இயக்குனர் பாலாவின் இன்னொரு திரைக் காவியம் – அவன் இவன்!!

ஒவ்வொரு மனிதரின் ஒவ்வொரு விதமான வாழ்க்கையின் வெவ்வேறு காட்சிகளை ஒவ்வொன்றாய் தன் ஏட்டில் பதிந்துக்கொண்டுதான் வருகிறது ஒவ்வொரு திரைப்படமும். அதிலும் எளிய மக்களின் வாழ்தலை சமகாலப் பதிவாக்கும்  அரிய திரைப்படங்கள் தமிழரின் கலைத் திறனை மெய்ப்பிக்கும் சான்றாகவே தற்காலங்களில் வந்துக்கொண்டிருக்கின்றன.

அவ்வகையில், ஒரு எழில்மிகு கிராமத்தில் வசிக்குமொரு குடும்பத்தின் இரு மகன்களையும், அவர்களின்  யதார்த்த வாழ்க்கையினையும் கல்லுக்குள் துளிர்க்கும் இலைபோல் அவர்களுக்குள்ளும் வரும் காதலையும், அதை ஏற்கும் மனிதம் மிக்க மனிதர்களையும், மனிதம் எதிர்க்கும் மிருகப் பிறப்பொன்றின் இறப்பையும் உணர்ச்சிப் பொங்க பொங்க காட்டி, நம் கண்முன் அவர்களை அழவைத்து அதில் நம்மையும் ஒன்றவைத்து, அவர் செய்ய நினைத்த அத்தனையையும் செய்து, அதற்கும் நம்மை தலையாட்டி ரசிக்கவும் வைக்கும் திரு. பாலாவின் இன்னொரு திரைக் காவியம் இந்த “அவன் இவன்” திரைப்படம்.

கல்லை எடுத்து கையில் கொடுத்தால் கூட அதில் ஒரு துளி நடிப்புத் தன்மை இருக்குமெனில்  அதையும் வெளியில் கொண்டுவந்து கல்லையும் நடிக்க வைத்து உலகிற்கு ஒரு மாறுபட்ட திரைப்படத்தை கொடுத்துவிடக் கூடிய தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவர் இந்த பாலா.

இவரின் படத்தில் மட்டுமே, நடிக்கும் அத்தனைப் பேரும் சிறந்த நடிகர்களாக கருதப்படும் அளவிற்கு ஒவ்வொருவரின் உழைப்பையும் வாங்கி அவர்களின் முகத்தில் தனித்துவ நடிப்பெனப் பூசிவிடுகிறார். இப்படத்திலும் அத்தகைய உழைப்புத் ஒவ்வொரின் நகர்விலும் தெரிகிறது. குறிப்பாக படம் பார்க்கும் ஒவ்வொரு நொடியும் நம் உணர்வுகளையெல்லாம் கதாப்பாத்திரமே ஆட்கொண்டுவிட, நாடி நரம்புகளை இழுத்து சுண்டிவிட்டுச் செல்கிறது அனைத்துக் காட்சிகளும்.

பேசும் வசனத்தைக் காட்டிலும், இசை வலிமைமிக்க இடத்தைப் பெற்றிருக்கிறது இப்படத்தில். வார்த்தையின்றி வரிகளின்றி சப்தத்தால் நரம்புகளை மீட்டி, காணும் காட்சிகளுக்கு மத்தியில் ஒரு வாய்; அசையாமல் பேசுமெனில் அதை யுவனின் இசை என்று மெச்சிக் கொள்ளலாம். அப்படி வீரமும் காதலும் கலையும் சிறந்த தமிழரின், ஒருவகை மனிதர்களின் வாழ்வை ஒரு புல்லாங்குழலின் சந்துகளில் புகுந்து வெளிவரும் காற்றின் சப்தமாய் இசைத்துக் கொடுத்திருக்கிறார் இப்படத்திற்கென. நிச்சயம் இந்த “அவன் இவன்” திரைப்படத்தின் வெற்றியில் இசையின் பங்கும் நடித்தவர்களின் பங்கினைப் போல் இன்றியமையாத ஒன்று.

பொதுவாக, நடிகர்கள் முகப்பூச்சு தடவியோ அல்லது முகபாவம் சற்று மாற்றியோ நடிப்பதென்பது இயல்பு, ஆனால் படம் முழுக்க தன் முகத்தையும் பிறப்பின் குணத்தையும் மாற்றி, இயக்குனர் எண்ணிய ஒரு கதாப்ப்பாத்திரத்தை தன் திறமையின் உச்சம்வரை பயன்படுத்தி, தன்னை வெற்றியென்னும் ஒரு வார்தைக்காய் வருத்தி திரைக் காவியத்தின் பதிவில்; தனக்கான ஒரு தனி இடத்தை பதிவு செய்துக் கொண்டார் விசால்.

அவர், அழும்  காட்சியில் நம்மை அழவைத்து, சிரிக்கும்  காட்சியில் அவர் சிரிக்காமல் நம்மை சிரிக்கவைத்து, பார்க்கும் பார்வையில் நடிப்பை நிரப்பி, அசையும் வாயின் கோணத்திற்கேற்ப நம்மையும் திரும்ப வைக்கும், வாய்திறந்து மலைப்பாகப் பார்க்கவைக்கும் வினோத நடிப்பும், இதுவரை திரைத்துறையினர் சிந்தித்திராத அல்லது செய்திராத சாதனைக்குரிய பாத்திரமும் தான் விஷாலின் கதாப்பாத்திரம்.

உனக்குத் தான் முந்தைய படத்தில் தனியிடம் தந்தேன் இல்லையா இதில் நான் சொல்வதை மட்டும் செய்யென்று சொல்லிவிட்டிருப்பார் போல் இயக்குனர் பாலா நடிகர் ஆர்யாவை. என்றாலும், தன் திறனில் குறையில்லா ஆர்யா விட்டேத்தியாய் திரியும் சில காட்சிகளிலும் சரி, காதலின் ஈர்ப்பில் மதிமயங்கும் இடமும் சரி, கோபமுறும் குடித்து ஆடும், கண்கலங்கி அழும் அண்ணனின் அழையை பார்க்க இயலாமல் கண்நீர்வடிக்கும் காட்சியிலும் சரி; தன்னை முழுமையாய் படத்தில் ஈடுபடுத்தி தானும் ஒரு நிகரற்ற நல்ல கலைஞன் என்பதை மெய்ப்பித்திருக்கிறார்.

 திரிசா போட்டால் ஓடும்,  ஐஸ்வர்யா நடித்தால் படம் பெரிதாகப் பேசப்படும் எனும் எண்ணங்களை இயக்குனரின் திறமையினால் உடைத்துக் காட்டும்விதமாய் பெயர்பெற்றுவிடாத நாயகிகளுக்குக் கூட பெரிய கதாநாயகி அந்தஸ்து உண்டு என்பதை தன் படத்தின் மூலம் நிரூபிக்க நினைத்திருப்பார்போல் இயக்குனர். அதை நிறைவாய் தன் நடிப்பினால் காட்டிச் சென்றுள்ளனர் இப்படத்தின் கதாநாயகிகளான தேன்மொழி, மற்றும் பேபி எனும் பாத்திரத்தினர்.

உண்மையில், அவர்கள் அசைக்கும் கண்களும் சரி, சிரிக்கும் இதழ்களும் சரி, பேசும் உச்சரிப்பும் சரி, அதை படம் பிடித்த விதமும் சரி; மொத்தமுமே காண காண ரசிக்கத் தக்க அழகு என்பதில் மாற்றுக் கருத்தேயில்லை. அதுபோல், அவர்கள் வந்து போகும் ஒவ்வொரு காட்சியிலும் மிக இலகுவாக நம் தேசத்து தமிழச்சியை தமிழ்ப்பெண்களை படத்தில் அடையாளம் காட்டிப் போகின்றனர்.

அதிலும் காவல்துறை அதிகாரி கதாநாயகியைப் பார்த்து ஒவ்வொரு முறையும் என்னடா கண்ணு என்னடா கண்ணு என்று அழைக்கையில், ஓடிவந்து நிற்கும் அந்த முட்டைக்கண்ணழகு கதாநாயகியை காணும் போதெல்லாம் அவரை ஒரு சட்டப் பூர்வமாகப் பார்ப்பதைவிட ஒரு படத்திற்கு தேவையான ஒரு பாத்திரமாக மட்டுமே பார்த்து ரசிக்கத் தோன்றுகிறது.

முக்கியமாக, இப்படத்தில் வில்லன் கதாநாயகன் என்று சொல்லுமளவிற்கு யாருமில்லை என்றாலும், முழுக்க முழுக்க சிரிப்பாகவே செல்லும் காட்சிகளுக்கிடையில் மிக சாதாரணமாக ஒரு மாட்டிறைச்சிக்காக மாடுகளை கடத்தி அறுக்கும் ஒரு மனிதமற்ற பாத்திரத்தை காட்டி, அவனின் கோரமுகத்தைப் பல்லிளிக்கவைத்து, அவனை வேண்டுமெனில் வில்லனெ எண்ணிக் கொள்ளலாம் என்று எண்ணவைக்கும் அவர்கூட தன் ஒற்றை கையை பின்னால் கட்டிக் கொண்டு அடிக்கும் காட்சிகளிளும், கீற்று போல் இரு உதடுகளுக்கிடையில் வெற்றிலை பல் தெரிய பார்க்கும் அழகிலும் நடிப்பை துல்லியமாய் இயக்குனர் சொன்னளவிற்கே வெளிப்படுத்தியிருப்பது திறம்தான்.

மேலும், இப்படத்தின் ஒற்றை நாயகர் எனில் அது ஐயா அயனஸின் பாத்திரம். படம் முழுக்க அவரை கண்டுவிட்டு வெளியே வருகையில் தன் தாத்தாவோ தனக்கு சொந்தமான தந்தை ஸ்தானத்து யாரோ ஒருவரை அந்த வில்லன் சித்தரவதை செய்து கொன்ற கோபம் படம் பார்க்கும் அத்தனை பேருக்கும் வர, அந்த கோபத்தை காட்சிகளின் நகர்வில் தகிக்கும் விதமாக அமைந்த படத்தின் முடிவே இயக்கத்தின் உச்சம் ஆகும்.

அதிலும், வில்லனை ஒற்றை அடியில் கொன்று விடாமல் தான் கொண்டுள்ள அயனஸ் மீதான பாசம் அவ்வளவும் வெளிப்படும் அளவிற்கு விஷால் அடிக்கும் ஒவ்வொரு அடியும் நம்மை பாசம் உணர வைக்கிறது.

கடைசியில் வில்லன் அயனஸை சித்ரவதை செய்து நிர்வாணப் படுத்தி மரத்தில் தொங்கவிட, காமிரா திரும்பும் இடமெல்லாம் உடம்பில் பட்டை பட்டையாய் தொலுரிய அடித்திருப்பதை காட்ட; கொதித்துப் போகும் ரசிகர்களுக்கு இவனை இப்படி தாண்டா கொல்லனும் என்று புருவம் உயர்த்தி வெறித்துப் பார்க்கும் அளவிற்கு உணர்ச்சிப் பொங்க முடிகிறது படம்.

குறிப்பாக, தனியாக வாழும் ஒரு மனிதரின் வலியையும், சுற்றத்தை அனைத்துக் கொண்ட யாருமே இவ்வுலகில் தனிமைப் படுத்தப் படவில்லை என்கிற கருத்தையும், அன்பு மனதில் நிறைந்திருப்பின், பண்புடன் பழகத் தெரிந்திருப்பின், பிறரின் உணர்வுகளை மதிக்க மனசிருப்பின் யாருமே இவ்வுலகில் அனாதையில்லை எனும் போதனையையுமே மறைமுகமாய் கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

அதையடுத்து, சூழ்நிலைகளுக்குக் உடன்பட்டுப் போகும் மனத ஜென்மங்கள் யாருமே நிரந்தரமாய் திருந்தாத பிறப்புகளல்ல எனும் உண்மையையும் திருந்தாத மனிதர்கள் உண்டெனில் அவர்களுக்கான முடிவும் அதே விரைவில் அவர்களை தேடி வருகிறதென்பதையும் கதாப் பாத்திரங்களின் வழியே வழியும் சோகப் பாடலின் மனதுருக்கும் இசை போல் சொல்லிப் போகிறது படம்.

குறிப்பாக, ஒழுக்கம் இல்லா ஆண்களின் மதிப்பு எப்படி மனைவியின் ஒவ்வொரு வார்த்தையினாலும் சுட்டெரித்து தெருநடுவே வீசப் படுகிறது என்பதையும், வீட்டின் வெளிச்சமாக வாழும் பெண்களின் பண்பு சற்று முறை பிசகிப் போனாலும் அது எப்படி அடுத்து வரும் தலைமுறையையே சீர்குலைத்து விடுகிறது என்பதையும் விஷால் ஆர்யாவின் இரு அம்மாக்களான அம்பிகாவும் அவரின் சக்களத்தியாக வரும் நடிகையும் மிக தத்ரூபமாக காண்பவர் ரசிக்கும் அளவிற்கும், கேட்பவர் காதை மூடிக் கொள்ளுமளற்கும் பேசி நடித்துக் காட்டியுள்ளனர்.

அம்பிக்காவிற்கு இது ஒரு புதிய தோரணை அதுபோல் அம்மாவாக இன்னொரு பாத்திர ஆரம்பம் என்றாலும், பேச்சும் பீடியும் கொஞ்சம் உதடு கோண வைத்தாலும், இயக்குனர் இப்படத்தில் காட்ட வருவது அதுபோன்று வாழும் ஒரு குடும்பத்தின் கதையினை மட்டுமே என்பதையும் நாம் புரிந்துக் கொள்ளவேண்டியுள்ளது.

கள்ளென்ன இரும்பை கொடுத்தாலும் மென்று துப்பும் ஒரு சிறப்பு எந்திரம் போல், தான் எதை வேண்டுமானாலும் செய்வேன், எதை வேண்டுமானாலும் முயன்றால் செய்யலாம், என்பதைக் காட்டுமொரு படம் இது என்பதற்கு படத்தில் வரும் ஒரு லாரி ஓட்டுனரிலிருந்து, அரங்கம் அதிர்ந்து போக ஆடும் ஆரம்பம் முதல் இறுதி வரையிலான ஆட்டங்களே சாட்சி. வெறும் உணர்ச்சி ததும்பும் ஆட்டங்கள் தான் என்றாலும், அந்நிலையில் தானிருந்தாலும் அப்படித் தான் ஆடியிருப்போமோ என்று ஒவ்வொரு இடத்தையும் நம்பவைக்கிறது படம்.

ஐயனஸ், விஷால், ஆர்யா எனும் கதாநாயக வரிசையில் சிறிய பையனாக வரும் இன்னொரு பாத்திரமும் அவனின் நடிப்பும், காட்சிகளை மேலும் நகைக்கத் தக்க உணர்வுகளை கூட்டவும் கதையினை அழுத்தமாக நகர்த்திச் செல்லவும் உதவுகிறது என்பதில் சந்தேகமில்லை என்றாலும் அந்த சிறுவனின் நடிப்பும் பாராட்டத் தக்கது.

ஆக, காட்டு இலாக்கா அதிகாரிகளிலிருந்து காவல் துறை அதிகாரியாக நடித்தவர் முதல் காவலாளிகளாக நடித்த கதானாயகியோடு வரும் பத்மாக்கா வரை மிகச் சிறந்த ஆட்கள் தேர்வு இப்படத்தில் கையாளப் பட்டுள்ளது. அம்பிகா மட்டுமே கொஞ்சம் வசதியாக தெரிந்தாலும், நடிப்பினால் அந்த எண்ணமும் மாறியே விடுகிறது.

ஓரிடத்தில்; ஆர்யாவிடம் அந்த காவல்துறை அதிகாரி வந்து உன் பேரென்ன என்று கேட்க, என் பெயர் “கும்புடுறேங்க சாமி” என்று ஆர்யா சொல்ல, அவர் வாய் பிளந்து அதென்னயா பெயரென்று பார்க்கையில், ‘வேறென்னங்க நாங்களும் இன்னும் எத்தனை காலத்திற்குத் தான் உங்களையே பார்த்து ‘கும்பிட்றேன் சாமி கும்பிட்றேன் சாமின்னு சொல்றது’ என்று கேட்குமிடத்தில் ‘மனிதர்களின் வஞ்சகத்தால் பின்னுக்குத் தள்ளப் பட்ட ஒருசார் மக்களின் வலியை, ஒரு தலைமுறையையே தலைதட்டி வைத்து விட்டதன் கொடுமையினை  நாம் உணர்ந்து, புரிந்தேத் தீரவேண்டிய கட்டாயம் அங்கே வலுக கொள்கிறது.

இப்படி, படத்தின் நெடுகிலும் யதார்த்தம் எனும் ஒற்றை சிறகே விருந்துப் பறக்க, பெருங்குறையாய் அழுத்திச் சொல்ல அத்தனை ஒன்றும் இப்படத்தில் இல்லை என்றாலும், விஜையும் அஜித்தும் ஆர்யாவும் பூர்யாவும் விசால் நடிப்புக் கண்டால் புர்ரென்று போவார்கள்’ எனும் வசனத்தை மட்டும் தவிர்த்திருக்கலாம். இது நல்லதையும் கெட்டதையும் நேராக கொண்டு சென்று காட்டும் இடம் என்பதால் இங்கே யாரொருவரையும் மட்டப் படுத்தாமல் அல்லது வேறுமாதிரி மாற்றியேனும் காட்டி யிருக்கலாம்.

படத்தில் இன்னொரு இடை சொருகல் அல்லது திணிப்பு எப்படி வேண்டுமாயினும் எடுத்துக் கொள்ளலாம், ஆனால், படத்தின் கதாப் பாத்திரத்தை மிகை படுத்தி, பார்ப்பவரின் உணர்வுகளை சற்று நேரத்திற்கு உறைய வைத்து, பின் மயிர்க்கால் கூச்செரியச் செய்து, உடல் சிலிர்த்துப் போகும் காட்சியும், இசையால் நம்மைக் கட்டிப் போட்டுவிடும் ஓரிடமும் எனில்,  படத்தின் வெளிச்சம் மிக்கதொரு காட்சி எனில் அது சூர்யா வந்துபோகுமிடம்.

முகபாவத்தில், நடிப்பில், திறனில், மனதில், குணத்தில் என எதிலும் குறை அற்றவனாக தன்னை நிரூபித்துக் காட்டியிருக்கும் ஒரு வெற்றியாளன் சூர்யா என்பதே நாம் அவர் மேல் கொண்டிருக்கும் அன்பிற்கும் மதிப்பிற்கும் காரணம் என்பதை உறுதிபடுத்துமொரு காட்சி அக்காட்சி. சூர்யாவின் மனதிற்கானத் தோற்றத்தையே அவர் அங்கே வருகையில் அவர் முகம் காட்டுகிறதென்பதை யாரும் மறுப்பதற்கில்லை.

அதிலும் குறிப்பாக உலகம் அறிந்துக் கொள்ள வேண்டிய அவரின், அல்லது அவர் தந்தை சிவக்குமாருடைய வழிநடத்தலின், அல்லது அவருடைய குடும்பத்தின் சிறப்பு செய்திட்ட இன்னொரு சாதனையின் நேரடி உதாரணம் ஒன்று இருக்குமாயின், அது தான் ‘அகரம் பவுண்டேசன்’.

இன்று  தமிழர்கள் விரிந்து வாழும் உலகில் எந்தளவிற்கு அகரம் பவுண்டேசன்’ பற்றி தெரியப் பட்டிருக்கும் என்பது கேள்விக்குறியக உள்ளபட்சத்தில்; நம் தமிழர்களின் இமை கிழித்து தான் சொல்ல வந்ததை உணர்வுப் பூர்வமாக சொல்லுமொரு ஊடகம் சினிமா என்பதால் அதன் வழியே அகரத்தை உலகின் பார்வைக்கு திறந்து வைக்கவும், அகரம் குறித்த அனைவரின் சுய விமர்சனத்திற்கு சூர்யாவின் பொதுவான பதிலை சூர்யா மூலமே உலக மக்களுக்கு சொல்லவும் இக்காட்சி பாலாவால் சேர்க்கப் பட்டிருக்கிறது. இருந்தும், சூர்யா இங்கே நடிக்காமல் தன் நேர்மையான உணர்வுகளையே இங்கு படப் பிடிப்பிற்கென காட்டிச் சென்றிருக்கிறார் என்பது நாம் அறியத் தக்க உண்மை.

ஆக, இப்படி, காலங் காலமாக நிறைய திரைப்படங்கள் வந்து கொண்டிருந்தாலும், ஒவ்வொரு படமும் நமக்கு ஒவ்வொரு நியாயத்தை சொல்லிச் சென்றாலும், இத்  திரைப்படம்; இப்படியொரு வெளியில் காட்டப் படாத மனிதர்களின் வாழ்க்கையை, எந்த ஒரு ஆடம்பரமும் ஆர்பாட்டக் கலப்புமின்றி பதிவு செய்து வைத்திருக்கிறது.

பொதுவாக, இப்படத்தை பொருத்தவரை, யார் ஒருவரை மெச்சினாலும் அதிகமாகவே மெச்சல் வேண்டும், அல்லது பாரபட்சமின்றி எல்லோரையுமே பாராட்டவேண்டும். சண்டை காட்சி, ஒளிப்பதிவு, ஒப்பனை, கட்டிடக் கலை, காட்சிப் பதிவிற்குத் தக்க இடத் தேர்வு என அனைத்துமே சிறப்பு.

அதிலும், குறிப்பாக விருது தரும் மையம் இவ்வருடம் இப்படத்தைப் பார்த்துவிட்டு யாருக்கு விருதைத் தருவது என்று குழம்பிப் போனாலும் போகலாம். இல்லை ஒருவேளை அத்தனையையும் சேர்த்து விஷாலுக்கே கொடுத்தாலும் கொடுக்கலாம். ஒருவேளை விஷாலுக்கும் இயக்குனருக்கும் இவ்வருட விருது மறுக்கப் படுமெனில் அதை அத்தனை பெரிய விருதாக அல்லது அத்தனைப் பெரிய விடயமாக நாம் கருத வேண்டியதேயில்லை. காரணம், உழைப்பிற்கு கிடைத்திடாத மதிப்பு; மதிப்பேயில்லை!!
———————————————————————————————————-
வித்யாசாகர்

Posted in திரை மொழி | Tagged , , , , , , , , , , , , , , | 12 பின்னூட்டங்கள்

ஒரு தோசையும்; தொட்டுக்க நாலு மாத்திரையும்.. (சிறுகதை)

குடும்பம் ஒரு கோவில் என்பார்கள்; அது இந்த குடும்பத்திற்கே பொருந்தும். மூன்று அண்ணன் தம்பிகளும், அவர்களின் மனைவியர் மற்றும் குழந்தைகளும் அவர்களுக்கு நடுவே ஒரு இதய நோயாளியான தந்தையுமென திறக்கிறது இக்கதைக்கான கதவுகள்.

“ஐயோ… தாத்தா!!!!!!!!!!!!!!!!”

”அம்மா தாத்தா குளிக்கிற அறை கதாவான்டையே விழுந்துட்டாரு”

“என்னடி சொல்ற???!!!!”

“உண்மையா தாம்மா, வந்து பாரேன்…”

“ஐயோ ஆமா…, என்னங்க அப்பா மயக்கம் போட்டு விழுந்துட்டாருங்க”

“ஏம்மா இப்படி அலர்ற, ஐயோ அப்பாவுக்கு என்னாச்சு?!!”

“தெரிலிங்க, திடீர்னு மயங்கி விழுந்துட்டாருங்க..”

“குட்டி நீ போ.. போய்; வெளியே சித்தப்பா பேசின்ருக்கான் அவனை கூட்டியா, ராஜா எங்கமா..”

“சித்தப்பா தெரிலையேப்பா” அந்த குழந்தை சொல்லிவிட்டு வெளியே ஓடிபோய் மூன்றாவது கடைசி தம்பியான சுகுமாரிடம் சொல்ல, அவன் அப்பா மயக்கம் என்றதும் வீட்டிற்குள் ஓடி வந்ததான், வந்து அப்பாவை தூக்கி மடிமேல் கிடத்தி கன்னம் தட்டி –

“என்னண்ணே ஆச்சு, அப்பையே சொன்னேன்; அப்பா சொல்றதை கேட்டா தானே”

“ஏய் நீ சும்மா பதறாத, ராஜா எங்க, போய் கூட்டியா”

“சின்னன்னே அப்பவே மேலே போய் படுத்துடுச்சிண்ணே”

“சரி நீ ஒன்னு செய், நீ போய் ஆனந்த் மருத்துவமணைல டாக்டர் போய்ட போறாங்க, கொஞ்சம் சொல்லிவை, அப்பாவ நாங்க பின்னாலேயே கூட்டியாறோம்”

“போன் செய்து சொன்னா…”

“சொல்றதை  செய்டா, அதலாம் மரியாதையா இருக்காது, நமக்கு மட்டுமா அவர் மருத்துவமணை நடத்துறாரு, நேரில் போய் சொன்னா கொஞ்சம் மதிப்பாங்கள்ல”

“சரிண்ணே”

“அதில்லாம அப்பா புது நோயாளி இல்லை சுகு, இப்போ இந்த நேரத்திற்கு ஆவடி போயி தாமதப் படுத்துவதும் அத்தனை சரியில்லை, இங்க கூட்டிப் போகனும்னா அவர் பெரிய டாக்டர் இருந்தா நல்லது, அதான் நீ கொஞ்சம்  நேர்ல போய் பார்த்துச் சொல்”

அவன் அதற்கும் தலையாட்டிவிட்டு ஓடிபோய் வெளியிலிருந்த பைக்கில் பறந்தான்.

“ஏம்மா ரம்யா நீ மேல போய் ராஜாவ எழுப்பி கூட்டியா, அங்கேயே ஏதும் சொல்லாதே தூக்க கலக்கத்துல அதிர்சியாவப் போறான்”

“சரி மாமா” என்று சொல்லிவிட்டு சுகுமாரின் மனைவி வேகமாக ராஜாவை கூப்பிட படியேறி மேலே ஓடினாள். சுதர்மன் உள்ளே எட்டி மணி பார்த்தார் மணி ஒன்பது.

“பிரேமா நீ கார் ஓட்டுவ-ல்ல”

“ஒட்டுவேங்க”

“போய் சாவி எடுத்து வா வண்டிய வெளியே எடு..”

அதற்குள் ராஜா இறங்கி ஓடி வந்தான்.

“அண்ணே அண்ணே என்னண்ணே ஆச்சு அப்பாவுக்கு, அப்பா அப்பா” ராஜா அப்பாவை தூக்கி மடியில் கிடத்திக் கொண்டு கதறினான்.

“டேய்.. டேய்.. புடி அப்படியே அவரை தூக்கு, ஒன்னுல்ல இந்த லூசு பாயசம் கேட்டாருன்னு கொடுத்துச்சாம்”

“நான், ஒன்னும் இல்லீங்க, அப்பா தான் கொஞ்சம் கொடுமான்னு”

“போடி.. போய் வண்டி எடு, ஏம்மா வீட்ட சாத்திக்கோ, குழந்தைங்க வெளியே போய்டாம”

“நானும் வறேன் மாமா, “

“குழந்தைங்களை எங்க, கார் டிக்கியில போட்டுடலாமா?”

“சரி இருக்கேன் மாமா”

“சின்ன பாப்பா அழுதுச்சு ன்னா கொஞ்சம் பால் காய்ச்சி கொடு ரம்யா” பிரேமா கத்திக் கொண்டே ஓடி பொய் வண்டி எடுத்தாள். சுகுமார் பைக் எடுத்துக் கொண்டு மருத்துவமனை நோக்கி ஓடினான்.

மூத்தவன் சுதர்மனும் அடுத்தவன் ராஜாவும் அப்பாவை தூக்கி வண்டியில் வைத்துவிட்டு ஏறி அமர, ராஜாவின் மனைவி பார்வதி அவசரமாக ஓடிவந்து அப்பாவின் முந்தைய மருத்துவ விவரங்களை பிரேமாவிடம் கொடுக்க, பிரேமா அவசரமாக அதை வாங்கி சுதர்மனிடம் கொடுத்துவிட்டு வண்டியை திருப்பி நிறுத்த –

சுதர்மன் வெளியே எட்டிப் பார்த்து, ”ஏம்மா வீட்டுக்கு போன் செய்து உங்க அப்பா இருந்தால் அவர்கிட்ட சொல்லி ஆனந்த் மருத்துவமனைக்கு போன் செய்து ஒரு வார்த்தை சொல்ல சொல்லுமா.

“சொல்லிடறே(ன்) மாமா, அப்பா கண்ணையே திறக்கலையே… மாமா”

“அதலாம் நம்மப்பாவுக்கு ஒன்னும் ஆகாதும்மா”

“ஆகாது மாமா…, ஆனா”

“சீக்கிரம் வண்டிய எடு பிரேமா”

குறுக்கு வழியே புகுந்து ஆனந்த் மருத்துவமனை வந்தார்கள், அப்பா வாயை ஆ’ வென்று பிளந்துக் கொண்டு கண்மூடி படுத்தவாறு லேசாக கடினப் பட்டு இழுத்து இழுத்து மூச்சை விட்டுக்கொண்டிருந்தார். அவரின் அவஸ்தை நிறைந்த முகம் பார்க்க பார்க்க சுதர்மனுக்கும் ராஜாவுக்கும் கண்கள் தன்னையறியாமல் கலங்கியது.

 சற்று நேரத்திற்குள் மருத்துவமனை வந்து விட, வண்டி நின்று இறங்குவதற்குள், சுகுமார் ஓடி வந்தான். சுதர்மனும் ராஜாவும் அப்பாவை தூக்கப் போக “நீ விடுண்ணே, நீ போய் மருத்துவரை பாரு” என்று சொல்லிவிட்டு அவன் தூக்கிக் கொண்டான். சுதர்மன் உள்ளே போவதற்குள் மருத்துவரே எழுந்து வெளியே வந்தார்.

 “டாக்டர் அப்பா திடீர்னு..”

 “சுதர்மன் நீங்க தானே?”

“ஆமா டாக்டர்”

 “இதுக்கு முன்னாடி இப்படி வந்திருக்கா?”

 “இருக்குங்க”

 “இதற்கு முன் எங்க பார்த்தீங்க”

“ஆவடில குடும்ப மருத்துவர் ஒருத்தர் இருக்காரு அவர்தான்..”

 “ஓ… பரவாயில்லை பரவாயில்லை”

 மருத்துவர் அப்பாவின் கண்களை திறந்து பார்த்தார். மார்பில் ஸ்டெதாஸ்கோப் வைத்துப் சோதித்துவிட்டு “ராஜகுரு போன் பண்ணாரு, ஒன்னும் ஆவாது பதட்டப் படாதீங்க, சிஸ்டர் வார்ட் நர்ஸ் கூப்பிடுங்க, நேரா மேல கொண்டுப் போகச் சொல்லுங்க “

 ஒரு பத்து நிமிடம் கழித்து. அப்பாவை கொண்டு போய் மேலே படுக்க வைத்து சுகர் பிரெசர் எல்லாம் பரிசோதித்து விட்டு, ஒரு ஊசி போட, சற்று நேரத்திற்கெல்லாம் அப்பா முனு முணுத்துக் கொண்டே கண்ணைத் திறந்தார்.

பிள்ளைகள் மாறி மாறி அப்பாவை கட்டிப் பிடித்துக் கொண்டனர்.

 “என்னாச்சு டாக்டர் அப்பாவுக்கு, பயப்பட ஒண்ணுமில்லையே?”

 “சுகர் பேசென்ட் தானே?”

 “ஆமா டாக்டர்”

 “மயக்கம் வந்தா மிட்டாய் ஏதேனும் கொடுத்திருக்கலாமே”

 “பாயாசம் சாப்பிட்டு தான் டாக்டர் மயக்கமே வந்திருக்கு”

 “நல்லா விசாரிச்சி பாருங்க முழுசா அவர் அதை குடித்திருக்க மாட்டார், ஏன்னா அவர் லோ பிரெசரால தான் மயங்கி இருக்கார், அதில்லாம சைலன்ட் அட்டாக் வேற வந்திருக்கு”

“சைலன்ட்……..???????????”

“ம்ம், எப்படின்னு சொல்றேன், இருந்தாலும் அடுத்தமுறை இப்படி வந்தா ரொம்ப கவனமா இருக்கணும்”

“கண்டிப்பா டாக்டர்”

“முதல்ல நீங்க ஆளுக்காளு பதட்டப்பட உணர்ச்சிவயப் பட்டதுல அவருக்கு பிரெசர் இன்னும் ஏறிட்டிருக்கு. அதிக பிரெசரால இதய அழுத்தம் வந்திருக்கு. பொதுவா டையாபட்டீஸ் உள்ள நோயாளிக்கு பிரேசர் கூடினா அது விரைவா கிட்னியை பாதிக்கும், இதயத்தையும் பாதிக்கும்”

 “இல்லை டாக்டர், அப்பாக்கு முன்பு ஐ சுகர் தான் இருந்தது”

 “நீங்க சொல்றது சரி தான் சுதர்மன், ஆனா டயபட்டீஸ் நோயாளிக்கு சில நேரம் இப்படி சரியான ஆகாரம் இல்லாமல், மாத்திரை மட்டும் போட்டு, கூடவே தன் சக்திக்கு மீறின வேறு ஏதேனும் வேலைகளில் ஈடுபட்டார்களென்றால், அதி வேகமான எனர்ஜி லாசால சிலநேரம் சுகர் குறையவும் வாய்ப்புமுண்டு. அதனால தான் டயபட்டீஸ் உள்ளவங்க எப்போ மயங்கினாலும் ஒரு மிட்டாயோ அல்லது கொஞ்சம் சர்க்கரைத் தண்ணியோ கொடுக்கனும்னு நாங்க ரெகெமன்(ட்) பண்றோம்.

 அப்படி கொடுப்பதால, ஒருவேளை அவுங்களுக்கு ஐ சுகர் இருந்தாலும் இனிப்பு சாப்பிடுவதால சுகர் கொஞ்சம் கூடும் அதனால் உடம்புக்கு கெடுதல் நேரும்; ஆனா உயிருக்கு ஆபத்து இருக்காது. ஆனா லோ சுகர் இருந்து காலம் கடத்தினீங்கனா அது அவருடைய உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும். உண்மையில் அப்பா இன்று பிழைத்தது தெய்வாதீனம் தான்”

“அச்சச்சோ!!!” பிரேமா வாயில் கைவைத்துக் கொண்டாள்.

“அதே மாதிரி பெரியவங்க ன்னாலே கூடுதல் கவனமும் வேணும். இதுபோல சந்தர்ப்பங்கள்ல அவர்களை அதிகம் உணர்ச்சிவசப் படுத்தவோ, தூக்கி இறக்கும் போது அதிகம் அழுத்தவோ வேகாமா தூக்கவோ இறக்கவோ கூடாது. அதுலையும் அப்பாவோட, பழைய விவரங்கள்லாம் பார்த்தபிறகு தான் அவருக்கு அதிக கொலஸ்ட்ரால் இருப்பதும், இதய நோயாளி என்றும் தெரிய வந்தது.

இது மிக ஆபத்தான ஒரு கட்டம். டயாபட்டீஸ் ஒண்ணு இருந்தாலே பத்து நோய் இருப்பதற்கு சமம். அதனால், கண்ணு கிட்னி இதயம் மூளை நரம்புகள் தோள் என எல்லாமே ‘கால்நகத்திலிருந்து தலைமுடிவரை ஒவ்வொன்னா பாதிக்கும், அதில்லாம, டயபட்டீஸ் உள்ளவங்களுக்கு கொலஸ்ட்ராலும் சேர்ந்திருந்தா அது இன்னும் ஆபத்து”

“என்னாகும் டாக்டர்?”

“மூளையைத் தாக்கி, நரம்புகளை தாக்கி, கை கால்களை செயலிழக்கச் செய்து தற்காலிக அடைப்பு அல்லது நிரந்தர அடைப்பினை உண்டாக்கி உடலின் பெரும்பகுதியை செயலிழக்கச் செய்து வாழ்க்கையையே முடக்கி விடுகிறது இந்த சர்க்கரை வியாதி. அதில்லாம, எல்.டி.எல் எனும் கெட்ட கொழுப்பும் சர்க்கரையும் கூடுதல் உள்ளவர்களுக்கு எந்த நேரம் வேணும்னாலும் மாரடைப்பு வரும் வாய்ப்பு அதிகமாக இருக்கு. சிலநேரம் இவர்களுக்கு அட்டாக் வந்தா, அது அவுங்களுக்கே சரியா விளங்குவது கூட இல்லை, சிரிச்சுக்குனே இருப்பாங்க, நல்லாதான் பேசுவாங்க ஆனா திடீர்னு ரத்த குழாய்கள் இரண்டு மூன்று இடங்களில் அல்லது சிலவேளை பல இடங்களில் கூட அடைப்பேற்பட்டு இதயமே நின்றுவிடும்.  இதை சைலன்ட் அட்டாக்னு சொல்லுவோம்”

“ரொம்ப நல்லதா போச்சி மருத்துவரய்யா அது ரொம்ப நல்ல சாவுல்ல, சிரிச்சிக்குனே போய்டலாம்” அப்பா அசைந்து கண்திறந்து படுக்கை பிடித்தபடி பேசிக் கொண்டே எழுந்தார்.

“அப்பா!!!” என்று பதறிக் கொண்டு மூன்று மகன்களும் பெரிய மருமகளும் ஓடிப் போய் அவருக்கருகில் அமர, மருத்துவர் அவரை எழுந்திருக்க மறுத்துவிட்டு, அவரை படுக்க வைத்து ஸ்டெதாஸ்கோப் வைத்து மார்பில் முதுகில் எல்லாம் சோதித்துப் பார்த்தார். பார்த்துவிட்டு அப்பாவை நோக்கி –

“ஏன் துரை ஐயா வயசான காலத்துல இப்படி கஷ்டப் படுத்துறீங்க பிள்ளைகள?”

“அய்யய்யோ எங்களுக்கு அப்படியெல்லாம் ஒரு கஷ்டமும் இல்ல டாக்டர்”

“நீங்க சும்மா இருங்க சுதர்மன், ம்… நீங்க சொல்லுங்க, வாக்கிங் ஏதும் போறதில்லையா? காலாற ரெண்டு வேலையும் கொஞ்சம் நடக்கறது தானே வீட்டுக்கும் தெருவுக்கும். பொதுவா இதுபோன்ற நோயாளிகளுக்கு நடக்கறதுதான் முதல் மருந்து, அதுக்கப்புறம் தான் மாத்திரையெல்லாம்”

“இனிமே நடந்து என்னங்க செய்ய, சீக்கிரம் போய் சேர்ந்தா பிள்ளைங்களாச்சும் நிம்மதியா இருக்குங்க”

“அப்பா!!!!!”

“நீங்க அதலாம் சொல்லாதிங்க துரைசாமி. அவுங்க எவ்வளோ பாசமா இருக்காங்க நீங்க கொஞ்சம் கவனமா இருக்க வேணாம்?”

“என்ன டாக்டர், நானும் இன்னும் எவ்வளவு வருசத்துக்கு தான் இப்படி உப்பில்லாம இனிப்பில்லாம புளிப்பில்லாம சாப்பிட்டு உயிர் வாழறது. இன்னைக்கு கூட பெரியவ கொஞ்சம் பாயசம் ஆசையா கேட்டேனேன்னு கொடுத்தா, அதையும் பசங்க பார்த்தா வருத்தப் படுவாங்களேன்னு ஒரு மினர் குடிச்சிட்டு வெச்சிட்டேன். நாக்கு செத்து போச்சி டாக்டர், எது சாப்பிடவும் பிடிக்கலை” அப்பாவை அப்படிச் சொல்ல சுதர்மனுக்கு கண்ணே கலங்கியது. எல்லோருமே வருந்தினார்கள். மருத்துவர் அசரவில்லை –

“மருந்து சாப்பிட மட்டும் இனிக்குதாக்கும், அதலாம் இப்போ சொல்லி பிரயோஜனமில்லை. வயசுல ஒழுங்க இருக்கணும், உணவுன்னா எப்பவுமே ஒரு அளவிருக்கணும், கட்டுப்பாடு வேணும். கிடைக்குதேன்னு எதை வேண்டுமானாலும் வைத்துல போடக் கூடாது. எண்ணெய் பலகாரங்கள் உண்பதில் இன்னுமதிக கவனம் வேண்டும். தவிர குடி புகைன்னெல்லாம் பழக்கமிருந்தா கடைசியில் இதுதான் கதி.

ஆனா, எல்லாத்தையும்விட இன்னைக்கு நடந்தது தாங்க அதிசயம்” சொல்லிவிட்டு மருத்துவர் மூன்று மகன்களையும் திரும்ப திரும்ப பார்த்தார்.

பார்த்துவிட்டு “அதுவரையும் அந்த ஒரு மினர் பாயாசத்தை கொடுத்து எப்படியோ இவர் உயிரை காப்பாத்துனீங்க, இல்லைன்னா இவ்வளவு நேரமெல்லாம் கஷ்டம்” மருத்துவர் பேசி நிறுத்த சுதர்மன் திரும்பி பிரேமாவை நன்றியுடன் பார்த்தார்.

“நீங்க ஒண்ணு பண்ணுங்க வாரத்துக்கு ஒரு முறை இந்த சுகர் பார்க்குற மெசின் வாங்கி வைத்து வீட்லையாவது சுகர் செக் பண்ணி பாருங்க. இயன்றளவு டயாபட்டீச முதல்ல குறைங்க. இப்பல்லாம் முப்பது வயது துவங்கிவிட்டாலே சர்க்கரை ப்ரெஷர் கொலஸ்ட்ரால் என எல்லாத்தையும் ஒருமுறை பரிசோதித்துக் கொள்வது எல்லோருக்குமே நல்லது”

“நல்லது டாக்டர்.. அப்படியே செய்றோம். என்று சொல்ல மருத்துவர் வேறு சில மாத்திரைகளையும் எழுதிக் கொடுத்தார்.

வாங்கிக் கொண்டு, எல்லோரும் ஏறி வண்டியில் அமர, சுகுமார் ஸ்கூட்டரில் அவர்களுக்கு முன்பாகப் பறந்தான். அப்பா சுதர்மனின் மடியில் சாய்ந்தவாறு படுத்துக் கொள்ள, பிரேமா வண்டி எடுத்தாள் கொஞ்ச தூரம் போனதும் நிறுத்தி –

“என்னங்க வண்டிய நீங்க ஓட்டுங்க, நான் பார்வதிக்கும் ரம்யாக்கும் பேசி விவரம் சொல்லிட்றேன்'”

“நீங்க இருங்கண்ணே நான் ஓட்றேன், இல்லைன்னா அண்ணி போன் கொடுங்க நான் அவுங்களுக்கு சொல்லிட்றேன், நீங்க ஓட்டுங்க”

“ஏண்டா உன் போனெங்கே”

“அவசரத்துல வந்துட்டன்ண்ணே, மேல் வீட்ல இருக்கும்”

“சரி இந்தா இதுல பண்ணு”

அவன் அலைபேசியை வாங்கி வீட்டில் பார்வதிக்கும் ரம்யாவிற்கும் விவரம் சொல்லிவிட்டு சுதர்மனிடம் தர, அப்பா அயர்ந்து படுத்திருந்தார், எல்லோரும் தனக்குத் தானே ஏதேதோ யோசித்தவாறு அமைதியாக இருந்தனர். சற்று நேரத்திற்கெல்லாம் அப்பா லேசாக வாயைத் திறந்து பேசத் துவங்கினார்

“டாக்டர் சொன்னதும் தவறில்லை சுதர்மா”

“ஏன்பா???!!!”

“நான் ஆரம்பத்துல எல்லாம் ஒழுங்காவே இல்லை தானே. குடிப்பேன், பாக்கு போடுவேன், நேரத்துக்கு சாப்பிட மாட்டேன், புகை பிடிப்பேன், சரியா தூங்க மாட்டேன்”

“நாங்க அப்படி பார்த்ததே இல்லையேப்பா”

“ஒரு கட்டத்துல தவறுன்னு தெரிய மாத்திக்கிட்டேன்பா. இன்னும் சொல்லப் போனா, உங்கம்மா வந்தபிறகு தான் என் வாழ்க்கையின் நிறைய விஷயங்கள் மாறுச்சி., மகராசி அவளும் போய்ட்டா. நீங்க எல்லாம் வயசுல ஒழுக்கமா இருக்கீங்கப்பா, உங்களுக்கெல்லாம் பிற்காலத்துல ஒரு நோய் நொடியும் இருக்காது”

“உங்களுக்கென்னப்பா குறை நாங்கலாம் இருக்கோமே”

“நீங்கல்லாம் இருந்தாலும் எனக்கு உப்பில்லா சோறு தானே ராஜா?”

“இல்லைப்பா டாக்டர் கோதுமைல வேணும்னா எண்ணெய் ஊத்தாம தோசை எல்லாம் சுட்டு தரலாம்னு சொன்னாருப்பா” பிரேமா சொல்ல சிரித்துக் கொண்டார் துரை சாமி. “என்ன, ஒரு தோசையும் தொட்டுக்க நாலு மாத்திரையும்’ கொடுக்க சொன்னாரா?”

அவர் சொல்லிவிட்டு சிரிக்க, யாருக்கும் சிரிக்கத் தோணவில்லை. அப்பாவை நினைத்து மனதால் வருந்தின அந்த பிள்ளைகள். தன்னால் முடிந்தால் கூட நோயை தான் ஏற்றுக் கொண்டு அப்பாவை நோகாமல் பார்த்துக் கொண்டிருக்கும். முடியாத மனங்கள் கண்ணீரால் நனைந்தன. வாகனம் விரைந்து வீட்டை நோக்கிப் போனது. ராஜா அப்பாவின் ஒரு கையை பாசமாக எடுத்து தன் மடியில் வைத்து அழுந்தப் பிடித்துக் கொண்டான்.

அப்பா அவனையே பார்த்துக் கொண்டு வந்தார். இருட்டை கிழித்துக் கொண்டு தெருவில் அடித்த வண்டியின் வெளிச்சத்தை கடந்து கடந்து வாகனம் வீடு நோக்கிப் போக, இரவு நேரத்தின் நிலா மேலிருந்து ‘தாய் தந்தையை கவனித்திடாத பிள்ளைகளுக்கு உதாரணமாய் இவர்களை காட்ட தன் வெளிச்சத்தில் குறித்துக் கொண்டது.

என்றாலும், உடம்பு சரி எனும் வரை தான் மனிதனால் எல்லாம் சாதனையயையுமே செய்ய இயலுகிறது. உடம்பு தோற்கின் மனதும் தோற்கிறது. இதை நாம் நன்றாக இருக்கும் போதே புரிந்துக் கொள்ள வேண்டும்.

புகைப் பழக்கம், குடி, வேறு எந்த போதையாயினும் சரி, உழைப்பின்றி உண்ணும் உணவாயினும் சரி பின்னாளில் வருத்தத்தையே தரும் என்பதை எல்லோரும் நினைவில் கொள்ள வேண்டும்.

அளவோடும் நேரத்தொடும் போதுமான உணவுகளை உண்டு, நேரத்திற்கு தூங்கவும் இயலாதோருக்கு ஒரு தோசையோ ரொட்டியோ உடன் நாலைந்து மாத்திரையோ நிச்சயம் உண்டென்று எண்ணிக் கொண்டே கண்களை மூடினார் துரைசாமி.

திடீரென மார்பு மீண்டும் அடைத்தது அவருக்கு. மாத்திரை வாங்கி போடவோ வெளியில் சொல்லவோ முயற்சிக்கிறார் இயலவில்லை. மேலும் தீவிரமாய் நெஞ்சை இழுத்துப் பிடிக்கிறது. ஓரிரு நொடியில் முகம் புடைத்து வியர்க்கிறது. முகத்தை துடைத்துக் கொண்டு கவிழ்ந்தார் போல் படுத்துக் கொண்டார். கைகால்களை எட்டியுதைத்து படபடவென அடித்துக் கொள்ளத் தோன்றுகிறது; இப்படிப் பட்ட செல்வங்களை மேலும் மேலும் தொந்தரவு செய்வானேன், என்றாயினும் போகும் உயிர்தானே போகட்டுமென்று எண்ணிக் கொள்கிறார்.

மார்பு அடைக்க அடைக்க கைகால்கள் விரைக்கினறன. கால்களை இறுக்கி இடுக்கிக் கொள்கிறார். உள்ளூர நாக்கை கடித்துக் கொள்கிறார். எல்லாம் அவஸ்தையையும் தன் பிள்ளைகளுக்கு தெரியவேண்டாமேயென்று தனக்குள்ளேயே தாங்கிக் கொள்கிறது அந்த ஜீவன். அவர்கள் அப்பா முடியமால் கண்ணயர்ந்துப் படுத்திருப்பதாய் மட்டுமே அறிகிறார்கள்.

அவரின் உதடுமட்டும்  சுதர்மனை எண்ணி முணுமுணுத்தன. கையினால் ராஜாவை அழுத்தமாகப் பற்றிப் பிடித்துக் கொண்டார். பேரப் பிள்ளைகள் பார்வதி ரம்யா எல்லோரையும் நினைத்துக் கொண்டார். மேலும் தீவிரமாக அடைக்க உடல் முழுக்கப் பரவிய மரணவலியால் துடிதுடிக்கத் தோன்றியது. அடக்கிக் கொண்டு லேசாக கண்திறந்து பிரேமாவை பார்த்துக் கொண்டார்.

சுகுமாருக்கு ஒரு குழந்தை பிறந்து பார்க்கவே இல்லையே என்று எண்ணுகையில் கண்ணீரின் ஒரு துளி கன்னத்தில் வழிந்தது. மனைவியையும் பெற்றோரையும் நன்றியோடு நினைத்துக் கொண்டார். கண்மூடிக் கொண்டே இன்னொரு கையினால் எட்டி சுதர்மனைப் பிடித்துக் கொள்ள; சுதர்மன் அவரை சற்று தூக்கி சரியாக படுக்கவைக்க ‘உயிர் சடாரெனப் பிரிந்து அவருக்குத் தெரியாமல் நின்றுவிட்ட அவரின் இதயத்தின் மீதேறி வெளியேப் போனது.

அது தெரியாமல் எல்லோரும் அப்பாவை நினைத்துக் கொண்டே வீடு போயினர். வீடு அழுகையில் நிறையும் முன் குழந்தைகளின் புன்னகையில் சற்று சிரித்துக் கொண்டது!!

——————–* முற்றும் * ——————–

_வித்யாசாகர்

Posted in சிறுகதை | Tagged , , , , , , , , , , , , , , , | 18 பின்னூட்டங்கள்

உனக்காய் சேர்த்துவைத்த வார்த்தைகள் அத்தனையும்!!

மணமகன் : தா. அருள்       மணமகள்: ஜெ. சுஜிதா         

மணநாள்: 05.06.2011

வாழ்த்துப் பா….……………………………….

என் உயிருக்குயிராய் இருந்தவளை
உயிராகவே சுமந்தவளே;
என் தங்கை இறந்தா ளென
இன்னொருத்தியாய் வந்தவளே;

என் தாய்; உனக்காக சுமக்காத பத்து மாதத்தை
எனக்காக மனதில் சுமந்தவளே;
சுஜிமா’ என்று நினைத்ததும் – அண்ணாயென
ஓடிவந்து நிற்கும் – அன்பின் சிகரமே;

ஒருநாள் விட்டுச் செல்வாயென்று தெரிந்தும்
என் இருப்பின் – எல்லைவரை
இதயத்தில் நிறைந்தவளே – என்னன்பு
உடன்பிறப்பே; இனியவளே;

நான் தூரநின்று தூர நின்றே
தூக்கி வளர்த்த – உயிர் சொந்தமே
என் சிரிப்பிற்குக் காத்திருக்கும்
இன்னொரு இனிய தோழியே; ஆருயிர் ஆனவளே;

உலகின் போதனைகளுக்கு காது கொடுக்காத
என் பாசப் பிணைப்பே –
இன்று எதிரே கண்டாலும்; அண்ணாயென வந்தெனை
கட்டிக் கொள்ளும் குழந்தை மனமே;

தொப்புள்கொடி உறவு பூண்டு
பூர்வஜென்ம மீதம் போல் – என்
வாழும் நாட்களின் வாசனையாய்
இதய கமலத்தில் வாழும் அன்புறவே –

இதோ; உனக்காய் இத்தனை வருடம் சேர்த்துவைத்த
சொற்களை எல்லாம் – சேமித்து
வாழ்த்து மலர்களாய் தூவுகிறேன் – நீ
வாழிய பல்லாண்டு; வாழ்வின் முழு சிறப்போடு!!

பேரன்புடன்.. பெருமகிழ்வுடன்…

ஈருடலாய் இன்று சேரும் ஓருயிர் சுஜிமாவிற்கும் திரு. அருளிற்கும்
இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்களும் இறை ஆசியும்.. உரித்தாகட்டும்!!

வித்யாசாகர்

Posted in வாழ்த்துக்கள்! | Tagged , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

நீடுவாழ்வாய்; உன் பேரும் வாழும்!!

மணமகன் : சா. சுரேந்தர் மணமகள்: க.ப்ரீத்தி மணநாள்: 03.06.2011

கல்லும் பூக்கிறது காயும் இனிக்கிறது
நெஞ்சம் நிறைத்துவிட அவள்வேண்டி
நெடுந்தூரம் வந்தோனின் நினைவெல்லாம் – இனி
அவள் வாசம் பொங்கும்; வசந்தத்தின் அர்த்தமினி பிரீத்தியும் என்றாகும்!

குறிஞ்சிப் பூக்கும் நடையில் பூத்தவளே
கொஞ்சும் தமிழ்போல் பேறு பல வாய்த்தவளே
சொல்லிமுடிக்காப் பல கதை கோர்த்து வாயேண்டி
சுரேந்தரன் மிச்ச நாளை; நீ நல்லது பேசியேத் தீரேண்டி;

நீ வந்த நாளினி வாழ்வும் புது அர்த்தப் படும்
காணாத கனவிற்கு அவன் சிரிப்பெல்லாம் காத்திருக்கும்
நெஞ்சார வாழ்த்தும் பல உள்ளத்தின் அன்போடு
வாழ்வின் கடைசி வரை இனி இனிப்பாய்; இனிப்பாய் இனிக்கும்!!

கால்கள் வலிக்காது குடும்பம் சுமந்தோனின்
நாட்கள் கனக்காது நிறைய நீ வந்தாய்
பாக்கள் சுகம் போல உன் பாதம் பதியட்டும்
தாங்கும் நெஞ்சினன் வாழ்வுமினி எப்போதும் சிறக்கட்டும்!

அஞ்சா மனதினன் ஆயுள் கூடட்டும் – செல்வங்கள் பதினாறும்
சொல்லாமலினி சேரட்டும்; பெற்றோரின் பிணைப்போடு
ஆனந்தக் கண்ணீரும் வாழ்த்தட்டும் – உற்றாரும்
அன்பும் அறமும் செழிப்புமாய் அவன்; நீடூழி உன் நெற்றியில் வாழட்டும்!!

மிக்க அன்போடும் வாழ்த்துக்களோடும்..

வித்யாசாகர்

Posted in வாழ்த்துக்கள்! | Tagged , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

மீனும் மீனும் பேசிக் கொண்டன.. ( பாகம் – 8)

இதற்கு முன்..

சந்திரோதயன் சாப்பிடுவதை விட்டுவிட்டு, அந்த இரண்டு மீன்களை கிணற்றில் விடவேண்டி சனியாண்டி விலாசின் பின்பக்கம் போக, அதற்குள் அவரைத் தேடி அந்த உணவகத்தின் முதலாளியும் உடன் இரண்டுப் பேரும் ஓடி வந்தார்கள். வந்து “ஐயா சாப்பிடுவதை விட்டுவிட்டு வந்து விட்டீர்களே..” என்றனர்.

‘இல்லை, இப்பக்கம் காற்று நன்றாக வீசியது, அதோடு இரண்டு பூனைகள் வேறு கத்திக் கொண்டிருந்தன அதான் பார்க்க வந்தேன்”

“பூனைகள் மீன் தலை தின்பதற்காக சுத்தும்க. இங்க இப்படி தான் ஒன்றை அடித்தால் ஒன்றிற்கு உணவு”

“ஒன்றை சார்ந்து தான் ஒருவர் வாழ்கிறோம் என்கிறீர்களா?”

“ஆமாங்க, அப்படியே தான்”

அவர் சிரித்துக் கொண்டார். விலங்குகள் அப்படித் தானே வாழும் என்றும் நினைத்துக் கொண்டார். எனினும், உள்ளே இரண்டு மீன்களை காப்பாற்றி தப்பிக்கவிட்டுவிட்ட நிம்மதி அவருக்கு மிகையாய் இருந்தது.

“என்னங்கையா சரி தானே சொன்னது”

“ஆமாமாம், சரி தான் சரிதான். இருந்தாலும்” அமைதி காத்தார்

“என்னய்யா ஏதோ சொல்ல..” மீண்டும் அவரே தொடர “ஆங் சொல்லுங்க சொல்லுங்க” என்றார் வேலுக்கண்ணு.

“முற்றிலும் சரி யில்லை என்று சொல்லவந்தேன்”

“ஏன்?”

“ஒன்றினை அழித்து ஒன்று பிறப்பது சூத்திரம் என்றாலும், பிற உயிரினங்கள் ஒரு உயிரைத் தின்று ஒன்று வாழ்வது இயல்பு என்றாலும், இரக்கமற’ வெறும் தனக்குத் தெரிந்த அல்லது தன்னால் சொல்ல முடிந்த காரணங்களை மட்டும் சொல்லிவிட்டு, பிற உயிர்களைக் கொன்று தன் உயிரை மட்டும் வளர்த்துக் கொள்வது மனிதரின் அறிவிற்கு அத்தனைச் சிறப்பல்ல. மனிதனுக்கு ஆசை என்பது வேண்டும். ஆனால் அந்த ஆசைக்கு எல்லையும் வேண்டும். ஆசைக்கு எல்லை இல்லையேல் ஆசை நம்மையும் அழித்துவிடும் அன்பரே”

“நிச்சயங்கையா, பழகிட்டோம், உடனே நிறுத்திட இயலாதே, அதிலும் எங்க பிழைப்பே இதுல தானுங்க ஓடுது”

“அச்சச்சோ, மன்னிக்கணும், உங்கள் பிழைப்பில் கைவைக்க என் பேச்சில்லை. மாமிசம் உண்பது இன்று உலக நியாயமாகி விட்டது. அதில் உங்களின் தனிக் குற்றம் ஒன்றுமில்லை. ஆனால் கூட்டத்தில் பங்குண்டு”

“புரியுதுங்க, அதுக்காக வேண்டாம்ன்றீங்களா?”

“உடனே முடியாவிட்டாலும், மெல்ல; இன்று முடியாவிட்டால் நாளை; இந்த பிறப்பில் இல்லாவிட்டாலும் வேறு எந்த ஒரு பிறப்பிலேனும், அப்படி ஒன்று உண்டெனில்; அதிலாவது மனிதன் பிற உயிர்களை கொள்வதை நிறுத்தியேயாக வேண்டும்”

“இதையே நம்பியிருக்கும், மீனே கதி என்று கடலுக்கு ஓடும் ஏழைகள் எல்லாம் பிறகு என்ன செயவார்களையா?”

“முதலில் நீங்கள் ஒன்றை உணரவேண்டும் என் பேச்சு ‘பசிக்கு உண்பவரை பரிகசிப்பதற்கல்ல; ருசிக்கு உண்பவரை தடுப்பதில் மட்டுமே. உண்பவரின் நாக்கை, உயிர் துடிக்க துடிக்க பிற உயிர்களைத் துண்டிப்பவரின் நாக்கை உடனே அறுத்து எறிந்துவிட அல்ல; நம் எழுத்தில் கூர்மை இருக்குமெனில், அதை கொண்டு அவர்களின் ஆசையை அறுத்து, பல உயிர்களை காக்கும் முயற்சி மட்டுமே.

அதின்றி, நீங்கள் ஏன் அசைவம் எனில் மீனை மட்டுமெடுத்துக் கொள்கிறீர்கள்? கோழிப்பண்ணை வைத்திருப்பவரும் கறிக்கடை வைத்திருப்பவரும் என்ன அத்தனை ஏழைகளா? இல்லை, மாமிசத்தை விட்டால் உண்பதற்கு வேறு உணவே கிடைக்க இயலாதவர்களா? அவர்கள் அதுவாக பழகி விட்டார்கள். அவ்வளவுதான். அவர்களுக்கு அதிலிருந்து விடுபட மாற்றுவழி காண்பிக்க இயலுமெனில் காண்பித்தல் சிறப்பில்லையா?

அதேநேரம், வேறு நிலை இல்லாதபட்சத்தில் வயிற்றின் ஈரம் துடைப்பவர்களைப் பற்றி நாம் பேசும் இடம் இதுவுமல்ல ஆனால் அவர்களின் நிலையை காலத்தினால் மாற்ற இதுவும் உதவும் அன்பரே”

“அப்போ, வேறு வழி இல்லையெனில் இறைச்சி உண்பது தவறாகாதா?”

“இருக்கும்போதே விட இயலாதார், இல்லையெனில் என்னையும் தின்று செரிக்க மாட்டீர்களா?” சொல்லிவிட்டு சிரித்துக் கொண்டார் சந்திரோதயன்.

“இல்லைங்கையா இது வேணாம்னா பின்ன வேறு பதில் வைத்திருப்பீர்களே அதான் கேட்டேன்”

“இதலாம், இன்றையை மட்டும் தாங்கியோ எண்ணியோ சொல்வதில்லை திரு. வேலுக் கண்ணு, நாமென்ன இப்படியே இருந்து விடுவோமா? ஏழை என்ன ஏழையாக மட்டுமே இருக்க வேண்டுமா? அவர்கள் ஒரு படி மேலே வரவே கூடாதா?

நாளையே இந்திய அரசோ அல்லது நம் தமிழக அரசோ ஜாதி எனும் ஒரு பிரிவை மொத்தமாக அரசு ஆணையிலிருந்தே அகற்றிவிட்டால், அல்லது அரசு சார்ந்த படிவங்களிலிருந்தே நீக்கிவிட்டு இனி ஜாதியை எங்கும் கேட்கவேப் போவதில்லை, எல்லோருமே இனி ஒரே இனம், அன்றி, திறனும் உழைப்பும் பொறுத்தே ஒருவரை ஒருவர் மதிக்கப் படுவர்’ என்றொரு ஆணையை பிறப்பிக்கட்டும்; அடுத்த நூற்றாண்டுகளில் பாருங்கள் ஏழையின் அளவை. வெகுவாகக் குறைந்திருக்கும்.

இந்த ஜாதி மதம் பார்த்து பிறரை ஒதுக்குவது கீழ்மை படுத்துவதென்பது  மனோதத்துவ முறைப்படி நாம் சிலரை மட்டப் படுத்தி வைத்திருக்கும் மனிதம் மீறியப் பெருந்தவறு. இதை மீறி ஒரு தேசம் சமத்துவத்தோடு வளர்வதென்பது மிகக் கடினம்.

இவன் இப்படி இவன் இப்படி என்று சொல்லி சொல்லியே நிறைய பேரை ஆண்டுகள் பல கழிந்தும் அப்படியே வைத்திருக்கிறோமே, அவர்களின் கைகளை கட்டியிருப்பது எது?

மீன் பிடிப்பவன் ஏன் கடலாராய்ச்சி செய்யக் கூடாதா, மீன் தான் பிடிக்கவேண்டும் எனும் போல், நீ இந்த ஜாதியை சார்ந்தவன்; நீ இதைத் தான் செய்யவேண்டும், நீ இப்படி, இதற்குத் தான் சரி என்று அரசே தூண்டுகோல் இடுவது மனிதத்தின் கொடிய செயலில்லையா?

அவரவரை அவரவர் வாழ்வுநிலைப் படி, வேறெந்த அதிகார சூழ்ச்சியோ அல்லது அதிகார திணிப்போ இன்றி விட்டுப் பார்த்தால் தானே அவர்களின் உண்மை வளர்ச்சி என்னவென்று தெரியும்?”

சற்று உணர்ச்சிவசப் பட்டவராக முகம் சிவக்கக் கேட்டுவிட்டு நிறுத்த, ஒருவர் உள்ளேயிருந்து ஓடிவந்து ”ஐயா சாப்பாடு எல்லாம் தயாரா இருக்குங்க என்று சொல்ல, அவர் சரி வருகிறேன் என்று சொல்லிவிட்டு உள்நோக்கி பேசிக் கொண்டே வருகிறார்.

“ஆக, ஏதேனும் ஒரு மாற்றத்தின் பின் நாம் மாறுவோம், நம் நிலை மாறும், நேற்றையினை விட இன்று முன்னேறியவர்கள் தானே நாம்? இன்றிருக்கும் ஏழ்மை ஒரு ஐநூறு ஆயிரம் வருடம் கழித்தேனும் மாறத் தானே வேண்டும்? அன்று அவர்கள் ருசிக்கு நாக்கு தட்டி இதையே தின்ன வருகையில், அவர்களின் பசித்திட்ட கொடுமையினையும் அவர்களுக்கே நினைவு படுத்தி ‘இச்சிறு உயிர்களின் நினைவையும் புகுத்த நாம் இன்றே பேசிவைக்க வேன்டாமா?”

“மாற்றம் வந்தா மாறித் தானே ஆகனும்யா. அதலாம் காலச் சுழற்சியாய் மாறிக் கொள்ளும். அப்படிப்பார்த்தால் என்னல்லாம் உயிர்வதை நடக்குதே நம்மிடம் அதற்கெல்லாம் பதில் வேண்டாமா?”

“நிச்சயம் நம் ஒவ்வொரு அசைவிற்கும் பதில் இருக்க வேண்டும் வேலுக்கண்ணு. பதில் இல்லாமலுமில்லை. அதேநேரம், இதற்கெல்லாம் நான் சொல்வது மட்டுமே வேதமாகியும் விடாதில்லையா? அதுபோல், எதையோ நாம் செய்கிறோம் என்பதற்காக, ஒரு கொலை கொலையில்லை என்றும் ஆகிவிடாது தானே? ஒன்றை செய்கிறோம் என்பதால், இன்னொன்றை மீண்டும் செய்வது நம் மனிதர் சிந்தனைக்கு வளமில்லை.

தவறு எங்கிருந்தாலும் திருத்திக் கொள்ள வேண்டுமென்பதே நம் எண்ணம். அது லட்சாதிலட்சம் பட்டுப் புழுக்களைக் கொன்று நெய்திடும் பட்டுப்புடவையில் இருந்தாலும் சரி, வீடு கட்ட ஒரு மரம் வெட்டி கிழிக்கும் ஒற்றை பனை ஓலையில் இருந்தாலும் சரி, பிடித்தறுத்து வலுக்கட்டாயமாய் துடிக்க துடிக்க கொன்று தின்னும் பிற உயிர்களாயினும் சரி. தவறு தவறு தான். ஒவ்வொன்றாய் இயன்றளவில் திருத்திக் கொள்ள முயல்வதில் நம்மை மனிதராய் மெய்ப்பிப்போமே?

ஆயிரம் கோடி ஆண்டுகளாய் தழைகள் தின்று பிழைத்திருந்த மனிதன் நெருப்பைக் கண்டதும் ‘என்று பிற உயிரைக் கொன்று சுட்டுத் தின்று ருசி கண்டானோ, ஒவ்வொன்றையாய் தின்ன ஆரம்பித்தானோ; அன்றிலிருந்தே நம் வாழ்வும் குறைந்து போயிருக்கிறது என்பதை, விடை தேடி அலைவோமானால் ஆங்காங்கே தெருவிற்கு தெரு பெருத்திருக்கும் நம் மருத்துவமனைகள் சொல்லும்”

அவர்கள் பேசிக் கொண்டே வந்து உள்ளே அமர்ந்தார்கள். அருகில் உணவுண்ண வந்த மக்கள் அவர்களையே பார்த்துக் கொண்டும், அவர் சொல்வதைக் கேட்டு சிந்தித்தவாரும், சிலர் அவர்களுக்குள் அவர்களாக விவாதித்துக் கொண்டுமிருந்தனர். மேஜையில் சந்திரோதயன் கேட்ட அசைவ உணவுகள் வேறு எல்லாமே மேஜைக்கு வந்து வெகுநேரமாகிவிட்டமையால், அவைகள் குளிர்ந்திவிட்டிருக்க அந்த கடை முதலாளி வேலுக்கண்ணு அதைத் தொட்டுப்பார்த்துவிட்டு சற்று வருத்தமுற்றார்.

“எல்லாமே ஆரி போச்சீங்களே ஐயா, அப்படியே வைத்திருக்கீங்களே”

“பரவயில்லைங்கையா உங்களைப் போன்ற அன்பு உள்ளங்களின் தோழமை வயிற்றைவிட மனதை நிறைத்துவிடுகிறது, எனக்கு அது போதும். தவிர நான் அத்தனை சூடாகவோ அல்லது நாக்கு ருசி பதைக்கவோயெல்லாம் உண்டு பழகுவதில்லை”

“என்னங்கையா என்னை போய் நீங்க ஐய்யான்னு கூப்டுகிட்டு, சும்மா வேலுக்கன்னுன்னு கூப்பிடுங்க”

“மதிப்பவரை மதித்தல் அழகு, நிறைவும் கூட தானே?”

“அது தப்புங்க”

“அப்போ நீங்களும் என்னை சந்திரோதயன் என்று அழைக்கலாமே? பார்க்கப் போனால் நீங்கள் என்னை விட வயதில் பெரியவர்”

“அப்படி இல்லீங்க, நீங்க”

“மரியாதை என்பது எல்லோருக்கும் பொது வேலுக் கண்ணு ஐயா. அது மனிதரை மனிதராய் பார்க்கும் பண்பு. பரஸ்பரம் புரிந்து நட்பின் மேலதிகத்தில் பெயர் விட்டு அழைத்தாலும், அல்லது பார்க்கும் பிறர் பார்வைக்கு மதிப்பு கூட்டும் வகையில் ஐயா என்று அழைப்பினும் ஒன்றே. ஏற்றத் தாழ்வுகளை நாம் தான் தொழில் சார்ந்தும் பணம் அந்தஸ்து சார்ந்தும் ஏற்படுத்திக் கொண்டோம். பிறரை மதிக்க தெரிந்த நீங்கள் எத்தனை உயர்ந்தவர் தெரியுமா? உங்களை சந்தித்ததில் உண்மையை சொன்னால் நான் தான் பெருமை கொள்ள வேண்டும்”

சந்திரோதயன் சொல்லி நிறுத்தியது தான் தாமதம், வேலுக்கண்ணுவின் கண்களில் நீர் பூத்துக் கொண்டது, உணர்ச்சி வயப் பட்டு சந்திரோதயனின் கைகளை ஆத்மார்தமாகப் பற்றிக் கொண்டார். சந்திரோதயனும் பதிலுக்கு அன்பு தெரிவிக்கும் வகையில் அவரின் கைகளை இறுகப் பிடித்துக் கொண்டு பேசினார்.

“அன்பும் பிறரை மதிக்கும் பண்பும் மனிதரிடத்தில் இருக்கும் பெரிய ஆயுதமையா. அந்த இரண்டு ஆயுதங்கள் தான் நமக்கேத் தெரியாமல் நம்மை ஆட்டுவிக்கவும் ஆள்விக்கவும் செய்கிறது. நம்மை வளர்க்கவும் மேன்மையுறவும் வைக்கிறது. அறிவு திறன் எல்லாம் அதன் பின் தேவைப்படுகின்றன. அறிவும் திறனும் அவ்விரு ஆயுதங்களை பயன்படுத்தும் பாடு பொருட்கள், அவ்வளவுதான்” என்றவர் சொல்லி நிறுத்த அவரின் கூரிய விழிகளை பெரு மதிப்புடன் நோக்கினார் வேலுக்கண்ணுவும்.

பிறகு அவர் சாப்பிட அமர, வேலுக்கண்ணு பரிமாற, அவர்களுக்கு அருகில் அமர்ந்திருந்த சிலர் இவர்களையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். இருவரும் சமநிலைப் புரிதலோடு தோழமைக் கொண்டது பார்ப்பவரை பூரிக்கச் செய்தது.

என்றாலும், சந்திரோதயன் வாங்கியதை எல்லாம் அந்தளவிற்கு விரும்பி சாப்பிட வில்லை. மாமிசங்களை எல்லாம் ஒதுக்கிவைத்தார். நல்லக் கண்ணு பொருக்கி பொருக்கி எடுத்து வைத்து; இதை மட்டுமேனும் சாப்பிடுங்கள் என்று சொல்லி கோழிக் கால் மசாலாவினை எடுத்து அவர் தட்டில் வைத்து மேலும் இரண்டு பரோட்டா போட்டுக் கொண்டு வரச் சொன்னார்.

சந்திரோதயன் தட்டிலிருந்த கால்களை எடுத்துக் கடிக்க கடிக்க உள்ளே இதுவரை கணக்கில் இல்லாமல் அழிந்த அத்தனை உயிர்களின் நினைவும் மனதை வந்து உறுத்தின.

நிமிர்ந்து வலப்புறம் இருந்த கோழிகள் அடைக்கப் பட்ட ஒரு இரும்புச் சல்லடைப் பெட்டிகளைப் பார்த்தார். கேட்போருக்கு உடனே பிடித்து அறுத்து கேட்கும் விதம் செய்துத் தர அவைகள் வைத்திருக்கப் பட்டது.

அதையும் பார்த்து தன் கையிலிருந்த அந்த கோழிக்கால் துண்டையும் பார்த்தார். இந்தக் கால்கள் இன்னும் எத்தனை ஓட இருந்தனவோ. எங்கெங்கு தன் வாழ்க்கையை சுற்றிச் சுற்றி வாழ்ந்துத் தீர்க்க இருந்தனவோ.., அத்தனையும் மனிதனின் ருசி எண்ணும் ஒரே உணர்வுக்கு ஆட்பட்டு கொள்ளப் பட்டதை எண்ணி எண்ணி வெறுமை நிறைந்த மனதினோடு சவ்வ்க்கு சவ்வ்க்கு என்று மென்று ஒரு மருந்தினைப் போல அதை விழுங்கினார்.

நேற்று தன் உறவுகளோடு சுற்றித் திரிந்த ஒரு கோழியின் மாமிசமானது உள்ளேச் செல்ல செல்ல நரமாமிசம் உண்ணும் அரக்கனைப் போல, தன்னைத் தனக்கே மனக்கண்ணில் அடையாளம் காட்டியது அந்த கோழியின் கால் கறி.

அதற்குள் இன்னொருவர் வேகமாக சந்திரோதயன் பக்கம் வந்து நின்றார். வணக்கம் சொன்னார். அருகில் இருந்த இருக்கையினை காட்டி இங்கே அமரலாமா என்று கேட்டுக் கொண்டு அமர்ந்தார். சந்திரோதயனும் பதிலுக்கு வணக்கம் தெரிவித்து ஆவலுடன் அவரைப்ப் பார்க்க. புன்னகைக்க – சற்று கோபமும் பரிகாசமும் கலந்த கண்களை அசைத்து –

“கால் எப்படி இருக்கு?” என்று கேட்க

“எனக்கு காலுக்கு ஒரு குறையும் இல்லையே நண்பரே!!” என்றார் சந்திரோதயனும் பரிகாசமாக

“ஓ…., சிரிக்கவேண்டும் தான், உங்கள் நகைச்சுவை மிகப் பிரமாதம், நான் கோழிக்கால் எப்படி இருக்கிறதென்று கேட்டேன், அதிலும் நம்ம சனியாண்டி விலாஸ் கிட்ட எந்த கொம்பனும் போட்டிக்கு நிக்க முடியாது. அப்படி ஒரு ருசி..” ஒரு உள்ளர்த்தத்தோடு அவர் பேசுவது சந்திரோதயனுக்குப் புரிந்தது.

அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் “அப்படியா?” என்றார்.

“என்ன அப்படியா கால கடிச்சீங்கள்ல”

“ம்ம்.. ஆமாம் ஆமாம், மனிதனின் கண்ணீருக்குக் காரணமான ‘மரணத்தின் வாசம்’ சற்றுத் தூக்கலாகத் தான் இருக்கிறது”

“அதலாம் நீங்க பேச தகுதியற்றவர், தின்னாதவங்க பேசுற பேச்சு இல்லையா அது”

“சரி தான்..”

‘’என்ன சரி தான்; பெருசா உயிர் உயிர் னு உயிர்கொல்லாமைக்காக உருகிவிட்டு, உருகி உருகி எழுதிட்டு இப்படி வகை வகையா வாங்கி சாப்பிடுகிறீர்களே; குரு துரோகத்தைக் காட்டிலும் மாணவ துரோகம் தவறில்லையா?”

“தவறு தான். பிறைரை செய்யாதே என்று சொல்லிவிட்டு நான் செய்வதும், அல்லது நான் செய்வதை பிறரிடம் இருந்து மட்டும் செய்ய விடாது தடுக்கப் பார்ப்பதும் தவறுதான்”

“அப்புறம் மேஜை முழுக்க கோழியா இருக்கே?”

“அட என்னப்பா நீ, நானென்ன ‘மீனும் மீனும் பேசிக் கொண்டன’ என்று தானே எழுதினேன். கோழியும் கோழியும் பேசிக் கொண்டன எழுதவில்லையே???!!!”

அந்த நாபருக்கு கோபம் கண்களில் தெறித்தது. அதைப் பொருட்படுத்தாது சந்திரோதயனும் லேசாக சிரித்தவாறே, ‘நானும் மனிதன் தானே? என்றார்.

“அப்போ என்ன மயித்துக்கு அடுத்தவனுக்கு அறிவுரை எல்லாம் சொல்லிக்குனு” என்று எண்ணி இருப்பான் போலும் அந்த வாலிபன். அத்தனை கோபத்தின் உயிரோட்டம் அவன் கண்களில் நரம்புவழியே சிவக்க, அமர்ந்திருந்தவன் வெடுக்கென எழுந்துக் கொண்டான். அவனின் நியாய உணர்வினை புரிந்துக் கொண்ட அவர் –

“அமைதி கொள்ளுங்களப்பா. என் எழுத்து உண்மை. என் எழுத்து பொய்யுரைப்பதில்லை. இது சாப்பிடுவது ஒரு ஆய்வின் காரணமாக மட்டுமே. இப்படி அமருங்கள் சொல்கிறேன்”

“பின்ன என்னங்கையா, உங்களோட புத்தகங்கள் படித்து எங்களோட ஒரு குழு மொத்தமே இனி அசைவம் சாப்பிடக் கூடாதுன்னு முடிவு செய்திருக்கோம்”

“ஓ…, ரொம்ப நல்லது செய்தீங்க. துடிக்க துடிக்க அறுத்து உயிர் கொன்ற பாவத்தை எல்லாம் மசாலாவில் போட்டு மறைத்து சுட சுட வைத்து தின்னும் மாமிசத்தின் ரத்தம் ஊறிய பச்சை வாசத்தை என்று மனிதன் சகித்துக் கொள்ள, சகித்து தின்றுவிட துவங்கினானோ அன்றிலிருந்து தான் மனிதருக்குள் வன்மையும் குரோதமும் ரத்த வெறியுமே தலை தூக்க ஆரம்பித்திருக்கும்.

பிறகு, எல்லாம் தெரிந்தும் ஏன் நான் இங்கே அமர்ந்திருக்கிறேன் என்று உங்களுக்கு ஒரு கேள்வி தோணும், இல்லையா?”

“உங்கள் எழுத்தை; நம்பி வாசித்தமையாலா என்னவென்று தெரியவில்லை பொய்யென்று அறிகையில்; வெறும் கேள்வியல்ல எடுத்து எதையேனும் வீசும் கோபமே வருகிறது..”

“இது ஒரு பரீட்சை மாதிரி தம்பி. நானென்ன இரத்தம் சுவைப்பவனா? மனிதரின் மிருக குணத்திற்கு கூட சூழலே காரணம் மனிதனல்ல’ என்று எண்ணி மன்னிப்போம் மறப்போம் என்று வாழ்பவன். பிறகென்ன உயிர் குடிக்கவா எண்ணுவேன்?

இது ஒரு சோதனை. அவ்வளவு தான். உலகமே அசைவத்தின் நாக்கு சுவைக்குள் இப்படி ஊறிக் கிடக்க திடீரென நான் வந்து நிறுத்து சாப்பிடாதே என்று தொண்டை குழியில் கை விட்டு நிறுத்தினால் அது எத்தனை சரியாக இருக்கும் எங்கனம் ஏற்கப்படும், அல்லது ஏற்கப் படும் அளவிற்கு எப்படிச் சொல்லுவது என்று பார்க்க இதைப் பற்றி உணர்வாக தெரிந்துக் கொள்ளவேண்டிய அவசியம்.

மக்கள் இதனை இத்தனை ஆர்வமாக சாப்பிடுவதற்கான காரணம் என்ன? அதன் பின் விளைவுகள் என்ன? அவர்களை உண்ண வேண்டாமென்று சொல்லுமுன் உண்ணாமல் இருக்க முடியுமா முடியாதா? என்று பார்க்க ஆதாரம் தேடும் ஒரு சோதனை.

எலிக்கு பதில் என்னை பயன்படுத்துகிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதின்றி, ஓடியாடி விளையாடிய பொழுதில் நிறைய மாமிசம் தின்றவன் நான். எங்கள் வீடு அசைவம் நிறைந்த வீடு. அசைவ மனத்தில் வயிறாரும் குடும்பம் எங்கள் குடும்பம்.

அங்கனமிருந்தும் சரி தவறு அலசி அசைவம் உண்பதை நான் நிறுத்திக் கொண்டாலும், அன்று அம்மா ஊட்டிவிட்ட அந்த மீன்குழம்புச் சோற்றின் வாசம் உள்ளே மிச்சமிருக்கிறதில்லையா, அதன் வன்மத்தை எனக்குள் மீண்டும் உணர்த்தி மறுபதிவு செய்துக் கொள்ளும் முயல்வு இது.

உள்ளே இருக்கும் அசைவ ஆசையின் அடிவேரினை இப்பொழுதுணரும் ரத்த வாசத்தால் பிய்த்து எரியத் துடிக்கிறேன் அன்றி வேறில்லையப்பா. எனினும் உங்கள் பார்வையில் நான் தவறு தான். அதை ஒப்புக் கொள்கிறேன், உன் கோபத்தையும் மதிக்கச் செய்கிறேன். எனினும் என் ஆய்விற்கான தேவை இன்றோடு நிறைவு பெற்றது. இதோடு உடல்கட்டை வேகும்வரை இவைகளை தொடமாட்டேன்”என்று சொல்லி விட்டு அவரின் தோள்மேல் கைபோட்டு மன்னிப்பீர்களா என்னை என்று கேட்க.

அவன் பதறி போனான். பதற்றம் நீக்க அவர் அவனிடம் அன்பாகப் பேசி, உன் பேரென்ன என்று விசாரித்து, நலம் விசாரித்து, இதர விவரங்கள் புத்தகம் படிக்கும் விவரங்கள் என்று பல விடயங்களைப் பற்றிப் பேசி கட்டி அவனை அணைத்துக் கொண்டார். பின் கடைசியாக, எல்லோரையும் பார்த்து –

“ஆக, இதலாம் இந்த மறுப்பினை எல்லாம் இன்று ஆரம்பித்தால் தான், நாம் நம்மையே கொன்று தின்றுமுடிக்கும் முன், விலங்குகளைத் தின்பதை நிறுத்த இயலும். அதற்கு எல்லாம் பக்கமுமான வழிகளை ஆராய்ந்து தெரிந்துக் கொள்வதற்குத் தான் கடினப் பட்டு இவைகளை மனதில் தோணும் போதே மருந்தென்றெண்ணி உண்டுக் கொண்டேன்.

“மன்னியுங்கள் ஐயா, உங்களை புத்தகத்தில் படித்ததற்கு மாறாக நேரில் பார்க்கையில் கோபம் வந்துவிட்டது”

“பரவாயில்லை மாறன். கோபம் வந்ததால் தான் நீங்கள் சரி. அதற்கெல்லாம் நான் வருந்தமாட்டேன். மனதிற்கு புரியும் வரைதானே கோபமெல்லாம். போகட்டும் அதை விடுங்கள், உண்மையில் எனக்கு இருக்கும் வருத்தமெல்லாம் ‘இந்த உயிர் கொள்ளல் என்பது ஒரு கொடுமையான விஷயம்’ என்பதை உலக மக்களிடம் எப்படிச் சொல்லிப் புரிய வைப்பேன் எனும் தவிப்பு மட்டுமே.

நன்றாக ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால் உலக அழிவின் அத்தனை காரணங்களுக்கும், உலக வக்கிரங்கள் அனைத்திற்கும், உலக அழிவின் அத்தனை அவசியத்திற்கும் கூட, இந்த உயிர் கொன்று உயிர் தின்று உயிர் வளர்க்கும் அவலம் தான் காரணமோ’ என்றொரு சந்தேகமே எனக்கு பெருமளவில் இருக்கிறது”

அவர் பேசிக் கொண்டிருக்க –

ஒருவர் மீண்டும் வந்து இடையே புகுந்து “நான் கூட எதற்கு நமக்கந்த பாவமென்று தான் வெள்ளி சனி செவ்வாய் கிழமைகளில் கவுச்சியே உண்பதில்லை என்றார்.

அதற்கவர் சிரித்துக் கொண்டு. “சாப்பிட துணிந்து விட்டீர்கள். பிறகு கிழமை வேறு, நாள் வேறா? தவறினை என்று செய்தாலும் தவறு தானே? சாப்பிடுவது சரியெனப் பட்டால் என்று வேண்டுமாயினும் சாப்பிடுங்கள், தவறென்று புரிந்தால் மொத்தமாய் உடனே நிறுத்தி விடுங்கள். பிறகு அதுவேறு இதிலெதற்கு கடவுளையும் துணைக்குக் கூப்பிடுவானேன்? நாம் செய்யும் பாவம் நம் நெஞ்சை குத்துமெனில் கடவுள் சொன்னாலும் அதை செய்ய மறுப்போம் தோழரே”

“எல்லாத்துக்கும் ஆமாம் போட முடியாது, இருந்தாலும் ஏதோ சொல்றீங்க இனி யோசிப்போம்” என்று சிரித்துக் கொண்டே மழுப்பிவிட்டு அவர் அங்கிருந்து நகர்ந்து போனார். சந்திரோதயன் அதைப் பொருட்படுத்தாது –

“உங்களுக்கு நிறைவாக நான் இன்னொரு உண்மையினையும் சொல்லிவிட்டு விடை பெறுகிறேன்.

மேற்கூறிய காரணங்களால் அசைவ உணவுகளை சற்றேறக் குறைய நான் ஆறேழு மாதங்களாக  உண்கிறேன். காரணம் ஒன்றை பிறருக்கு சொல்கையில் அது முற்றிலும் எத்தனை சரி என்றும் அல்லது எவ்வகையில் நல்லது என்றும் எனக்கு அறிந்திருக்க வேண்டிய அல்லது உணர்ந்திருக்கவேண்டிய கட்டாயம் உள்ளது.

அதை உணர நான் எடுத்துக் கொண்ட பிரயத்தனத்தில் ‘இந்த ஆறுமாதத்தில் மட்டும் என் உடம்பில் எல்.டி.எல். எனும் கெட்டக் கொழுப்பு பெருமளவில் கூடியுள்ளதாகவும், சர்க்கரை அளவிற்கதிகமாக இருப்பதாகவும், ரத்தக் கொதிப்பும் கூடி விட்டதாகவும்; ஏன் இதயம் கூட பாதிக்கப் பட்டு இருக்கலாம் என்றும், அல்லது கிட்னி விரைவில் பழுதடையலாம் அடைந்திருக்கலாமென்றும் மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர்.

அதிலும், சர்க்கரை நோயுள்ளவர்களுக்கு மாரடைப்பு வந்தால் அந்த நோயாளிக்கே அது வருவது கூட தெரியாத அபாயம் உள்ளதாம். பேசிக் கொண்டே இருக்கையில் இதய குழாய்கள் அந்த கெட்ட கொழுப்பினால் அடைபட்டு இதயமே நின்று போகுமாம்”

அவர்கள் அவர் சொல்லும்போதே வாயை பொத்திக் கொண்டனர்.

“அதனால் எனக்கொன்றும் பயம் எழவில்லை. என் பயமெல்லாம் என் மக்களின் மீதானது. இந்த சமுதாயத்தின் மீதானது. இந்த நாற்பத்து நான்கு  வருடங்களாக கெடாத உடம்பு இந்த ஆறே மாதத்தில் பழுதடைய காரணமென்ன?”

“அட என்னங்க, எங்க அப்பன் தாத்தா எல்லாம் இன்னைக்கும் ஒரு சுட்ட கருவாடாச்சும் இல்லாம சோறு தின்ன மாட்டாங்க நீங்க என்னடான்னா????” ஒருவர் சலித்துக் கொண்டார்.

“அப்பன் பாட்டன் கதை வேறு. அவர்கள் அன்றைய இயற்கை சூழலுக்குள் வளர்ந்த விதம் வேறு. இன்றைய நடைமுறை என்பது வேறு. இன்றைக்கு சந்தைக்கு வரும் அத்தனை கோழிகளுக்கும் அதிகபட்சம் ஆர்மோன் சம்மந்தப் பட்ட ஊசி போட்டு வளர்க்கப் படுகிறது. அதே ஆர்மோன் மனிதருக்குள்ளும் கேடுகளை விளைவிக்க வாய்ப்புக்கள் பலவாறு உண்டு என்கின்றனர் மருத்துவர்கள்.

அதிலும், முக்கியமாக இறைச்சிகளை விட; அவற்றை செய்யப் பயன்படுத்தும் எண்ணெய் உயிர்கொள்ளும் தீவிரவாதிக்கு சமமாம். வெறும் ருசி அறிந்த நாக்கு தன் உடல்நலத்தைப் பற்றி யோசித்தலும் மிக அவசியம் என்பதை நான் அனுபவ ஆய்வு ரீதியாக புரிந்து வருகிறேன். மாமிசம் என்றில்லை காய்கறி உண்பவர் என்றாலுங் கூட உண்பதில் ஒரு கட்டுப்பாடும் உடற்பயிற்சியும் வெகு கட்டாயம் அனைவருக்கும் வேண்டும்”

“ஐயா அப்போ உங்களுக்கு உடம்பு…” என்று வேலுக்கண்ணு ஏதோ இடையில் நுழைந்து கேட்கவர, சந்திரோதயன் அதற்கு முன்னதாக “உடம்பென்ன ஆகும், வாயில் வைக்கும் வெல்லக் கட்டி கூட நாம் கரை என்றால் தான் கரைய வேண்டும் என்கிறார் விவேகானந்தர்.

அப்படி அந்த வெள்ளக்கட்டி நாம் சொல்லும் வரை கரையாதிருக்கும் உடல் தானே நமக்கெல்லோருக்கும் இருக்கு வேலுக்கண்ணு ஐயா. அதனால் வருத்தமெல்லாம் வேண்டாம், ஒருசில மாத உணவு கட்டுப்பாடு மற்றும் தினமும் கொள்ளும் நடைப் பயிற்சியில் வெகுவாக அவைகளை குறைத்துவிடலாம்.

அடுத்த ஆறு மாதத்தில் முற்றிலும் இல்லாவிட்டாலும் கொழுப்பின் விகிதமும், ரத்தக் கொதிப்பும் குறைய வெகுவாக வாய்ப்புண்டு” என்று சொல்லிவிட்டு அருகில் அமர்ந்திருந்தவர்களை திரும்பிப் பார்த்து “பொதுவாக முப்பது வயதினை தாண்டிவிட்டாலே சற்று உடல்நலம் பற்றிய எச்சரிக்கையாய் இருப்பதும், வருடத்திற்கு ஒரு முறையேனும் மருத்துவ பரிசோதனை செய்துக் கொள்வதும் நல்லதுய்யா” என்று சொல்லிவிட்டு எல்லோரிடமிருந்தும் விடைபெறுவதாகச் சொல்லிவிட்டு அங்கிருந்து  எழுந்து நின்றார்.

பின் சற்று நேரம் நின்றுக் கொண்டே வேறேதேதோ பேசினார்கள். ஒருவக்கொருவர் தனக்கு தோன்றியதைப் பற்றியெல்லாம் கேட்டும் சொல்லியும் பகிர்ந்துக் கொண்டு சிரித்தும் கொள்ள, பிறகு ஏன் இன்றும் வந்து இத்தனை அசைவ உணவுகளை தயார் செய்யச் சொன்னீர்கள்’ என்று வேலுக்கண்ணு கேட்க, ஒரு ஒரு வகை ருசியையும் பார்த்து வருகிறேன். எது மனிதரை அதிகம் ஆட்டிப் படைக்கிறது என்று தெரிந்து வருகிறேன்.

இதலாமென்ன ஒரு தினத்தில் நான் வந்து சொல்லி நிறுத்து என்று சொல்ல உடனே நீங்கள் நிறுத்தி விடும் காரியமா? இன்று சொல்லிவைத்தால் நாளை எவரையேனும் ஒருத்தரை தொடும். அந்த ஒருத்தர் புரிதலுக்கு என் சில சுயபரிசோதனை எனை எரிக்கும் எனில்; எரிக்கட்டும். வெளிச்சம் தரும் விளக்கில் திரியாய் எரிய ஒரு உயிர் போனால் போகட்டுமே” என்று சொல்லி நிறுத்த, சுற்றி இருந்த அவர்கள் உணர்ச்சிவசப் பட்டனர்.

பின் ஆசுவாசப் பட்டு, மிக்க மரியாதையும் அன்பையும் அவரிடத்தில் காட்டினர். சற்று நேரத்தில் வாங்கியதை எல்லாம் திருப்பிக் கொடுத்துவிட்டு, வலுக்கட்டாயமாய் அதற்குப் பணமும் கொடுத்துவிட்டு, சந்திரோதயன் அங்கிருந்து புறப்பட்டார்.

அவர் வெளியே வருகையில் ஒவ்வொன்றாய் அவர்கள் கேட்டது பேசியதெல்லாம் நினைவில் ஊறிக் கொண்டே இருந்தது. அந்நேரத்தில், திடுக்கென சொல்லிவைத்தாற்போல் அந்த கிணற்றில் விட்ட இரண்டு மீன்களின் நினைவும் அவருக்கு வந்தது. ஒரு நொடி நின்று அந்த கிணற்றின் அருகில் சென்று எட்டிப் பார்த்தார். அவைகள் துள்ளிக் குதித்து விளையாடிக் கொண்டிருந்தன.

ஏதேனும் அவைகளுக்கு உண்ண கொடுக்கவேண்டுமே என்றெண்ணி அக்கம்பக்கம் சுற்றி தேட, ஒரு ஓரத்தில் ஓர் எச்சில் இலை வீசப் பட்டிருந்தது. அதைப் பிரித்து, அதில் மிச்சம் வைக்கப் பட்ட கொஞ்சம் சோற்றை அள்ளி அந்த மீன்களை நோக்கி கிணற்றில் வீசினார்.

அம்மீன்கள் அதை எட்டிப் பிடித்துக் கொண்டு அண்ணாந்து மேலே பார்த்தன. இனி தன் வாழ்நாளையெல்லாம் அவரின் நன்மைக்கு வேண்டியே பிரார்த்தித்துத் தீர்க்க எண்ணின போலும் அம்மீன்கள். அவர் அதையெல்லாம் எதிர்பார்த்திராதவராய் தோள் பையை கழற்றி மடித்து தன் கக்கத்தில் வைத்துக் கொண்டு தெருவின் ஓரமாய், பின்னால் வரும் வண்டிகளுக்கு வழிகொடுத்தாற்போல் நகர்ந்து நகர்ந்து எதை எதையோ யோசித்தவராய் நடந்துப் போனார்.

இம்மீன்களுக்கு மட்டும் உள்ளூர; என்றேனும் ஓர் நாள் இந்த மணித ஜென்மம் தன்னை கொன்று தின்பதை மெல்ல மெல்லவேணும் நிறுத்திக் கொள்ளும் என்ற நம்பிக்கை நிறைவாய் இருந்தது.

இருப்பினும் அது அவைகளின் பகல் கனவெனப் பட்டிருக்கும் சனியாண்டி விலாசின் உள்ளே பத்து அறுத்த மீன்களை அள்ளிப் பெரிய எண்ணெய்ச் சட்டியில் மசாலா தடவி போட்டு வறுத்துக் கொண்டிருந்த மணித இனத்திற்கு!! வெளியறையில் அமர்ந்து அவைகளின் வாழ்நாள் கனவுகளை தன் நாக்கு ருசியினால் தின்று தீர்த்துக் கொண்டிருக்கும் இதர மனிதஜென்மங்களுக்கு!!
——————————————————————————————-
வித்யாசாகர்

Posted in மீனும் மீனும் பேசிக்கொண்டன.. | Tagged , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்