காற்று வீசிடாத வான் கிழித்து, பசுமை பூத்திருந்த தரை நோக்கி விரைந்தது நான் பயணிக்கும் அந்த ஸ்ரீலங்கன் விமானம்.
என் தாயின் மடி தொடும் உணர்வில் – விமானம் நெருங்க நெருங்க ஆசை பூரித்து, வாசலின் முன்வந்து, தரையிறங்கியதும் திறக்கவிருக்கும் கதவு நோக்கிச் நின்றுக் கொண்டேன். விமானம் அறிவித்திருந்த நேரப் படி தாமதமின்றி கொழும்பு விமானதளம் நோக்கி தரையிறங்கியது.
விமானப் பணிப்பெண் ஒருவள் அவசரமாக என்னருகில் ஓடிவந்து, விமானம் தரையிரங்குகையில் அமர்ந்துக் கொள்ளவேண்டும் நிற்கக் கூடாது என்று கட்டளையிட்டாள்.
என் தேசத்தின் சுவாசக் காற்றினை முதன் முதலாக சுவாசிக்கும் தருணத்திற்குக் காத்திருப்பவனாய், இரண்டு கைகளையும் இறுக்கிக் கட்டிக் கொண்டு ஜன்னலின் வழியே கொழும்பு நகரத்தின் இயற்கை வளங்களை பார்தாவரே; அருகிலிருந்த இருக்கை ஒன்றினில் அமர்ந்துக் கொண்டேன்.
சற்று நேரத்தில் விமானம் விமானநிலையத்திலிருந்து சற்று தூரத்திலேயே நின்றுவிட, எல்லோரும் அவசர அவசரமாக தற்காலிக படிக்கட்டின் வழியே இறங்கி அங்கு வெளியே நின்று கொண்டிருந்த ஒரு பேருந்தினுள் ஏறிக் கொண்டிருந்தார்கள்., நானும் மெல்ல என் ஈழத்து மண்ணை முதல்முதலாய் தாயை பார்ப்பவனைப் போல பார்த்துக்கொண்டே இறங்கினேன்.
மேலிருந்து கீழிறங்குகையில் உள்ளே ஒரு படபடப்புப் பற்றிக் கொண்டது. ‘ஏனோ என் தாயின் தலை மேல் பதம் பதிக்கப் போகிறோமோ எனும்போல் ஒரு மரியாதை அது. என் தாய்மண்ணின் உடல் தொட்டுப் பூரிக்கப் போகிறோமோ எனும் படபடப்பு அது.
பின்னால் வருபவர்கள் என் தயக்கம் பார்த்து நகர்ந்து எனை கடந்து முன்னே சென்று விட, நான் தரை தொடும் முன் சற்றமர்ந்தவாறு கீழே குனிந்து முதலில் ஒரு கைப்பிடி மண்ணெடுத்து என் ஈழத் தாயே என கண்களில் ஒற்றிக் கொண்டு ‘கால் பதித்தேன். அருகில் எனை கடந்து சென்றவர் ஒருவர் சிரித்துக் கொண்டே போனார்.
அதை பற்றி எல்லாம் எனக்கு யோசிக்கவே தோணவில்லை. உள்ளே இம்மண்ணின் விடுதலைக்கென இத்தனை வருடங்களாய் சிந்திய ரத்தம் அனைத்தும் ஒரு நொடி மண்ணைத் தொட்டதும் எனக்குள்ளே சுட்டு குளிர்ந்தது.
வெகு நாளின் ஆசை இது. ஈழத்திற்கு வரவேண்டுமெனக் காத்திருந்த வெகுநாளின் கனவு இது. எப்படியோ இன்று அது நிகழ்ந்துவிட்ட மகிழ்வில் திளைத்து நடக்கிறேன்..
‘எங்கோ என்றோ பிரிந்து போன உறவுகளின் ஸ்பரிசம் என்னுள்ளே பட, ஊரெல்லாம் சுற்றியலைந்த நான் இன்று எனக்கான ஒரு தேசத்தில் கால் பதித்து விட்டதாய் எண்ணி மகிழ, என் இத்தனை வருட காத்திருப்பிற்கு எனக்கு வெகுமதியாகக் கிடைத்தது வெறும் நான்கு மணி நேர தங்கும் அவகாசம் தான்.
——————————————————————————————-
தொடரும்..
நன்றி உறவுகளே. தொடர்ந்து எழுத உள்ளேன். இது ஒரு கதை தான். இதில் வரும் சம்பவங்கள் அத்தனையும் எத்தனை உண்மை என்று நீங்களே புரிந்துக் கொள்வீர்கள்.
கதை கோர்ப்புக்கள் கற்பனையே. என்றாலும், கதைக்கான கரு மற்றும் பல சம்பவங்கள் உண்மையில் நடந்ததாக என்னொரு பயணத்தில் நண்பர் ஒருவர் சொல்லி அழுதவைகளே கதையாக்கப் பட்டுள்ளன.
அவைகளை, உங்களிடம் கொண்டு சேர்த்து தீர்ப்பை உங்களிடமே சிந்திப்பதற்கு விட்டு விடுவதாக எண்ணம. என் மண்ணுக்கு என் உயிர் நீத்த உறவுகளுக்கு சமர்ப்பனமாய் இத் தொடர் சற்று நீண்டு விரைவில் முடியும். இது ஒரு நீண்ட கதை மட்டுமே.
எனினும், படிக்கையில் ஏதேனும், வரலாற்று பிழையோ மாற்ற வேண்டிய கருத்துக்களோ இருப்பின் தெரிவிக்கலாம். மாற்றிக் கொள்வதை பற்றி சிந்திப்போம்.
இத்தொடரில் வரும் கால அளவுகள் எல்லாம் வரலாறு புரட்டிப் பார்த்தும் விசாரித்தும், அவசியமானவர்களை சந்தித்துமே எழுதப் படுகின்றன.
தொடர்ந்து படித்து வாருங்கள், கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளுகள். ஒருவேளை எங்கேனும் வலித்தால்; விடிவிற்கென சிந்தியுங்கள். அவசியமெனில் சிந்தியுங்கள்!
மிக்க நன்றிகளுடன்…
வித்யாசாகர்
LikeLike
பிங்குபாக்: கொழும்பு வழியே ஒரு பயணம்.. (பெருகதை – 2) | வித்யாசாகரின் எழுத்து பயணம்
அன்பிற்குரிய அஹ்மத் சுபைர் எழுதியது: //தரை தொடும் முன் கீழே குனிந்து முதலில் ஒரு கைப்பிடி மண்ணெடுத்து என் ஈழத் தாயே என கண்களில் ஒற்றிக் கொண்டேன்//
//கொழும்பு விமான நிலையம் சுத்தமா இருக்குமே??? கைப்பிடி மண் எடுக்குற அளவுக்கா தூசியா இருந்தது?? 😦 //
அன்பிற்குரிய தேனு ச ஈஸ்வரன் எழுதியது: //சான்சே இல்லை, விமானத்தில் இருந்து இறங்கியதுமே விமான நிலையம் அதனுள்ளே தூசியே இருக்காது :)) //
வித்யாசாகர் எழுதியது: சற்று நேரத்தில் விமானம் நின்று முன்பும் பின்புமாய் கதவுகள் திறக்க, எல்லோரும் தற்காலிக படியின் வழியாக இறங்கிக் கொண்டிருந்தார்கள். நானும் முன்பக்க கதவின்
வழியே இறங்கி மெல்ல என் ஈழத்து மண் பார்த்து கீழிறங்கினேன்//
வணக்கம் உறவுகளே; இன்றும் விமானங்கள் வெளியே தளத்திலேயே நின்று தரையிறங்கியப் பின் வேறொரு பேருந்தின் மூலம் விமான நிலையம் அழைத்துச் செல்லப் படுகிறது. அது மாதிரியான ஒரு கற்பனை. ஈழத்துக் கனவினை படிப்பினை வாயிலாக சுமந்த ஒருவனுக்கு அந்த தேசம் வழியே செல்லும் வாய்ப்பு அமைகையில் அந்த பூமியை எத்தனை மரியாதையோடு அவன் பார்க்கிறான் எனும் ஒரு பார்வை.
கதைக்கான காரணம், இனி மெல்ல மெல்ல அறிவீர்கள் என்றாலும், நையாண்டி இன்றி சரி தவறுகளை இயலுமெனில் சுட்டிக் காட்டுங்கள். கண்டிப்பாக திருத்திக் கொள்வோம்.
இருப்பினும், அவ்விடத்தினை கீழுள்ளவாறு திருத்தியுள்ளேன்.
//சற்று நேரத்தில் விமானம் விமானநிலையத்திலிருந்து சற்று தூரத்திலேயே நின்றுவிட, எல்லோரும் அவசர அவசரமாக தற்காலிக படிக்கட்டின் வழியே இறங்கி அங்கு வெளியே நின்று கொண்டிருந்த ஒரு பேருந்தினுள் ஏறிக் கொண்டிருந்தார்கள்…//
மேலுள்ள கருத்துக்கள் முத்தமிழ் தளத்தில் நண்பர்கள் பதிந்துக் கொண்ட கருத்து. இதே கேள்வி பிறருக்கும் எழலாமோ எனும் எண்ணத்தில், என் தன்னிலை விளக்கம் அறிய வேண்டி இதை இங்கே பதிந்துள்ளேன்.
வேறு நிறைய தளங்களிலிருந்து கருத்து பதிந்து, என் எழுத்துப் பயணத்திற்கு ஆதரவு நல்கி வரும் நட்புறவுகளுக்கு மிக்க நன்றியானேன்..
நன்றி: முத்தமிழ், மற்றும் சுபைர், தேனு ச ஈஸ்வரன்!
LikeLike
அன்புச் சகோதரி வேதா லங்கா எழுதியது: //நான் இன்று எனக்கான ஒரு தேசத்தில் கால் பதித்து விட்டதாய் எண்ணி மகிழ்ந்தேன்//
vidyasager!……. இலங்கையில் பிறந்தீர்களா?…….
வித்யாசாகர் எழுதியது: ஒரு ஆசை தானே சகோதரி; மேலும் என் உறவுகளை பிரித்துவிட வேண்டாம் எனும் எண்ணம். இருப்பினும், யாரும் எனை அந்நியப் படுத்திவிடக் கூடாதே எனும் எச்சரிக்கை உணர்வில் //எனக்கான ஒரு தேசத்தில் // என்றே ழுதியுள்ளேன். உடன் பிறவாவிட்டாலும் நீங்களென் சகோதரி தானே..
LikeLike