19 அன்றிலிருந்தே வலிக்கிறது; காதலினிந்த சேரா வலி..

காதல்
கண்களில்
ரத்தமாக வழிந்த நாட்களது, அந்த நமதான நாட்கள்..

மழை சுட்டதும்
வெயில் நமை நனைத்ததுமான
அன்றைய பொழுதுகள் பெரும் பொக்கிசமானவை..

இமைநிறைய கனவும்
உயிர் நெடிய பயமுமாய்
பதற்றமுற –
நம் பிரிவை எண்ணி நாம் வாழ்ந்த
அந்த நாட்கள் அத்தனையும்
அத்தனை மரணத்திற்குச் சமமானவை..

நம்பிக்கையின் அடிவேரெடுத்து
நம் மணப்பந்தல் தைத்த இரவின் நகர்வுகள்
நம் விழித்தேயிருந்த கண்களில் –
வலியாக மட்டுமே நிரைய என்ன பாவம் செய்தோமோ..?

பிறகெப்படி உனக்கு நானும்
எனக்கு நீயும் சரி எனும் பார்வையை மட்டும்
நமக்குப் புகட்டியதோ இந்த
சதிகார உலகம்.. (?)

பார்த்தால் பார்த்துவிட்டு
சிரித்தால் சிரித்துவிட்டு
முத்தமிட்டால் கூட மறந்துப் போகும் வகையல்ல
நீயும் நானுமெனப் புரியவைக்க –
நான் மரணிக்கையில் உனை நினைத்துக் கொள்ளும் தருணங்கள்
ஒருவேளை சாட்சியாக நிற்கலாம்..

நானேனும்.. பெரிதில்லைப் போகட்டும்
ஆனால் நீ பாவம்..
நீ அழுவாய்
சிரிக்க மறுப்பாய்
வாழ்வை கசந்து வாழப் பழகியிருப்பாய்
உணவு நாக்கு சுட்டு, உன் மரணத்தின் ஒருபிடி
உனக்குள்ளே வியாபித்துப் போயிருக்கும்,

எனைத் தேடி தேடிச் சிவக்கும் விழிகளில்
உன் கடைசி நாட்களைச் சேகரித்திருப்பாய்,
யாரிடமும் பேசிடாத மௌனத்தில்
வலிகளாய் நீ உதிர்ந்துப் போயிருப்பாய்,
உயிர்வெள்ளம் உடைந்துப் பாயும் கடலென
நம் நினைவுகளில் கரைந்தே கரைந்தேயிருப்பாய்.. நீ

ச்ச..
காற்றில் அசைந்து உரசிக் கொள்ளும்
ஒரு நாணல் போல
வெறுமனே அசைந்து
உடல் நெருப்பில் பற்றியெரியும் மனசு
எப்படி வலிக்குமென்றெல்லாம் யாருக்குப் புரிகிறது?

ஒசந்த ஜாதியும்
ஒடுக்கப்பட்ட இனத்தின் பிறப்பும்
மனிதரை நிறம்பிரிக்கும் மதமும்
மனசு கொன்றுபோடும் மயானமொன்றில்
எந்த நாகரிகத்தைப் பிறப்பிக்கப் போகிறதோ இனி (?)

இலகுவாய் –
பெற்றதன் வரத்தில்
புதைத்துவிடும் நம் ஆசைகளை
பெற்றோரே புரியும் – நாளெந்த நாளோ.. ?

திரும்பினால் தேடி
நடந்தால் அறிந்து
பேசாமலே உனைநான் புரிந்துக் கொள்ளும்
நேசிப்பில் எதையெடுத்து இம்மக்கள்
நமக்கு எதிராய் கொள்கின்றனரோ ?

மரணம் உதறி மரணம் உதறி
இன்னும் எத்தனை நாட்கள் நாமிப்படி
பிரிந்தே
உயிர்த்தேக் கிடப்பதோ?

வலியாய் வலிக்கிறது அன்பே
பிரிவு கொடிது
அதிலும் முற்றிலும் சேராது நமைப் பிரிக்கும்
சதியின் பிரிவு மிகக் கொடிது;

உண்மையில் –
நாம் பேசிக்கொண்ட நாட்களைவிட
நீ பார்த்துச் சென்ற நொடிகள் தான்
இதயம் குத்திக் கிழிக்கும் வதை நிரம்பிய
நினைவின் வலி என்று –
இப்படி வெறும் காகிதங்களில்
மட்டுமே எழுதி கிழித்துப் போடுகிறேன்..

கிழிக்க கிழிக்கச் சேரும்
குப்பைகளின் நெரிசலில் நகரும்
பார்வைகள் –
இதோ மிதித்துச் செல்கின்றன நம் காதலை.. நினைவுகளை..
———————————————————-
வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to 19 அன்றிலிருந்தே வலிக்கிறது; காதலினிந்த சேரா வலி..

பின்னூட்டமொன்றை இடுக