வித்யாசாகர் கவிதைகளில் பெண்ணியம் – ஆய்வு நிறைவின் நேர்காணல் – 4

4. அஃறிணையின்பால் நேயம் கொள்வதின் நோக்கம் என்ன?

நம் வாழ்க்கை என்பது ஒரு சங்கிலிக்குள் முடையப்பட்ட ஒன்று. அதில் ஒரு முடுச்சி அவிழ்ந்துவிட்டாலும் வாழ்தலின் திசைமாறிப் போகும் சாத்தியங்கள் அதிகமாக உண்டு. அப்படி பல இடங்களில் நாம் திசைமாறிப் போனதன் காரணம் தான் இன்று மனிதனை மனிதன் மறித்தப் பிறகும், எரித்தும்கூட எடுத்துத் தின்னப் பழகிப்போயிருக்கிறோம். உண்மையில் மனிதனால் காக்கப்படவேண்டிய உயிர்களே மனிதனால் கொல்லப்படுவதென்பது கொடுந்துயரம்; பெருந்தவறினில் ஒன்றில்லையா.. ?

சாமிக்குச் செய்யும் பூஜையைவிட குழந்தைக்கு ஊட்டும் சோறு முக்கியம் என்பாள் அம்மா. எனில் குழந்தை வேறு தனைக் காத்துக்கொள்ள இயலாது நம்மால் மடியும் விலங்கினம் வேறா? விலங்குகள் காக்கப்டுமெனில் இயற்கைச் சிதைவு குறையும், இயற்கைச் சிதைவு குறையுமெனில் இயற்கையினால் ஏற்படும் சீர்கேடுகளும் பெரும்பாலும் நீங்கும். பின், இயற்கையை காத்தல் வேண்டும் எனில்; இயற்கைச் சீற்றத்தைக் குறைக்க மனிதர் விலங்குகளைக் காத்தலும் கடமையில்லையா ?

உண்மையில் எனக்கு வலிப்பதுண்டு. வலிப்பதையே எழுதுவது என் வழக்கம். அங்ஙனம் எனக்கு இலை பறிக்கையில் வலித்ததையும் மலர் கொய்கையில் நொந்ததையுமே இதுவரை எழுதியுள்ளேன். உண்மையில் விலங்கினம் குறித்த அக்கறையும் மனிதர்க்கு வேண்டும். மனிதம் இருப்பதன் வெளிப்பாடு பிறஉயிர்களினிடத்துச் செய்யும் அன்பும் எல்லோரிடத்தும் இயன்றவரை சமமாகக் காட்டும் பரிவுமாகும்..

கூடுதலாக, ஒரு பொருளை அழிப்பது என்பது எளிது. உருவாக்குவதென்பதே கடினம் என்பது புரிகையில் அனைத்தின் மீதான அக்கறையும் அனைத்துயிரின் மீதான நேசமும் எல்லோரின் மீதும் தானாகவே யெழும். எழுதல் அவசியம்..
————————————————————————
வித்யாசாகர்

Posted in ஆய்வுகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வித்யாசாகர் கவிதைகளில் பெண்ணியம் – ஆய்வு நிறைவின் நேர்காணல் – 5

5. இயற்கை சார்ந்த தங்களின் அழகுணர்வு குறித்துச் சொல்லுங்களேன்?

இயற்கையில் எது அழகில்லை? பார்க்கும் பார்வைச் சற்று நகர்தலில் மாறுபடுகையில் அழகும் அசிங்கமும் வெவ்வேறு இடத்துள் அங்கம் வகித்துவிடுகிறது என்பது உண்மை என்றாலும் கூட, கொட்டும் மழையும், கூடும் பறவைகளும், நகரும் மேகக் கூட்டமும், நெற்றியில் சுழலாத பொட்டினைப்போல வட்டமாய் நகரும் நிலவும், காற்று தடவத் தடவ இலைகளோடு அசையும் விலகும் இருட்டும், கண்கூச மூடும் விரல்களின் இடுக்கில் தெரியும் காலை மஞ்சள் வெய்யிலின் கதிரும், காற்றாட ஆட ஆடும் மரங்களும், பேசும் மலர்க் கூட்டமும், வாசம் நோக்கிவரும் மனிதரும், விலங்கினமும், குழந்தையும், குமரியும், வயோதிகரும், மின்னலும், மின்னும் வானமும், வானத்தின் கீழ்வந்து முட்டும் கடலும், கரைமோதும் அலைகளும், அலையிநூடாக கரைவந்து மணல்புகும் கிளிஞ்சளும், மீண்டும்; மீன்களோடு இன்னொரு உலகமாக நீருக்குள் வாழும் எண்ணற்ற உயிர்களும், செடிகளும், மரமும், மீசையும், முதலில் விழும் நரையும், விவேகப் பார்வையும், பளிச்சிடும் கண்களும், செவ்விதழும், பாதி சிரிக்க உதிரும் மெல்லியப் புன்னகையும், சிணுங்கும் மனைவியும், சிங்கார வீட்டுத் தோட்டத்தின் நடுக் கிணறும், நதியும், அருவியும்.., வயல்வெளிகளும்.. ஆஹா; அஹா; எது அழகில்லை? எல்லாவற்றையும் பாட வார்த்தைகளெங்கே வார்த்தைகளெங்கே..(?) இயற்கையை வர்ணிக்க வார்த்தைகள் போதாது. வார்தையினைத் தேடினால் கடலலையும் கடக்கும் காலத்தையும் தாண்டும்..

என்றாலும், அதற்கு நாம் நட்ட நவீனப் பற்கள் தான் நம்மை அவ்வப்பொழுது கடித்தும் குதறியும் மென்றும் துப்புகிறதேயொழிய இயற்கை இயல்பில் எரிமலையாகக் கண்டாலும் அழகுதான்..
————————————————————————
வித்யாசாகர்

Posted in ஆய்வுகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வித்யாசாகர் கவிதைகளில் பெண்ணியம் – ஆய்வு நிறைவின் நேர்காணல் – 6

6. காதலில் கொலைகள், தற்கொலைகள் குறித்த தங்களின் சமுதாயப் பார்வை என்ன?

காதலில் கொலைக்குக் காரணம் நீங்களும் நானுமான இச்சமூகமே. காதல் என்பது இரு உயிர்களின் இதயமுடுச்சி. அதை அவிழ்ப்பது மரணமகவே இருக்கும். இது புரிகையில் காதலிப்போருக்கும் காதலைத் தடுப்போருக்குமான எச்சரிக்கையுணர்வு தானாக வலுக்கும்..

காதலித்தலை கடைப் பொருளாக்கிய ஊடகம், ஊடகத்தை ஊறு மறந்து வீட்டிற்குள் வரவழைத்துக்கொண்ட நம் வீடுகள், நேரம் மறந்து அதில் கிறங்க வீட்டில் இடமளித்தப் பெற்றோர், வீடுகளில் சக உறவின் தன்மையைப் புரிந்துக்கொள்ளாத, புரிந்துணர்வை அதிகப் படுத்தும் வாழ்வமைப்பை வைத்துக்கொள்ளாது வளர்ந்தப் பிள்ளைகளென நம் அனைவரின் ஒட்டுமொத்த அசாதாரனங்களும், வெகுவேக நாகரீக மாற்றமும், அதிசுலபமாக அல்லது மலிவாகப் பகிர்ந்துக்கொண்ட உணர்வுகளின் கட்டுப்பாடற்றத் தன்மையும், முழுமை ஏற்படாதத் தருணத்துப் புரிதல்களும், அவைகளை எளிதாக இடம் மாற்றித் தந்த தகவல் பரிமாற்றத் தொழில்நுட்பமுமென நமது மொத்தப் பங்கும் காதல் கொலைகளுக்குக் காரணம்.

அது மாறவேண்டுமெனில் முதலில் நாம் நம் முகங்களில் பூசிக்கொள்ள விரும்பும் வெட்டி கௌரவத்தை கைவிடவேண்டும். ‘வாழ்தல் சுலபமானது சுகமானது பிறருக்காகவும் வாழ்க்கையில்’ என்பதை எல்லோரும் புரிந்துக் கொண்டால் தனக்கான ஆடம்பர உணர்வு அல்லது அந்த மிகைப் படுத்திக் கொளல் விட்டுப் போகும். மிகைப் படுத்திக் கொள்ளாது இருப்பதில் இன்பம் வருமென்று அறிய முடியுமின் தனக்கானது தனக்குக் கிடைத்தால் போதுமென்று எண்ணம் வரும். தனக்கானது போதும் எனில் தன் பிள்ளைகளின் எதிர்பார்ப்புகளும் ஆசைகளும் கூட அவர்களுக்கானவைகளாக இருப்பதையே மனசும் விரும்பும்..

இப்போது காதலை எதிர்ப்பது எது பெற்றோரின் மனசா? இல்லையே, ஐயோ பிறர் என்ன எண்ணுவார்களோ, ஊரெப்படிப் பேசுமோ எனும் பயம் தானே? பெற்றப் பிள்ளையின் ஆசையில் மரணத்தை பரிசாக இடவோ ஏமாற்றத்தை எரியும் மனதுள் நிரைக்கவோ எவருக்கிங்கே விருப்பம்? எல்லாமே அக்கம்பக்கம் குறித்தும் பார்ப்போர் பேசுவதற்கு அஞ்சியும் தானே நடக்கிறது நம் மண்ணில். அவைகளை களையவேண்டும் எனில் தனக்காக முதலில் தான் வாழப் பழக வேண்டும். பழக்கத்தை குழந்தையிலிருந்து ஆரம்பிக்கவேண்டும். நல்லதை இப்படி வளையாது நிற்கும் சமூகத்தின் முதுகில் வைத்து இனிப் பயனில்லை. வளரும் குழந்தைகளுக்குச் சொல்லித் தருவது ஒன்றே வழி.

குறிப்பாக காதல் பொருத்தவரை அது ஈர்ப்பு சார்ந்தது, மனதின் நெருக்கத்தைக் கொண்டது, ஏக்கத்தை ஏற்படுத்தும், எளிதில் கட்டுப்படுத்திக் கொள்ளவோ மறந்துவிடவோ இயலாது, வலி மிகுந்தது, நிதானமாகச் சிந்தித்து புரிதலை ஏற்படுத்திக் கொள்ளும் மனங்களுக்கு ஒத்தது, விட்டுக் கொடுத்தல்’ பழியேற்றல்’ பிறரை வருத்துதல் தனைத் தானே விட்டொழித்தல் போன்ற சிக்கல்களை ஏற்படுத்தக் கூடிய சாத்தியக் கூறுகள் கொண்டது என்பதை நாம் குழந்தைகளுக்கு புரியுமாறே வளர்த்தல் வேண்டும்.

அதன் மேலும் ஏற்படும் காதலின் சிக்கல்களை எடுத்துச் சொல்லலாம், எதையும் ஏற்கத் தயாரெனில் ஏற்றுக் கொள்ளலாம், எதுவாயினும் இது அவர்கள் சம்மந்தப் பட்ட வாழ்க்கை, எனதோ எனது ஊர்குறித்தோ மானம் குறித்தோ பாதிக்கத் தக்கது அல்ல, பார்த்துப் பார்த்து வளர்த்தக் குழந்தையை தானே கொள்ளல் தீது, தன் பிள்ளையை தானே வருத்துதல் பாவம், தெரிந்தே உயிர்களைப் பிரித்தல் சாபத்தையடையுமென பெரியோர் அறியத் துவங்கிவிட்டால், அடுத்தத் தலைமுறைக்கு காதல் எதுவாக இருக்கிறதோ அதுவாகப் புரியவும் துவங்கும். வாழமுடியுமெனில் வாழவும் வழியில்லா பட்சத்தில் மறுக்கவுமான மனதின் கதவுகள் இளைஞர்களுக்கானதாகவே திறக்கும். அப்படித் திறக்கும் கதவுகளிலிருந்து வெளிப்படும் இளைஞர்களுக்கு காதலும் காதலின் அவசியமும் காதலின் சாசுவதமும் புரியும், காதல் மனதுள் எளிதாக எரியும் தீயென்றும் இயற்கையாக அரும்பும் உணர்வென்றும் புரியப் புரிய மறுப்பு குறையும். மறுப்பு குறைய குறைய அன்பு அதுவாகப் பெருகும், அன்பு நிறையுமிடத்தில் மனிதம் நிலைக்கும், மனிதம் நிலைக்க நிலைக்க ஜாதிகளின் மதங்களின் அவசியம் கூட எதுவரைத் தேவையென்றும் புரிந்துப் போகும் புரிதலில் தான் மரணம் மாயும், தற்கொலை தடைபடும், சாவும் வாழ்வும் காதலால் காதலுக்குப் பின்னேயே யாக மாறும்.. மாறனும்..
————————————————————————
வித்யாசாகர்

Posted in ஆய்வுகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வித்யாசாகர் கவிதைகளில் பெண்ணியம் – ஆய்வு நிறைவின் நேர்காணல் – 7

7. காதலர்களின் பலமும் பலவீனமும் என்ன என்று தாங்கள் கருதுகிறீர்கள்? காதல் குறித்து அதிகம் சிந்தித்துள்ளதின் காரணம் என்ன?

காதலின் பலமென்பது இளைஞர்களைக் கொண்டு இச்சமுதாயத்தை மாற்றுவது. காதலின் பலவீனமெனில் இச்சமுதாயத்தைக் கொண்டு இளைஞர்களைக் காதலால் கொல்வது.

ஒரு மனிதப் பிறப்பிற்கு வாழ்தலின் அடித்தளமாக இருப்பது? உண்பதும் உறங்குவதும், உறவு கொள்வதுமே எனில்; உண்பதையும் உறங்குவதையும் முறைமை படுத்துவது உறவின் செறிவு மட்டுமே. உறவை நெருக்கமாக வைப்பதும் மகிழ்ச்சியை கூட்டுவதும் உறவின் கலப்பு எனில், ‘நம்மைக் கலக்கும் கலன் என்பதே காதல்.

அந்தக் காதலுள் ரசம் தேவைப் பட்ட போதே ஆடை உடுத்தவும் அழகியல் பார்க்கவும் ஆசைப் பட்டோம். ஆக ஆடைக்கு முன்னரே வந்தது காதல் எனில் அதை ஜாதிக்குப் பின் வைத்துக் கொல்லும் சமூகம் இயற்கைக்கு மாறானது என்றும் எதிர்க்கத் தோதானது என்றும் எனக்கெட்டிய அறிவில் தான் எளிதாய்ப் பிறக்கின்றன எனக்கான காதல் கவிதைகள்..

காதல்; உண்மையில் காதலிக்க இதமானது, புரிந்துக் கொள்ள கசக்கிறது எனில் அது நம் வாழ்வியலின் குற்றம், காதலர்களின் குற்றமல்ல..
————————————————————————
வித்யாசாகர்

Posted in ஆய்வுகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வித்யாசாகர் கவிதைகளில் பெண்ணியம் – ஆய்வு நிறைவின் நேர்காணல் – 8

8. காதலில் விட்டுக்கொடுத்துவிட்டு பிரிவதும் பின்னர் வருந்தவதும் ஏற்புடையதா?

ஏற்க இலகுவானதல்ல. விட்டுக்கொடுப்பது என்பது அப்போதைய சூழலில் ஏற்படும் புரிந்துணர்விற்கு ஏற்ப தனது ஆசைகளை எதிர்பார்ப்புக்களை கனவுகளை விட்டுதறிவிடுவது. பின்னர் காதலை எண்ணி வருந்துவது என்பது இயல்பிற்குட்பட்டது. அடிபட்டாலென்ன அல்லது தானே அடித்துக் கொண்டாலென்ன வலிகொண்ட மனசு வருந்தத் தானே செய்யும்..?

ஆனால் இதற்கொரு பொதுத் தீர்வினை நல்லதொரு நட்பு நிறையும் சூழலாலோ அல்லது மனதைப் புரிந்து நமை நல்வழிப்படுத்தும் குடும்பத்து உறவுகலாளோ தர இயலும்.

முதலில் எந்த நமது காரியத்திலும் உள்ளடக்கமாக உள்ள காரணிகளைப் புரிந்து அதன் விரிவுத் தன்மைகளை ஆராயவேண்டும். ஒரு செயல் மனதைப் பாதிக்கிறது எனில் ஏன் எப்படி எதனால் எனும் ம்ப்ப்லாதரக் கேள்விகளைத் தொடுத்து பதில்கள் நியாயத்தின் புறம் இருக்கையில் பிறகு வருத்தப்படுவது தவறென உணர்கையில் வருத்தம் தானே விலக வாய்ப்புள்ளது.

ஆயினும், குறிப்பாக, காதல் போன்ற விவகாரங்களில் இந்த விட்டுக்கொடுத்தல் என்பது ஒரு கழிவிரக்கத்தின் முதலெழுத்தாகவும் இருப்பதை இளைஞர்கள் தவிர்க்கவேண்டும். கல்லூரியின் வாசலில் தாடியோடு வரவும், காதல் தோல்வியில் எழுதப்படும் கவிதைகளை மெச்சுவதாலும் அதன் நீட்சியை விரும்பும் மனசு காதலின் எதிர்கால வலி தெரியாமல் போலித்தனமான விட்டுக்கொடுத்தல்களுக்கு ஆட்பட்டு விடுகிறது. ஏதோ நானும் காதலிக்கிறேன் என்று காதலிப்பதும், பின் வீட்டிற்காக விட்டுக்கொடுத்து மகாத்மா ஆவதுமென இதில் கழிவிரக்க வகைகள் நீள்கின்றன.

முதலில் விட்டுக்கொடுத்தல் என்பது புரிய காதல் புரியவேண்டும். காதலின் ஆக்கப்பூர்வமான வலிமையினை எடுத்துரைக்கும் பாங்கில் பெற்றோரின் அரவணைப்பு எடுத்துரைப்பு என எல்லாம் சரிவர இருக்கவேண்டும். அதையெல்லாம் மீறி காதலில் விட்டுக்கொடுப்பதும் நேரும் எனில்; வருத்தமும் இருக்கத் தான் செய்யும். சாதாரண சதைகளாலான வலிக்கும் மனசுதான் காதளுள் புதைந்துப் போகிறது; பிறகேன் வலிக்கும் மனதைக் கேள்விகளால் துளைப்பானேன், ஆதரவாய் கரம் நீட்டுவோம்’ இளைஞர்களின் வலிமையால் வாழ்வின் துயரங்களை எளிதில் போக்குவோம்..
————————————————————————
வித்யாசாகர்

Posted in ஆய்வுகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக