உன் தலையிலிருந்து
விழுந்த மலரை எடுத்து
காயாமல் பார்த்துக் கொண்டு
வந்தேன்;
பின்னொரு நாளில்
காய்ந்துத் தான் போனதந்த
மலர்,
மலரை எடுத்து வைத்ததும்
உன்னை காதலித்ததும்
முட்டாள் தனம்!.
உன் தலையிலிருந்து
விழுந்த மலரை எடுத்து
காயாமல் பார்த்துக் கொண்டு
வந்தேன்;
பின்னொரு நாளில்
காய்ந்துத் தான் போனதந்த
மலர்,
மலரை எடுத்து வைத்ததும்
உன்னை காதலித்ததும்
முட்டாள் தனம்!.
நீ என்னருகில் வந்து
என்னை கடந்து செல்கையில்
உன் வாசமும்
என் வாசமும்
காற்றில் கலந்துத் தான் போனது!
கண்ணாடியின் அழகு
உனை கண்ட பிறகு தான்
தெரிந்தது.
அதிலும் நீ
உன் கண்ணாடியை மேலுயர்த்தும் போது
லேசாக எச்சில் விழுங்கி
பாதி சிரித்து
இன்னொரு கையில்
நெற்றியில் விழுந்த முடியை
தள்ளிவிடும் அழகு
அழகு தான்;
அப்போதெல்லாம் உனை ரசித்த
ரசிப்பின் ஈர்ப்பில் தான்
நீயும் நானும் –
கல்லூரியிலிருந்து வீடுவரை
இச் சமூகத்தின் எதிரியானோம்.
சற்று நாள் கழித்து
சற்று தூரத்தில் நின்றே பேசுகையில்
பட்டும் படாமல் நடந்துக் கொள்கையில்
அண்ணன் தங்கை போல்
என்றார்கள் ஊரார் நம்மை.
பாழாய் போன ஊர்;
எதனையேனும்
சொல்லிப் போகட்டுமென
விட்டதில் –
உனக்குப் பெண் பார்ப்பதாய் சொல்லி
எனக்குப் பார்த்து
நிச்சயித்து
கனவு போல் இருக்கிறது
எனக்குத் திருமணமானதும்
நீ செய்துக் கொள்ளாததும்.
கடைதெரு செல்ககையில்
காய்கறி வாங்கி வருகையில்
தெருவெல்லாம் நடந்து போகையில்
நீயும் நானும் –
சேர்ந்து திரிந்த நினைவுகள்
கல்லும் முல்லுமாய் கல்லும் முல்லுமாய்..
காலிலும் நெஞ்சிலும்
தைக்காத பொழுதில்லை.
இன்று; இதோ..
இரண்டு மூன்று வருடங்களை குடித்து விட்ட
ஒரு மாலை பொழுதில்
வீடேறி வருகிறாய்,
சோகத்தை பவுடரில் மறைத்து
லேசாக நீ புன்னகைத்ததில்
உடம்பெல்லாம் ஏதோ
உயிர் பூ பூக்கிறதெனக்கு.
சுடிதார் புடவையாகவும்
ஆசைகள் மெலிந்த உடலாகவும்
வருடங்கள் மூன்றில் தொலைந்த
சிரிப்பாகவும் –
நீ என் மனைவியிடம் பேசிக் கொண்டிருக்கையில்
யாரையோ பார்ப்பதுபோல்
உனக்குள்ளிருந்து உயிர்பெற்று உயிர்பெற்று
உனையே பார்க்கிறேன் நான்.
திரைப்படங்களில் வருவது போல்
உன் புகைப்படம்
நீ கொடுத்த நினைவு பரிசு
நான் சேகரிப்பதாய் சொன்ன – உன்
துண்டு வளையல்கள்
எழுதி முடிக்காத உன் கடிதங்கள்
எதையேனும் வைத்திருப்பேனா எனப்
பார்க்கிறாய்.
என் மகள் ஓடி வந்து
உனை யாரென்றுக் கேட்டதில்
என் மனைவி அத்தை என்று
அறிமுகம் செய்து வைத்ததில்
குழந்தையின் பெயரும்
நீயும் –
முழுதுமாய் என்னிடமிருந்து
அந்நியப் பட்டிருப்பதை உணர்ந்திருப்பாய்.
அம்மா வந்து
உனை வரவேற்று
விசாரித்த விசாரிப்புகளுக்கிடையே
நீ நாளைக்கு எங்கோ
போகப் போவதாகவும்
வேறு மாநிலமென்றும்
திரும்பி வரப் போவதில்லை என்றும்
சொன்னதில் –
நான் எத்தனை உடைந்திருப்பேனென
நீ புரிய நியாயமில்லை தான்.
வெகு நாட்களுக்கு பிறகு
யாறுக்கும் தெரியாமல் அழுத
அழைகளுக்குப் பரிசாக
நீ வந்திருப்பதாக எண்ணுகையில்….
இதோ –
வாசலில் இறங்கி விட்டாய்
விடை பெறுவதாய் எல்லோருக்கும்
கைகாட்டி சொல்லிவிட்டாய்
போகிறேனென்கிறாய்
ஒரு ஐந்து நிமிடமின்னும்
இருந்துப் போயேன் என
மனசு கெஞ்சுகிறது.
உனை கடைசியாய் பார்ப்பதான
உயிர்மெல்லும் –
ஏக்கப் பார்வையோடு பார்க்குமென்னை
வெகு இலகுவாய் அழைத்து
போய் வரேனென்று சொல்லி
என் மனைவி திரும்பும் நேரம் பார்த்து
எதையோ என் கையில் திணித்துவிட்டு
விசும்பியவாறே அதோ ஓடுகிறாய்….
உன் விசும்பலின் சப்தத்தில்
உடைந்துப் போய்
தெருவையே வெறித்துப் பார்க்கிறேன்
தெருவின் முக்கால் தூரம்
நீ போனதும் –
என்ன கொடுத்தாயெனப் பார்க்க
கை விரித்தால் –
மரணம் என்றெழுதியிருக்கிறது ஒரு தாளில்.
நிமிர்ந்துப் பார்த்தால்
தெருவில் நீ –
விழுந்துக் கிடக்கிறாய்
எல்லோரும் ஓடி
உன்னை தூக்கி நிறுத்துகிறார்கள்
நீ மீண்டும் மீண்டும்
கீழே விழுகிறாய்
நான் அங்கேயே நிற்கிறேன்.
மரணத்தை
நீ பாதி தின்றுவிட்டு
எனக்கு மீதியை தருவாயென
இந்த உலகிற்கு
அன்றிலிருந்தே புரியவில்லை!
—————————————————-
வித்யாசாகர்
பலவருடங்களுக்கு முன்; இந்திய தேசத்தில் பிரபல ஆங்கில இதழொன்றில் வெளியான ஒரு சிறு அறிவிப்பு உலக பார்வையை திசை திருப்பி தன் மேல் போட்டுக் கொண்டதாய் சொல்லிக் கேட்டிருக்கிறேன்.
அது வேறொன்றுமில்லை “ஒற்றை ரூபாய் நாணயம் அனுப்புங்கள்; நீங்களும் கோடீஸ்வரன் ஆகும் வித்தையை பெறுங்கள்” என்றிட்ட ஒரு குறுஞ்செய்தி தான் அந்த இதழ் வெளியிட்ட அத்தனை பரப்பான சமாச்சாரம்.
கோடிகளை அடுக்கிய மக்கள் தொகையும், கோடிகளின் மேல் மெத்தையிட்டு உறங்கும் ஒரு வளரும் தேசத்தின் ஜாம்பவான்களுமாயிற்றே நம் இந்திய தேசத்து மக்கள்; சும்மாயிருப்பார்களா? மூளை முடுக்கிலிருந்தெல்லாம் ஆளுக்கொரு ரூபாயை முண்டியடித்துக் கொண்டு அந்த இதழுக்கு அனுப்பிவைத்தார்கள்.
வந்துக் குவிந்த பணத்தை அடுக்கியவாறே மிக மிடுக்காக அந்த இதழ் தன் அடுத்த பிரதியில் இப்படியொரு பதிலை வெளியிட்டிருந்ததாம் “வேறொன்றுமில்லை அன்பர்களே, நீங்கள் எங்களுக்கு வெறும் ஒற்றை ரூபாய் தானே அனுப்பினீர்கள். அதனால் உங்களுக்கு பெருத்த நட்டமொன்றுமில்லையே, ஆனால் யாருக்குமே தீங்கின்றி நாங்கள் கோடிகளை பெற்றுவிட்டோம் பார்த்தீர்களா” என்றதாம்.
மீறி கேள்வி கேட்டவர்க்கு “இது தான் யுத்தி. பிறருக்கு வருத்தமின்றி எந்த நட்டமுமின்றி வெகு இலகுவாக கோடிகளை சம்பாதிக்க நிறைய வழிகள் உள்ளன; முயன்று பாருங்கள், நீங்களும் கோடீஸ்வரனாகலாம்” என்று நாமத்தை குழைத்து ஒற்றை ரூபாய் அளவிற்கு நெற்றியில் இட்டுத் தீட்டியதாம் அந்த முன்னணி இதழ்.
இதில் நாம் கற்க வேண்டிய பாடம் என்ன?
கோடிகளா என்றால் இல்லை; ஒற்றுமை என்பேன் நண்பர்களே!
ஒருத்தன் தட்டிக் கேட்கும் தவறை காவலாளியே வந்து உனக்கென்ன உன் வேலையை பாரென்று சொல்லும் சூழல் இன்றுண்டு. அதே, நூறு பேர் சேர்ந்து கேட்டா காவலாளியே ஓடிவந்து போலிஸ் பந்தோபஸ்த்துன்னு காவலுக்கு நிற்பதையும் நாம் பார்க்காமலில்லை. அது தான் ஒற்றுமையின் பலம். ஒற்றுமையாக நின்று எதையும் சாதிக்கலாம். நம் ஒற்றுமையின்மையால் மட்டுமே முதலில் முகலாயர்களும் பின்பு வெள்ளையரும் உள் புகுந்து கொள்ளை கொண்டது மட்டுமின்றி கவிழ்த்துப் போட்டனர் இந்திய தேசத்தையே எண்பது வரலாறு.
அதிக தூரம் ஏன்; நம் மனிதருக்குள் இல்லாத ஒற்றுமை தான் முதலில் இனத்தை உண்டாக்கியது. நம் இனத்திற்குள் இல்லாத ஒற்றுமை தான் கண்ணெதிரே லட்சாதி லட்ச உயிர்களை நம் ஈழ தேசத்தில் கொன்று குவிக்கிறது. ஒற்றுமை வெற்றியின் சுயரூபம். எதற்காக ஒன்று பட்டோம் என்பதில் தான் கவனம் கொள்ளல் வேண்டும்.
எனக்குத் தெரிந்த ஒரு வீட்டில் நான்கு அண்ணன் தம்பிகள். நால்வரும் நான்கு திக்கினை போல எதிர்மறையானவர்கள். நேரில் கண்டால் ஒருவரை ஒருவர் கோபத்தில் எரித்து விடும் கொலைவெறி அவர்களுக்குள் உண்டு. என்றேனும் ஊருக்கு கெட்ட காலம் வருகையில் அவர்கள் ரெண்டுபடுவார்கள், ஊரே ரெண்டாகும். ஆனால் அந்த நான்குபேரில் ஒவ்வொருத்தன் திறமையும் உலகம் மெச்சும் திறமை எனலாம். நால்வரில் ஒருவருக்கு அந்த ஊரே அடக்கம் எனலாம். அப்படிப் பட்ட அண்ணன் தம்பிகளை ஊர் சேர விடுமா. உண்டுப் புழங்கும் வீட்டை ரெண்டு பட செய்வதென்பது ஊர் மக்களில் சிலருக்கு ஊறுகாய் சாப்பிட்ட மாதிரி தானே?
ரெண்டு பட செய்தது ஊர் அவர்களையும். ஆளாளுக்கு ஒவ்வொரு மூலையில் அலைந்து கொஞ்ச காலத்தை காலால் எட்டிஉதைத்து திரிந்தார்கள். காவலாளி வீட்டிற்கு வருவது தொடங்கி இவர்கள் நீதிமன்றத்திற்கு அலைவது முதல் அன்றாட நிகழ்வாகிப் போனது.
அந்த அன்றாட நிகழ்வில் ஓர்நாள்; ஒருவர் அவர்களுக்குப் போதித்த ஞானம் தான் ஒற்றுமை. ஒற்றுமை அவர்களுக்குக் கொடுத்த பரிசு தான் அவர்களுக்கான வாழ்க்கை. இன்று அதே நால்வரை ஊர் மெச்சுகிறது. அந்த நால்வர் ஊரை கட்டி ஆள்கிறார்கள். பழைய நடப்புகள் அத்தனையையும் இன்று அவர்கள் காட்டும் பரிவில் ஒற்றுமை உணர்வு ஒன்றுவிடாமல் விழுங்கிவிட்டது. இங்கு நாம் சிந்திக்க வேண்டியது பெரிதாக ஒன்றுமில்லை, குறைந்தளவு ஒற்றுமையை நம் வீட்டிற்குள்ளாவது கடை பிடிப்போம்.
ஒரு சமூகத்தின் மாற்றமென்பது ஒரு வீட்டிலிருந்தே நிகழ துவங்குகிறது. சமூகத்திற்கான அக்கறையை நாமும் வீட்டிலிருந்தே துவங்குவோம். தெருவில் நடக்கையில் இப்படி திரும்ப முனைந்து சற்று மாறி அப்படி திரும்பி விடுகிறோம், பின்னால் வந்த ஆட்டோ காரன் நாய் எப்படி தெருவுல ஆடிக்குனு போது பாருன்னு திட்டிட்டுப் போறான், அவனை நாமென்ன கொலையா செய்து விடுகிறோம்?
இயலும் இடத்தில் தான் செறிந்து நிற்கிறது நம் வீரம். பத்து பேரு கத்தியோட வந்து டேய் ஏன்டா இங்க நிக்கிறேன்னா உனக்கென்னடான்னு கேட்பவர்கள் நம்மில் வெகு குறைவு. ஒன்றுமில்லை எனச் சொல்லி ஒதுங்கித் தான் போகிறோம் நிறைய பேர். அப்படியிருக்க நம் வீரத்தை வீட்டில் காட்டி உறவுகளின் நிம்மதியை குலைப்பானேன்?
தெருவில் யாருக்கோ விட்டுத் தரும் தன் சுய கவுரவத்தை சற்று நம் உறவுகளுக்காய் விட்டுக் கொடுத்துப் பாருங்கள். உறவு உங்களை உயிரெனக் கொள்ளும். உயிருக்குயிரான பாசம் உறவுகளுக்குள் வளர்ந்து நிற்கையில்; அந்த மனசு நீண்டு ஊருக்குள்ளும் உலகத்திற்க்குள்ளும் பரவி ஒற்றுமை தழைத்தோங்கும். ஒற்றுமையில் உலகின் முன் நின்று எதையும் சாதிக்கலாம் ஒவ்வொரு உலகப் பிரஜையும். அந்த சாதனையில் கோடியென்ன கோடிகளே துச்சமாகலாம்.
எனவே ஒற்றுமையும் வாழ்வின் உயர்விற்குக் கடைபிடிக்க வேண்டிய ஒரு முதல் படியெனக் கொள்வோம்.
——————————————————————————————————-
வித்யாசாகர்
சற்று –
நிமிர்ந்து பார்..
பாரடி;
என் முகத்திலென்ன
முட்களா பதித்திருக்கிறேன்
நீ பார்த்தால் –
குத்திவிட; பார்..
பாரடி;
நீ நீட்டி முழக்கிய
காதல் – ஸ்வாரஸ்யங்களுக்கு
யார்வந்து –
தடை சட்டம் போட்டார்களோ
போட்டிருக்கலாம்,
நானென்ன செய்தேன்?
பார்த்தாய் –
சிரித்தாய் –
பேசினாய் –
நான் காதலொழுகப் பேசியதை
ரசித்தாய் –
எழுதிய என் டைரிகளையெல்லாம்
கொண்டுபோய் படித்துவிட்டு
பதிலுக்கு –
ஆமென்று சொல்லாமல்
அத்தனைக்கும்
வெட்கத்தை பரிசளித்தாய் –
காதலிக்கிறேனென்று நான் சொன்ன
வருடமித்தனை கடந்தின்று –
தீ பார்வை சுமந்தென்னை
சுட்டெரித்தாலும் பரவாயில்லை
சுடாமல் செல்கிறாயே;
ஒரு முறை என்னை
ஏனென்று கேட்கும்
ஒரு பார்வைக்குக் கூடவா
உனக்குள் நானில்லை???
போ… செல்…
சென்று கடைமுனையில் கூட எனை
திரும்பிப் பார்க்காதே, போ..
நாளை யாரேனும்
நான் வேறு யாரையோ
திருமணம் செய்துக் கொண்டதாய்
சொல்வார்கள்;
வேறு யாரேனும்
என்னை காதலிப்பதாய்
சொல்வார்கள்;
சொல்கையில் –
ஒருசொட்டுக் கண்ணீர்
உனை மீறி சிந்துவாயெனில், பார்;
மாட்டாயெனில் – போ.. போ..
உன் கல் மனசிற்கு
நான் காதலித்த நாட்கள்
பரிசாகிப் போகட்டும்!
உன் மவுனத்திற்கு
என் மரணம் ஒரு சொட்டாய்
உன் கண்ணீரில் சிந்தட்டும்!!
—————————————–
வித்யாசாகர்