50. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

காவியங்களாய்
பல காதல் –
காலங்காலமாய் உண்டு!

கால்கொலுசின்
சப்தம் கேட்டு
காதல் வந்த நம்
உள்ளூர் கதைகளும்
உண்டு!

ஜாதி எரிந்து
உயிர் கொளுத்திய
அரக்கத் தன –
சம்பவங்களும் உண்டு!

மதம் தனக்கு
இரையாக்கிக் கொண்ட
காதலர்களின் கதறலில்
பெற்றோர் –
தனக்கான மானத்தை
மட்டும் வென்று
மனிதம் கொன்ற அவலமும் உண்டு!

ஒருதலைக் காதலென்றும்
தோற்றுப் போன –
அர்த்தம் புரிந்தும்,
பிரிவில் மீளாத இதயங்கள்
தன்னை தானே கொன்று
விஷ குப்பிகளை விநியோகம் செய்த
அறியாமைகளும் ஏராளமுண்டு!

தோழமை வஞ்சம் தீட்டி
விதைத்த நஞ்சால்
பிரிந்த இதயம் பிளந்து
உயிர் துறந்த துரோகங்கள்
ஒவ்வோர் ஊரின் எல்லையிலும்
நினைவுகளாய் –
ஒட்டிக் கொள்ளாமலில்லை!

பெற்ற பிள்ளையின்
மனசு நோகுமோ,
பாடம் கெடுமோ;
நம் சந்தேகத்தில் குழந்தை
மனம் வெந்து சாகுமோ
என்றெல்லாம் நம்பிய பெற்றோரின்
மூச்சை அடக்கி –
ஊர்விட்டோடி சுயநல சொர்க்கம் பூண்ட
காதல் கசப்பில் கதகதத்த
அசிங்க பிழைப்புகள் ஆங்காங்கே
தென்படாமலில்லை!

இதெல்லாம் தாண்டி
யார் மனமும் நலுங்காத
மீளாக் காதலாய்
காலம் வென்ற
ஏதோ ஒருசில
நொடிப் பொழுதுகளை எண்ணி
இதயம் திறந்து வாழும்
என்னை போன்றவனுக்காய் – வா;
காதலி –
காதலின் மொத்த அர்த்தத்திற்கும்
அன்பொன்றே தீர்வென –
வென்று காட்டுவோம்,

காதலை வென்று தீர்ந்ததில்
காலம்காலமாய் முரசு கொட்டாமல்
மூட்டை பையில் முடைந்து போன
பெண்ணியத்தால் –
தலைகுனிந்து – நடக்கும்
ஏதோ ஓர் பெண்ணின்
சுதந்திரத்தையாவது –
நம் காதலின் கற்பித்தல்
மீட்டுத் தரட்டும்; வா!

Posted in காதல் கவிதைகள் | 25 பின்னூட்டங்கள்

49. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

பேருந்தில் –
நீயும் நானும்
அருகருகே அமர்ந்து
செல்கிறோம் –
மனதளவில் தூரம் தான்
வானமும் பூமியுமாய்
நீள்கிறது.

வா ஒரு சின்ன
தொடுதலில்
பேசலில்
முத்தமிடலில்
மனமொன்றி வாழ்தலில்
வானத்தையும் பூமியையும்
ஒன்றாக்குவோம்; வா!

Posted in காதல் கவிதைகள் | 4 பின்னூட்டங்கள்

48. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

த்தனை லட்சியங்கள்
உனக்கும் எனக்கும்;

படிக்க வேண்டும்
நன்றாக வளர வேண்டும்
சமூகம் புரியவேண்டும்
எதையேனும் சாதித்து –
நான் – இன்னார் பிள்ளையென்று
சொல்லல் வேண்டும்

திருமணத்திற்கு முன்
என் உறவுகளுடனான இருப்பை
முழுதாய் வாழவேண்டும்

என் அன்பில் பிணைந்தென் குடும்பம்
உன்னை முழுதாய் ஏற்கும் வரை
உனக்காய் –
காத்திருக்கவும் வேண்டும்.

இதலாமென்ன
எனக்கான லட்சியங்களா?

இல்லை இல்லை
நானென்பதன் அர்த்தம்
நீயும் தானே!

Posted in காதல் கவிதைகள் | 6 பின்னூட்டங்கள்

47. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

லகெல்லாம்
எத்தனையோ பேர்
காதலிக்கிறார்கள்;

காதலில் தோல்வி
என்கிறார்கள்;

காதலால்
தற்கொலை என்கிறார்கள்;

காதலித்தால்
தனிக் குடும்பமாய்
போவோம் என்கிறார்கள்;

காதல் ஏதோ
கொடுப்பதும்
வாங்குவதும் என்கிறார்கள்;

அதலாம் தான்
காதலென்றால் –

யாரேனும் கேட்கும் போது
நீயும் நானும்
காதலிப்பதாய்
சொல்லவே சொல்லாதே.

காதலிப்பது –
யாரிடமும் சொல்வதற்கல்ல
காதலிக்க.

காதலென்பது –
எனக்கும் உனக்குமான
அன்பை
உடனுள்ளோருக்கும்
பறைசாற்ற.

காதலென்பது
எங்கோ பிறந்து
எப்படியோ வளர்ந்து சேரும்
இரண்டு ஆண் பெண்
பாலினத்திற்குள் இருக்கும்
உறவை –
மனதால் சேர்த்துவைக்க.

காதலென்பது
நமக்குள்ளிருந்து
சமூகம் வரை எட்டி-
ஜாதிமத பேதம் களைந்து
காதலாய்.. காதலாய்.. காதலாய் பரவ!

Posted in காதல் கவிதைகள் | 6 பின்னூட்டங்கள்

46. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

னக்கும் எனக்கும்
ஆயிரம் –
பொருத்தமுண்டோ இல்லையோ
எதையும் விட்டுக் கொடுக்க
முனைந்ததில் –

எதையும் ஏற்றுக் கொள்ள
மனதொத்துப் போனதில்

வீட்டில் கேட்காமலேயே
கொடுத்துக் கொண்டோம்
நம் காதலுக்கான சம்மதத்தை!

Posted in காதல் கவிதைகள் | 4 பின்னூட்டங்கள்