
கால்சட்டையின் கிழிசல்களை புத்தகத்தால் மூடுங்கள்!
நாங்கள் பிடித்த மண்வெட்டியும்
மண்கூடையும்
சுமந்த குடும்பமு(ம்)கூட பாரமில்லை,
சுமக்காத புத்தகங்கள் சும்மாடையாய் கனத்தன;
சொட்டிய வியர்வையும் சுடும் வெய்யிலும் கூட
வலிக்கவில்லை; அதையு(ம்) வாங்கிக் குடித்த
அப்பாவின் சாராயமும் –
அதற்குச் சுமந்த அம்மாவின் தாலியும் வலித்தது;
பசித்த வயிறும் செருப்பிடா கால்களும்
சுடவில்லை; எங்களின் அழுக்கு உடை
தெருவில் போகும் பள்ளிச் சீருடையின் வெண்மையில்
கருகித் தான் போனது;
ஏங்கிய மனசும், எட்டிநின்று பார்த்த
ஆசைப் பார்வையும் ஈரமே காயவில்லை; ஈரத்தின்
சதுப்பிலும், ஏறி அடுக்கிய செங்கற்களின் இடுக்கிலும்
வாழ்க்கை வெறுமனே புதைவது வலித்தது;
படித்து வராத அறிவும், பகுத்தறியக் கல்லா
கல்வியும் வெறும் தார்சாலையில் தீர்வது தீரட்டும்,
நாளை மரணித்துப் படுக்கும் பாடைக்கு, பார்ப்பவர்
‘மண்வெட்டியின் பிணமென்று’ பெயர்வைப்பர் வைக்கட்டும்;
தெருவோர தூளியின் ஓட்டையில் வரும் காற்றும்
எங்கோ தூர இடைவெளியில் கேட்கும் பிள்ளைகளின்
படிக்கும் சப்தமும், அம்மா சேலையின் வாசமும், அப்பா
என்றோ வங்கித்தரும் புதிய சட்டையின் பூரிப்பும் போதும் போதும்;
பெரிய படிப்பு படித்து காதில் ஸ்டெதாஸ்கோப் மாட்ட
திடீரெனக் கனவெல்லாம் பூக்கவில்லை, அந்த புதிய புத்தகத்தின்
வாசம் நுகரத்தான் அன்றிலிருந்தே ஒரு ஆசை, ஆயுதம் பிடித்த கையுதறி
யாரேனும் புத்தகத்தை திணித்தால்; கெட்டியாகப் பிடித்துநடக்க ஆசை;
ஆசையென்ன ஆசை
அது தெருவோர சல்லியுடனோ
தீப்பெட்டியின் குச்சிகளோடோ
ஊதுபத்தியின் வாசத்திலோ கலந்து மணக்கும் மணக்கட்டும்;
நாங்கள் படித்தாலென்ன
எங்களின் கிழிந்த கால்சட்டைகள் ஒட்டித்
தைக்காவிட்டால்தானென்ன – உங்கள் மனது லேசாகும்
வேண்டுமெனில் ஒரு உச்சுக் கொட்டிவிட்டு கடந்துப் போங்கள்;
எங்களுக்கான வாழ்க்கை எப்பொழுதும் போல்
மண்வெட்டியிலும் மண் கூடையிலும்
படிக்கக் கிடைக்காத பாடங்களாகவே நிறையும்
அல்லது உங்கள் தீபாவளியில் பட்டாசாய் நன்கு வெடிக்கும்;
காலத்திற்கும் ஒரு குறையாய் எங்களுக்குள் மட்டும்
இது வலிக்கும் வலிக்கட்டுமே; எங்களுக்கு வலித்தாலென்ன – நீங்கள் போய்
அந்த உழைப்பாளர் சிலையில் ஒன்றிற்கு கால்சட்டையும்
இன்னொன்றிற்கு குட்டைப் பாவாடையும் மாட்டிவிடுங்கள்,
அல்லது யாரேனும் சிபாரிசு செய்து – அந்த
உழைப்பாளி சிலைக்கருகே யிரண்டு
சிறுவர் சிலைகளையும் சேர்த்துக்கொள்ளச் சொல்லுங்கள்;
நாங்கள் படிக்காத கல்வியை கவிதையாக்க நாளையது உதவலாம்!!
——————————————————————————–
வித்யாசாகர்
“வெற்றிநடை” சமுதாய முன்னேற்ற மாத இதழ் வெளியிட்ட கவிதைப் போட்டியின் படத்திற்கு வேண்டி எழுதிய கவிதையிது!
இலக்கியம் சார்ந்த அவர்களின் மெத்த உழைப்பிற்கு நன்றியும் சிறந்தாழ்ந்த வணக்கமும் உரித்தாகும்!!
LikeLike
காலை வணக்கம்
அருமையான கவிதை படம்
LikeLike
அன்புவணக்கம் தோழமை, இது இனியேனும் வரும் தலைமுறைகளால் தக்க முறைப்படி தவிர்க்கப்படல் வேண்டும், சிறுவயதில் குடும்ப பாரம் சுமக்கும் வீட்டின் இருளை ஒழித்தால் அங்கே அந்த குழந்தையின் படிப்பிற்கான வெளிச்சம் பிறக்கும்..
அந்த வெளிச்சத்தை நாம் ஒவ்வொருவரும் ஒரு சிறிய அளவிலேனும் நம் கையிலும் நாம் வைத்திருக்கிறோம்!
LikeLike
சிந்திக்க கூடிய மிக அருமையான தலைப்பு.
// பசித்த வயிறும் செருப்பிடா கால்களும்
சுடவில்லை; எங்களின் அழுக்கு உடை
தெருவில் போகும் பள்ளிச் சீருடையின் வெண்மையில்
கருகித் தான் போனது;//
மிகவும் வேதனை அளிக்கும் நடப்புகளை மிகவும் அழகாக சொல்லி உள்ளீர்கள்.
மிக அருமை.!
LikeLike
வணக்கம் உமா, எனக்கே எழுதும்போது கூட வலித்தது. இன்றும் தெருவோரங்களில் தார் காய்ச்சி ஊற்றி தெரு சீரமைப்புப் பணி செய்பவர்களின் குழந்தைகள் ‘அத்தெரு வழியே பள்ளிச் சீருடையில் போகும் இதர பிள்ளைகளை அப்படியொரு ஏக்கத்தில் தானே பார்த்துக் கொண்டு நிற்கின்றனர்..
அவர்களுக்கெல்லாம் நாம் என்ன பதில் வைத்திருக்கிறோம் இந்த சமுதாயத்தின் அங்கமாக?
இப்படி நீளும் பல கேள்விகளுக்கு கவிதை மட்டுமே எனக்கான பதிலாக கிடைத்தது உமா. தங்களின் கருத்திற்கு நன்றி!
LikeLike
தலைப்பே.. என் தலையில் சுமையிறக்கி வைக்கிறது..!
களைப்பில் கவிதையில் காலாறிக் கொள்கிறது..
சலிக்காதே.. நட்பே… தமிழ்த் தாலாட்ட வருகிறது..!
LikeLike
நன்றி ஐயா. தமிழின் மகத்தான சக்தித் தானே சமூக அவலம் சுழற்ற வாளேந்த வைக்கிறது, அதன் கூர்முனையில் கத்தரிக்கப்பட்டு சிறுபிள்ளைகளின் துயரம் ஒழியட்டும், சிறார் தொழிற்சாலைகள் எல்லாம் இனி பள்ளிக்கூடங்களாய் திறக்கப்படட்டும்!!
LikeLike