இனிக்கும் கரும்பும்; கண்ணீர் கரிக்கும் பொங்கலும்!!

வ்வொரு விறகாய் சுள்ளி பொருக்கி
ஓராயிரம் கனவை சமைத்து
ஓயாக்  கண்ணீரிலும் உள்ளம் சிரிக்கும் பொங்கல்;
ஒரு துண்டு கரும்பு நறுக்கி  – வீடெங்கும் எறும்பூர
ஒரு பானை வெண்சோற்றில்
வீடெல்லாம் இனிக்கும் பொங்கல்!

உழுத நிலம் பெருமை கொள்ள
உழைத்த மாடு மஞ்சள்  பூட்டி
ஊரெல்லாமெம் வீரத்தை ஆண்டாண்டாய் விதைத்தப் பொங்கல்;
மீண்டும் மீண்டும் மனிதம் துளிர்க்க
மறம் தந்த மண்ணிற்கும்
மாண்பு செறிக்க படைத்தப் பொங்கல்

சிரிக்கும் உழவர் நிலம் வணங்கி
நிற்கா மழையை கேட்டப் பொங்கல்,
நெடு வயலுக்கு படையலிட்டப் பொங்கல்; நாளை
வரவிருக்கும் தலைமுறைக்கு – நம் நினைவை கரும்பிலிட்டு
இன்றைக்குவரை
இனிக்கவைக்கும் பொங்கல்!

வீடு மெழுகி வெள்ளை பூசி
காடு தோட்டம் கழுனி கூட்டி
மனிதச் சுவடுபதியும் வரப்பு செதுக்கி
வாழ்வெல்லாம் வருடந்தோறும் இனிக்கும் பொங்கல்;
தமிழரின் நெடுங்கால மரபை மீண்டும்
மீண்டும் நமக்கே நினைவூட்டும்  பொங்கல்!

வீடு மாறி, நாடு கடந்தும்
தோட்டம் பற்றிய ஈரத்தை,
மண்  மாடு பற்றிய அக்கறையை,
உழவர் குறித்தச் சிந்தனையை உறுத்த வரும் பொங்கல்,
சற்று சிரிக்கும் சிரிப்பினூடே’ அவர்களின் ஒரு சொட்டுக்
கண்ணீரைவிட்டுநமை நனைத்துப்போகும் பொங்கல்!!
——————————————————————-
வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in காற்றாடி விட்ட காலம்.. and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to இனிக்கும் கரும்பும்; கண்ணீர் கரிக்கும் பொங்கலும்!!

  1. யாழ்பாவாணன்'s avatar யாழ்பாவாணன் சொல்கிறார்:

    இனிய தைப்பொங்கல் வாழ்த்து

    Like

யாழ்பாவாணன் -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி