15) அ.. ஆ.. சொல்லுமழகில் உயிரெல்லாம் அன்பு நிறையும்!!

ரமெல்லாம் பூப்பூக்கும்
பூவோடு இலைக் கணியாகும்
கணியோடு’ தின்று நிற்க நிழலாகும்
நிழலுக்குப் பின் விறகாகும்;

விறகெல்லாம் நெருப்பாகும்
நெருப்பெல்லாம் எரிந்து விளக்காகும்
விளக்கில் வெளிச்சம் பூக்கும்
வெளிச்சத்தில் வாழ்க்கை நமக்கே வசமாகும்;

மனசெல்லாம் ஆசை நிறையும்
ஆசையில் அன்பு மலரும்
அன்பில் நெருக்கம் தீயாகும் – உடல்தீயின்
தகிப்பில் வீடெல்லாம் மழலைச் சிரிக்கும்;

செடியாகி மழலை மரமாகி
ஆளான பின்னாலே நம் பெயராகி
பெயரின் உச்சத்தில் முடிநரைக்க – மீண்டும்
பெற்றோராய் மடிதாங்கும் பிள்ளைகளே நம் வரமாகும்;

மேகம் இடித்து மழையாகும்
மழை வேரில் நீராகி உடம்பில் உயிராகி
காலம் உயிரைத் தாங்க’ மூச்சு நிற்காதப் –
பொழுதுகளில் குழந்தைகளே உலகமாகும்;

உலகின் சிறப்பொன்றில் வானமது மூடும்,
திறக்கும், திறக்கையில் சூரியன் வெப்பத்தால் சிரிக்கும்
பின் மூடும் அந்திப் பொழுதில் –
கைமேல் நிலவாய் குழந்தைத் தூங்கும்;

வளர்ந்து காதின் மடல் தொட்டு நிற்கும்
கைகனக்க புத்தகம் சுமக்கும், வாழ்க்கை
கனத்தக் கண்ணீரில் தேக்கி நம் மனசைத் தாங்கும்
வானமும் பூமியுமாய் நம்மையே நினைக்கும் குழந்தை;

காற்றும் மொழியும் குளிரும் வெப்பமும்
நல்லதும் கெட்டதும் சரியும் தவறும்
தந்தை வலியும் தாயின் உழைப்பும்
ஒற்றைச் சொல்லால் நிறையும் – அந்த சொல்லுக்கு

உயிரென்றும் குழந்தையென்றும்
இருபெயராகும் –
அதைப் பெற்ற வயிறொன்றும் சுமந்தத் தோளொன்றுமே
அநிச்சையாய் யறியும்;

அறிய மறுக்கும் பொழுதுகளில்
விடுபடுகின்றன வாழ்க்கையும்; வீட்டின் வெளிச்சமும்!!
————————————————————————————————–
வித்யாசாகர்

குறிப்பு: நவம்பர் பதினான்காம் நாளன்று நாம் கொண்டாடிவரும் குழந்தைதினத்தை முன்னிட்டு எழுதியது..

Posted in நீயே முதலெழுத்து.. | Tagged , , , , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

14 கடவுளைக் கொல்லும் சாமிகள்!!

நாலு ரூபாய் வருவாயில்
நானூறுக்கும் மேலேக் கனவுகள்,
யார் கண்ணைக் குத்தியேனும்
தன் வாழ்வைக் கடக்கும் தருணங்கள்;

சாவின் மேலே நின்றுக் கூட
தன் ஆசை யொழியாச் சாபங்கள்,
ஆடும் மிருக ஆட்டத்தில்
மனித குணத்தை மறந்த மூடர்கள்;

போதை ஆக்கி போதை கூட்டி
எழுச்சிப் பாதை தொலைக்கும் பருவங்கள்,
படிப்பில் படைப்பில் கணினியில் வாய்ப்பேச்சில் மட்டும்
வீரம் காட்டும் வித்தகர்கள்;

காலில் பட்ட அடிக்குத் துடிக்கும்
விழுப்புண் இல்லா வீரர்கள்,
நூறுபேர் சேர்ந்து ஒருவனைக் கொன்றாலும்
கண்மூடிச் செல்லும் கோழைகள்;

பெண்ணின் ஒரு மயிர் உதிர்ந்தால் போதும்
காதல் காதலென சுமக்கும் பொய்முகங்கள்,
பெண்ணின் வலி கண்ணீர் இழப்பு ஏக்கம்
பற்றியெல்லாம் பின் வருத்தப் பட்டிடாத வேடதாரிகள்;

பணத்தில் பிறந்து பணத்தில் வளர்ந்து
பணத்தால் சாகும் இழிபிறப்புகள்,
உடுத்தும் உடையில் நடக்கும் நடையில்
மனம் எரிந்துப் படிந்த மினுமினுக்கிகள்;

யாருக்கு என்னா னாலும் வருத்தமின்றி
தன் பாருவுக்குபுடவை மடிக்கும் கரைவேட்டிகள்,
பக்குவமில்லா வெட்டிகளிடத்தில்
பயங்கொண்ட மக்களின் கைநிறைந்த தேசங்கள்;

காட்டுவழியேப் போகும் வாழ்க்கை
இடையே களவும் கற்கும் புதுமைகள்,
பொய்யில் அழியும் பாதைத் தெரிந்தும்
புகழுக்கேவாழும் பெரும் பிழைகள்;

கடவுள் பித்து கடவுள் பித்து
மதத்தின் நிறத்துள் போதனைகள்,
கலந்து கெடுத்து கலந்துக் கெடுத்து
குற்றம் சுமக்காக் கயவர்கள்;

கடவுளைக் கொன்று கடவுளைக் கொன்று
பதவியைத் தேடும் ஆசைகள்,
அறிவு புகட்டி அறிவு புகட்டி – பின்
கிணற்றில் வீழும் கொடுமைகள்;

காசுக்கில்லை மனிதம் தெளிவு
காடும் மேடும் கோவில்’ கலவரம்’
வெறும் தெய்வம்செய்து குற்றம் சொல்லிக்
குழந்தையைப் பசியில் கொல்லும் கொடூரங்கள்;

மூடத்தனத்தின் உச்சம் ஏறி
முழு நிர்வாணங் காட்டும் அழிவுகள்,
யாரோ சொன்ன தெருவழி நடந்து
சுடு-காட்டில் முடியும் தொடர்கதைகள்;

சிந்தித்திடுடா சிந்தித்திடுடா எனச்
சொன்னோரெல்லாம் ச்சீ…ச்சீ ஆனான்; சரியில்லையே..
வீட்டைத்திருப்பி வைத்தவன் கையில்
நாட்டைக் கொடுப்பது வளமில்லையே;

குறுக்குவழியில் தேடிடும் கடவுள்
கையிலிருந்தும் கண் தெரியலையே’
கத்தும் உயிரின் கழுத்தை நெறிக்கா –
கருணையில் பார்த்தால் நீயும் கடவுளடா!!
——————————————————————————-
வித்யாசாகர்

Posted in நீயே முதலெழுத்து.. | Tagged , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

13 என் மரணத்தைப் பிய்த்துப் பாதி தின்றவள்….

வாழ்வின் பாடங்களில்
கிழிந்த பக்கங்களின்
ஒவ்வொன்றையும் எடுத்து
தன் சிரிப்பில் ஒழுகும் எச்சிலால் ஒட்டிவிடுகிறாய்;

இதயம் தைக்கும் ஊசியென
என் அறுந்த மனதின் கிழிசல்களில்
உன் நிறைவுறாத வார்த்தைகளைப் போட்டு
பிறந்த பயனை நிரப்புகிறாய்;

தத்தி தத்தி நடந்துவந்து
எனை எட்டியுதைக்கும் ஒற்றை உதையில்
என் மெத்த கர்வத்தையும்
இலகுவாக உடைத்து உடைத்து வீசுகிறாய்;

நீ தின்ற உணவில்
ஒரு பாதி எடுத்து எனக்கூட்டி
என் பாதி ஆயுளை
அந்த ஒரு பிடி உணவில் நிறைக்கிறாய்;

நான் வெளியில் போக வீடுபூட்டி
தெருவிறங்கி நடக்கையில்
நீ ஓடிவந்து அம்மா தோளேறி ஜன்னலில் எட்டிப் பார்த்து
அப்பா அப்பா என்று கத்தி கத்தி நீ உடனில்லாதப் பொழுதை
நினைக்க நினைக்க வலிக்கும் ரணமாக்கிவிடுகிறாய்;

நீ பார்க்காத
பேசாதப் பொழுது ஒவ்வொன்றையும்
சுமக்க இயலாதவன்போலே யெனை
ஓடி வீடு வரவைக்கிறாய்;

நீ பெரிதா நான் பெரிதா
என்று யாரோ கேட்கையில்
நீ பெரிதில்லை
நான் பெரிதில்லை
என் அப்பாதான் எனக்குப் பெரிதென்று நீ சொன்ன வார்த்தையில்
என் பூர்வ ஜென்ம பலன்களையெல்லாம் வாரி
உலகின் சிரிப்புசப்தத்திற்கு இடையே இரைத்தாய்;

நானந்த சிரிப்பின் சப்தத்திற்கு இடையே வந்து
உன்னையும்
அவர்களையும்
பார்த்தவாறே நிற்கிறேன்
இனி’ மரணமொன்றும் அத்தனைப் பெரிதில்லை.. யெனக்கு!!
—————————————————————————————
வித்யாசாகர்

Posted in நீயே முதலெழுத்து.. | Tagged , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

12 பசிக்குக் கொஞ்சம் மண்ணேனுமிடு…..

1
வ்வொரு பருக்கைச் சோற்றிலும்
ஒருவரின் பசி அடைக்கப் பட்டிருப்பதை
அறியாமலே குப்பையில்
கொட்டப் படுகிறது தினமும்
பழைய சாதம்!!
——————————————————————–

2
ணக்க மணக்க
உண்டுமுடிக்கும் முன்
ஒரு கை சோறு ஒதுக்கி
பிறருக்கும் தர இயலுமெனில்
ஒரு உயிரேனும்
உயிர்  பிழைக்கும்!!
——————————————————————–

3
டீ
  குடித்து
பண் தின்று வாழ்பவர்களுக்கு
சாபம் பணத்திலா
உழைப்பிலா
பதிலேயில்லை பல காலமாய்..
——————————————————————–

4
கா
க்கை குருவி கூட
எதையோ தின்று விடுகிறது
மனிதன் எதையோ தின்பதிலும்
தின்னாமையிலும் –
இறக்கிறான் இறக்கிறான் இறக்கிறான்
பசி மட்டுமே
பெரிதாகப் பேசப்படுகிறது..
——————————————————————–

5
ப்பு
காரம்
புளிப்பு
சுவையெல்லாம் வேண்டாம்
ஒரு உண்டை சோறிடு
மண்ணேனுமிடு –
உயிர்’ பசியால் போதல் தீது..
——————————————————————–

6
ரம் நட்டான்
மலை குடைந்தான்
வானம் பொறாமைப் பட
வீடும் கோவிலும் கட்டினான்
விமானம் செய்தான்
வான் வழியே மேகம் கிழித்து
விண்முட்டி நின்றான்;
இத்தனை –
உயரச் சென்ற மனிதன்
திரும்பிப் பார்க்காதலில் –
கீழே விழுந்துகிடக்கிறது சில பிணங்கள் –
பசியால் இன்றும்!!
——————————————————————–

7
ட்டைப் பை
சூட்கேஸ்
வீட்டு அலமாரி
வங்கி கணக்கு
வேறு எங்கெல்லாம்
சேமித்து வைத்திருப்பீர்களோ’ பணத்தை
அங்கெல்லாம் –
நன்றாக சற்றுக் கிளறிப் பாருங்கள் –

ஒரு எளியவன்
திருட எண்ணிய கணமும்
திருடவைத்த பசியும்,
அவன் உழைக்க மறுத்த கணமும்
உழைக்கக் கிடைக்காச் சூழலும்
அங்கே மரணமாய் முனுமுனுத்துக் கிடக்கலாம்..
——————————————————————–

8
வீ
ரம்
வீம்பு
வியாக்யானம்,
மானம்
மரியாதை
மனசாட்சி,
அண்ணன்தம்பி
அக்காத் தங்கை
அம்மாப் பிள்ளை’
அத்தனையையும் மறக்கடிக்கும் பசியென்று
பசியில் மட்டுமேப் புரியும்…
——————————————————————–

9
மு
டிந்தால்
இரண்டோ மூன்றோ நாள்
பட்டினியிருந்து பாருங்கள்
பசியில் இறப்பவரின் வலியை
ஒரு முறையேனும் –
உண்டுத் தீருங்கள்..

மறுநாள் கிடைக்கும் உணவில்
பசிக்கும் எவரோ ஒருவரின் முகம்
கனவு போலேனும் தெரியும்; காணுங்கள்!!
——————————————————————–

10
குப்பைத் தொட்டி
திருமண மாளிகையின் வாசல்
அல்லது பின்புறம்,
விழாநாளில் மிச்சப்படும் உபரி,
உணவகங்களில் –
நிறைய உணவுகளை வாங்கிவிட்டு
முழுதும் உண்ணாமல்
பாதியில் எழுந்துப் போகும் நாகரிகம்’

எப்படியறியும் – எங்கோ ஓருயிர்
பசியால் செத்து நம்மை
கொலைக் காரனாக்குவதை..
——————————————————————–
வித்யாசாகர்

குறிப்பு: இதனைத்தும் சோமாலியாவில் பசியினால் பாதிக்கப் பட்டுள்ள முப்பது சதவிகித குழந்தைகளுக்குச் சமர்ப்பணம். சமர்ப்பணம் மட்டுமல்ல, சிறுதொகையும் உணவுச் செலவிற்கென அனுப்பி வைக்கப் பட்டுள்ளது. நீங்களும் உரியோரை தொடர்பு கொண்டு முடிந்தால் உதவுங்களேன்.. பாவம் நிறையக் குழந்தைகள் அங்கே பசியால் இறக்கிறதாம்..

Posted in நீயே முதலெழுத்து.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , | 11 பின்னூட்டங்கள்

2 அறிவு தரும் ஆனந்தம்..

லகே உலகே காது கொடு
ஒரு குழந்தைப் படிக்கப் பாதைக்கொடு
மனமே மனமே பாடுபடு – படிப்பால்
வாழ்வை வென்று எடு;

படிக்கப் படிக்க வளர்ந்துவிடு
எம் வறுமைக் கோட்டை யழித்துவிடு
ஏழை எளியவர் துயரத்தை – அறிவுக்
கண்ணைத் திறந்தே யொழித்துவிடு;

படிப்பு கொடுக்கும் தைரியத்தில்
பட்டம் சுமந்துக் காட்டிவிடு
படிப்பால் நாளை உலகத்தின்
பசுமைப் போற்ற முயற்சி யெடு;

சேர்த்து சேர்த்து வைத்தப் பணம்
வீடு போனால் போனதுதான்
படித்து உழைத்துப் பெற்றக் கல்வி
ஒரு கடுகும் குறையாதுக் காத்திடுமே;

மிரட்டி மிரட்டிப் போகின்றார் – உலகை
கல்லார் மிரட்டி வாழ்கின்றார் –
என்னாளென்றுத் தெரியாது – வெளிச்சம்
எம் கல்வியாலன்றுப் பிறந்திடுமே;

பாடம் சுமக்கும் மாணவரே
காலம் சுமக்க வாழ்பவரே
உடம்பை சுமக்கும் நத்தைப்போல்
எம் தேசம் சுமந்து நடப்பவரே;

உறங்கா கடலின் அலைபோலே
உழைத்து உயரும் மழலைகளே
விரிந்த வானக் குடைபோலே
மண்ணைக் காக்கப் போகும் மறவர்களே;

மாறும் மாறும் உலகமெலாம்
மாற்றிப் போடப் படித்திடுவோம்
மாறுதல் காணும் ஒருதினத்தில்
நல்லோர் வாழக் கற்றிடுவோம்!
———————————————
வித்யாசாகர்

Posted in நீயே முதலெழுத்து.., பாடல்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , | 7 பின்னூட்டங்கள்