மழை கொட்டினால் மழை செய்தியாகிறது.
காற்று அதிவேகமாக வீசுகையில் புயல் செய்தியாகிறது.
அரசியல்வாதிக்கு ஒரு தீங்கென்றால் அல்லது ஒரு நடிகருக்கு ஒரு துன்பமென்றால், அவ்வளவு ஏன் ஒரு பிரபல ஆசாமிக்கு தொண்டையில் மீன்முள் குத்திக் கொண்டால் கூட அது அன்றைய தினத்தின் தலைப்பு செய்தியாக ஜோடிக்கப்படுகிறது. எல்லாம் செய்தி தான். வருத்தமில்லை, அது அவர்களின் மேல் மக்கள் காட்டும் ஈடுபாடென்று வைத்துக் கொள்வோம்.
ஆனால் செய்திகளுக்குப் பின்னே உணர்சியவப் பட்டு ஓடியாடி அலைந்த தெருவெல்லாம் தன்னைத் தேய்த்துக் கொண்டதோடு மட்டும் நின்றுக் கொள்ளும் ஒரு சாதாரண மனிதனின் –
மரணம் கூட புதைபட்ட மண்ணுக்கும் புதைத்தவருக்கும் மட்டுமே கண்ணீரோடு பதிவாகிறதே’ அது வருத்தமில்லையா ?
இந்த ஒருதலைபட்சமானது சமநிலைப் படுதலே விடுதலை தேசத்தின் உயர்வில்லையா ?
அப்படியெனில் அந்த சமநிலைக்கான விடுதலையை எங்கு எப்படி யார் சென்று முழுமையாக பெற்றிட இயலுமென்று, எவரெவர் வாயோ பார்த்துக் கொண்டிருக்கையில், வந்தவர் போனவர் எல்லாம் வாய்க்கரிசி போட்டுவிட்டு தனக்கான இடமொன்றை பத்திரப் படுத்திக் கொள்கிறார். கடைசியில் ஏமாளியாய் நிற்குமினம் தமிழினம் ஆகிறதே…,
இந்நிலை மாற நாம் என்னதான் செய்திடல் வேண்டும் ?
எனில், இந்த கேள்வி முதலில் நம் ஒட்டுமொத்தப் பேரின் மனத்திலும் எழவேண்டும். நம் சமுதாயத்தை கட்டமைக்கும் பங்கு நமக்குரியது. நம் வாழ்க்கையை நாம் தான் தீர்மானிக்கிறோம். பின் நமது வெற்றி தோல்வி இரண்டிற்கும் நாம் தான் பொருப்பென்று நாம் உறுதியாய் நம்மை நம்புதலும் எம் தோல்வியை புறந்தள்ள எமக்கான ஆயுதமாக அமையும்.
யோசித்துப் பாருங்கள், எத்தனை மக்களை நாம் நம்மினத்திலிருந்து வெறும் ரத்தமாக சதையாக தொலைத்திருக்கிறோம்? அது ஒரு ‘மனதில் மாறா பிணக்குவியலின் காட்சி’ என்பது எல்லோருக்கும் தெரியுமென்றாலும், அந்தப் பிணக்குவியலுக்குள் தன் தாயையும் தந்தையையும், தங்கையையும் மகளையும், மனைவியையும் பிள்ளையையும் கணவனையும் இழந்தவர்களின் நிலையென்ன?
காற்று மாறி மாறி வீசிடுகையில் அவர்களையெல்லாம் நாம் நாட்களின் வேகத்தில் மறந்து நமக்கென்ன என்றெண்ணி நம் மக்களின் இழப்பை மறத்தல் தகுமா?
நம் ஒற்றுமை உணர்வை மெல்ல மெல்ல இப்படியெல்லாம் இழத்தல் சரியா?
ஒருக்கிலும் சரியல்ல உறவுகளே. நம் ஒன்றுசேர்தலில் நமக்கான பலம் இரட்டிப்பாக இருக்கிறது. தமிழர் ஒரு தேன்கூடினைப் போல் ஒருங்கி நின்று அவரவர் பங்கிற்கு அவரவர் பணிகளை சிறப்புற செய்தல் வேண்டும். அப்படியொரு ஒருங்கினைதலை, ஒற்றுமையினை, ஒற்றுமைக்கான உணர்வினை வலியுறுத்தவே வருகிறதிந்த வலியில் சுட்டெடுத்த பாடல்..
விடியும் பொழுது உறக்கமெதற்கு
உலகையாள ஒன்று சேரு…
வித்யாசாகர்
அருமையான வரிகள்..அனால் பாடும் குரலில் ஒரு ஈர்ப்பு கிடைக்க வில்லை. ஒரு இளமையான குரலில் ஒலித்து இருந்தால் மேலும் சிறப்பாகவும், உற்சாகமாகவும்
அமைந்து இருக்கலாம். இசை இதயத்தின் ஆழம் தொட முடியவில்லை.
இருந்தாலும் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
LikeLike
உங்கள் உணர்வுகளை நான் மறுப்பதற்கில்லை உமா. ஆனால் எழுச்சியூட்டும் விதமாக பாடலை அமைக்க முயன்றிருந்தோம். சில பாடல்கள் மனசொத்து கேட்டதும் பிடித்துவிடுகிறது. சிலது கேட்கக் கேட்கப் பிடித்தப் போகிறது. இதில் இப்பாடல் சிலருக்கு முதல் வகையாகவும் சிலருக்கு இரண்டாவது வகையாகவும் இருக்கலாம்போல்..
கருத்திற்கு நன்றியும் வணக்கமும் உமா..
LikeLike