24, சப்தங்களால் ஆகும் உலகு..

எத்தனை எத்தனை
சப்தங்கள்
ஒவ்வொரு சுவருக்குள்ளும் (?)

மண்  நனைந்து
பிசைந்து
இறுகி
கல்லாகி
சுவர்களுள் அடங்கியது வரை
வீடு நிறைந்த சப்தங்களே
சப்தங்களே எங்கும்..,

அத்தனைச்
சப்தங்களையும்
தனக்குள் வைத்துக்கொண்டு
மௌனத்தை மட்டுமே
நமக்குத்
தருகிறது வீடு;

நாம்
எண்ணற்ற மௌனத்தை
உள்ளே
வைத்துக்கொண்டு
வெளியே சப்தங்களாகவே
வெளிப்படுகிறோம் (?)!

சப்தங்களே
நமை சமச்சீரிலிருந்து
குறைக்கிறது –
என்பது தெரிந்தும்,
சப்தங்களாகவே
வெளிப்படுகிறோம்;

சப்தத்தை
உதறி
உதறி
கடைசியாய் மிஞ்சும் நிசப்தத்தில்
ஞானமிருப்பதாய் அறிந்தும்
சப்தத்தில் துவங்கி
சப்ததிலேயே முடிகிறது
நம் அதிகப்பேரின் நாட்கள்..

சப்தத்தோடு
வீட்டை அடைத்துக் கொண்டு
அமைதியைக் குலைக்கும்
மனிதர்களை
வீடும் மன்னிக்கிறது
சுவர்களும் மன்னிக்கிறது
வீட்டிற்கும் சுவற்றிற்கும்
நாம் அமைதியாகிவிடுவோமென்று
நம்பிக்கை;

நம்பிக்கையை
சப்தங்களை யகற்றி
மனதுள் புதைத்துக் கொண்டுப்
பார்க்கிறேன் –

இதில்
யார் மேல் ?
யார் கீழ்?

வீடா ?
அல்லது வீட்டைக் கட்டும்
மனிதர்களா?

என்னைக் கேட்டால்
வீடு மேலென்பேன்!!
—————————————————
வித்யாசாகர்

Posted in பறந்துப்போ வெள்ளைப்புறா.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வசவு; வசவு வாங்களையோ வசவு.. (வா.செ.ஒ.நி – 20)

விரல்களை விட்டு ஒரு பத்து குற்றங்களை, தான் செய்தது பிறர் செய்ததெனப் பிரித்தெடுத்துக் கொள்ளுங்கள். எல்லோரும் ஒருசேர சாகக்கிடக்க, உயிர் போகவிருக்கும் கடைசித் தருவாயில் ஒரு சட்டியில் அமிர்தம் ஊற்றி கிடைக்கிறதென்று வைத்துக்கொள்ளுங்கள். அதை குடிப்போறெல்லாம் சாகாமல் பிழைத்துக் கொள்வர் என்பதால், இந்தா இங்கிருந்து ஆரம்பித்து யார் யாருக்கு வேண்டுமோ வேகமாகக் குடித்துவிடுங்கள்’ என்று சொல்லிக்கொடுத்தால் உடனே நாமென்ன செய்வோம்? அதும் அந்தச் சட்டியை வாங்கிப் பார்த்தால் அந்த சட்டியில் காணக் கிடைத்ததாக ஒரு சொச்சமே இருப்பதாகத் தெரிகையில் முதல் மினர் அமிர்தத்தை ‘அவன் குடிக்கட்டுமே, அவன் குடித்து பிழைத்துக் கொள்ளட்டுமே, பிறகு நான் குடிக்கிறேன் என்று சொல்லி யாரேனும் ஒருவரேனும் நாம் பிறருக்கு விட்டுதந்துவிட்டு தான் குடிக்காமலிருக்க தயராகயிருப்போமா ?

மடக்கென்று பாதி சட்டியில் உள்ளதை எடுத்து அடுத்தவன் பிடுங்கிக் குடிப்பதற்குள் தானே குடித்துவிட்டு மகிழும் சுயநலப் புழுக்கள் தானே நாமெல்லோருமே?

யாரையும் இங்கே குற்றம் சொல்வதற்கில்லை. நாமெல்லோருமே அப்படித்தான். விட்டுக்கொடுத்துப் பழகாததால் இன்றைய நிலவரப்படி நாம் அப்படித் தான் ஆகிப்போயிருக்கிறோம். அதலாம் ஒருபுறமிருக்கட்டும், முதலில் அந்தப் பத்து குற்றங்களை ஒரு காகிதத்தில் எழுதிக்கொள்ளுங்கள். எது செய்தால் செய்தவர் தீயவர் என்றுக் கருதப் படுவரோ அதையெல்லாம் எழுதுங்கள்.

அப்படி எழுதி வந்தால் முதலில் எது வரும்? பொய், பொறாமை, தீண்டாமை, பேராசை, திருட்டு, புறங்கூறுவது, பிற உயிரரைக் கொல்வது, உயிர்களை உழைப்பை அவமதிப்பது, உழைக்காதிருப்பது, ஏமாற்றுவது, இன்னும் தற்கொலை மோசடி சுயநலமென பட்டியல் நீண்டுக்கொண்டே போகுமில்லையா?

இதில் எல்லாம் செய்பவர், பாதி செய்பவர், கொஞ்சம் மட்டும் செய்பவர், இல்லை எப்பொழுதேனும் கொஞ்சம் பொய் சொல்வேன், அல்லது பொறாமை படுவேன், பேராசையில் வீழ்வேன் என்பவரென; குற்ற மூட்டைகளை தன்முதுகில் சுமந்துகொண்டு, பிறரைப் பார்த்து ச்சீ என உடல் கூசும், பொறுப்பற்ற ஜென்மங்களாகத் தானே நம்மில் அதிகம்பேர் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

இதற்கெல்லாம் மூலக்காரணம் நாம் மட்டுமா என்று யோசித்தால், இல்லை. இதலாம் நாம் கற்றது. இப்படித்தான் நமக்கு வாழ்க்கை உண்மைக்கு அப்பாற்பட்டோ அல்லது யதார்த்தங்களை மீறியோ கற்பிக்கப்பட்டுள்ளது. நம்மில் நிறையப்பேர் ஒழுங்கற்று தவறாகவே வாழ்ந்து வளர்ந்து தன்னை சரியென்று மிகக் கெட்டியாக நம்பிக்கொண்டுள்ளோம்.

இதில், நாம் அடுத்தவருக்கு வேறு கற்றுத்தர முயன்றால் இவ்வுலகு என்ன கதியாகும்? இப்படி நானும் கெட்டு பின் அதையே சரியென்றெண்ணி, பிறரையும் கெடுத்துவிட்டு, மொத்தப் பேரை நாம் கிணற்றில் விழாமலே சாகப்போகும் பொதுவழிச் சாலையில் பயணிக்கவைத்த பாவமான பிறவிகள்தானே நாமெல்லாம்?

ஆக, நமது மொத்தக் குற்றங்களையெல்லாம் எடுத்து ஆராய்வதெனில், காடழித்தாலும் எழுத வெள்ளைத்தாள் கூட இல்லாமல் போய்விடலாம் என்பதால், குற்றங்களை விடுத்து, அது துவங்கும் ஒரு புள்ளியான ‘பார்வை’ என்பதை மட்டும் சற்று ஆராய எடுத்துக்கொள்வோம். காரணம் பார்வையில்தான் நாம் படிக்கிறோம். பார்த்துப் பார்த்துத்தான் வளர்கிறோம். பார்த்து நட என்றுச் சொல்லிச் சொல்லியே நம் சந்ததிகளை வளர்க்கிறோம். ஆக, நம்முடைய அத்தனை முயற்சியும்’ வெற்றியும்’ தோல்வியும்’ வாழ்தலும்’ அழிதலும்’ எதுவாயினும் சரி;  எதைக் கண்டோமோ அதன்படி பின் வாழ்வதாகவே உள்ளதொரு இயல்பைத்தான் இயற்கை நமக்கு காலங்காலமாக கற்றுத்தந்திருக்கிறது.

அதனால் எதைப் பார்க்கிறோமோ அதுவாகவே மாறிப்போகிறோம். எப்படிப்பட்ட சுற்றத்தில் வளர்கிறோமோ அப்படிப்பட்ட குணங்களைக் கொண்டே நம் உயிர்வட்டத்தின் முதல் புள்ளி துவங்குகிறது. முன்பெல்லாம் பார்த்தீங்கனா தெரியும், வீட்டிற்குமுன் அதிகப்படியாக ஒரு வேப்பமரம் வளர்ந்திருக்கும். அந்த வேப்பமரம் முழுக்க முழுக்க வெளிக்காற்றை உள்ளிழுத்து கரியமிலவாயுவை தான் செரித்துக்கொண்டு, பிராணவாயுவை வெளியே விடும். அதோடு அதன் இலைகள் உதிர மூளிகையாகவே கீழ் விழும். அதன் பழத்தை காக்கை தின்று கொட்டை போட அதுகூட மருந்தாகம். அதன் பட்டை வேர் என எல்லாமே பயனுற்று கடைசியில் மிஞ்சும் நெடுமரம் கூட வீடு கட்டவும், வாசகால் செய்யவும் உதவும். அப்படி வாழணும்டா மனுசன்னு அந்த மரத்தைப் பார்க்க பார்க்க நமக்கு புத்தியில் உரைக்கும்.

அப்படி உரைக்கனும்னுதான் மரத்தை சாமின்னு கும்பிட்டுது நம்ம சனம். நன்றியை வணக்கத்தின் வழி சொல்லி இயற்கைக்குக் கூட தான் கடனற்று வாழவே பழகியிருந்தோம் நாம். வாழும் உயிர்களைக் கண்டு வாழ்க்கையை செதுக்கினோம்.

இன்று உண்பது உறங்குவது நடப்பது பறப்பது என உயிர் வாழும் அத்தனையையும் நாம்ப கற்றுக்கொண்டது இயற்கையை பார்க்கமுடிந்ததால் தான். இயற்கையிடமிருந்துதான்.

பறவையை கண்டான் விமானம் படைத்தான்
பாயும் மீன்களில் படகினை கண்டான்
எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்

என்று பாட்டாலும் பார்ததாலும் பல கதைகளை கேட்டதாலேயே இத்தனை தூரம் வளர்ந்திருக்கிறோம் என்பதில் ஒருதுளி சந்தேகமும் இல்லை. எனில், நம் பிள்ளைகள் பார்க்கவும், நமைப் பார்த்து வளரவும்  இன்று நாம் எதை உயர்வாக மிச்சம் வைத்திருக்கிறோம்?

உன் அப்பா அம்மா உனக்கு சிலதை தரவில்லை, அல்லது சரியாக சிலதை சொல்லிக்கொடுக்கவில்லை, சரி, நீ தவறு இல்லை. உன்னை மன்னிக்கலாம். ஆனால் இன்று நீயும் அதே தவறுகளை செய்தே வாழ்ந்து மடிகிறாயே, நீயென்ன செய்தாய்? உனை உலகிற்கு தந்த இந்த மண்ணிற்கு நீ எதை விட்டுச் செல்கிறாய்? நாளை உனது பிள்ளைகள் உன்னை கேள்வி கேட்குமே, அப்போதுனக்கு வலிக்காமல் சொல்ல உன்னிடம் என்ன பதிலுண்டு?

என் அப்பன் பாட்டன் தண்ணி அடிச்சான், பீடி சுருட்டு வழியே புகை குடித்தான், புகையிலை போட்டான், பொய் சொன்னான், பிறர் பொருட்களை அபகறித்தான், ஆசையிலேயே செத்தொழிந்தான், அவன் போய்ட்டான் சரி; நானும் அதையே செய்தால், நாளை என் பிள்ளைகளுக்கு என்ன நல்வழி கிடைக்கும்?

எந்த திரைப்படம் பாரு, “குடி குடியை கெடுக்கும், புகை நாட்டுக்குப் பகைன்னு” போடுற. போட்டாமட்டும் போதுமா? குடிகாரன் ஒருத்தன் குடிக்க கடைக்கு வரான், சில்லறை எடுக்க அவன் பின்னால எட்டி கஜானா திறப்பதற்குள்ள மேலப் பார்த்தா “குடி குடியை கெடுக்கும்” என்று பலகை வைக்கப்பட்டிருக்கு. அப்படியெல்லாம் வைத்துவிட்டு காலத்திற்கும் நாம் குடிகாரர்களாகவும் போதைக்கு அடிமையகவுமே வாழ்ந்துத் தீர்த்தால் நமது வாழ்க்கை சரியாக முடியுமா?

யோசித்துப்பாருங்க எத்தகைய முட்டாள்தனமிது? நானே குற்றம்னு சொல்வேன், ஆனா நானே செய்வேன். அதுபோல, நான் செய்வேன் அதை யாரும் மறுக்கக்கூடாது, ஆனால் என் பிள்ளைகள் செய்தால் அதை நான் மறுப்பேன்.  தொலைக்காட்சியிலக் காட்டுவேன், திரைப்படத்துலக் காட்டுவேன், தெருவில கவிதை எழுதி ஒட்டுவேன், கதை சொன்னாக்கூட குடியினைப் பற்றி பான்பராக் போதை பற்றியெல்லாம்கூடச் சொல்வேன், எல்லாம் கருமத்திலும் எல்லாம் கெட்டதும் இருக்கும். கேட்டா நான் சமகாலத்தை பதிய முயற்சிக்கிறேன்னு சொல்லி பொதுப் பார்வையிலிருந்து இன்று நான் தப்பித்துக்கொள்ளலாம். நாளை என் மனப்பார்வையை உற்றுப்பார்க்கையில் காலத்திற்கும் அது எனை குற்றவாளியாகவே வைத்திருப்பதை உணர்வேனே; அதை யாரால் தடுத்திடமுடியும்?

ஒரு செயலை பிறர் செய்யக்கூடாது எனில் முதலில் அதை நாம் செய்யக்கூடாது. பிறகு மெல்ல மெல்ல அதை பிறரையும் செய்யவிடக் கூடாது. பிறரை தடுக்கக் கூட போஸ்டர் அடிச்சி ஓட்டனும்னு இல்லை, மனதால் நல்லதை நடப்பவாறு நினைத்தால் போதும். தீயது தன்னைத்தானே மாறும். ஒரு செயல் தப்புன்னா அதை செய்ய உடம்பு கூசனும். அதைப் பற்றி காட்சியோ கேளியோ, கருத்தோ ஒன்னும் சொல்லாம சட்டுன்னு தீயதை விட்டொழிக்கணும். கூடி நான்கு நண்பர்கள் பேசினால்கூட தவறுகள் அற, பொய்யும் பேராசையும் பிறருக்கான தீங்கும் நீங்க நல்லொழுக்கத்தைப் பற்றிப் பேசிப்பழகனும்.

வெறுமனே முகத்துக்கு நேரா கேள்வி கேட்கிறேன் பாருன்னு, புகைப் பிடித்தல் குற்றமா? தண்ணி அடிக்கிறதெல்லாம் ஒரு தவறா? பாக்கு புகையிலை எல்லாம் இன்று சாதாரணம்னு பீத்திக்குற அல்லது குற்றங்களை நேர்மைபடுத்துற பழக்கத்தை முதலில் விடுங்கள். ஒரு மயக்கம் வந்தா மருத்துவம் பார்க்கும் அறிவுள்ள நாம், காசுகொடுத்து தன்னை மயக்கத்தில் ஆழ்த்திக் கொள்வது முட்டாள்தனமன்றி வேறென்ன?

நம்மப்பா அம்மா இது தப்புன்னு சொன்னாங்க திருத்திக்கொண்டோம். ஆசிரியர் இதலாம் தவறுன்னு சொல்லித்தந்தார் தவறை விட்டு நகர்ந்துக் கொள்கிறோம். நன்றாகத்தானே வளர்ந்து வருகிறோம், இடையே புகுந்து எல்லாம் சரியென்று சொல்லி சொல்லிக் கெடுக்க கெடுக்க நாம் நமது உண்மைநிலையிலிருந்து விலகி மீண்டும் பெரிய பள்ளத்தினுள் விழுந்துப் போகிறோமென்றால்; தவறு எங்கே நடக்கிறது? தவறை சரியென்று ஏற்றுக்கொள்வதில் தானே தவறிருக்கிறது. தவறை இப்போதைக்கு மட்டுமென்று அங்கீககரிக்கிற அந்த ஒற்றைப் புள்ளியை முதலில் மனதிலிருந்து கலைத்துவிடுங்கள். இன்று ஒருநாளைக்கு மட்டுமென்று எண்ணி தனது நிகழ்காலத்தை இழந்த அத்தனைப் பேருமே எதிர்காலம் முழுக்க துன்பப் படுவோமென்பதை உணருங்கள்.

சிலர் இன்னும் பெரிய வேடிக்கை செய்வர். குழந்தைகளை விட்டே சிகரெட் வாங்கி வரவும், வெளிவூர் போனால் சாராயம் வாங்கி வரவும் சொல்கிறார்கள். தோளுக்கு மேல் வளர்ந்தால் அவன் தோழன் தான். அந்த தோழன் நன்றாக வாழவேண்டாமா? சமுதாயத்தில் பிற உயிர் பற்றிய அக்கறையுள்ள நல்ல மனிதனாக அவனோ அவளோ விளங்கவேண்டாமா? மரத்தில் ஒரு இலை பறிப்பதுகூட பாவமென்று அஞ்சவேண்டிய மனசு ஆல்கஹாலுக்கும் நிக்கோடினுக்கும் அடிமையாகிச் சாவதா?  ஒரு செயல் தீது, உடலுக்குத் தகாது, இந்த சுற்றுச் சூழலை அது பாதிக்கும் எனில் அதை செய்யத் தவிர்ப்பதே அறிவுக்கு உகந்தது. பிறர் வாழ்வை உடம்பை உயிர்களை மெல்ல மெல்ல நசுக்கி மனதை கெடுக்கும் செயல் குற்றமன்றி வேறில்லை. அதிலும் அது மேலும் உள்ளூறி நம் எதிர்காலத்தையும் பாதிக்கும் எனில் அது பெருங்குற்றம்.

ஒரு சிகரெட்டின் புகை அருகில் உள்ளோரையும் சேர்த்து பத்துப் பேரினுடைய சுகாதரத்தையாவது கெடுக்கும். ஒரு நாள் அருந்தும் விஸ்கி பீயரில் உள்ள ஆல்கஹால் காலத்திற்கும் நமக்குள் தங்கிப்போகும் நாற்றத்தின் பெருவெளிக்கான ஒரு துளி நஞ்சாகவேனும் கலந்துப்போகும். எப்போ நம்மால அறிவுக்கு முன் நின்று சரியாகச் சிந்தித்து’ நல்லதை எடுத்து கெட்டதை விட்டுவிலகி’ மேன்மையாக வாழும் மனவுறுதியோடு இருக்கமுடியவில்லையோ, பிறகெங்க பொய் பொறாமை அவநம்பிக்கை அவதூறு அக்கறையின்மை பேராசை சோம்பல் பலவீனமென பல தீயதை விட்டுவிலகி நின்று நன்மையை நோக்கிப பயணிக்க இயலும்?

முதல்ல நாம நம்ம மாத்தனுங்க. கொஞ்சம் கொஞ்சமா நம்மை நல்லதைமட்டுமே நோக்கித் திருப்பனும். எப்படியோ கெட்டுப் போச்சு சமூகம், எங்கயோ அதோட கலந்துவந்து நின்னுட்டோம். ஆனா இப்போகூட நமக்கு சிந்திக்க அவகாசம் இருக்கே? சரிசெய்து வாழ மிச்ச வாழ்க்கையிருக்கே? நிம்மதியும் சந்தோசமும் உண்மையின் பூரிப்புமா வாழ எதிர்காலச் சந்ததியின் வாழ்க்கை முழுசா இருக்கே? அதை எண்ணி நமை நாம் சரிசெய்துக்கணும்.

லஞ்சம் வாங்குவது குற்றம். பிறருக்கு உதவிக்கு இல்லமா நாம் பொருள் சேர்ப்பது குற்றம். பிறர் வலியை தனதாக உணராது சுயநலக் கிடங்கில் வீழ்ந்திருப்பது குற்றமென ஆயிரம் குற்றங்களை சரிசெய்ய நமக்கு முதலில் நடத்தை சரியா இருக்கணும். யோசித்துப் பாருங்க; நாம சுவாசிக்கிற சுவாசத்தின் வழியே உள்சென்று உற்றுப் பார்த்தால்தான் பிறப்பின் ஞானமே கிடைக்கும் என்கிறார்கள் யோகிகள். ஆனா ஒரு சிகரெட் பத்துப் பேரோட சுவாசத்தை கெடுக்குது, ஒரு மாச சிகரெட் செலவு ஒரு வீட்டோட ஒரு வார சாப்பாட்ட முழுங்குது, ஒரு வருட செலவுல ‘ஒரு பெண் மணம் முடிக்க பணம் கிடைத்து ஒரு முதிர்கன்னிக்கு வாழ்க்கையை தருது’. ஆக; காலம் முழுதும் நாம் குடிக்காத ஓட்கா விஸ்கியும், புகைக்காத வெண்சுருட்டும் நல்லவனெனும் நற்பெயரை தந்து வாழையடி வாழையாக நமை அறிவோடு வாழவைக்கிறது.

பழகிப் பார்த்தீங்கன்னா தெரியும். சுத்தமா கண்ணியமா வெண்மையா பொய்யின்றி வாழ்வதில் ஒரு மகிழ்ச்சி இருக்கு. நிம்மதி இருக்கு. உண்மையின் ஆனந்தம் நாம் உண்மையாக வாழ்வதன்மூலம் தான் வெளிப்படும். பலா வெறும் காயாக மட்டுமே இருந்திருந்தால் அது ஒரு முற்களின் கூட்டாகத்தான் இருந்திருக்கும். முழுக்கப் பழுப்பதால்தான் அது சுவைகூடி உள்ளே உணர்வில் இனிக்கிறது. அப்படி நாமும் நன்மையால் பழுக்கப் பழுக்க ஆன்மாவின் இனிப்பை உணரமுடியும்.

ஒரு குவளை சாராயமோ அல்லது எந்தவித போதையையோ கொடுத்து, நம் எண்ணங்களை சிதறடித்து, மொழியை மூச்சுத் திணறவைத்து, உடம்பை சோர்வாக்கி, அதற்கெல்லாமும் நம்மிடமிருந்தே பணத்தையும் குணத்தையும் பிடுங்கிக் கொள்வோரை எவராயினும் எதிர்ப்போம். இன்றைக்கில்லை என்றாலும், நாளைக்கேனும் இழுத்துமூடுங்கள் மதுக் கடைகளையும் போதை தொழில்களையும். இன்றைக்கு சிரித்துக்கொண்டும் விளையாடிக்கொண்டும் புத்தகப் பை நிறைய அறிவை சுமக்கும் பிள்ளைகள் என்றைக்குமாய் நல்லறிவை கொண்டே வளர நாமே முன்னிற்போம்.

எப்படி ஒவ்வொன்றையும் இயற்கையிடமிருந்து கற்று உலகத்திற்குத் தந்தோமா, அப்படித்தான், நம்மையும் இயற்கையோடு வைத்து பல கண்கள் உற்றுப் பார்த்துக்கொண்டிருப்பதையும் உணர்வினால் அறிவோம். யாரும் பார்க்கவில்லையே என்று எவ்வித தவறை செய்வதைக் காட்டிலும், நான் பார்க்கிறேனே என்று தவறுகளைச் செய்ய தனக்குத்தானே அஞ்சுங்கள். நமக்குப் பிறக்கும் குழந்தைகள் அழியா செல்வங்களை இம்மண்ணிற்கு விட்டுச் செல்பவர்களாகப் பிறக்க நாம் அத்தகு உயர்ந்த தகுதியோடு வாழவேண்டுமென்று ஆசை கொள்ளுங்கள். எண்ணம் கொள்ளுங்கள். முழு லட்சியம் வைத்துக்கொண்டு உறுதியோடு நடைபோடுங்கள். அழுக்கென்று மனதுள் ஊறிக்கிடக்கும் மனமாசுகளை உறுதிகொண்ட மனதால் கழுவிக்கொள்ளுங்கள்

வளரும் குழந்தைகளுக்கு எண்ணம் சுத்தம், மனது புனிதம், சிந்தனையில் தெளிவு, வளர்ச்சியில் விவேகம், வேகத்தோடு பலம், பலத்தோடு பணிவு, பண்பில் நிறைவு, குறையில்லா நினைவாற்றல், இயற்கைக்கு எதிரில்லா உறுதி என எல்லாம் இருக்க அவர்கள் மகிழ்வோடு வாழட்டும். மண்ணின் பெருவளத்தின் அடையாளங்களாய் திகழட்டும். எல்லாவற்றிற்குமாய் சேர்த்து முதலில் கையிலிருக்கும் வெண்சுருட்டையும் பீடியையும் போதை பொருட்களையும் மதுக் கோப்பையினோடு சேர்த்துக் கீழே விடுங்கள். சட்டென விட்டுவிடுங்கள். இந்த நாள், இந்த நிமிடம், இது சரியென்று அறிவில் உரைக்கிற இந்த நொடியிலேயே எல்லாவற்றையும் உதறிவிடுங்கள். உள்ளே இழுக்கப்பட்டுவிட்டதால் உலகை அழிக்கும் புகையும், விழுங்கிவிட்டதால் கண்ணீரில் நனைத்து மிதக்கச் செய்யும் போதையின் ஈரமும் இதற்குமுன் தொட்டதே கடைசியானதாக இருந்துவிட்டுப் போகட்டும்..

வித்யாசாகர்

Posted in வாழ்வியல் கட்டுரைகள்! | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

23, தொலைந்துப்போன தெய்வீகம்..

குறிப்பு: இந்தக் கவிதைகள் தெய்வீக மருத்துவர்களைப் பற்றியதல்ல; தெய்வீகத்தை தொலைத்தவர்களுக்குச் சமர்ப்பணம்..

பிரசவத்தின்போது
இரண்டேகால் கிலோதானிருக்கு குழந்தை
ஆனாலும் மூச்சடைச்சிபோகும்
அறுவைசிகிச்சை செய்யவேண்டும்
செய்யட்டுமா என்றார்கள்,
‘மருத்துவர் சொல்கிறாரே
சரி செய்யுங்கள்’ என்றேன்

ஆனால் நாற்பத்தைந்தாயிரம் ஆகும்
இப்போதே கட்டு என்றபோது
கொஞ்சம் வேதனையாகத்தான் இருந்தது;

என்றாலும்
இரண்டாவது குழந்தை
சுகப்பிரசவத்தில் பிறந்ததெல்லாம் வேறுகதை;

பல் ஓட்டை
எது சாப்பிட்டாலும் அடைத்துக் கொள்கிறது
ஒரே தொல்லை என்றேன்,

உற்று உற்று பார்த்துவிட்டு
எங்கே வேலை எவ்வளவு சம்பளம்
எல்லாம் கேட்டுவிட்டு
உள்ளே சொத்தை இருக்கு
உடனே ரூட் கேணல் செய்யனும்
என்றார்,

சரி
செய்யுங்கள் என்றேன்

ரெண்டு பல்லு சேர்ந்தாப்புல
இருக்கு
ரெண்டும் செய்துட்டேன் என்றார்,

மயக்க ஊசியில
ஒண்ணும் தெரியலை டாக்டர்
எவ்வளவு ஆச்சு என்றேன்,

ரூட்கேனல்
வெள்ளி அடைப்பு எல்லாம் சேர்த்து
ரெண்டு பல்லுக்கு பத்தாயிரம்
ஆகுமென்றார்,

பல்வலி போய் எனக்கு
நெஞ்சு வலியே வந்தது;

நிமோனியா காய்ச்சல்
மூக்கில் ரத்தம் வருது
பயப்படத்தான் வேண்டுமோ’ என்றேன்,

ஆமாமா இது கேன்சர்போல இருக்கு
நிறைய சோதனை செய்யனும்
இங்கு பத்துநாள் தங்கனும்
அநேகம் பெரிய மருத்துவரைக்கூட
பார்க்கவேண்டி வரும் என்றார்கள்,
மருத்துவர்மேலெனக்கு சந்தேகமெல்லாமில்லை
செய்யுங்கள் என்றேன்,

ஆனால் ஒரு எட்டு லட்சம்
பத்து லட்சம் வரை ஆகும்
பரவாயில்லையா என்றார்,

பத்து லட்சம்
கேன்சரைவிட பெரிதாகத் தெரிந்ததெனக்கு;

தோழி கையறுத்துக் கொண்டால்
ஆழமா இருக்கே
ஒரு ஊசி போட்டா நல்லதோன்னு
மருத்துவமணை போனோம்

தோண்டிப் பார்க்கணும்
நரம்பு கட்டாயிருக்கலாம்’ என்றார் மருத்துவர்

சரி என்றேன்
மொத்தமாய் அறுவை சிகிச்சையே
செய்துவிட்டு
நல்லவேளை அறுத்துப் பார்த்ததும்தான் தெரிந்தது
உள்ளே சவ்வு லேசா அறுபட்டிருந்தது
தையல் போட்டுவிட்டிருக்கோம்’ என்றார்

விரல்தான்
மடக்கியதும் மடங்கியதே என்றேன்,

அதலாம் மடங்கும்
ஆனால் உள்ளே காயமிருந்தது என்றார்,

சரி மருத்துவர்
சரியாகத் தானே செய்வார்,
எவ்வளவு ஆச்சு என்றேன்

மொத்தத்தில் ஒரு
அறுபதாயிரத்திற்கும் மேலாச்சு
உங்களுக்காக
ஒரு ஐம்பத்தி ஐந்தாயிரம் கொடுங்க போதும்’ என்றார்..

இருநூறோ முன்னூறோ
கேட்டுவிடுவாரோ என்று
பயந்திருந்த எனக்கு
இதயமே நின்றுப்போனது போலாச்சு..

ஆனால்
இப்போதும் எனக்கு
மருத்துவர்மேல் சந்தேகமெல்லாமில்லை,
தோழிக்காக நகையைவைத்து
பணத்தை கட்டினோம்..

மறுநாள் தோழி அழைத்தாள்
சவ்வு என்ன
விரல் போனால் போதுன்னு
விட்டிருக்கலாம்டி
வீட்டில் வசவு தாங்கலை’ என்றாள்

அச்சோ..
அப்படியெல்லாம் சொல்லக்கூடாது
மருத்துவர் காதில் கேட்டால்
அறுவைசிகிச்சை செய்துவிடுவார்’ என்றேன்

அவளுக்கு வலிதான் என்றாலும்
கலுக்கென்று சிரித்துவிட்டாள்..,

வேறென்ன செய்ய
இந்த மானங்கெட்ட சமுதாயத்தை யெண்ணி
எங்களால்
சிரிக்கத்தானே முடிந்தது (?)

காரி அவர்கள் முகத்தில்
உமிழ்ந்துவிடவா முடிந்தது.. ??
—————————————————-
வித்யாசாகர்

Posted in பறந்துப்போ வெள்ளைப்புறா.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

உழைப்பின் வழிகாட்டி மணிக்குத் திருமணம்!!

மிலேச்ச நாடுகளுள்
கோலோச்சிய நாயகன்,
சுழல்மாடிப் பள்ளிகளுள்
சுடரொளிக்கும் சூரியன்;

பகலிரவு பொழுதெங்கும்
விழித்திருக்கும் வீரியன்,
அதர்மமென்று அழைத்தாலோ –
நழுவி தர்மத்தில் வீழ்பவன்;

கடல்போல் விரிந்த மனதை
கேட்காமலே தருபவன்,
உழைக்கும் பணத்தில் பாதியை
உதவிக்கென்றுத் தந்தவன்;

இளைஞர் பட்டாளத்திற்கு
முதுகெலும்பாய் தேய்பவன்,
இனியோர் விதிசெய்ய
இயந்திரவியல் கற்றவன்;

பணத்தைச் சம்பாதிப்பதில்
பழைய குபேரனுக்கே வழிசொல்பவன்,
இருப்பதை அனுபவிக்க –
எளிமையை கையாள்பவன்!

எண்ணிலடங்கா சொல்லுள் இப்படி
பேறு பல வாய்த்தவன் – இன்று
மனையாள் கைகோர்த்து நடந்து
இல்லறத்தைச் சேர்பவன்;

செல்வங்கள் பதினாறும் – அவன்
மனம்போலச் சேரட்டும்,
பெற்ற வயிறு நிறைய – இருவர்
சொந்தங்கள் மகிழட்டும்;

சொர்க்கம் இதுவென்று – இதயக்
கூடுதன்னை அறியட்டும், அதில்
அன்பு அன்பொன்றே நிறைய – வாழ்க்கை
முழுதாய் இவர்க்கு அர்த்தப்படட்டும்!!

வாழ்க தம்பி மணி,
வளர்ந்து –
நலமோடும் வளமோடும் பெருகட்டும்
அவரின் நல்லறம் மிக்க இல்லறமும்!!

பேரன்புடன்..

அண்ணன்
வித்யாசாகர்

Posted in வாழ்த்துக்கள்! | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் – 19

இறுகப்பிடித்துக்கொண்டால் இனிக்கும் உறவுகள்..

கைகளிரண்டும் உடைந்திருக்கையில் பறக்க இரு சிறகு கிடைத்ததற்குச் சமமானது உறவினர் உடனிருப்பது. மேலானதும் போதாதுமாய் இருக்குமந்த உறவுகள்; இருக்கிறார்கள் என்பதே பலம். சிரிக்கையில் சிரிக்கவும் அழுகையில் துடைக்கவும் உடனிருக்கும் உறவுகளின் கைகள் மகத்தானது. கசங்கிப்போன மலர்களின் வாசம்போல உதவிக்கில்லாதபோதும் உறவுகள் இருக்கிறார்கள் என்பது இனிக்கவே செய்கிறது. முரசடிக்கும் கைகள்ஓய்ந்து போனாலும் அடுத்தடுத்து உயிருள்ள கடைசி நொடியிலும் கொட்டும் முரசொலி சப்தம் காதுகளை எட்டித் தொடுவதைப்போல், உறவுகளின் பங்கில் ஒரு புள்ளியேனும் நம் மனதை எட்டி தொட்டுக்கொண்டேதானிருக்கிறது. பச்சைவயலின் ஈரமும் பரந்த வானின் நீளமும் கொண்டு அகன்றிருக்கும் மனசு உறவுகள் சிலரிடத்தில் வெகுவாக இருப்பது நமக்கான நம்பிக்கை கூடுவதன் உச்சமன்றி வேறில்லை.

எனக்கு நீ உனக்கு நான் என்று வாழ்வது; இலை வேருக்கு வெளிச்சம் பாய்ச்சுவதும், வேர் இலைக்கு நீர் பாய்ச்சுவதும்போன்ற இயல்பின் நிறைவன்றி வேறென்ன? காற்றிற்குப் பாகுபாடில்லை, நதி யாரைக் கண்டும் கோபத்தில் நின்றுக்கொள்ளப் போவதில்லை, அலைகள் உதைப்பவரின் காலைக் கூட நனைத்துத் தான் விலகிச் செல்கிறது; பின் மனிதன் மட்டும் தனக்கென வாழ்ந்து தனக்கென்று சாகையில், எந்த புதிய புல்முளைத்து ‘மனிதரை‘ நீ மேலானவனாக வாழ்ந்தாயடா என்றுக் காட்டிவிடப் போகிறது?

சார்ந்திருத்தல், சாய்ந்துக்கொள்ளல், தாங்கிப்பிடித்தல், வாகைசேர்த்தல், வாலிபத் திமிரையும் வாஞ்சை மனதையும் விதைகளாக்கி வருங்காலத்திற்கு விட்டுச் செல்லல்போன்ற நிறைவுகளை மனிதன் வாழையடி வாழையாகப்பெற மனிதருக்கு அன்பின் நெருக்கமும் அதைப் பெருக்கும் உறவுகளின் ஈர்ப்பும் ஒருவருக்கு ஒருவரென அனைவருக்குமே வேண்டும்.

தனித்து அழும் கண்ணீரைப்போல சேர்ந்துமகிழும் கனமும் மனதிற்கு இனிப்பானதென உணர உறவுகளுடன் செர்ந்திருந்துப் பார்த்தல்வேண்டும். நெருங்கி நிற்கையில் சிலவேளை குழப்பங்கள் நேரிடலாம், பிடித்தங்கள் மாறுபடலாம், முரண்படுகையில் கோபம் வரும் சண்டை மூளலாம், உனக்கா எனக்கா என்று சுயநலத்தில் மார்புதட்டி இருவேறாகக் குடும்பம் வெட்டி முறியலாம், முறியட்டுமே. முறிந்து, பின் புரிந்து, அன்பின் ஏக்கத்தில் மீண்டும் சேர்ந்து அணைக்கையில் கூடும் சுகம் பிரிந்திருப்பதில் இல்லையே.

பிறருக்குக் காட்டாத பூரிப்பு, பகிர்ந்துகொள்ளாத வெற்றி, வெளியில் தெரியாத வீரம் ஒருவருக்குள் ஒருவருக்காக மட்டும் வலுத்தென்ன பயன்? இருக்கும் உணர்வை சலிப்பு காட்டி, சிரிப்பு கூட்டி, மலிய மலிய’ கொடுத்துக் கொடுத்து மீளும்’ ஆனந்தக் கண்ணீர் ததும்ப தெரியும் முகம்’ மானுட நீதியை மனிதத்துள் பொத்திக்காக்க ஒற்றுமையின் வழிநின்று முயற்சிக்கும் இக்காலத் தேவையறிந்த முகமன்றி வேறென்ன..?

வெவ்வேறு  பக்கமாக மாறி மாறி வேறு பக்கம் திருப்புகையிலும் வாழ்க்கை வேறுவேறாகத் தெரிகிறது. வெவ்வேறு வண்ணமும் எண்ணமுமாக நாளும் பொழுதும் நொடிக்குநொடி மாறிக்கொண்டே இருக்கிறது. இதில் தனியே நின்று செய்துமுடித்தவை செய்தவையாகவே முடிகிறது, சுற்றத்தோடு அறிந்துச் செய்யப்பட்டவையே சாதித்ததாகிறது. காரணம், மகிழ்ச்சி என்பது பகிர்தலில் இருக்கிறது. சிரியோருக்கு கொடுப்பதிலும், பெரியவரிடமிருந்து பெறுவதிலும் இருக்கிறது மகிழ்ச்சி.

நண்பரொருவர் கார் வாங்கினார். வீட்டிற்குப் போனதும் எப்போதும் போல தனது அறைக்குப் போனார் உடை மாற்றிக்கொண்டு படுக்கச் சென்றுவிட்டார். யாரோ ஒருவர் விவரமறிந்து தொலைபேசியில் அழைத்து ”என்னப்பா கார் வாங்கியிருக்கியாம், சொல்லவேயில்லையே‘ என்கிறார் இமைகள் விரிய. அதற்கந்த நண்பன், இதில் உன்னிடம் சொல்வதற்கு என்ன இருக்கு, எனக்கு லோன் கிடைத்தது அதில் வாங்கினேன். நீயா பணத்தைக் கட்டப்போற மாசம் மாசம்” என்று கடுப்படிக்க அவர் எதிர்முனையில் டப்பென இணைப்பை துண்டித்தார்.

இன்னொரு நண்பருக்கு, கார் கிடைக்கிறது. வேலைசெய்யும் நிறுவனத்தில் கார் தருகிறார்கள். உபயோகித்த கார். அவர் வேகவேகமாக வீட்டிற்கு வருகிறார், வரும் வழியிலேயே தொலைபேசியில் அழைத்து தனது அம்மா அப்பா மனைவி குடும்பத்திற்கு சொல்லிவிடுகிறார். கார் வாசலில் வந்து நின்றதும் அம்மா ஓடிவந்து ஆரத்தி எடுக்கிறாள். நம் வீட்டிற்கு முதல் கார் வந்துவிட்டது என்று அண்ணன் தம்பிகள் எல்லாம் அவனை கொண்டாடுகிறார்கள். குழந்தைகள் காரில் ஏறி அமர்ந்து எட்டி எட்டி குதித்து ஆரவாரப் படுத்துகிறார்கள். அந்த நண்பன் உடனே குளித்துவிட்டு எல்லோரையும் அழைத்துக் கொண்டு கோவிலுக்குச் செல்கிறான். வரும் வழியில் நல்ல உணவகம் பார்த்து அரிய உணவுகளை வாங்கித்தந்து உண்டு மகிழ்சியை எல்லோரிடமும் பகிர்ந்துக்கொள்கிறான். அவனுடைய நண்பர்களில் ஓரிருவரும் உடன் கலந்துக்கொண்டு அவனோடு மகிழ்ச்சியில் பூரிக்கிறார்கள். வீட்டிடம் வண்டி வந்து நின்று எல்லோரும் இறங்கியதும், அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து மகிழ்ச்சியோடு விசாரிக்கிறார்கள். இடையே “அவர் என்ஜினியரா இருக்காறா(?) நான் ஏதோ சாதாரண வேலை செயறாரோன்னு நினச்சேன்‘ என்று பக்கத்து வீட்டுக் காரரின் மனைவி பேசி உசுப்பேத்திவிட, நண்பனின் மனைவி பெருமையோடு அவனைப் பார்க்கிறார்கள். அவன் அன்று படித்து பட்டம் வாங்கியதற்கான அத்தனை மதிப்பும் மகிழ்ச்சியும் இந்த ஒரு காரில் இன்று அவனுக்குக் கிடைக்கிறது.

இரண்டுப்பேருமே கார் வாங்கினார்கள். முதல் நண்பன் புதிதாக வாங்கினான். இரண்டாம் நண்பனுக்கு கம்பனி முன்பு பயனப்டுத்திய பழையக் காரையே தருகிறது. இதில் மகிழ்ச்சி யாருக்கு கிடைத்தது பார்த்தீர்களா? இது ஒரு மாயையான உலகம். மகிழ்ச்சியையும் வெற்றியையும் ஆடம்பரத்திலும் அடுத்தவரின் தோல்வியிலுமே வைத்திருக்கிறது இவ்வுலகம். தான் ஜெயிப்பது, தான் அடைவது மட்டுமே இங்கே கொண்டாடப் படுகிறது.

கொண்டாட்டம் என்பது ஒரு கை ஓசையல்ல, இரு கை நான்காகி நான்கு எட்டாக கொக்கரிக்கும் உறவுகளின் ஆர்ப்பரிப்போடு வருகிறது கொண்டாட்டம். தான் உண்டு உறங்கி எழுவதைவிட, உண்டோமா உறங்கினோமா என்று பார்த்து கவனித்து அன்பு செய்து அக்கறையோடு பரிமாறும் உணவிலும் உறக்கத்திலும் ஒரு இனிப்புண்டு. அந்த இனிப்பை அடைய உறவுகளோடு கூடி வாழுங்கள்.

தீபாவளிக்கு வெடிக்கும் பட்டாசும் பொங்கலுக்கு மெல்லும் கரும்பும் தனியே இருப்போருக்கு வீண்செலவாகவே கருதப்படுகிறது. உறவுகள் நெருங்கி இருக்கையில் தான், பண்டிகையும் விழாக்களும் கோலாகலப் படுகிறது. குழந்தைச் சிரிப்பதும், கிழவர் வாழ்த்தும், அம்மாப்பா ஆசிர்வதிப்பும், அக்கா தங்கை அண்ணன் தம்பிகளின் மகிழ்வும் மனதிற்கு நிறைவை தருவது முழ உண்மை. என்றாலும் உறவுகளைப் பிரிவது என்பது பெறு வலி‘ அன்றி வேறில்லை. எனக்கு ஊர் விட்டு வருகையில் எனது எதிர்வீட்டு மரத்தைப் பிரிந்துவந்தால் கூட வலிக்கும்.

ஒவ்வொரு முறை ஊர் போகையிலும், வழியே நெடுகிலும் இருக்கும் மரம், மரத்திற்குமேல் தெரியும் வானம், வானத்தில் நகரும் மேகம், மேகமுரசிப் பெய்யும் மழை, மழையோடு ஆடும் மலர்கள், மலரில் சிறகடிக்கும் தேனீ, தேனீக்கள் தாண்டிப்போகும் காக்கை, காக்கையோடு சுற்றும், குருவி தலை அமர்ந்திருக்கும் கன்னுக்குட்டி என எல்லாமே ஊரில் பார்க்கையில் எத்தனை அழகோ அத்தனைக் கொடுமை அவைகளை விட்டு விலகிவருவதும்.

தோல் இறுக்கிக் கட்டிக்கொண்டு முத்தமிடும் குழந்தையை இறக்கிவிட்டுவிட்டு விமானம் ஏறுவது அத்தனை சுலபமல்ல. போகும் வழியெல்லாம் உயிரருக்கும் குழந்தையின் நினைவை பிரிந்துச்செல்லும் பெற்றோர் மட்டுமே அறிவர் அதை. எனவே ஒரு இதயத்தையும் பிரிவால் அறுக்காதீர்கள். உறவுகளோடு கூடி மகிழ்ந்திருங்கள். உறவுகளின் நெருக்கத்தில் வாழ்க்கை பலவாக மகிழ்வாக சிறகடிக்கட்டும். சின்ன இதயம் முழுதும் சிரிப்பு நல்லுறவுகளால் நிறையட்டும். உறவுகள் சிரித்துக்குலுங்கும் வீடு சொர்கமாகவே எல்லோருக்கும் வாய்க்கட்டும்..

வெற்றியின் அர்த்தம்; ஒருவர் தோற்பதென்பது மாறி, திறமையை அறிவதும் பகிர்வதுமாய் ஒரு சகோதரத்துவ பூமி எல்லோருக்குமாய் சமதர்மத்தில் உருவாகட்டும்..

வித்யாசாகர்
Posted in வாழ்வியல் கட்டுரைகள்! | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக