கதைப்பயிற்சி – குருவே குருவே சரணம்…

இடம் : சந்தவசந்தம் இணைய அரங்கம்
கவிதையின் கதைக் கரு : ஐயா தமிழ்த் திரு. இலந்தை சு. ராமசாமி

புவியாளும் கவிராஜன் தாய்போல
உலக நிலமெங்கும் வடிக்கின்ற பாட்டுக்கு
தனதன்பாலே இடம்வார்த்து வளம்சேர்க்கும்
இணைவேண்டா இனிதான அரங்கிற்கு

மனதாலும் இடந் தந்த ஐயா இலந்தைக்கும்
ஏனையப் பெரியோர்க்குமென் பணிவான வணக்கம்!

தலைப்பு : குருவே குருவே சரணம்…

வெண்பனிச் சாரல்வந்து இமை மூடமூட
ஈரமதும் இனிக்கும் மாதம்,
சந்தனவாசமும் செந்நிற ஆடையும்சேர்ந்து
செய்த தவறுகளைக் களையும் நாட்கள்;

மனச்சலவைசெய்ய மணிமாலையணிந்து
அய்யன் மலையேறயிருக்கும் காலை,
அவன்நாம மலர் தூவி பாதக்கமலம் பணிந்து
உள்ளம் பக்தியில் திளைத்த வேளை;

விரதநாட்கள் கழிந்து குருவின் பாதம் வணங்கி
இருமுடியேற்க யிருந்தோம்; குருவோ
பொறுவென்றுரைத்து ஏனோ பனியில் தலைநனைய
விருட்டென்று எழுந்துப் புறத்தே நடந்தார்

அகத்தே அவன் நாமம் சொல்லி
வெளிக்கண் திறந்திருந்த நாங்கள் பயத்தில் பதைக்க
அவள் வந்தாள்,
ஒரு மின்னல் வெட்டும்போல் வெட்டி
வீடுபுகுந்து உள்ளே மலரெனமாறி வீழ்வதுபோல்
ஒரு பெண் வீழ்ந்தாள்;

மூர்ச்சையோ முடமோ
பார்க்கையில் நெஞ்சம் தவிக்குமழகு
யார்பொருட்டிங்கு வந்தாளோ

ஏனோ வீழ்ந்தாள் நங்கை (?)

நாங்கள் உற்ற விரதம் கெடுமோ
இல்லையவள்
உயிர்விட்டால் அறம் விழுமோ

என் செய்வேன் இறைவா என்று நான் தவிக்க;

மூத்த சாமிகள் முகம் திருப்பிக்கொண்டு –

‘ஐயோ யிவன் பாவம்
அவள்தடம் கண்ணில் பட்டதே தீட்டு,
யாரும் முகங்கூட காணாதீர் சாமி,
அவள் போனால்போகட்டுமது விதி; நமக்கேன் சபரிசாபம்
விட்டு விலகிப்போவோம் வாரீர்’ரென
மொத்த சாமிகளும் கூச்சலிட

நானோ –
தொட்டதும் ஒட்டுமோ தீட்டு; எனில்
தொடாது மிருகமாய் நீவிர் வாழும்,
உயிர் –
மலரெனக் காயும் முன்னே
மனிதம் ஒரு சொட்டு நீராகவேனும் ஆதல் தர்மம்;
எங்கே-
பாலோ தயிரோ உண்டா கொடுப்பீர், பாவமிவள்
உயிர் காப்பீர்’ ரென்று இங்குமங்குமாய் ஏதேனும் தேட;

அசுரன் இவனே –
பூஜையை அழிக்கும் மகனே
நீ ஒரு கல் நகர்ந்தாலும் குற்றம் –
அவளை ஒருதரம் தொட்டாலும் பற்றும்
இருகரம் தூக்கி யாம் சபிப்போம்
நீ செய்த அபத்தத்தைச் சொல்லிப் பழிப்போம்
குருவின் கடைக்கண் கூட எரிக்கும்
இருமுடி சுமக்கஉனை மறுக்கும்
உனக்கு மலையுமில்லை
ஐயப்பன் அருளுமில்லை; போ’வென்று சபிக்க;

நான் –
அவளை பெண்ணென மறந்தேன்
ஒரு உயிரென மட்டும் மதித்தேன்
விருட்டென்று எழுந்தேன்’
பால் –

அபிஷேகக் குடம் தூக்கிநடந்தேன்;

அபத்தம் அபத்தமென்றெல்லோரும் சலிக்க
அவளை மடிமேல் தூக்கிநான் சரிக்க
அய்யன் மலைபோல் முன்வந்து நிற்க
ஐயா அருளுமென்றெண்ணி –
குடம்பாலை யவள்மீது நான் தெளிக்க

அவள் மின்மினுக்கும்
இரு கண்கள் திறந்து
எனை கண்கண்ட கடவுளென்று வணங்க
தாயம்மா நீயென்றுத் துதித்து
மீதப் பாலள்ளி அவளருந்தக் கொடுத்தேன்

அவள் மெய்சிலிர்க்க எழுந்து நின்றாள்
சுற்றும் முற்றுமென
இதழ் படபடக்க எமைக் கண்டாள்

காணும் விழியில் கோபம் ததும்ப
எல்லோருக்கும் கைதூக்கி வணக்கம் என்றாள்

எல்லாம்
இவளா பெண்
இல்லை
இவளே அவள் அசுரி
எரிக்கும் இருவிழி பாரீர்
தீட்டு ஒட்டும்முன் ஒதுங்கிப் போவீர்;

என்று சொல்லி யொதுங்க –

அவள் கர்ஜித்தாள்
கொண்டையை அவிழ்த்துவிட்டாள்
முடிபறக்க –
மூன்று நான்கென நாலாப்புறமும்
பயமெடுக்க ஆடினாள்

ம்ம்ம்ம்.. ம்ம்ம்.. ம்ம்.. ம்.. மென உறுமி
உறுமி
உறுமல் அடங்க அடங்க அடங்கி
தலைநிமிர்த்திக்கொண்டு
கூந்தலை வாரி கட்டிக்கொண்டு
எல்லோரையும் பார்த்து வணங்கினாள்;

கதிகலங்கிப் போனோரை பயம் நீங்க
வணங்கி –

பெரியோரே வணக்கம்
வதையில் மயங்கி விழுந்தேன்
பொறுப்பீர் பரமே காக்க
தொட்டால் ஓட்டுமோ தீட்டு
பெண்ணாய்ப் பிறந்ததே பாவ(ம்) மிழுக்கோ
உந்தன் தாயவள் தீட்டென்று ஒதுங்கி
வெறும் ஞானப்பால் குடித்தா நீ வளர்ந்தாய் ?
நரம்பென்றும் உடல்முகமென்றும் மூழ்கி
உள்ளே –

அந்தத் தீட்டிற்குள் தானே மாதம் பத்து கிடந்தாய் ?

இருந்தும் தாய்போல நீ என்னைத் தாங்கி
இம்மாந்தர்தம் தீண்டாமையைத் தகர்த்தாய்
நீயே தெய்வம் சாமி
நீயே தெய்வம் வாழி’ என்று எனைமட்டும் வாழ்த்தி யவள்
வெளியிலேற –
மணக்கும் சந்தனம் புகும்பின்னே
வெளிர்த்த முகத்தோடு குரு சாமி வந்தார்

சுருக்கும் பார்வைக்குள் கேள்வி கோர்த்து
சொடுக்கும் நேரத்துள் சொல்லுங்கள்
யாரவள் இங்கேப் பெண்ணென்று பாய –

எல்லோரும் –
இளசாமி இவனென்றுக் காட்டி
பழி சாட்டி பலபேச்சு பேசி
பூமி பொறுக்கா பொய்க்கதை நூறு பூட்டி
தொட்டான் பெண்ணை என்றார்
மடியில் சாய்த்த கதையெல்லாம் சொன்னார்

நெஞ்சமிவர் பேச்சுக்குக் கூச
நடுவீட்டின் கலசமது நடுங்க
பொருக்கார் குருசாமி அந்தோ
இனி –
என்னாகுமோ என்றெல்லோரும் நிற்க

நெடுஞ்சாண்கிடையாய் வீழ்ந்து
ஐயப்பா சாமி சரணம் ஐயப்பா சாமி சரணம்
நாற்பது நாள் வணங்கி மலையேறி யென்ன
மகரஜோதி கண்டு மெய்யுருகி புண்ணியமென்ன
எங்கோ அவனென்று தேடி
நாளும் –

அலைந்திங்கே ஆவதென்ன,
உள்ளே அவனென்று நம்பி நீயும்
அவளைக் காத்ததேப் பெருந்தர்மமாகும்
பெருந் தர்மமாகும்
அதற்கே நின் பாதம் பணிந்தேன்; இது
அவனையும் அறிந்தநற் பாதமன்றோ’ என்று

பெருஞ்சாமி
குருசாமி
நெடுஞ்சான் கிடையாய்
விழுந்துவணங்க –

அய்யன் திருவருளைக் கண்டேன்
மீண்டும் உடம்பாடி நின்றேன்
கண்ணிரண்டில் அவன் காட்சிப்  பொங்க
கையெடுத்து வணங்கிச் சொன்னேன் –

ஐயா..
குருவே குருவே சரணம்
ஐயப்பன் அருளே அருளே கரணம்
தெய்வம் தேடி அலைந்தேன் – இங்கே
அஃதும் யாதென்று அறிந்தேன்; நீயே நீயே ஐயா
அய்யன் முன்னான முதல் தெய்வமையா
நின் பாதம் தொட்டே நின்றேன்;
ஆங்கே அவன் கீர்த்தி சேர்த்தே கண்டேன். குருவே குருவே சரணம்…
குருவே குருவே சரணம்…
————————————————————————————
வித்யாசாகர்

Posted in காற்றாடி விட்ட காலம்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

மாத்திரைகள் தின்னும் உடம்பு..

ரு மாத்திரைப் போடுங்க
ஒருநாள் ஆயுள் குறையும்
போடாதுபோனால் –
வாழ்வின் இரண்டுநாட்கள் குறையும்
எது உங்களுக்கு வேண்டுமென்றார் மருத்துவர்,

உயிர்வேண்டும்
உயிர்கூடு வேண்டும்
உயிர்கூடு தாங்கும் ஆயுள்
சற்று நீளவேண்டுமென்றேன்

சர்க்கரைக்கு ஒன்று
கொழுப்பிற்கு இரண்டு
ரத்தக்கொதிப்பிற்கு மூன்றுவேளைக்கு அரைமாத்திரை
ஈரல் பாதிக்கப் பட்டுள்ளது அதற்கொன்று
மாத்திரைகளால் வயிறு புண்ணாகாதிருக்க
உணவிற்கு முன் காலையும் மாலையும் ஒவ்வொன்று

இப்படி
நாட்களை மாத்திரைகளால்
கழித்துக் கொண்டிருந்தார் மருத்துவர்,

எனக்கு சாகக்கூட ஒன்று
கேட்கவேண்டும் போலிருந்தது..
—————————————————————————-

ப்பு எதிலேயும் சேர்த்துக்காதீங்க
காரமும் வேண்டாம்
புளிப்பு மசாலா கூடாது
சர்க்கரை நாக்கில் பட்டால் விசமென்றெண்ணி
வெளியில் உமிழ்ந்துவிடவும்
காலையில ஒரு மணிநேரம்
மாலையில் ஒரு மணிநேரம் நடந்தே ஆகணும்
வயிறு நிரம்ப சாப்பிடக்கூடாது
உணர்ச்சிவசப்படலாகாது
கோபம் ரொம்ப கெடுதல்
சிரிச்சமுகமா இருங்க; மனதை
இலேசாக வைத்துக்கொள்ளுங்கள் சரியா ?

ம்; எது சரி?
ஏனிந்த வாழ்க்கை ?
எது இனி இனிக்குமெனக்கு ?

என்றெண்ணிக் கொண்டு
திரும்பி எனது மனைவியின் முகம் பார்த்தேன்
அவள் முகத்தை –
வேறுபக்கம் திரும்பிக்கொண்டு விசும்பினாள்

பிள்ளைகளைப் பார்த்தேன்
அதுக பாவம்
ஐயோ அப்பா சீக்கிரமாப் போய்சேர்ந்திடுவேனோ
என்று பயந்து
மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கப் பார்த்தன

எனக்கு, ‘நான் போனால்
என் பிள்ளைகளின் கதியென்ன ஆகுமோ என்ற
எண்ணம் வர, கண்ணீர் குபீரென்று விழிநிரம்பியது

அதற்குள்
அப்பா, அதலாம் ஒன்னுமில்லைப்பா
சரியாயிடும்பா கவலைப்படாதீங்கப்பா என்று
எனக்கு ஆறுதல் சொல்லமுயன்று
கட்டிப் பிடித்தவாறு
தோள்மீதும் மார்மீதும் பிள்ளைகள்
சாய்ந்துக்கொண்டன..

எனக்கு அவர்களின் அப்பா எனும்
குரலைக் கேட்கவும்
அவளின் அன்பிலூறியக் கண்ணீரைத் தாங்கவும்
இன்னும் கொஞ்சகாலம் தேவைபட்டது..

மருத்துவரைப் பார்த்து
சரி; சர்க்கரை உப்பு புளிப்பு ஏதுமே
வேண்டாம் டாக்டர்
எல்லாவற்றையும் நிறுத்திவிடுகிறேன்
எனது பிள்ளைகள் எனக்குப் போதுமென்றேன்,

மாத்திரைகள் என் மிச்ச நாட்களைத் தின்ன
பணம்கேட்டுக் காத்திருந்தன..
————————————————————————————————–

னைவி தெருவில் நடந்துப் போகையில்
தூரநின்று கண்டேன் அழகாகத் தெரிந்தாள்

நான் தூங்கியெழுந்து
கண்ணாடி பார்க்க எத்தனித்தேன்; எதிரே
அவள் வந்து நின்றுக்கொண்டு
நீங்கள் எத்தனை அழகென்று முத்தமிட்டாள்

சற்று நேரத்தில் பிள்ளைகள் புறப்பட்டு
பள்ளிக்குச் செல்ல அணிவகுத்து நிற்கையில்
அவர்களைப் பார்த்து பார்த்து கண்கள் பூரிப்பில்
பணித்துப்போனது,

நல்லக் குடும்பத்தின் நாட்கள்
காலத்தின் அவ்வப்பொழுதைய அழகையும்
அழுகையின் ஈரத்தையும்
சிரிப்பின் சப்தத்தையும்
மனிதர்களின் மொத்த நினைவையும்
மௌனத்தின் கனத்தையும்
சேர்த்தெடுத்துக் கொண்டே நகர்கிறது..
———————————————————————-
வித்யாசாகர்

Posted in காற்றாடி விட்ட காலம்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

எனக்கு மட்டும் விதைவையென்று பெயரிட்டவரைக் கொல்!!

ழக் கிணற்றிற்குள் தெரியும்
முகம்போலவே
தெரிந்துக்கொண்டேயிருக்கிறது
மனதுள் உன்முகம்,

நினைவுச் சிறையிலிட்ட உன்
மரணமொன்றே
வேகமாய் தள்ளுகிறது எனை
விதவையெனும் வார்த்தைக்குள்,

விழுந்ததும் மண்ணள்ளிப்போடும் சமூகம்
மீண்டும் வாழ
இடம் தராத மனதிற்குள் மட்டுமே
சிறைவைக்கிறது என்னை,

சிரிக்கவும் அழவும் முடிகிற எனக்கு
பொட்டையும் பூவையும் தந்தாலும்
வண்ணப்புடவையின் மீதும் விதவை விதவையென்றே
எழுதுகிற மனசு அசிங்கமானது,

மனிதர்கள் மிக நல்லவர்கள்
கற்பிதம் குற்றமென கைகாட்ட
காணும் திசையெங்கும் தெரியுமுலகைக்
கண்டிக்கும் கடவுள் இங்கில்லை,

பெண் அழகானவள்
உடம்பு சுகமானது
அதை ஏற்கும் மனசு ஒன்றெனப் போதித்ததில்
முளைத்துவிட்டது அசுரச் செடிகளும்,

தாலியை வேலியென்று கற்ற எனக்கு
அது இல்லாதபோது நுழையும்
மிருகங்களைத் துரத்த
இன்னொரு மிருகம் வாய்ப்பது அவசியமற்றது,

மனதின் ஒழுக்கம் வெல்லும் திசையில்
மீண்டுமொரு பூ எனக்காகப் பூக்குமெனில்
பூக்கட்டுமென நடக்கும் தெருவில்
நீ மட்டுமே தெரிவதை மறைக்கத் தோற்கிறேன்;

மறுமணத்தை எண்ணாததும்
துறவறத்தை தீண்டாததும்
உன் அருகாமையை மறக்காததும்
இயல்பு எனில் யாரை இங்கு நான் நோக,

ஆணை பெண் வதைப்பதும்
பெண்ணை ஆண் வதைப்பதும்
மனிதத்தைக் கொல்லுஞ் சடங்கென்று ஒரு
சமபுரிதலை ஏற்படுத்த இன்னும் நிறையப் புனிதர்கள் தேவை,

பொட்டினை அலைக்காத
புடவையை வெள்ளையில் திணிக்காத
பூவிற்கும் என் வாசம் பிடிக்குமொரு மறுமலர்ச்சி
போதாத தெருவில் நடப்பதை பூனையின் கண்களே அறிகிறது;

இனி வாழ்வதற்கென்று இவ்வுலகில்
எங்களுக்கென்று ஒன்றுமில்லை,

நினைவுகள் கொடியது
நாளைக்குப்பின் வந்துவிழும்
வார்த்தைகள் நஞ்சுடையது என மிரட்டும்
மூப்பிற்குமுன் –

எங்களின் வலிகளைத் தொலைக்கும் மரணமேனும் வேண்டும்,
அல்லது உனை மறக்கச் செய்யும் ஒரு
மனிதர் வேண்டும,
இரண்டையும் தந்திடாத வார்த்தை “விதவை” யெனில்
அப்படிச் சொன்னவரை கொல்!!
—————————————————–
வித்யாசாகர்

Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

50, தொட்டில் ஆடாத வயிறு..

தாலிச் சுமையை தாங்கித் தாங்கி
வயதைத் தொலைக்கும்
மாசற்றவள்;

பிறக்கையில் –
பாவம் செய்தேனென்று பேசப்பட்டாலும்
புரிதலில்லா மண்ணிற்குக்கொய்த
மலரைப் போன்றவள்;

எச்சில் உமிழ்ந்த முகந் துடைத்து
எள்ளி நகைப்போரை தினங் கடந்து
வாழப் பழகும் –
வலிமையானவள்..

செய்தக் குற்றம் தேடி தேடி
செய்யா தெய்வப் பாதம் நாடி
தொட்டில் ஆடும் –
வயிறு கேட்பவள்;

கெஞ்சிக் கெஞ்சியழுங் கண்ணீரில்
பஞ்சுத் தலையணை தினம் நனைய
கொஞ்சு(ம்)சுகம் மறந்து மறந்தே
வருடக் கணக்கில் வரண்டுப் போனவள்;

பிறக்கும் வயிறு பற்றியெரிய
பெற்ற வயிறும் வளர்த்தத் தோளும்
பாதி பங்குக்குச் சுமக்க –
ஒற்றைக் கூப்பில் அம்மாவாக பத்துமாத பிச்சைகேட்பவள்;

பாவம் அனாதைக் குழந்தையென்று
வாங்கி வளர்க்க ஆசைப்பட்டும்
தத்துப் பிள்ளைக்கு தாயென்றுச் சொல்லும்
ஒற்றை வார்த்தைக்கு பயந்துப் போனவள்;

நடக்கும் பிறக்கும் நாளே போ
போவென்று –
நாளும் கணவனைத் தாங்கிக் தாங்கி
கிடைப்பதையெல்லாம் தின்றுப் பார்ப்பவள்;

கொஞ்சம் விசமேனும் கொடுத்து
உண்டுப்பார் தொட்டிலாடுமென்றால்
அதையும் சிரித்துக்கொண்டே தின்றுதீர்க்க
மனசெல்லாம் வலி சுமப்பவள்;

விளையா மண்ணின் வாசம்போல – பிறவாவயிறும்
பாவி கணக்கு,
பிறந்த பாவம் ஒழியட்டுமென்று
தினம் தினம் – தனை
மனச்சிலுவையில் சுமக்கும் தாயுமனவள்!!
—————————————————————————-
வித்யாசாகர்

Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

இரத்தச் சுவடுகள்..

லையில் அச்சு பதிய
புத்தகப் பை மாட்டி நடந்த நாட்களில்
புத்தகங்கள் கனத்ததுப் போலவே கனக்கிறது மனசு;

கிழிந்து கிழிந்துப் போன
புத்தகங்களை எடுத்தடுக்குவதைப் போலவே
மனதிற்குள் கிழியும் உணர்வுகளின்
அடுக்குகளோடு நடக்கிறேன்; காயமுறுகிறேன்;

ஆங்காங்கே –
எதை எதையோ நினைத்து
வலிக்கிறது மனசு..

உள்ளே வேகமாய் புகுந்தோடி
வகுப்பில் அமர்ந்த அதே பதட்டம்,

பயந்து பயந்து பரிட்சையெழுதிய
அதே படபடப்பு,

தேவையற்றதை வேறு வழியின்றி
மனப்பாடம் செய்ததைப் போன்ற
வேறு வழியற்ற அதே வாழ்க்கை,

இன்னும் –
என்னென்ன இருக்கோ; அப்பா; அம்மா;
மரணமென..

எல்லாம் வழிநெடுக்க முட்கள்.. முட்கள்..
முட்கள் மனம்தைக்கும் பாதைதானா
வாழ்க்கை?

எல்லாவற்றையும் மிதித்துக்கொண்டே
நடக்கிறேன்,
ரத்தக் கரைகளில் எனது கால்தடம்
வழியெங்கும் பதிந்துகொண்டே வருகிறது..

பதியப் பதிய
சிவப்பு உறுத்தும்
கண்களை அகலவிரித்து நடக்கிறேன்..

நடக்க நடக்க இன்னும்
வலிக்குமென்பது தெரியும்
வலிக்கட்டும் –
நன்கு வலிக்கட்டும் –
நாளை எனது ரத்தச் சுவடுகள்
யாருக்கேனும் வாழ்வின் வழியைக் காட்டுமெனில் –

புத்தகப்பை கனக்கும் மனதை
தூக்கிக்கொண்டு
இன்னும் கொஞ்ச நாள் நடக்கலாம்..

ரத்தச் சுவடுகள் இன்னும் சற்று தூரத்திற்கு
நீளலாம்..
——————————————————
வித்யாசாகர்

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக