கரகாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம் ஆடிய குவைத்தின் கலை இரவு!!!

புகழ்பெற்ற கிராமிய திரை இசைக்கலைஞர் திரு.வேல்முருகனின் “தமிழ் மன்னிசைக் குழு”வினர் வழங்கிய கலை இரவு..

ண் மணக்கும் கிராமியப் பாடல்கள், மனதைக் கவரும் கரகம், தப்பாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட நாட்டார் நிகழ்த்துக் கலைகளால் நெகிழச் செய்த இசை இரவு..

நாள் : 01.01,2011
டம் : கேம்பிரிட்ஜ் பல்கலைகழகம், மங்காப், குவைத்


நான் குடித்த என் தமிழச்சி பாலின்; வீரம் உணர்த்திய விழா..

என் மண்ணின் வாசத்தை; இப்பாலை வரை மணக்க செய்த விழா..

இரும்பில் சுட்டு சுட்டே சுண்டிப் போன ஒப்பந்த தொழிலாளர்களின் ரத்தத்தை; தமிழ் உணர்வால் சுண்டி சுண்டி கட்டவிழ்த்து, புது உற்சாக ரத்தம் பாய்ச்சி, மனம் விட்டு சிரித்த மகிழ்வில் கைதட்டி ஆரவாரம் செய்து, புது உலகிற்குள் எனைப் போன்றோரை இழுத்துச் சென்ற விழா..

தெருவுக்கு நாலு பேர் ஆடிய எம் ஆட்டத்தை, எங்கோ ஒரு ஊருக்கு ஒன்றாக தொலைத்துக் கொண்டிருக்கும் எம் கலாசார வேகத்திற்கு; ஒரு சின்ன குட்டு வைத்து ‘எம் தமிழின முகத்தை எமக்கே வெகு ஒய்யாரமாய் ஐந்தாறு மணிநேரம் வரை திருப்பிக் காண்பித்த விழா..

ஒற்றை உற்சாக குறல், சிலிர்பெழுப்பும் இரட்டை தமிழச்சிகளின்ஆட்டம், உடன் நாலுபேர் பறை அடித்து நாயனம் ஊதி மிருதங்கம் வாசித்து, பக்க பாட்டு பாடி; வந்தோரை எல்லாம் வார்த்தைகளுக்குள் பாட்டுகளுக்குள் கட்டிப் போட்ட விழா..

அரை ஆடை இல்லை, பெரிய்ய்ய்ய்ய மேடை இல்லை, அதி நவீன இசை கருவிகள் இல்லை, குத்துப் பாட்டுகளின் அர்த்தம் விளங்கா கொடுமையில்லை; காதல் சொட்ட சொட்ட, கலை சொட்ட சொட்ட கண்களில் நிறைந்துப் போன உற்சாகத்தின் உச்சமாய்; எல்லோரையும் புருவம் உயர்த்த வைத்த விழா..

வந்தவர் போனவர் எனும் சாமானியர்களுக்கு மட்டுமல்ல, வந்து போன பிற மன்றங்களுக்குக்  கூட ‘இப்படி ஒரு தரமான விழா எடுத்தால்  கூட்டம் அரங்கம் நிறைந்து; நின்றேனும் பார்க்குமென்று; இரண்டாம் முறையாய் ‘பொங்குதமிழ் மன்றம்’ போதித்த விழா..

சரியான நேரத்திற்கு துவக்கம், வேண்டும் வேண்டும் என்று கேட்க கேட்க இறுதியுற்ற சிறப்பு, பெரிய தொகுப்புரை உத்தியோ விழா அட்டவணையோ இன்றி ரசிகர்களின் நாடி பார்த்து பார்த்து வேகம் கூட்டிய; நல்ல நிர்வாகிகளும், திறமை மிக்க கலைஞர்களும் கூடி எடுத்த விழா..

இடையே ரசிகர்களின் கை தட்டலோடு நன்றியறிவித்து, ரசிகர்களின் மெச்சு தலோடு வந்தோரை, வாரி வழங்கியோரை, வாய்ப்பு அளித்தொரை கெளரவித்து, துரித துரிதமாக மேடையினை ரசிகர்களுக்கே விட்டுத் தந்த ஒரு நிறைவான விழா..

போதுமான அரங்கம், பண்பு மாறாத ஆடை அலங்காரங்கள், காது நிறைந்த ஒலி அமைப்பு, மனது நிறைந்து வெளியே வருகையில்  வயிற்றையும் நிறைக்க வழங்கிய சுவையான இரவு உணவு என; நுழைவு சீட்டு வாங்கியோரை முகம் சுழிக்காமல் வெளியேறச் செய்த விழா..

வீட்டிற்கு ஒருவர் என்று நாட்டிற்கு பலர் இரைதேடி வந்துள்ள இக்கால கட்டத்தில், கலையை போற்ற, தமிழை போற்ற, விழா எடுக்கும் ஒவ்வொரு அமைப்பும்; இப்படி வருடத்திற்கு ஒரு விழாவினையேனும் எடுப்பின், எம் கலையும் வாழும், இக்கலை விட்டு வேறு தொழில் தேடிப் போகும் நிலையும் மாறும், இதுவே கதியென்று கிடந்து இன்றும் பட்டினியில் வாடும் பல  ஏழைகளின் வயிறும் நிறையும்.

இத்தகு பேறுமிக்க விழாவினை எடுத்து சிறப்பாக நடத்தி தந்த ‘பொங்குதமிழ் மன்றத்தின்’ அனைத்து உறுப்பினர்களுக்கும், குறிப்பாக தலைவர் திரு. முத்துக்குமார் ஐயா  அவர்களுக்கும், எதை செய்யினும் எளியோரை போற்றும் வகையில் செய்யும் செயலாளர் திரு. தமிழ்நாடன் ஐயா அவர்களுக்கும், இவ் வாய்ப்பினை இவர்களுக்கு நல்கிய ‘தமிழ்நாடு பொறியாளர் குழுமத்திற்கும்; மனம் நிறைந்த நன்றியை உரித்தாக்குவதில்; இன்னும் இப்படி நாலு பேரை ‘எம் புகழ்மிகு தமிழ்மண்’ இனி வரும் காலங்களில் கண்டிப்பாக பெற்றுக் கொள்ளுமென்று  மனதார நம்புகிறேன்!!

வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in அறிவிப்பு and tagged , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக