பரதேசி எனும் பெயரில்; நம் மக்களின் வாழ்ந்து தீராக் கதையது.. (திரை விமர்சனம்)

பெருசா வர இருக்கும் நடிகன்..

னசெல்லாம் விக்கி விக்கி அழுகிறது. கண்ணில் ஊறும் ரத்தமின்னும் உயிர்போகும் வரை வெளியே கொட்டிவரட்டுமே என மனசு பிராண்டி பிராண்டிக் கத்துகிறது. உடம்பின் ஒவ்வொரு துளியிலிருந்தும் என் இனத்திற்காக ஒரு துளி கண்ணீர் சொட்டிச் சொட்டி உயிர் தீருமொரு வலி வலிக்கிறது. எத்தனை உயிரை குடித்த மண் எனது மண்(?) எத்தனை பரம்பரையை தொலைத்த மண் எனது மண்(?) எவன் ஆண்டு அழித்த மண் எனது மண்(?) என் பாட்டன் முப்பாட்டன் தலையில் மரணங்களை விதைத்தோர் எத்தனைப் பேர்? கண்ணைத் திறந்து அரக்கி அரக்கி மண் நிரப்புவது போல விஷத்தையெல்லாம் நாகரிகம் என்றும் கலாச்சாரம் என்றும் கடவுள் என்றும் கடவுளில்லையென்றும் ஒன்று என்றும் பத்து என்றும் என்னென்னவெல்லாம் சொல்லி எமைக் கொன்று குவித்தோர் யார் யார்? யார் யார் ? யார் யாரோ……?

கண்ணக் குழி சிரிப்பில் கழுகு வந்து அமருமா? என் பாவிமக அழகை எந்தக் கற்பு வந்து காத்துச்சோ அழிச்சிதோ வெச்சிதோ வைக்கலையா இனி மிச்சமும் மீருமோ தீருமோன்னு அடிமடியில அடிச்சிகுனு ஒரு தாயழுவுற கணக்கா கதறி கதறியழற இடத்தில் நிற்கும் எம் இனம் வந்த வழியெல்லாம் தொலைத்த பெண்கள் எத்தனைப் பேரோ?

தொரை நாயிக்கு திங்கவும், பிற நாயிங்க கொல்லவும் இறையாப் போன எம் பெண்களின் கதறல் இன்னும் எத்தனை எத்தனை தேயிலைத் தோட்டமெங்கும் ஓயாக் காற்றாக வீசுதோ? ஆத்தாவின் அடிவைத்துள் கை வைக்கிறதும் ஒன்னு, நெருப்பிட்டதும் ஒன்னுன்னு சொல்லிக்கொடுத்த இனம் நடந்து வந்த வழியெல்லாம் புதைந்துப் போன எந் தாயிமார் யாராரோ???

மனசு யாரை சாபம்விடச் சபிக்குதோ தெரியலையே? ஊரை அடித்து விழுங்கிய ஆண்டைகளை எந்தத் தீ வந்து கருக்கினா இந்த வெறி அடங்குமோ தெரியலையே..(?) காலத்துக்கும் எங்கோ ஒரு கக்கத்துல வைத்து அடக்கி கண்ணிமையை மூடினாப்புல மூடி காக்குற குடும்பத்துல பிறந்தும் இன்னைக்கு எவெவனுக்கோ அடிமையா வாழுற ஜென்மம் இன்னும் எத்தனை எத்தனையோ… பாழுங்கடவுளே…

எல்லாத்துக்கும் அழத் துவங்கினா’ பிறகு வெறும் ஒப்பாரியா வைத்துத் தீர்க்க இன்னும் எத்தனைப் பேர் வேண்டுமோ? அழுதே செத்துக்கனக்க இன்னும் எத்தனை காடுகள் எரியுமோ? நிமிர்ந்துச் சூரியனைப் பார்த்தவாறு தான் விதைத்ததை தானறுத்துத் தின்றுப்போக இன்னும் எத்தனைக் குலச் சாமி வந்து ஓதி அப்படி ஒரு காலமெமக்குப் பிறக்குமோ தெரியலையே..,

ஓடி ஓடி, தெரு தெருவா உயிருக்கு பயந்து அலைந்துத் திரிந்து, ஒரேயிடத்துல உடம்பையும் வித்து, கடைசியா மிச்ச உசிரையும் விட்டு விதைத்த அதேத் தேயிலைக் காடு இன்னைக்கும் என் மக்களை விஷக் குண்டு வைத்து சுட்டுத் திங்குதே அது நியாயமா?

அன்னைக்கு ஒரு காட்டையே அழிக்கையில அந்த சனம்தான் செத்தது, பின் அந்த மண்ணுல தேயிலை விதைக்கவும் அந்த சனம்தான் செத்துது, பின் அறுக்கவும் சலிக்கவும் விற்கவும் வளர்க்கவும் மீண்டும் விதைக்கவும் கொடுக்கவும் அந்த சனமும் அந்த உயிருந் தானா குறைபட்டுப் போச்சு சாக என் கடவுளே..?

ஒரே  யொரு காடழிஞ்ச கதையது படமாச்சி. அதின்னைக்கு பரதேசின்னு விலைபோச்சு. மனசு அதுக்கேக் கிடந்து செத்து செத்து பிழைக்குதே; இன்னும் எத்தனைக் காடு, எத்தனை நாடா ஓட்டம், இன்னும் எத்தனைக் கொலை, எவ்வளவுப் பஞ்சம், எவ்வளவு உயிர் வெறும் பசிக்கு மட்டுமே காவுஆகுமோ? ஏதேதுக்கு என் இனமின்னும் ஆளாகுமோத் தெரியலையே..

மனசு கிடந்து தவியா தவிக்குதுங்க அந்த ராசாவுக்காகவும், பிள்ளைக்காரிக்காகவும், கறுத்தக் கண்ணிக்காகவும் அந்த அங்கம்மாவுக்காவும். சும்மா அழுவனும்னு இருந்து அங்கே அழுதிருந்தா கனம் அங்கயே இறங்கியிருக்கும். ஆனா வெறும் கண்ணீரில் கழுவிப் போடும் விஷயம் இல்லை அந்த படத்தின் சாராம், ஒரு இனத்தின் அழிவு பற்றி, அழிஞ்ச மக்களின் கதைப் பற்றி, விடியா ஏழைகளின் வலி பற்றி அறுத்து அறுத்துக் காட்டியக் கதைங்க அது; பரதேசி.

இனி வருங்காலத்துல சினிமா என்னாகுமோ தெரியலை. சாப்பாடு மாதிரி, தூக்கம் மாதிரி சினிமாவும் தமிழர் வாழ்க்கையில ஒரு முக்கியமானதாகி விடுமோன்னு பயம் வர அளவுக்கு தமிழ் படங்கள் ஒவ்வொரு உயரத்துக்கு போயின்ருக்கு. ஹரிதாசை விட இந்த நூற்றாண்டுக்கு நாளு குழந்தையைக் காப்பாத்தினப் படம் வேறில்லைன்னு நினைத்தேன். ஆனால் மனுஷன் எட்டமுடியா உயரத்துல எட்டி எம் கதையை கண்ணுமுழி பிதுங்க காமித்தப் படமிது இந்த பரதேசி திரைப்படம்.

அதர்வா

நடிக்கிற முகம் ஒன்னுக் கூட கண்ணுலப் படலை.., வாழ்ந்ததன் அடையாளத்தை கண்ணுலத் தேக்கி தேக்கி உயிரை இழுத்துப் புடிச்சி நடிச்சிருக்காங்க ஒவ்வொருத்தரும். தமிழன் இனி எதுல வெல்வானோ இல்லையோ சினிமாவுல ஜெயிச்சிட்டான்னே சொல்லலாம். அந்தளவிற்கு ஒரு படத்தை இயக்குனர் பாலாவால செய்யமுடியும்னு நிரூபித்துக் காட்டியிருக்காரு.

ஒரு படமா இந்தப் பரதேசியை எண்ணி அது முடிஞ்சிடுச்சேன்னு நினைத்து உடனே மறக்கமுடியலை. ஒவ்வொரு பாத்திரமும் கண்ணு நிரஞ்சி நிக்குது. அந்த குடிசைவீடுகளும், பிளக்கும் விறகினோடு சொட்டும் வியர்வையும், பறிக்கும் தேயிலைக்கு ஈடாக குடிக்கும் அட்டை ஒட்டிய கால்களும்’ மனதில் மிதிபடும் சுவடுகளை பதிந்துக் கொண்டே நகர்கிறது.

படத்தில் எத்தனைக் காட்சிகள் இருக்கோ அத்தனையும் பேசுகிறது. ஏழ்மைக் குடி பற்றியும், அடிமை நிலை பற்றியும், மண்ணின் வலி பற்றியும், ஆண்ட திமிர் பற்றியும் அப்பட்டமாய்ப் பேசுகிறது.

அழகுக்கு உடுத்திக் கொள்ளும் ஆடை என்றெண்ணி நுனி நாக்கில் வைத்து உறவாடும் விஷமான மொழி ஆங்கிலம் என்று உடம்பில் ஓடும் இரத்தமெல்லாம் வெள்ளையரின் மீது காரி உமிழவைக்கிறது, அந்த கருத்தக் கன்னியை கெடுத்து குடிகெடுக்கும் அந்த காட்சி.

எங்கு சுத்திவந்து நின்றாலும் எம் அழிவிற்குப் பின் எவனோ ஒரு வெள்ளையனின் காலடிச் சுவடும், அவனின் பிரம்படியின் தழும்பும் ஏழு பரம்பரையின் கோபத்தை கண்கள் சிவக்க சிவக்க ஏந்திக் கொண்டு நிற்பதைத் தவிர்க்கவே முடியவில்லை.

தலை வீசும் வாளொன்று யெடுத்து எம் மார்புகளில் சுட்ட கைகளைக் கத்தறித்து காலடியில் புதைக்க வெறிகொண்டுப் பாய்கிறது உடம்பில் ஓடும் ரத்தத்தின் அத்தனை உயிர் செல்களும். நல்லது செய்தான் நல்லது செய்தான் நல்லது செய்தான்; செய்தான் தான். அதன் பின்னே வேறு என்னென்ன செய்தான் என்று தோண்டிப் பார்த்தால் என் மண்ணுக்கடியில் அவன் கொன்ற பிணங்கள் எம் இனத்தின் சவ நாற்றமெடுத்து ஆயுசுக்கும் அவனை சபிக்கும் கொடூரங்களாகவே யுள்ளன என்பதை இதுபோன்றத் திரைப்படங்களே தோலுரித்துக் காட்டிக்கொண்டுள்ளன.

33333

எதைப் பொறுப்பது? மதத்தில், கலாசாரத்தில், நடக்கும் நடையில், பேசும் மொழியில், எதில் அவன் செய்த வஞ்சனைகளைப் பொறுத்துக் கொள்வது. எல்லாவற்றையுமெ அவன்’ தான் வாழுமொரு சுயநலத்திற்காக மட்டுமே செய்துள்ளான். எமைக் கொன்றுள்ளான் கொன்றுக் குவித்துள்ளான் என்பதன் ஆதாரமாகவும் அதற்குத் துணைபோன என் இனதுரோகிகளின் சாட்சிகளாகவுமே பல பாத்திரங்களைக் கொண்டுச் செதுக்கியுள்ளார் இயக்குனர் இந்த பாழும் வரலாற்றையும்.

என்றாலும், அதை இப்படி மொழி மணக்க, முகம் விரும்ப, மண் அதிர, மறம் சிறக்க, அறம் வலிக்க, நடந்தவை எதுவெதுவென்று புரிபட, உயிரறுபடும் சப்தம் நலுங்காது காட்ட இயக்குனர் பாலா எடுத்த பெரும் முயற்சி, வரலாற்றின் பாராட்டத் தக்க பதிவிது இந்த பரதேசி.

உண்மையில்  வார்த்தைகள் அடங்கவில்லை. படத்தின் தவிப்பது மனதுவிட்டு நீங்கவேயில்லை. எங்கோ நான் செத்துப் போனதன் வலி, எனைச் சாகடித்ததன் வஞ்சம், எனைக் கருவருத்ததன் விஷம் நாக்கில் சொட்டச் சொட்ட எனை வெறியோடு திரியவைக்கிறது இந்தத் திரைப்படம் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டியிருக்கிறது.

இசையும், ஒளியும், சப்தமும், நடிப்பும், அலங்காரமும், வடிவமைப்பும், திரைக்கதையும், வசனமும், இயக்கமும், பாடல்களுமென எல்லாமே சதையாலும் உயிராலும் பிசையப் பட்டு உயிர்ப்போடு செய்யப்பட்டுள்ளது இத்திரைப்படத்தின் ஒவ்வொரு அசைவும். மொத்த உலகையும் படைத்த பிரம்மனுக்கு எந்த கலைகள் புரிந்திருக்குமோ அந்த ஒரு தெள்ளத் தெளிந்த கலையறிவை நெஞ்சுக் குழிவரை வைத்துக்கொண்டு அதில் எமது இனம் நளிந்த கதையதன் கண்ணீரை விட்டு மனசு கசிந்துப் போனதன் வலியதில் ஒவ்வொரு காட்சிகளையும் செதுக்கி இந்தப் படத்தை செய்திருக்கிறார் இயக்குனர் பாலா அவர்கள்.

யாரும் சவால் விட இயலாது, யாரும் குறை சொல்ல இயலாது, யாரும் பொல்லாப்பு பேச மனம் வராது, அப்படி என்னைப் பற்றி எனக்கான விழிப்புணர்விற்காக அவரால் அப்படி ஒரு படம் செய்யப்பட்டுள்ளது எனும் நன்றியுணர்வே காண்பவரின் மனசெங்கும் பரவிப்போகுமளவிற்கு ஒவ்வொரு காட்சியமைப்பும், முகத் தேர்வும்,  பாடல்களும்,  இசையுமென இந்த பரதேசி படம் ஒரு மொத்த பாராட்டல்களின் மெத்தப் பொக்கிஷமாகவே இனி காலத்திற்கும் நிலைக்கும்..

அன்பென்னும் வார்த்தையை நடிப்பில் காட்டியவள்

வேறொன்றும் சொல்ல வார்த்தைகள் தேவையில்லை. படம் பார்த்துவிட்டு கட்டாந்தரையில் படுத்துக்கொண்டு கால்மீது கால்போட்டுக்கொண்டு மோட்டுவலையைப் பார்த்தவாறே நமது முன் நாட்களை நினைத்து, நாம் சிந்திய வியர்வையில் முளைத்த தேயிலையை நினைத்து, அந்த தோட்டங்களுக்கு நாம் சிந்திய ரத்தமும், அதைக் கூட இன்னொருவனுக்கு விட்டுவிட்டு நம் உறவுகள் நாடு நாடாக தவிக்கும் தவிப்பும், உயிரறுந்த கொடியாக நம் குலப் பெண்களை கொட்டியெரிடுத்து அவர்களின், நிர்வாணத்தை ரசித்தவனின் பார்வைகள் எத்தனைக் கொடிதென்றெண்ணி அந்த மலையக மக்களின் துயர்நீங்க ஒரு சொட்டுக் கண்ணீரை விடுங்கள்..

மொத்தப் பேரின் கண்ணீரில் பூமிப் பந்து கனத்து மொத்த உணர்வும் அவர்களின், அந்த நம் உறவுகளின், நம் மண்ணின் விடுதலையின் வேட்கையாக வெடிக்கட்டும்..

அப்படி வெடிக்கும் எனில்; விடுதலை கிடைக்கும் எனில்; அதன் வெற்றிக் கூச்சலில் அந்த அங்கம்மாக்களின், கறுத்தக் கன்னிகளின், பிள்ளைக்காரிகளின் சாபங்களும் தீர்ந்து; அந்த உத்தமிகளின் ஆசிகள் நமக்கு வரமாக அமையட்டும்..

அதன் நன்றியின் முதல் பருக்கைச் சோற்றை இந்த ‘பரதேசி’ படத்திற்குக் காணிக்கையாக்குவோம்..
——————————————————————————————————————-
வித்யாசாகர்

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in திரை மொழி and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to பரதேசி எனும் பெயரில்; நம் மக்களின் வாழ்ந்து தீராக் கதையது.. (திரை விமர்சனம்)

  1. rathnavelnatarajan சொல்கிறார்:

    அருமையான விமர்சனம்.
    நன்றி.

    Like

  2. Suyenthiran சொல்கிறார்:

    //அதன் பின்னே வேறு என்னென்ன செய்தான் என்று தோண்டிப் பார்த்தால் என் மண்ணுக்கடியில் அவன் கொன்ற பிணங்கள் எம் இனத்தின் சவநாற்றமெடுத்து ஆயுசுக்கும் அவனை சபிக்கும் கொடூரங்களாகவே யுள்ளன//

    தமிழா நீ மறந்து தூங்கினாலும் மண்ணுக்கடியல் ஊணம் சிந்துகின்ற அந்த எலும்பும் தசையும் உன் உறவுகள் இனக்கொலையில் பிணமாகி உன்னை தட்டி எழுப்புகின்ற மணம் அபாரம். விழிப்புணர்வை இழந்து விடாதே என்கின்ற’ அந்த உயரிய நோக்கின் வலி நிறைந்த படைப்பிது….

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s