35. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

நீ
கை தொட்டுக் கொடுத்த
அத்தனை –
புத்தகத்திலும்
மணக்கிறது உன்
நினைவின் வாசம்!

Posted in காதல் கவிதைகள் | பின்னூட்டமொன்றை இடுக

34. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

ழை வந்து
சென்றுவிடுகிறது
ஈரத்தையும்
ஈரத்தின் வாசத்தையும்
மிச்சம் வைத்துவிட்டு;

நீயும் –
வந்தாய்..
சென்றாய்..
மிச்ச நினைவுகளில்
வலுக் கொள்கிறது
மரணம்!

Posted in காதல் கவிதைகள் | 4 பின்னூட்டங்கள்

33. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

ழை –
விட்டு விட்டு வீசுகிறது

நீயும் –
வந்து வந்து போகிறாய்

மழை மெல்ல
நனைக்கிறது

நீயும்
நனைத்தாய்

மழை
உடலெல்லாம் பரவுகிறது

நீயும்
பரவினாய்

மழை
உடம்பிற்குள் ஊறி
உயிர்வரை தொட்டது

நீயும்
தொட்டாய்

மழை
நின்றது
விட்டுவிட்டேன்;

நீயும் நின்றாய்
நானற்றுப் போனேன்!

Posted in காதல் கவிதைகள் | பின்னூட்டமொன்றை இடுக

அஞ்சி காசுக்கு வக்கில்ல; ஆயிரம் பேச்சு! (உழைப்பின் உயர்வு)

வீட்டில் சோறில்லையெனில் தெருவில் சோறு. தெருவில் சோறு முடிந்ததும் வீட்டில் தூக்கம், அக்கம் பக்கத்துல பிட்டு போட்டா சிகரெட்டு, நல்லா தெரிஞ்சவனை நாலு நாள் தாண்டிப் பார்த்தால் கட்டிங்கு; உசார் பண்ணி பணம் பிடுங்கினா பேண்ட்சர்ட்டு; ச்சீ பொழப்பா இது? இதுக்கு நாண்டுக்குனு சாகலாமில்லையா???

ஆனால் சாகாத ஆசாமிகள் நம்மை சுற்றி இருக்கத் தான் செய்கிறார்கள். அவர்களை ஒன்றுமே செய்திடாது தலையில் தூக்கிவைத்து வெட்டியாய் சுமந்துக் கொண்டு தான் சுழல்கிறது பூமி.

வீட்டிற்கு அருகில் ஒரு வெங்கு வெங்குன்னு ஒருத்தன், ஆளப் பார்த்தா கலெக்டர் கூட வணக்கம் சொல்லிடுட்டு போவார், அப்படி ஒரு தோரணை. கடகடன்னு எழுந்து குளிப்பான் துணிய எடுத்து மாட்டுவான் தெருமுனை கோவிலுக்கு பொய் விபுதி சந்தனம் பூசுவான் ரொம்ப அவசரம் அவசரமா போய் டீ கடைல உட்கார்ந்து ஒரு ஓசி டீ குடிப்பான், விர்ருனு வீட்டுக்கு போவான் கால்சட்டை மேல்சட்டை மாத்துவான்………. அதுக்கப்புறம் அவனை பார்க்கணும்னா பேருந்து நிலையத்துலையோ சந்தைலையோ எதனா கட்சி அலுவல்லையோ தான் பார்க்கமுடியும்.

தப்பி தவறி போற வழில பார்த்து எங்கடா வெங்கு போறேன்னு கேட்டுட்டீங்கான போச்சி “தோடா மாப்ள இங்க நாப்பதம்பது லட்சத்துக்கு ஒரு பிஸ்னஸ் புடிச்சிருக்கேன், எல்லாம் செட் ஆயிடுச்சி இன்னும் நமக்கு நேரம் தான் வரலைடா மாப்ள, நேரம் மட்டும் செட் ஆச்சின்னு வையேன் நாமல்லாம் அப்படி தான்” ன்னுவான். நல்லா தெரிஞ்சவனுக்கு எட்டி செவுள்ள அறையலாமான்னு இருக்கும். இது மாதிரி ஆளுக்கெல்லாம் கல்யாணம் ஆயி குழந்தை பிறந்து அது அவன் பேர பெருசா சொல்லி சுத்துற கதையெல்லாம் நம்ம சுத்தியே இருக்குங்க.

ஆனால் இவுங்களை எல்லாம் வளர்க்கிறது யாரு?

ஒரு தலைமுறை இப்படி திசைதிரும்பி போய் நாட்டை மனிதனின் வளத்தை ஈனச் சுவற்றில் முட்டி ஒழித்துக் கட்ட அனுமதிப்பது யாரு?

கட்டிங் கேட்டா கொடுத்து சிகரெட் கேட்டா கொடுத்து அஞ்சோ பத்தோ கொடுத்து அவன் சொல்ற கதையை எல்லாம் சரி சரின்னு கேட்டு கேட்டு அவனை உருப்புடாம ஆக்க இன்னொரு மறைமுகக் காரணமா இருப்பது யாரு?

நீங்களும் நானும் என்றால் ஒப்புக் கொள்வீர்களா? கட்டிங் கேட்டப்பையே நாலு பேரு எட்டி மிதிச்சிருந்தா அப்புறம் அவன் கேட்பானா? சுத்தி சுத்தி வரவனுக்கு சோறு போடாம விட்டிருந்தா அவன் சுத்தி சுத்தியே வந்திருப்பானா? சட்டைத் துணி எடுத்துக் கொடுத்து சிகரெட்டிற்கு பாக்கெட் மணின்ற பேருல காசை கொடுத்து அனுப்பி விடற பெற்றோர்களும், வீட்டுப் வேலை செய்து பணம் தர மனைவியும் உறவும் அக்கம் பக்கத்தாரும் இன்னமும் இன்னமும் நமக்குள்ள இருக்கத் தானே செய்றோம்???

ஐயோ பாவம் கேக்குறானேன்னு மனசிறங்கி செய்யுற நம் உதவி மனப்பான்மை தான் அவனை கொடிய சோம்பேறியா ஆக்குது. அங்கு தாங்க நாம் யோசிக்கணும். நல்லதுக்கு கேட்கிறானா கோடி ரூபா கூட கொடுப்போம். தவறான செலவுகள் செய்து தன்னையும் நாட்டையும் அழித்துக் கொள்ள கேட்க ஆரம்பிக்கும் ஒற்றை ரூபாவை கூட எவருக்கேனும் தரமறுப்போம்.

பிச்சையே கேட்டால் கூட இளைஞர்கள் என்றால் இது போன்ற வெட்டி ஆசாமிகள் என்றால் தர மறுத்து காரி உமிழுங்கள். செய்யுங்கள். ஒருமுறை செய்தால் மறுமுறை கேட்க மாட்டார்கள். நாலுபேரை காரி உமிழ்ந்தால் ஐந்தாவதாய் ஒருவன் வரமாட்டான். அவர்களுக்கு தேவையானதை அவர்களே பெற்றுக் கொள்ள தெரிந்துக் கொண்டால் கேட்பதை நிறுத்திக் கொள்வார்கள். கேட்பதை நிறுத்தி உழைக்க முன் வருவோருக்கு; அப்போது துணை நிற்ப்போம். அந்த சிலரால் நாளைக்கு பல தலைமுறை நிமிர்ந்து நிற்கும்.

கடக்கும் ஒவ்வொரு நொடிப் பொழுதும் வைரம் வைடூரியத்தை விடவும் மேலென அவர்களுக்கு அவர்களின் உழைப்பினால் புரிந்துக் கொள்ள முனைவிப்போம். ஒருவரின் சோம்பேறித் தனம் மெல்ல மெல்ல நகர்ந்து அருகில் உள்ளவரையும் தன்னோடு சேர்த்து வீட்டையும் ஊரையும் நாட்டையும் அழிக்கும். உழைப்பு; உலகத்திற்கே நம்மை உயர்வாய் காட்டிக் கொடுக்கும் எனப் புரிவதில் ஏழ்மையிலிருந்து பிறரை ஏய்க்கும் குணம் வரை அவர்களிடமின்றி அற்றுப் போகும்.

சின்ன வயதிலிருந்து மாமா மாமா என்று அழைக்கும் ஒருவர் அப்படித் தான் வேலைக்கே போவதில்லை. அவர் என்றோ வைத்திருந்த ஒரு கம்பனி நஷ்டத்தில் மூழ்கி போனதை சொல்லி சொல்லியே காலத்தையும் தன் குழந்தைகளின் வாழ்வையும் வெட்டியாய் தீர்த்து வந்தார். வேறுவழியின்றி எத்தனையோ வருடத்திற்கு நான் தான் அவருக்கு பணம் அனுப்பி அவருக்கென குடும்பத்தையும் பார்த்துக் கொள்வேன். ஒரு கட்டத்தில் என் குடும்பமும் அவர் குடும்பமும் வளர்ந்துவிட்டது கொடுப்பது போதாதால் கேட்க ஆரம்பித்தார். கொடுக்க கொடுக்க கேட்பதால் நானும் கொடுப்பதை நிறுத்திக் கொண்டேன். கொடுப்பதை நிறுத்தியதில் கோபம் மூண்டது.

கோபத்தை பயன் படுத்தி (மாமா வீட்டில் சொல்லிவைத்து விட்டு) சண்டை வாங்கினேன். மாமாவை ஒரு விளாசு விளாசினேன். உன் மகளுக்கு திருமணம் செய்ய உனக்கு வக்கிருக்கா எனக் கேட்டேன். செய்துக் காட்டுகிறேன் என்றார். செய்து காட்டினால் மொட்டை அடித்து திரிகிறேன் என்றென். கோபத்தில் எங்கெங்கோ தேடி கடைசியில் ஒரு வேலையோடு வீட்டிற்கு வந்தார்.

ஒரு காலத்தில் தனி நிறுவனம் வைத்து நடத்தியவர் சிறு குடோனுக்கு செக்யூரிட்டி வேலைக்கு போக ஆரம்பித்தார். இரவும் பகலும் உழைத்து பிரமோசன் வாங்கினார். மறைமுகமாக பின்னிருந்து நானும் உதவி செய்து வீடு சற்று மாறியதில், வயதான காலத்திலும் வேலைக்கு போறாரே, இப்படி உழைக்கிறாரே என்ற மரியாதை தன் மகளுக்கு நல்ல வரனை கொண்டுவந்தது. உழைப்பின் அருமையை பறைசாற்றி ஜாம் ஜாமென நடந்த அவரின் மகளின் திருமணத்தில் எச்சில் இலை எடுத்துப் போட்டு அலங்காரம் செய்தது முதல் பெருமையோடு நானே அனைத்தையும் செய்துக் கொடுத்தேன்.

ஆக, சோம்பேறி தனம் ஒழிந்து உழைக்கக் கற்றுக் கொள்வதை போலவே; சோம்பேறி தனம் ஒழித்து உழைக்க பிறருக்கு கற்றுக் கொடுப்பதும் நம் வாழ்வின் இன்னொரு கடைபிடிக்கவேண்டிய முதல் படியெனக் கொள்வோம். காரணம், அவர்களுக்கு உழைக்க கற்றுக் கொடுத்து விட்டால். நீங்கள் கொடுப்பதை நிறுத்திக் கொள்ளலாம். கொடுக்க அவசியமற்றுப் போனதில்; இருப்பதை வைத்து இன்பம் காணலாம்.

Posted in வாழ்வியல் கட்டுரைகள்! | 8 பின்னூட்டங்கள்

ச. சக்திவேலின் கவிதை தொகுப்பிற்கான அணிந்துரை!

ன்புடையீர் வணக்கம்,

தமிழுலகம் சில காலம் தவறவிட்ட ஒரு படைப்பாளி ச.சக்திவேல். வாழ்வின் ரசனைமிக்க ஒரு நல்ல மனிதரின் சமூக பார்வை கவிதையாகியும் காலம் கடந்து கிடைத்ததன் வருத்தம் எழத் தான் செய்கிறது. அப்படிப்பட்ட படைப்போடுத் தான் தன் முதல் பயணத்தை தொடங்கியிருக்கிறார் இந்த ச.சக்திவேல்.

எனக்குத் தெரிந்தே பல மேடைகளை அலங்கரித்து, எண்ணற்ற கவிதைகளை படைத்து, கவிதைகளுக்கு ஏற்றார் போல் அழகிய சித்திரங்களும் அமைக்கும் தரமான ஓவியரிவர். லெப்ட்ல கட் பண்ணி ரைட்ல கட் பண்ணும் ஆங்கில மோக மக்களிடையே அழகாக தமிழ் உச்சரிக்கும் அருமை குணம் படைத்த மனிதர். என் கவிதைகளின் ரசிகன். என் கவிதைக்கான குரலை தமிழக மேடைகளில் ஒலிக்கச் செய்த முதல் பற்றாளர் இந்த ச.சக்திவேல்.

எழுதும் எவர்க்கும் உதவும் நோக்குக் கொண்ட இந்த படைப்பாளிக்கு தன் படைப்பை கொடுக்க ஏனோ நரை தட்டியே போய்விட்டது.

தமிழ் தமிழர் என்று; ஏதோ இரு நிறுவனங்களை கொண்டவர்களை போல, தமிழ் தமிழன் பெயர் சொல்லி பிழைப்பு நடத்தும் போலிகளுக்கு மத்தியில் தமிழுக்காய் தமிழருக்காய் வெளியில் தெரியாமல் உழைத்து எண்ணற்ற பொது சேவைகளில் ஈடுபட்டு வரும் உன்னத மனிதரிவர்.

காதல் மலர்களை தூவி மனமெழுப்பி; மையமாய் சமூக சாட்டை சொடுக்கும் ஒரு அற்புதமான படைப்பையே தன் முதல் படைப்பாய் கொடுத்திருக்கிறார் இந்த கவிஞர். முதிர்கன்னி என்றொரு கவிதையை பாருங்கள் –

“நாளை –
எனக்கும் மணமாகி மாமியாராகின்
மகனுக்கு –
நானும் சீர் தேடுவேன்;

காரணம்,
நாமெல்லாம் –
பிறரிடம் மட்டுமே நியாயம் நோக்கும்
மனிதப் பிறப்பன்றோ” வென நோகிறார் பாருங்கள்.

இன்னொரு கவிதையில் –

“நம்மை –
சுற்றும் கோயில்…

கருவறை உள்ள
கடவுள்..

நாத்திகனும் நம்பும்
தெய்வம்..

தாலாட்டுப் பாடும்
தேசியகீதமென” தாயைய் பற்றி புதிய வார்த்தைகளில் ராகத்தில் பதிவு செய்திருக்கிறார்.

அதோடு நின்று விடாமல் இறைவன் என்றொரு கவிதையில் –

“ஓரறிவு முதல்
ஆறறிவு வரை படைத்த
உன்னத பகுத்தறிவு;

தலையெழுத்தை எழுதும்
சுருக்கெழுத்து கடவுள்” என்றெல்லாம் மிக அழகாக கற்பனை செய்துள்ளார் இந்த ச.சக்திவேல்.

இதலாம் தாண்டி, யாரிடமோ சொல்லாத தன் காதலை பொத்திவைத்து பொத்திவைத்து கவிதை சரம் தொடுத்த ‘ஒரு காதலனின் அழுகுரல் – ஆங்காங்கே கவிதைக்கான இலக்கணத்தை விட்டு தள்ளி நின்றிருப்பது தெரிந்தாலும்’ கண்ணீரால் நம் இதயம் நனைந்து போகுமளவிற்கு தன் கவிதைகளை படைத்துள்ளார் இவர்.

இருப்பினும், ஒரு குழந்தைக்கு பிறந்த உடன் பெயர்வைக்கும் அவசரம் இந்த கவிஞருக்கு குழந்தை வளர்ந்த உடன் தான் புரிந்துள்ளது. ஏனெனில் கவிதை காலத்திற்கேற்றார் போல தன்னையும் மாறுபடுத்திக் கொள்கையில்; இவர் பத்திருபது வருடங்களுக்கு முன் வெளிவந்த பாடல்களுக்கான வரிகளை கவிதைகளாக காலம் கடந்து தொகுத்திருக்கிறாரே என சொல்லத் தான் வைக்கிறது இவரின் படைப்பு.

எனினும், எழுதுபவர்களுக்கு எழுத்து கைகூடி, கைகூடிய எழுத்து ஒரு நாலு பேரையாவது கவரப் பட்டு, கவரப்பட்ட கவிதைகளை ஒருசேர தொகுத்து, தொகுத்த கவிதைகளை புத்தகமாக்க பிரசுரத்தை தேடியலைந்து, பிரசுரத்திற்கு தன் கவிதைகள் பிடித்து, பிடித்த கவிதைகளை ‘ஒரு புத்தகமாக்கி வெளியிடுவதென்பது ஒரு பிரசவத்திற்கு சமம்தான்.

அந்தவிதத்தில் இக்கவிஞரின் முதல் பிரசவம் காலத் தாமதமாக நிகழ்ந்திருந்தாலும்; இனிவரும் காலமாவது இவருக்காக கைத் தட்டட்டும். மேடைகளில் முழங்கும், டைரிகளில் எழுதும், சித்திரத்தில் தீட்டப் படும் இவரது படைப்புகள் இனியாவது தமிழ் சமூகத்தால் மென்மேலும் கவரப் பட்டு மெச்சப் படட்டும். இன்னும் பல அரிய படைப்புகளை தந்து; தமிழுலகின் தீரா தாகம் இவரின் எழுத்துப் பயணத்தால் தீரட்டும்.

அதற்கு துணை நின்று; சாமானியர்களை கவிஞராக கவுரம்கொள்ளச் செய்யும் மணிமேகலை பிரசுரத்தார்க்கும் நன்றிகளை ‘மகுடமாய் சூட்டி, கவிஞர் ச.சக்திவேலை மனதார வாழ்த்தி, இந்த கவிஞருக்கான வெற்றியை முழுக்கமுழுக்க தனக்குள்ளே வைத்திருக்கும் வாசகர்களை அவருக்கான வெற்றியை அவரிடமே கொடுத்து விடுங்களென கேட்டு பேரன்புடன் விடைகொள்கிறேன்.
—————————————————————————————————

வித்யாசாகர்
(கவிஞர் எழுத்தாளர் நாவலாசிரியர்)

11, சூர்யகார்டான்
குமரன் தெரு,
மாதாவரம் பால் பண்ணை,
சென்னை – 600 051
தொலைபேசி: 25942837
http://www.vidhyasaagar.com

Posted in அணிந்துரை | பின்னூட்டமொன்றை இடுக