இருபத்தி நான்கு மணி நேரத்தில்
எங்கு திரும்பினாலும் –
என் இதய முட்களில் இன்பமாய் நீயடி..!
காற்றின் சிறகு பிடித்து
உயிர் வரை சென்று பார்க்கையில் –
இதய தெருக்களெல்லாம் வெளிச்சமாய் நீயடி..!
இரவில் உறையும் உணர்ச்சிகளில்
உயிர் கொள்ளும் வழியிலும் –
எனது கண்ணிய நெருப்பாய் காப்பவள் நீயடி..!
இரத்தம் கொதிக்கும் வெப்ப மூச்சின்
அனலாய் கொல்லுமென் தனிமை போரிலும் –
மீண்டும் மீண்டுமாய் ஜெயிப்பவல் நீயடி..!
காலம் கொன்று குவிக்கும் வறுமையின்
சாட்டையடிக்கு-
கடிதத்தில் மருந்திட்ட அன்புக் கவிதையும் நீயடி..!
உன் முதல் கடிதத்திலேயே –
“இப்படிக்கு உன்னவள்” என்றெழுதி..
என்னை முதன்முதலாய் புரட்டிப் போட்டவள் நீயடி..!
என்னை நீயாய் உயிர் குடித்து
நீ..நீ.. நீயெனும் போதெல்லாம்
உன்னை நானென்றும் உணரவைத்தவள் நீயடி..!
உனக்கும் எனக்குமாய் உள்ளவைகளில்
இல்லாதது – இடைவெளி மட்டுமென
பிரிவிலும் புரியவைத்தவள் நீயடி..!
இரவில் பறக்கும் விமானம் பார்த்து
என்றிந்த விமானம் எனக்காக பறக்குமென
நான் நினைக்கையில் –
வெளியே ஓடிவந்து நீ வானம் பார்த்து
இந்த விமானத்திலாவது நான் – வந்துவிட
மாட்டேனா என – வருடங்களை
நாட்கள் போல் கழிப்பவள் நீயடி!
வாரத்திற்கு ஒருமுறையேனும் அழைக்கும்
தொலைபேசியில் – ஒரேயொரு “ஹலோ” சொல்லி
ஓராயிரம் வலி தந்தவள் நீயடி!
ஒன்றுமே பேச இயலாத பொழுதிலும்
ஏதேனும் பேசி – பணம் தொலைந்து –
உயிர் தொலைந்தாவது –
உன்னை ஒரு முறையேனும் தொட்டு உயிர்த்திட
கெஞ்சியழுபவள் நீயடி!
பிறந்த பயனிற்கு இறைவன் கொடுத்திட்ட
என் பெரிய்ய்ய்ய.. பரிசு நீயடி;
இறக்கும் வரைக்குமுன் எஞ்சிய வாழ்க்கையை
விடுமுறையில் மட்டும் வந்து தீர்க்க –
நீயும் நானும் செய்த –
பெரிய்ய்ய்ய்ய்ய… பாவம் நானடி!!
————————————————
வித்யாசாகர்
0.000000
0.000000
பதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி!