நான் ஒன்றும் பேசவில்லை.
பேசாமல் அவரையே பார்த்தேன். என் அமைதியில் நான் அடக்கிக்கொள்ளும் கோபத்தினை அவர் கண்டிருப்பார் போல் –
“எனக்கென்ன சீட்டை வாங்கிக் கொடுத்தோமா போனோமான்னு இருக்கனும், ஆனா, தனியா அறைப் போட்டு, ஏசி போட்டு, கூட மேஜைமேல் கூடுதலாக ஒரு மின்விசிறியும் வெச்சு, சுத்துப்பட்டு கிராமத்துல டை கட்டின ஆளா திரியிறேனா, அதான் கோபம் சுருக்குனு வந்துட்டுது” என்று அவர் தன்னை பொருமைப் படுத்திக்கொண்டு பேசினார்.
என்றாலும் அவர் இத்தனை விளக்கிக் கூறியப் பின்பும் ‘அதென்ன நம் தேசமா? நாம் இந்தியர், அவர்கள் இலங்கையர் தானே? என்றதும், குறிப்பாக அதென்ன நம் தேசமா நாம் வக்காலத்து வாங்க என்றதும்; எனக்கு முகம் பாராத ஒரு கோபம் சுள்ளென வந்தது.
“என் மக்கள் வாழ்ந்த, என் உறவுகள் வாழும் அந்த மண்ணை என் தேசமென்று சொல்லாமல் வேறெப்படிண்ணே சொல்வது?
சரி அதை விடுங்க, உங்களிடம் பேசி ஒரு பயனும் இல்லை. இனியும் இது தொடர்ந்தால் எனக்கு மீண்டும் கோபம் தான் வரும். கொழும்பு வழியாவே ஒரு பயணச் சீட்டு இருக்குன்னீங்களே அதையே பதிஞ்சி கொடுங்க நான் போறேன் “
“சரி தம்பி……, அண்ணன்னு சொல்லிப்புட்டு ஏன் இத்தனை கோபப் படுறிய? நான் தெரிஞ்சிக்கத் தானேக் கேட்கிறேன்? அது ஏன் இவ்வளவு பிடிவாதமா இருக்கீங்க, மூச்சுக்கு முன்னூறு தரம் ஈழம் ஈழம்றீங்க, அது நம்ம மக்கள் வாழ்ந்த தேசம்னு சொல்றீங்க, உண்மையாவே தெரிந்துக் கொள்ளனும்னு ஒரு அவா; இலங்கை என்ன நம்ம தேசமா?”
“ஆமாம்னே, இலங்கைன்றது நம்ம மக்கள் வாழ்ந்த இடம்ண்ணே, வரலாற்றுப் படி பார்த்தோம்னா ‘இலங்கைன்னு ஒரு பெயரே அங்கு முன்பு கிடையாது. இலங்கைன்றது இப்போ இருநூறு ஆண்டுகளுக்கு முன் வைத்த பெயர். லங்கா என்றால் தீவு என்று அர்த்தம். அதோடு நம் தமிழர் முறை படி ‘இ’ சேர்த்து இலங்கை ஆனது. மங்களகரம் வேண்டி ஸ்ரீ சேர்த்து ஸ்ரீலங்காவாக மாற்றம் கொள்ளப் பட்டது. ஆனால்; ஈழம் என்பதற்கு கிட்டத்தட்ட நான்காயிரத்து முன்னூறு வருடத்திற்கும் மேலான வரலாறு உண்டு.
இப்பவும் வடமேற்குப் பகுதியில் புத்தளத்திலிருந்து, கிழக்கே அம்பாறை மாவட்டம் துவங்கி வடக்கே யாழ்ப்பாணம் வரை நம்ம மக்கள் தான் இருக்காங்க, நடுவில் புகுத்தி வளர்க்கப்பட்ட சிங்களந்தான் தன் அரசபலத்தால் நகர்ந்து நகர்ந்து நம்மை ஈழம் விட்டே விரட்டப் பார்க்கிறான்”
“அபப்டியா???!!! அப்போ நீ போறியே கொழும்பு வழி; அதலாம் ஈழம் நாட்டை சேர்ந்தது தானா?”
“இப்போ இருக்குற ஈழம்னு எடுத்துக்குட்டீங்கன்னா கொழும்பு தாண்டி போகனும்ண்ணே. கொழும்பு, கொழும்பு தாண்டினா கம்பகா, கம்பகா தாண்டி புத்தளம், அப்புறம் அங்கிருந்து ஈழம் துவங்குது”
“அப்படியா!! சரி சரி..”
“ஆனா, மொத்தமாவே நம்ம வளர்ச்சி புடிக்காம சிங்களன் ஒரு பக்கம் ஆடுறான்னா, கூட சேர்ந்து வல்லரசு நாடுகளுமில்ல நிக்குது. எங்க ஈழம்னு ஒரு தனிதேசம் வந்தா நாளை தமிழகமும் அதோடு சேர்ந்துக் கொள்ளுமோ; பிறகு அதை பார்த்து பிற மாநிலங்கள் தனி தேசம் கேட்கத் துவங்குமோன்ற ஒரு அரசியல் நோக்கு இந்தியாவிற்கே உண்டு”
“ஓ… அதனால தான் இந்தியா இலங்கைக்கு, மன்னிக்கணும் சிங்களனுக்கு துணை போவுதா?”
“அதனாலையா இல்லை ஆள்பவர்களுக்கு அதையும் கடந்து சுய விருப்புவெருப்புக்கள் உண்டான்னு கடவுளுக்குத் தான் தெரியும்”
“இவனுங்க என்னத்த நினைத்து என்ன பண்ண? அதது கிடைக்கவேண்டியவர்களுக்கு கிடைக்கும் தம்பி”
“அந்த பயம் தான் அவர்களுக்கு, எங்கு நாம் நம் தேசமென்று ஈழத்தை பிடித்துக் கொண்டு; பிறகு மெல்ல மெல்ல அவர்களை விரட்டி விடுவோமோ எனும் பயம்.
அதற்கு உடன்பட்டுவிடக் கூடாதே நம்ம பகுதியிலிருந்து நம்மைச் சார்ந்த இனத்திலிருந்து உருவான இனமாயிற்றே சிங்கள இனமெனும் சுயநலம் கொண்ட பாகுபாடுகளும்; உள்ளே நம் இந்திய நாட்டவரான வடநாட்டவர்களுக்கு உண்டு. அதின்றி; எப்படி எல்லாம் நம்மை அழிக்கலாம் என்று கங்கணம் கட்டித் திரியும் நம் அண்டை மாநிலத்து சதிகாரர்களும் இதற்கு இன அழிப்பிற்கு உடந்தை.
மத்தியில் வீரியமில்லாத, எங்கு அதை கேட்கப் போய்; தன் இருக்கை பறிபோகுமோ என்று பயந்துக் கிடக்கும் நம் அரசியல்வாதிகளின் சுயநலக் கயமைத் தனம்; அவனுக்கு பலகாரம் செய்ய சர்க்கரை கிடைத்தது போல் ஆயிற்று.
உள்ளுக்குள்ள கூட்டுச் சேர்ந்துகே கொண்டு, ஊர் பார்வைக்கு சிங்களன் அடிச்சான்னு வீர வசனங்கள் வேற. எல்லாத்துக்கும் மத்தியில நம்ம உடைமைகளை பிடுங்கிக் கொண்டு; நம்மை அவர்களின் அடிமை போல, இரண்டாம்பட்சமாவே வைத்து அடக்கி ஆளப் பார்க்கிறான் நம்ம பின்னால வந்து நம்ம மண்ணுல புகுந்தவனால் உருவானவன்”
“யாரு?”
“சிங்களன் தான்..”
“இப்பயும் அடிக்கிறானா?”
“இனிமேலாவது கண்களை கொட்ட திறந்து ஈழம் பற்றிய செய்திகளை படிங்கண்ணே. கொத்து கொத்தா அழிக்கிறான். ஒரு நாயி நாதி ஏன்னு கேட்கலை. ஊர் உலகமெலாம் தமிழர் இருந்தும் என்ன புண்ணியம்? கேவலமா இருக்குண்ணே நம்மை நினைத்தாலே”
“வாஸ்தவந் தே(ன்)…”
“அதான் எனக்கு கோவம். வெட்டி முறிக்கனும்னு கோபம்”
“பின்ன வராத பின்ன??”
“அப்படி வாடி ஆத்தி; இப்போ புரிதில்ல; அப்போ கூட நாம் இலகிடுவோம்ண்ணே. நம்ம மனசு அதலாம் மன்னிச்சிடும். ஆனா, அவனுங்க போனாப்போகட்டும்; நம்ம மக்களை நாம மறக்கக் கூடாது இல்லையா? அவர்களுக்கு எதாச்சும் நம்மால முடிந்ததை செய்யனுமால்லையா?”
“கண்டிப்பா செய்யணும் தம்பி”
“நம்ம ஈழம்ண்ணே அது, நம்ம தமிழீழம்ணே அது. நம்ம தமிழர் வாழ்ந்த, வாழும் மண்ணுண்ணே அது. அதை எப்படின்னா மீட்கனும்ண்ணே. எல்லாத்தையும் நீ கொண்டு போ; என் பாட்டன்முப்பாட்டன் வாழ்ந்த மண்ணுல, என் சனம் வாழுற இடத்தையாவது மீட்டு; தாடான்னு பிடிங்கியாவது; தமிழர்னா என்னன்னு அவனுக்கும், தமிழன் வாழ்ந்தா எப்படி வாழ்வான்னு இந்த உலகத்திற்கும் ஆண்டு காட்டனும்ண்ணே.
நினைச்சாலே, சிலதை எல்லாம் படிச்சாலே மனசு உருகிப் போகுதுண்ணே. நம் எத்தனை வீரதீர செயல்களுக்கு முன்னால்; நாகரீகம் போதித்த இனத்திற்குப் பின்னால் வந்தும் இப்படி தலைகுனியும் சூழ்நிலைக்குத் தள்ளப் பட்டோம்னா அது நம் பாடம் வழியா நமக்கு இழைக்கப்பட்ட துரோகமன்றி வேறில்லை.
நம்ம வரலாறையே நம்மக் கண்ணுலக் காட்டாம எப்படி நம்மை இருட்டடிப்பு செய்திருக்காங்களேன்னு நினைத்தால்; ரத்தம் பொங்கிக் கொதிக்கிறது. எப்படி எல்லாம் வாழ்ந்திருக்கிறோம் தெரியுமா நாம?
அந்த மண்ணுல புதைக்கப்பட்டு வருகிற நம்ம வரலாறு எப்படிப் பட்ட வரலாறு தெரியுமா?
எத்தனை நம் தமிழ் மன்னர்களால் அன்றிலிருந்தே ஆளப் பட்ட மண்ணது தெரியுமா?
பண்டார வன்னியன் வீரசாகசம் புரிந்து வெற்றிகொண்டு மீட்ட மண்ணது. அதற்கும் முன், இராஜேந்திரச் சோழன் போரில் வென்று ஆண்ட மண்ணது. அதற்கும் முன்னால் எல்லாளன்ற மன்னனால ஆளப் பட்டிருக்கு…, அதுக்கும் முன்னாடி நாகர்கள் என்ற பெயரில் தமிழர்களே அங்கு வாழ்ந்திருக்கிறாங்க.
அது தவிர, இயக்கர்கள் என்ற பெயரில் சிங்களரல்லாதவர்களும் வாழ்ந்து வந்த சமயம் இடையே வந்து அக்குடியில் மணம் முடித்து சிங்களக் குடிக்கு முதல் விதை தூவி; இன்று நான் தான் நாட்டுக்கே அரசன்னு சொன்னா அது தவறு தானே???”
“ஆமாமா…”
“அப்படியே நீ அரசனா கூட இருந்துட்டுப் போ; எங்களை ஏன் சீன்டனும்?”
“வேற??!!!”
“அதுதான்ண்ணே கோபம், அதுக்காக புல்லு பூண்டு வரை எங்கல்லாம் தமிழ் கேட்குதோ அங்கல்லாம் அவன் தந்திரமா வெளிய ஒண்ணு காமிச்சு உள்ளே ஒண்ணு செய்து எல்லாத்தையும் அழிச்சிகிட்டு வரான்..”
“சரி தம்பி, நம்ம தானே முதல்ல இருந்தே இருக்கோம் பிறகு எப்படி நம்ப தேசம் மொத்தமும் அவனுக்கு கைமாறி போச்சி?”
“அது ஒரு காலக் குறைண்ணே. ஒண்ணு வெள்ளைக்காரன் செய்த ஒரு பெரிய அநியாயம்னு சொல்லலாம். அதை பிறகு சொல்றேன். அதுக்கும் முன்னால – நம் நாடு என்னும் இந்தியாவின்’ வடதேசத்தில் இருந்து போன விஜயன்னு ஒருத்தன் போய் உருவாக்கிய இனம் தான் சிங்கள இனம். இதை அவர்களின் மகாவம்சம் எனும் ஒரு பாளி மொழியில் எழுதப் பட்ட வரலாற்று நூலே உறுதி செய்கிறது”
“ஓஹோ.. பிறகு ஏன் இவர்களுக்கு இந்த கொள்ளை அநியாயம்???”
“அதுதான்ண்ணே என் கேள்வியும். நான் அடிக்கடி இப்படி நினைத்துக் கொள்வதுண்டு; ஒருவேளை விஜயன்னு ஒருத்தன் (அப்போதைய மகத நாடான பிகாருக்கும், கலிங்கத்து தேசமான ஒரிஸ்ஸாவுக்கும் இடையேயான வங்கப் பகுதியிலிருந்து) வட இந்தியாவிலிருந்து ஈழத்திற்குப் போகலைன்னா, கலிங்கத்தை வென்ற பின் பௌத்தத்திற்கு மாறிய அசோக சக்ரவர்த்தியோட மகன் மகிந்தன் அங்க வந்து புத்த மதத்தை பரப்பலைன்னா, புத்தமதத்தை பரப்ப புத்த பிக்குகள் பாளி மொழியில் எழுதிய மகாவம்ச நூலை தனக்கென்று ஒரு தனி இனம் வேண்டிய அவசியம் கருதி சிங்களரை ஆதரித்து உணர்ச்சி ஊட்டி விடலைன்னா; அங்க சிங்களன்னு ஒருத்தன் இன்னைக்கு இருந்திருப்பனா? ன்றது கூட சந்தேகம் தான்”
“காலத்தை யாரால மாத்தமுடியுது தம்பி? அது என்ன நினைக்குதோ அதைத்தானே அதன் விருபத்திற்கு நகற்றிக் கொள்ளுது”
“மனிதர் மட்டுமில்லைண்ணே, இந்த இயற்கை கூட நமக்கு சதிண்ணே.”
“அதெப்படி”
“போரோட அதுவும் ஒண்ணுமா இன்னைக்கு வந்து அழித்த கடல்கோளிலிருந்து அன்னைக்கு நீரில் மூழ்கிய லெமூரியா கண்டம் வரை, இயற்கையின் சதி தானே?
அன்னைக்கு மட்டும் அந்த லெமூரியா கண்டம்னு ஒண்ணு கடல்ல மூழ்கலைன்னா; இன்று ஈழம் இன்னொரு தேசமா ஆயிருக்குமா?
உலகாளும் ஒரு தமிழ்பெருங்குடியா இருந்திருப்போம்!!”
“அப்படியா?!!!! சரி, அதென்ன லெமூரியா கண்டம்?”
“அது முன்பு இருந்த நாகரிகம் வளர்ந்திருந்த ஒரு கண்டம்ண்ணே. தமிழர்கள் தான் மூலக் குடியினர் என்பதற்கு உலகின் சான்றாக இல்லாமல் இயற்கையினால் கடல்கோல் வந்து கொண்டுசெல்லப் பட்ட, மூழ்கப் பட்ட ஒரு கண்டம். தற்காலிகமாக அதை அறிந்து ஆராய்ந்த விஞ்ஞானிகள் அதற்கு லெமூரியா கண்டம் என்று பெயர் வைத்துள்ளனர்.
இயற்கையும் அதன் பின் வந்த மனிதர்களும் செய்த சதி; இன்று ஆண்ட தமிழனையே வாழ ஒரு மண்ணின்றி போராட வைத்துவிட்டது பார்த்தீர்களா?
தன் மக்களை இழந்து, உறவுகளை இழந்து, தாயின்றி தந்தையின்றி, பெற்றக் குழந்தைகள் கூட வயிற்றின் கர்ப்பத்திலேயே கொள்ளப் பட்டு, ஆண்டாண்டு காலமாக ரத்தம் சிந்தி; உயிர்விட்டு; வருந்த வைத்துவிட்டது பார்த்தீர்களா? அறுபது வருடத்துக்கும் மேலாக எத்தனை உயிர்? எத்தனை குழந்தைகள்; எத்தனை பெண்கள்? எவ்வளவு தியாகம்? எவ்வளவு பொது ஜனம்ண்ணே சாவறது???”
“அப்படியா, அதலாம் நமக்கு தெரியாதே தம்பி………”
“தெரிந்துக் கொள்ளனும்ணே. இதலாம் தெரியாம பேசுறோமே, பெரிய இவரு மாதிரி கிழிக்கிறோமே; மேஜைக்கு கீழ தர நாலு காசு லஞ்சத்துக்கும், அதை தொடர்ந்து கொடுக்கிற அரசியல் இருக்கைக்கும் மனித மரியாதயினை எல்லாம் விட்டு கீழிறங்கிவந்து; மானங் கேட்டு போய் நிக்கிறோமே; தப்பில்ல அது?”
“இவ்வளவு இருக்குன்னா தப்புதான்.. தம்பி, கண்டிப்பா தப்பு”
“மெல்ல சொல்லாதீங்க; நம்ம இனம் அழிய நாமே அமைதி கொண்டு இப்படி பார்த்துக் கொண்டிருந்தா கண்டிப்பா அது தவறு தான் தவறு தான் தவறு தான்னு உரக்கச் சொல்லுங்க”
“நீங்க இதலாம் படிக்கிறீங்க தெரியுது, நமக்கெங்க?”
“சும்மா படிக்கலைண்ணே; வலி. கொத்து கொத்தா மக்கள் சாவுறதை பார்த்துட்டு வந்த வலி, வலிச்சி, தனியா யாரு இல்லாதப்போ தொலைகாட்சியில் செய்தியில் வருவதை எல்லாம் பார்த்துவிட்டு ஓ’ன்னு கத்தியழுத வலி. தடுக்க முடியாத கோபம். ஒத்தையாப் போயி ‘நிறுத்துங்கடா போரைன்னு’ நிறுத்திட முடியாத வெறுமை. நம் கையாலாகாத் தனத்தால நாணிக் கிடந்த தருணத்தின் வெம்மை. ஏன் இப்படி நடக்குது, எங்கே தவறு நிகழ்ந்ததுன்னு தேடி தேடி பார்த்ததுல படித்ததுல தெரிந்துகிட்ட கொஞ்சநஞ்ச பாடம்”
“அப்போ, சுத்தி வளச்சி யோசிச்சா; நம்ம இலங்கையை நமக்கே கொடுக்கணும்றீங்க, அதானே?”
“அவ்வளவு வேணாம்ண்ணே, அங்கிருக்கறதும் அப்பாவி ஜனங்க தானே? நமக்கெதுக்குண்ணே அவன் சுதந்திரம் பறிக்கும் ஆசை எல்லாம்? அவர்களும் மனிதர்கள் தானே? அங்கும் குழந்தையும் பெண்களும் பொதுமக்களும் வாழ்கிறார்கள் தானே? அவர்கள் வாழும் இடத்தில் அவர்கள் வாழ்ந்துக் கொண்டு போகட்டும்.
நம்ம ஆதிகாலத்துல இருந்தே ஆண்ட இடத்தைக் கூட விட்டுட்டு வெளியே வந்து பார்த்தா தெரியுதுபார்; இப்போ நம் மக்கள் வாழும் மண்ணு, அது நமக்கு கிடைத்தா போதும். ஓடி ஓடி நாட்டை பிடித்து கோடி நட்ட தமிழன், வாழ ஒரு குடிசை தேடி; நாடு நாடா அலைந்து கப்பலில் திருப்பி யனுப்பப் படும் சோகங்கள் நிகழாம இருந்தால் அது போதும். நம்ம இடம் மட்டும் நமக்குக் கிடைத்தால் போதும்ண்ணே.
ஆனால், வருத்தம் பார்த்தீங்கன்னா ‘இது யாருக்குமே தெரியவோ புரியவோ மாட்டேங்குது. நாம இப்பக் கூட அவனுடைய இடத்தையா கேட்கிறோம்; நாங்க ஆளும் வரை எங்களுக்கு கொடுங்கடா, நாங்க தனியா வாழ்ந்துக்குறோம்னு தானே கேட்கிறோம்? அதை கொடுக்கமறுத்து நம்மையே அழிக்கவும் பார்த்தால்; தமிழன் சும்மா இருப்பானா?”
“அதெப்படி??”
“அதான் அடிக்கிறான். அதனால தான் சண்டை வருது. அதனாலத் தான் அன்னைக்கும் வந்தது, இன்னைக்கும் நடக்குது, இத்தனை வருடங்களா அதுக்குத் தான் போராடவும் செய்யுறோம்.
இதை, கூட நாம் அபுரிந்துக் கொள்ளாமல் விட்டுவிட்டு தூர நின்று வேடிக்கை பார்க்க அவர்கள் யாரு யாரோ வேற்று மக்களா? போகட்டும்னு விட.
வேற்று மக்கள்னாலே விடமாட்டோம், அப்படிப் பட்ட தமிழர் பரம்பரை நம்ம பரம்பரை. அதுக்கே என்னடா இப்படி பன்றானுவளேன்னு மனசு இளகும், கேட்கும் உரிமை அற்றுப் போயும் தவிக்கும். பிறகு, இவர்கள் நம் குடிகளாயிற்றே; ஏன்டா ன்னு ஒரு குரல் நாம கொடுத்திருந்தா அவனுக்கு இப்படி ஏறிவந்து விஷ குண்டு போட்டு நம்மை அழிக்க; நம் அடையாளங்களை அழிக்க; நம்மை வரலாற்றிலிருந்தே அகற்ற எண்ணம் கொள்வானா?
அதிலும், இன்றைய சூழ்நிலை பார்த்தீங்கன்னா; நாம தொலைத்த சில நம்மோட பழந்தமிழர் அடையாளங்களை கூட மாறாம அதிகபட்சம் வைத்துக் கட்டிக் காப்பதும், அழகிய தமிழ் பேசி தமிழுக்காகவும் தமிழருக்காகவும் வீருகொண்டெழுவதும்; தமிழ்மண்ணின் புகழை உலக அரங்கில் நிறுத்த முயல்வதும் அந்த நம்ம ஈழ மக்கள் தான்ணே.
நாம் இந்தியா எனும் ஒரு வட்டத்தில் நின்றுக்கொண்டு வெறும் இந்தியராகத் தான் இருக்கிறோம். அவர்கள் தான் இன்னும் தமிழராய், தமிழீழ தேசத்தின் விடுதலைக் காற்றாகத் தன்னையே தன் தேசத்திற்கென இழந்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னமும் நம்ம பழமை பாரம்பரியங்களை தொலைக்காம பத்திரமா வைத்திருக்க அவுங்க வாழனும்ணே”
“கண்டிப்பா கண்டிப்பாப்பா, கண்டிப்பா வாழனும்பா. அவர்களை அழிய விடக் கூடாது, அவர்களை கொள்ள விடக் கூடாது. அவர்களுக்கு ஏதேனும் செய்யனும் சத்யா….., அதுக்கு என் தலையை கொடுக்கணும்னா கொடுப்பேன்!!!!!!
—————————————————————————————————————
தொடரும்..
நன்றி: விக்கிப்பீடியா மற்றும் பிற இணைய தளங்கள்!!
அடேயப்பா….. முண்டாசுக்கவிஞனுக்கு வந்த கோபம்—-
அனல்,
நியாயமான கோபந்தான்….
LikeLike
நன்றிகள் ஐயா. கோபமென்னவோ நிறைய இருக்கிறது. அதை எப்படி ஆயுதமாக்கி, மனிதருக்குள்ளிருக்கும் மிருகத்தின் கோர முகத்தை மனிதருக்கேக் காட்டி, மீண்டும், எஞ்சிய மனிதர்களை மனிதர்களாக காக்கும் முயற்சி இது!! குறைந்தது, நாம் யார்? நமக்கு நடந்தது என்ன என்பதை சொல்ல முயல்வோம்; செய்யவேண்டியதை படிப்போர் தீர்மானிக்கட்டும்!!
LikeLike
இதைத்தான் நானும் எதிர்ப்பார்த்தேன்….இன்னும் தீவிரமான செய்திகளோடு சான்றுகளோடு உங்கள் புதினம் தொடர
வாழ்த்துக்கள்..!
LikeLike
ஆம்; என் மக்களுக்கு தரும் செய்திகள் தவறானதாகவோ எனக்குத் தோன்றியது மட்டுமாகவோ இருந்து விடக் கூடாது என்பதில் கவனமாக உள்ளேன் ஐயா. நாளை தமிழ் தெரிந்த சிங்களப் பொது மனிதர் ஒருவரே இதை படித்தாலும் கூட ‘ச்ச’ இப்படி எல்லாம் செய்துவிட்டார்களே நம் மக்கள் என்று வருந்துமளவு; நம் நியாயத்தையும் அவர்களின் குற்றங்களையும் ஆதாரப் பூர்வமாக அலசுவதே இத்தொடரின் நோக்கம்!!
LikeLike
பிங்குபாக்: கொழும்பு வழியே ஒரு பயணம்.. (தொடர் கதை – 7) | வித்யாசாகரின் எழுத்து பயணம்
சிறு வயதில் படித்த சில கதையை கொழும்பு வழிப் பயணம் 6 நினைவுக்கு கொண்டு வந்தது நன்றி .ஈழத்தமிழனின் இன்னல்களை உலகிற்க்கு தெரியப் படுத்தும் உங்களுக்கு எமது நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
LikeLike
மிக்க நன்றி நளாயினி. இதை என் எழுதுபவனின் கடமையென்றே எண்ணியுள்ளேன். இன்னும் சற்று இறுதி திருத்தம் செய்துக் கொண்டுள்ளேன். விரைவில் புத்தகமாக வெளிவர உள்ளது. இயன்றதை நாம் எல்லோரும் செய்வோம், ஏதேனும் ஒன்று நன்றாய் நிச்சயம் நடக்கும், முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்!!
LikeLike