செல்லம்மா வித்யாசாகரின் சிறுகதைகள்..

“தலைப்பு : பயணம்..”

கல்யாணியும் சாந்தியும் நல்ல தோழிகள். அவர்கள் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் நடுத்தரக் குடும்பத்தை சார்ந்தவர்கள். அலுவல் முடிந்து, எப்பொழுதும் அவர்கள் பேருந்தில் பயணம் செய்துதான் வீட்டுற்கு போவார்கள். அப்படி ஒரு நாள் பயணத்தின் போது –

“கல்யாணி சாந்தியிடம் கேட்கிறாள் நேற்று செய்தி பார்தியாடி, தேர்தல் நெருங்குகிறது ஆகவே சாலை சீரமைப்பு மற்ற எல்லாம் பணிகளும் நம் நாட்டில் விரைவாக செய்து கொண்டு வருகிறார்கள் தெரியுமா”

“அப்படியா” என்றால் சாந்தி.

“ஆம் நம் நாடு மிகவும் முன்னேறி கொண்டுதான் வருகிறது. ஆனால் அதை தடுக்க நம்மூரிலயே ஆட்கள் இருக்கிறார்களே அதை நினைக்கும் போதுதான் வேதனையாக உள்ளது”

“ஆம் நாலுபேர் நல்லவர்கள் இருந்தால், நாலு பேர் கெட்டவர்களும் இருக்கத் தானே செய்கிறார்கள்”

“நாடு முன்னேறுது முன்னேறுதுன்றோம், நாட்ல விலைவாசி பார்த்தியா?!!!!!”

“ஆமாண்டி கல்யாணி இப்பொழுது காய்கறி விலை கூட ரொம்ப அதிகமா இருக்கிறது” என்று பேசி கொண்டே இருந்த போது அங்கே கண்டக்டர் டிக்கெட் டிக்கெட் என்று சொல்லிக்கொண்டு வந்தார், உடனே கல்யாணி தன்னிடம் இருந்த ஐந்த ரூபாயை கொடுத்து இரண்டு ருபாய் டிக்கெட் இரண்டு கொடுங்கள் என்றாள். உடனே அவர் சில்லறை இல்லை என்னிடம் என்றார். இறங்கும் போது வாங்கி கொள் என்றார் . பின் கல்யாணி தன் தோழியிடம் சொல்கிறாள் இந்த கண்டக்டர்களே இப்படித்தான் எப்போ பார்த்தாலும் சில்லறை இல்லை என்று சொல்வதே இவர்களுக்கு வழக்கமாக போய் விட்டது. இதெல்லாம் கேட்க யார் இருக்கிறார்கள்.

“ஆமாம் கல்யாணி நீ சொல்வது உண்மைதான் இப்படி பேருந்தில் பயணிக்கும் பயணிகளிடம் எவ்வளோ ரூபா ஏமாற்றி இருப்பார்கள் இவர்கள்’ என்றாள் சாந்தி. ‘பார்க்கலாம் இவர் போகும்போது தருகிறாரா’ என்று.

“இதலாம் விட கொடுமை, நம் நாட்டில் மழை வேறு வந்து என்ன பாடு படுத்தியது மக்களை, பாவம் மக்கள் அடிமட்டத்தில் இருப்பவர்கள் தான் மிகவும் சிரமபட்டுக் கொண்டு இருகிறார்கள்” என்றாள் கல்யாணி.

‘’ஆம் இப்பொழுது வானம் கூட மக்களை பழி வாங்குகிறது”

“வானமா?”

“ம்ம.., இயற்கை கூட மனிதர்களை, ஏழைகளை தான் பழி வாங்குகிறது. இதனால் விவசாயம் எவ்வளோ பாதிப்பு அடைதுள்ளது தெரியுமா? நேற்று செய்தியில் இது பற்றித்தான் காட்டி கொண்டு இருந்தனர். நாம் சென்னையில் நகரப்பாங்கில் வசிப்பதால் நமக்கு கிராமமத்து வாழ்க்கை தெரிவதில்லை. அங்குள்ள மக்காளின் உழைப்பால் தான் நமக்கு உண்ண அரிசியும் காய்கறிகளும் கிடைக்கிறது. இந்த மழையால் இப்போது காய் கறிகள் எல்லாம் விலை ஏறி கிடக்கிறது” என்றாள் ஷாந்தி.

உடனே கல்யாணி “ஆம் ஷாந்தி ஒரு பக்கம் இப்படி இருந்தாலும், மறுபக்கம், சாப்ட்வேர் மற்றும் இதர தொழில்களில், விஞ்ஞானத்தில் கூட மிகவும் முன்னேறி வருகிறோம். அது அப்படி இருக்க, பாகிஸ்தானில் தாலிபான்கள் மூலம், பெண்கள் பள்ளிகளை தொடர்து எரித்து கொண்டு வருகிறார்கள். இது ரொம்ப கஷ்டமாக இருந்தது. ஏன் இப்படி இருக்காங்கன்னு தெரியல. ஏன் இவர்களுக்கு இப்படி ஒரு மனசு இருக்கிறதோ தெரியவில்லை. இதலாம் கடந்தும் இக் காலத்தில் பெண்கள் கல்வி கற்று கொள்வது என்பது மிகவும் அவசியமான ஒன்றுடி”

“ஆமாண்டி இப்போது, விண்வெளி போன ‘கல்பனா சாவ்லா எல்லாம் நமக்கு ஓர் முன்னோடி தானே, அந்த தாலிபான் போல நம் கல்வியை நமக்கு தடுக்க இங்கே அத்தனை கொடூரமானவர்கள் இல்லாதது பெரிய விசயம்டி. நம்மூரில் நம்மை முன்னேற்ற நம் சமுகம் உடன் நிற்கிறது.

“எல்லா இடத்திலும்னு சொல்ல முடியாது. ஒரு சில கிராமங்களில் பெண்கள் பள்ளிக்கு செல்வதில்லை, ஆனால் இது போன்று பள்ளிக்கு தீவைப்பது, பெண்கள் வன்முறையை திணிப்பது என்பது நம் தமிழ் நாட்டில் இல்லை”

பின் அவர்கள் இருக்கும் இடம் வர இருக்க, போய் கண்டக்டரிடம் மீதப் பணத்தை கேட்கப் போனார்கள். உடன் அவரும் கொடுத்துவிட்டார்.

“பரவாயில்லைடி. இவர் நல்லவர் போல, அதுதான் கேட்ட உடனே கொடுத்து விட்டர். இல்லையா கல்யாணி”

சாந்தியும் ஆம் ஆம் அவர் காதில் கேட்டு விடப் போகுது வா இறங்க தாயார் ஆகலாம் என்றாள். அதற்குள், அலைபேசி அழைக்கும் சப்தம் சாந்தியிடம் இருந்து வர, எடுத்து பேசுகையில், அவளுடைய அம்மா வரும்போது நம் தெரு முனையில் இருக்கும் கடையில் பால் வங்கி வா பணம் பிறகு கொடுத்துக்கலாம் என்று சொல்லிவிட்டு தொலைபேசியினை வைத்தாள்.

கல்யாணி என்ன என்றாள். அம்மா அழைத்தாள்’டி, பால் வேணுமாம். போன வாரமெல்லாம் பால் கிடைப்பதே அரிதாய் இருந்தது. பால் வியாபாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக. எல்லாம் இந்த அரசியல் காரணம் தான்.

“ஆம், ஏன் நம் நாட்டில் அரசியில்வாதிகள் இப்படி இருகிறார்கள் என்று தெரியவில்லை. பாவம்டி, அவர்களே கூலிக்கு உழைப்பவர்கள், அவர்ளுக்கு ஒரு ருபாய் ஏற்றி கொடுத்தால் தான் என்ன என்று தெரியவில்லை” அதற்குள், பேருந்து நின்றது. அவர்கள் இறங்கும் இடம் வந்துது இருவரும் இறங்கி அவரவர் வீட்டிற்குச் சென்றார்கள்.

எபப்டியோ, சமூகம் சார்ந்த சிந்தனைகளால், இவர்களின் இன்றைய பயணம் மிகவும் நல்ல பயணமாக அமைந்தது.
————————————————————————————————
செல்லம்மா வித்யாசாகர்

Posted in நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் | Tagged , , , , , , , , , , , | 10 பின்னூட்டங்கள்

பெரியார் நூலகத்தின் இராவண காவியமும், பாராட்டு விழாவும்…

வெறும் சவ்வுகளாலான இதயத்தை
அன்பு நிரப்பி –
மனசாக்கிக் கொள்வோம்!

சில நீலக் கடலின் தூரத்தை
சின்ன இதயமளவில் வென்று
உறவென எழுத்தாலும் முழங்குவோம்;

வாழ்வின் அதிசயத்தை ஆணவமும்
பொறாமையுமின்றி –
உனக்காய் எனக்காய் நமக்காய்
நாளைய தலைமுறைக்குமாய் ஒற்றுமையில் வென்று குவிப்போம்!!

கால சூத்திரத்தின் கட்டப்பட்ட சூட்சுமக் கைகளை
நற்சிந்தனையின் தெளிவின் கண்களோடு கண்டு
இலகுபடுத்தி வான் நோக்கி இரு கை விரித்து –
உலகின் நன்மைக்காய் வேண்டுவோம்!!

என் வீடு என் தெரு என் தேசம் இவ்வுலகம்
இவ்வுலகில் நிறைந்துள்ள மரம் செடி கொடி விலங்குகள்
உயிரினங்கள் அனைத்தின் நன்மைக்கும் –
நாமும் பொறுப்பென்று உணர்ந்து
நம் வாழ்க்கைமுறையை அமைத்துக் கொள்ள –
கூடிபேச –
நிறைவாய் நம் தமிழுக்கு காது கொடுப்போம்!

அனைவருக்குமென் அன்பு வணக்கம்!!” என்று ஏற்புரை ஏற்று பேச ஆரம்பித்த போது, என் கையிலிருந்த காகிதம் என் கண்களை மூடிக்கொள்ள; வாய் – தானாக பேச ஆரம்பித்ததாய் தோன்றியதெனக்கு.

அத்தகைய வண்ணம், கிடைக்கப் பெற்ற விருதுகளின் முகத்தை மீண்டும் ஒருமுறை அன்பினால் பூசி; குவைத் பெரியார் நூலகம், எனக்கேக் காட்டிய நெகிழ்வான தருணமது. சிரித்த முகத்தில்; தாயும் தகப்பனும், உற்ற சகோதர சகோதரியும், நண்பர்களும் மகிழும் உண்மை மகிழ்வினை என் வெற்றி கொண்டவைக்காய் என்று சொல்லி; குதூகலித்தது அந்த தோழமை உறவுகளின் மேடை.

விருதினை மட்டுமே வெற்றி என்று ஏற்காத என் லட்சியத்திற்கு; விருதும் ஒரு வெற்றி, அது நல்ல படைப்பிற்காக கிடைக்கப்பட்ட அங்கிகாரம் என்பதுபோல் கொண்டாடினர் பெரியார் நூலக அமைப்பினரும், கலந்து சிறப்பித்த இதர அமைப்புக்களின் நிர்வாகிகளும். இயல்பாகவே அவர்கள் விருதினை எண்ணி மகிழக் காண்கையில் எனக்கும் மனம் பூரிக்கவே செய்தது.

ஆனாலும், ஒரு படபடப்பு; எதிர்பார்ப்புக்களை நிறைவு செய்யும் அதீத அக்கறை உள்ளே நெருட, எழுதியதை எடுத்துக் கொண்டு மேடை ஏறினாலும்; இயல்பாய் என் உறவுகளிடம் பேசும் மகிழ்வாகவே வியர்வை துளியோடு சேர்ந்து சொட்டியது என் உணர்வுகளின் வெளிப்பாடுகளும்.

உண்மையில், இதலாம் இத்தனை நான் எதிர்பார்க்காதது தான், அதிலும், எனக்கான ஒரு பெருமை நிகழும்போதெல்லாம், எனையே சார்ந்திருக்கும் என் செல்லம்மாவின் உணர்வுகள் பெருமை படுத்தப் படுவதில்லையே என்று ஒரு எண்ணமும் வரும். ஒரு ஆணைச் சார்ந்தே பெண்கள் இருக்குமாறும்; பெண்களின் வெற்றிக் கூட வெறும் ஆணாக மட்டுமே இருக்கத் தக்க அமைந்துவிட்ட இச்சமுதாயக் கட்டமைப்பு ஒரு பக்கத்தில் மிக வருத்தத்தையே தந்தது.

அவர்கள் ஆணுக்கு பெரும் உதவி. பெண்கள் ஆண்களின் மூலசக்தி, இதலாம் நம்மால் ஒப்புக் கொள்ளப் பட்டாலும், அவர்களின் உணர்வினை வெற்றிகளாய் பகிரும் வாய்ப்பினை அவர்களுக்கு அளிக்கவோ, அல்லது அளித்தாலும் அவர்கள் பெறவோ தயாராக இல்லாத நிலை நிறைய குடும்பங்களில் இருக்கிறதே.

அதற்கு நாமும் ஆளானோமோ என்று எண்ணுவேன். ஆனால், அவைகளை போக்கும்வகையில்; செல்லம்மாவையும் மேடைக்கழைத்து அவருக்கும் பொன்னாடை அணிவித்து அவரோடு என்னை பெருமை படுத்திய ‘எழுத்திற்கும், விருதிற்கும், பெரியார் நூலக அமைப்பிற்கும் நன்றிகள் பல கூற மனதார உரித்தானேன்.

சாதாரணமாகவே சமூகப் பார்வைக்கென ‘வித்யாசாகரெனும் ஒரு கம்பீரத்தை உடுத்திக் கொண்டு வெட்டியாய் திரிகிறோமோ? ஒரு பொதுமனிதனுக்கான கடமையே இன்னும் கடல்போல் விரிந்திருக்க மேடைகளும் பாராட்டுக்களும் தேவைதனோ? என்றொரு எண்ணம் மீண்டும் மீண்டுமாய் எனக்குள் கேள்விக் குறியாகவே இருக்கிறது.

வெறும், இருபது புத்தகங்களோ, இருநூறு புத்தகங்களோ எழுதிவிடுவதல்ல என் நோக்கம். ஒரு சாதாரண மனிதனின் வெற்றிக்கு உரிய மாற்றம் என் எழுத்தாலும் நிகழுமெனில்; அதை பல பேரிடத்தில் கொண்டு சேர்க்க வேண்டுமென்பதே என் லட்சியம். அதன்பொருட்டுத் தான் நான் ஒருநாள் எழுதாத என் தினத்தைக் கூட என் வாழாத நாளென்றுக் கருதுவதும்.

ஐயா செல்லபெருமாள் அவர்களும், சகோதரி லதாராணி அவர்களும் அழைத்து இவ்விழா பற்றி தெரிவித்த போதுகூட, ஒரு கணம் இதலாம் தேவைதானா என்று யோசித்து, பிறகு சரி, பெரியவர்கள் ஏதோ செய்கிறார்கள் செய்யட்டும் மதிப்போமே என்னுமளவில் இம்மரியாதையையும் ஒப்புக்கொண்டேன். ஆனால், இதலாம் செய்து எனை மேலும் இச்சமூகத்திற்கான எழுத்துக்களை சுமக்கும் கடமைகளில் மிகையாய் ஆழ்த்தியதிந்த ”குவைத் பெரியார் நூலக அமைப்பு என்பதே உண்மை.

பொதுவாக, விருதுகளும் பாராட்டுக்களும் ஒரு படைப்பாளியின் படைப்பிற்கான எழுத்திற்கான அங்கிகாரம் தானேத் தவிர, நம்மை மாற்றி விடத் துணியும் சாவியல்ல’ என்பதே நான் எங்கும் பகிர்ந்துக் கொள்ளும் கருத்து. எனவே உங்களின் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் எல்லாம் உழைப்பிற்குக் கிடைத்த ஒரு மதிப்பாக மட்டும் கருதி; இன்று உடுத்தக் கிடைத்த இப் புதுச் சட்டையை இன்றிரவு படுக்கும் முன்பே கழற்றி; காலம்வரை தலையில் கனக்காமல் மனதில் சுமப்பேன் என்று சொல்லி,

இப்படியும் ஒருவன் இருக்கிறான் என எனைக் காட்டி, என் படைப்புக்களையும் பலர் வாங்கிப் படிக்க விருதுகளும் படைப்பாளியை அடையாளம் காட்டுகின்ற இவ்வேளையில், அப்படி என்னையும் அடையாளம் காட்டிய இத்தருணத்தை ‘சபை அடக்கம் கொண்டோ அல்லது இதலாம் அவசியமற்றது என்று சாதாரணமாகவோ எண்ணிவிடாமல், இதை என் மகிழ்வான தருணமாகவும், நன்றிக்குரிய தருணமாகவும் அறிவித்து, வாழ்த்திச் சென்ற எல்லோருக்கும் என் மனநிறைவான நன்றியினை உரித்தாக்கி விடை கொண்டேன்.

என்றாலும் இந்த விருது சமாச்சாரங்களை கடந்து, பெரியார் நூலகம் வேறு சில அரிய செயல்களையும் இம்மேடையில் செய்து சிறப்பித்தது.

பெரியாரின் சிந்தனைகளை பகிர்ந்துக் கொள்ளும் நோக்காக சகோதரி பாரதி தமிழ்நாடன் அவர்கள் ஒரு புத்தகத்தின் முக்கிய சாராம்சங்களை எடுத்து வரி விடாமல் இயல்பான நடையில், அவ்வளவு நேரத்திற்கு; அத்தனை பக்கங்களையும், கேட்போரின் மனதில் பதியும் வண்ணம் மிக நேர்த்தியாக படித்து அமர்ந்தார்.

தமிழின் ஈர்ப்பு என்பதை கடந்து தன் சொல்வளத்தாலும், மேடையினை தன்வயப் படுத்திக் கொள்ளும் திறத்தாலும் கவிதாயினி சொப்னபாரதி லதாராணி அவர்கள் ராவண காவியத்தின் அத்தனை அழகியலையும் மாதம் தோறும் பகிர்ந்து வருகிறார். அதில் குறிப்பாக இம்முறை மண்ணின் வளங்களைப் பற்றியும், மக்களின் அக்கால வாழ்வியலை பற்றியும் ஆசிரியர் குழந்தை அவர்கள் தனது அழகிய கற்பனை வளத்தால் எழுதியுள்ளதை அவரின் ரசனை சாரம் குறையாவண்ணம் கவிதாயினி சொப்னபாரதி லதாராணி அவர்கள் எடுத்துரைத்து சொற்பொழிவாற்றியது கேட்கையில் மகிழத் தக்கதாயிருந்தது.

அதோடு, சென்ற வருட இறுதியில் இயற்கை எய்திய திரு.வை. பாஸ்கர் அவர்கள் குவைத்தில் ஆற்றிய பல நற்செயல்களை எடுத்துரையாற்றி அவரின் திருவுருவப் படமும் திறந்து வைக்கப்பட்டது. அவரின் சிறப்புகள் குறித்தும், அவர் குவைத்தில் ஆற்றிய சேவைகள் குறித்தும் நிறைய பேர் பேசினார்கள்.

அதில் குறிப்பாக அருவிக் கவிஞர் ஆனந்தரவி அவர்கள் ‘அவருக்கும் வை.பாஸ்கர் அவர்களுக்கும் இடையேயுள்ள’ அவரின் தாய்மாமன் உறவு பற்றியும், அவர் குவைத்தில் இதுவரை பலரை வரவழைத்து அவர்களின் வாழ்வில் விளக்கேற்றி வைத்த சிறப்புகள் குறித்தும், இனம் என்பதைக் கூட கடந்து மனிதம் என்பதை மட்டுமே முன்வைத்து அவர் பலருக்கு உதவியாதாகவும் கூறி; அடுத்தடுத்த இடத்தில் அவர் பகிர்ந்துக் கொண்ட செய்திகளால் கேட்போரின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து வர, வார்த்தைகள் உடைந்து, பாசத்தில் ‘கேட்போரை எல்லாம் நெகிழவைத்து கலங்கவும் வைத்தார்.

பெரியார் சிந்தனை குறித்து ஐயா திரு. தமிழ்நாடன் அவர்கள் பேசுகையில், பெரியாரை ஒரு கடவுள் மறுப்பு கொள்கை சார்ந்து மட்டுமே நிறைய பேர் பார்க்கிறோம், அது அவர் ஆற்றிய விழிப்புணர்வு செயல்களில் ஒரு துளி மட்டும் தான். அது கூட அக்கால கட்டத்தில் நிகழ்த்திக் கொண்டிருந்த அதிக மூடத் தனங்களை எதிர்க்க அவர் அவ்வாறே செய்ய வேண்டியிருந்தது. அது ஒன்றை மற்றும் கருதி சிலர் அவரை அவரின் எண்ணங்களை முற்றிலும் ஒதுக்கி விடுகின்றன்னர்.

அவைகளை தாண்டியும் அவர் செய்த நிறைய நற்செயல்களை நாம் கவனத்தில் எடுத்துக்கொண்டு விழிப்போடும் தெளிவோடும் வாழ்க்கையை வாழ வேண்டும். மானமும் அறிவும் மனிதருக்கு அழகு என்பதை புத்தியில் இருத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டு வேறு சில தன் சுய கருத்துக்களையும் அழுத்தமாக பகிர்ந்துக் கொண்டார்.

தாய்மண் கலை இலக்கிய பேரவையின் நிர்வாகி திரு. க.அன்பரசன் அவர்கள் தன் மனம் நிறைந்த அன்பை நம் எழுத்து சார்ந்து பகிர்ந்துக் கொண்டார். மனம் நிறைந்து மேலும் நாம் வளர வாழ்த்திச் சென்றார். பெரியார் நூலக அமைப்பின் துணைத் தலைவர் திரு. லியாகத் அலி அவர்கள் நம் விருதுகளுக்காக வாழ்த்தறிவித்து பொன்னாடைப் போற்றி கௌரவித்தார்.

அது தொடர்ந்து, பெரியார் பன்னாட்டு கழக செயலார் திருமதி. கவிதாயினி சொப்னபாரதி லதாராணி அவர்கள் ‘குடும்பம் எனும் கோப்பில் உள்ள ஒருவரின் வெற்றிக்கு இருவரின் செயல்பாடுகளும் காரணம் என்பதை வலியுறுத்தும் வகையில் செல்லம்மாவிற்கும் பொன்னாடை அணிவித்து மரியாதை செய்து எங்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினார்.

அதையடுத்து பெரியார் நூலக அமைப்பின் தலைவர் திரு. செல்லபெருமாள் ஐயா அவர்கள் வந்தமைக்கு நன்றி பகிர்ந்து வாழ்த்தி விழாவினை நிறைவு செய்து, விழா இறுதியாக அறுசுவை உணவும் பரிமாறி வந்தோரை நிறைவாய் விடை பெறச் செய்தார். முடிவில் எல்லோருக்கும் கைகூப்பி –

எலோரிடமிருந்தும் பிரியாவிடை பெற்று; எழுத்தின் சிறப்பினை வெறும் பாராட்டுவிழாவோடு நிறுத்திக் கொள்ளவேண்டாம், அது ஒருவரையாவது நல்ல மனிதராக மாற்றுவதில் செழுமை பெறட்டுமெனும் கட்டளை ஒன்றினை மனதில் தாங்கியவனாய் சமுதாயத்தின் அக்கறையோடும், இவர்களுக்கான நன்றி உணர்வினோடும் வீடு நோக்கி செல்லலானோம்..
—————————————————————————————
வித்யாசாகர்

Posted in அறிவிப்பு, கவியரங்க தலைமையும் கவிதைகளும் | Tagged , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

71, யாரையும் நோகாத கனவுகள்..

வலிக்காமல்
சலிக்காமல்
நினைவுகளிலிருந்து அற்றுப் போகாமல்
நிஜம் பூத்த மலர்களின் –
வாசத்தொடும்,
வரலாறாய் மட்டும் மிகாமலும்,
முன்னேற்றப் படிக்கட்டுகள் நிறைந்த
பல்லடுக்கு மாடிகளின் முற்றத்தில் –
மல்லிகைப் பூக்க,
ஒற்றை நிலாத் தெரிய,
மரம் செடி கொடிகளின் அசைவில் –
சுகந்தக் காற்று வீசும் –
தென்றல் பொழுதுகளுக்கிடையே;
வஞ்சனையின்றி –
உயிர்கள் அனைத்தும் வாழ
யாரையும் நோகாமல் ஒரு – கனவேனும் வேண்டும்!!
—————————————————-
வித்யாசாகர்

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , , , | 13 பின்னூட்டங்கள்

42 என் அண்ணனின் தாய் பார்வதியம்மாள்; எனக்கும் தாயானாள்!!

எட்டியுதைத்த கால்களிரண்டை மார்பில் தாங்கி
எமைச் சுட்டு ஒழித்த கைகளிரண்டை முறித்துப் போட்ட
உலகம் தொட்டுநிலைக்கும் புகழது வானில் பறக்க – எமக்கு
ஒற்றைத் தலைவனை காலம் – கணித்துப் பெற்றவளே ;

சொந்தம் கடலென மண் நிறைந்தும்
மருத்துவம் தேடி வந்தவளை – நெஞ்சங் கல்லாகி
நிராகரித்த வஞ்சகத்தார் – சுவாசித்த சிறு மூச்சும்
வேண்டாமென விட்டவளே ;

உள் சுட்ட வடுக்கள் பல யிருக்க
இன்னும் தீராத ஏக்கம் வலி வலிக்க
போறாத காலம்பூண்டு – பக்கவாதம் தின்றுத் தீர்க்க
சிங்களனின் சிறையால் கூட செத்தவளே; சீவனைத் தொலைத்தவளே;

கட்டிய கணவன் மடியில் தாங்க
பெற்ற பிள்ளை வீரத் தோளில் சுமக்க
உதிராத பூவும் அழிக்காத பொட்டுமாய்
உறவுகளின் கண்ணீரில் போறவளே ; தனியாக போனாயோ?????

கொள்ளி வைக்க நாங்களிருக்கோம்
சந்தனத்தால் சேர்த்து எரிப்போம்
தமிழால் , கவியால், தீ மூட்டுவோம்; போனபின்னே
எல்லாம் செய்வோம் – இருந்தபோது விலகி நின்றோமே; மன்னிப்பாயா????

கட்சி புகழ் வாசனை ஆச்சி
நாற்காலி ஆசை உயிர்வரை பரவிப் போச்சி
உறவெல்லாம் அங்கே இறந்துக்கிடந்தும் – வெள்ளைச்சட்டையே பெருசாச்சி
வெட்கத்தால் அழுகின்றோம், வாழும் வரை தலைக் கவிழ்கின்றோம்;

ஒரு சொட்டுக் கண்ணீரை யேனும் –
உன் அஞ்சலிக்காய் விடுகின்றோம்!!
—————————————————————————-
வித்யாசாகர்



Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

மனிதர்களின் கோர முகம் – தாண்டவமாடும் – ஆடுகளம் – திரை விமர்சனம்!

என் தமிழ் படங்களிலிருந்து சிலர் தள்ளிவைத்திருந்த மக்களை; தெருவை; வாழ்தலை எடுத்து திரை படமெல்லாம் தூவிய வெற்றி மாறனின் வெற்றிப்படம் ‘ஆடுகளம்!

வியக்கும்  பட்ஜட்டோ மயக்கும் ஆடம்பரமோ இன்றி என் சாதாரண மக்களின் கதையை திரையில் இயக்கி, காலத்திற்கும் அவர்களின் வாழ்க்கையை பதிந்துவிட்ட படம். ஒரு திரைப்படத்திற்காக நாலு பேர் வாழ்ந்து சென்ற படம்; ஆடுகளம்.

மனிதனின் தானெனும் செருக்கை திரை சுருள்களில் காட்டி; ஒட்ட நறுக்க வாளெடுத்த கதாப்பாத்திரங்களுக்கு; மறக்க முடியாத நினைவையே பரிசாக பெற்றுக் கொள்ள ‘அருகதை ‘அதிகமுள்ள படம் ஆடுகளம்!

ஒரு சின்ன பொறாமைநெருப்பில் ஊரெரியும் கதை, கதைக்கு நடுவே இதயத்தை உடைத்துக் கொண்டு திரியும் மனிதர்கள், மனிதனின் மனசுக்கும் புத்திக்கும் வரும் போட்டியில் சிதைக்கப் படுகின்ற ஒரு நல்லவனின் வல்லவனின் கதையை இதயம் நடுங்க பார்த்துவிட்டு, கனத்த மனத்தோடு வெளியேற செய்கிறதிந்த; தனுஷின்; ஆடுகளம்!

யாத்தே யாத்தே பாடலை முனுமுனுக்கும்போதே எதிரே சுற்றும் உலகம் சற்று மறந்துதான் போகிறதெனலாம். பின் வரும் ‘ஒத்த சொல்லால..’ எனும் மற்றுமொரு ஒற்றைப் பாடல் லுங்கியின் மீதே ஒரு காதலை ஏற்படுத்திவிடும் போல்; அப்படி ‘நம் மனதை எல்லாம் வாரி தன் லுங்கியின் மேல் போட்டுக் கொண்டு ஆடுகிறார் பாருங்கள் தனுஷ்; அப்படி தாங்க ஆடுகிறார். கதாநாயகத்தனம் எனும் கட்டளைகளை யெல்லாம் மீறி; யதார்த்தத்தின் கிரீடத்தை அணிவித்துக் கொள்கிறதிந்த ஆடுகளம்!

முறுக்கிய மீசையின் கம்பீரத்தையும், தன்மானத்தின் வலிமையையும், குரு துரோகத்தின் அவுமானத்தையும் மரணிக்கும் நடிப்பு வரை தன் முகத்தினால் காட்டி, பார்வையினால் நம்மை மிரட்டியும் ரசிக்க வைத்தும் நடித்து; இன்னும் பல படங்கள் தன்னை தேடிவருமாறு ஈர்த்துக் கொண்ட ஐயா கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலனுக்கு திரை உலகம் தந்த சிவப்புக் கம்பள வரவேற்பிந்த ஆடுகளம்!

இப்படத்தில் கதாநாயகன் யார்? பேட்டை காரனா? துரையா? கருப்புவா? கருப்பின் நண்பனா ? அல்லது தன் நடத்தைகளில் கோபத்தில் சுய கௌரவத்தில் அம்மாவின் ஒற்றை ஆசையை தீர்த்துக் கொள்ள கண்ணியமாக போராட துடித்து கடைசியில் கிடைத்த தோல்வியை கூட நிராகரிக்காது ஏற்றுக் கொண்ட இன்ஸ்பெக்டர் துரைசாமியா? என்று படம் பார்க்கும் மனதில் வன்மம் ஒழிக்கும் வகையில் வில்லன்களை கூட; இயன்றவரை நல்லவர்களாகக் காட்ட முயன்ற திரைப்படம்; ஆடுகளம்!

நெற்றியில் முத்தம் கேட்கும் ரக கதாநாயகி, கை பிடித்துவிட்டாலோ, உன்னோடு வந்து சுற்றி விட்டாலோ; நாமொன்றும் காதலர்கள் அல்ல என்று சொல்லிவிட்டு, பேட்டை காரன் ‘கருப்புவான தனுஷைப் பற்றி தவறாக சொல்கையில், ஒரு சின்ன சந்தேகத்தை கூட அவன் மீது கொள்ளாமல், ஏனைய படத்தின் உத்தி போல் பேட்டை காரனின் மனைவிதான் அழைத்து கதாநாயகியிடம் தொலைபேசியில் கூறிவிட்டாள் என்று கடைசியில் சின்னதாக ஒரு பூ சுற்றாமல், தான் விரும்பியவனின் மேல் இரும்புப்பிடியென நம்பிக்கையை நிரப்பி வைத்திருக்கும் ஓர் அழகு ஓவியத்தை இங்குமங்குமாய் நகர வைத்து, பேச வைத்து, சிரிக்கவைத்து, எம் தலைமீதேறிப் போகத்துடிக்கும் அந்நிய மொழியை கூட; அந்த பெண் பேசுகையில் ரசிக்க வைத்த படம்; ஆடுகளம்!

அத்தாச்சியாக வந்த, பேட்டைக்காரனின் மனைவி, மண்ணை வாரி அவர் முகத்தில் இரைத்துவிட்டு ஓடுகையில், நாம் பார்க்காத கண்ணகி கண்ணெதிரே வந்து நிற்கிறாள். அவள் வீட்டைவிட்டே சென்றுவிடுகையில், பேட்டைக்காரன் இருண்டுப்  போன அவர் வீட்டிற்கு வருகிறார், வந்துநின்று அந்த வீட்டை சுற்றிச் சுற்றி பார்க்கிறார். யாருமில்லாத அந்த வீடு தனிமையின் அச்சத்தை அள்ளி அவர் முகத்தின் மீது தெளிக்கிறது. இருண்டவீட்டின் படிக்கட்டுகளின் மேல் அந்த நள்ளிரவில் வந்து நின்று, அமர்ந்து, தனிமையில் நடமாடும் அவரையும், அந்த வீட்டையும் பார்க்கையில் ‘ஐயோ மனிதன் இப்படி வாழவே கூடாதடா, வஞ்சம் நிறைந்த இவ் உயிர் குடிக்கும் பிழைப்பு யாருக்கும் வேண்டாமடா’ என்று இருட்டிற்குள் அந்த காட்சியை படமெடுத்து நம் இதயத்தில் வெளிச்சம் புகட்டுகிறதிந்த ஆடுகளம்!

துரை பற்றி நிறைய சொல்லலாம். துரை மாதிரி நமக்கொரு அண்ணன் இருக்க கூடாதா? துரை மாதிரி ஒரு நண்பன் இருக்க கூடாதா? துரை மாதிரி ஒரு தொண்டன் இருக்கக் கூடாதா? துரை மாதிரி ஒரு கம்பீரமாக, மனசு சுத்தமாக, தெளிவு நிறைந்தவராக நாம் வாழ்ந்திடக் கூடாதா என்று நம்மையும், அவர் வாழ்க்கையின் மேல் ஆசைப் பட வைக்கும் கதாபாத்திரம் துறையின் கதாபாத்திரம்.

மூன்று லட்சம் ரூபாய் பணத்தை வாங்கிவந்து தனுஷிடம் கொடுத்துவிட்டு ‘கருப்பு வாழ்கை எல்லோருக்கும் இப்படி ஒரு நல்ல வாய்ப்பினை தராதுடா, பயன்படுத்திக் கொள்’ என்று ஞான போதனை செய்துவிட்டு; அதேநேரம் நம் மனத்திலும் பண ஆசையை மனதிலிருந்து கொத்தாக அறுத்துப் போடத் தவிக்கிறதிந்த; ஆடுகளம்!

பாட்டாக கதையாக வசனமாக கோபமாக காதலாக கூட வாழ்ந்திருக்கிறார் தனுஷ். அண்ணே அண்ணே அண்ணே என்று உயிர் விடும் அன்பில் பேட்டைகாரன் மீது நம்மையே மதிப்புக் கொள்ள செய்துவிடுகிறார். அம்மாவை பற்றி நினைத்து உருகி நிற்கையில், இரவு மூன்று மணிக்கு வந்தாலும் சோறு போட்டு அமர்ந்திருக்கும், இனி எப்போழுதிற்குமாய் இல்லாமல் போயிடுச்சே’ என்று அழும் அழையில், பெற்றோரின் அருமை தெரியாது திரிபவர்களின் புத்தியில் கண்ணீரால் சுடுகிறது தனுஷின் நடிப்பு. இரண்டு மூன்று முதியோர் இல்லத்தையாவது இழுத்து மூட மானசீகமாய் சொல்கிறது ஆடுகளம்!

‘அப்பன்றவன் படுத்துட்டு எழுந்து போறவன் இல்லை,கைபிடித்து இது தான் உலகம்னு ஒவ்வொரு அசைவையும் காட்டுபவன் என்று சொல்லும் போது’ யாரது வசனம் எழுதியதோ என்று ஆச்சர்யத்தில் புருவத்தை உயரவைக்கிறது படம்!

அனுராதா ஸ்ரீராம் பாடும், தன்னனானே நானே தனனானா என்று துவங்கி  ‘அய்யய்யோ நெஞ்சு அலையுதடி’ என்று வரும் பாட்டுக்கு ‘உயிரெல்லாம் சேர்ந்து பாட்டோடு அசைகிறது. அதில் காட்டும் சாதாரண மக்களின் வாழ்க்கையும் அந்த பெண்ணின் சிரிப்பும் மனதில் ஆங்காங்கே பச்  பச்சென்று ஒட்டிக் கொண்டு ‘குழம்பித் தவிக்குதடி என் மனசு’ என்று நம்மையும் சேர்த்தே புலம்ப வைக்கிறது.

அதிலும், நடு இரவில் வண்டி வாங்கிப் போவதும், புகைப்படம் எடுப்பதும், துரை நள்ளிரவு தூக்கம் கூட பார்க்காமல் ‘கருப்பு வண்டி கேட்டதும்  கொண்டுவந்து கொடுத்துவிட்டு ‘பார்த்து போ’ என்று சொல்லியனுப்பும் பக்குவமும், நம்மூரின் நிறைய அண்ணன்களுக்கு இருக்குமானால், நம் மண்ணில் காதலால் தற்கொலை செய்துக் கொண்டு இறக்கும் நிறைய காதலர்களை காப்பாற்றி விடலாம். அதற்கும், பின்னாலேயே வந்து, ஒண்ணா சுற்றுவதாலோ கைபிடித்துவிட்டாலோ காதலாகி விடாதென்று சொல்லி சிரிக்கும் அந்த பெண்ணின் பக்குவமும் நம் மண்ணின் காதலர்களுக்கும் வேண்டும் என்று’ பாடம் சொல்கிறார் போல் வெற்றிமாறன்.

கடைசிவரை இருப்பேன் என்று சொன்னது போல் கடைசிவரை உடனிருந்து, மாடிவீட்டு பெண் யார் வீட்டு பெண்ணானாலும் காதலி என்றால் இப்படித் தான் இருப்பாள், இருக்கனும் என்பது போல் – அவன் போன இடமெல்லாம் போய், மனதார நம்மை நேசிக்க வைத்து விடுகிற கதாநாயகி பாத்திரத்திலிருந்து; அம்மா, அத்தாச்சி, நண்பன், பேட்டைக்காரன், இன்ஸ்பெக்டர் துரைசாமி மற்றும் பெங்களூர் காரன்வரை ஆட்களை கதாப்பாத்திரத்திற்கு ஒட்டியே தேர்ந்தெடுத்த விதமும்; வெற்றிமாறனை ஒரு சிறந்த இயக்குனர் என்று மெச்சிக் கொள்ளவே செய்கிறதிந்த ஆடுகளம்!

சேவல்  சண்டை விடும் ஒரு ஊரின் ஒருசில மனிதர்களின் கதையாகத் தான் படமே நகர்கிறது. இதில், யாரை புகழ்வது சேவலையா, ஒளிப் பதிவாளரையா, இசை அமைத்தவரையா, சண்டை காட்சி அமைத்தோரையா, கட்டிடக் கலை இயக்குனரையா, வசனம் எழுதியவரையா, நடித்தோரையா, இயக்குனரையா……….., யாரைப் பாராட்டுவது? நான்கைந்து சேவல், பத்திருபது மனிதர்கள், மூன்று நான்கு வீடு, ஒரு சந்தை, சில தெருக்கள், அதோடு ஒரு பெரிய மைதானம் போட்டு இப்படியும் ஒரு படம் எடுக்கலாம் என்று சபாஷ் போடவைக்கிறது ஆடுகளம்!

அந்த அத்தாச்சி நினைவில் இருந்து கொண்டே இருப்பது போல்; காலத்திற்கும் நட்பு பிசகாத அயூப் அண்ணனுக்கு இன்ஸ்பெக்டர் துரைசாமியின் ஆட்கள் மது ஊற்றிக் கொடுத்து அவர்கள் பக்கம் வர கேட்க, அதை அவர் மறுத்து பேட்டைக்காரனின் நட்பு பற்றி பேசுகையில்; ஏழைகளின் வீட்டில் இருந்து வளர்ந்த பெரிய ஆலமரம் போல் நிமிர்ந்து தெரிகிறார் நமக்குள்.

முடிவில், பேட்டைக்காரன் என்னதான் தனக்கு துரோகம் செய்தாலும், துறைக்கு பேட்டைக்காரன் மேல் இருக்கும் மதிப்பும் குறையாமல், ஊருக்கு அவரின் சமயோசிதமாக மாறிய இறுகிய கொடூர முகத்தையும் காட்டிக் கொடுக்காமல், தன்னை நம்பி வந்த காதலியையும் கைவிடாமல், நண்பனையும் தன்னோடு இழுத்துக் கொண்டு அலையாமல், மாட்டிவிட்டும் போகாமல்;  தான் வாழ்ந்த ஊரை, விரும்பிய மண்ணை, தன்  வாழ்க்கையாக வெற்றியாக நினைத்த அத்தனையையும் விட்டுவிட்டு கருப்பு அந்த பெண்ணோடு எங்கோ புதிய உலகம் நோக்கிப் போவதாக படம் முடிகையில், ‘மனதில் ஒரு தனிமனிதனின் கதையை இத்தனை பேர் வைத்துக் கூறியதாகவே திரைப்படம் நிறைகிறது.

என்றாலும், ஒரு நல்ல மனிதனை, சிலநேரத்து ஒன்றுமே செய்ய இயலாது விதிக்கப்பட்டுவிடுகிற சூழ்நிலைகளுக்கு மத்தியில் நின்று வாய்விட்டு அழுத ஒரு மனிதனை, கண்முன்னே காட்டி இதயம் முழுக்க அவரின் வாழ்க்கையை நிரப்பி இது தான் சரியான முடிவென்று தலையாட்ட வைக்கிறது.

அயூப் இறந்ததும் அவரை சவப் பெட்டியில் வைத்து கொண்டு செல்கையில் ‘சூரா’ சொல்லிப் போகும் இஸ்லாமிய உறவுகளின் ஏழ்மை குடிகளின் வாழ்வினை படமாக்கிக்கொண்ட ஒரு புத்தகம் நிறைவடைந்தது போல; ஒரு இலக்கியம் மனதில் பதிந்து போன உணர்வு; இயக்குனரையும் இப்படத்திற்கென உழைத்தவர்களையும் எண்ணிப் பாராட்டவே வைக்கிறது.

எப்படியோ எல்லா திரைப்படம் போலவே இப்படமும் ‘ஒரு வாழ்தலை சிலமணி நேரத்தில் சொல்லி’ முடிந்துப் போகையில், யாருடனோ வாழ்ந்துவிட்டு வெளியே வருவது போல் எண்ணி ‘தியேட்டர் விட்டு வெளியே வந்தப் பிறகும் கேட்கும் – ‘அந்த யாத்தே யாத்தே பாடல், அந்த ஏழ்மை பூசி பாடம் போதித்த முகங்கள், அவர்களின் பேச்சு நடத்தை என எல்லாமே மனதிற்குள் அப்படத்தின் பாடல்களாகவே  முனுமுனுக்கப் பட்டு, இப் படத்தில் நடித்த அத்தனைப் பேரையும் மறக்காமல் தனக்குள் பதிவு செய்துக் கொண்டு; அவர்களோடு வாழ்ந்த ஒரு உணர்வை யாரிடமேனும் சொல்லித் தீர்க்கவே அலைகிறது மனசு..

இப்போதைக்கு, நான் சொல்லிவிட்டதாக நிறைந்துக் கொள்கிறேன்!!!!!!!!!!!!
——————————————————————————————-
வித்யாசாகர்

Posted in திரை மொழி | Tagged , , , , , , , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்