100) ஞானமடா நீயெனக்கு நிறைவடைகிறது..

1
மையலறைக் குழாயில்
குடிக்க
தண்ணீர் பிடித்துக் கொண்டிருக்கிறேன்;

பாதி நிறைவதற்குள் நீ
என்னருகே வந்து
அப்பா எனக்குக் குடிக்க நீர் வேண்டும் என்கிறாய்;

நான் தண்ணீர் நிரம்பிடாத பாதி சொம்போடு
நீ கேட்டதும் வெடுக்கெனத் திரும்பி
உனக்குத் தண்ணீர் கொடுக்கிறேன்;

நிருத்திவிடாதக் குழாயிலிருந்து
தண்ணீர் போய்க் கொண்டேயிருக்கிறது
நீயும் குடித்துக் கொண்டேயிருக்கிறாய்,
இரண்டையுமே என்னால் நிறுத்த இயலவில்லை!!
—————————————————————

2
நீ
நடந்து நடந்து
இங்குமங்கும் ஓடுகிறாய்
நான் உன் பின்னாலயே
ஓடி வருகிறேன்;
நீ நிற்காது சுற்றி சுற்றி வளம் வருகிறாய்
கவிதைக்கான பக்கங்கள் –
கிறுக்கக் கிறுக்க நீள்கிறது….
—————————————————————

3
நீ
பெரிய அழகு
உன்னைத் தூக்கி உண் முகத்தோடு
முகம் வைத்து
எதிரிலுள்ள கண்ணாடியைப் பார்ப்பேன்
கண்ணாடியில் நீ
புதியமாதிரி இருந்தாய்
நான் பழையமாதிரியே யில்லை
நானும்’ அப்படி ஓர் அழகென்பார்கள் அப்போதெல்லாம்
இப்போதில்லை –
அசிங்கம்போல் சில சாட்சிரேகைகள்
முகத்தில் ஓடுவது அதோக் கண்ணாடியில் தெரிகிறதே;

அழகு இப்படித் தான் –
வயது கூடினால் அழகு கூடும்
வயது கூடினால் அழகு குறையும்
வயது கூடினால் அழகு மறையும்
நான் இரண்டாமிடமிருந்து மூன்றாமிடம்
கடக்கப் போகிறேன் –
நீ முதலிடத்திலிருந்து அழகாய் தெரிகிறாய்
உன் அழகிலிருந்து என் அழகு மறையும் இடைப்பட்ட
இடைவெளியில் எனக்கு அழகிற்கான
ஞானம் பிறக்கிறது;

அழகு நிரந்தரமற்றது –
பார்வையில் மட்டுமே பூக்கவும் சிரிக்கவும் செய்கிறது,
அழகில் பூப்பவரும் சிரிப்பவரும் கூட
நிரந்தரமற்றேப் போகின்றனர்..
—————————————————————

4
னக்கு ஏதேனும்
வேண்டுமெனில் என்னிடம் வந்துக்
கேட்பாய்;

நானும் நீ கேட்டதும்
நல்லது கெட்டது யோசிக்காமல்
எடுத்துக் கொடுப்பேன்

அம்மா அதைப் பார்த்துவிட்டு
ஓடிவந்து பிடுங்கி எறிவாள்

கேட்டால் குழந்தைக்கு
இது சளி பிடிக்கும்
மிட்டாய் அதிகம் பல் சொத்தைப் பிடிக்கும்
என்றெல்லாம் சொல்வாள்;

நீ வீல் என்று கத்துவாய்
நான் பின்புறம் போய் அதை கொண்டுவந்து
அம்மாவிற்குத் தெரியாமல் கொடுப்பேன்
அம்மா அதையும் கண்டுவிட்டு
கோபத்தில் என்னையும் உன்னையும் முறைப்பாள்;

எனக்கு உள்ளூரப் புரியும்
அம்மா’ எப்போதும் அம்மா தான்….
———————————————————————————————-

5
நீ
அழுவதற்கான
காரணங்கள்
ஆங்காங்கே நம்
வீடெல்லாம் இருக்கும்;

உனை அழவிடாமல் பார்க்க
துடிக்க
ஒரே ஒரு காரணம்
உள்ளிருந்து உன் குரலாய் கேட்கும்
அப்பா…..’ என..

அந்த ஒரு சொல்லின் அடக்கத்தில்தான்
பாதியிலிருந்து மீதம்வரை
முழுமைப் பெற்றுவிடுகிறது – இன்று என் வாழ்க்கையும்,
நாளை உன் வாழ்க்கையும்!!
—————————————————————

6
நீ
யும் அண்ணாவும்
விளையாடிக் கொண்டிருக்கிறீர்கள்,

உங்களுக்குள் சண்டையில்லை
நீ பெரிது நான் பெரிதில்லை
ஆண்பெண் அப்படி எல்லாம் ஒன்றுமில்லை
எனக்கு வேண்டும் உனக்கு வேண்டும் என்றுக் கூட இல்லை

எங்கு பின் முளைத்துவிடுகிறது
அதலாம் என்று உற்றுப் பார்த்தேன் நான்;

அம்மா வேறு அறையிலிருந்து
அவசரமாக உள்ளே வந்தாள்;

டேய்… பொம்பளைப் பிள்ளைடா அவ
நெத்தில பொட்டு வை
காதுல அந்த முத்தை மாட்டு
கால்ல காப்பு போடு
கையில அந்த கருப்புக் கயிறைக் கட்டு என்றாள்;

திருத்திக் கொள்ள வேண்டிய இடங்கள்
நிறைய இப்படியும் அப்படியும்
நமக்குள் இருப்பது புரிந்தது;

நான் அதலாம் போடவில்லை
அம்மா இல்லாத அடுத்த அறைக்கு
குழந்தையை தூக்கிச் சென்றேன்;

நான் சட்டென அங்கிருந்து விலகிப் போனதும்
அங்கே –
அவள் நிற்கும் அந்த அறையில்
அவள் முகத்தில் – ஒரு
நிசப்தம் நிலவியது,

அந்த நிசப்தத்திற்குத் தெரியும் – என் கோபம்
அம்மா சொன்ன பொட்டு காப்பு முத்தில் அல்ல
பெண்ணுக்கு மட்டும் போடச் சொன்னதில்’ என்று!!
—————————————————————

7
ன் மனைவியை நான்
திருமணம் முடிந்ததும்
இச்சமூக முறைப்படி
கதற கதற அவளின் பிறந்த வீட்டிலிருந்து
என் வீட்டிற்கு அழைத்து வருகையில் – கொஞ்சம்
வலித்தது;

மிச்சம் –
உன்னை நான்
உன் கணவன் வீட்டில்
விட்டுவருகையில்
உயிர்போவதுவரை வலிக்கலாம்;

இங்கே வலிப்பதன் பிழை’ நானா?
எனை இப்படி வளர்த்த இச்சமுகமா?’ என்று
சிந்திக்கவைத்த ஞானமடி நீயெனக்கு!!!
—————————————————————
வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in ஞானமடா நீயெனக்கு and tagged , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

3 Responses to 100) ஞானமடா நீயெனக்கு நிறைவடைகிறது..

  1. suganthiny's avatar suganthiny சொல்கிறார்:

    நீ வளர்ந்து வரும் போது
    எங்கள் இன்பம் தொலைந்து போகிறது
    ஏன் தெரியுமா?
    உன் வளர்ச்சியில் உன்
    குறும்பு தனம் செத்து செத்து போகிறதே.
    நாளாக நாளாக உன்
    குறும்புகள் துளி துளி ஆக
    தொலைந்து போகிறது.
    ஏன் தெரியுமா?
    நேற்று நீ குழந்தை
    இன்றும் நீ குழந்தை
    நாளையும் நீ…….
    ஹும் நாளை மறுநாள்……….
    அது என்ன என்றே தெரியாது.
    யார் சொன்னார் நீ எங்கள் வீட்டு பிள்ளை
    என்பதை அப்போது தான்
    புரியுமோ என்னவோ தெரியலை
    புத்தகம் சுமக்கும் உன்
    முதுகு உன்னை குழந்தை என
    நினைத்து விடுமா?
    இல்லையே
    நீ நடந்து போகும்
    பாதை உன்னை குழந்தை
    என நினைத்து விடுமா?
    இல்லையே
    நீ நடந்து போகும்
    பாதையில் உன்
    பாதத்தில் முள்
    குத்தினால் என்
    இதயம் கனக்கிறது.
    ஆனால் அதுவே
    எனக்கு என்றால்
    உன்னால் என்ன செய்ய
    முடியும்?
    ஆனால் முடியும்
    உன்னால் உன்
    உதடுகளில் வடியும்
    அந்த அமுதமான
    சிரிப்பு என் வேதனையை
    கொள்ளையிட்டு செல்கிறதடி

    இப்படி சொல்லி கொண்டே போகலாம்
    ஒவ்வொரு எழுத்திலும் உங்கள் குழந்தை பாசம்
    புரிகிறது?

    Like

    • வித்யாசாகர்'s avatar வித்யாசாகர் சொல்கிறார்:

      மிக்க நன்றிமா…, உண்மையில் இப்புத்தகம் முடிவதாய் எனக்குத் தோன்றவே இல்லை, நேற்று இரவு கூட பாப்பாவைத் தூக்கி வைத்திருக்கையில் நிறைய கவிதைகள் எழுதப் படாமலே நள்ளிரவில் கரைந்தன. வரிகளைக் காற்றில் தொலைத்துக் கொண்டே இரவு எழுதுவதாக அமர்ந்து நள்ளிரவு ஒரு மணிவரை வித்யாவுடனே விளையாடிக் கொண்டிருந்தேன்…

      விரைவில் ஞானமடா நீயெனக்கு’ இரண்டாம் பாகம் வரலாம்..

      Like

  2. வித்யாசாகர்'s avatar வித்யாசாகர் சொல்கிறார்:

    //வாழ்வியல் நடைமுறைகள் சிறிதும் பிறழாமல்…
    நேசித்த, பார்த்த, ரசித்த, வாழ்ந்த நிமிடங்களின் கோர்வைகள்..
    கோர்த்த விதமும், சேர்த்த இடமும்…அருமை….!

    அனைத்துமே இதயத்தை நெருடி சென்றது…கதை சொல்லிய கவிதைகள்..!

    ஜெயஸ்ரீ ஷங்கர்//

    மிக்க நன்றியும் அன்பும் சகோதரி. வாழ்க்கையை வாழ்வதை படைப்பாகவும், படைக்க எண்ணத் தக்கதற்கிணங்க வாழ்வதும், பார்வையில் புனிதப் பட்டுவிடுகிறது. இன்னும் இன்னும் மேன்மையுறுவோம்…

    உங்களுக்கும் தமிழ் பிரவாகத்திற்கும் நன்றியும் வணக்கத்துடன்…

    வித்யாசாகர்

    வித்யாசாகர்

    Like

பின்னூட்டமொன்றை இடுக