இது முந்தைய தவறு; மூத்த நெருப்பு!!

உன்னோடிருந்தால் பிரியும்

முப்பதை கடந்தப்பின் தான்
வாழ்விற்கே வாசல் திறந்ததெனக்கு..

கனவுகளை
உடைத்து உடைத்துக்
கட்டிக்கொண்ட
கனமான தாலி எனது தாலி..

கன்னம் வலிந்தவள்
கொஞ்சமே வளர்ந்தவள்
கொசுறு கோபக்காரி
கொடுப்பினை அற்ற பாவி
முத்திய வயசாச்சு
முதிர்க்கண்ணி பேராச்சு என
எத்தனை எத்தனை ஊராரின் வர்ணனையில்
வறுபட்டு வறுபட்டு
குறைபட்ட பிறப்பென் பிறப்பு..

மிருகங்களின் நெருப்புப் பார்வையில்
கருகிப்போய்
ஒதுங்கி ஒதுங்கி
பயத்தின் கொடிய பள்ளத்தில் வீழ்ந்ததுண்டு

மிரண்டக் கண்கொண்டு
பார்த்து –
பாவி பெற்ற
வயிற்றை மட்டுமே நொந்ததுண்டு

மனதால்
கொந்திக் கொந்திப் போட்டு
பாதி ஈரப்புண்ணினால்
கருத்துபோனேன்,
களங்கத்தை
துடைக்க துணிந்து மிச்ச ஆசைகளையும்
அறுத்துக் கொண்டேன்;

புத்தாடையில் கண் குத்துமோ
பொலிவு முகத்தை காமம் கொல்லுமா
நிமிர்ந்து நடந்தால் நெஞ்சை கிள்ளுமோ
ஐயோ தலை குனிந்தால்
கோழை எண்ணுமோ என்று
இவ்வுலகைக் கண்டு அஞ்சி அஞ்சி
இத்தனை வருடத்தை
முட்களின்மீதே நடந்துத் தீர்த்தேன்..

அப்பா என்றாலும்
அண்ணா என்றாலும்
தம்பி என்றாலும்
தாத்தா என்றாலும் கூட
அழைத்தவரையெல்லாம் முழுதாக நம்பமுடியாமலே
முப்பது வருடத்தின் மீதேறி
இந்த ஒற்றை தாலி போதுமென
கெட்டியாய்
கட்டிக்கொண்டேன்..

கட்டியவன் யார்
கட்டியவனொரு செந்தாமரைப் போல்
அங்கொன்றுமாய்
இங்கொன்றுமாய்
வீடெரிக்கும் நெருப்பிற்கு மத்தியில்
வீட்டினுள் வெளிச்சமாய்ப் பூக்கும்
கண்ணிய தீயிலிருந்து வந்த ஒருவன்;

இதோ அவன் நடந்தால்
அன்பில் பூ விரிக்கிறான்
அசைந்தால் அழகை
ஓவியமென்கிறான்

குழல்கள் ஆகா
வாசனை என்கிறான்
இந்த குறைபிறப்பை
கோமேதகம்
தங்கம்
தேவதை என்கிறான்..

முத்திப் போனவளுக்கு
மனசெல்லாம் மகிழ்ச்சிப் பாட்டு
உடம்பெல்லாம்
வெட்கத்தின் வெளிச்சம்

நாட்களை தினமொரு ராகத்தில்
பாடிக் கொள்கிறோம்
இரவை
பகலை
இரண்டையும் சலிக்காது தின்றுத்
தீர்க்கிறோம்,

ஆசை
பெருநெருப்பு’ அறிவோம்
என்றாலும்

இது ஆசையில்லை
இத்தனை வருடத்து வலி,
மூடியிருந்த பாம்பின் இன்ப விசம்,
சொல்லி சொல்லிக் கொன்ற சமுதாயத்தின்
மீதேறி
பார் எங்களைப் பார்
இந்த முதிர்க் கன்னனையும்
கன்னியையும் பாரென்று சிரிக்கும்
ஆனந்த சிரிப்பு..
——————————————————–
வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக