஒருத்தனை அடிச்சா அவன் நம்மை நூறு பேரை அடிப்பான், பார்க்குரியா???”

“சத்யா, என்ன பேசுற நீ, நம்ம பலம் என்ன தெரியுமா ?”

“என்ன பலம் இருந்து என்ன செய்ய, வேற யாரையாவது அப்பாவிய அடிச்சா கூட நின்னு கைதட்டத் தெரியும்”

“இல்ல..”

“என்ன இல்ல, அதலாம்விட நமக்குச் சேர் தான் முக்கியம் ஆசாது, எங்க  போயிடுமோன்னு பயம் இவனுங்களுக்கு, முஸ்லிம் ஓட்டு கிடைக்காமப் போயிடுமோன்னு குருட்டுபுத்தி, இவனுங்க அல்ப பசங்க மச்சி”

“என்னடா பேசுற சத்யா, இஸ்லாமியருக்கும் இந்தியக் கனவு இருக்கு, இந்தியா நமது லட்சிய தேசம்டா”

“நாமதான் நினைக்கிறோம், இந்தியா தமிழரை அப்படி நினைப்பதாத் தெரியலை ஆசாத். என்னதான் நாம இப்படி ஒற்றுமையா இருந்தாலும், அதையும் பிரித்துவைத்து லாபம் சம்பாதிக்கதான் பாக்குறாங்க நம்மைச் சுற்றி இருப்பவர்கள்….”

“அது அரசியல்”

“அரசியல்னா?”

“நம் தவறான அரசியல், நமக்குக் கிடைத்த அரசியல்வாதிங்க அப்படி”

“அவர்கள் ஏன் அப்படி? யார் அவர்களை உருவாக்கியது?”

“நீயும் நானும், நம்மைச் சுற்றி இருப்பவர்களும்”

“நீயும் நானும் என்பது வேற, அவர்கள் செய்யும் அரசியல் வேற, மதராசின்னு சொன்னாலே ஒரு இளக்காரமா பார்க்குற பார்வை பளார் பளார்னு அடிக்கிற மாதிரி இருக்கு எனக்கு, தோ இன்னைக்கு வந்த சேட்டுக் கூட இங்க உட்கார்ந்து நம்மலை அதிகாரம் பண்றான், எப்படி இதலாம்? அவனுக்கு ஒண்ணுன்னா எல்லாம் நடக்குது’ தமிழனுக்கு ஒண்ணுன்னா நாம தான் போய் கொடி புடிக்கனும்’ அப்பவும் வன்முறையை தூன்றோம்னு உள்ளத் தூக்கிப் போட்டு நம்ம ஆளே நம்மை முட்டிக்கு முட்டி தட்டுவான், இதலாம் ஒட்டுமொத்த தேசத்தின் ஒரு இனத்தின் மீதான காழ்ப்புணர்வில்ல? அப்புறம் எனக்கு மட்டும் எங்கருந்து வரும் தேச அக்கறை?”

“இதெல்லாம் நாம சரிசெய்ய வேண்டிய தவறுகள் சத்யா, அதலாம் கடந்துதான் நாம இந்தியரா இருக்கோம்”

“நீ இரு. நான் அதற்கும் முன் ஒரு தமிழன்”

“ம்ம்ம்… கண்டிப்பா.., நான் அதை மறுக்கவேல்ல. நானொரு தமிழன் என்பதை என் உயிருக்கு நிகரா நினைக்கிறேன் சத்யா, ஒரு தமிழனோட பிரச்சனைதான் மிக முக்கியம்னு முதலா நானும் நம்புறேன், அதேவேளை இந்தியாவும் நான் வாழும் தேசமில்லையா?”

“அதை நம்பி நம்பி வெருத்துப் போச்சுடா மச்சி..”

“எனக்கும் கோபம் இருக்கு சத்யா, ஆனா இந்தியாவா பாகிஸ்தானான்னு வந்தா நானொரு இந்தியன். இந்தியமக்களுக்கு ஒரு ஆபத்து வருதுன்னா அதைத் தடுப்பதும் தடுக்க நினைப்பதும் என்னில் யதார்த்தமா நிகழும்.., ஒரு நல்ல குடிமகனுக்கு தேசம் தான் முக்கியம். தேசம் தான் கனவு. தேசம்தான் லட்சியம் எல்லாம்.., எனக்கு மதம் கூட பெருசாத் தெரியலை சத்யா, ஆனா ஒரு இனம், எம் மக்கள்ன்றது மிகப் பெருசாப் படுது..”

“எஸ்… எஸ்.. அயாம் நாட் டாக்கிங் அபௌட் யூ மேன், அபௌட் த இன்டியன்!!”

“தயவுசெய்து இனி அப்படிப் பேசாதே சத்யா, நம் நாட்டை பற்றி இழிவாப் பேசுவது தவறு, நீ  வேறெதனா பேசு”

“ஏண்டா உனக்கு இவ்வளவு கோபம் வருது?

“வேற, நீ வேற்று நாட்டான் போலப் பேசுறியே…”

“ஒய் நாட், என் இனம்னு சொன்னியே யாரைச் சொன்ன, இவன் எம் மக்களை அழிக்க துணைப் போவான் நான் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கவா?”

“இல்லை, பார்க்காதே எட்டி சட்டைப் பிடி, ஏனென்றுக் கேள், அது வேறு”

“இங்க மட்டும் என்ன வாழுது, அவன் வந்து அவ்வளவு தைரியமா நின்னு அடிக்கக் கூப்பிடுறான், இவனுங்க திரும்பி வேண்டாம்னு நின்னா அசிங்கம்ல, நான் ஒன்னும் கோழையில்லை ஆசாத். ரெண்டுமுறை அவனுங்க இப்படி பார்டர்ல மிலிட்டிரிய நிறுத்திட்டு போவானுங்க, நின்னு மாரைத் தட்டிக் காட்டுவானுங்க, நாம இன்னும் வாயில கை வெச்சி யோசிக்கிறோம். பிலாசப்பி பேசுறோம், கேட்டா மேலிடம் இதுபத்தி ஆலோசிக்கிதாம், விளங்குமா இதலாம்? அ’யாம் ஷேம்…. மச்சி”

“அதுதாண்டா நம்ம மண்ணோட கண்ணியம்றது, எளியவனை அடிப்பது வீரமில்லை சத்யா”

“வேற யாருகிட்டயும் போயி இப்படி சொல்லிடப் போற.. அசிங்கமா கேட்பானுங்க உன்னையும் சேர்த்து, நாறுது வெளிய இவனுங்க பொழைப்பு”

“இல்லை சத்யா இங்க தான் நீ யோசிக்கணும்..”

“என்னடா யோசிக்கணும், அமேரிக்கா காரென்லாம் அவனை அடின்றான் டா, இவன் பார்டர்ல வந்துநின்னு என் மேல கையை வச்சிப் பாருன்றான், இவன எண்ணப் பண்ணனும் நாம’ சும்மாத் தூக்க வேணாம்”

“அமெரிக்கா ஒன்னும் பாரம்பரிய பக்குவ நாடில்லை சத்யா. அது நமக்குக் கால் தூசுக்கு வராது. எத்தனை நாடுகள், எத்தனை நாட்டின் பாரம்பரியம், கலாச்சாரம்னு, மனிதர்களின் வலி புரியாம தன் வெற்றியை மட்டுமே பெருசா கொண்டாடும்’ மக்களை உடல் கூசாம அழிக்கும்’ அசிங்கம் பிடித்த நாடு அது. தனிமனித விருப்பு வெறுப்பிற்காக ஒரு நாட்டையே அழித்த மட்டமான துணிச்சல் அமெரிக்காவோட துணிச்சல்”

“நான் இந்தியாப் பற்றி பேசுறேன், அமெரிக்காவைப் பற்றியில்ல, உனக்கு நேரா பேச முடியலைனா விடு நான் போறேன்…”

“கோபம் படாதே சத்யா, யோசித்து பாரு, நம்ம தேசம்’ பாரம்பரியம் மிக்க தேசம்டா, தியாகம் நிறைந்த மண்”

“என்னடா பெரிய பாரம்பரியம் தியாகம்ற, உனக்கு உன் மண்ணு பெருசுன்னா, அடுத்தவனுக்கு அதே அடி படயில நீ கூட நிக்கனும் அதை விட்டுட்டு கண்டவனுக்கெல்லாம் ஒத்து ஊதின நாடு தானே இது? த்தூ.., நன்றி கெட்டவனுங்கடா இவனுங்க. இந்தியாவுக்கு ஒண்ணுன்னா முதல்ல நிக்கிறவன் இன்னைக்கும் தமிழன்தான் தெரியுமில்ல? அதே தமிழனுக்கு ஒன்னுன்னா மட்டும் இவனுங்களுக்கு தொட்டுக்குற ஊருகான்னு நினைப்பு அதான் அடிக்கிறான் அவன் ஆப்பு”

“அது வேற மச்சி, அதலாம் அரசியல் சூழ்ச்சி. நம்மப் பக்கத்துலே இருந்து நம்ம ஊரிலேயே பிழைத்து நம்மையே அழிக்க கங்கணம் கட்டிக் கொண்டு அலையும் பக்கத்து மாநிலங்களின் சதி அது”

“நீ சொன்னா ஆச்சா??? தமிழன் வாழ்ந்தா இவனுங்களுக்கு மொளகா வெச்சமாதிரி. அதான் பக்கத்து நாட்டுக்கு வெளக்குப் பிடிக்கிறானுங்க நாய்ங்க”

“யார சத்யா சொல்ற நீ?”

“எல்லோரையும் தான். என் தமிழன் அழிய எவனெல்லாம் உடந்தையா இருந்தானோ அவனை எல்லாந் தான் சொல்றேன். செய்யாதவனுக்கு உரைக்காது. செய்றவனுக்கு சுள்ளுன்னு ஏறும்’ ஏறட்டும்..”

“சத்யா நீ சொல்றதெல்லாம் சரிதாண்டா உன் கோபம் எனக்கும் உண்டு. அது வேறு. இது நம்ம மொத்த தேசத்தைப் பற்றியது. போர்னா என்னன்னே யோசிக்காம நீ வேறேதேதோ பேசுறியே!!”

உள்ளிருந்து வந்த அம்மா இடைப்புகுந்தாள் “சரியா சொன்னீங்க தம்பி, போர் மூண்டா பெருசா மூளும், பெரிய அழிவுகள் நடக்கும், அதலாம் எங்கே இவனுக்குப் புரிய..”

அவன் நின்று அம்மாவையும் ஆசாத்தையும் மாறி மாறிப் பார்த்தான்.

“அதுமட்டுமில்லை சத்யா, நாம எத்தனை பலசாளின்னு காட்டிய நிறைய இடம் நம் வரலாற்றில் இருக்கு. கார்கில் சண்டையில நிரூபிச்சோமே, மறந்துட்டியா? அவனுங்களுக்கு மறந்துப் போயிருக்கும், அதான் அடிப்பட்ட பூனை தெளிவில்லாம வந்திப்போ பார்டர்ல நிக்குது”

“வந்து நிக்கிறான்..ல, நம்மை அடிக்கிறேன்னு அறிவிப்பு விடுறான்ல, அப்போ என்ன  பண்ணனும்? ஒரு தூக்கா தூக்க வேணாம்..”

“இல்லைடா சத்யா, உனக்கு அந்த வலி புரியலை.., போர் மிகக் கொடியதுடா முடிந்தவரை அதை நடக்கவிடாமத் தான் பார்த்துக்கனும், ஒருத்தர் ரெண்டுப் பேரோட போற விசயமல்ல  ஒரு போரென்பது. பல உயிர்களின் அழிவு. அதும் இன்றைய நிலவரப்படி, அதை நடக்கவிடாமல் தடுப்பதுதான் உலகத்துக்கே நல்லது. ஏன்னா இனி இதுபோன்ற வளர்ந்த நாடுகளுக்கிடையே ஒரு போர் வந்தால் போதும் அது மூன்றாவது உலகப் போர்ல தான் போயி முடியும். அதுக்குத் தயாரா காத்து நிக்குது அத்தனை நாடுகளும். சும்மா வெறுங்கையை வீசிக்குனு நிக்கலை.. அணு உலைகளை தலைல தூக்கிவைத்துக் கொண்டு சோதனைக்கு ஆள் தேடிட்டு இருக்கு சத்யா.

உனக்கு நான் எனக்கு நீன்னு மொத்த நாடுகளும் ஒவ்வொரு பிரிவா நின்னு உன்னை நான் என்னை நீன்னு மொத்த நாடுகளையும் அழித்துக் கொல்லும் மிகப்பெரிய விபரீதம் இந்த இரு நாடுகளின் போருக்குள்ள இருக்கு. அப்படி ஒன்னு மட்டும் நடக்கும்னா அதுக்கப்புறம் மக்கள் இதுபோன்ற சகஜ வாழ்வுநிலைக்கு வரவே குறைஞ்சது பல்லாயிரம் வருடங்கள் பிடிக்கும், ஒரு புல்லு பூண்டுக் கூட பிறகு முளைக்காமப் போகலாம்..

காணுமிடமெல்லாம் ஹிரோசிமா நாகசாகியைப்போல ஒரு பேரழிவே உலக நெடுங்கிலும் நிகழ்ந்துப் போகலாம்.. அப்படி ஒரு நிலை வந்துடக் கூடாதுன்னு தான் இத்தனை வருடம் கழித்து கிடைத்திருக்கிற நம் தமிழர் ஒற்றுமையைப் பயன்படுத்தி அப்படி ஒரு தொழிற்சாலையே நமக்கு வேண்டாம்னு அணு உற்பத்தியை எதிர்த்து தடுத்துன்ருக்காங்க கூடங்குலத்துல”

“அதலாம் அரசியல் ப்ளே மச்சி”

“இருக்கலாம். அன்னைக்கு, வறுமை வெடிப்புற்ற இடம்தானே’ கேட்க யாரிருக்கான்னு நினைத்து இத்தனைப் பெரிய சதியை நம் தமிழ்மண் மீது திணிக்க திட்டமிட்டதும் அதே அரசியல் விளையாட்டு தானே?

தமிழன் மாடா உழைப்பான், அவனுக்குள்ளே அவனே தலைமையேற்று அவனை அவனே அடக்கியும் விடுவான்னு’ தப்பாவே கணக்குப் போட்டு, நம் ஒற்றுமையில்லாமை யெனும் ஒற்றைக் குறையை பயன்படுத்தி’ உலகமே மறுக்கும் அணு உற்பத்தியை இங்கு ஆரம்பிக்க எண்ணியதும் அதே அரசியல் விளையாட்டு தானே?”

“ஆமாம் எல்லாம் ஒரு குட்டையில ஊறின மட்டைங்கதான், எவனும் அவ்வளவு யோக்கியன் இல்ல. எல்லாருக்கும் ஒரு சுயநலம் இருக்கு. ஏன் இத்தனை வருடம் இந்த போராட்டமெல்லாம் எங்கே போச்சி? இருபத்துமூனு வருடம் இவர்கள் எந்த கொடியைத் தூக்கி பிடித்திருந்தார்கள்?”

“வறுமைக் கொடி சத்யா. ஆம், அது பசிக்கு தவித்துக்கொண்டும் தண்ணீர் தேடித் திரிந்துக்கொண்டும் இருக்கும்’ ஏழைகளின் பசிக்கு’ ஒரு பிடி சோறு கிடைக்காதா என்று அலைந்த காலம். அன்னைக்கு ஏதோ தொழிற்சாலை வருது வேலைவாய்ப்புகள் பெருகும், வறுமை ஒழியும், வறண்ட மண் செழுமையுறும்னு நம்பி இருந்தாங்க. நாட்பட நாட்பட அதன் விபரீதம் முழுமையா தெரியத் தெரிய அதை எதிர்த்தும், அணு உற்பத்தியே வேண்டாம்னு மறுப்பதற்கான போராட்டங்களை நிகழ்த்திக்கொண்டும்தான் வராங்க. அங்க அப்போதுல இருந்தே ஒரு எதிர்ப்பு இருந்துக் கொண்டுதான் சத்யா இருக்கு. இன்னைக்கு தமிழர் எல்லாம் ஒண்ணாக் கூடி நின்றிருப்பதால உடனே வெளிய தெரிந்திருக்கு அவ்வளவுதான்.

இதைப் போலத் தான் ஒரு அமைப்புச் சார்ந்து பெங்களூர்ல இருந்து வந்திருந்த என் சகோதரிங்கக்கிட்ட கேட்டதுக்கு அவுங்க சொன்னாங்க ‘தன்னோட பொண்ணுக்கு திருமண ஏற்பாடு பண்றீங்கன்னு வையுங்க.., அப்படிப் பண்ற திருமண நெருக்கத்துல பொண்ணக் கட்டப்போற பையனுக்கு உடம்புக்கு சுகக் கேடு இந்த இடம் வேண்டாம்னு எல்லோரும் சொல்றாங்க, நீங்களும் அதையிதை நம்பாம திருமண நாள்வரை வந்துட்டீங்க, நாளைக்குத் திருமணம்னா இன்று இரவு தெரியவருது அந்த பையனுக்கு பெரிய நோய் ஏதோ இருக்குன்னு அப்போ என்ன செய்வீங்க? அதும் விடியும்பொழுது அவனுக்கு மருத்துவம் பார்க்குற மருத்துவரே வந்து இவனுக்கு எய்ட்ஸ் நோய் இருக்கு, இன்னும் கொஞ்சநாள்ல செத்துடுவான், அதோட இவனை கட்டி வைத்திங்கன்னா அது உன் பொண்ணுக்கு வந்து பிறகு ஊர் மொத்தமும் பரவும்னு சொல்றாங்க. அப்போ எண்ணப் பண்ணுவீங்க? சரி இவ்வளவு ஏற்பாடு பண்ணிட்டோமேன்னு செய்து வைத்துவிடுவீர்களா? அதுபோலத் தான் இதுவும்,. என்ன ஏற்பாடு செய்தாலும் அழிவு என்று தெரிந்ததும் நிறுத்திக் கொள்வதுதான் புத்திசாலித்தனம் நல்லது என்றார்களாம்”

“அப்போ அங்க நடப்பது எல்லாமே சரின்றியா?

“நெல்லு விதைத்தா நாலு புல்லும் முளைக்குந்தானே, அங்கும் சில சுயநலவாதிகளின் கபட நாடகமும், ஏழைகளை முன்னிறுத்தி பணம்பார்க்கும் கொடுமையும் நடக்காம இல்ல, அதைப்பற்றி எல்லாம் கவலைப்பட இப்போதைக்கு நமக்கு நேரமில்லை, அதைவிடப் பெரிது இந்த அணு உலை உற்பத்தி. அதை இத்தனை வருடம் விட்டுட்டோமே என்பதே வருத்தம்தான், ஆனாலும், அதற்காக இனியும் விட்டுவிடுவது பெரிய முட்டாள்தனம்.

வீரம் காட்டுற இடமில்லை இது. நாம சவால் விட எவ்வளவோ விசயங்க இருக்கு. இன்னைக்கு மாடிக்கு மாடி சின்டெக்ஸ் இருக்கே இருபத்தி ஐந்து வருடத்திற்கு முன் எத்தனை வீட்டில் சின்டெக்ஸ் இருந்தது? பத்து பதினைந்து வருடத்திற்கு முன் மழைநீர் சேமிப்பு பற்றி இத்தனை நாம் யோசித்திருந்தோமா? அப்படி இந்த இருபத்தி மூன்று வருடத் திட்டமா அரசு ஏன் மின்சாரம் சேமிக்கத் தக்க, அல்லது இலகுவாக மின்னுற்பத்தி செய்யத் தக்க வேறு ஏதேனும் நீண்ட நெடும் விளைவில்லாத திட்டத்தை அறிமுகப் படுத்தியிருக்கக் கூடாது?

மின்விளக்குகளாலேயே மின்னும் வல்லரசு தேசங்கள் வேறு எங்குமே இல்லையா? அப்படி வேறு வழியே இல்லைன்னு வந்தா பொதுமக்களை பாதிக்காத அளவில் ஒதுக்குப்புறமாக அமைத்து இத்தனை மைல் தூரத்திற்கு யாரையுமே அனுமதிக்காதவாறு ஏதேனும் பாதுகாப்பாகச் செய்யத்தக்க கடல்புறப் பகுதிகள் வேறு எங்குமே இல்லையா?

மனிதர்கள் வாழும் இடத்திற்கு மத்தியில் ஒரு மதில்சுவரை மட்டும் அமைத்துவிட்டு இத்தனைப்பெரிய பாதகச்செயலை செய்வோர் நாமாக மட்டுந் தானிருக்கும். இதென்னவோ ஒரு சட்டை வாங்கி மானம் மறைப்பதற்கு பதிலாக பார்ப்பவர் கண்களை எல்லாம் நோண்டிவிட்டால் நாம நிர்வாணமாகவே திரியலாமே என்பதுபோல’ இயற்கையை ஒட்டுமொத்தமாக அழிக்குமொரு திட்டத்தை மெத்தப் படித்தவருக்குக் கூட எப்படி ஒப்புக்கொள்ளமுடிகிறதோ தெரியவில்லை. உற்றுநோக்கிப் பார்த்தல் அவர்களின் நோக்கம் மின்சாரம் மட்டுமில்லை சத்யா, அணு உற்பத்தியும்.

அணு உற்பத்திதான் மனிதனின் நாளைய அழிவிற்கான முதல் மூலதனம். இன்னைக்கு ஆயிரம் காரணம் காட்டி ஏதும் நடக்காதுன்னு சொல்லலாம், ஆனா நடந்துட்டா? அதற்கு பிறகு ஒரு புள்ளி கூட பதிலாகக் கிடைக்காது. இன்றைய சாப்பாடு பெருசுன்றதைவிட நாளைய மரணம் அதைவிடப் பெருசு. அழிவைப் பத்தி யோசிக்கையில பட்டுன்னு ஒரு எச்சரிக்கை உள்ளே வந்துடனும். ஒரு அணு உலை நம்ம ஊர்ல இருக்குன்னா அது நம்ம தமிழ்மண்ணின் தலையில ஒரு அணுகுண்டைத் தூக்கிவைத்துக்கொண்டு நிக்கிறதுக்குச் சமம்.

எந்த நேரம் யார் திரி கொளுத்தி அதுமேலப் போடுவாங்கன்னு யாருக்கும் தெரியாது, அதற்கான ஒரு பயம் இருந்துக் கொண்டேயிருப்பது பெரிய அவஸ்த்தை சத்யா. இன்னைக்கு இல்ல, இன்னையில இருந்து பத்து வருடமா ஒருத்தன் வேலை செய்துக்கொண்டிருந்துவிட்டு அதன்பிறகு ஏதேனும் ஒரு அணு உலையை வெடிக்கச் செய்துவிட்டுப் போனால் அவனை என்னசெய்துவிட முடியும் நம்மால்?

நடக்காதுன்னு சொல்றோம். ஒருவேளை அப்படி ஏதேனும் ஒன்னு நம்ம மண்ணுல நடந்துதுன்னா, அவ்வளவுதான், நம்ம தமிழினம்னு சொல்லிக்க ஒருத்தர்கூட தமிழகத்துல உருப்படியா இருக்கமாட்டோம்’ இதை இத்தனை ஆழம் தெரிந்தும் சம்மதிப்பது போன்று ஒரு புத்திசாலித்தனம் எப்படி நம் வளர்ச்சியாகும்”

“ரிஸ்க்னு பார்த்தா எல்லாமே ரிஸ்க் தான் மச்சி, வீட்டை சுத்தி ரிபைனரி வைத்துக் கொண்டிருக்கிறோம் அது வெடிச்சா சாக மாட்டோமா?”

“ரிபைனரி வெடித்தால் ஒரு ஊரே அழியும், பல ஊர் சேதமாகும், ஆனால் சேதத்தை சரிசெய்து சரிநிலைப்படுத்திவிடலாம். அணு உலை வெடித்தால் செய்வியா? நம்ம தமிழ்மண் பாதி அழியும். ஒரு பில்லு கூட முளைக்காதாம்? கேட்க கொடுமையா இல்லை? அதலாம் விட, ஏதோ முன்ன தெரியாம, சுடுகாடு கட்டினாக் கூட சுவர் எழுப்ப வேலைக் கிடைக்குமேன்னு பார்த்தோம், இப்போ அதுல கட்டுற சமாதி நமக்குன்னு புரிந்தப் பிறகும்’ போய் படுத்துக்கலாம் பணம் தருவாங்கன்னு பார்ப்பது அறிவீனமாயில்லை?”

“அதற்காக, இத்தனை வருடம் கழித்து நாம காட்டுற இந்த எதிர்ப்பால, இதை தமிழ்நாட்டுல கட்ட திட்டமிட்டிருக்கு அரசு என்கிற ஒரே காரணத்தை சாதகமா வைத்து மொத்த இந்தியாவோட வளர்ச்சியையே நாம முடக்குறதா இது ஆகாதா தம்பி?” சத்யாவின் அம்மா வந்து குறுக்கிட்டுக் கேட்டாள்.

“ஆகட்டும். உன் வீட்டை தாண்டி வந்து நீ என் வீட்டுல நெருப்பு வைப்பதால்தானே எனக்கு கோபம் வருது? நீ உன்வீட்டுல வெச்சிட்டுப் போ, விளைவு என்னன்னு உனக்குப் புரியும். தவிர இது எப்படிம்மா வளர்ச்சியாகும்? இது பசிக்கு விசத்தை தின்பதற்குச் சமம், இன்னைக்கு தப்பினாலும் நாளைக்குச் சாவு.

பெருசா பத்து வருஷம் உழைத்து ஒரு மாடிவீடு வானளவிற்கு கட்ட கடகால் தொண்டுறோம்னா தோண்டும்போதே அதன் எதிர்காலம் பற்றி யோசிக்கவேன்டாமா? பதினோறாவது வருடம் அந்த கட்டிடமே சரிந்துப் போகலாம் எனும் ஒரு உண்மை தெரிந்தும் கட்டுவது எப்படி நமக்கான வளர்ச்சியாக இருக்கும்? நான் ஒருத்தன் செத்தா அது ஒரு தமிழனோட மரணம். என் தமிழர் மொத்தப் பேரும் சாகும் நிலை வரும்னா அது இந்தியாவின் மரணமுமில்லையா? எதிர்கால இழப்புன்றது என் தேசத்தின் வீழ்ச்சி தானேம்மா வளர்ச்சி எப்படியாகும்?”

“எதிர்மறையாவே யோசித்தா எப்படிடா? நேர்மறையா சிந்திக்கனும்னு எல்லாத்துலையும் சொல்ற நீ இதுல சிந்திக்க மாட்டியா?”

“இது நேர்வினைத் தூண்டும் சிந்தனைதான் சத்யா. இயற்கைக்கு எதிராப் போகப் போக அழிவை நோக்கி நெருங்கிக் கொண்டிருக்கிறோம்னு தான் அர்த்தம். அதுலயும் இது இயற்கைக்கு எதிரா ஒருத்தர் ஆயிரம் கைகளை தூக்கி அதில் பல்லாயிரம் ஆயுதங்களை ஏந்தி எதிர்நிற்பதற்குச் சமம்.

நம்பிக்கைதான் வாழ்க்கைன்றது வேறு, எச்சரிக்கை உணர்வென்பது வேறு சத்யா. அந்த நம்பிக்கைல தான் எல்.பீ.ஜி. வாயுவைக் கூட வீட்டில் அடைத்து பயன்படுத்த பழகிட்டோம். ஆனா இது வெடித்துவிட்டு தீர்ந்துவிடுவது இல்லையே, காலத்தையே தின்றுவிட்டு சுடுகாட்டின் வெறுமையை கைக்கெட்டிய தூரம்வரை இரைத்துப் போகும் கொடுமையாயிற்றேம்மா’ அதனாலதானே உலகமே இதன் விசயத்தில் இத்தனைப் பயப்படுது..” ஆசாத் திரும்பி அம்மாவைப் பார்த்துச் சொன்னான். இடையே சத்யா குறுக்கிட்டு –

“என்னைய சொல்லிட்டு நீ எங்கெங்கயோ போறியே மச்சி, பாகிஸ்தான்காரன் நம்மையடிக்க பார்டர்ல நிக்கிறானாம், வா.. போய் ஆல் த பெஸ்ட் சொல்லிட்டு வருவோம்” என்று நக்கலாகச் சொல்ல –

“தம்பி சொல்றதை காது கொடுத்து கேளு” என்றுச் சொல்லி பின்னால் வந்து சத்யாவின் தலையில் தட்டினாள் அம்மா. அவன் சிலிர்த்து திரும்ப..

“அதை விடுறா., பாகிஸ்தான்லாம் நம்ம சக்திக்கு ஒன்னுமேக் கிடையாது. நின்ன இடத்துல இருந்தடிச்சாலே அந்த நாட்டோட பாதி காணாம போற அளவுக்கு நாம என்னைக்கோ பலமாயிட்டோம்.. அந்தளவுக்கு நம்மலுடைய பலம் நமக்கே தெரியாதளவுக்கு நம்ம இந்திய ராணுவம் அணு ஆராய்ச்சி மையமெல்லாம் ரகசியமா செயல்பட்டுதான் வருது. இதுக்கு மத்தியில அவனை அடிக்கிறதுன்றது நமக்குச் சாதாரணம் சத்யா?”

“நம்ம நினைக்கிற மாதிரி இல்லை மச்சி பாகிஸ்தான்காரைங்க. அவனுங்களுக்கு அடிச்சாதான் புத்தி வரும்..” என்று சொல்ல அதற்கு ஆசாத் ஒன்று சொல்ல, அம்மாவோடு வெளியிலிருந்து வந்த அப்பாவும் சேர்ந்துக் கொண்டு நிறைய நேரம் பேசுகிறார்கள். முடிவில் ஆசாத் அங்கேயே உணவும் உண்டுவிட்டு வெளியே வந்துப் பார்க்க காற்றுச் சில்லென வந்து முகத்தில் வீசியது. அனைவருக்கும் கைகாட்டிவிட்டு விடைபெறுவதற்கு வணக்கம் கூறிவிட்டு அவன் புறப்பட, சத்யா அவனுடைய அம்மா தம்பி அப்பா எல்லோரும் மீண்டுமமர்ந்து ஏதேதோ பேசி நேரம் வெகுவாய் கடந்துப் போனது. பிற்பகல் மெல்ல நகர்ந்து மாலையாகி, மாலையும் முடிய இரவுப்போர்வை மூடி நிலவு வானக் கதவை வந்து தட்டியது.

சூரியன் நகர்ந்து போய் இரவின் இருட்டு வெளிச்சத்தின் வெண்மையை திருடிக் கொள்ள அங்கே இருள் சூழ்ந்து, தீரா இருட்டின் கருமைக்குள்ளிருந்து துவங்கித் தொலைக்கிறது அந்த உயிர்கொள்ளும் மூன்றாம் உலகப் போர்……

——————-*——————-*——————-

“டமால்….”

“டுமீல்…..”

“டமால்…..”

“புஸ்ஸ்…………………….”

“ஓடு.. ஓடு… உயிர்… பயம்.. சண்டை.. போர்!!! போர்!!!!! ஓடு ஓடு என மக்கள் விரட்டிக் கொண்டு ஓடுகிறது. எங்கே ஓடுவது.. எத்தனை தூரம் ஓடுவது..? எங்கே ஓடினாலும்தான் உயிரை ஒரு நொடியில் மென்றுத் துப்பிவிடுகிறது மனிதன் கண்டுபிடித்த அந்த அணுகுண்டுகள்..

வாய்ப்பேச்சி பேசிய காலம் முடிந்தது. இதோ இந்தியா முதன் முதலாய் ஏவுகிறது பாகிஸ்தான் மீதான அந்த ஏவுகணையை. அடித்த ஒரு அடியில் பாகிஸ்தானின் ஒரு பெரிய பகுதியே ஒரு நொடியில் சிதறிப் போகிறது.. ரத்தக் காட்டாறு சிலமணித் துளிகளில் கடல் போலப் பாய்கிறது.., அவன் மட்டுமென்ன சளைத்தவனா தில்லியின் தலையில் தூக்கி வீசுவது போல் அங்கிருந்தே பாகிஸ்தான் காரன் ஏவினான் அடுத்த ஏவுகணையை. அது மிக சாதாரணமாக வந்து தில்லியின் ஒரு பெரும்பகுதியை மென்று துப்பியது. அடுத்து பாம்பே அடுத்துக் கல்கத்தா அடுத்து அஸ்ஸாம் அடுத்து வைசாக்….., அடுத்த அடி எங்கு இருக்கலாம் என்று யோசிப்பதற்குள் வந்து விழுகிறது கூடங்குளத்தின் மீது ஒரு குண்டு..

நல்லவேளை அணு உலை உற்பத்தியெல்லாம் இன்னும் துவங்கியிருக்கவில்லை என்று ஒரு பெருமூச்சு விடுவதற்குள் சென்னையின் மேல் வந்து விழுகிறது அடுத்த குண்டு…

“டமால்…………………….”

சிதறியது சென்னை ஒரே அடியில். மக்கள்வெள்ளம் கருகியும் உயிர் சிதைந்தும், உடல் சிதைந்தும் எஞ்சியதுமாய் ஓடுகிறது மரணபயத்தில் இங்குமங்குமாய்..

“ஐயோ பயம் பயம் பாம்.. பாம்…  வருது மேல விழப்போகுது ஓடு ஓடு.. டமால்…..“ சுக்குநூறாய் போகிறது மக்கள் வெள்ளம். குண்டு விழும் இடமெல்லாம் குழிதோண்டிப் புதைத்துக் கொள்கிறது மனிதர்களை. பரிதவித்துப் போகின்றனர் மக்கள். ஆடு மாடு கோழி கொசு எறும்பு மனிதன் யாரிலும் பாரபட்சமில்லை. யார் வந்து யாரைக் காப்பது? யாரைக் காக்கவும் யாருக்கும் அவகாசமில்லை. அவரவர் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு அவரவர் கண்ணுக்கெட்டிய தூரம் சந்து பொந்துகளிலெல்லாம் பதறியடித்துக் கொண்டு ஓடினர. ஓட ஓட ஒவ்வொரு குண்டாய் வந்து வந்து தலையில் விழ அதிலொன்று வந்து சத்யா வீட்டின் அருகேயும் விழுகிறது..

“ஓடு ஓடு எனக் கத்திக்கொண்டே ஓடுகிறான் சத்யா…, தலைத் தெறிக்க ஓடுகிறான்… மேலே பறக்கும் விமானங்கள் தன் தலையை சீவுவது போல தரையிறங்கி மீண்டும் மேலேறின.. ஒடுபவரின் தலையில் எளிகாப்டர்கள் நேராக குண்டுகளைத் தூக்கி வீசின.. எத்தனைவரை ஓட  இயலுமோ அத்தனைவரை ஓடுவோமென்று ஓடுகிறான் சத்யா..

திடீரென எல்லோரும் நினைவிற்கு வருகிறார்கள்.. “ஐயோ……. அம்மா எங்கே? அப்பா? தம்பி????? யாரையும் எங்குமே காண இயலாதே.., என்ன ஆனார்களோ அவர்கள். மனம்’ ஓட ஓட அவர்களை எண்ணித் தவிக்கிறது. யார் யார் எங்கு போனார்களோ என்ன ஆனார்களோ?? கடவுளே… கடவுளே… காப்பாற்று, அம்மாவைக் காப்பாற்று’ மனசு கெஞ்சியது..

என்ன ஆயிருப்பார்களோ அவர்கலெல்லாம் நாம் மட்டும் இப்படி ஓடி ஒளியப் பார்க்கிறோமே, நின்று விடலாமா இங்கேயே? ஐயோ… அம்மா எங்கிருக்கிறாய், அம்மா என்ன ஆனாயோ.., என்ன செய்வேனம்மா.., ஒன்றுமேப் புரியலையே.. அவன்கதறிக் கொண்டே ஓட இன்னொரு குண்டு அவனருகிலேயே விழ, மக்கள் சிதறி சிதறி சிதைந்துப் போவதைப் பார்த்து திரும்பி வேறு வழி புகுந்து மரணத்தை கண் முழுதும் நிரப்பிக் கொண்டு தலைதெறித்தாற்போல் ஓடுகிறான் சத்யா..

எப்படியும் இன்னும் ஓரிரு வினாடிகளில் தன்மீதும் ஒரு குண்டு விழுந்துவிடும், நானும் சுக்குநூறாய்ப் போவேன்.. அதற்கு முன் எப்படியாவது தப்பிக்கனும் ஓடனும், காற்றுப் போல ஓடனும், ஓடு ஓடு மரணம் மரணம், இதோ மரணம் வந்துவிடும் ஓடு, உடல் சிதைந்துப் போகும், ரத்தசகிதமாய்ப் போவோம் சீக்கிரம் சீக்கிரம் என அவனும் அவனின் முன்னாலும் பின்னாலும் எல்லோருமாய் சேர்ந்து எஞ்சிய மக்களெல்லாம் ஓடினார்கள்..

திடீரென காப்பாற்று காப்பாற்று என்று தனியாக ஒரு குரலின் அலறல் சப்தம் வந்து காதில் விழ, கவனித்துப் பார்த்தால் அவனுடைய அம்மா அலறும் சப்தம் கேட்டது.., ஒரு வினாடி தனையறியாமல் சத்யா ஸ்தம்பித்து நின்றுப் போனான்.. உயிரைக் கையில் பிடுங்கிக் கொண்டுள்ளதுபோல் தவிக்கிறான்… கத்தி அலறுகிறான்… உயிரைப் பிய்த்து கையில் எடுத்து எங்கேனும் கிடாசிவிட்டு எங்கோ கண்ணுக்கெட்டிய தூரம் போய் விழுந்துவிடலாம்போல் ஒரு  கோபமும் அழையும்  ஒருசேர வர, அதை விடவும் கொடியதாக இருந்தது அவன்மேல் எங்கு அந்த குண்டு வந்து விழுந்துவிடுமோ எனும் உயிர்பயம்..

எதையுமே பொருட்படுத்தாமல் இருக்கமுடியவில்லை என்றாலும் தனைமீறிய ஒரு உணர்வாக நடுத் தெருவில் நின்று தன் தலையில் கைவைத்துக் கொண்டு அம்மா அம்மா என்றுக் கத்துகிறான்..

அடுத்த “அம்மா…………..” என்று வாய்திறந்து மூடுவதற்குள் சரமாரியாக நான்கைந்து குண்டுகள்  வந்து விழுகிறது. எங்கு தானும் செத்துப் போவோமோ எனும் பயம் அந்த குண்டு விழுவதற்குள் வந்து விரட்ட, அங்கிருந்து நகர்ந்து சீறிக் கொண்டு ஓடுகிறான் மீண்டும்.

ஆங்காங்கே காணுமிடமெல்லாம் ஓடு ஓடு மரணம் மரணம் என்ற கூச்சல் ஐயோ ஐயோவெனும் அலறல்.. பயத்தில் காதடைக்கிறது சத்யாவிற்கு. உயிர் மனதை இறுக்கி அழுத்த, விழுந்தடித்துக் கொண்டு மீண்டும் பித்துபிடித்தாற்போல் ஓடுகிறான்.

ஆனால் அவனின் போதாத காலம், ஒரு குண்டு அவன் மேலேயும் வந்துவிழ, விழப்போகும் இடைவெளிக்குள் தலைநிமிர்ந்து அதை மேலேப் பார்க்கிறான், அந்த குண்டு உஸ்ஸ்ஷெனும் சப்தத்தில் மேலிருந்து கீழ் வந்துக் கொண்டுள்ளது. நிமிர்ந்து மேலே பார்த்து மேலிருந்து அந்த குண்டு சொய்ய்ய்யென்று அவன் தலையில் விழுமந்த வினாடிக்குள் மூச்சுத் தெறிக்க கையை தட்டிக்கொண்டே முன்னோக்கி மாறி மாறி நாலுகால் பாய்ச்சலில் ஓடுகிறான்.., என்னதான் மூச்சுக்கு எட்டிய தூரம் அவன் ஓடினாலும் ஆள்தராதரமெல்லாம் பார்க்காமல் குண்டு அவன் தலைநோக்கி அருகில் வந்துவிட, தட்டிவிடுவதாய் நினைத்து தட்ட எத்தனிப்பதற்குள் பொதீரென அவன் தலையில் விழுந்து கணீரென்று வெடிக்கிறது…, டமால்.. எனும் சப்தத்தோடு அவன் தலைச் சிதறிப் போக –

“அம்மா….”

“அம்மா…..”

“ஐயோ….”

“என்னடா சத்யா…”

“அம்மா அப்பா நான் செத்தேன்.. செத்தேன் குண்டு… ஐயோ…நான் செத்துட்டேனே…”

“என்னாச்சிடா சத்யா?”

“அம்மா அம்மா …. எம்மேல குண்டுமா“

“சொல்லுப்பா என்னாச்சி?”

“குண்டுமா குண்டு வெடிகுண்டு என் தலை வெடிச்சி… நான் சிதறிப் போயிட்டேன்மா”

“டேய்.. பெனாத்தாத..டா இங்க பார், பாரிங்க”

அவன் கண்ணைத் திறக்காமலே “இல்லமா இல்லமா நீ கூட செத்துட்டியேம்மா…, அந்த குண்டு  அப்பா தம்பி எல்லார்மேலையும் விழுந்து நாமெல்லாம் செத்தேப் போயிட்டோமேம்மா, நானும் கூட”

அவன் பேசி முடிப்பதற்குள், அவள் எழுந்து உள்ளேப் போய் ஒரு சின்னக் குவலையில் தண்ணீர் குளுமையாக கொண்டுவந்து சலக்கென சத்யாவின் முகத்தில் ஊற்ற.., அவன் திகைத்துத் திணறி கண்திறக்க, அம்மா அவனருகில் இருப்பதைப் பார்த்ததும் அம்மா அம்மா என்று கத்துகிறான். வேகவேகமாகக் அவளைக் கட்டிக் கொண்டு அழுகிறான். “நீ செத்தெல்லாம் போல இல்லையாம்மா” என்று பாவமாகக் கேட்டான்.

“இல்லடா சத்யா.. என்னாச்சிடா கனவு ஏதேனும் கண்டியா?”

“சண்டைம்மா சண்டை பெரிய சண்டை, பாகிஸ்தான் நம்ம மேல குண்டுகளாப் போட்டான்மா நான் என் கண்ணாலப் பார்த்தேன்.. நீ போயிடாதம்மா, எங்கயும் நீ போவாதம்மா, என் கூடவே இரும்மா…”

“போலப்பா, இங்க பார். அம்மா தோ உன் பக்கத்துலேயே இருக்கேன் பார். இங்க பார்.. என்னைத் தொட்டுப் பார்..”

தொட்டுப் பார்க்கிறான்.. உயிர்பயத்தில் அம்மாவைத் தொட்டு கை காலெல்லாம் தடவுகிறான்… “பாம் விழுந்துச்சிம்மா அதும் என் தலையிலேயே….” சொல்லிக் கொண்டே அழுதான் சத்யா..

“இல்லைப்பா சத்யா உனக்கு அதலாம் ஒன்னும் ஆகாது நீ நல்லா இருக்க”

“நீ கூட கத்துனியே, ஐயோ ஐயோன்னு கத்துனியே, பாகிஸ்தான்காரன் உன்னை அடிச்சானே..”

சத்யாவிற்கு முகமெல்லாம் வெளிறிப் போயிருந்தது. மயிர்க்கால் குத்திட்டு நின்றிருந்தது. கண் பிதுங்கி பயத்தில் பாதி வெளியே வந்திருந்தது. முகம் வியர்க்க கண்கள் இரண்டிலும்  மரணத்தின் பயம் என்பது இதுதான் பார்த்துக்கொளென்றுக் காட்டுவதாய் இருந்தது.

அவள் மார்பில் அவன் தலையை அணைத்து முதுகில் தடவிக் கொடுக்க, மெல்ல மெல்ல சுயநினைவு வந்தாலும், அவன் கண்டக் காட்சிகள் எல்லாம் உயிர்ப்போடு கண்களில் இருந்து மறையாததில் தன்னைத் தானே பார்த்து பார்த்து மீண்டும் அழத் துவங்கினான் சத்யா.

அவளுக்கு தன் பிள்ளையின் வலியும், இத்தனை வலிக்கத் தக்க கொடூரமாக கனவுக் கண்டுள்ளான் என்பதும் புரிந்தது. உள்ளே ஓடிப் போய் ஒரு கண்ணாடிக் குவளையில் நீர் ஊற்றிக் கொண்டுவந்து அவனை அரவணைத்து ‘ஒன்னுமில்ல சத்யா, பயப்புடாத, எல்லாம் கனவுதான்’ என்றுச் சொல்லி தன் மேல் சாய்த்தவாறு அவன் வாயில் கொஞ்சம் நீர் பருகச் சொல்லி ஊற்றினாள். அவன் ஓரிரு மினர் நீர்ப் பருகி முகத்தை திருப்பிக் கொள்ள.., வாவென்று அழைத்து தன் மடியில் தாய்மையின் தவிப்போடு சாய்த்து படுக்கவைத்துக் கொண்டாள்.

தாயின் மடியில் படுத்த சத்யாவிற்கு என்றோ அவன் குடித்த தாய்ப்பாலின் வாசம் அவள்மீது இன்றும் படர்ந்திருப்பதுபோல் ஒரு நிம்மதி பரவ இன்னும் இறுக்கிப் பிடித்துக் கொள்ள, அவள் அவனுடைய தலைக் கோதியவாறே… “பத்தியா? மரணம் எவ்வளவு கொடிதுப் பார்த்தியா? எப்படி உயிர்பிடுங்காமல் உன்னை நடுநடுங்க வைக்குது பார்த்தியா? உன் ஒருத்தனால முதல்ல சாகத் துணிய முடியுதா?

பிறகு போர் போர் என்றாயே, போர் வந்தால் எத்தனை உயிர்கள் அழியும் எண்ணிப் பார்த்தாயா? அணு உலை வெடித்தால் நம் கதியென்ன யோசித்தாயா? மொத்தப் பேரும் ஐயோ என்று கத்தக் கூட அவகாசமற்று இறந்துப் போவது எத்தனைக் கொடுமை?

உயிர் என்பது எல்லோருக்கும் பொது சத்யா. ஒருத்தர் இரண்டு பேரோட அழிவு அல்ல நீ கேட்டது, இரண்டு நாட்டின் மீதான போர். இரண்டு தேசத்து மக்களின் அழிவு அது. அதோடு போகுமா..? எத்தனை நாட்டைத் துணைக்கு அழைத்து எத்தனைப் பேரைக் அது  கொல்லுமோ என்று இப்போது யோசி. பிறகு ஒரு நாட்டின் அத்தனை உயிர்களின் விலைக்கும் அந்த நாடு பொறுப்பில்லையா?

அதைத் தான் இந்தியா இப்போ செய்யுது. என்னைக் கேட்டா இந்திய தேசம் பாகிஸ்தான் எனுமந்த சிறிய நாட்டைக் கண்டு ஒருதுளியும்  அஞ்சவில்லை, தன் மக்களின் உயிரோட விலையில்லா மதிப்பிற்குத் தான் அது அஞ்சுகிறது..”

“அப்போ ஏம்மா இதையெல்லாம் கண்டுபிடித்தோம்? இப்படிப்பட்ட அணு உலைகளை எல்லாம் பிறகு ஏன் நாம உற்பத்தி பண்றோம்..?” உறங்கியதுபோன்றதொரு உணர்விலும் சத்யாவிற்கு இப்படி ஒரு கேள்வி எழுந்தது. ஆனால் அவனால் அதைக் கண்திறந்துக் கேட்க முடியவில்லை. கைகாலெல்லாம் தனையறியாமல் இன்னும் நடுங்கிக் கொண்டே இருந்தது. ஆனாலும், அந்த உயிர்பயத்தின் உலுக்களுக்கு மத்தியிலும் போரைப் பற்றி அவள் சொல்வது சரியெனப் பட்டது. போர் மிகக் கொடிது, மிகக் கொடிது என்று எண்ணியவாறே.. அவள் மடியை இன்னும் கொஞ்சம் இறுக்கமாகக் கட்டிக் கொண்டான்… இரவு அவனைப் போரில்லா ஒரு தேசத்திற்கு உறங்கச் சொல்லி அழைத்துப் போனது.

மீண்டும் வந்த கனவில் ஆசாத் “அணு உலையை அடியோடு மூடுவோம்; போரில்லா ஒரு தேசம் சமைப்போம்..” என்று கத்தி கத்தி எல்லோரோடும் சேர்ந்து ஆர்பாட்டம் செய்துக் கொண்டிருக்கிறான். இவனும் உடன் சென்று “அணு உலைகளை அறவே ஒழிப்போம்; மின்சாரம் வேண்டுமெனில் புது உத்தியைக் கொடுப்போம்” என்று கத்தினான். ஆசாத் திரும்பிப் பார்த்து பெருமிதத்தோடு அவனைக் கட்டி அணைத்துக் கொள்ள…

அம்மா அவன் உறங்கிவிட்டான் என்றெண்ணி போர்வையை அவன்மீது இழுத்து மூடிவிட்டு நீரருந்திவிட்டுப் படுக்க அடுத்த அறைக்குள் சென்று மின் விளக்கினை இட, வெளிச்சம் அங்கிருந்து சிதறி அண்டவெளியிலும் பரவியது….

அண்டவெளியின் ஒவ்வொரு பரப்பும் அமைதியை எண்ணி இயங்கிக் கொண்டிருக்க’ அதை கடந்து நாம் தயாரித்த செயற்கைத் தனங்கள் ஒவ்வொன்றும் அந்த அமைதியை குலைப்பதாய் அண்டவெளியிடம் போராடிக் கொண்டிருந்தன.

என்றோ ஒரு தினம்’ இயற்கை மரணமாகவேனும் வந்து நமை வெல்லத் தான் போகிறது எனும் உண்மை மட்டும் என் எண்ணத்தின் உட்புக… எல்லாம் கடந்த ஒரு அமைதியை; மனிதர்களின்’ அனைத்துப் பிற உயிர்களின்’ நன்மையை மனதில் கொண்டு, என் தமிழர், என் மக்கள், என் இனம்… எந்தவொரு அபாயத்திற்கும் அடிமைத்தனத்திற்கும் ஆட்படாமல் நிம்மதியாய் வாழுமொரு நாளினைவேண்டி’ இக்கதையை இதோடு சுபமென்றுச் சொல்லி முடிக்கிறேன்.

நன்றிகளுடன்..

வித்யாசாகர்

Posted in சிறுகதை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

எல்லோருக்கும் எட்டாத ஏழாம் அறிவு.. (திரைப் பார்வை)

தேடித் தேடிக் கேட்ட விருப்பப் பாடல்கள் எல்லாம் பழையதாகிக் கொண்டிருக்கையில் புதியதாய் காதுவழி புகுந்து இதயம்.. உயிர்.. என உணர்வு மொத்தமுமாய் தமிழின பற்றின் காரணமாக நிறைகிறது அந்த சீனத்து மொழிப் பாடலொன்று. ஒரு தாயிற்கு தாங்கயியலாத இழப்பென்று சொன்னால் அது தான் பெற்றெடுத்த தன் குழந்தையின் இறப்பன்றி வேறொன்று இருக்காது என்பதை நாமறிவோம்; அதே குழந்தை மீண்டும் உயிர்பெற்று வந்தால் அந்த தாயின் நன்றியுணர்வு எப்படி கண்ணீரின் வழியே’ தான் விட்டுப்பெற்ற உயிரென பூக்குமென்பதை ஒரு புதிய கட்டத்திற்குள் காட்டுகிறார் ஏ.ஆர். முருகதாஸ்.

ஒவ்வொரு முறை என் தமிழன் அடிப்பட்டப் போதெல்லாம் தனியே நின்று அழுத என் உணர்விற்கு ஒரு காலங்கடந்த ஆறுதலாய் அமைந்திருந்தது அந்தக் காட்சி. எதிரி என்று எண்ணி ஆரம்பத்தில் போதி தர்மரை ஒதுக்கிய அம்மக்கள் மீண்டும் முன்வந்து அவரையே தனது தெய்வத்திற்குச் சமம் என்றுச் சொல்லி ஒரு கை நீட்டி காலில் விழ’ ஒரு மூத்தக் குடியின் பெருமிதம் உள்ளே ரத்த நாளத்தை ஒரு சொடுக்கு சொடுக்கிவிட்டதென்பது உண்மை.

உலகமெலாம் பரந்துவிரிந்த ஓர் இனம், வாழ்க்கையை பணத்தில் தொலைத்து, வீடு விட்டு, உறவு விட்டு, தன் பெருமைமிகு மண்ணைக் கடந்து, தொழில் சுயமுன்னேற்றம் வியாபாரமென்றெல்லாம் சொல்லி, தன் வாழ்தலின் பெருமையை வெறும் காசுக்கு விற்றுவிடப் பழகிவரும் ஓர் இனம், பிறந்த மண்ணில் இருக்கும் சுதந்திரத்தையும் உரிமையையும் எவனெவனுக்கோத் தன் சிரசருத்துக் கொடுத்ததுபோல் கொடுத்துவிட்டு, கடல்தாண்டி கடல்தாண்டி’ தன் சுதந்திரத்தைப் பறித்துக் கொண்டோரிடமிருந்து’ தன் வாழ்வின் விடுதலையைப் மீட்டுப்பெற்று, மீண்டும் எம் தமிழர் கொடிபறக்க –

நாங்கள் ஆளும் தேசம் பார் உலகினமே, எங்களின் ஆட்சிக்கு உட்பட்ட மண் இப்படித்தானிருக்கும், எப்படிப் பட்டொளி வீசிப் பறக்கிறது பார் எங்கள் சுதந்திரக் கொடி என்று பகிரங்கமாக சவால்விட்டுக் காண்பிக்க ஒரு பிடி மண்ணேனும் கிடைக்காதா என்று உலகின் மூலைமுடுக்கெல்லாம் அலைந்து திரிந்து, தான் வாழ்ந்த’ பிறந்த’ பிறப்பின் மகத்துவத்தை வேடிக்கையாய்ப் பார்க்கும் உலகிற்கு முகத்தில் அறைந்தாற்போல் காண்பிக்க’ ரத்தத்தையும் உயிரையும் இரண்டறக் கலந்து’ பூமியின் ஒரு பக்கத்தையே இறக்கமற்றோரின் கொடுஞ்செயலால் வடிந்த ரத்தத்தால் நிரைத்துவிட்ட ஓர் இனம் –

இடையில் முளைத்த வெள்ளையனுக்கும் எட்டி உதைக்கும் அரபிக்கும் சலாம் போட்டு அவன் சொடுக்கும் சாட்டைக்கெல்லாம் பயந்து தன் சுயபலத்தை’ வரலாற்றை’ பாட்டன்முப்பாட்டன் ஆண்டப் பெருமையை’ வெறும் கைநீட்டிவாங்கும் மாதசம்பளத்தோடு மறந்துவருமோர் இனம் –

மீண்டும் ஒரு திரைப்படத்தால் தன்னை அலசிப் பார்த்து, தான் வந்த பாதையை திரும்பிப் பார்த்து, தன் உணர்வுகளை பாரம்பரிய அளவீட்டிற்குத் தக கிளர்த்தெழச் செய்து’ தன்னை ஒரு நெடிய பயணத்திற்கு தயார்செய்துக் கொள்ளுமென்று நம்பிய – முருகதாசின்’ சூர்யாவின்’ ஸ்ருதியின்’ இன்னும் திரைக்கு முன்னும் பின்னும் நிற்கும் பலரின் பலத்த உழைப்பிந்த ‘சிலருக்கு எட்டாத தூரத்திலிருக்கும் “ஏழாம் அறிவு” என்னும் திரைப்படம்.

கிட்டத்தட்ட ஆயிரத்து அறுநூறு வருடத்திற்கு முன் வாழ்ந்த பல்லவமன்னனின் மூன்றாம் மகனான போதி தர்மனை தன் அரச குருமாதா சீனா நோக்கிப் போகக் கட்டளை இடுகிறார். பெரியோரிட்ட வாக்கினைக் காப்பதை உயிர்விடும் செயலிற்கறிய ஒரு பெருங் கடமையாக எண்ணிய நம் தமிழர் மரபு வழிவந்த அந்த இளவரசன்’ போதிதர்மன் தன் ஆத்மபலத்தையும், கற்ற பல கலைகளின், கல்வியின், பெருமைகளையும் அடக்கமாய் ஒரு பார்வைக்குள் அடக்கிக்கொண்டு சீனதேசம் நோக்கி பயணிக்கிறார்.

கடவுள்தன்மை புரிந்தோருக்கு காணும் கல்லில் கூட கடவுளைப் பார்க்க முடிகிறது என்பதை என்றோ நம்பிவணங்கும் இனவழி வந்தவன்’ தான் போகும் வழியில் இருக்கும் புத்தரை மானசீகமாய் வணங்கி, தன் ராஜவம்ச உடைகளை கலைந்து சீனர் மரபு வழியணியும் எளிய உடைக்கு மாறி’ மூன்று வருடக் கால தரைவழிப் பயணத்தின் மூலம் சீனாவை சென்றடைய, அங்கே அவரை ஆபத்துவரும் நேரத்தில் சீனர்கள் நம்பமறுக்க, தன் யோகத் தன்மையை, தான் கற்ற கல்வியின் சிறப்பை, தமிழரின் பரந்த மனப்பான்மையை வெளிப்படுத்தும் இடமாக அந்த காட்சி அமைய, மரபு போற்றுமொரு நோக்கில் “இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்” என்பதற்கிணங்க அவர்களின் உயிர்காத்து, அடுத்தகட்டக் காட்சிகளில் தன் வருகையின் காரணத்தை சீனமக்களுக்குப் புரியப் படுத்துகிறார்.

தன் தமிழர் மனவாசத்தை, தூரநோக்குச் சிந்தனையை, கருணை மனப்பான்மையை, தான் அடைந்த ஞானத்தையெல்லாம் பார்க்குமொரு பார்வையில் வெளிப்படுத்துகிறார். சீனர்கள் அவரை தாங்கள் வணங்கும் புத்தருக்கு சமமாகக் கண்டாலும், அவர் தன் தோற்றத்தை வெளிக்காட்டும் பாங்கு நமக்கு ஐயன் திருவள்ளுவரையே நினைவூட்டுகிறது. சீனர்களுக்கு முதன்முதலாக சண்டை சொல்லித்தருமொரு காட்சியில் பக்கவாட்டில் பதியும் அவரது தோற்றம், அதே தாடியும், சுருண்ட முடிழகும், உச்சந்தலைமீது சுழற்றிய கொண்டையும், மார்பின் ஒருபாகம் போர்த்திய ஒற்றைத் துணியும், வித்தைக் கற்றுத் தரும் பாங்கும் நாம் காணாத நம் மூத்த ஆசானை நம் கண்முன் காட்டுகிறது.

ஆக, தற்காப்புக்கலை, பார்வையால் எவரையும் தன் வசப்படுத்தும் நோக்குவர்மம், பச்சிலை மருத்துவம், அதையும் பிறருக்குச் சொல்லித்தரும் உயரிய குணம், அதோடு பார்வையில் நிறைந்த யோகநிலையென தன் அத்தனை சிறப்பினையும்’ தனை நம்பிய மாணவர்களுக்கு சொல்லித் தரும் ஆசானாக போதி தர்மர் விளங்கியிருக்கிறார்’ என்று நம்பத் தக்க மனநிலையை சூர்யாவின் நடிப்பும், அதை இயக்கிய ஏ. ஆர். முருகதாசின் இயக்கமும் தருகிறது. பின், அதே நாம் கற்றுத் தந்த நம் கலை, இன்று நம்மையே திருப்பிக் கொண்டு தாக்க முற்படுவோருக்குப் பயன்படுமெனில் அதை தடுக்கும் வித்தையும் நம்மிடம் இல்லாமாலாப் போகுமென்று சிந்திக்க வைக்கும் படம் தான் இந்த “ஏழாம் அறிவு”.

எந்த கலையை நாம் கற்றுத் தந்ததாய் இத்திரைப்படமும் சில வரலாற்றுக் குறிப்புகளும் சொல்கிறதோ’ அதை நம்மிடமிருந்துக் கற்றுக் கொண்ட சீனப்படையினரே இன்று சிங்களனுக்குத் துணையாக களமிறக்கப் பட்டுள்ளனர். இன்றும் செய்திகளில் சீனப் படையினர் இலங்கை வந்ததாகவும் சிங்கள ராணுவத்திற்கு பயிற்சி அளிப்பதாகவும் செய்திவழி கேள்வியுறுகிறோம். ஆனால் உண்மையில் இவர்களையெல்லாம் கண்டு பயந்து ஒதுங்கிக் கொள்ள இருக்கிறோமா அல்லது எதையும் எதிர்த்து வெல்லத்தக்கவன் தமிழன் என்று உலகத்திற்கு புரியவைக்கப் போகிறோமா என்று பெருத்த பலத்தோடு நமைச் சிந்திக்கவைக்கிறது இந்த “ஏழாம் அறிவு”.

தான் யார்? தமிழன் என்பவன் யார்? தன் வரலாறு என்ன? தான் வாழ்ந்ததன் சாராம்சம் என்ன? ஏனிப்போது இப்படி ஆனோம்? இனி என்ன செய்யப் போகிறோம்? என்ன செய்யலாம்? எது செய்ய இயலும்? என்று உணர்வின் உள்புகுந்து உயிர்வரை உசுப்பிக் கேட்கிறது ஒவ்வொரு இளைஞனையும், ஒவ்வொரு மனிதம்மிக்க மனிதரையும் இந்த “ஏழாம் அறிவு”.

அடிப்பட்டு அடிப்பட்டு, உயிர்விட்டு உயிர்விட்டு, எதை இழந்தப்போதும்’ எம் வீரத்தை, எம் மாண்பிணை, எம் தமிழர் பாரம்பரியத்தை’ எள்ளளவும் விட்டிடாத எம் உறவுகளை, ஈழத்தில் துடிக்கத் துடிக்க, தன் கூட்டுச் சதியினால் எல்லோரும் ஒன்று சேர்ந்து ஒரு இனத்தையே கொன்றுக் குவித்த அவலத்தை, அதன் பச்சை துரோகந்தனை வெகு சாதுர்யமாக, காணும் அத்தனைக் கோடி கடைநிலைத் தமிழருக்கும் நேரிடையாக எடுத்துச் சொல்கிறது இத்திரைப்படத்தின் சிலக் காட்சிகளும் சில வசனங்களும்.

தமிழன் என்ற பெருமைமிகு ஒரு வார்த்தையைக் கேட்கும் இடமெல்லாம் இன்று பொறாமையால் பற்றியெரியும் தீயநெருப்பின் அவல முகத்தினைக் காட்டி, ஏன் நாமிப்படி தரங்கெட்டுப் போனோம், நமக்கு நடந்த சதிக்கான நம் தவறுகள் என்ன, இன்றும் நமக்கு நாமே ஏன் எதிரியாக நின்றுக் கொண்டு நம்மை அழிப்போருக்கே நாம் துணைப் போகிறோமே’ எனும் நம் விடிவிற்கான பல கேள்விகளை காட்சிகளின் மூலம் தூண்டிவிட்டு, செவிட்டில் அறைந்தாற்போல் மானவுணர்வின் உச்சத்தில் நகர்கிறது இப்படத்தின் சில காட்சிகள்.

கடவுள் ஒன்றெனப் புரிகையில், அது நம் நன்னடத்தைப் பொருத்து நமை காக்கும் விஷயமொன்றே என்றுப் புரிகையில், அதை புரிந்துக் கொள்ளும் அளவிற்கு மட்டுமே பக்தியும் வழிபாடுகளும் தேவையாகிறது. அல்லது அவரவர் புரிந்துக்கொண்ட அளவிற்கு மட்டும் அவைகள் போதுமாகிறது. இது புரிகையில் எவரையும் மதவழியில் வெறுக்கவோ ஒதுக்கவோ நமக்கென்ன உரிமையோ அல்லது அத்தகு அவசியமோ இருந்துவிடாது.

பிறகு ஏன் வெறும் மதத்தாலும், செய்யும் தொழிலின் நிமித்தம் வந்த பிரிவினையாலும் மனிதருக்கு ஒரே ஒற்றை முகத்தைத் தந்து, ஒருவரை ஒருவர் ஒதுக்கியும் பிரித்தும் மட்டப்படுத்தியும் நம் தமிழர் ஒற்றுமையின் பலத்தை நாமே வெகுவாய் குறைத்துக் கொள்கிறோம்?

இறை தத்துவம் என்பதை’ தனக்குள் இருக்கும், தன்னை சார்ந்து இருக்கும், தன் முன்னும் பின்னும் தானாகி பிற அனைத்துமாகி இருக்கும் இயற்கையின் நற்செயலிற்கான நன்றி செலுத்தலாக மட்டுமே பார்ப்பவர் தமிழர். அதின்றி, ஆன்மிகத்தில் கூட அறிவியல் புகட்டி வாழ்க்கைக்கு தேவையானவைகளை மட்டுமே அன்று “வரம் தரும் சாமியாக” பார்த்த நம் தமிழினம் இன்று மதம் ஜாதி என்றெல்லாம் காரணம் சொல்லி பிரிந்து தன் திறனையும் சிறப்புகளையும் கைக்கெட்டிய தூரம்வரைக்கும் பங்குப்போட்டுக் கொண்டு, தனக்குள்ளேயே தான் அடித்துக் கொண்டு, தனை பிறர் அழிக்கும் முன் தானே தன்னை அழித்துக் கொள்ளும் மூர்க்கதனத்தை விட்டு வெளிவந்து –

கடவுள் இதென்று புரிந்தப்பின், மதம் பிரிவு எல்லாமே இதென்று புரிந்தப்பின் எதன் பொருட்டும் இனி நாம் பிரிந்திராது நம் சுயவிருப்புவெறுப்புகளையெல்லாம் எடுத்து தூர வீசிவிட்டு தமிழர் எனும் ஒற்றைப் போர்வைக்குள், ஒரேப் பெருமைக்குள் நிறைவோமென்று மதங்களின் வெறியை அறுத்தெறிந்துவிட்டு மனிதத்தோடு மட்டுமே பேசுகிறது இந்த “ஏழாம் அறிவு”.

எனக்கு வலித்தது, எங்கெங்கோ என் தமிழன் அடிப்பட்ட போதெல்லாம் எனக்கு வலித்தது. நான் அழுதேன் புரண்டேன் தனியே அமர்ந்து செய்திகளைப் பார்த்து கத்திக் கதறினேன். இன்று அதற்கெல்லாம் மருந்தாக நான் இப்பேற்பட்ட இனத்தைச் சார்ந்தவன் என்று எம் தமிழர் வாழும் பகுதியெல்லாம் ஒரு திரைப்படத்தாலும் புரியவைக்க இயலுமென்று காண்பிக்கும்வகையில் இயக்கிய, திரைப்பட ஊடகத்தை எம் தமிழரின் பெருமையைச்சொல்ல பயன்படுத்திக்கொண்ட நன்றிக்குரிய திரைப்படமிந்த “ஏழாம் அறிவு”.

குறைகள் எதிலில்லை? நிறைகளைக் கடந்தும் நிற்கும் வெகுசில குறைகளை முன்னிறுத்தி தன்னை மெத்த அறிவாளியாகக் காண்பித்துக்கொள்ளத் துடிக்கும் பலரின் பார்வைக்கு, இலகுவாகக் கிடைக்கத் தக்க சில குறைகள் இப்படத்திலும் உண்டு. காரணம் எடுத்துள்ள பாத்திரங்கள், படைப்பின் நோக்கங்கள், கதையின் நுணுக்கம் அத்தகையது. காதல்ரசம் குறைத்தோ அல்லது அதையும் வேறுமாதிரிக் காட்டி படத்தை ஒரு வரலாற்றுப் பதிவாக மட்டுமேக் கொண்டுப் போயிருக்கலாம், ஆனால், அது இந்தளவிற்கு என்னொரு சாதாரண “திரைப்பட மோகம் மட்டுமேக் கொண்ட” ஒருசார்பு தமிழனிடத்திலும், தமிழரில்லாதோரிடத்தும் தமிழர் பெருமையை பறைசாற்றத் தக்க போய்செர்ந்திருக்குமா என்ற கேள்வியை தாங்கிக்கொள்கிறது.

இன்று உலகளவு விரிந்து நீதிக்கேட்டு நிற்கும் எம் தமிழர் பிரச்னையை ஒரு திரைப்படத்திற்குள் அடக்குவது என்பது அத்தனை சாதாரனமில்லையே? அதும் எம் மக்கள் எந்த பிரிவினைக்கும் ஆட்பட்டுப் போகாதளவிற்கு பொதுவாகவும், பின் பார்ப்போரை சிந்திக்கவைக்கும் விதாமாகவும் இத்திரைப்படத்தை அமைக்க எண்ணியிருப்பர் போல்.

காதிற்கினியப் பாடல்கள், விரும்பத் தக்க வரிகள் என்றாலும் பின்னணி இசையை இன்னும் ஒரு கல் உப்பு கூட்டும் அளவிற்கு வேறுமாதிரி கூட முயற்சித்திருக்கலாம். ஒரு சண்டைக் காட்சியைக் கண்டு பிரம்மிக்கும் அளவிற்கு ஒரு நிறைவு இப்படத்தின் பின்னணி இசையில் முழுமையாக இல்லை. பாடல்கள் மட்டும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரீதியில் தனையறியாத தொனியில் உணர்வுகளுக்குள் மென்மையாகவும் மறக்க இயலா இனிமையோடும் பதிந்துப் போகிறது.

இருந்தாலும், முதல்முறைப் பார்க்கச் சென்றபோது சில காட்சிகள் குழந்தைகள் உடன் இருந்ததால் சரிவர கவனிக்க இயலாமல் போக, இரண்டாம் முறை தனியாகச் சென்று பார்த்தேன். அப்போது நிறைய குறைகள் என்று எண்ணிய இடமெல்லாம் ரசித்துப் பார்த்துக்கொண்டிருக்கும் மக்கள்முன், படம் விட்டு வெளிவருகையில் உணர்ச்சிப் பெருக்கோடு போகும் தமிழர்முன் ஒரு பெரிய குறையாகத் தெரியவேயில்லை.

எனினும் “சில இடங்களில் பாடல்களே இன்றிக் கூட ஒரே வரலாற்று சிந்தனையோடு நம் தமிழரின் சிறப்பு கண்டு பிரம்மிக்கும் ஒரு உணர்வோடு மட்டுமேக்கூட இப்படத்தைக் கொண்டு சென்றிருக்கலாம். அது ஒருவேளை இன்னும் சிறப்பாக, வருமானம் கடந்து நம் மண்ணுக்கு செய்த ஓர் நன்றிக்கடனாகவே இருந்திருக்கும்” என்ற எண்ணம் மீண்டும் மீண்டும் எழாமலில்லை.

அதுபோல் திரைக்கதை இன்னும் வலுவாக இருந்திருக்கலாம். வசனங்கள் எதிரியைத் தாக்கும் ஈட்டிபோல் பாய்ந்தாலும் இன்னும் செதுக்கியும், சில இடங்களில் வசனங்களைக் கூட்டியும், ஒற்றுமைக்கு வலுசேர்க்கும் காட்சிகளை மேலும் கூர்மைபடுத்தியும் இருக்கலாம்.

போதிதர்மன் சீனதேசம் போகையில், முதன்முறையாகக் காட்டுமந்த உருவாக்கப் பட்ட கிராமமும், பன்னிரண்டே நாள்களில் அரவிந்தை போதி தர்மானாக மாற்ற திட்டமிடும் காட்சி ஒன்றில் “சுடுகாட்டின் நுழைவாயிலில் நின்றுக்கொண்டு சூர்யா ஸ்ருதி மற்றும் நண்பர்கள் எல்லோரும் திட்டமிடத் துவங்கும் முன், ஆட்டோவிலிருந்து இறங்கி வரும் ஸ்ருதியின் முகத்தில் அடிப்பட்டத் தழும்பாகக் காட்டும் முகப்பூச்சு அப்பட்டமாக தெரிவதும், மாதா மருத்துவமனையிலிருந்து ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு பணி என்று பிரித்துக் கொடுத்து ஸ்ருதி திட்டம் தீட்டும் காட்சிகள் சற்று தரம் போதாமலும், முடிவில் படம் பார்க்க வந்தவர்கள் தமிழன் என்னும் உணர்வினால் உறைந்திருக்க’ ஒரு சப்தமுமின்றி ஏதோ மின்சாரம் துண்டிக்கப் பட்டதுபோல் சூர்யா வணக்கம் சொல்வதுபோல் முடியும் காட்சியும் மனதிற்குள் “இன்னும்கூட தரமாக முயற்சித்திருக்கலாம்” என்ற எண்ணத்தை எழச் செய்கிறது.

என்றாலும் ஆத்மார்த்தமாக மனம் மெச்சும், சிந்திக்கவைக்கும், உணர்வில் தன்னை திருப்பிப்போட்டு’ நான் தமிழன்.. நான் தமிழன்.. என்று தனக்குள்ளே தன்னை கர்ஜித்துக் கொள்ளவைக்கும் பெருமைமிகு காட்சிகளும் இயல்பாகவே இருப்பது மிகப் பாராட்டிற்குரியது.

இறுதிக் காட்சியில் தன் தந்தையிடம் இருந்து அல்லது தன் ஆசானிடமிருந்து தான் கற்றுக் கொண்ட கலையை வைத்தே தன் ஆசானை அடிக்கும் ஒரு மாணவனுக்கு ஆசான் என்பவர் யார்? நல்லது செய்தோரிடத்தில் தீயது எப்படி மண்டியிடும்? போன்ற கேள்விகளுக்கு பதிலுரைக்கும் விதமாய் அந்த இறுதி சண்டைக் காட்சி அமைந்துள்ளது. கடைசியில் அந்த வில்லன் அடிபடும் காட்சியின் ஒவ்வொரு நகர்வும், அவன் வாங்கும் ஒவ்வொரு அடியும் ஏனோ நாம் வாங்கியதைத் திருப்பிக் கொடுக்கும் உணர்வாகவும், எம் இனம் அடிப்பட்ட போதெல்லாம் வலித்த இடத்திற்கு மருந்திடும் ஆறுதலாகவும் இருந்ததை சொல்ல மறுப்பதற்கில்லை. நன்மை என்றும் நன்மையே பயக்கும் என்று நம்பத்தக்க அந்த இறுதிக் காட்சி’ உலகிற்கு வீரத்தையும் உன்னத பண்புகளையும் கற்றுத் தந்த தமிழினத்தை நாளை உலகமே ஒன்று சூழ்ந்தாலும் ஒரு இழையளவும் அசைக்க இயலாது எனும் தீரத்தை இத் திரைப்படத்திலாவது மனது சலிக்க சலிக்க பார்த்துக்கொள்ள முடிகிறது.

என் சகோதரி ஒருவர் எழுதிய கவிதையின் அர்த்தம்போல, நம் விளையாட்டுக்களைக் கூட நாம் பிறரது வழித்தோன்றலாக எண்ணி ஒதுக்கி ஒதுங்கி இருக்கும் இந் நிலையில், கலை என்பது அழிவதுபோல் தெரிந்தாலும், ஏதோ ஒரு கலைஞனின் ரத்தத்தில் இன்னும் இன்னும் இக்காலமன்றி எக்காலத்திற்கும் அது மிச்சப்பட்டேக் கிடக்கிறது. அதை கமலின் வழியே வந்த அவருடைய மகள் ஸ்ருதியும் நிரூபிக்கிறார்.

கமல் வந்து சொல்லித்தர அவசியப் பட்டிடாத வெகு யதார்த்தமான நடிப்பென்றாலும், அவர் அழுகையிலும், சிரிக்கையிலும், பார்க்கையிலும் ஒரு இருபது முப்பது வருடதிற்கு முன் பார்த்த கமலஹாசனையே நினைவுபடுத்துகிறது. ஆனால் இதில் தனித்திறன் என்னவென்று பார்த்தால் கமல் இத்தனை வருடகாலமாய் நடித்துவிட்டு இன்று காட்டும் ஒரு வியக்கத் தக்க முகஅசைவுகளை தன் முதல் படத்திலேயே ஸ்ருதி காட்டியிருப்பது, அவருக்கான நல்ல ஒரு இடம் திரைப்படவுலகில் இருப்பதை இந்த “ஏழாம் அறிவும் பதிவு செய்கிறது. என்றாலும், தமிழை செவிட்டில் அறைந்தாற்போல் அழுத்தமாகப் பேசும் குரல் இருப்பினும், உச்சரிப்பை இன்னும் கூட ஒரு தமிழச்சி என்று சொல்லத் தக்க சரிசெய்துக் கொள்ளல் ஸ்ருதி நடிக்கயிருக்கும் வேறு பல பாத்திரங்களுக்கு அவசியப் படலாம்.

இயற்கைக்குப் பின், இறந்த பெரியோரை வணங்குதலும், நாட்டார் தெய்வ முறை எனும் முன்னோரை வணங்கும் முறையும் நம்மிடம் இருந்ததையுமே புத்தரை வணங்குதலும், அதன் பின் வந்தோரை வணங்குதலுமாக இத்திரைப்படம் காட்டுகிறது. அவ்வழியே இன்றும் பல தேசங்கள் வணங்கிவரும் ஒரு மாமனிதரை நம் வணக்கத்திற்குரிய அத்தமிழரை நாம் நேரில் கண்டிருந்தால் எத்தனை மகிழ்ந்து, மனதாலும் உயிர்நிறையும் உணர்வாலும் அவரை உள்வாங்கி, தொழுதிருப்போமோ அப்படி ஒரு மாண்பினை சூர்யாவின் முகமும், ஞானம் நிறைந்தப் புன்னகையும், நடிப்பும் காண்பித்தது. ஒவ்வொரு கட்டத்திலும் நமக்கு சூர்யாவை விட போதி தர்மரே அதிகம் தெரிகிறார்.

உண்மையில், சூர்யா வாழும், அவர் கடைபிடிக்கும் அவரின் ஒழுக்கம்’ மனசு’ பரந்த மனப்பான்மை’ அவர் செய்யும் நல்லவைகளென அனைத்துமே இப்படத்தின் பாத்திரவழியாக உலகிற்கு வெளிச்சமாகத் தெரியவருகிறது என்பதும் உண்மை. பொதுவாக சூர்யா ஒரு பண்பட்ட களிமண், எதுவாக சிற்பிக்கு தேவையோ அதுவாக ஆகிவிடும் பொக்கிஷம். என்றாலும், அவரை பொக்கிஷமாக்கிய பெருமை ஏ.ஆர்.முருகதாசிற்கும், ஆன பெருமை சூர்யாவிற்கும் காலத்திற்கும் நிலைத்திருக்கும்.

தமிழரின் வாழ்வுநிலையை சொட்டிய ரத்தம் ஊறிய மண்ணும், மண்ணில் மறைந்தாலும் காற்றோடும் மழையோடும் கலந்த’ காலத்திற்கும் அழியாப் புகழும், மொழி இனம் என்றுமட்டும் நின்றிடாது யார்மூலமேனும் வாழ்ந்து நிலைத்து பலர் பேசிக்கொள்ளும் பெருமையுமாக விளங்கும் நம் உழைப்பும், பண்புகளும், கலைகளும், நாகரிகமும் வானமும் பூமியும் உள்ளவரை, கடலென பரந்துவிரிந்து மனிதரின் நாடிதுடிப்பின் ஒவ்வொரு அசைவிலும் நின்று மௌனமாகவேனும் பேசிக் கொண்டேயிருக்கும்..

வித்யாசாகர்

Posted in திரை மொழி | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , | 9 பின்னூட்டங்கள்