60, நண்பா நீ நிழலினும் நெருக்கமடா..

IPFG00027

1
ன் காதலிக்குக் கூட
கடிதம் எழுதுபவன்
நீயாகவே இருந்தாய்..

உன்னிடமிருந்து பேசி
வளர்ந்துதான் உலகமெனக்கு
இத்தனைப் பெரிதாக தெரிந்தது..

என் வாழ்க்கைச் சட்டங்களுக்கு
வண்ணமடித்தவனும்
உறவில் ஒருபெயரைக் கூட்டியவனும் நீதான்..

நீ வரும்நாளில்தான் என்வீட்டுச்
செல்லநாய்க்குட்டி கூட என்னிடம்
செல்லமாய் கோபித்துக்கொள்ளும்
அதைக் கொஞ்சவில்லையென்று..

உனக்கும் உயிர்க்கும்
பெரிதாக ஒன்றும் வேறுபாடில்லை
உயிர் போனாலும் நான் பிணம்தான்
நீ போனாலும் பிணம்தான்..
—————————————————————————————-

friendship-card01

2
ள்ளிநாட்களில்
நாம் பார்த்த உலகைவிட அழகு
வேறில்லை..

பட்டம் விடுவதுகூட இன்று
மாடிக்குமேல் நிகழ்ந்துவிடுகிறது
நாம் பக்கத்தில் அமர்ந்துபேசிய கதைகளை
காணவில்லையே..

கொம்பு தள்ளி தள்ளி
ஊரெல்லாம் ஓடினாலும்
உன் செருப்பிட்டு ஓடிய கால்தடம் தான்
நினைவெல்லாம் இருக்கிறது..

நீச்சல் அடிக்க குளம் தேடி
அலைந்ததும்
மீன்பிடிக்கப் போய் தவளை பிடித்துத்
தின்றதும்; இன்று நினைக்கையில்

ச்சீ.. என்றுத் தோன்றினாலும்
இன்றும் நெஞ்சிலினிப்பது
அந்த நாம் நடந்தோடி திரிந்த நாட்களின்
நினைவொன்று தான் நண்பா..

காதலிக்கும் உனக்கும் ஒன்றுதான்
பெரிய வேறுபாடு
அவள் நெஞ்சில் இருப்பாள்
நீ நெஞ்சாய் இருக்கிறாய்..
—————————————————————————————-

images

3
ரவின் விளக்கொளியிலமர்ந்து
படித்ததும் சரி
எங்கோ எவர்நாட்டு அரசியல் குறித்தோ
பேசி வருந்தியதும் சரி
நாளெல்லாம் பேசிமுடியாமல்
நம் விடுதலைப் பற்றியும்
சமூக விடிவு பற்றியும்
நல்லொழுக்கம் குறித்தும் அலசி அலசி
அயர்ந்துப்போன இரவு நிலா குறிப்பில் கூட
அந்த நட்பின் நாட்கள்
பேசிய நினைவுகளெல்லாம் அழிந்துப்போயிருக்கலாம்

ஆனால் நம் நினைவில்
அந்த நிலவும் நினைவும்
நிழலைவிட நெருங்கியே இருக்கும்..
—————————————————————————————-

friendship-73a

4
ரு தோழனோ தோழியோ
தோள்சாய கிடைப்பது
மீண்டும் மடிசாய தாய் கிடைப்பதற்கீடு..

ஆம் நண்பா
நீயும் சரி
எனது தோழிமார்களும் சரி
அன்பில் அழுக்கு சேராதவர்கள்..

எல்லோரிடமும் நான்
பேசிக்கொள்வதில்லை
அத்தனையொன்றும்
கூடி உறவாடிக்கொள்வதில்லை

ஆனால் அத்தனைப் பேருமே
உள்ளே
அவ்வளவு நெருக்கமாய் இருக்கிறார்கள்..

காரணம்
அனைவருக்கும் முகமாய்
நீ இருக்கிறாய்,

ஒரு சொல்லில் இருக்கிறாய்
நட்பு எனும் ஒரு சொல்லில்..

நட்பு தாய்மையில் அடங்குவதில்லை
காதலில் அடங்குவதில்லை
சகோதரப் பாசத்திலும் அடங்குவதில்லை; ஆனால்
நட்பில் எல்லாமே அடங்கிப் போகிறது..

தோழியரும்
தோழர்களுமாய் இருக்கும்
எனதுயிர் நண்பர்கள் வாழ்க..
—————————————————————————————-
வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in ஒரு கண்ணாடி இரவில் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக