சிட்டுக்குருவியும் அன்றையப் போர்களின் பனிக்காலமும்..

1
வ்வொரு பனிக்காலத்திலும்
கவிதைகளைச் சொரிகிறது
வானம்,

எழுதப்படுபவை வாசிக்கப்பட்டுக்
கொள்வதைப் போல
ஒவ்வொரு புரட்சி வெடிக்கையிலும்
ஒற்றுமை நிலைக்கையில்
விடியலும் பிறக்கிறது.,

அடுத்தடுத்து வரும் பனிக்காலப்
பூக்களின் இதழ்களில்
சொட்டிவடியும் நீர்முத்துக்களாய்
ஓடிவிளையாடும் சிறுவர்களின் சிரிப்பில்
அவர்களுக்கு அறியப்படாமலே ஒட்டிக்கொண்டிருந்தன
விடுதலையின் சிலிர்ப்பும்..
மகிழ்ச்சியின் ஆர்ப்பரிப்பூக்களும்..
————————————————————————————
2
புற்களின் நுனியிலிருந்து
விடுபட்டு
மண்ணில் விழுவதற்குள்
மரத்தின் பனிச் சாரல்களில் சில
காய்ந்துவிடுகிறது..

பூமியில்
வெடித்தும் ஏமாற்றமாய்
சில உயிர்களை இழந்துவிட்டு
அனாதைகளாய் நிற்கிறோம் நாமும்’ நம்
இயலாமைகளினாலும்
சில அரசியல் அநீதிகளின்
வெம்மை பொறுக்கமுடியாமல் போய்விழும்வரை;

உணர்ந்து –
கூடிநின்று
ஒற்றைக் குரலை கொடுக்கையில்
தரைவரை வென்று – காயாது
பூமியை வந்துநனைக்கும் மற்ற பனித்துளிகளைப் போல
நம் போராட்டங்களும்
எதற்கும் அஞ்சாது நிற்கையில்
வென்றுதான்கொள்ளும்..
————————————————————————————
3
வ்வொரு
சிட்டுக்குருவியின் கிரீச் கிரீச்
சப்தமும்
ஐயோ என்னைக் காப்பாற்று
காப்பாற்று என்று
கத்துவதாகவே கேட்கிறது,

அன்று எம்மினம்
அழிக்கப் படுகையில்
ஒவ்வொரு குழந்தையும் ஐயோ ஐயோ அம்மா
காப்பாற்று காப்பாற்று
என்றுதான் கத்தியது,

உலகிற்குத் தான்
அந்த கதறல்கள் எல்லாம் வெறும்
கிரீச் கிரீச் என்று மட்டுமே கேட்டதுபோல்..
————————————————————————————
வித்யாசாகர்

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

ஈழத்தின் உயிரில் நனைந்த கதை; எழுத்தில் கசியும் கண்ணீரின் வதை..

நாங்கள் அன்றும் இப்படித் தான்
கொதித்துப் போயிருந்தோம்..

சதை கிழிய
தாலி அற
உயிர் பலி கொடுத்துக் கொண்டிருந்த
எங்களுறவுகளை
கண்ணில் ரத்தம் வடியத்தான்
பார்த்துக் கொண்டிருந்தோம்

உலகின்
நியாயம் மறைந்த கண்களில்
வார்த்தைகளைத் துளைத்து
அழுகையில் தகிக்கும் சொல்லெடுத்து
அவர்களின் செவிட்டில் அரையத் தான்
எங்களுக்கு
இத்தனை நாளாகிப் போனது.,

காடும் மலையும்
மின்னல் வெட்டிய வெளியெங்கும்
தமிழனின் அதிகாரம் பாய்ச்சிய ரத்தமின்னும்
அடங்கிவிடவில்லை;

அறியாமையில்
சதியாடிப் போனது வேறு, ஆயின் அதையும்
இப்போதறிந்து
உரிமைப்போருக்கு
உறவுக் கொடியேந்திவிட்டோம்.,

ஐயோ ஐயோ என
என் மக்கள்
அலறியபோது
வலித்த இடமின்னும் காயமாறவில்லை

ரத்த ஆறாகி நனைந்த மண்சுட்ட
விழிகளின் சிவப்பின்னும்
தீரவில்லை

ஓடி ஓடி ஒளிந்த எம்
குழந்தைகளின்
தலையில் விழுந்த விஷக் குண்டுகளின்
வெறி –
ஒருத் துளியும் அடங்கவில்லை

உடம்பெறித்து
உயிர்விளக்கேற்றி
உலகப் பிச்சையேந்தி
எம் நியாயத்தைக் கேட்கக் கோரி
நெருப்புத் துண்டுகளில்
உயிர்விதைத்தோம்,
உடல்கட்டை எரித்தோம்,
பெண் ஆணென தீக்கு இறையாக்கினோம்.,

அதையும்
கேளி பேசி கொன்றுபோட்ட
எவரையுமினி
மன்னிக்கத் தயாரில்லாததொரு பெருங்கூட்டம்
இன்று புடைசூழ்ந்து நிற்கிறது,

புத்தகத்தின் படிக்காப் பக்கங்களுக்கிடையே
எமது தட்டிக்கேட்டிடா நியாயத்தைப் பதுக்கி
எட்டிச் சட்டைபிடித்துக் கேட்க
துணிந்துநிற்கிறது,

பெரியவர் சொன்னார்
பயில்வோர் படித்தார் அது வேறு
இனி பயில்வோர் முன்செல்வார்,
பட்டம் பகலில்
எம் தமிழச்சியை நிர்வாணமாய்ப் பார்த்து
நகைத்தவனின் மூச்சடக்கிவிட – அவளின்
பிள்ளைகள் போவோமினி,
மானத்தியவளின் முளைமீது கால்வைத்து
நசுக்கியவனின் மார்மீது மிதித்து
மீட்க எம் ஈழத்தை
ஒவ்வொருத் தமிழரும் செல்வோமினி,

பார்வியந்து பார்க்கப் பார்க்க
வெடித்து வீழ்ந்த எம் தலைகளின் ஈடாக
இனி துடித்து எழுமெம் ஈழம்..,

மீண்டும் அதே வெற்றிமுரசு கொட்டி
வீரநடைப் போடுமெம்மினம்..
———————————————————————
வித்யாசாகர்

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

பரதேசி எனும் பெயரில்; நம் மக்களின் வாழ்ந்து தீராக் கதையது.. (திரை விமர்சனம்)

பெருசா வர இருக்கும் நடிகன்..

னசெல்லாம் விக்கி விக்கி அழுகிறது. கண்ணில் ஊறும் ரத்தமின்னும் உயிர்போகும் வரை வெளியே கொட்டிவரட்டுமே என மனசு பிராண்டி பிராண்டிக் கத்துகிறது. உடம்பின் ஒவ்வொரு துளியிலிருந்தும் என் இனத்திற்காக ஒரு துளி கண்ணீர் சொட்டிச் சொட்டி உயிர் தீருமொரு வலி வலிக்கிறது. எத்தனை உயிரை குடித்த மண் எனது மண்(?) எத்தனை பரம்பரையை தொலைத்த மண் எனது மண்(?) எவன் ஆண்டு அழித்த மண் எனது மண்(?) என் பாட்டன் முப்பாட்டன் தலையில் மரணங்களை விதைத்தோர் எத்தனைப் பேர்? கண்ணைத் திறந்து அரக்கி அரக்கி மண் நிரப்புவது போல விஷத்தையெல்லாம் நாகரிகம் என்றும் கலாச்சாரம் என்றும் கடவுள் என்றும் கடவுளில்லையென்றும் ஒன்று என்றும் பத்து என்றும் என்னென்னவெல்லாம் சொல்லி எமைக் கொன்று குவித்தோர் யார் யார்? யார் யார் ? யார் யாரோ……?

கண்ணக் குழி சிரிப்பில் கழுகு வந்து அமருமா? என் பாவிமக அழகை எந்தக் கற்பு வந்து காத்துச்சோ அழிச்சிதோ வெச்சிதோ வைக்கலையா இனி மிச்சமும் மீருமோ தீருமோன்னு அடிமடியில அடிச்சிகுனு ஒரு தாயழுவுற கணக்கா கதறி கதறியழற இடத்தில் நிற்கும் எம் இனம் வந்த வழியெல்லாம் தொலைத்த பெண்கள் எத்தனைப் பேரோ?

தொரை நாயிக்கு திங்கவும், பிற நாயிங்க கொல்லவும் இறையாப் போன எம் பெண்களின் கதறல் இன்னும் எத்தனை எத்தனை தேயிலைத் தோட்டமெங்கும் ஓயாக் காற்றாக வீசுதோ? ஆத்தாவின் அடிவைத்துள் கை வைக்கிறதும் ஒன்னு, நெருப்பிட்டதும் ஒன்னுன்னு சொல்லிக்கொடுத்த இனம் நடந்து வந்த வழியெல்லாம் புதைந்துப் போன எந் தாயிமார் யாராரோ???

மனசு யாரை சாபம்விடச் சபிக்குதோ தெரியலையே? ஊரை அடித்து விழுங்கிய ஆண்டைகளை எந்தத் தீ வந்து கருக்கினா இந்த வெறி அடங்குமோ தெரியலையே..(?) காலத்துக்கும் எங்கோ ஒரு கக்கத்துல வைத்து அடக்கி கண்ணிமையை மூடினாப்புல மூடி காக்குற குடும்பத்துல பிறந்தும் இன்னைக்கு எவெவனுக்கோ அடிமையா வாழுற ஜென்மம் இன்னும் எத்தனை எத்தனையோ… பாழுங்கடவுளே…

எல்லாத்துக்கும் அழத் துவங்கினா’ பிறகு வெறும் ஒப்பாரியா வைத்துத் தீர்க்க இன்னும் எத்தனைப் பேர் வேண்டுமோ? அழுதே செத்துக்கனக்க இன்னும் எத்தனை காடுகள் எரியுமோ? நிமிர்ந்துச் சூரியனைப் பார்த்தவாறு தான் விதைத்ததை தானறுத்துத் தின்றுப்போக இன்னும் எத்தனைக் குலச் சாமி வந்து ஓதி அப்படி ஒரு காலமெமக்குப் பிறக்குமோ தெரியலையே..,

ஓடி ஓடி, தெரு தெருவா உயிருக்கு பயந்து அலைந்துத் திரிந்து, ஒரேயிடத்துல உடம்பையும் வித்து, கடைசியா மிச்ச உசிரையும் விட்டு விதைத்த அதேத் தேயிலைக் காடு இன்னைக்கும் என் மக்களை விஷக் குண்டு வைத்து சுட்டுத் திங்குதே அது நியாயமா?

அன்னைக்கு ஒரு காட்டையே அழிக்கையில அந்த சனம்தான் செத்தது, பின் அந்த மண்ணுல தேயிலை விதைக்கவும் அந்த சனம்தான் செத்துது, பின் அறுக்கவும் சலிக்கவும் விற்கவும் வளர்க்கவும் மீண்டும் விதைக்கவும் கொடுக்கவும் அந்த சனமும் அந்த உயிருந் தானா குறைபட்டுப் போச்சு சாக என் கடவுளே..?

ஒரே  யொரு காடழிஞ்ச கதையது படமாச்சி. அதின்னைக்கு பரதேசின்னு விலைபோச்சு. மனசு அதுக்கேக் கிடந்து செத்து செத்து பிழைக்குதே; இன்னும் எத்தனைக் காடு, எத்தனை நாடா ஓட்டம், இன்னும் எத்தனைக் கொலை, எவ்வளவுப் பஞ்சம், எவ்வளவு உயிர் வெறும் பசிக்கு மட்டுமே காவுஆகுமோ? ஏதேதுக்கு என் இனமின்னும் ஆளாகுமோத் தெரியலையே..

மனசு கிடந்து தவியா தவிக்குதுங்க அந்த ராசாவுக்காகவும், பிள்ளைக்காரிக்காகவும், கறுத்தக் கண்ணிக்காகவும் அந்த அங்கம்மாவுக்காவும். சும்மா அழுவனும்னு இருந்து அங்கே அழுதிருந்தா கனம் அங்கயே இறங்கியிருக்கும். ஆனா வெறும் கண்ணீரில் கழுவிப் போடும் விஷயம் இல்லை அந்த படத்தின் சாராம், ஒரு இனத்தின் அழிவு பற்றி, அழிஞ்ச மக்களின் கதைப் பற்றி, விடியா ஏழைகளின் வலி பற்றி அறுத்து அறுத்துக் காட்டியக் கதைங்க அது; பரதேசி.

இனி வருங்காலத்துல சினிமா என்னாகுமோ தெரியலை. சாப்பாடு மாதிரி, தூக்கம் மாதிரி சினிமாவும் தமிழர் வாழ்க்கையில ஒரு முக்கியமானதாகி விடுமோன்னு பயம் வர அளவுக்கு தமிழ் படங்கள் ஒவ்வொரு உயரத்துக்கு போயின்ருக்கு. ஹரிதாசை விட இந்த நூற்றாண்டுக்கு நாளு குழந்தையைக் காப்பாத்தினப் படம் வேறில்லைன்னு நினைத்தேன். ஆனால் மனுஷன் எட்டமுடியா உயரத்துல எட்டி எம் கதையை கண்ணுமுழி பிதுங்க காமித்தப் படமிது இந்த பரதேசி திரைப்படம்.

அதர்வா

நடிக்கிற முகம் ஒன்னுக் கூட கண்ணுலப் படலை.., வாழ்ந்ததன் அடையாளத்தை கண்ணுலத் தேக்கி தேக்கி உயிரை இழுத்துப் புடிச்சி நடிச்சிருக்காங்க ஒவ்வொருத்தரும். தமிழன் இனி எதுல வெல்வானோ இல்லையோ சினிமாவுல ஜெயிச்சிட்டான்னே சொல்லலாம். அந்தளவிற்கு ஒரு படத்தை இயக்குனர் பாலாவால செய்யமுடியும்னு நிரூபித்துக் காட்டியிருக்காரு.

ஒரு படமா இந்தப் பரதேசியை எண்ணி அது முடிஞ்சிடுச்சேன்னு நினைத்து உடனே மறக்கமுடியலை. ஒவ்வொரு பாத்திரமும் கண்ணு நிரஞ்சி நிக்குது. அந்த குடிசைவீடுகளும், பிளக்கும் விறகினோடு சொட்டும் வியர்வையும், பறிக்கும் தேயிலைக்கு ஈடாக குடிக்கும் அட்டை ஒட்டிய கால்களும்’ மனதில் மிதிபடும் சுவடுகளை பதிந்துக் கொண்டே நகர்கிறது.

படத்தில் எத்தனைக் காட்சிகள் இருக்கோ அத்தனையும் பேசுகிறது. ஏழ்மைக் குடி பற்றியும், அடிமை நிலை பற்றியும், மண்ணின் வலி பற்றியும், ஆண்ட திமிர் பற்றியும் அப்பட்டமாய்ப் பேசுகிறது.

அழகுக்கு உடுத்திக் கொள்ளும் ஆடை என்றெண்ணி நுனி நாக்கில் வைத்து உறவாடும் விஷமான மொழி ஆங்கிலம் என்று உடம்பில் ஓடும் இரத்தமெல்லாம் வெள்ளையரின் மீது காரி உமிழவைக்கிறது, அந்த கருத்தக் கன்னியை கெடுத்து குடிகெடுக்கும் அந்த காட்சி.

எங்கு சுத்திவந்து நின்றாலும் எம் அழிவிற்குப் பின் எவனோ ஒரு வெள்ளையனின் காலடிச் சுவடும், அவனின் பிரம்படியின் தழும்பும் ஏழு பரம்பரையின் கோபத்தை கண்கள் சிவக்க சிவக்க ஏந்திக் கொண்டு நிற்பதைத் தவிர்க்கவே முடியவில்லை.

தலை வீசும் வாளொன்று யெடுத்து எம் மார்புகளில் சுட்ட கைகளைக் கத்தறித்து காலடியில் புதைக்க வெறிகொண்டுப் பாய்கிறது உடம்பில் ஓடும் ரத்தத்தின் அத்தனை உயிர் செல்களும். நல்லது செய்தான் நல்லது செய்தான் நல்லது செய்தான்; செய்தான் தான். அதன் பின்னே வேறு என்னென்ன செய்தான் என்று தோண்டிப் பார்த்தால் என் மண்ணுக்கடியில் அவன் கொன்ற பிணங்கள் எம் இனத்தின் சவ நாற்றமெடுத்து ஆயுசுக்கும் அவனை சபிக்கும் கொடூரங்களாகவே யுள்ளன என்பதை இதுபோன்றத் திரைப்படங்களே தோலுரித்துக் காட்டிக்கொண்டுள்ளன.

33333

எதைப் பொறுப்பது? மதத்தில், கலாசாரத்தில், நடக்கும் நடையில், பேசும் மொழியில், எதில் அவன் செய்த வஞ்சனைகளைப் பொறுத்துக் கொள்வது. எல்லாவற்றையுமெ அவன்’ தான் வாழுமொரு சுயநலத்திற்காக மட்டுமே செய்துள்ளான். எமைக் கொன்றுள்ளான் கொன்றுக் குவித்துள்ளான் என்பதன் ஆதாரமாகவும் அதற்குத் துணைபோன என் இனதுரோகிகளின் சாட்சிகளாகவுமே பல பாத்திரங்களைக் கொண்டுச் செதுக்கியுள்ளார் இயக்குனர் இந்த பாழும் வரலாற்றையும்.

என்றாலும், அதை இப்படி மொழி மணக்க, முகம் விரும்ப, மண் அதிர, மறம் சிறக்க, அறம் வலிக்க, நடந்தவை எதுவெதுவென்று புரிபட, உயிரறுபடும் சப்தம் நலுங்காது காட்ட இயக்குனர் பாலா எடுத்த பெரும் முயற்சி, வரலாற்றின் பாராட்டத் தக்க பதிவிது இந்த பரதேசி.

உண்மையில்  வார்த்தைகள் அடங்கவில்லை. படத்தின் தவிப்பது மனதுவிட்டு நீங்கவேயில்லை. எங்கோ நான் செத்துப் போனதன் வலி, எனைச் சாகடித்ததன் வஞ்சம், எனைக் கருவருத்ததன் விஷம் நாக்கில் சொட்டச் சொட்ட எனை வெறியோடு திரியவைக்கிறது இந்தத் திரைப்படம் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டியிருக்கிறது.

இசையும், ஒளியும், சப்தமும், நடிப்பும், அலங்காரமும், வடிவமைப்பும், திரைக்கதையும், வசனமும், இயக்கமும், பாடல்களுமென எல்லாமே சதையாலும் உயிராலும் பிசையப் பட்டு உயிர்ப்போடு செய்யப்பட்டுள்ளது இத்திரைப்படத்தின் ஒவ்வொரு அசைவும். மொத்த உலகையும் படைத்த பிரம்மனுக்கு எந்த கலைகள் புரிந்திருக்குமோ அந்த ஒரு தெள்ளத் தெளிந்த கலையறிவை நெஞ்சுக் குழிவரை வைத்துக்கொண்டு அதில் எமது இனம் நளிந்த கதையதன் கண்ணீரை விட்டு மனசு கசிந்துப் போனதன் வலியதில் ஒவ்வொரு காட்சிகளையும் செதுக்கி இந்தப் படத்தை செய்திருக்கிறார் இயக்குனர் பாலா அவர்கள்.

யாரும் சவால் விட இயலாது, யாரும் குறை சொல்ல இயலாது, யாரும் பொல்லாப்பு பேச மனம் வராது, அப்படி என்னைப் பற்றி எனக்கான விழிப்புணர்விற்காக அவரால் அப்படி ஒரு படம் செய்யப்பட்டுள்ளது எனும் நன்றியுணர்வே காண்பவரின் மனசெங்கும் பரவிப்போகுமளவிற்கு ஒவ்வொரு காட்சியமைப்பும், முகத் தேர்வும்,  பாடல்களும்,  இசையுமென இந்த பரதேசி படம் ஒரு மொத்த பாராட்டல்களின் மெத்தப் பொக்கிஷமாகவே இனி காலத்திற்கும் நிலைக்கும்..

அன்பென்னும் வார்த்தையை நடிப்பில் காட்டியவள்

வேறொன்றும் சொல்ல வார்த்தைகள் தேவையில்லை. படம் பார்த்துவிட்டு கட்டாந்தரையில் படுத்துக்கொண்டு கால்மீது கால்போட்டுக்கொண்டு மோட்டுவலையைப் பார்த்தவாறே நமது முன் நாட்களை நினைத்து, நாம் சிந்திய வியர்வையில் முளைத்த தேயிலையை நினைத்து, அந்த தோட்டங்களுக்கு நாம் சிந்திய ரத்தமும், அதைக் கூட இன்னொருவனுக்கு விட்டுவிட்டு நம் உறவுகள் நாடு நாடாக தவிக்கும் தவிப்பும், உயிரறுந்த கொடியாக நம் குலப் பெண்களை கொட்டியெரிடுத்து அவர்களின், நிர்வாணத்தை ரசித்தவனின் பார்வைகள் எத்தனைக் கொடிதென்றெண்ணி அந்த மலையக மக்களின் துயர்நீங்க ஒரு சொட்டுக் கண்ணீரை விடுங்கள்..

மொத்தப் பேரின் கண்ணீரில் பூமிப் பந்து கனத்து மொத்த உணர்வும் அவர்களின், அந்த நம் உறவுகளின், நம் மண்ணின் விடுதலையின் வேட்கையாக வெடிக்கட்டும்..

அப்படி வெடிக்கும் எனில்; விடுதலை கிடைக்கும் எனில்; அதன் வெற்றிக் கூச்சலில் அந்த அங்கம்மாக்களின், கறுத்தக் கன்னிகளின், பிள்ளைக்காரிகளின் சாபங்களும் தீர்ந்து; அந்த உத்தமிகளின் ஆசிகள் நமக்கு வரமாக அமையட்டும்..

அதன் நன்றியின் முதல் பருக்கைச் சோற்றை இந்த ‘பரதேசி’ படத்திற்குக் காணிக்கையாக்குவோம்..
——————————————————————————————————————-
வித்யாசாகர்

Posted in திரை மொழி | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

18, காதலும் வீரமும் களமாடிய கதை ‘மதராசப் பட்டினம்’

mm

குண்டுகளுக்கிடையே முளைத்த காதலை பழைய மதராஸ் மண்ணிலிருந்து தோண்டி நம் உணர்வுகளுக்குள் மீண்டும் புதைக்குமொரு கதையிது, யாருக்குமே தெரியாமல் உயிரோடு புதைந்த இதயங்களைவைத்து எழுதவேண்டியதொரு காவியத்திற்கு கதாபாத்திரங்களின் மூலம் உயிர்தந்து ஒரு சிறந்த திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் விஜயின் கம்பீர வெற்றியிது, உள்ளூறிய சுதந்திர தாகத்தின் உணர்வோடு காதலையும் பிண்ணிப்பார்க்கும் ஒவ்வொரு காட்சிக்குள்ளும் நமைப் புதைத்துவைத்துக்கொள்ளும் உணர்வுள்ள சித்திரமிது இந்த “மதராசப் பட்டினம்”.

கல்லுடைத்து கிட்டிய பணத்தை வீடுவாங்க சேமித்தவனின் வெற்றியைப் போல, உயிர் கொன்று தலைகளைச் சேகரித்த வெள்ளையனின் அடிமைத் தனத்தை தகர்க்க ஒரு கிராமம் பட்ட அவஸ்தையின் வழியே முழு பட்டணத்தின் வாழ்க்கையையும், இரு இதயங்களின் துடிப்பையும் மீட்டெடுத்து எத்தனைமுறை பார்த்தாலும் கண்கலங்கும் காட்சிகளால் நம் இதயத்தில் இடம் கொண்டுவிடும் வெற்றி இந்த மதராசப் பட்டிணம்.

நெஞ்சறுக்கும் ராகம், உணர்வினை துல்லியமாக வெளிப்படுத்துமிசை, பார்வையில் பிரம்மிப்பை ஒருவித படபடப்பினை ஏற்படுத்தும் அந்நாளைய நகர்தலின் காட்சிப் பதிவுகள், பார்க்க பார்க்கச் சிலிர்க்கும் துடிக்கவைக்கும் வசனங்கள், அடுத்தடுத்த காட்சியின் நகர்விற்கிடையே நெஞ்சத்தைப் பதறவைக்கும் திரைக்கதை, ஆள் தேர்வு மற்றும் யதார்த்தம் குலையா சண்டைக் காட்சிகளென நமை நூறாண்டுகளுக்கு முன்னே கொண்டுச்சென்று மண்ணின் காதலையும் விடுதலையின் வேள்வி தகித்த பாரத்தையும் விழி சிவக்கச் சிவக்க பார்க்கவைக்கும் படமிது, இந்த மதராசப் பட்டினம்.

mmmmmm

ஒரு தேசத்தின் வெற்றி எதுவாக இருக்கும்? இருநூற்று ஐம்பது வருடத்திற்கும் மேலாக அடிமைப்பட்டுக் கிடந்ததோடல்லாமல் ஆள்பவனின் கையால் கழுத்தறுந்துப் போன கொடூர நாட்களின் விளிம்பில் கிடைத்தச் சுதந்திரம் எத்தகைய கனம் மிக்கது? என்பதையெல்லாம் அந்த வெள்ளையத் துரையை அடித்துவீழ்த்தி ஒரு ஊரையே கதாநாயகன் வெல்லுமொரு காட்சியில் தமிழரை கம்பீரமாய்ப் பதிவுசெய்துவைத்திருக்கிறார் இயக்குனர் திரு. விஜய்.

சுதந்திரம் என்பது என்ன? அதை அடையும்போது நாம் எப்படி புது உணர்வினால் பூத்துப் போயிருப்போம்? கண்ணற்றவனுக்கு கண் வந்ததைவிட, உயிரில்லா பிணத்திற்கு உயிர் வந்ததைவிட, என் நாட்டிற்கு சுதந்திரம் வந்தபோது நாம் எத்தனைப் பூரித்துப் போயிருப்போம் எனுமுணர்வை புதுரத்தம் பாய உடம்பெல்லாம் சிலிர்க்குமொரு காட்சியில் காட்டுகிறார்; அப்பப்பா ஒரு நொடி நமை நிகழ்காலத்திலிருந்துப் அந்த போராட்டக் களத்திற்கே கொண்டுச் செல்கிறது இந்தத் திரைப்படம்.

mmmmmmmmmmmm

சுதந்திரம் சுதந்திரமென்று உயிர் பல கொடுத்தும் ஓயாத பலரின் தொடர் போராட்டத்தில் வெள்ளையரின் மனம் மாறுகிறது. இனியும் இங்கே இருந்துப் பயனில்லை என்றுக் கருதி நம் மண்ணை நம்மிடமே விட்டுப் போக முடிவெடுத்து இரவு பன்னிரண்டு மணிக்குச் சுதந்திரம் வழங்கப்படும் என்று அறிவிக்கின்றனர். இரவு பன்னிரண்டு மணிக்கு ஒரு தேசத்தின் விடியல் வரப்போகிறது. தியாகிகளெல்லாம் கொடி பிடித்துக் கொண்டு வந்தேமாதரம் வந்தே மாதரமென்றுச் சொல்லி, மாலையில் கூடடையும் குருவிகளைப் போல ஒரு கொடிக்கம்பத்தின் கீழ்வந்து அமர்கின்றனர். கொடியின் நிழலென மக்கள் வெள்ளம நெருங்கி அமர்ந்திருக்க சிலர் நின்றுகொண்டும் சிலர் நடந்துகொண்டுமென கூட்டம் கூட்டமாக பரபரத்துக் கொண்டிருக்கின்றனர். அந்த கூட்டத்தின் நடுவே கதாநாயகனைத் தேடி அலைகிறாள் நாயகி.

இவனொரு புறம், அவளொரு புறமென்று ஒருவரையொருவர் தேடியலைய வெள்ளையக் கழுகுகள் அந்த அன்பிதயங்களை சுடுவதற்கென்றே பின் துரத்திவர, வானவேடிக்கைகளெல்லாம் அழகு நட்சத்திரங்களைப் போல் மின்னி விழ, சுதந்திரகீதம் காற்றில் கலக்கிறது, தேசியக் கொடி மடிப்பு பிரிந்து பூச்சொரிந்து பட்டொளி வீசிப் பறக்கிறது, விடுதலை விடுதலை என்று உள்ளம் கோஷமிட்டுக் கொள்கிறது. நாயகனும் நாயகியும் பார்க்கிறார்கள், கட்டிப்பிடித்துக்கொண்டு கண்ணீரோடு காதலாய் கரைகிறார்கள், வெள்ளையக் கூட்டம் பின்னே துரத்திக் கொண்டு ஓடி வருகிறது, சிங்கத்தைக் கண்டு உயிர்பிழைக்க ஓடும் மான்களைப் போல தன் காதலை வாழ்விக்க எண்ணி அந்த இரண்டு ஜீவன்களும் ஓடி ஓடி ஒளிகின்றன. ஆக, ஒருபுறம் காதல், மறுபுறம் தேசத்தின் விடுதலை வேட்கை தீரும் கணமென ஒரு சில மணித் துளிகளுக்கு நமை ஜென்மம் தொலைக்கச் செய்து விடுகிறது இந்த மதராசப் பட்டினம்..

mmmmmmmmmmmmmmmm

வந்தேமாதரத்தின் வலி என்ன, வந்தேமாதரம் என்பதன் பலமென்ன, ஒரு தேசியக்கொடி குத்திக்கொள்ளும் நெஞ்சின் மீது படர்ந்திருக்கும் இத்தேசத்தின் விடுதலையானது எப்படி காக்கத்தக்கது என்பதையெல்லாம் ரசம் குறையாது பல காட்சிகளுக்கிடையே காட்டுகிறார் இயக்குனர்.

இசையின் லாவகத்தில் அசையும் நாயகியின் கால்களில் சலங்கைக்கு பதில் மேற்கத்திய இசை வந்து ஒட்டிக் கொள்கிறது அந்த ஆங்கிலப் பாடலின் போது. இன்னொரு காதலூறும் தருணங்களின் ஒரு காட்சியில் கதாநாயகியைப் நீ நாளை பெரியவளாகிவிட்டால் என்னவாக வருவாய் என்று சிறுவர்கள் கேட்க அவள் தனது கனவுகளை வார்த்தைகளில் உதிர்க்கிறாள். வெறுமனே வானமளப்பேன், பூமி பிளப்பேன், கடலைக் குடிப்பேன் என்பது போல வண்ண வண்ணக் கனவுகளை காதலின் பிஞ்சுக் கரத்தின் மீது வாரிக் குவிக்கிறாள். அந்தச் சுமைகளை தன் உழைப்பினால் தாங்கி மெய்யாக்குமொரு லட்சிய இளைஞனின் வெற்றியாக முடிகிறது இந்தத் திரைப்படம்.

அவளின் ஆசையை அவன் மெய்யாக்கும் காட்சிகளை கடைசியில் துரையம்மா இலவச மருத்துவமனை, துரையம்மா கல்லூரி, துரையம்மா முதியோர் இல்லம், துரையம்மா சேவை மைய்யமென எல்லாவற்றையுமே நாயகி எமி ஜாக்சனின் பெயரில் செய்துவைக்க, கடைசியில் தன் உயிரை விடவேண்டி நம் மதராஸ் மண்ணில் மீண்டும் கால்பதிக்கிறாள் வயது முதிர்ந்து தோள் சுருங்கி கண்கள் இடுக்கிக் கொண்ட அந்த கதாநாயகி.

காதல் அப்படி என்ன செய்துவிடும் என்று கேட்போர் இருப்பின், உண்மைக்  காதல் இதெல்லாம் செய்யுமென்று ஒரு பரிசுத்த அன்பின் மெச்சுதலக இந்தத் திரைப்படத்தை உதாரணம் காண்பிக்கலாம் போல்.

வாழப் பிறந்த மனிதன், இல்லை இல்லை சாகப் பிறந்த மனிதன் வாழும் காலத்தில் சாதிக்க எத்தனையோ உண்டென்பதற்கும் இந்தத் திரைப்படம் முழு சாட்சியாக நிலைக்கிறது.

காலச்சுழற்சியினால் வேறொருவரை மணந்துக்கொண்டப் பிறகும், தனது விதியை நொந்தவாறு காதலனைத் தேடி, தான் அன்று மெய்யுனர்வோடு வாழ்ந்த அதே மண்ணின் மாண்பை தரிசிக்க, தமிழகத்தின் அதே அன்றைய தேதியில் அவர்கள் ஆண்ட மண்ணின் தெருவெல்லாம் அலைகிறாள் அந்த வயதான கதாநாயகி.

நமக்கு அவளை பார்க்கப் பார்க்க மனதை யாரோ மென்றுத் துப்புவதுபோல் ஆகிறது. நகரும் ஒவ்வொரு காட்சியிளும் அந்த மூதாட்டியின் கண்கள் திரைமுன் அமர்ந்திருப்பவர்களிடம் சப்தமின்றி பேசுகிறது. கவலையை அடக்கிக் கொண்டு மனதார தவிக்கும் காதலுணர்வை மானசீகமாய் வெளிப்படுத்தும் ஒவ்வொரு காட்சியிலும் அந்த மூதாட்டி வாழ்ந்திருக்கிறார். சில இடங்கள் என்பதை விட பல இடங்களில் மனது கனத்துதான் போகிறது.

ஆக எப்படியோ கடைசியில் எல்லா திரைப்படங்களைப் போன்று இப்படமும் முடிந்து வெளியே வருகையில்; தனது மண் மீது ஒரு காதலும், காதலின் அவதூறுகள் அறுபடும் தெளிவும், தெளிந்த ஞானத்தில் ஒளிரும் மண்ணுமாய் நம் மாண்பு ஒரு படி மேலேறி நின்றுகொள்கிறது மனதிற்குள்.

அதிலும் ஆர்யா வெறும் சினிமாக் காரராகத் தெரியவில்லை, ஒரு சாதனை மனிதராகவும், துரையய்யாவாகவுமே தெரிகிறார். உண்மையில் கதாபாத்திரம் மனதில் நின்று வாழும் தரமே இயக்குனரின் வெற்றியும் மற்றும் இப்படத்தில் நடித்த மொத்த கலைஞர்களின் வெற்றியும் என்றால் அது மிகையில்லை. ஒலிப்பதிவு, இசை, ஒப்பனைகள், கட்டடக் களை வசனம் சண்டைக் காட்சிகள் நடனம் என எல்லாவற்றிலுமே சோடை போயிடாததொரு தரமான திரைப்படத்தை தந்த இயக்குனருக்கு இத்தேசத்தின் ஒரு பிடி மண்ணின் மதிப்பை பரிசாகத் தரலாம்.

என்றாலும், இதயம் கனத்துப் போகும் முடிவில் மனசு காதலை சுவாசித்து, விடுதலைத் தேடும் கண்களை இருகமூடி, விழும் ஒரு சொட்டுக் கண்ணீரில் உணர்வுகள் மறுத்து மனசு நனைய திரையரங்கம் விட்டு வெளியே வருகையில் துரையம்மா மனசெல்லாம் வியாபித்துக் கொள்கிறாள்..

mmmm

அந்த துரையம்மாவை சுமந்த மனசு ஒன்று இதே சென்னையில் காற்றோடு காற்றாகக் கலந்து மதராசப் பட்டினத்தின் பாடல்களை முனுமுனுத்துக் கொண்டேயிருக்கும் காலத்திற்கும் என்பதில் துளி ஐயமுமில்லை..

அங்ஙனம் எனக்குள் கேட்பதான அந்த சப்தத்தின் நன்றியோடு இயக்குனர் விஜய்க்கும், மற்றும் அவரோடு இணைந்து இதிரைப்படத்தைச் செய்த அனைத்துக் கலைஞர்களுக்கும், கலைத் தொழிலாளர்களுக்கும் மொத்த காதலின் நன்மையையும் சமர்ப்பித்து, ஒரு சுதந்திர தாகத்தின் துடிப்பில் உறைந்திருக்கும் அடிமன நன்றியையும் கூறி, நிறைவோடு வாழ்த்திடுவோம்..

வணக்கமும் காதலின் ஈரம் காயாத அன்பும்..

வித்யாசாகர்

Posted in திரை மொழி | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

வீட்டில் எண்ணெயின்றி எரியும் விளக்கு; அம்மா!!

நாங்களெல்லாம் அப்போது
சிறுவர்களாக இருந்த சமையமது

அம்மா இல்லாத வீட்டை எங்களுக்கு
பிடிப்பதேயில்லை

அம்மா இல்லாத அந்த வீடு
இருண்டுப் போன மாதிரியிருக்கும்

யாருமேயில்லாமல்
தனித்துவிடப்பட்டதொரு படபடப்பில்
எல்லோரும் அமர்ந்திருப்போம்

இரவு நெருங்கநெருங்க
மனசு அம்மா அம்மா என்று ஏங்கும்

எனக்குக் கொஞ்சம் அழுகைவர
தம்பிகளும் அழுதுவிடுவார்களோ என்றஞ்சி
அழுகையை அடக்கிக் கொள்வேன்

என்றாலும் சற்று நேரத்தில் தம்பியோ தங்கையோ
அழ ஆரம்பித்துவிடுவார்கள்

அம்மா அம்மா என்று
அழுதுகொண்டே நாங்கள் ஐவரும் வந்து
தெருவில் அமர்ந்துக் கொள்வோம்

எங்களோடு அப்பாவும் வந்து
அமர்ந்துக் கொள்வார்

அம்மாயில்லாத வீடு அவருக்குக் கூட
இருட்டாகத் தான் இருந்திருக்கும் போல்

எல்லோரும் அப்பா மடிமீதும் தோள்மீதும்
சாய்ந்துக் கொள்ள
நாங்கள் தெருமுனையில் அம்மா வருவார்களா என்றே
பார்த்து அமர்ந்திருப்போம்..

திடீரென ஒரு தருணத்தில்
அம்மா அந்த முனையில் திரும்பி
தெருக் கோடியில்
வருவது தெரியும்

கூட்டிலிருந்து குஞ்சுகள் ஓடி
தாய்ப்பறவையின் அலகைக் கொத்தி
உணவைப் பிடுங்குவதைப் போல

நாங்களெல்லோரும் ஓடி அம்மாவின்
கால்களை கட்டிக் கொள்வோம்

அம்மா இயன்றவரை தங்கையை
தம்பியை
யாரேனும் ஒருவரைத் தூக்கிக் கொள்ள
சற்று தூரத்திற்கெல்லாம்
அப்பாவும் எழுந்துவந்து பைகளை வாங்கிக்கொள்ள

அம்மா அப்பாவை கடிந்துக்கொள்வாள்
கொஞ்சம் கடைத்தெரு போய்வருவதற்குள் இப்படியா
செய்வீர்கள் ?
வீட்டிற்குள் அமர்ந்தால்தானென்ன
பார் ஒரு விளக்குக் கூட ஏற்றி வைக்கவில்லை
எல்லாம் போட்டது போட்டபடியே இருக்கே என்பாள்

சற்று கடிந்துதான் கொள்வாள்
அம்மாவிற்கு அப்போதெல்லாம்
நாங்கள் எடுத்துச் சொன்னதில்லை
அம்மா இல்லாத வீட்டில் எங்களுக்கு விளக்கோ வெளிச்சமோ
தேவைப் பட்டிருக்கவில்லை என்பதை..
————————————————–
வித்யாசாகர்

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்