கொழும்பு வழியே ஒரு பயணம்.. (பெருகதை – 3)

இதற்கு முன்..

ருவரும், என்னருகில் வந்து நின்று துப்பாக்கியை சரி செய்து வைத்துக் கொண்டு. யார் நீ என்றார்கள். லண்டன் செல்லவிருக்கும் ஒரு பயணி என்றென். அப்படியா விமானச் சீட்டு காட்டு என்றார்கள், காட்டினேன். கடவுசீட்டு காட்டு என்றார்கள், காட்டினேன். அவர்களுக்குள் ஒருவரை ஒருவர் பார்த்து, சிங்கள மொழியில் ஏதோ பேசிக் கொண்டனர்.

நான் ஒன்றும் புரியாதவனாய் அவர்களையே பார்க்க, பையில் என்ன வைத்திருக்கிறாய் பிரி என்றார்கள், பிரித்து உள்ளே வைத்திருந்த மடிக் கணினியினை காட்டினேன். சரி சரி போ என்று ஆங்கிலத்தில் சொல்லிவிட்டு, முகத்தை சற்று சந்தேக தொனியோடு வைத்துக் கொண்டு என்னைப் பார்க்க, நான் எங்கும் போக விரும்பவில்லை, என் விமானம் புறப்பட இன்னும் அவகாசங்கள் உள்ளன என்றென்.

அவர்கள், ஒன்றும் பேசிக் கொள்ள வில்லை. எப்படியோ கிட என்பது போல் ஜாடை செய்துவிட்டு, சட்டெனத் திரும்பி அவர்களுக்குள் என்னவோ விவாதித்துக் கொண்டு வந்த வழியே போயினர். நான் ஒன்றும் புரியாதவனாய், சற்று பின்னோக்கி தலைதிருப்பி என் இருக்கைக்கு பின்னால் இட்டிருந்த கண்ணாடிக்குள்ளிருந்து தெரியும் என் தோற்றத்தினை பார்த்தேன்.

லேசாக வளர்ந்து; வரும் அவசரத்தில் வெட்டாத தாடியும், அழுத கண்ணீரில் நனைந்து; பின்னரும் கவலையில் கழுவாத முகமும், ஆங்காங்கே கசங்கிய கருப்பு கலந்த அடர் நீலச் சட்டையும், தோளில் மாட்டிவந்த மடிக்கணினிப் பையும், எல்லாவற்றையும் விட; பார்த்த உடனே தெரியும் ‘தமிழன்’ என்னும் முகமும்தான் அவர்களின் சந்தேகத்திற்கு காரணம் போலென்று எண்ணிக் கொண்டேன்.

அவர்கள் விமான நிலையத்தின் வெளியே தமிழரை பார்க்கும் பார்வையின் நம்பிக்கையற்ற தன்மை; விமான நிலையத்தின் உள்ளே ‘தெள்ளெனத் தெளிந்த நீர்போல்’ புரிந்தது. எம் நிலை என்று மாறும் இறைவா என்றெண்ணி கண்களை அழுந்த மூடி, பின்னால் தலை சாய்த்துக் கொண்டேன்.

நேற்றைய ஞாபகங்கள் மீண்டும் வந்து நினைவைத் தீண்டின. நேற்று விமான சீட்டு வாங்க சென்றதும், வாங்க சென்ற இடத்தில் இந்த தேசம் பற்றி பேசிக் கொண்டதுமெல்லாம் நினைவிற்கு வர, கிராமத்து நடுவே அமர்ந்து வெளிநாடு போக விமான சீட்டு பதிந்துக் கொடுக்கும் அந்த அண்ணன் மேகநாதனும் நினைவிற்கு வந்தார்.

அவர் ஈழம் பற்றியும் அதற்கான போராட்டம் பற்றியும் இன்றைய நிலவரங்கள் பற்றியுமெல்லாம் பேசியது, கேட்டது, நான் கோபமுற்றது பின்பு கைகுலுக்கிப் பிரிந்தது என எல்லாம் ஒவ்வொன்றாய் கோர்வையாக நினைவில் வந்தது.

திடிரென யாரோ எதிரில் நிற்பது போல் தெரிய, பட்டென கண்களை திறந்தேன், வேறு மூன்று ஆர்மி காரர்கள் நின்றிருந்தனர். சற்று பதட்டமாக எழுந்து நின்றேன்..

பரவாயில்லை பரவாயில்லை அமர்ந்துக் கொள் என்றனர். பின் சிரித்து கைகுலுக்கி பெயரென்ன என்றார்கள், சொன்னேன். எங்கேயிருந்து வருகிறாய், எங்கேப் போகிறாய் என்றார்கள்; மொத்த விவரமும் சொன்னேன். ஒருமாதிரி இருக்கிறாயே பார்க்க; உடம்பிற்கு ஏதேனும் முடியலையா என்றார்கள். இல்லை, வீட்டை நினைத்துக் கொண்டேன், அதான் சற்று வருத்தம் என்றேன். அதற்காக கவலைப் பட்டால் பின் மனிதன் தன் பயணத்தை உலக எல்லைவரை எட்டித் தொடுவதெப்படி என்றார்கள். என்னைப் பொருத்தவரை உலகமே என் வீட்டார் தான் என்றென். உறவுகளை பார்த்துப் பிரிவது பெரிய வருத்தம் தான், இரண்டு நாளானால் சரியாகும் கவலைபடாதே என்றார்கள்.

அதுவரை அமைதியாக நின்றிருந்த மூன்று பேரில் ஒருவர், இன்னும் எத்தனை மணிநேரம் தங்கிப் போக வேண்டும் என்றார். நான் மறதியாக தமிழில், நான்கு மணிநேரம் என்றென். அவர் மன்னிக்கவும் எனக்கு தமிழ் அத்தனை புரியாது என்று ஆங்கிலத்தில் சொன்னார். உடனே அருகிலிருந்த இருவரும் உடன் சேர்ந்து நாங்கள் சிங்களவர்கள் என்று சொல்லி புன்னகைத்தனர் நயமான ஆங்கிலத்தில்.

நானும் மனிதரிடையே வேற்றுமை காட்டிக் கொள்ளவேண்டாமே என்றெண்ணி, அப்படியா நல்லது நல்லது, விமானநிலையம் அழகாக சுத்தமாக உள்ளது, ஆங்காங்கே தமிழில் கூட எல்லாமே எழுதி இருக்கிறதே என்றென்.

அவர்கள், ஆம் ஆம், தமிழ் எமது இரண்டாம் ஆட்சி மொழி என்றார்கள். எனக்கு அந்த இரண்டாம் என்பது சற்று வலிக்கத் தான் செய்தது. யாரை வந்து யார் இரண்டாம்பட்சமாக்குவது என்று எண்ணிக் கொண்டாலும் அதை காட்டிக் கொள்ளவேண்டிய மனிதர்களல்ல இவர்கள் என்று நினைத்துக் கொண்டு, அப்படியா மகிழ்ச்சி என்றென்.

சாப்பிட்டாயா என்று கேட்டார்கள் மூவருமாக. இல்லை, பசி தெரியவில்லை என்றென். தேனீர் ஏதேனும் வேண்டுமா என்றார்கள். எழுந்து அவர்களின் கை பற்றிக் கொண்டேன். மிக்க நன்றி அதலாம் ஒன்றும் வேண்டாம், மனசு கொஞ்சம் கனத்து கிடக்கிறது, உங்களின் உபசரிப்புக்களுக்கு நன்றி. தனியாக அமர்ந்திருந்தால் போதுமென்றேன்.

அவர்கள் சிரித்துக் கொண்டே கைகுளுக்கிவிட்டு, எங்களின் விமானத்தில் பயணிப்பதற்கு நன்றி, மீண்டும் அடுத்த பயணத்தில் சந்திபோம் என்று சொல்லிவிட்டு சிரித்துக் கொண்டே என்னைக் கடந்து போயினர். அதில் ஒருவர்வேறு சற்று தூரம் சென்று வளைவில் திரும்பும்முன் நின்று என்னைத் திரும்பிப்பார்த்து சிரித்தவாறே கையசைத்துச் சென்றார்.

பாறைக்குள் நீரில்லாமல் இல்லை, தமிழருக்குத் தான் தக்க இடமும்; போதிய விடுதலையும் இன்னும் கிடைக்கவில்லை’ என்று எண்ணிக் கொண்டேன்..
——————————————————————————————-
தொடரும்..

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in கொழும்பு வழியே ஒரு பயணம் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

5 Responses to கொழும்பு வழியே ஒரு பயணம்.. (பெருகதை – 3)

  1. பிங்குபாக்: கொழும்பு வழியே ஒரு பயணம்.. (பெருகதை – 2) | வித்யாசாகரின் எழுத்து பயணம்

  2. பிங்குபாக்: கொழும்பு வழியே ஒரு பயணம்.. (பெருகதை – 4) | வித்யாசாகரின் எழுத்து பயணம்

  3. கோவை கவி சொல்கிறார்:

    தமிழரை பார்க்கும் பார்வையின் நம்பிக்கையற்ற தன்மை… பார்த்தீர்களா?….. இறைவா!….உங்கள் பெயர்…நீங்கள் எழுதுவது !!!!!!!!…… ஆண்டவனுக்கு …நன்றி..

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      இது என் கடமையாக எண்ணி எழுதுகிறேன் சகோதரி. உள்ளே புழுங்கி இருந்த வலிகள் எல்லாம் வெளியே வரணும். ஓர் நாள் என் விடுதலையின் சப்தம் புத்தகத்தை ஒரு நண்பருக்கு கொடுக்க கொண்டுப்போனேன். போகும் வழியில் ஒருவர் ஓடி வந்து எங்கள் வண்டியினை நிறுத்தி ஏதோ கேட்டார். ஏதோ ஒரு உணர்வு மேலிட, அவரை நோக்கி நீங்கள் தமிழா இன்றென், ம்ம் தலை அசைத்தார். ஈழமா என்றேன். ஆம் என்றார். எங்கே ஈழத்தில் என்றேன். யாழ்ப்பாணம் என்றார். அதற்கிடையில் என் கையிலிருந்த புத்தகம் பார்த்துவிட்டு வாங்கி உள்ளே திலீபனுக்கு சமர்ப்பணம் என்றிருப்பதை பார்த்து கண்கலங்கினார். ஏன் என்றேன்; நான் ஒரு வருடம் அண்ணனோடு இருந்திருக்கிறேன் என்று புகைப்படத்தை தடவி வாய்விட்டு அழ அவரால் நிற்க முடியாமல் புத்தகத்தை என்னிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து ஓடிப் போனார். இதயம் விம்மி விம்மி அழுதேன் நான். எத்தனை வருட வலியிது. மனதில் இபப்டி சுமந்து சுமந்து எத்தனை ஜீவன்கள் உலகலாவி தன் தேசத்தையும் உறவுகளையும் எண்ணித் தவித்து நொடிப் போழுதிற்கும் செத்து செத்து வாழ்ந்துக் கொண்டுள்ளதோ என்று எண்ணுகையில் இதயம் உண்மையில் வெடித்திருக்கவேண்டும் தான்; அத்தனை வலியுற்றேன். இப்படி என் தமிழுறவுகளை கண்டு வலித்த இடங்கள் ஏராளம். அதை சொல்ல ஒரு களமிது. கதையிது சகோதரி!!

      Like

  4. பிங்குபாக்: கொழும்பு வழியே ஒரு பயணம்.. (பெருகதை – 2) | வித்யாசாகரின் எழுத்து பயணம்

கோவை கவி -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி