உண்மையின் வெளிச்சமேந்து..

58FF5231-2CB3-4F31-BFED-2E041CB1E8D6

உயிர்கள் போகையில் பசியைப் பற்றி பேசுவது கூட தர்மமல்ல; மக்கள் மாண்டுகொண்டிருக்கிறார்கள் அதற்கு கூடி ஏதேனும் செய்ய இயலுமெனில் செய்வோம், அதைவிடுத்து வெறுமனே ஒருவருக்கொருவர் கருத்துமோதலிட்டு இருக்கும் ஒற்றுமைத் தன்மையையும் இழந்துவிடவேண்டாம் உறவுகளே..

வரும் எந்த தகவலையும் நாம் நன்னெஞ்சோடு பகிர்கிறோம், எனவே அது நம் முழு சொத்தோ முழு பொருப்பிற்கிணங்கி நம் பிள்ளையோயாகிவிடாது. எனவே சரிதவறை நட்புறவோடு பகிர்ந்துகொள்வோம். யார் மனதும் யாராலும் காயப்பட்டிட வேண்டாமென்பதே பண்பெனப் பழகி உயர்வோம்.

புரட்சியொன்றை தேடியலையும் மண்ணாக நம் நிலத்தை மாற்றிக்கொண்டும் நம்முள் ஏனைய அதிகாரங்களை திணித்துக்கொண்டும் வருகின்றனர். எம்மக்களோ அவர்களுக்கு இயற்கை நல்லுறவை தரட்டும்.

என்றாலும் இன்றைய சூழலில் எதிர்த்து போராட அல்ல தடுத்து நிற்கவேனும் ஒற்றுமை எனும் முழு பலத்தோடு நாமிருத்தல் வேண்டும்.

நமை சுற்றியுள்ள மக்கள் பதைபதைத்தத்துள்ளனர். அரசு முறையாக செயலாற்றுவதில்லை அலுவல்கள் அதிகாரிகள் எல்லோருமே முழு நன்னடத்தையோடு செயல்படவில்லை, ஊடகங்கள் மருந்து படிப்பு ஆன்மிகம் என அத்தனையுமே ஏறயிறங்க வரும் விலைக்கு விற்கப்படும் வியாபாரமாகிக் கொண்டிருக்கிறது. யாரோ ஒருசிலர் முகம் தெரியாத பலருக்காய் உழைத்தும் உயிர் கொடுத்தும் கொண்டுள்ளனர். அவர்களை போற்றி மதித்து நாமும் முன்னிற்க முயல்வோம். அவர்களைத் தாண்டித்தான் சுயநலப் பேய்களின் நமை துரத்தி துரத்தி சூரையாடிக்கொண்டுள்ளன.

இடையே இங்குமங்குமாய் ஓடித்திரியும் சிற்றுயிர்களைப் போல நாம் நமக்கான காட்டைத் தொலைத்துவிட்டு கூடற்றவர்களைப்போல பயத்ததோடு ஓடிக் கொண்டுள்ளோம்.

எனினும் நம்பிக்கையை வெல்லுஞ் சக்தியும் நம்பிக்கை ஒன்றாகவே இருக்கும். எனவே ஒட்டுமொத்தமாய் நம்புவோம் எல்லாம் மாறும் எல்லாம் நன்மைக்கே என்று. உறுதியோடு உண்மை வெளிப்பட’ வெல்ல’ உண்மை வேரூன்றிட எழு எம் மக்களே..

உண்மைக்கு நேர்க்கோட்டில் வருவது புரட்சியாயினும் சரி போராயினும் சரி அது நம் அமைதிக்கானதாய் இருக்க நடைபோடு.. நம் நடை நமக்கொரு நல்ல நாட்டை தரட்டும்!! நல்ல தலைவர்களை தரட்டும்!!

வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in அறிவிப்பு, கட்டுரைகள், வாழ்வியல் கட்டுரைகள்! and tagged , , , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to உண்மையின் வெளிச்சமேந்து..

  1. பிங்குபாக்: உண்மையின் வெளிச்சமேந்து.. – TamilBlogs

பின்னூட்டமொன்றை இடுக