49, கவுச்சி வாசமும் கண்களின் வெப்பமும்..

வியர்வை வாசத்தில்
மனம் ஈரமாகிப் போவதுண்டு.,

இன்றும் அப்படி
அவனின் வியர்வை வாசத்தில்
நனைந்துபோனேன் நான்..,

இரவுகள் கிடைக்காததொரு பகல்
எத்தனை ஈர்க்குமென்று
ஈரத்தில் நனைந்தோருக்கே தெரியும்,

அவனின் வாசம்
அப்படியொரு வாசம்.., மனதை
அள்ளிக்கொள்ளுமொரு மனம்,

மோக முற்கள்
உடம்பெல்லாம் தைக்கத் தைக்க
சொட்டும் ரத்தமெனச் சொட்டியவியர்வையில்
உயிர் ஊடுறுவியப் பகல் அது என்பதால்
அந்த வாசமும் அப்படிப் பிடித்துப்போனது போல..

மனதுள் ஒட்டியிருக்குமந்த வாசத்தை
தேடித் தேடி
வீடெங்கும் அலைகிறேன்
ஏதோவொரு சட்டையிலிருக்கும்
அவனின் வாசமென்று
ஒவ்வொரு சட்டையையாய் எடுத்துத் தேடி தவிக்கிறேன்,

குபீரென வீசுகிறது அவனின் மணம்
வீடெங்கும் பரவுகிறது அவனுடைய
மனம் மயக்கும் வாசம்,

அவசரமாய் துணி விலக்கி துணி விலக்கி
அங்குமிங்குமாய்ப் பார்க்கிறேன் –
ஒரு மலர் சட்டென மலர்ந்ததுபோல்
ஓரிடத்தில் வீசும் வாசம்கண்டு
மலைக்கிறேன்
துழாவிய கைகளை விட்டுவிட்டு
எதிரே நிமிர்ந்துப் பார்க்க; அவன்..
அவனேதான்..
மனதில் நிற்பதைப்போலவே வந்து
எதிரே நிற்கிறான்;
அன்பு –
பாயும் நதியெனப் பாய்கிறது அவனின்
பார்வையிலிருந்து,

அருகே வந்து
அருகே வந்து
நெருங்கி நிற்கிறான்
ஆஹா… உயிரை தொலைக்கிறேன்
உலகத்தையொரு கூட்டினுள் அடைக்கிறேன்
வாழ்க்கை ரசிக்குமிடத்தில் இனிக்கிறது
வெறுக்கையில் மட்டுமே கசக்கிறது!!
—————————————————————
வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக