செவிலித் தாயிக்கு மனசு வானம் போல..

பிணம்தின்னும் சாமியிடம்
வரம் கேட்கும் பூதங்கள்,
மலமள்ளி மூத்திரம் துடைத்தும்
மனதால் மணக்கும் சாமிகள்;

அறுந்தக் கழுத்தில் ரத்தம் கசிய
கண்ணீரால் கழுவும் தெரசாக்கள்,
தாயைப் போல கருணைப் பொங்க
ஆலயம் தொழும் தெய்வங்கள்;

நீதி தேடி ஒதுங்கிடாது சேவை-
யாற்றும் தேவதைகள்,
பாவமூட்டையை தான்சுமந்து
வியாதியை போக்கும் சகோதரிகள்;

காலவிளக்கை ஊதிவிட்டு; கருணையில்
தலைகோதும் ஏழைவீட்டின் வெளிச்சங்கள்,
மாயைதனை விளக்கி; மூடம் மறுத்து
அன்பே ஞானமென்றுப் போதிக்கும் அன்னைகள்;

காலையும் மாலையும் உழைத்து
கன்னிப்பருவம் தொலைத்தும் காசுக்குச் சாயாத தராசுகள்;
வெள்ளை ஆடையுடுத்தி ரத்தக் கரைபடிந்தும்
மனதில் அழுக்கில்லா தோழிகள்;

கற்றுப் பல தேர்ந்து; சொட்டும் வியர்வை நனைக்க
சற்றும் சளைக்காது உழைக்கும் தேனீக்கள்;
கல்லாதோரானாலும் கால்கழுவி, பாகுபாடு கரையகற்றும்
பெரிய மனசுள்ளத் தாயிகள்!
—————————————————————————————————-
வித்யாசாகர்

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

தீராத தீவிரவாதம்..

து தீவிரவாதம்?
எச்சில் உமிழும் வேகத்திலும்
எட்டி குதிக்கிறது தீவிரவாதம்..

எழுந்து நடைபழகும் வயதில்
முட்டை கொடுத்து
பின் மீனறுத்து
பிறகு கோழி விரட்டிப் பிடித்து
துடிதுடிக்க கழுத்தையறுக்கும் கொடூரத்திலிருந்து
குழந்தைக்குப் பரிட்சையமாகிறது
தீவிரவாதம்..

எதிரியைச் சுடுவது வெற்றி
தான் விழுந்தால் கொலையெனும்
மனோபாவம்
தீவிரவாதத்தின் முதல் போதனையாகப்
பதிகிறது
மனதுள் பிற கேள்விகளின்றி..

அப்பா அம்மாவிற்கிடையே
விழும் கோடுமிழும்
பேத பிரிவினையை,

ஆசிரியர் தவறாக அடிக்கும்
ஒரு அடி கற்பிக்கும்
அதர்மத்தின் சீற்றத்தை,

நண்பன் இழைக்கும் காழ்ப்புணர்வு கொடுக்கும்
தீவிரவாதத்திற்கான
சிறு தீயை,

என் வீடு
என் நாடு
எனது மொழி
எனது மக்கள் எனும்
பிடிப்பு இடர்கையில் கூடும் வெறியில்
முரண்பட்டப் புரிதலில்
முளைத்துவிடுகிறது தீவிரவாதம்..

அனிச்ச மலருக்கு வலிக்குமோ
பச்சைப்பிள்ளை பாவம் துடிக்குமோ
என்று பதறும் மனசுதான்
எல்லோருக்கும்
பிறக்கையிலிருக்கிறது,

அதில்
அறமறுக்கும் கத்தியை
நாம் தீட்டாதவரை –
குழந்தைகளுக்குத் தெரியாது தீவிரவாதம்;

அதைப் புரிந்து நாம் மாறாதவரை
முற்றிலும்
தீராதிந்த தீவிரவாதம்..
———————————————————————-
வித்யாசாகர்

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அம்மாக்கள் இறவாத வானமெங்கே.. (?)

யதாக வயதாக
வருகிறதந்த பயம்
என்னம்மா பற்றியந்த பயம்;

மரணத்தைக் கண்டு
முதலில் அஞ்சவைப்பவள்
அவள் தான் என் அம்மா மட்டும் தான்;

அம்மாக்கள் இறக்கையில்
நண்பர்கள் அழுகையில்
அம்மாவைதான் முதலில் நினைத்தழுகிறேன் நான்;

இரவில் நனைந்த என் தலையணை
எனதம்மாவின் நினைவைத் தான்
நிறையச் சுமந்திருக்கிறது;

நிலாச்சோறு நாட்களின்
இனிமையைப் போலவே
அம்மா இல்லாத நொடிகளும் கொடுமையானது;

வெறும் அழைக்கவும்
அழைக்கையில் இருக்கேன்பா என்று
சொல்லவும் மட்டுமேனும் அம்மா வேண்டும்;

அம்மாவை அழைத்த நாளும்
அவள் என்னோடு பேசியிருக்கும் பொழுதுமே
என் உயிருள்ள பொழுதாகும்..

அவளில்லாத பொழுதை எண்ணும்
நொடியில் மட்டுமே
எனக்கு வாழ்க்கை அப்படி வலிக்கிறது;

அம்மா இல்லாத பிள்ளைகள்
பாவம்
முள்ளில் நடப்பவர்கள் அவர்கள்;

மறுசட்டை எடுக்கவும்
ஒருவேளைப் பட்டினிக்கு வருந்தவும்
அம்மாப் போல் உலகில் யார் வருவா ?

முகத்தில் சிரிப்புடுத்தி
மஞ்சளாய் சிரிக்கும் நிலவு
வராதஇருளில் வரும் பகல் வெண்மையற்றது;

அம்மாவிற்காக நான்
தினம் தினம் நிறைய அழுகிறேன்
நிறைய சேமிக்கிறேன் நாட்களை; ஆனாலும்

சுகர் என்றும் பிரசர் என்றும் சொல்லிக்கேட்கையில்
அம்மாயென்றும் ஒரு மனசு பதறுவதை
கடவுள் புரிவாரா தெரியாது;

புரிவாரெனில் மட்டும் விடியட்டும்
எனக்கான காலை..
——————————————————–
வித்யாசாகர்

Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை, கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம்.. (நிமிடக் கட்டுரைகள்-10-உதவி)

தவி என்பது கடவுள் தன்மையைக் கொண்டது. உதவுபவர் கடவுளுக்கு இணையாக மதிக்கப்படுகிறார். கடவுள் என்பவர் ஆபத்தில் உதவவே அழைக்கப்பட்டவராக இருக்கலாம். அல்லது உதவியதன் நன்றியாகவே அவரை கையெடுத்து வணங்கப் பழகியிருக்கலாம். உயிருற்று இருக்க ‘உதவும்’ நிலம் நீர் காற்று வானத்திற்கே கடவுளுக்கு நிகரான இறைவணக்கங்கள் செய்யப் பழக்கப்பட்டது. உதவி இல்லையேல் மனிதரின் வாழ்க்கையில் சமதர்ம செழுமையிராதுப் போயிருக்கும். உதவி இல்லையேல் மனிதத் தனம் குறைந்துப் போகும். மனிதநேயம் குறைந்து சுயநலப் புழுக்களாய் பயனற்று போயிருப்போம் நாம்.

ஒரு இலை காற்றில் அசைகிறது, காம்பின் ஒரு பகுதி காற்றின் எதிர்புறம் மடிந்து இலையாட, எதிர்பாராவசமாக காம்பொடிந்து இலை உடனே கீழ்விழும் நிலையில் அந்தரத்தில் தனித்துத் தொங்குகிறது. சற்று நேரத்திற்கெல்லாம் காற்று மறுபுறம் வீச, அந்த அறுந்தக் காம்பும் ஒடிந்து இலையறுந்து மரத்தின் தொடர்பறுந்து அநாந்தரமாய் கீழே விழுகிறது. காற்றின் அசைவிற்கு ஆடி ஆடி தவழ்ந்து இங்குமங்குமாய் அலைமோதி யாருமற்ற வெளியில் அனாதையாய் வந்து விழுகிறதந்த இலை. அப்படி யாருமற்று விழும் மனிதரை பற்றிப் பிடித்து தன் மார்பில் அணைத்து நானிருக்கேன், நானிருக்கேன் கவலையை விடுங்கயென்றுச் சொல்ல ஒரு கை ஒரு ஒற்றை கை வேண்டும். அந்த கை மனிதருக்கேயிருக்கும் பெரிய நம்பிக்’கை’. நம்பிக்கை தான் விழும் மனிதரை மீண்டும் தூக்கி நிறுத்துகிறது. அப்படி ஒருவரை தூக்கிநிறுத்தும் நம்பிக்கையை சுற்றியிருக்கும் பிறரே தரவல்லவர். நம் தோழராயிற்றே, நம் குடும்பமாயிற்றே நம் அண்ணன் தம்பி அக்கா தங்கையாயிற்றே என்ற எந்த முக அடையாளமும் உதவி செய்வதற்கு தேவையில்லை; நாம் மனிதராக இருத்தல் ஒன்றே உதவுவதற்குப் போதுமானது.

ஒரு வயதானவர் நடந்துபோகிறார். சற்று வண்டியை நிறுத்தி அவரை நாம் போகும் வண்டியில் ஏற்றிக்கொண்டுப் போகலாம், சில்லறையில்லாது பேருந்தில் ஒருவர் அவதி படுகிறார்’ நம் கையில் இருப்பின் அதை அவருக்குக் கொடுத்து உதவலாம். ஏழைச் சிறுவனொருவன் ஓடிவந்து கடையில் இது வேண்டும் அதுவேண்டுமென்று எல்லாவற்றையும் பார்த்துவிட்டு கடைசியில் தன் கையிலிருக்கும் சொச்சக் காசுக்கு ஏதேது வருமென்று பார்த்து அதற்குத் தக்கவாறு ஏதோ ஒரு கையப்பளத்தையோ அச்சுமுறுக்கையோ அல்லது நாலணா தேன்மிட்டாயையோ வங்கிக்கொண்டு அதோடு தனது காட்பரி சாக்லேட்டிற்கான ஆசைகளை நிராசைகளாய் மாற்றி அவனுடைய ஓட்டைப் பாக்கெட்டில் போட்டுக்கொண்டு வறுமைச் சிரிப்போடு ஓடிப்போவான், அவனுக்கான ஒரு நியாயத்தை’ அதுபோன்ற ஏழைக் குழந்தைகளுடைய கனவிற்கான வெற்றிக்கெனச் சிந்திக்கும் கருணையை’ உதவிக்கான மனப்பான்மையை மனதுள் பொதுவாகத் தேக்கிவைத்துக் கொள்ளலாம்.

அதற்குமேலும் வசதியிருப்பின், அந்தக் குழந்தையைப் போலவே கடைக்கு வரும் பல ஏழைப் பெண்மணிகளில் எத்தனையோ பேர் தனது வீட்டுச் சமையலுக்குத் தேவையான மளிகைச்சாமான்களைக் கூட வாங்க வழியில்லாமல், பிய்ந்த வீட்டினது கூரைதனை வேயாமல், வயதிற்கு வந்த மகளைக் கட்டிகொடுக்காமல், பள்ளிப் புத்தகங்கள் வாங்குவதற்குப் பணமில்லாமல், கிழிந்தச் சீருடையை மாற்ற வழி தெரியாமல், பள்ளிக்கூடத்திற்கு அனுப்பினால் கட்டணம் கட்டவேண்டுமேயென்று குழந்தையைப் படிக்கவேயனுப்பாமல்; பூமி இடும் மரணசாபத்தை வாங்கிக்கொண்டு மண்ணோடு புதைக்கின்றனர். அதுபோன்றோரைத் தேடி புத்தகங்களோ பள்ளிச் சீருடையோ வாங்கித் தரலாம், படிக்கத் தேவையான வருடக் கட்டணத்தைக் கொடுத்து ஒரேயொரு ஏழை குழந்தையையேனும் தக்க வயதுவரை படிக்கவைக்கலாம்.

பொழுதுபோகாத நேரம் வீட்டில் வெறுமனேயிருந்து எதையோ சிந்தித்து எதற்கோ நேரத்தை வீணடித்து வெட்டியாகப் பேசி அல்லது வேறு யாரார் யோசனைகளையோ கேட்டு யாரின் ரசனைகளையோ தொலைக்காட்சியில் கண்டு கண்டு அவைகளையெல்லாம் தனதாக்கிக்கொள்வதைக் காட்டிலும் ஏதேனும் ஒரு அரசு மருத்துவமனைக்கோ அல்லது நடுத்தர வர்க்கத்தினர் சிரமத்தோடு அலையும் மக்கள் நெருக்கமிருக்கும் மருத்துவமனைக்கோ சென்று அங்கு அவசரமாய் வரும் நோயாளிகளுக்கு விண்ணப்பங்களை நிரப்பித் தருவது, மருந்து வாங்கிவந்து தருவது, யாருமற்று தனியே வந்து அவதிப் படுபவருக்கு உடனிருந்து உதவிகளை செய்து, உடம்பு துடைத்து எழுந்திருக்க அமர தோழமையாய் தோள் தந்து விரைவில் குணமடைவதற்கான நம்பிக்கையை ஏற்படுத்துவது, தவிர ஏழ்மையான குடிசைப் பகுதிக்குச் சென்று படிப்பு பற்றி மருத்துவம் பற்றி நோய்தடுப்புமுறைகளைப் பற்றி மூடபழக்கவழக்கங்களை மாற்றிக் கொள்வது குறித்து, ஆக்கப்பூர்வமான சிந்தனையை தூண்டுவது பற்றி, அவசியமற்ற எண்ணங்களை நம்பிக்கைகளை புரிதல்களைக் களைந்து மனிதம் தழைக்கத்தக்க நல்ல நோக்கங்களை ஏற்படுத்தித் தருவது, சந்தை மற்றும் சிறப்பு அங்காடிகளுக்கு வேறு வழியின்றி வரும் முதியோர், நோயுற்றோர் அல்லது குழந்தைகளை அணுகி விவரம் சொல்லி தூக்கமுடியாமல் தூக்கிச்செல்லும் சுமையை வாங்கிச் சென்று அவர்களின் வீடுவரை சேர்ப்பது என இப்படி ஏராளமாய் இருக்கிறது பிறருக்கென நாம் உதவ வேண்டிய இடங்கள்.

அங்கெல்லாம் ஒரு நபரின் உதவவேண்டிய ஒரு கை இல்லாமல்தான் நம்பிக்கையெனும் பெருங் கை உடையப் படுகிறது. அதனால் நாளுக்குநாள் பிரியும் உயிர்களும் அவதிப்படும் குடும்பமும் ஏராளம் ஏராளம்.

அதற்காக இதெல்லாம் செய்வதொரு பெரிய மகாத்மாவின் வேலையோ, சிந்தனைச் சிற்பியின் செயலோ என்றெல்லாம் நினைத்து மலைத்துவிடவேண்டாம். இது ஒரு சாதாரண மனிதரின் கடமை. பிறருக்கு உதவுதல் என்பது செய்யமுடிந்தவரின் செயத்தக்க கட்டாயக் கடமை. சுயநலத்தை வேரறுக்கும் மருந்து இந்த பிறருக்கு உதவும் உதவியில் மட்டுமே வேகமாய் பிறக்கிறது. பொறாமையில் கசங்கும் மனங்களை தெளிவுபடுத்தும் நல்லெண்ணம் இப்படி பிறரின் நன்மையைப் பற்றி சிந்திக்கையில் மட்டுமே எளிதில் சாத்தியப் படுகிறது. கையறுந்து துடிப்பவனின் ரத்தைத்தைத் துடைத்து மருந்திடுவதைவிட களமள்ளித் தரக்கேட்கும் சாமி இவ்வுலகில் எங்குமில்லை.

பிறருக்கு உதவும் தன்மையை இழப்பதென்பது தீங்கை எங்கும் பரப்புமொரு நெடிய வேதனை என்பதை நாம் புரிந்துக் கொள்ளவேண்டும். உதவி என்பது ஏற்றுச் செய்வதென புரியாமை நம் மனிதப் பிறப்பிற்கே நேர்ந்த அல்லது வளர்ப்பில் நாம் இடறிப் போனதன் பெருத்த அவமானமென்று கொள்ளவேண்டும்.

நிறையப் பேர் சொல்கிறார்கள்; உதவி உதவி என்று ஏமாந்துப் போகுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர் இருப்பார் தானென. நன்றாக யோசித்துப் பாருங்கள், ஏமாற்றுபவர் எங்கிருந்து வந்தார்? அவரை உருவாக்கியவர் யார்?

ஒருவர் பத்து சட்டைகளை எடுத்து வைத்துக்கொண்டால், ஒரு சட்டை கூட இல்லாது உடம்பு சுடுவோருக்கு சட்டையிட ஆசை வராதா? பின் பத்து பேர் நல்ல சட்டைகளை வைத்துகொண்டிருக்க ஒன்றோ இரண்டோ பேர் நிர்வாணமாய் திரியநேர்கையில், அப்படி திரிபவரை இந்தச் சமூகம் பார்த்து ஏளனம் செய்யும்பட்சத்தில் அல்லது ஒதுக்கவும் துணியும்பட்சத்தில் அந்த சட்டையை வாங்க வக்கில்லாதவன் திருட எண்ணத்தானே செய்வான்? எல்லோரும் பிறக்கையிலே பல அரிய திறன்களோடும் மதிக்கத்தக்க எல்லா தகுதியோடும் மட்டுமே பிறந்து விடுவதில்லை. இயலாமையின் விரக்தியில் கர்ப்பப்பை அறுபட்டு விழும் பாவக் குழந்தைகளும் இம்மண்ணிலுண்டு.

அப்படிப் பிறப்பவர்களைப் பற்றியும் சிந்தித்து, அவர்களையும் நல்வழிபடுத்துமொரு சமதர்ம நோக்கிலான வாழ்வை பொதுவில் எல்லோரும் அமைத்துக்கொள்ளும் தலையாயக் கடமைக்கு நமை நாம் தள்ளிவிடப் பட்டுள்ளதைப் புரிந்துகொள்ள பாறைகளை உடைத்துக் கொண்டுவரும் அருவியைப் போன்று, ஏழ்மையை துடைக்க எடுத்த ஆயுதத்தைப் போன்று, வாழ்வின் அசாத்தியத் தருணங்களை மாற்றி ஒரு அசாதாரண திருப்பத்தையுண்டாக்கும் ஒற்றைச் சிரிப்பின் மாயத்தை ஒவ்வொரு மனிதரும் பிறருக்கென தேக்கி மனம் முழுதும் வைத்திருப்போம். மாற்றம் ஏற்படும் நேர்கோட்டில் வருங்காலம் பயணிக்க நாம் முன்னுதாரணமாய் நடைபோடுவோம்.

ஏழை என்பவர் பிறக்கட்டும் அல்லது பிறக்காமலும் போகட்டும் சாகும் மனிதர் சுகத்தையும் அனுபவித்தவராய் சாக தனது பாதைகளையும் மாற்றுவோம். உதவி செய்பவரை உயிருள்ளளவும் நன்றியோடு நினைத்து நமக்குக் கீழுள்ளவரையேனும் நம்மளவிற்கு மேலேற்ற ஒவ்வொரு மனிதரும் முயல்வோம். மனிதத்தை மிருகத்தினுள்ளும் பாய்ச்சி மலையை உடைத்தாலும் கடுகைப் பிளந்தாலும் பகிர்ந்தே உண்ணப் பழகுவோம். வெற்றி எங்கும் பெய்யும் மழையென சாத்தியப்படும் இடமெங்கும் பெய்யட்டும். நன்மை நன்னிலமெங்கும் பூக்கும் மலர்களெனப் பூத்து வாழ்க்கை எல்லோருக்குமே சுகந்தமானதாய் மணக்க வாழ்வின் வசந்தங்கள் இந்தப் பள்ளமேட்டு பகுதியெங்கும் பாகுபாடின்றி பரவட்டும்..

உதவாதவர் எதிரியிலர்; உதவுபவர் தெய்வத்திற்குச் சமமெனப் பூரிப்படைவோம்..

பூரிப்பு பூமியெங்கும் நிலைத்திருக்க அனைத்துயிர்க்கும் வாழ்த்துக்களும் வணக்கமும்..

வித்யாசாகர்

Posted in வாழ்வியல் கட்டுரைகள்! | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம்.. (நிமிடக் கட்டுரைகள்-9)

9)

காதல் அப்படியொரு இனிப்பு. கசப்பை சகிக்கும் இனிப்பு. நினைவை தொலைக்கமுடியாமல் நினைத்து நினைத்து சாகத் துடிக்கும் இதயத்தை உணர்வுகளால் அடைத்துக்கொள்ளும் இனிப்பு. விஷம் கக்கும், ஞானம் தரும், நாகரிகம் வளர்க்கும், மனிதமூறச் செய்யும், மானுடப் பிறப்பை இன்பக் கடலில் மூழ்கடித்து சாகச் சாக உயிர்களைப் பிறப்பிக்கும் காதல்.

ஆனால் காதல் ஒரு பொருளில்லை. கடையில் வாங்கும் பொருட்களைப் போல் வாங்குவதோ உருவாக்கிக் கொள்வதோ இல்லை காதல். காதல் ஒரு உணர்வு. உயிர் அடைந்துப் போகும் உணர்வு. காதல் என்பது நேசம், பிரியம், அன்பு. அது ஈர்ப்பினூடே ஏற்பட்டப் புரிதலில், குணங்கள் ஒத்துப் போவதில் அல்லது விட்டுக்கொடுக்க தன்னை தயார்படுத்திக் கொள்வதில், எதிர்கால வாழ்க்கைக்கு நாம் பொருத்தமானவர்கள் எனும் மானசீக நம்பிக்கையில் துளிர்த்து பின் உடல் வெப்பத்திற்கிணங்க ஏற்படும் மனதின் ஆசையில் வளர்ந்தும் விடுகிறது.

இதற்கிடையே காதலுக்கு கண் இல்லை, காதல் பித்தாக்கும் என்பதெல்லாம் எல்லோரிடத்தும் பொருந்துபவையல்ல. எந்த ஒரு கட்டத்திலும் எதையும் யோசித்து செய்யக்கூடிய நடுநிலைத் தன்மை மனிதரிடையே நிறைய உண்டு. வயப்படுதல் என்பதே ஒன்றில் கூடுதலாய் மயங்குதல் என்பதாகும். மயங்குதல் எனில் தன்னிலை விட்டிடறி இன்னொன்றில் ஆட்பட்டு விடுவதாகும். ஆட்படுதல் ஒன்று இயலுமெனில் விட்டு விலகுவதும் இயலும். ஆனால் சந்தோசத்தை உடனே ஏற்றுக் கொள்ளும் நாம் வருத்தத்தை விட்டு விலகியிருக்கவே விரும்புகிறோம். எனவே ஆட்படுதலுக்கு உடன்பட்டுவிடுமளவு விட்டுவிலக தயாரில்லா நிலைக்கு தள்ளப்பட்டுப் போகிறோம்.

எங்கு நாம் நம் உணர்வுகளின் புரிதலின்றி தள்ளப்படுகிறோமோ அங்கே நமக்கு நிறைய பிரச்சனைகளும் முளைத்துவிடுகிறது. எனவே எங்கு எதைச் செய்யினும் சிந்தியுங்கள். குழந்தைகளுக்கு வளரும்போதே சரிவர சிந்திக்கச் சொல்லிக்கொடுங்கள். எதைப்பற்றி கேட்டாலும் விளக்க மறுத்துவிடுவது அல்லது குழந்தைகளுக்கு விரிவாகச் சொல்லித்தர தயங்குவதே அவர்களை வேறொரு சோதனைக் குழிக்குள் தள்ளி தகாத பாதைகளுள் இழுத்துச் செல்லக்கூடிய மனநிலைக்கு அவர்களை ஆளாக்கிவிடுகிறது.

ஆனால் பாருங்கள்; குழந்தைகள் பிறக்கும் போதே நம் அதிகபட்ச பழக்கவழக்கங்கள் மற்றும் புரிதல்களுக்கு ஏற்ப நமக்கொத்த உணர்வுகளைப் பெற்றுக்கொண்டே பிறக்கிறார்கள். அவர்களுக்கு நம் உணர்வொத்த நிறைய புரிதல் இருப்பதன் காரணமாக அங்ஙனம் கேள்விகளும் இருக்கும். அந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்லும் கடமையும் நமக்கு உண்டு. அப்படி கேள்விகள் புரிந்து தெளிவோடு வளரும் குழந்தைகளுக்கு எதையும் நேரிடையாக நேர்மறை வழிகளில் சிந்திக்கத்தக்க தெளிவும் இருக்கும். அது காதலிலும் கைகொடுக்கும்.

காதலின் சரியான புரிதல் இல்லாத் தன்மையே பல குடும்பங்களின் நிம்மதியை குலைத்துவிடுகிறது. காதலின்பேரில் பல கொலைகளையும் நிகழ்த்தி இளைய சமுதாயத்தை வீரியமிழக்கவும் செய்துவிடுகிறது. குழந்தைகள் காதலிப்பதைக் கண்டு பெற்றோர் பயம் கொள்வது இயல்புதான் அதேநேரம் அங்கு அவர்களை சரிவர வழிநடத்துமொரு உயரிய கடமையும் அவர்களுக்குள்ளதை பெற்றோர்களும் நினைவில் கொள்ளல் வேண்டும்.

அதுபோல் கண்டதும் காதல் கைதொட்டதும் காதல் உடலுரசிக் கொண்டதால் காதல் என்பதையெல்லாம் படிக்கும் மாணவர்கள் கடந்துவிடவேண்டும். எழுபது வயதிலா வரும் காதல் படிக்கும் காலத்தில் தானே வரும், இளமை பூச்சொரிக்கும் வயதில்தானே காதலிக்க ஆசையூரும் பிறகு இளமையில் காதலிக்காதே என்றால் எப்படி சரி என்கின்றனர் சிலர். அந்தக் கூற்றை முற்றிலும் சரியென்று ஏற்பதற்கில்லை. அந்த வயதில் கூடுதலான பொருப்பில்லாமை அல்லது பல இழப்புகள் மற்றும் ஏற்புக்களால் ஏற்படும் பாரம் மனத்தை அழுத்தாமை ஒரு சுயசுதந்திரத்தை ஏற்படுத்தித் தருகிறது. அந்தச் சுதந்திரம் வயதின் உடலின் தேவையையும் கையிலெடுத்துக் கொண்டு காதலின் கண்மூடித் தனமான பாதையில் நம்மை ஆட்படச்செய்கிறது.

உண்மையில் வெறும் காதல் அன்பு என்று பார்த்தால்; அதை நாம் சரியாக உணர்வதன்பொருட்டு, அல்லது தெளிவாகப் புரிந்துக் கொள்வதன்பொருட்டு எல்லா வயதிலும் யார்மீது வேண்டுமாயினும் ஏற்பட வாய்ப்புண்டு. ஆனால் அதை நாம் சரிவரப் புரிந்து, அதன் பின்விளைவுகளுக்கு ஏற்ப இடம் வகுத்து, தன்னிலை அறிந்து, பிறர்பால் அக்கறைக் கொண்டு, தனது பின்னணி சார்ந்த நடப்புகள் இன்னபிற விளைவுகள் பற்றியெல்லாம் சிந்தித்து, மனதின் அடியாழ அன்பிற்குள் மட்டும் காதலைப் புதைத்துக் கொள்கையில்; அது காமம் உதிர்த்த நட்பாகவோ, சகோதர பாசமாகவோ, குரு பக்தியாகவோ, பிள்ளைகளின் மீதான பற்றாகவோ தாயன்பாகவோ கூட திரிந்துகொள்ள நேரிடுகிறது.

எனவே காதலுக்கு ஒரு வரம்பில்லை, வயதில்லை; ஆனால் கண்ணுண்டு. நமைச் சிந்திக்கவைக்கும் மலையளவு திறன் உண்டு. நம்மைப் பக்குவப் படுத்தும் பலம் உண்டு. நம்மை கூர் தீட்டக்கொடிய செம்மைமிகு சக்தி காதலுக்கு உண்டு. அதை எந்த வியாபாரத்திற்கும் உட்படுத்தாமல் வேறெந்த சுயநலத்திற்கும் ஆட்படுத்தாமல் மனதுள் தேக்கிக்கொண்டு நல்லுணர்வின் சாட்சியாய் நடப்போருக்கு வாழ்க்கை தானாகவே காதலின் புனிதவட்டத்திற்குள் அகப்பட்டுக்கொள்கிறது.

அதன்பின் காணுமிடமெல்லாம் மனிதர் மீதான; பிற உயிர்கள் மீதான; வாஞ்சையை மனது தானே ஏற்படுத்திக்கொள்கிறது. ஒரு மலரைக் கொய்தெறியக் கூட மனதை அஞ்சவைக்கிறது. எங்கும் எதிலும் யார் மனதும் உடைந்துவிடாத நிலையைத் தேடியே சுற்றிவரும் வாழ்விற்கிடையே காதல் சந்தனமாய் காற்றெங்கும் மணக்கிறது..

அத்தகைய ஒரு நல்ல மனநிலையின் மனிதர்களைத் தாங்கி சுற்றும் பூமி நல்லுயிர்களின் களமாக விளங்க; காதல் ஆங்காங்கே அன்பாய் நட்பாய், பாசமாய் பூத்துக்கொள்கையில்; எல்லோரிடமும் எல்லோரும் விட்டுக் கொடுத்தல், பற்றோடிருத்தல், புரிந்து நடத்தல், பிரியம் கொள்ளுதலில்; பூமி சண்டையை’ வஞ்சினத்தை’ மனதின் வக்கிரத்தையெல்லாம் ஒழித்துக்கொண்டு நல்லுயிர்களின் நிலமாய் விளங்கும்..

விளங்க வாழ்த்துக்கள்..

வித்யாசாகர்

Posted in வாழ்வியல் கட்டுரைகள்! | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக