18) பெண்களைத் தேடும் கண்கள்..

ண்குத்திக் கிழிக்கும் பார்வைகளில் வடிகின்றன
காமப்பசிக்கான ரத்தம், இரத்தம் சுவைக்கும் மிருகக்கடலில்
விட்டில்பூச்சிகளென விழுந்து – உடலாசைநெருப்பில்
கருகிப்போகின்றன பல பெண்களின் முகங்கள்;

பச்சைப் பச்சையாய் மணக்கும் – அம்மா
அக்காத் தங்கைகளின் வாசமருத்து, எப்படி ருசிக்கிறதோ
அந்த வெறும் தசையும் வளைவுகளும்
உரிமையில்லாப் பார்வையும்;

மனதை ரணமென வலிக்கச் சுடும் – குற்றவுணர்வை
கசக்கியெறிந்துவிட்டு – ரசிக்கப் புதுப்புது
பெண்களைத் தேடும் ஆணுக்கு’ எப்படிச் சொல்வேன்
அதைக் கடந்து வா, உலகமுன் கையிலென்று;

வலிக்க வலிக்க இரவுகள் – உதிரும் குழலென
தனிமையின் விரகத்தில் தகித்துத் தகித்து விழ,
எண்ணிப் பார்க்குமந்த – கடந்த வயதுகளில்
வாழ்க்கை வெறுத்து வெறுத்தேப் போனது வதைதான்;

கடல்சில தாண்டி – பருவம்
மூழ்க மூழ்க உழைத்து
நரைக்கும் முடிகளில் – ஆசை
வெம்பிக் கிடப்பதுக் கொடுமைதான்;

கற்கள் இறுகியப் பாறைகளுடைத்து – ஒருதுளி
ஈரம் தேடும் அந்நியப் பறவைக்கு
ஆங்காங்கே ஓடும் நதியது – பார்க்க
தாகமொழிக்கும் தண்ணீர்தான்;

கடக்கும் பெண்களின் இனிக்கும் பார்வையது
இருண்டோரா’ உன்னோடும் என்னோடும் நடக்கின்றார்?
இரத்த உறவென்று அவரை உணர்வதில் விரிகிறது
தோழமைக்கான சிறகுமென்பதை’ வெப்பந்தனிந்த பார்வையே யறியும்;

எதார்த்தமாய் யாரோ எட்டிப்பார்க்கும் ஒரு நோக்கில்
ஏதோ ஒரு ஜீவன்’ ஒட்டியிருப்பதென்பது வேறு,
உடல்மொழியெனும் அசைவை – ஒவ்வாதப் பலவாறு
தவறாகக் கற்று’ காற்றில் காற்றோடு மனது கலைந்துப்போவது வேறு;

சரிப் போகட்டுமென்று விடுவோம்;
இனியேனும்,
நடக்கும் நடையில் புரியும் குருட்டுப் புலம்பல்களை
ஏதேனுமொரு லட்சியக்குழிக்குள் போட்டுப் புதைத்துவிடு;

மனதின் அழுக்கை அண்ணாயெனும் வார்த்தைகளில்
நிரப்பி அலசியெடு, பிடித்த பெண்டிருக்கு இருக்கும் மனதின்
நீளம் ஆழம் கிடைத்தளவுப் படித்துவிடு, அவர்
பார்க்கும் பார்வையில் நீ இத்தனைச் சரியென்றுக் காட்டிக்கொடு;

பின் நிமிர்ந்து எழுந்து நீ நடக்கும் நேர்மை
நடையின் மிடுக்கில் – நிற்பர் பலர்
அம்மா அக்காத் தங்கையோடு ஒரு
காதலியோ; உனக்கான மனைவியோ; அன்று

உலகை ஒரு சின்ன மனசுக்குள்
உனக்காய் சுமந்து இரு!!
—————————————————————
வித்யாசாகர்

Posted in நீயே முதலெழுத்து.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

17) சமைக்கிறவன் சொல்லாதக் கதை…

நாலுச் சுவத்துக்குள்ள வாழ்க்கைதாங்க – எங்க
கட்டில்சுகமும் கனவுலதாங்க,
சம்பளமெல்லாம் பெருசுதாங்க – அதைச்
சம்பாதிச்சும் வாழ்க்கை நெருப்பிலதாங்க;

சுட்ட பணம் பளபளக்கும் – மிளகாய்ச்
சிவப்பாய் நாட்கள்கூடக் கடக்கும்,
அனல்’ல வெந்து சாகும்வரை – நாங்க
சமைக்கும் சோறு மணமணக்கும்;

நொந்த மனசு நெடுநாள் வலிக்கும் – கரண்டி
துழாவி’ தெரியும் முகங்களைப் பார்க்கும்,
வடிச்ச சோறு ஆவிப் போல – வயசு பறந்து
வாழ்க்கை உப்புச்சப்பில்லாம முடியும்;

முப்பது கடந்து – மனசு பொண்ணு தேடும்
தேடல் நீளும், எங்கோ ஒரு பொண்ணுக் கிடைத்தாலும்
அது தொப்பியைக் கழற்றிப் பார்க்கும் – தொந்தியைத்
தடவிநிக்கும் – வேறவழியில்லாம மனசு வேறுவீட்டைப் பார்க்கும்;

எப்படியோ திருமணமும் முடியும் – போகும்வரும் சொச்சநாளில்
பேருசொல்ல பிள்ளைகளும் பிறக்கும், பிறகு
பிள்ளைகளைப் பார்க்காம – மனைவியிடம் சேராம
போறநாளு ஒவ்வொன்னும் ‘ஏன்டா கட்டிக்குனன்னு கேள்விக் கேட்கும்;

சரி தலைஎழுத்தேன்னு சாம்பார் வைப்போம்
குழம்பு வைப்போம் சுட சுட இறக்கி வைக்கையில்
கைச்சுட்டாலும் கருமம்னு விடுவோம் – கரிப்பிடித்த
அடுப்போட மனசையும் போட்டெரிப்போம்;

உடம்பு முடியலையோ – வெகுநாளாத்
தூங்கலையோ – நாள்கடந்து நாங்க
திங்கலையோ’ கேட்க யாரிருக்கா – ஒருநாளு
சமைக்கலைன்னா கூலி குறைக்க ஆளிருக்கும்;

காதல்ல தோற்றாலும் – கட்டின மனைவி
கல்லெறிந்தாலும், வீட்டில் யாரோ செத்தாலும்
எங்கள் கண்ணீரும் சுவையாகும் – வெளியத்
தெரியாதச் சாபமாகும்;

கருவேப்பிலை பிச்சிப் போட்டா – மனசும் கூட
பிய்ந்துவிழும், கடுகள்ளிப் போட்டாலும்
கனவெல்லாம் கூடவிழும், எரியும் நெருப்பைப் போல
மனசெரிந்து விறகாக் கருகும்;

பண்டிகைன்னாலே பயம் வரும் – அன்று
அரைப்பொழுதில்’ ஒரு நாள் வேலை கணக்கும்
கொண்டாடத் துடிக்கும் மனதில் – பிள்ளைங்க
அப்பான்னு ஏங்குமோன்னு கவலைவரும்;

பொண்டாட்டிப் பேசிடுவா; என்ன தொழிலுய்யான்னு
சொல்லாமல் முனுமுனுப்பா, வெடிக்கும் பட்டாசு சப்தம்
அவப் பேசும் தொலைப்பேசியில் கேட்கும், மனசு
சிட்டா பறந்து அம்மா அப்பாவையெல்லாம் நினைக்கும்;

படிச்சவங்களுக்கு மின்னஞ்சல் வரும் – நாங்க
படிச்சாலும் மீன்குழம்புதானே மிச்சம்? கொழும்பு கொதிக்கும்
நேரத்துக்குள்ள பழைய கடிதம் நினைப்பு வரும் – எடுத்துப்
படித்தா லழுகை வரும்; அவப் பட்டினி ஆங்காங்கே ஈரமா எழுதியிருக்கும்;

என் குறைய நான் சொல்ல எனக்குன்னு – யாரிருக்கா
இன்னொரு சமையல் காரன் என்னைப்ப் போல
எதிரிருப்பான் – எங்களுக்கு புரிஞ்ச வாழ்வை எதுக்கு சொல்லி
வெளியவைக்க, உள்ளே புகையிலை வெச்சி பீடியா புகைச்சித் தீர்ப்போம்;

ஒரு கிளாசு சாராயம் விளக்கு வெச்சா
குடிச்சித் தீர்ப்போம், விடிஞ்சா தெரியும் கறுத்த முகத்தில்
யாரும் துப்பாத எச்சில் துடைப்போம்’
குடிகாரன் பேரழிக்க நல்ல சமயல்காரன்னுப் பேரெடுப்போம்!
—————————————————————————–
வித்யாசாகர்

Posted in நீயே முதலெழுத்து.. | Tagged , , , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

16) மண் தின்ற மழையே…

ழையே! மழையே!
எம் மண்தின்ற மழையே..
உயிர்வெள்ளத்தின் கருசுமந்த மழையே..
என்செய்தோம் யாம்..

வயிரருத்துப் போட்டதுபோல் எம்
மண்ணறுந்துப் போனது பலகாலம்
மழைபார்த்த பூமியோடு எங்கள் மார்பும்
பாலின்றி வெடித்து பிள்ளைகள் பசியால் அழுதது பலகாலம்;

மழைக்கு அஞ்சி சேர்க்கும் எறும்புப் போல
எதை சேர்த்துவைக்க எம் மழையே ?
ஒரு வேளைப் பொழுதிற்கே ஓயாது உழைப்பவர்கள்
மறுநாளை பற்றி மறுநாளே நினைப்பவர்கள்

காலில் அடிபட்டால்கூட – பட்டபோது மருந்திட்டு
அடுத்தநாள் வலியோடு வாழ்வு ரத்தமாய் கசிந்தாலும்
துடைத்தெறிந்துவிட்டு தொழில்பார்க்க போய்த் தீரும்
சாபம் பெற்ற பாவப் பிறவிகள்;

பட்டவலி போதாமல், அவன்
இட்ட கடன் தீராமல், விதியென்ற ஒரு
இல்லாத கிணற்றுக்குள் சாகும்வரை மூழ்கப் பட்டவர்கள்
மூழ்காத குறையொழிக்க நீயும் வந்தாய் எம் மழையே;

ஒருநாள் இருநாள் பட்டினி நெருப்பில் புசுங்கினோம்
இடையே அடிக்கும் குளிரில் நோயுற்றுப் போனோம்
சோறில்லா வயிற்றுக்கு மருந்தெங்குப் போட
மலைத்துப் போய் மழையோடு மண்ணாகவேப் போகிறோம் மழையே;

ஒழுகிய இடத்திலெல்லாம் பாத்திரம் வைத்தோம்
வைக்க பொருளில்லாத யிடத்தில் – கண்ணீர் பூசினோம்
மீறியும் உள்புகும் மழையை உயிர்விட்டுத் தடுக்கிறோம்
ஒருசொல் கேளாது எங்கள் வீடுடைத்துப் போனாயே மழையே;

உன்னைப் போய் பலர் கடவுள் என்கிறார்
உன்னைப் போய் பலர் கவிதை என்கிறார்
உன்னால்தான் எல்லாமே என்கின்றார் – ஆம்
உன்னால்தான், உன்னால்தான் எல்லாம்; எங்களின் வாழ்வும்
எங்களின் மரணமும் உன்னால்தான் எம் மழையே;

ஒரு குறிப்பொன்றுக் காண் –
பெய்யாமல் இருந்துவிட்டு பூமி வெடித்தப்பின்
அடைமழையெனப் பெய்து
வெள்ளமெனப் புகுந்து –

வீடழிக்கும் நாட்களின் குறிப்பில் இதையும் எழுதிக் கொள்
நீ வளர்த்த பயிர் நீ; வளர்த்தப் பிள்ளைகளெல்லாம்
நாங்கள் விட்டுப்போகும் உயிர்களின் மிச்சத்தில்
அனாதையாய் கிடக்கும் அடுத்தமுறை வருகையில் அதையும் வாரிச் செல்..

மாடிவீட்டுக் கனவுகளுக்கு நீ விருந்தாளியாய் இருந்துப் போ
ஆடிப்பாடி விளையாட நீ கொண்டாட்டமாய் இருந்துப் போ
ஓலைவீட்டு விவசாயிக்கு நீ வரம் தரும் கடவுளாய் இருந்துப் போ
உயிர் அறும் பொழுதுகளில் வந்து; யெம் மண்தின்றும் போ நீ மழையே!!
————————————————————————–
வித்யாசாகர்

சமர்ப்பணம்: மழையால் அவதியுறும் குடும்பங்களுக்கும், நதியோரமும் கடலோரமும் குடிசைகள் அமைத்து, ஒற்றை நாள் பிழைப்பையே பாரமாக எண்ணிச் சுமந்துக் கொண்டிருக்கும் குடும்பங்களின்’ இம் மழையினால் ஏற்பட்ட பாதிப்பிற்கு வருத்தமும், அவர்களின் கலைந்துப் போயிருக்கும் வாழ்வாதார நிலைக்கு இக்கவிதைச் சமர்ப்பணமும்..

Posted in நீயே முதலெழுத்து.. | Tagged , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

100) ஞானமடா நீயெனக்கு நிறைவடைகிறது..

1
மையலறைக் குழாயில்
குடிக்க
தண்ணீர் பிடித்துக் கொண்டிருக்கிறேன்;

பாதி நிறைவதற்குள் நீ
என்னருகே வந்து
அப்பா எனக்குக் குடிக்க நீர் வேண்டும் என்கிறாய்;

நான் தண்ணீர் நிரம்பிடாத பாதி சொம்போடு
நீ கேட்டதும் வெடுக்கெனத் திரும்பி
உனக்குத் தண்ணீர் கொடுக்கிறேன்;

நிருத்திவிடாதக் குழாயிலிருந்து
தண்ணீர் போய்க் கொண்டேயிருக்கிறது
நீயும் குடித்துக் கொண்டேயிருக்கிறாய்,
இரண்டையுமே என்னால் நிறுத்த இயலவில்லை!!
—————————————————————

2
நீ
நடந்து நடந்து
இங்குமங்கும் ஓடுகிறாய்
நான் உன் பின்னாலயே
ஓடி வருகிறேன்;
நீ நிற்காது சுற்றி சுற்றி வளம் வருகிறாய்
கவிதைக்கான பக்கங்கள் –
கிறுக்கக் கிறுக்க நீள்கிறது….
—————————————————————

3
நீ
பெரிய அழகு
உன்னைத் தூக்கி உண் முகத்தோடு
முகம் வைத்து
எதிரிலுள்ள கண்ணாடியைப் பார்ப்பேன்
கண்ணாடியில் நீ
புதியமாதிரி இருந்தாய்
நான் பழையமாதிரியே யில்லை
நானும்’ அப்படி ஓர் அழகென்பார்கள் அப்போதெல்லாம்
இப்போதில்லை –
அசிங்கம்போல் சில சாட்சிரேகைகள்
முகத்தில் ஓடுவது அதோக் கண்ணாடியில் தெரிகிறதே;

அழகு இப்படித் தான் –
வயது கூடினால் அழகு கூடும்
வயது கூடினால் அழகு குறையும்
வயது கூடினால் அழகு மறையும்
நான் இரண்டாமிடமிருந்து மூன்றாமிடம்
கடக்கப் போகிறேன் –
நீ முதலிடத்திலிருந்து அழகாய் தெரிகிறாய்
உன் அழகிலிருந்து என் அழகு மறையும் இடைப்பட்ட
இடைவெளியில் எனக்கு அழகிற்கான
ஞானம் பிறக்கிறது;

அழகு நிரந்தரமற்றது –
பார்வையில் மட்டுமே பூக்கவும் சிரிக்கவும் செய்கிறது,
அழகில் பூப்பவரும் சிரிப்பவரும் கூட
நிரந்தரமற்றேப் போகின்றனர்..
—————————————————————

4
னக்கு ஏதேனும்
வேண்டுமெனில் என்னிடம் வந்துக்
கேட்பாய்;

நானும் நீ கேட்டதும்
நல்லது கெட்டது யோசிக்காமல்
எடுத்துக் கொடுப்பேன்

அம்மா அதைப் பார்த்துவிட்டு
ஓடிவந்து பிடுங்கி எறிவாள்

கேட்டால் குழந்தைக்கு
இது சளி பிடிக்கும்
மிட்டாய் அதிகம் பல் சொத்தைப் பிடிக்கும்
என்றெல்லாம் சொல்வாள்;

நீ வீல் என்று கத்துவாய்
நான் பின்புறம் போய் அதை கொண்டுவந்து
அம்மாவிற்குத் தெரியாமல் கொடுப்பேன்
அம்மா அதையும் கண்டுவிட்டு
கோபத்தில் என்னையும் உன்னையும் முறைப்பாள்;

எனக்கு உள்ளூரப் புரியும்
அம்மா’ எப்போதும் அம்மா தான்….
———————————————————————————————-

5
நீ
அழுவதற்கான
காரணங்கள்
ஆங்காங்கே நம்
வீடெல்லாம் இருக்கும்;

உனை அழவிடாமல் பார்க்க
துடிக்க
ஒரே ஒரு காரணம்
உள்ளிருந்து உன் குரலாய் கேட்கும்
அப்பா…..’ என..

அந்த ஒரு சொல்லின் அடக்கத்தில்தான்
பாதியிலிருந்து மீதம்வரை
முழுமைப் பெற்றுவிடுகிறது – இன்று என் வாழ்க்கையும்,
நாளை உன் வாழ்க்கையும்!!
—————————————————————

6
நீ
யும் அண்ணாவும்
விளையாடிக் கொண்டிருக்கிறீர்கள்,

உங்களுக்குள் சண்டையில்லை
நீ பெரிது நான் பெரிதில்லை
ஆண்பெண் அப்படி எல்லாம் ஒன்றுமில்லை
எனக்கு வேண்டும் உனக்கு வேண்டும் என்றுக் கூட இல்லை

எங்கு பின் முளைத்துவிடுகிறது
அதலாம் என்று உற்றுப் பார்த்தேன் நான்;

அம்மா வேறு அறையிலிருந்து
அவசரமாக உள்ளே வந்தாள்;

டேய்… பொம்பளைப் பிள்ளைடா அவ
நெத்தில பொட்டு வை
காதுல அந்த முத்தை மாட்டு
கால்ல காப்பு போடு
கையில அந்த கருப்புக் கயிறைக் கட்டு என்றாள்;

திருத்திக் கொள்ள வேண்டிய இடங்கள்
நிறைய இப்படியும் அப்படியும்
நமக்குள் இருப்பது புரிந்தது;

நான் அதலாம் போடவில்லை
அம்மா இல்லாத அடுத்த அறைக்கு
குழந்தையை தூக்கிச் சென்றேன்;

நான் சட்டென அங்கிருந்து விலகிப் போனதும்
அங்கே –
அவள் நிற்கும் அந்த அறையில்
அவள் முகத்தில் – ஒரு
நிசப்தம் நிலவியது,

அந்த நிசப்தத்திற்குத் தெரியும் – என் கோபம்
அம்மா சொன்ன பொட்டு காப்பு முத்தில் அல்ல
பெண்ணுக்கு மட்டும் போடச் சொன்னதில்’ என்று!!
—————————————————————

7
ன் மனைவியை நான்
திருமணம் முடிந்ததும்
இச்சமூக முறைப்படி
கதற கதற அவளின் பிறந்த வீட்டிலிருந்து
என் வீட்டிற்கு அழைத்து வருகையில் – கொஞ்சம்
வலித்தது;

மிச்சம் –
உன்னை நான்
உன் கணவன் வீட்டில்
விட்டுவருகையில்
உயிர்போவதுவரை வலிக்கலாம்;

இங்கே வலிப்பதன் பிழை’ நானா?
எனை இப்படி வளர்த்த இச்சமுகமா?’ என்று
சிந்திக்கவைத்த ஞானமடி நீயெனக்கு!!!
—————————————————————
வித்யாசாகர்

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

குவைத்தில் மாபெரும் மண்ணிசைக் கலைவிழா.. (24.11.2011)

டி ஓடித் திரிகிறோம் சளைக்கவில்லை
ஒவ்வாதப் படியேறி உதவி வேண்டினோம் வருந்தவில்லை
காசுப் பணம் போனாலும் எங்கள் கால்கள தேய்ந்துப் போனாலும் – எம்
தமிழ் கேட்கும்திசையெட்டும் வியர்வை சொட்ட – எங்கள் உழைப்பிருக்கும்
உதவ நல்எண்ணம் கொண்டோர் பலரிருக்க துணிவுமிருக்கும்
தமிழுக்குப் பெருமைச் சேர்க்கப் பலர் உள்ளவரை –
காற்று வீசும்வரை கதிரவன் தோன்றும்வரை – எம் தமிழுமிருக்கும்;
அந்த தமிழெங்கள் குவைத்தின் பாலையிலும் மணக்க விழா எடுத்துள்ளோம்’
கவியரங்கம், மண்ணிசைப் பாடல்கள், ஆடல்கள் என பட்டியலிட்டுள்ளோம்’
“மண்ணிசைக் கலைவிழா-2011” என்றதற்குப் பெயர் வைத்துள்ளோம்; இன்னும் இருவாரம் பொறுத்திருந்துப் பாரீர்; அனைவரும் கூடி வாரீர்; ஒற்றுமை ஓங்க நல்ஆதரவுத் தாரீர்..

நாள்: 24.11.2011, வியாழக் கிழமை, மாலை 5 மணியளவில் துவக்கம்.
இடம்: அமெரிக்கன் சர்வதேச பள்ளிக்கூட வளாகம், மைதான் அவல்லி, குவைத்.
தொடர்பிற்கு: 97801299, 67077302

பேரன்போடும் பெருநன்றியோடும் அனைவரையும் வரவேற்று

கைகூப்பிக் காத்திருக்கும் –

உங்களன்பு வித்யாசாகர்
(வளைகுடா வானம்பாடி கவிஞர்கள் சங்கம், குவைத்)

குறிப்பு: வெளிநாட்டுல இருந்து வரணும்னு தயவுசெய்து யாரும் விமானப் பயணச் சீட்டுக் கேட்றாதீங்க..

Posted in அறிவிப்பு | Tagged , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்