1
நீ எட்டி எட்டி
உதைத்துக் கொண்டிருந்த
எத்தனையோ நாட்களின் –
என் தூக்கம்; உன் காலடியில் தான்
இமைகிழிந்துக் கிடந்தது!!
———————————————–
2
நீ சாப்பிட்டு வைத்த
மிச்சத்தை எடுத்துக் கொண்டு
உடம்பெல்லாம் ஓடியது
என் ரத்தம்!
——————————————-
3
உனையும்
பாப்பாவையும் மாற்றி மாற்றி
கொஞ்சுவோம்,
உனக்கு தெரியாமல் அவளிடமும்
அவளுக்கு தெரியாமல் உன்னிடம்
பாசத்தை நிறைக்கையில் – நீ
எதிர்பார்த்த உனக்கு மட்டுமான அன்பு
கிடைப்பதாய் நம்பினாய்,
உனக்கும் பாப்பாவிற்கும்
இப்படி மறைந்து மறைந்து காட்டிய அன்பில்
உங்களின் குழந்தைபருவ மனசு –
கோணக் கூடாதே என்ற அக்கரையில்
என்னம்மா என்னப்பா
என்னை மட்டும் பிடிக்கும் என்றதன் அர்த்தம்
இப்போது புரிந்தது!!
—————————————————————————-
4
உனக்கு பாப்பா என்றால்
அத்தனை பிரியம்,
நீ என்னை மாதிரியே போல்
என்று நினைத்துக் கொள்வேன்,
ஆனால் நான் திரும்பும் போது
மறைவாக சென்று நீ அவளை
அடித்துவிடுகிறாய்,
நானும் ஒருவேளை
உன்னைப்போல் தானோ என்று
யோசிக்கத் துவங்கினேன்!!
—————————————————————————-
5
எப்பொழுது தூங்குவாய்
எப்பொழுது எழுந்திருப்பாய்
என்ன சாப்பிட்டாய் தெரியவில்லை;
உன் அவ்வப்பொழுதிற்கான அசைவில்
தூங்குகிறாய்
சாப்பிடுகிறாய்
நாளைய என் தலைமுறைக்கான உயிர்ப்பை
இன்றிற்குமாய் என் கர்ப்ப வயிற்றின் சுவற்றில்
எழுதிக் கொண்டிருக்கிறாய்’ என்பது மட்டும்புரிந்தது!!
—————————————————————————-
வித்யாசாகர்
nalla appavai kan mun niruthiyathu vidya
LikeLike