1) கணினியின் வருகையால் மிச்சப்படுத்தப்பட்ட மரங்களின் வளத்தை குளிரூட்டி எந்திரங்கள் குலைத்துவிட்டதைப்போல; மனிதன் தனது தேவைகளை நிறைவுசெய்துக் கொள்வதற்கென செய்த கத்தியும் இன்று மனிதனைக் கொல்லவே தேடியலைகிறது. கத்திகளுக்கு வேண்டுமாயின்’ பெயர் வேறு முகம் வேறாயிருக்கலாம்’ ஆனால் மனிதர்களே ஜாக்கிரதை!
2) ஒவ்வொரு இடர் வருகையிலும் வாழ்வின் சிறகு ஒன்று நமக்குத் தெரிந்தே உதிர்கிறது, ஆனால் நமக்குத் தெரியாமல் முளைத்திருக்கும் மற்ற இரண்டு சிறகைப்பற்றி நாம் அறிந்துக்கொள்ளமுடிவதே திறமையின் சாதுர்யமெனலாம். அந்தச் சிறகில் ஒன்றின் பெயர் நம்பிக்கையெனில்; மற்றொன்றின் பெயரும் நம்பிக்கையே!
ஆம், நம்பிக்கை மட்டுமே நம் வாழ்வின் அடுத்தகட்ட நகர்வினை வெற்றியை நோக்கி நகர்த்துகிறது. அந்த நம்பிக்கை மட்டுமே நமக்கான மறுபிறப்பையும் நமக்கே வாழத் தருகிறது. அந்த நம்பிக்கை வேறெங்குமில்லை’ உங்களுக்குள் இருக்கிறது; எனவே உங்களை முதலில் நம்புங்கள்..
3) சாலையோரத்து மரங்களில் எல்லாமே எல்லோரின் பார்வையிலும் பட்டுவிடுவதில்லை. அதன் இலைகள் காய் கனி மலர் எல்லாமே ஒரு நோக்கில் தென்பட்டுவிடுவதுமில்லை. ஆனால் மலர்கள் யார் பார்வைக்கும் காத்திராது அதுவாக மலர்ந்து வாசம் அண்டவெளியெங்கும் பரவப் பரவ உதிர்ந்துகொண்டேப் போகிறது; மனிதர்களும் உதிர்கின்றனர், மணக்கின்றனர், மணக்கும்போதே அறிந்துக் கொள்ளுங்கள்’ மடிவது வெறும் உடலாக மட்டுமிருக்கட்டும்; வலிக்கும் மனதாகயிருக்க வேண்டாம்..
