மாடியில் நின்று நீ பார்க்கையில்
கீழே பூமியில் பூத்த மலர்களை நீ
கண்டிருக்கமாட்டாய்..
எனைச் சுற்றி மலர்களாய் பொழிவது
மேலிருந்து நீ
பார்க்கையில் மட்டுமே
சாத்தியப்படுகிறது..
மாடிவீடு என்றாலே
இப்பொழுதும் அந்த மாடியும்
மேலிருந்து எட்டிப்பார்க்கும் நீயும்
சட்டென புகைப்படத்தைப் போல
எதிர்படுவீர்கள் எனக்குள்.,
நீ மேலே நின்று
சிரிப்பது எத்தனை அழகு
தெரியுமா?
உனது சிரிப்பின் பேரழகு
அத்தனை வசியமானவை, நான்
நடக்கும் தெருவெல்லாம்
நினைவுகளால் –
பூத்தூவி மகிழ்பவை அவைகள் தான்.,
உனது சிரிப்பும்
மெல்லியப் பார்வையும்
நீரும் காற்றும் போல எனக்கென்றால்
நீ கூட நம்பமாட்டாய்,
உனக்கு இப்போது கூட
என்னை நானாக தெரியாது
உண்மையில் நான்
இன்றும் அதே
உன்னுடைய நானாகவே இருக்கிறேனென
எழுத்தில் எப்படிக் காட்ட?
எல்லோருக்கும் அது ஒரு
மாடி வீடு
எனக்கு மட்டுந்தான் அது
நீயிருக்கும் வீடு..
அன்றெல்லாம்
மாடி வீடுகளில் தான்
காற்று சூடாக வரும்
வசந்தம் வீடு துறக்குமென்பேன்,
இப்போதெல்லாம் –
மாடி வீடுகளில் தான்
தென்றலே குடிபுகுந்துள்ளது என்கிறேன்;
சிலர் ஒரு மாற்றத்தோடு எனைப்
பார்கின்றனர்,
அன்று கேட்டவர்களுக்கும்
இன்று கேட்பவர்களுக்கும்
மாடியில் நீ நிற்குமழகோ பார்க்குமழகோ சிரிக்குமழகோ
தெரியாது தானே.. (?)!!
—————————————–
வித்யாசாகர்
பிங்குபாக்: வானத்திற்கு கீழே நிலவென ஒளிர்பவள்.. – TamilBlogs